பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௨௩-ம் அதி.–திருந்தச் செய்தல்.

திருந்தச் செயலியல் பொருந்தச் செய்தல். ௨௨௧.
அழகு நிறைவு மமைவுறச் செய்தல். ௨௨௨.
திருந்தச் செய்தலே செய்தற் கிலக்கணம். ௨௨௩.
திருந்தச் செயல்பல சீர்களைக் கொணரும். ௨௨௪.
திருத்தமில் செயலாற் சீர்பல நீங்கும். ௨௨௫.
சிறுதொழி லெனினுந் திருந்தவே செய்க. ௨௨௬.
சிறுதொழிற் றொகுதியே பெருந்தொழி லாவது. ௨௨௭.
செய்யும் தொழிலிலே சிந்தையைச் செலுத்துக. ௨௨௮.
தொழிலினைக் கியமாய்த் துரிதமாச் செய்க. ௨௨௯.
பிறர்செய் தொழிற்குப் பின்னிடா வகைசெயல். ௨௩0.

௨௪-ம் அதி.–நன்றி யறிதல்.

நன்றியென் பதுபிறர் நல்கிடு முதவி. ௨௩௧.
உறவினர் முதலியோ ருதவுதல் கடனே. ௨௩௨.
பிறர்செயு முதவியிற் பெரிதொன் றின்றே. ௨௩௩.
உதவியிற் சிறந்த துற்றுழி யுதவல். ௨௩௪.
உயர்ந்தது கைம்மா றுகவா துதவல். ௨௩௫.
அறிதலெஞ் ஞான்று மதைநினைந் தொழுகல். ௨௩௬.
உதவியோர் குடியெலா முயர்வுற வுள்ளல். ௨௩௭.
உதவியோ ரறவுரை யுடனிறை வேற்றல். ௨௩௮.
உதவியோர் மிகைசெயி னுடனதை மறத்தல். ௨௩௯.
அறிதற் களவுண் டுதவி சொலக்கெடும். ௨௪0.


14