மணமக்களுக்கு/நாயும் பூனையும்

நாயும் பூனையும்

15. வீட்டிலுள்ள முதியவர்கள், கணவனும், மனைவியும் சண்டையிடுவதைப் பார்த்தால், ‘ஏன் நாயும் பூனையுமாக அடித்துக் கொள்கிறீர்கள்’ எனக் கூறுவதுண்டு. கணவன், மனைவி சண்டையை நாய், பூனை சண்டைக்கு ஏன் ஒப்பிடுகிறார்கள் என்பது, பல ஆண்டுகளாக எனக்குப் புரியவில்லை. இதற்காக நான்கு பூனைகளையும், ஐந்து நாய்களையும் வளர்த்தேன். பிறகே இதன் பொருள் எனக்கு விளங்கியது.

நாயைப் பூனையும், பூனையை நாயும் புரிந்து கொள்ள முடியாது. நாய்க்கு மகிழ்ச்சி வந்தால் வாலை ஆட்டுகிறது. பூனைக்கு கோபம் வந்தால் வாலை ஆட்டுகிறது. எப்படி ஒன்றை, ஒன்று புரிந்து கொள்ள முடியும்?

பூனைக்கு மகிழ்ச்சி வந்தால், தன் காதை நிமிர்த்தி விரைக்கிறது. நாய்க்குக் கோபம் வந்தால் காதை நிமிர்த்தி விரைக்கிறது. எப்படி ஒன்றை ஒன்று புரிந்து கொள்ள முடியும்?

இவற்றிலிருந்து. நமக்குப் புலப்படுகிற உண்மையெலலாம், “கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். அதுவே இல்வாழ்க்கைக்கு ஏற்ற வழி” என்பதே.