பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

    சிறப்புப் பாயிரம்
    இந்நூலை இயற்றியவர்கள் நமது தேசபக்தரும், மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரும், "மெய்யறம்  முதலிய நூல்களின் ஆசிரியருமான ஸ்ரீமாங்.வ.உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள்.
   அறம், பொருள், வீடு என்னும் மூன்றையும் உணர்த்தும் பல நூல்களின் பொருள்களையும் தொகுத்துக் கூறுகின்றமையால் இஃது அம்முப் பொருள் நூல்களின் வழி நூலாகும்.
   தமிழ் நூல்கள் வழங்கும் நாடுகளிலெல்லாம் (அவற்றுள் ஒன்றாகிய) இதுவும் வழங்கற்பாலது. அஃதாவது, தமிழ் நூல்களுக்குரிய எல்லைகளே இந்நூற்கும் எல்லைகளெனக் கொள்க.
   அறம், பொருள், வீடு என்பவற்றைப் பற்றித் தற்காலத்து மாந்தரிற் பலர் கொண்டுள்ள பொய்யறிவைப் போக்குகின்றமையால் இந்நூல் மெய்யறிவு” என்னும் பெயரைக் கொண்டது.
   அறத்தைச் செய்ய அவாவி நிற்கின்ற ஓர் ஆண் மகனை நோக்கி அவனுடைய ஆகிரியன் கூறுகின்றது போல இந்நூல் இயற்றப் பட்டுள்ளது. இது சில புதிய கோட்பாடுகளையும் கூறுகின்றது.