பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௧௧-ம் அதி.–கொலை விலக்கல்.

கொலையுயிர் தனையத னிலையினின் றொழித்தல். ௧0௧.
வாழு முயிர்நிதம் வருந்த வதைத்தல். ௧0௨.
அச்செய றூண்டுத லச்செயற் குதவுதல். ௧0௩.
இயலு மிடத்தச் செயலைத் தடாமை. ௧0௪.
படுமுயி ரறிவுபோற் படிப்படி கொடிததாம். ௧0௫.
கொலைபா தகங்களுட் டலையாய தென்ப. ௧0௬.
அதுபல பிறப்பினு மருந்துயர் விளைக்கும். ௧0௭.
தொழுநோய் வறுமையோ டழுநோய் பெருக்கும். ௧0௮.
கொலைபுரி வார்க்கிங் கிலைபதி யருளே. ௧0௯.
கொலையினை விலக்கினார்க் கூற்றமும் விலக்கும். ௧௧0.

௧௨-ம் அதி.–புலால் விலக்கல்.

புலால்புழு வரித்தபுண் ணலால்வே றியாதோ? ௧௧௧.
புண்ணைத் தொடாதவர் புலாலையுட் கொள்வதென்? ௧௧௨.
அதுவலி தருமெனின் யானையஃ துண்டதோ? ௧௧௩.
அரிவலி பெரிதெனி னதுநமக் காமோ? ௧௧௪.
அன்றியும் வலியோ வறிவோ சிறந்தது? ௧௧௫.
வலியோ டறிவினை மக்களூன் றராதுகொல்? ௧௧௬.
மக்களூ னுணாது மறிமுத லுண்பதென்? ௧௧௭.
பொறியறி விலார்க்கு மறிமுதற் றாழ்ந்தவோ? ௧௧௮.
அவைகொன் றுண்பார்க் கருளுண் டாமோ? ௧௧௯.
அருளிலா ரருண்மயப் பொருணிலை யடைவரோ? ௧௨0.


8