பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவ ரியல்.

௨௯-ம் அதி.–ஊக்க முடைமை.

ஊக்க முயர்வுற வுனுமன வெழுச்சி. ௨௮௧.
ஊக்க முடைமை யுலகெலாங் கொணரும். ௨௮௨.
ஊக்க மிலாமை யுடையவும் போக்கும். ௨௮௩.
ஊக்க முடையா ருயர்ந்தோ ராவர். ௨௮௪.
ஊக்க மிலாதா ருயிர்க்கும் பிணங்கள். ௨௮௫.
உயர்ந்தவை யெவையோ வவையெலா முள்ளுக. ௨௮௬.
அவற்றினு ளொன்றை யடைந்திட விரும்புக. ௨௮௭.
அதனை யடையு மாறெலா மெண்ணுக. ௨௮௮.
ஒவ்வொன் றினுமுறு மூறெலா மெண்ணுக. ௨௮௯.
ஊறொழித் ததையுறு முபாயமுங் கருதுக. ௨௯0.

௩0-ம் அதி.–முயற்சி யுடைமை.

உயர்வுற வுழைக்கு முடற்றொழில் முயற்சி. ௨௯௧.
முயற்சி பலவகை யுயற்சி நல்கும். ௨௯௨.
முயற்சி யூழையு முதுகிடச் செய்யும். ௨௯௩.
முயற்சி யுடையார் மூவுல காள்வார். ௨௯௪.
முயற்சி யிலாதா ரிகழ்ச்சி யடைவர். ௨௯௫.
ஊக்கிய வொன்றனை யுடன்கொளத் துணிக. ௨௯௬.
அதிகவூ றுறாநல் லாற்றின் முயல்க. ௨௯௭.
உறுமூ றொழித்தறி வுரங்கொடு தொடர்க. ௨௯௮.
தவறினுந் தாழ்ப்பினுந் தளர்ச்சியெய் தற்க. ௨௯௯.
முயற்சியின் விரிமுத னூலினு ளறிக. ௩00.

மாணவரியல் முற்றிற்று.

17


3