மணமக்களுக்கு/வாழ்வு உயர

வாழ்வு உயர

17. மணமக்களின் வாழ்வு உயர வேண்டுமானால், அவர்கள் தங்கள் உளளங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். உள்ளம் உயராவிடில், ஒரு போதும் வாழ்வு உயராது.

தாமரைக் குளத்தில் உள்ள பூக்கள் அதிலுள்ள நீரின் அளவை விட உயர்ந்திருக்கும். ஒரு அடி நீர் இருந்தால், பூ ஒரு அடி உயரத்தில் இருக்கும். மூன்றடி தண்ணீர் வந்து விட்டால், பூ மூன்றடியிலும், ஐந்தடி தண்ணீர் வந்து விட்டால், பூ ஐந்தடி உயரத்திலும் இருக்கும். அக்குளத்தில் 9 அடி தண்ணீர் வந்து விட்டால், பூவும் ஒன்பதடி உயரத்தில் காட்சி அளிக்கும். ‘வெள்ளம் உயர உயர மலர் உயரும், உள்ளம் உயர உயர நீ உயர்வாய்’ என்பது வள்ளுவர் வாக்கு. குறளும் இதுதான்:

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
 உள்ளத் தனையது உயர்வு.”

இதிலிருந்து. வாழ்வை உயர்த்திக் கொள்வதற்கு உள்ளத்தை உயர்த்திக் கொள்வது ஒன்றே சிறந்த வழி என்பது புலனாகிறது. ஆகவே மணக்கள் தங்கள் உள்ளத்தைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். பறங்கிக்காய் அளவு, பூசணிக்காய் அளவு பெரிதாக்க முடியாவிட்டாலும், தேங்காயளவு, மாங்காயளவேனும் பெரிதாக்கிக் கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள், நெல்லிக்காய் அளவேனும், கடுக்காய் அளவிலேனும் தங்கள் உள்ளத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். கடுகு உள்ளமும், துவரை உள்ளமும் ஒரு போதும் கூடாது.

உள்ளத்தை உயர்த்திக் கொள்ளுவது என்பது பெருமனம் படைப்பது என்றாகும். அது தாமும் வாழ்வது, பிறரும் வாழ்வது என்பது. பிறரை வாழ வைத்து வாழ்வதே பெருவாழ்வு என்பது வள்ளுவர் கருத்து. அது இரக்க மனம் படைப்பதும், இரப்பவர்க்கு வழங்குவதும், எளியவர்க்கு உதவுவதும் ஆகும். இது மட்டுமல்ல; தாழ்ந்தவரைப் பழிக்காததும், உயர்ந்தவரைத் தாழ்த்தாததும், உள்ளத்தை உயர்த்திக் கொண்டவருடைய செயல்களாகும். இவையே நல்வாழ்வுக்கு ஏற்ற வழிகள். இவைகளை மணமக்கள் உள்ளத்தே வைத்து, வாழத் தொடங்குவது நல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணமக்களுக்கு/வாழ்வு_உயர&oldid=1646416" இலிருந்து மீள்விக்கப்பட்டது