நகர்ச் சிறப்பு
நகர்ச் சிறப்பு.
வேண்டிய வெல்லாம் வேண்டியாங் களிக்கும்
பாண்டிய நாட்டிற் பண்டை நாளினில்
அளகன் விருப்புடன் அமர்ந்தர சாண்டதென்
அளகையம் பதிஎனும் ஆதிப் பெயரினை
ஏட்டினிற் கொண்டதும் இந்த நாளினில்
ஒட்டப் பிடாரம்என் றுரைக்கப் பெற்றதும்
அருந்திறன் நாட்டி ஆங்கில ரோடமர்
பொருந்திய கட்ட பொம்மு நாயகன், பாஞ்சால மன்னன், பண்புடன் அமர்ந்த
பாஞ்சால நகர்மதில் பக்கத் துள்ளதும்;
உலக நாயகி உவந்து வடக்கும்
சிலசிறு தேவர்கள் சிறந்து கிழக்கும்
குணமே புரியும் கணேசன் தெற்கும்
திருமால் உடனே சிவபிரான் மேற்கும்
வலனொடு நின்று நலனுறக் காப்பதும்
நுதலிய பொருளெலாம் இதமுற அளிப்பதும்
பண்பினை இயற்றிப் பகையினை ஒழித்து
நண்பினை ஆக்கும் நல்லோர் நிறைந்ததும்
திறத்தினை வளர்த்துச் செல்வமிக ஈட்டி
அறத்தினைப் புரியும் அழகிய நகரிலே;
2
அளகன் - குபேரன் பாஞ்சால மன்னன்- பாஞ்சால தேசத்தாசன் வழியிற் பிறந்தோன்.