இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
________________
இராஜநிந்தனைக் குற்றத்திற்காக யான் நாடு கடத்தல் தீர்ப்புப் பெற்றுக் கண்ணனூர்ச் சிறையில் வசித்த காலத்தில் என் பக்கத்தில் வசித்துக் கொண்டிருந்த கொடுங் குற்றவாளிகளுக்குப் பல பாவங்களையும், அவற்றுல் இம்மையிலும் மறுமையிலும் விளையும் கேடுகளையும், அவற்றை நீக்குதற்குரிய மார்க்கங்களையும் அடிக்கடி யான் எடுத்துக் கூறுவதுண்டு. ஒரு நாள் அக்குற்றவாளிகளிற் சிலர் "பல பாலங்களையும் தொகுத்துச் சில பாக்களாகச் செய்து கொடுத்தால் அவற்றை நாங்கள் மனப் பாடம் செய்து வைத்து அடிக்கடி நினைத்துக் கொள்வோம்.” என்று கூறினர். அவர் சொற்படி அன்றிரவு இந்நூலின் மறங்களை தல்” என்னும் அதிகாரத்திலுள்ள பத்து வெண்பாக்களையும் பாடி மறுநாள் அவர்களுக்குச் சொன்னேன். அவற்றை அவர்கள் மனப் பாடம் செய்தபின்னர் அவர்களது விருப்பப்படியே இந்நூலின் அறம்புரிதல்” என்னும் அதிகாரத்திலுள்ள பத்து வெண்பாக்களையும் பாடி அவர்களுக்குச் சொன்னேன், பின்னர் இவ்விருபது வெண்பாக்களையும் இரண்டு அதிகாரங்களாக்கி, அவற்றிற்கு முன்னும் பின்னும் சில அதிகாரங்களைச் சேர்த்து, மொத்தம் நூறுவெண்பாக்களாக்கி, அவற்றை "மெய்யறிவு ” என்னும் பெயருள்ள இந்நூலாக உருப்படுத்தினேன். உரைகோளாளர் ஒருவரால் இதன் உரை எழுதப்பட்டது. அவர் பெயரை வெளியிட அவர் விரும்பாததால் அதனை யான் இங்குக் கூறவில்லை .'