மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1/சேரர்


பண்டைத் தமிழக வரலாறு

சேரர்




1. சேரர் வரலாறு[1]

சங்ககால இலக்கியங்களின் வாயிலாக அக்கால மக்களின் அக வாழ்க்கையையும், புறவாழ்க்கையையும் ஒருவாறு அறிய முடிகின்றது. அரசர், அரசியர், புலவர்கள், மக்கள், அரசுமுறை, போர்முறை, கொடைத்தன்மை, பழக்கவழக்கங்கள், நாடு, எல்லைகள் ஆகியவற்றை உய்த்துணர முடிகின்றது.

சேரர் - சொல்லும் பொருளும்

இராமாயண காலத்தில் சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களுக்குச் சுக்கிரீவன் வழித்துறைகளை வகுத்துரைக்கும் போது சோழ, சேர, பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகிறான். உதிட்டிரன் இராயசூய வேள்வி வேட்டபோது சோழ, சேர, பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசரும் கூறுகிறார்.

கிரேக்கத் தூதரான மெகஸ்தனீஸ் என்பார் தமது குறிப்பில் சேரர்களைச் சேரமான்கள் என்றே அழைக்கின்றார்.

திருஞானசம்பந்தரும் தமது பதிகங்களில் சேரர், சேரலர் என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டாகும். இதனை நோக்கும்போது சேரர், சேரலர் என்னும் சொற்களே வழக்கில் வந்தனவாகும்.

அசோகனது கல்வெட்டுகளை நாம் நோக்கும்போது சேர புத்திரர் என்பதைக் கேரளபுத்திரர் என்றே வடமொழி அறிஞர்கள் படித்து வந்துள்ளனர். கல்வெட்டில் உள்ள பிராமிய எழுத்துகள் சேரலபுத்திரர் என்று படிக்கும் வண்ணமும் உள்ளது. அதைப் படித்த அறிஞர்கள் கேரளபுத்திரர் என்றே படித்து வந்ததனால், பிற்கால அறிஞர்களும் கேரளபுத்திரர் என்றே கூறிவந்தனர்.

இதனால் நாம் அறிவதாவது சேரலர் தம்மைக் கேரளரென வழங்கத் தலைப்பட்ட காலமானது, தமிழ்மொழியானது சிதைந்து மலையாளமாக மாறிய காலமாயிருக்கலாம். கேரளர் என்னும் சொல்லானது கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்தான் மாறிற்று என்று உரைக்கத்தக்க வகையில், கி.பி. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பிற்காலச் சோழன் வீரராசேந்திரன் என்னும் அரசனின் கல்வெட்டுகளில் கேரளாந்தகன் என்றே குறிப்பு உள்ளது.[2] இன்றும் தென்னாட்டில் சிலர் தங்களது ஊர்களை வடவரிட்ட பெயராலேயே அழைத்து வருதல் காணலாம். இது வடமொழியின்மீது உள்ள பற்றினால் எழுந்ததே ஆகும். இந்த வகையில் கேரளம் எனும் சொல் வழக்கினையே பெரிதும் விரும்பி வழங்கி வந்தனர்.

நாடும் எல்லைகளும்

சேர மன்னர்களைக் கூறும் முக்கியச் சங்ககால நூல்களை நோக்குவோமானால் நாட்டினது பரப்பும் அதன் எல்லைகளும் குறிக்கப் பெறும். பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு. சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பார்ப்போமாயின் சேர நாட்டில் அடங்கியுள்ள பகுதிகள் குட்டநாடு, குடநாடு, பூழிநாடு, குன்ற நாடு, மலைநாடு, கொங்கு நாடு, பொறைநாடு, முதலியன ஆகும். இதில் அயிரைமலை, நேரிமலை, செருப்புமலை, அகப்பாக்கோட்டை, உம்பற்காடு, நறவுத் துறைமுகம், முசிறித் துறைமுகம், தொண்டித் துறைமுகம் ஆகிய இடங்களும் அடங்கும். பல அரசர்கள் வஞ்சியையும், சிலர் மாந்தையையும் தலைமைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். சேர மன்னர்களின் இவ்வஞ்சி நகரைப்பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுள்ளது. 'சேரன் வஞ்சி' எனும் சிறந்த நூலை எழுதிய சா. கிருட்டினசாமி என்பார் சேர நாட்டில் பெரியாறு என்னும் ஆற்றின் அருகில் உள்ள கரூர்ப்பட்டினமே சேரர்களது வஞ்சிமாநகர் என்று குறிப்பிட்டுள்ளார். இதையே திரு கனகசபைப் பிள்ளையவர்களும், திரு. கே. ஜி. சேஷய்யரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். கொங்கு நாட்டில் உள்ள கரூர் ஆனிலை என்ற நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள இடத்தையும் பிற்காலச் சேரர்களே வென்று தங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொண்ட பிறகு அதற்குச் 'சேரர் கொங்கு' என்ற பெயரும் வழங்கினர். எனவே, சேர நாட்டில் உள்ள கரூர்ப்பட்டினமே சங்கநூல்களில் கூறப்பெரும் வஞ்சிமா நகரம் எனக் கொள்ளவேண்டும். இவர்களது நல்லாட்சியை ஓரளவு உறவுமுறையுடன் தெரிந்துகொள்ள மேற்கூறிய நூல்கள் துணைபுரிகின்றன. அவற்றை ஒரு முறைப்படுத்தித் தெளிவான முறையில் நோக்கினால் அவர்களது வரலாற்றை அறியமுடியும். பதிற்றுப்பத்து என்னும் நூல் சேரஅரசர்கள் பதின்மரும் அவர்களது உறவுமுறைகளும் தெரிந்துகொள்ள முழுதும் பயன்படுகிறது. இந்தப் பதின்மரின் வரலாற்றை முதலிலும் பின்னர் ஏனைய நூல்களில் காணப்படும் மற்றச் சேர அரசர்களையும், சேரமான் புலவர்களையும் பற்றித் தெரிந்துகொள்ளலாம். இதையே சேர அரசர்கள், பிற சேர அரசர்கள், அரசப் புலவர்கள் என்னும் தலைப்புகளின் கீழும் காணலாம்.



