பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௫௯-ம் அதி.–ஈகை புரிதல்.

இல்லார்க் கீவதே யீகை யென்ப. ௫௮௧
மற்றையோர்க் கீதன் மாற்றிலா மடமை. ௫௮௨
இல்லா ருள்ளு நல்லார்க் கீக. ௫௮௩
பிறருக் கீதல் பிழையென வறிக. ௫௮௪
மடையரே மடியரே பிணியரே யில்லார். ௫௮௫
மடையர்க் கீக மதியெனு மொன்றே. ௫௮௬
மடியர்க் கீக தொழிலெனு மொன்றே. ௫௮௭
மற்றையோர்க் கீக மருந்தூ ணிடனே. ௫௮௮
உடையவ ரீதற் குரிய ராவர். ௫௮௯
ஈகை புகழ்சிறப் பெல்லா நல்கும். ௫௯0

௬0-ம் அதி.–புகழ் செய்தல்.

புகழுய ருலகம் புகலு நன்மொழி. ௫௯௧
புகழ்செய் தவரே பொன்றாது நிற்பவர்; ௫௯௨
அறமுத னான்கு மாற்றிமெய் யடைந்தவர். ௫௯௩
புகழ்செய் யாரே பொன்றி யொழிந்தவர்; ௫௯௪
நான்கி லொன்றை நண்ணா திழிந்தவர். ௫௯௫
மெய்ப்புகழ் தருவன மெய்யிய லடைதல்; ௫௯௬
உலக முழுவது மொருங்கர சாளுதல்; ௫௯௭
அறமுத னாங்கு மறிந்துசெய் துரைத்தல்; ௫௯௮
உற்றவர்க் கெல்லா முடனுவந் துதவல்; ௫௯௯
இல்லார்க் கெல்லா மீந்து வாழ்தல். ௬00


32