பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விலும் தமிழிலும் மலர்கள் பாங்கொடு பண்பும் பெற்றிருக்கும் ஆட்சியினையும், அறிவியல் நோக்கிலும் மருந்தியற் பார்வையிலும் மலர்கள் தரும் அறிவுச்செய்தியினையும், மொழியியல் நோக்கில் பூப்பெயர்களின் காரணக் குறிகளையும் இப்பெருநூல் ஆய்வுமாலையாகத் தொடுத்துக்காட்டுகின்றது. முல்லை என்ற ஒரு பூவிற்கே ஆசிரியர் தொகுத்துக் காட்டியிருக்கும் செய்திச் செல்வங்களை நினைத்தால் இவர்தம் பரந்த அறிவு வெள்ளிடைமலை. ‘ஆம்’ என்ற ஒரு சொல்லின் ஆய்வு மிகவும் பாராட்டற்குரியது. புதிய அறிவுக் கூறுகள் இந்நூலிற் பலப்பல. மல்லிகையும் தமிழ்நாட்டு மலர் என்பதும் அச்சொல்லும் தமிழ் வேருடையது என்பதும் கருதத்தக்கவை.

தமிழிலக்கியம் கற்குநரும், ஆய்குநரும் இளஞ்சேரனார் வளர்த்த பூக்காட்டிற்குள் முதலில் நுழைந்து வருவார்களாக. இந்நுழை வாயில் இனிய தமிழ் வாயில்.

கவிஞர் கோ இளஞ்சேரன் தமிழகப் புலவர் குழுவின் செயலர் என்ற உறவினாலும் இவ்வணிந்துரை வாழ்த்துரையாகும்.

விழுமிய இத்தமிழ்ப் பெருநூலை வெளியிட்ட மலைக்கோட்டைப் பதிப்பகத்தாரை வாழ்த்துகின்றேன். அவர்கள் விழைந்தாங்கு இது வெற்றி முதற்பதிப்பே.


கதிரகம், காரைக்குடி.
கக - கார் - 2013;
5—12—1982


வ. சுப. மாணிக்கம்.
தலைவர், தமிழகப் புலவர் குழு.