1. சேர அரசர்கள்

பதிற்றுப்பத்து என்பது சங்ககால நூல்களில் ஒன்று. இது ஒரு தொகுப்பு நூல். இதில் பத்துப்புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன என்பது பதிற்றுப்பத்து என்னும் நூலின் பெயரால் தெரியவருகிறது. ஒவ்வொரு புலவரும் ஒவ்வோர் அரசனைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அந்தப் பாடல்கள் முதற்பத்து, இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து என்னும் முறையில் எண் குறியீட்டுப் பெயரால் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முதல் பத்தும் பத்தாம் பத்தும் இதுவரை கிடைக்கவில்லை. இடையிலுள்ள எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன.

கிடைத்துள்ள இந்த எட்டுப் பத்துகளில் எட்டுப் புலவர்கள் எட்டுச் சேர அரசர்களைப் பாடியுள்ளனர்.

இந்த எட்டுப் பேர்களில் ஐந்துபேர் ஒரு கால்வழியினராகவும், எஞ்சிய மூன்றுபேர் மற்றொரு கால்வழியினராகவும் இருந்தவர்கள் என்னும் உண்மையைப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியரின் பதிகக் குறிப்பு வாயிலாக அறிகிறோம்.

பத்துப் புலவர்களின் பாடல்களை ஒன்றுதிரட்டிப் பதிற்றுப் பத்து என்னும் பெயருடன் நூலாக்கிய தொகுப்பாசிரியர் இன்னார் என்று தெரியவில்லை. எனினும், அந்தப் புலவரும் சங்க காலத்தவரே ஆவார். இந்தப் பதிற்றுப்பத்து நூலைச் சங்க நூல்களில் இறுதியாகத் தோன்றியவற்றுள் ஒன்று எனச் சிலர் கூறுகின்றனர். எனவே, பதிற்றுப் பத்துச் சேர அரசர்களைப் பற்றி இவர் தரும் பதிகச் செய்திகளை நாம் வரலாற்று உண்மை.

பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்துப் பாடல்களைப்பற்றியும் பதிகம் என்னும் பெயரில் சில தெளிவான உண்மைகளைத் தெரிவிக்கின்றார். இந்தத் தொகுப்பாசிரியர் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சிறப்புப் பெயர் இட்டுள்ளார்; இன்னின்ன சிறப்புப் பெயர் கொண்ட பாடல்கள் இன்னின்ன பத்தில் அடங்கியுள்ளன என்றும் கூறியுள்ளார். இந்தப் பத்துப் பாடல்களையும் பாடிய புலவர் இன்னார் என்பதும், அவரால் பாடப்பட்ட அந்தப் பத்து இன்ன சேர அரசனைச் சிறப்பித்துக் கூறுகிறது என்பதும், அந்தச் சேர அரசன் இன்னார்க்கு இன்னஉறவுமுறையினன் என்பதும் அவரது பதிகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மற்றும் இந்தப் புலவர் அந்தச் சேர அரசனை இந்தப் பத்துப் பாடியதற்காக இன்ன பரிசுபெற்று இவ்வாறு சிறப்பிக்கப்பட்டார் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அரசன் இத்தனை ஆண்டுகள் அரசனாய் விளங்கினான் என்னும் செய்தியையும் குறிப்பிட்டுள்ளார். நாம் இந்தச் செய்திகளை யெல்லாம் வரலாற்று உண்மைகள் என்றே கொள்ளவேண்டும்.

