பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௩௫-ம் அதி.–இன்பந் துய்த்தல்.

துணையோ டின்பந் துய்த்தலே சுவர்க்கம். ௩௪௧
துய்க்கு முறையெலாந் தொல்லகப் பொருள்சொலும். ௩௪௨
முறையறி யாதுறல் குறையறி வுயிர்செயல். ௩௪௩
தன்றுணைக் கின்பந் தரத்தரத் தனக்கதாம். ௩௪௪
தானின் புறவெணிற் றனக்கதெய் தாதே. ௩௪௫
ஊட லுணர்தல் புணர்த லதன்வகை. ௩௪௬
ஊட னிமித்த முடனுட னாக்குக. ௩௪௭
இரந்தும் புணர்ந்து முணர்ந்திடச் செய்க. ௩௪௮
இருந்திரங் கத்துணை பிரிந்திடல் நீக்குக. ௩௪௯
துணையழத் துறந்துமெய் யிணைதலன் பிலாவறம். ௩௫0

௩௬-ம் அதி.–காமம் விலக்கல்.

காம மகத்தெழு மாமத வெறியே. ௩௫௧
இன்ப மறிவோ டிருந்தநு பவிப்பதே. ௩௫௨
இராச்சில குறித்தறை யியைந்திட லின்பம். ௩௫௩
எண்ணிய பொழுதிடத் தியைந்திடல் காமம். ௩௫௪
காம மகப்புறக் கண்களைக் கெடுத்திடும். ௩௫௫
காம மெழுங்காற் கடவுளை யுள்ளுக. ௩௫௬
அறிவெனுந் தோட்டியா னதனைக் காக்க. ௩௫௭
அதைவளர்ப் பவைதமை யகத்தைவிட் டோட்டுக. ௩௫௮
அதையடு மொன்றை யகத்தினுட் கொள்ளுக. ௩௫௯
அதைநன் குள்ளி மதவெறி களைக. ௩௬0


20