பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவ ரியல்.

௯-ம் அதி.–மனத்தை யாளுதல்.

மனமுத் தொழில்செயு மாபெருஞ் சத்தி. ௮௧.
நினைக்குந் தொழிலை நிதமுஞ் செய்வது. ௮௨.
அறனு மறனு மறிதிற னிலாதது. ௮௩.
அதனெறி விடுப்பி னழிவுடன் கொணரும். ௮௪.
அதனெறி விடாஅ தாளுத றன்கடன். ௮௫.
தானதிற் பிரிந்து சந்தத நிற்க. ௮௬.
எதையது நினைத்ததோ வதையுடன் காண்க. ௮௭.
மறமெனில் விலக்குக வறமெனிற் செலுத்துக. ௮௮.
பயனில வெண்ணிற் பயனதிற் றிருப்புக. ௮௯.
ஒன்றெணும் பொழுதுமற் றொன்றெண விடற்க. ௯0.

௧0-ம் அதி.–உடம்பை வளர்த்தல்.

உடம்பெலாஞ் செய்யு மொப்பிலாக் கருவி. ௯௧.
உடம்பை வளர்த்தலஃ துரமுறச் செய்தல். ௯௨.
உடம்புநல் லுரமுறி னுலகெலா மெய்தும். ௯௩.
உரனிலா வுடம்பு வரனிலா மங்கை. ௯௪.
உளந்தொழில் செயற்கு முடலுரம் வேண்டும். ௯௫.
வளியன னீரதி லளவி னுறச்செயல். ௯௬.
மாறுபா டிலாவூண் மறுத்துமுப் பொழுதுணல். ௯௭.
சிலம்பமெய்ப் பயிற்சிக டினந்தொறுஞ் செய்க. ௯௮.
பிணியுறி னுடன்பல தீர்த்தான் மருந்துணல். ௯௯.
நினைந்த படியுடல் வளைந்திட வளர்க்க. ௧00.


7