மணமக்களுக்கு/குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

16. நம் நாட்டில் குழந்தை வளர்ப்புக்களில் அதிகமான கவனிப்பு இல்லை. குறைவாகக் குழந்தைகளைப் பெறுவதே, அவர்கள் நன்றாகக் குழந்தைகளை வளர்க்கத் துணை புரியும். உணவை அதிகமாகக் கொடுப்பதை விட, சத்தான உணவைக் குறைவாகக் கொடுத்து வளர்ப்பது நல்லது. அவர்களைப் புழுதியில் புரள விடாமல், கெட்ட பிள்ளைகளோடு சேர விடாமல், தீய சொற்களைப் பேச விடாமல், மிகவும் பாதுகாப்பாக வளர்த்தாக வேண்டும்.

பிள்ளைகளின் உடலை வளர்ப்பதை விட, அறிவை வளர்ப்பதே நலம் பயக்கும். பிள்ளைகள் பள்ளியில் படிப்பதனால் மட்டும் அறிவைப் பெற முடியாது. பெற்றோர்களும், ஆசிரியர்களாக மாறி அவர்களுக்குக் கல்வியையும், ஒழுக்கத்தையும் நாள் தோறும் கற்பித்து, நல்ல வழியில் நடத்தியாக வேண்டும்.

குழந்தைகள் தவறு செய்தால், அடித்துத் திருத்துவதை விட, அதட்டித் திருத்துவதுதான் நல்லது தவறு செய்த பிள்ளைகளை, ‘ஏன் செய்தாய்?’ என்று கேட்டு மிரட்டுவதை விட, ‘இனி மேல் அப்படிச் செய்யாதே’ என்று அன்போடு கூறி வளர்ப்பது நல்லது.

பெற்ற பிள்ளைகளுக்குப் பொருளைத் தேடி வைப்பதை விட, புகழையும், பெருமையையும் தேடி வைப்பதே பெற்றோர்களின் கடமையாகும். இதில் மணமக்கள் கருத்தைச் செலுத்துவது நல்லது.