உதியன் கால்வழி

பதிற்றுப்பத்தில் இரண்டு கால்வழியைச் சேர்ந்த அரசர்கள் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளனர் என்று கூறினோம். அவற்றுள் ஒன்று இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும், அவன் தம்பியையும், ஆண் மக்கள் மூவரையும் கொண்ட ஒரு கால்வழியாகும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தை உதியஞ்சேரல் என்று கூறப்பட்டுள்ளான். இந்த உதியஞ்சேரலுக்கு முன்னோன் என்று சான்றுடன் இவனது கால்வழியில் கூறத்தக்கவர் யாரும் தெரியவில்லை. ஆதலால், இந்தக் கால்வழியை நாம் உதியன் கால்வழி என்று குறிப்பிடலாம். இந்த வகையில் உதியன், உதியன் மகன் நெடுஞ்சேரலாதன், நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன், நெடுஞ்சேரலாதனின் மக்கள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற முறையில் ஆறு சேர அரசர்களை நாம் அறிய முடிகிறது.

அந்துவன் கால்வழி

மற்றொரு கால்வழி மூன்று அரசர்களைச் சிறப்பித்துப் பாடுகிறது என்று கூறினோம். இந்த மூவருள் முன்னவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆவான். இவன் தந்தை அந்துவன் என்று கூறப்படுகிறான். எனவே, இவர்களது கால்வழியை அந்துவன் கால்வழி என்று குறிப்பிடலாம். இந்த வகையில் அந்துவன் கால்வழி அரசர்கள் நான்குபேர் ஆவர். அந்துவன், அந்துவன் மகன் செல்வக்கடுங்கோ, செல்வக்கடுங்கோவின் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை, மற்றும் குட்டுவன் இரும்பொறை ஆகியோரே அந்த நால்வர். இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தை குட்டுவன் இரும்பொறையையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் இந்த மாந்தரஞ்சேரல் கால்வழி அரசர்கள் ஐவர் எனக் கொள்ளலாம்.

இந்த ஐந்து அரசர்கள் பெயரிலும் 'பொறை' என்னும் அடைமொழி உள்ளது. இதனால் இவர்களைப் 'பொறையர்க்குடி அரசர்கள்' என்று குறிப்பிடுதலும் உண்டு. பொறை அரசர்கள் என்று நோக்கும்போது, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, மாந்தரன் பொறையன் கடுங்கோ முதலான அரசர்களையும் ஒன்றுசேர்த்து எண்ணவேண்டும்.

இனி, நாம் மேலே கண்டவாறு உதியன் குடியைச் சேர்ந்த சேர அரசர்கள் ஆறு பேர், அந்துவன் குடியைச் சேர்ந்த சேர அரசர்கள் நான்கு பேர். ஆக மொத்தம் பத்துச் சேர அரசர்களைச் சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ்க் காண்கிறோம்.

இந்தப் பத்துச் சேர அரசர்களின் வரலாற்றைப் பதிற்றுப்பத்து என்னும் நூலை அடிப்படைச் சான்றாகக்கொண்டு நாம் ஆராயும்போது, புறநானூறு, அகநானூறு முதலான பிற சங்கப் பாடல்களிலிருந்தும், சங்ககாலக் கல்வெட்டுகளிலிருந்தும் தெரியவரும் செய்திகளையும் ஆங்காங்கே இணைத்துக் காண்கிறோம். பின்னர், முறையே பிற நூல்களில் காணும் சேர அரசர்களையும், சேரமான் புலவர்களையும் காண்போம்.

உதியஞ்சேரல்

உதியஞ்சேரல்[3]. செங்குட்டுவனின் பாட்டன்[4]. வீரமும் கொடையும் இவனது வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றன.

போர்த்திறன்

'நாடுகண் அகற்றிய உதியஞ்சேரல்'[5] என்று இவன் குறிப்பிடப் படுகின்றான். நாட்டின் பரப்பை விரிவாக்கினான் என்பதே இதன் பொருளாகும். இதனால், இவன் தன் முன்னோரிடமிருந்து நாட்டுப் பகுதி ஒன்றைப் பெற்றிருந்தான் என்பது தெளிவாகிறது. இவன் முன்னோர் சேர அரசர்களாய் முடியாட்சி புரிந்து வந்தனர் என்பது விளங்குகிறது.

பேய்க்குப் பெருஞ்சோறு

உதியஞ்சேரல் நாட்டின் பரப்பை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான். இதனால், அவன் பகைவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டனர். 'முதியர்' என்னும் குடியினர் பாண்டியர்க்குப் பகைவர்; சேரருக்கு நண்பர்[6]. முதியர் குதிரைப் படையில் சிறந்து விளங்கினர். இந்தக் குடியினரைப் பகைவர்கள் தாக்கினார்கள். முதியர்களில் பலர் மாண்டனர். செய்தி அறிந்த உதியஞ்சேரல் முதியர்களுக்குத் துணை வந்தான். பகைவர்கள் பலர் மாண்டனர். அவர்களின் உடல் குறுகியதும், நெடியதுமாய் வீழ்ந்து பல பேய்கள் கூட்டத்திற்குப் பெருஞ்சோறாய்[7] அமைந்தன.

