பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/51

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பூவால் பூத்த

புதுக் கலைகள்

பூவைப்பற்றிய அறிவியல் ஆய்வால் புதிய கலைகள் பூத்தன. தோட்டக்கலை தழைத்தது; பூங்காக்கலை அரும்பியது. இல்ல ஒப்பனைக் கலை முகிழ்த்தது; மலரடுக்குக் கலை மலர்ந்தது. பொருளியலிலும் இக்கலையால் அலர்ச்சி எழுந்தது; வாழ்வியல் மணந்தது.

பூ இதழ்களின் வளம், புதிய நிறம், பூக்கள் தழைத்தல், முதலியன அறிவியல் ஆய்வால் புதிதாகத் தோன்றின. பூந்தாதுக்களின் ஒட்டு முறையால் வண்ண மலர்கள், வளமான காய்கள், சுவையான கனிகள், மதர்ப்பான மரங்கள் விளைந்தன. தோட்டக்கலைக்கு இவ்வாய்வு துணை நின்றது.

பூக்களின் காட்சியாலும் மனத்தாலும் மக்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சியையும் உடல்நலத்தையும் கருதியும், நகரின் அழகு கருதியும் பூங்காக்கள் உலகெங்கும் அமைந்தன.

“அவனது கன்னங்கள் மணம் நிறைந்த பூங்கொடிப்
பாத்திகள்”[1]

-என்று விவிலிய நூலில் சாலமோன் இசைப்பாடல் காட்டும் உவமையில் வரும் ‘பூங்கொடிப் பாத்திகள்’ பூங்கா அமைப்பை வெளிப்படுத்துகின்றது.

தீனுல் இசுலாமியத்தின் மறையாகிய குர்-ஆனில் நேரடியாக எந்தப்பூவின் பெயரையும் காண முடியவில்லை. “மணப் பொருள்கள் இறைவனால் அருளப்பட்டன.” என்று காணலாம். இந்தப் பொருள்களில் பூ அடங்கும். வண்டைக் குறிக்கும் இடங்களிலும் கனிகளின்மேல் வண்டு மொய்த்ததாகக் காணப்படுகின்றதேயன்றி மலரின்மேல் முரன்றதாகக் காண முடியவில்லை. ஆனால்,

“நீ கவணபதி (துறக்க உலகம்) என்னும் பூங்காக்குள்
புகக் கடவாய்”[2]

–என்று வீட்டுலகம் பூங்காவாகக் குறிக்கப்பட்டுள்ளது.


  1. 81 விவி: சாலமோன் பாடல்கள் 5 : 18
  2. 82. குர்: பாகம் 28, 86 : 28