பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


எத்தனையோ பெயர் விளக்கமில்லாத பல சிறு தலங்கள் ஆழ்வார் பதிகங்கள் பெற்றிருக்க சிறப்பான தலைநகரிலுள்ள இத்தலம் எந்தப் பதிகமும் பெறாதது வியப்பே. மதுரை மீனாட்சி சோமசுந்தரக் கடவுள் கோயிலுக்கு அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்ற பெருஞ் சிறப்பால் இது புறக்கணிக்கப் பெற்றது போலும். எனினும் பண்டைத் தமிழ் நூல்களில் இருந்தை, இருந்தையூர், இருந்தவளமுடையார் என்று சிறப்பிப்பது இத்தலத்தையும் இங்கு எழுந்தருளியுள்ள திருமாலையுமே என்று பேராசிரியர் மு. இராகவையங்கார் விளக்குவார்.’[1]

ஆசிரியர்: இந்நூலாசிரியரைக் குறித்து யாதும் தெரியவில்லை. ஆயினும் இந்நூலே இவருடைய பெருஞ்சிறப்பை நன்கு உணர்த்தும், நூல் முழுதும் இவர்தம் சொந்தப் படைப்பாகும். பெரியாழ்வார் மதுரைக்குப் போந்தமையும் பாண்டியன் கொண்டாட வந்த கிழியறுத்தலையும் கூறுகின்றன. இறுதி இரு சருக்கங்களால் இதனை நன்கு தெளியலாம்.

இவர் வடமொழியிலும் தமிழிலும் புலமை மிக்கவர் என்பதை நூலால் நன்கு அறியலாம். வேத வேதாகமங்களில் மிக்க மதிப்பும் ஈடுபாடும் கொண்டவர். வைகானசம், பாஞ்சராத்ரம் என்ற இரு வைணவ ஆகமப் பிரிவுகளைப் போற்றியே எழுதுவது இவர்தம் பரந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டு. அன்றியும் இவர் திருமாலடிக்கே பேரன்பு பூண்டொழுகும் பரம வைணவர். இவர் உளமுருகப் பாடிய பாடல்கள் ஆங்காங்கு எடுத்துக்காட்டப்பெற்றுள்ளன. ஆழ்வார்களையும் அவர்தம் பிரபந்தங்களையும் இவர் பெரிதும் போற்றியுரைப்பது இயல்பேயாகும்.இராமாநுசரிடம் இவருக்கு ஈடுபாடு மிகுதி என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.

இருப்பினும், பிற மத நிந்தை இவரிடம் எப்போதும் தலைகாட்டுவதில்லை. இவர் பாடிய இடங்களும் பல. இரண்டொன்றை ஈண்டு எடுத்துக் காட்டலாம். நூலின் முதற் செய்யுளே சிறப்புமிக்கது.


  1. 28 ஆராய்ச்சித் தொகுதி (1938 பக்.242 காண்க. மேலும் விளக்கம் வேண்டுவோர் இந்நூலாசிரியரின் பாண்டிநாட்டுத் திருப்பதிகள் (கழகம், 4வது கட்டுரை - மதுரைக் கூடலழகர் (பக்.53-69) கண்டு தெளியலாம்.
78