கொடை நலம்

இவனைப் பாடிக்கொண்டு புலவர்கள் பலர் சென்றனர். அவர்களெல்லாம் மனம் மகிழும்படி இவன் கொடை வழங்கினான். இவனை மாமூலனார் 'உதியஞ்சேரற் பாடிச் சென்ற பரிசிலர்'[8] எனவும் 'தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்'[9] எனவும் அவன் கொடை வழங்கிய காட்சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

குழுமூர்ச் சோற்றுமடம்

குழுமூர் என்பது ஓர் ஊர். அவ்வூரில் வாழ்ந்தவர்கள் ஆடு மாடு மேய்த்து வாழும் ஆயர்கள். இவ்வூரைச் சூழ்ந்த பகுதியில் ஆங்காங்கே குன்றுகளும் நிழல் தரும் மரங்களும் உண்டு. ஆயர்கள் ஆங்காங்கே அம்மரநிழல்களில் தங்குவர். அதுவே உதியனின் சோற்றுமடமாகும்[10]. 'உதியன் அட்டில்' என்றும் இது வழங்கப்பட்டது. இதற்குக் கைம்மாறாக இவன் ஆயர்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. இந்த மடத்தில் உணவு உண்ணும் ஒலி, அருவியில் ஒலிக்கும் ஒலியின் எதிரொலிபோல் கேட்டது.

பண்புநலம்

இவன் குற்றமற்ற சொற்களையே பேசுவான், உண்மையே பேசுவான். 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றுந் தீமை இலாத சொலல்' என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான் என்று கூறலாம்; கொடை வழங்குதலைத் தன் கடமை என எண்ணிச் செய்தான்; கோணாத தன் நெஞ்சு விரும்பியவாறு செய்தான். நிலம், விசும்பு, காற்று, தீ, நீர் என்னும் ஐம்பெரும் பூதங்களின் இயற்கைக் குணங்களாகிய பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அளி போல் இவன் தனக்குப் பகைவர் பிழை செய்தபோது அப்பிழையைப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், அவரை அழித்தற்கேற்ற மனவலியும், அவ்வாற்றலால் அவரை அழித்தலும், அவர் வழிபட்டால் அவருக்குச் செய்யும் அருளும் உடையோனாவான்[11].

இசை வேட்கை

இவன் இனிய இசையுடன் முரசுகளை முழக்கி மகிழ்வது உண்டு என்பது 'இன்னிசை முரசின் உதியஞ்சேரல்'[12] என்று குறிப்பிடுவதால் தெரிகிறது. இவன் போர் புரியும்போது இயவர்கள் (இசைக் கருவிகள் முழங்குவோர்) ஆம்பலங் குழல்களால் ஊதினார்கள்[13].

மனைவி மக்கள்

இவனது மனைவி நல்லினி ஆவாள். இவள் வெளியன்வேள் என்பவனின் மகள் ஆவாள். இவனுக்கும் நல்லினிக்கும் பிறந்த ஆண் மக்கள் இருவராவர். மூத்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்; இளையவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆவான்[14].

ஒப்புநோக்கம்

சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பாரதப்போரில் இருதரத்துப் படைகளுக்கும் சோறு வழங்கினான். அவன் வேறு, இவன் வேறு. அவனைப் பற்றிய செய்தியினைப் பிற சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ்க் காணலாம்.


நெடுஞ்சேரலாதன்

சங்ககாலத்தில் சேரலாதன் என்னும் பெயர்கொண்ட அரசர் நால்வர் இருந்தனர். நெடுஞ்சேரலாதன் இரண்டு பேர். இவர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்போர் ஆவர். பெருஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் மற்ற இருவர். இவர்களுள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசர்கள் எனும் இப்பகுதியின் கீழும், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசப் புலவர்கள் எனும் தலைப்பின் கீழும் காணலாம்.

நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டு மாண்டான். பெருஞ்சேரலாதன் கரிகாற் பெருவளத்தானோடு போரிட்டு முதுகில் காயப்பட்டதற்காகப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர்நீத்தான். சேரவேந்தர்களைச் சிறப்பித்துப் பாடும் பதிற்றுப்பத்து என்னும் நூலில் நெடுஞ்சேரலாதன் இரண்டாம் பத்தில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளான்.

போர்த்திறம்

கடம்பறுத்தல்: அரபிக் கடலில் பல சிறு தீவுகள் உள்ளன[15]. 'இரு முந்நீர்த் துருத்தி'[16] என இது பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அங்குக் கடம்ப (கடப்ப) மரத்தைக் காவல் மரமாக உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனைக் கடம்பன் என்றே குறிப்பிடலாம்[17]. நெடுஞ்சேரலாதன் தன்னிடமிருந்த பெரும்படையைக் கடற்போரில் ஈடுபடுத்தினான்[18]; கடம்பனைத் தாக்கினான். நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் அடித் துண்டால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்குப் போர் முரசு செய்து கொண்டான்.

கடம்பை வெட்டி வீழ்த்தும்படி நெடுஞ்சேரலாதன் ஏவினான் என்று ஒரு பாடல் கூறுகிறது[19]. இவனது மகன் செங்குட்டுவன் கடம்பறுத்தவன் என்று சிறப்பித்துப் பாராட்டப்படுகிறான். எனவே, நெடுஞ்சேரலாதன் இந்தப் போரில் தானே நேரில் ஈடுபடாமல் தன் மகனை அனுப்பி வெற்றிகொண்டானோ என எண்ண வேண்டியுள்ளது.

