மணமக்களுக்கு/உள்ளது என்?

உள்ளது என்?

எதிர் வீட்டில் ஒரு செல்வன் ஏழு அடுக்கு மாளிகையைக் கட்டிக் கொண்டு, வள்ளுவரை என் இல்லத்திற்கு வாருங்கள் என்று எதிர் கொண்டழைத்தான். வெள்ளிக் கொப்பறை, தங்கத் தாம்பாளங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், முத்துக்கள், மணிகள், எளிதில் உருளும் நிலைப் பெட்டிகள், என்றும் அசையாத இரும்புப் பெட்டிகள் முதலியவைகளெல்லாம் காட்டி, ஏழாவது மாடிக்கு அழைத்துச் சென்று, இங்குத் தெரிகிற 200 காணி நன்செய் நிலங்களும் என்னுடையவை; இரண்டு குளத்து நீரும் எனக்குச் சொந்தப் பாசனம்; இருபது காளைகள், பத்துப் பசுக்கள், இரண்டு குதிரைகள் யாவும் இருக்கின்றன; ஒரு யானையும் நாளை வந்து விடும் “எனக்கு எல்லாம் இருக்கிறது” என்று மகிழ்ந்து கூறினான். வள்ளுவர் உற்றுக் கவனித்தார். அவன் அருகிலிருந்த மனைவி, நற்குண நற்செய்கைகளை உடையவளாய்க் காணப்படவில்லை. தனக்கு எல்லாம் இருக்கிறது என்று சொன்ன செல்வனிடம், “பாவிப் பாயலே உனக்கு என்னடா இருக்கிறது?” என்று கேட்டு விட்டு, வெளியில் வந்து விட்டார். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? ஒருவனுக்கு நற்குண நற்செய்கைகளையுடைய மனைவி வாய்க்கப் பெற்று விட்டால், அவனுக்கு என்ன இல்லா விட்டாலும், எல்லாம் இருக்கிறது என்றும், ஒருவனுக்கு நற்குண நற்செய்கைகளையுடைய மனைவி வாய்க்கப் பெறாவிட்டால், அவனுக்கு எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும், ஒன்றும் இல்லை என்றும் நன்கு விளங்குகிறது. இல்லாதது என்ன? எங்கே? குடிசையில். எப்போது? இல்லவள் மாண்பானால் உள்ளது என்ன? எங்கே? மாளிகையில். எப்போது? இல்லவள் மாணாக்கடை. குறளும் இதுதான்:

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
 இல்லவள் மாணாக் கடை?”

இக்குறளை மணமகனும், மணமகளும் தங்கள் உள்ளத்தே வைத்து, வாழ்க்கையை நடத்துவது நல்லது.