பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதுபோன்று விரவியும் நிரவியும் உள்ள கருத்துகள் தற்காலத்தில் காணப்பட்டுள்ள செடிமக் கண்டுபிடிப்புகட்கு மூலக்கூறு காட்டுபவை; இனி வளரும் ஆய்விற்கும் துணை நிற்பவை.

இதனைப் புலப்படுத்தும் நோக்கில் மலராய்வில் முனைந்தேன். இவ்வாய்விற்கு இலக்கியம் களம். செடியியல், மரபியல், மொழியியல், ஆன்மவியல், மருந்தியல் ஆய்வுக் கருவிகள் - நோக்க ஆடிகள் ஆயின. இவை யாவும் இந்நூலில் இழையோட்டமாகவும், இலக்கியம் ஊடுபாவாகவும் இலங்குவதைக் காணலாம். இடையிடையே சொல்லாய்வு சான்று சூட்டும்! திறனாய்வு உரைகல்லாகும். நயங்காட்டல் மெருகேற்றும்.

யாவும் தமிழ் மரபை மையப் புள்ளியாகக் கொண்டே சூழ்ந்து இயங்கும். தமிழர் தம் வாழ்வுக் கூறு ஒவ்வொன்றிலும் மலர் நீங்கா இடம் பெற்றுள்ளது. மலரே பல தமிழ்மரபுகளை வகுக்கக் கருவியாகியது தமிழர்தம் வாழ்வியல் இலக்கணமாம் அகமும் புறமும் மலர்க் குறியீட்டில் வகுக்கப்பட்டமை கொண்டே தமிழ் மரபு மையப்புள்ளியாதற்குரியது என்பதை உணரலாம்.

இப்பாங்கில் இந்நூல் உலகில் மலர்த்தகுதியை ஓரளவில் விளக்கும் நுழைவாயிலுடன் தொடங்குகின்றது. பூவின் வரலாற்றைச் செடிமப் பார்வையுடன் காட்டும் பகுதி பூவே நேர்நின்று கூறுவதாக அமைக்கப் பட்டுள்ளது.

முல்லை முதல் முருங்கை ஈறாக 140 பூக்கள் தனித்தனியே ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதி நூலின்உடல்; மிகு உழைப்பால் உருவான உடல்.

இவற்றின் முறைவைப்பு தமிழ் மரபு என்னும் பொன் நாரால் தொடுக்கப்பட்டதாகும். இவற்றுள்ளும் புலவர் பெருமக்கள் எடுத்தும் தொடுத்தும் பாடி அறிமுகஞ் செய்துள்ள 97 மலர்கள் 'அறிமுக மலர்' களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகை வரிசைப்பாடு தமிழ்ச்-