அரபிக்கடல் தீவுகள் நெடுஞ்சேரலாதனின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. நெடுஞ்சேரலாதன் அப்பகுதிகளில் வயவர்களை அமர்த்தி நாடு காவல் புரிந்து வர ஏற்பாடு செய்தான். அத்தீவுகளில் அதற்கு முன்னர் ஆட்சி புரிந்து வந்த மன்னர்கள் வயவர்களோடு போரிட்டு அவர்களை வீழ்த்தித் தம் நாடுகளைக் கவர்ந்து கொண்டனர்[20]. மேலும், இவர்கள் நெடுஞ்சேரலாதனுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சினமுற்றுச் சேரலாதன் இப்போரில் ஈடுபட்டான்[21].

கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தை வெட்டி வீழ்த்தியவனைச் சிலப்பதிகாரம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. சில இடங்களில் கடம்பு எறிந்த செயலும், இமய மலையில் வில்லைப் பொறித்த செயலும் இணைத்துப் பேசப்படுகின்றன[22]. ஓரிடத்தில் செங்குட்டுவனை 'வாய் வாட்கோதை' என்று குறிப்பிட்டு, கடம்பு எறிந்ததும் வில் பொறித்ததும் அவனது செயல்கள் என்று கூறப்படுகின்றன[23]. ஓரிடத்தில் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் கண்டு வாழ்த்தும் பராசரன் எனும் பார்ப்பான் கடம்பு எறிந்ததும், இமயத்தில் வில்லைப் பொறித்ததுமாகிய செயல்களை அவனது செயல்கள் என்று கூறுவதைக் காண்கிறோம்[24]. இவற்றிற்கு மாறாகக் கடம்பு எறிந்த அரசன் கண்ணகிக்குக் கல்நாட்டு விழா நடைபெற்றபோது உயிருடன் இல்லை என்று குறிப்பிடுவதையும் காண்கிறோம்[25].

ஓரிடத்தில் யவனரைப் பிணித்தவன் என்றும். பாரதப் போரில் சோறு வழங்கியவன் என்றும், கடம்பறுத்தவன் என்றும் மூன்று வரிப்பாடல்கள் சேரனை வாழ்த்துதல் என்னும் ஒரு பொருள்மேல் அடுக்கி வந்துள்ளன[26]. இச்செய்தியைப் பொதுப்படையாகக் குறிப்பிடும் இடமும் உண்டு[27].

இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நாம் பார்க்கும்போது கடம்பு எறிந்தவன் நெடுஞ்சேரலாதன் என்பதையும், அவனது அச்செயல்களுக்கு உறுதுணையாகச் செங்குட்டுவனும், மாந்தரஞ் சேரல் இரும்பொறையும் இருந்தார்கள் என்பதையும் நாம் அறிகிறோம்.

வன்சொல் யவனர் பிணித்தல்

கடம்பு தடிந்த போர்ச்செய்தி, நெடுஞ்சேரலாதனைச் சிறப்பிக்கும் பதிகத்தில் கூறப்படவில்லை. பதிகத்தில் யவனரைப் பிணித்ததாகக் கூறப்படும் செய்தி, பாடல்களில் கூறப்படவில்லை. எனவே, கடம்பு தடிந்தது போரின் விளைவே. 'வன்சொல் யவனர்'[28] என்று குறிப்பிடப்பட்டுள்ளவர் கடம்பு தடிந்த போரில் பிடிபட்ட போர்க் கைதிகள் எனலாம். இந்தப் போர்க் கைதிகளைப் பிணித்துக்கொண்டு வரும் போது அவர்களுடைய கைகளைப் பின்புறத்தில் சேர்த்துக்கட்டியும், தலையில் நெய்யை ஊற்றியும் அழைத்து வந்தனர். போர்க் கைதிகளை இவ்வாறு அழைத்துவருவது கிரேக்கர் மரபு. நெடுஞ்சேரலாதன் சார்பில் அழைத்து வந்த செங்குட்டுவன் பகைவரின் மரபுக்கு மதிப்பளித்து அழைத்து வந்தான்[29].

பிணிக்கப்பட்ட யவனர்கள் யார் என்பதில் அறிஞர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. மேலைநாட்டுக் கடல் வாணிகராகிய யவனர்கள் என்று சிலரும், வடநாட்டில் வாழ்ந்த சாக யவனர் என்று சிலரும் கருதுகின்றனர். சாக யவனரின் கூட்டத்தார் என்று கூறும் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, வெளிநாட்டுச் செலாவணியில் நாட்டின் பொருளியலை வளப்படுத்திய மேலைநாட்டு வாணிகக் குழுவினராகிய யவனரைப் பிணித்தான் என்பது பொருந்தாது என்கிறார். வடநாட்டு யவனர் வடுகரைப் போன்றும், ஆரியரைப் போன்றும் நேரே தமிழகத்தில் ஊடுருவாமல் அரபிக்கடல் தீவுகளுக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பது மறுசாரார் கருத்து. இந்தக் கருத்துகள் உய்த்துணரப்பட்டவையாகத் தென்படுகின்றன.

