மெய்யறம்
௫௧-ம் அதி.–தன்னைப் பேணல்.
தன்னைப் பேணுத றன்முதற் கடமை.
௫0௧
தன்னைப் பேணார் தாழ்வே யடைவர்.
௫0௨
தன்னைப் பேணுவோர் தலைமை யெய்துவர்.
௫0௩
பேணல் பெருமை யெலாமுற முயறல்;
௫0௪
உடல்பொருள் வினைபொழு திடனறிந் தின்புறல்;
௫0௫
பொருளு மொழுக்கமும் புகழும் பெருக்கல்;
௫0௬
உடம்போர் யானையி னுரமுற வளர்த்தல்;
௫0௭
மனமுயர்ந் தவையெலாந் தினமுனப் பயிற்றல்;
௫0௮
அறிவன் மலனொழித் தழுக்குறா தமைதல்;
௫0௯
தன்னுயிர்த் துணையைத் தனைப்போ லாக்கல்.
௫௧0
௫௨-ம் அதி.–உற்றாரைப் பேணல்.
உற்றார் பெற்றா ருறவினர் பலருமே.
௫௧௧
தன்னுற வினரெலாந் தன்றுணைக் கன்னர்.
௫௧௨
தன்றுணை யுறவினர் தனக்காங் கன்னர்.
௫௧௩
தாயுந் தந்தையுந் தான்றொழுந் தகையர்.
௫௧௪
அவரைப் பேணுத லரும்பெருங் கடனே.
௫௧௫
சோதர ருற்றுழி யாதர வாவர்.
௫௧௬
அவரைப் பேணுத லாக்கம் பேணலே.
௫௧௭
மற்றுளா ருந்தமைச் சுற்றுறப் பேணுக.
௫௧௮
உற்றவர் பேணிற் பற்றல ரொழிவர்.
௫௧௯
உற்றார் பெருகி னுரமிகப் பெருகும்.
௫௨0
28