பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/18

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளதிகாரம் - களவியல்

௱௫௧


இதுகாறும் இயற்கைப் புணர்ச்சிக்குரிய திறன்கூறி, மேல் இயற்கைப் புணர்ச்சி நிகழுமாறு கூறுகின்றார். அஃதேல், தன்னிலை யுரைத்தலைத் தெளிகைப்படுத்தலுடன் இணைத்து மெய்யுறுபுணர்ச்சி யாக்கிய பின்னர்த்தோன்றுந் துறையாகப் படுத்தாலோ எனின், அது சான்றோர் வழக்கின்றாதலானும், மெய்யுறுபுணர்ச்சி முன்,

“மெய்தொட்டுப் பயிறல்”[களவியல் - ௰௧]

முதலியன யாண்டும் நிகழ்ந்தே தலைவிக்கு மெய்யுறுபுணர்ச்சி நிகழுமாதலானும், அஃதன்றென்க.

௯௯. மெய்தொட்டுப் பயிறல் பொய்பா ராட்ட
லிடம்பெற்றுத் தழாஅ லிடையூறு கிளத்தல்
நீடுநினைந் திரங்கல் கூடுத லுறுதல்
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
தீராத் தேற்ற முளப்படத் தொகைஇப்
பேராச் சிறப்பி னிருநான்கு கிளவியும்
பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலு
நிற்பவை நினைஇ நிகழ்பவை யுரைப்பினுங்
குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்
பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினு
மூரும் பேருங் கெடுதியும் பிறவு
நீரிற் குறிப்பி னிரம்பக் கூறித்
தோழியைக் குறையுறும் பகுதியுந் தோழி
குறையவட் சார்த்தி மெய்யறக் கூறலுந்
தண்டா திரப்பினு மற்றைய வழியுஞ்
சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினு
மறிந்தோ ளயர்ப்பி னவ்வழி மருங்கிற்
கேடும் பீடுங் கூறலுந் தோழி
நீக்கலி னாகிய நிலைமையு நோக்கி
மடன்மா கூறு மிடனுமா ருண்டே.

என்—னின், களவிற் கூட்டம் நான்கினிடத்தும் தலைவன் கூற்று நிகழுமாறும், காதல்மிக்கு ஆற்றாமை கையிகப்பின் தலைவனாம் இயலும் கூறுதல் நுதலிற்று.

மெய் தொட்டுப் பயிற லாவது—பெருமையும் உரனுமுடைய தலைமகன் தெளிவகப்படுத்தியது காரணமாகக் காதல் வெள்ளம் புரண்டோடத் தலைவியின் மெய்யைத் தீண்டிப் பயிறல்.

“தீண்டலு மியைவது கொல்லோ மாண்ட
வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த
நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த
புன்கண் மடமா னேர்படத் தன்னையர்
சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக்
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறுகண் டன்ன வுண்க
ணாறிருங் கூந்தற் கொடிச்சி தோள்ளே.”[குறுந் - ௨௭௨]