யவனர் யாவர் என்பதை, கிடைக்கும் அடிப்படைச் சான்றுகளை வைத்துக்கொண்டு தீர்மானிப்பதே நல்லது. யவனரின் பாவை விளக்கு,[30] அன்ன விளக்கு, [31] கட்குடம்[32] ஆகியவை சிறப்பு மிக்க பொருள்கள் எனப் பேசப்படுகின்றன. யவனரின் மரக்கலங்கள் முசிறித் துறைமுகத்திற்குப் பொன்னைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்றதையும் நாம் காண்கிறோம்.[33] இதனால் இவர்கள் பிற நாட்டிலிருந்து கடல் கடந்து வந்த வாணிகர்கள் என்பது தெளிவாகிறது. இவர்கள் புகார் நகரத்திற்கு வாணிகத்தின்பொருட்டு வந்திருந்து தங்கியிருந்ததையும் நாம் காண்கிறோம்.[34] மதுரை நகரில் யவனர்கள் வாளைக் கையில் ஏந்திக்கொண்டு கோட்டை வாயிலில் காவல்புரிந்து வந்ததைக் காணும்பொழுது.[35] யவனர்கள் சிலர் தமிழ் நாட்டிலேயே தங்கி வாழ்ந்தனர் என்பதை அறிகின்றோம். இவ்வாறு தங்கியவர்களில் புகார் நகரில் தங்கியவர் மாடமாளிகைகளில் வாழ்ந்ததையும், மதுரையில் தங்கியவர் கோட்டையைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததையும் நாம் பார்க்கிறோம்.

சேர அரசன் ஒருவன் யவனர்களின் வளநாட்டை ஆண்டான் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.[36] இந்த அரசன் இந்த யவனர் நாட்டுடன் தென்குமரி, இமயம் ஆகிய எல்லைக்குட்பட்ட நாட்டையும் ஆண்டான் என்று அங்குக் கூறப்பட்டுள்ளது. யவனர் நாடு தென்குமரி, இமயம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்டதென்பது விளங்காத காரணத்தால் அந்தச் சேர அரசன் ஆண்ட யவனர் நாட்டையும் இதனுடன் இணைத்துக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த யவனர் நாடு எது?

மேலே கூறியபடி தென்குமரி, இமயம் இவ்விரு எல்லைக்குட்பட்ட நாட்டை ஆண்ட சேர அரசன் நெடுஞ்சேரலாதன்[37]. இவன் கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தை வீழ்த்தினான். கடப்ப மரம் மேற்குக் கடற்கரையை அடுத்த தீவுகளில்[38] இருந்த காவல் மரம். இந்தக் காவல் மரத்தை உடையவர்கள் அந்தத் தீவு மக்கள். மேலை நாடுகளிலிருந்து அரபிக்கடல் வழியே கலம் செலுத்தி வாணிகம் செய்துவந்த யவனர்கள் இந்த இலக்கத் தீவுகளில் தங்கினார்கள். அங்கிருந்த மக்களைத் தம் வாணிகத்திற்குத் துணையாகக் கொண்டனர்.

சேர நாட்டில் இவர்கள் செய்துவந்த வாணிகத்தில் ஏதோ ஒரு வகையில் தவறு நேர்ந்திருக்கலாம். அந்தத் தவற்றுக்குக் கடம்புத் தீவுகளிலிருந்த மக்களும் உடந்தையாயிருந்திருக்கலாம். அரசன், தவற்றினைத் திருத்த அவர்களோடு போரிடவேண்டியதாயிற்று. இந்தப் போரின் விளைவுதான் காவல் மரமாகிய கடப்பமரம் வெட்டியதும். அதனால் முரசு செய்துகொண்டதும், யவனரைக் கைது செய்து கொண்டு வந்ததும், பிறகு அவர்களது செல்வத்தைச் சேரநாட்டு மக்களுக்கு வழங்கியதும் ஆகிய நிகழ்ச்சிகளாகும்.

இமயம் வரை வெற்றி

நெடுஞ்சேரலாதன் இமயமலையில் தன் சேரர்குடிச் சின்னமாகிய வில்லைப் பொறித்துவிட்டு மீண்டான் எனப் பதிகம் கூறுகிறது. பதிகம், பதிற்றுப்பத்தைத் தொகுத்தவரால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. பாடல் தோன்றிய காலமே அந்தந்த மன்னர்களுக்குரிய காலம். இவன் காலத்தில் பாடப்பட்ட இரண்டாம் பத்துப் பாடல்களில் இமயத்தில் வில் பொறித்த செய்தி கூறப்படாமையை எண்ணவேண்டியுள்ளது.

