சுடரும் சோதியும்
41
வீரர்களின் கோட்டைகளைக் குப்பை மேடுகளாக்கியது போலவே தமிழகத்தின் வடவெல்லையில் வானளாவி நின்ற பாளையக்காரர்களின் கோட்டைகளெல்லாம் தரை மட்டமாக்கப்பட்டன. பேய்கள் போலப் பாய்ந்து நாட்டைப் பிடித்து அலைக்கழித்துச் சூறையாடிய வெள்ளையரைக் கண்டு வடவெல்லையிலே வாழ்ந்த தமிழர் நெஞ்சம், கொல்லன் உலைபோலக் கொதித்தது. சுற்றுச் சூழ்நிலை இவ்வாறு அமைய, வேலூர்க் கோட்டைக்குள்ளே தங்கள் பிறவிக் குணமாய் அமைந்த போர்ப்பண்பு காரணமாகவும் வயிற்றுக் கொடுமை காரணமாகவும் கும்பினிப்பட்டாளத்தில் சேர்ந்திருந்த கணக்கற்ற தமிழ் வீரர்கள் அயல் ஆட்சியை அதன் அடியும் அடிசார்ந்த மண்ணும் இல்லாதவாறு அழிக்கத் திட்டமிடுவதற்கான சூழ்நிலைகள் பல தோன்றின. அவசியமற்ற, அறிவற்ற ஆணைகளை எல்லாம் பிறப்பித்தார்கள் வெள்ளையதிகாரிகள். இந்துக்கள் இராணுவப் பயிற்சிக்கு வரும் பொழுது சமயச் சின்னங்களை அணிந்திருக்கக் கூடாதெனக் கட்டளையிட்டார்கள்; முகம்மதியர்கள் தங்கள் தாடிகளை முற்றிலும் களைந்துவிட வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மீசையைக் கத்தரித்து விட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்கள்; பசுவின் தோலாற் செய்யப்பட்ட குல்லாய்ச் செண்டுகளை அணிந்து கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்கள்;