பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவ ரியல்

௫-ம் அதி.–தீயினம் விலக்கல்.

தீதெலாந் தருவது தீயினத் தொடர்பே. ௪௧.
தீயவர் நல்லுயிர் சிதைக்குங் கொடியர். ௪௨.
பிறர்பொருள் வவ்வும் பேதை மாக்கள். ௪௩.
துணைவரல் லாரை யணையுமா வினத்தர். ௪௪.
அறிவினை மயக்குவ வருந்து மூடர். ௪௫.
புரைவளர் பொய்ம்மை புகலுந் தீயர். ௪௬.
அறனோ பொருளோ வழிக்குங் கயவர். ௪௭.
பசுவின் செயலைப் பதியின தென்பர். ௪௮.
இத்திறத் தாரோ டிணங்கி நிற்போர். ௪௯.
தீயின மெல்லா நோயென விலக்குக. ௫0.

௬-ம் அதி.–நல்லினஞ் சேர்தல்.

நன்றெலாந் தருவது நல்லினத் தொடர்பே. ௫௧.
நல்லவர் மெய்ந்நிலை நண்ணி நிற்போர். ௫௨.
அகத்துற வுற்றுமெய் யறிந்து நிற்போர். ௫௩.
தவமு மொழுக்கமுந் தாங்கி நிற்போர். ௫௪.
நன்னினைப் புரைசெயன் மன்னி நிற்போர். ௫௫.
உலகிய லெல்லா முணர்ந்து நிற்போர். ௫௬.
அறனோ பொருளோ வாக்கி நிற்போர். ௫௭.
பசுவினைப் பயன்பதி பயக்கு மென்போர். ௫௮.
இத்திறத் தாரோ டிணங்கி நிற்போர். ௫௯.
தினமு நல்லினந் தெரிந்துசேர்ந் திடுக. ௬0.


5