பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/56

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



20

கலையாக மணிமேகலைக் காப்பியம் குறிக்கின்றது. "கற்றுத் துறை போகிய" எனப்பட்டமைகொண்டு அஃது ஒரு கல்வியாக இருந்ததையும், அஃது ஒரு துறைப் பயிற்சியாக நிறைய வேண்டுமென்றும், மணிமேகலை அதனில் தேர்ந்து சான்று பெற்றவள் என்பதையும் உணரமுடிகின்றது. இக்கலைகள்

  "நாடக மகளிர்க்கு நன்கணம் வகுத்த" கலைகள் எனப்படுவதால் இதற்கெனப் பாடத்திட்டம்போன்று வகைப் படுத்தப் பட்ட முறைகள் இருந்தன என்பதையும் அறியலாம். எனவே, தமிழகம் இன்றைய உலக வளர்ச்சியின் கலை முகப்பின் முன்னோடி யாகின்றது.

பூவும் பொருளியல் பொலியும்

  அறிவியலில் மலர்ந்த மலர்க்கலை நாட்டின் பொருளியலுக்குத் துணை செய்தது. உள்நாட்டு வருவாய்க்கும் வெளிநாட்டு வருவாய்க்கும் இம்மலர்க்கலை துணையாவதைக் கால வரலாற்றில் காண முடிகின்றது.
  மலர் வணிகம், மலர்ச்செடி-கொடி வணிகம், மலர் வித்து வணிகம் முதலியவற்றோடு மலரின் இயற்கை மணத்தைக்கொண்டு செயற்கை வடிப்பில் மனப் பூச்சுப்பொருள்களை உருவாக்கும் கலை பிறந்தது.
  கிரேக்க நாட்டின் ஒருவகைத் தாமரையின் பொகுட்டு முதிர்ந்து கனியாகியது. இக்கனிகொண்டு 'அடை' என்னும் ஒரு வகை உணவுப்பண்டம் செய்து விற்பனைக்கு வந்தது.
  மேலும் தாமரை மலரிலிருந்து இன்சுவைப் பருகுநீர் சமைக்கப்பட்டு விற்பனைப்பொருள் ஆகியது. மலரிலிருந்து ஒரு வகைக்கள்-ஓயின்-வடித்தனர். இது பெருஞ்செல்வர்களால் குடிக்கப்பட்டு விலையுயர்ந்த குடிநீர் ஆகியது.
  இவ்வாறு உலகெங்கணும் தோன்றிய மலர் வணிகம் அமெரிக்காவில் ஒரு குறிப்பிடத்தக்க வணிகக்கலை ஆகியது. 1960 ஆம் ஆண்டுக் கணக்கின்படி அமெரிக்காவில் விற்பனையான பல வகைப் பொருள்களால் நேர்ந்த வரவு 30 ஆயிரம் கோடி தாலர். இதில் மலர் வணிகத்தால் மட்டும் எழுபது கோடி தாலர் வரவு ஆயிற்றாம்.