குமட்டூர்க் கண்ணனார் நெடுஞ்சேரலாதன்மீது பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பித்த காலத்தில் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில்லைப் பொறித்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த நிகழ்ச்சி இவனது வரலாற்றில் மிக முக்கிய நிகழ்ச்சியாகையால், குமட்டூர்க் கண்ணனார் பாடலில் இடம்பெறாவிட்டாலும் சேர்க்கப்பட வேண்டும் என்னும் கருத்து உடையவராய்ப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியர் தம் பதிகத்தில் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் யவனரைப் பிணித்த நிகழ்ச்சியை இமயத்தில் வில் பொறித்த நிகழ்ச்சிபோல் அல்லாது பாடல் பாடப்பட்ட காலத்திற்குப் பின் நடந்த நிகழ்ச்சி என்றாலும் நெடுஞ்சேரலாதன் காலத்து நிகழ்ந்தது என்று கூறினோம். அதற்கு முதன்மைக் காரணமாவது கடம்பறுத்த முக்கிய நிகழ்ச்சியானது பதிகத்தில் விடுபட்டபோதிலும் பதிகத்தில் காணப்படும் யவனரைப் பிணித்ததாகிய தொடர்நிகழ்ச்சியில் வேறுவகையில் பதிகத்தில் கூறப்பட்டுள்ளது என்று கொண்டதே ஆகும்.

இமயம் நோக்கிச் சென்றபோதும், அங்கிருந்து தன் நாட்டை நோக்கி மீண்டபோதும் நெடுஞ்சேரலாதன் பல மன்னர்களை வென்றான். இந்த வெற்றிகளில் ஆரியரை அடிபணியும்படி செய்த செயல் பதிகத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இந்த வெற்றிச் செய்திகள் பதிற்றுப்பத்துப் பாடல்களிலும்[39] கூறப்பட்டுள்ளன.

இவனது வடநாட்டுப் போரில் பல அரசர்களை வென்றான், ஆயினும் அவர்களது நாடுகளைக் கைப்பற்றிக் கொள்ளவில்லை. இதனைச் சமுத்திரகுப்தனின் தென்னிந்தியப் படையெடுப்பிற்கு ஒப்புமையாகக் காட்டலாம். இமயம் சென்ற வழியில் சிலர் நெடுஞ்சேரலாதனைவிட அவர்களது அரசர்கள் மேம்பட்டவர் எனப் புகழ்ந்து கூறினர்[40]. அவர்களது பேராற்றல் அழியும்படி வென்றான். இவ்வாறு புகழ்ந்து கூறியதால் பேராற்றல் அழிக்கப்பட்டவரே ஆரியர். இவனது இமயப்படையெழுச்சி வடநாட்டு அரசர்களின் வரலாற்றில் எங்கும் காணப்படாமைக்கு இதுவே காரணமாகும்.

இமயத்தில் வில்லைப் பொறித்தான் என்று கூறும் பதிகம் அப்பகுதிகளில் தமிழகத்தின் பெயர் விளங்கும்படி தன் கோலை நிலை நாட்டினான் என்றும் கூறுகிறது[41]. கோலை நிலைநாட்டினான் என்றால் ஆட்சியை நிலைநாட்டினான் என்பது பொருள். தமிழ்நாட்டு வரலாற்றில் ஆட்சியை நிலைநாட்டுதல் என்பது அரசாளுதலை மட்டும் குறிக்கும் சொல் அன்று. பிறர் பணிந்து கொடுத்துப் பின்னர் மீண்டாலும் திறை தந்த நாடு. திறைபெற்ற மன்னனின் ஆட்சிக்குக்கீழ் இருந்ததாகவே கருதப்படும்[42].

இந்த வகையில் நெடுஞ்சேரலாதன் இமயமலைப் பகுதியில் ஆட்சியை நிலைநாட்டினான் என்று பதிகம் கூறுவதாவது, இமயம் முதல் குமரிவரை வென்றான்[43] என்று பொருளாகும். எல்லை காண முடியாத அளவுக்கு இவன் நாடு விரிந்தது[44] என்ற பாடற் கூற்றுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மைகளேயாகும்.

நெடுஞ்சேரலாதனின் போர்முறைச் செய்திகள்

'கூற்று வெகுண்டுவரினும் மாறாதவன்'[45] என்றும், 'பகைவர் உள்ளத்தை வருத்தும் போர்ச் செயல்களைச் செய்பவன்' [46] என்றும் வரும் செய்திகளால் இவனது போராற்றலை நன்கு உணர்கின்றோம்.

