வட இந்தியாவில் 1857ல் நடந்த மாபெரிய இராணுவப் புரட்சியைக் குறித்தும் பாரதமெங்கணும் 1942ல் கிளர்ந்தெழுந்த மாபெரு மக்கள் புரட்சியைக் குறித்தும் '1857', '1942' என்ற தலைப்புக்களோடேயே அறிஞர் அசோக் மேத்தா, பேராசிரியர் டாக்டர் சென், கலைச் செல்வர் திரு. கு. இராஜவேலு, எம். ஏ. போன்ற பெருமக்களால் ஆராய்ச்சிவன்மை நிறைந்த வரலாற்று நூல்களும் கலையுணர்ச்சி நிறைந்த தொடர்நிலைக் கதைகளும் பலவாக எழுதப் பெற்றுள்ளன. ஆனால், இப்புரட்சிகட்கு எல்லாம் தாயாக நம் தாயகமாம் தமிழகத்தில் 1806ல் நடைபெற்ற வேலூர்ப் புரட்சியைப்பற்றி அப்புரட்சி நடந்த ஆண்டின் எண்ணையே தலைப்பாகக் கொண்ட ஒரு நூலும் தமிழில் இல்லாமை ஒருபெருங்குறையாக என் உள்ளத்தை நெடுநாட்களாய் உறுத்தி வந்தது. அக்குறை ஒருவாறு நீங்க எழுந்ததே இந்நூல்.
இந்நூலில் உள்ள இருகட்டுரைகளில் முன்னது சென்னை அரசாங்கம் 1957-ஆம் ஆண்டு ஆகஷ்டு திங்களில் வெளியிட்ட 'சுதந்தரச் சுடரில்' ஒளிர்ந்தது. பின்னது அதே ஆண்டு அதே திங்களில் வெளிவந்த 'சுதேச மித்திரன்' சுதந்தர நாள் மலரில் மலர்ந்தது.
இவ்விரு கட்டுரைகளும் நூலாக வெளி வரும் இத்தருணத்தில் சென்னை அரசினர்க்கும் சுதேசமித்திரன் ஆசிரியர்க்கும் எனது உளமார்ந்த நன்றியையும் பணிவார்ந்த வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நூல் அச்சாகும் காலத்துச் செப்பம் செய்து உதவிய மகாவித்துவான் மே.வீ.வே. அவர்கட்கு என் நன்றி கலந்த வணக்கங்கள் உரியன.
ந. சஞ்சீவி