பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௫௫-ம் அதி.–புதல்வரைப் பேணல்.

புதல்வரே தம்மரும் பொருளென மொழிப. ௫௪௧
நன்றுசெய் புதல்வரா னரகறு மென்ப. ௫௪௨
பொருளுங் குடியும் புகழுமா மவரால். ௫௪௩
துணைதரும் புதல்வர்க் கிணைபிற ராகார். ௫௪௪
பிறரைப் புதல்வராப் பெறுதலும் வழக்கே. ௫௪௫
மிகமிக வருந்தியும் புதல்வரை வளர்க்க. ௫௪௬
இளமையி னவர்நல் லினமுறச் செய்க; ௫௪௭
தக்கவா சிரியரைச் சார்ந்திடச் செய்க; ௫௪௮
கல்வியு மொழுக்கமுங் கைக்கொளச் செய்க; ௫௪௯
இல்வாழ் வரசுற வல்லுந ராக்குக. ௫௫0

௫௬-ம் அதி.–அன்பு வளர்த்தல்.

அன்பெனப் படுவ தகத்தி னுருக்கம். ௫௫௧
ஆர்வல ருறுறி னதுகண் ணீராம்; ௫௫௨
அவரூ றொழிக்குந் தவலிலா முயற்சியாம். ௫௫௩
ஆருயிர் பெற்றதிங் கன்புசெய் தற்கே. ௫௫௪
அன்புபா ராட்டற் காமிடந் தானே; ௫௫௫
தன்னுயிர்த் துணையே தன்னரும் புதல்வரே; ௫௫௬
தன்பெற் றோரே தன் சகோ தரரே; ௫௫௭
தன்னா சிரியரே தன்னுற வினரே; ௫௫௮
தன்னூ ராரே தன்னாட் டினரே; ௫௫௯
மனித சமூகமே மன்னுயி ரனைத்துமே. ௫௬0


30