பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௮௩-ம் அதி.–உழவு.

உழவு தொழினில விளையுளைச் செய்தல். ௮௨௧
உழவ ருயிர்க்கெலா முயிரெனத் தக்கவர். ௮௨௨
உழவுசெய் முறைநிலங் கிழவர்தாங் காண்டல்; ௮௨௩
காடுநன் கழித்துக் கோடையி லுழுதல்; ௮௨௪
நிலத்திற் கிசைவன விதைத்திடத் துணிதல்; ௮௨௫
வித்திற் காமெரு மெத்த விடுதல்; ௮௨௬
வேர்செலு மாழ மேர்செல வுழுதல்; ௮௨௭
பதநன் கறிந்துநல் விதைசெல விதைத்தல். ௮௨௮
களைகட்டு நீர்பாய்ச்சிக் காத்துப் பயன்கொளல். ௮௨௯
ஒருபலன் றருநிலத் திருபல னாக்குதல். ௮௩0

௮௪-ம் அதி.–வாணிகம்.

வாணிகம் பண்ட மாற்று நற்றொழில். ௮௩௧
அஃதெஞ் ஞான்று மரசிற் கடுத்தது. ௮௩௨
அஃதிலார்க் கரசிலை யரசிலார்க் கஃதிலை. ௮௩௩
அதன்முறை யதைநித மதிபர்தா நோக்கல்; ௮௩௪
கணிதமெப் பொழுதுநா நுனிவைத் தாளுதல்; ௮௩௫
கொள்ளிடங் கொடையிட முள்ளுணன் கறிதல்; ௮௩௬
செலவெலாங் கூட்டிச் சிறிதேற்றி விற்றல்; ௮௩௭
எவர்க்கு மொருசொலே யின்புறச் சொல்லல்; ௮௩௮
கடனனி கொடுக்கு மடனனி யொழித்தல்; ௮௩௯
பிறரது பொருளையுந் தமதெனப் பேணல். ௮௪0


44