மெய்யறம்
முன்னுரை.
இந்நூலின் முதற்பதிப்புப் பிரதிகள் செலவாகிவிட்டமையாலும், இதனைப் பலர் வேண்டினமையாலும், இதனை இரண்டாம் முறை அச்சிற் பதிப்பிக்கத் துணிந்து சென்னைக் கிறிஸ்டியன் கல்லூரிச் சுதேசபாஷா அத்தியக்ஷகர் ஸ்ரீமான். த. கனகசுந்தரம் பிள்ளை (பி. ஏ.) அவர்களிடம் காட்டினேன். அவர்கள் இதில் சில சீர்திருத்தங்கள் செய்து அழகுபடுத்தித் தந்தார்கள். இதன் முதற்பதிப்புப் பிரதியின் பாடங்களுக்கும் இப்பதிப்புப் பிரதியின் பாடங்களுக்கு முள்ள பேதங்களில் பெரும்பாலன ஸ்ரீமான். பிள்ளையவர்களாற் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள். இவ்வாறு இந்நூலை மேம்படுத்தித் தந்த ஸ்ரீமான். பிள்ளையவர்களுக்கு யான் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன்.
இந்நூலை மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணரியல், மெய்யியல் என்னும் ஐந்து இயல்களாகப் பகுத்துள்ளேன். அவ்வாறு யான் பகுத்ததற்குக் காரணம் மானுடப்பிறப்பை அடைந்த ஒவ்வொருவரும் முறையே மாணவராய், இல்வாழ்வாராய், அரசராய், அந்தணராய், மெய்ந் நிலையை அடையலாமென்ற எனது கோட்பாடும், அவர்கள் அவ்வாறு அந்நிலைகளை அடையவேண்டுமென்ற எனது விருப்பமுமே. "பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்; சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமை யான்" - என்றபடி பிறப்பால் மனிதவர்க்கத்தின ரெல்லாரும் ஒரே