இவனும், இவனது படைவீரர்களும் எழுமரம் போன்ற உறுதியான நெஞ்செலும்பை உடையவர்கள்,[47] முறுக்கான உடற்கட்டு உடையவர்கள்,[48] இவனது படை வரிசை வரிசையாக வந்தது.[49] நெடுஞ்சேரலாதன் தன் மார்பில் பச்சைநிறக் கற்கள் பதித்த அணிகலன்களை அணிந்திருந்தான்.[50] நெடுஞ்சேரலாதன் யானை மீதேறிப் போர்க்களம் சென்றான்.[51] அப்போது அவன் படைப் பிரிவுகளின் கண்களாக விளங்கினான்[52]. படைகளைத் தழுவிச் செல்லும் முறையில் படையின் கவசமாக விளங்கினான்[53]. வெற்றிக்கொடி நாட்டும் படையை ஏராகக் கொண்டு இவன் பகைவர்களாகிய நிலத்தை உழுபவன்[54]. இவ்வகைச் செய்திகள் எல்லாம் இவனது படைஎழுச்சி நிலையைக் காட்டுகின்றன. படையில் இருந்த இயவர்கள், உலகமெல்லாம் பாதுகாப்புக்காக இவனுடைய குடை நிழலின் கீழ் வரவேண்டும் என்று கூறி வெற்றி முரசினை முழக்கினர்[55].

இவன் படையெடுத்துச் சென்றபோது கூளியர்கள் காட்டுப் பாதைகளில் படைசெல்ல வழி அமைத்துக் கொடுத்தனர். இதற்கு மாறாக நெடுஞ்சேரலாதன் வெற்றிபெற்ற நாடுகளில் உணவுப் பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டனர். வயவர்கள் தம் வேல்களில் இருந்த புலித்தோல் உறைகளை நீக்கிவிட்டு ஏந்திச் சென்றனர். முரசு முழக்குவோர் குருதிபாயும் போர்க்களத்தைக் காணும் விருப்பத்தோடு செந்தினையில் குருதியைக் கலந்து தூவிப் போர் முரசை முழக்கினர். இவனது படையினர் போருக்கெழுந்த நாள் முதல் போர் முடியும் நாள் வரை தம் போர் உடைகளைக் களைந்ததே இல்லை[56]. இவ்வாறு இவனது படையெடுப்பு நிகழ்ந்தது.

நெடுஞ்சேரலாதன் தன் போர்ப் பாசறையில் நீண்டநாள் தங்கினான்,[57] ஓர் ஆண்டுக்குமேல் தொடர்ச்சியாகத் தங்கியதும் உண்டு[58].

போரில் இவன் பகைவர்களது மதில்களையும் கதவுகளையும் அழித்தான்,[59] அவர்களது ஊர்களைத் தீக்கிரையாக்கினான்[60]. வளமுடன் விளங்கிய பகைவரது நாடுகளும் இவனை எதிர்த்தமையால் அழிந்து தம் பொலிவை இழந்துபோயின[61]. அரிமாக்கள் நடமாடும் இடங்களில் பிற விலங்குகள் தலைகாட்டாமைபோல நெடுஞ்சேரலாதன் தோன்றிய நாடுகளில் மன்னர்கள் ஒடுங்கினர்[62].

தும்பைப் பகைவரை வெல்லுதல்

வடநாட்டில் இவனை எதிர்த்துத் தாக்கும் மன்னர்கள் இல்லை என்று கூறினோம். தமிழ் நாட்டில் இத்கைய நிலை இல்லை. இவன் போர் தொடுக்காமல் இருந்தபோதே இவனைச் சில அரசர்கள் இவனது நாட்டை அடையக் கருதிப் போர்தொடுத்தனர்[63]. அவர்களை எதிர்த்துப் போரிட்டு நெடுஞ்சேரலாதன் அழித்தான்[64]. இது தற்காப்புப் போர் ஆகும். இவ்வாறு புகழ் நாட்டும் போர்களிலும், தற்காப்புப் போர்களிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.

தமிழ்நாட்டு அரசர்களை வலியச் சென்று தாக்கும் செயலை இவன் செய்யவில்லை. தமிழ்நாட்டு அரசர்கள் யாராக இருந்தபோதிலும் தன்னைச் சேர்ந்தவர்கள் என்றே இவன் கருதினான். தன்னை வலிய வந்து எதிர்த்த வடநாட்டு அரசர்களைத்தாம் இவன் பகைவர்களாகக் கருதினான்; தமிழ்நாட்டு அரசர்கள் வலிய வந்து எதிர்த்தாலும் அவர்களை இவன் பகைவர்களாகக் கருதவில்லை. இவனது உணர்வை அறிந்திருந்த பதிற்றுப்பத்துத் தொகுப்பாசிரியர் வடநாட்டில் இவன் சேரநாட்டுப் புகழ் விளங்கும்படி செய்தான் என்று கூறாமல் தமிழகத்தின் புகழ் விளங்கும்படி செய்தான் எனக் கூறியுள்ளார்.

இவன் இமயத்தில் வில்லைப் பொறிக்கும்போது புலியையும் கெண்டையையும் சேர்த்துப் பொறித்ததும் உண்டு[65].

இவனது இந்த ஒருமைப்பாட்டு உணர்வுகள் போற்றுதலுக்கு உரியவையாகும்.

போர்ப்புறம் வேற்போர்

நெடுஞ்சேரலாதன் சேரநாட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்து வருகையில் கொங்குநாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆட்சிசெலுத்தி வந்தான். இவர்கள் காலத்தில் சோழநாட்டை ஆண்டுவந்த வேந்தன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி என்றும் பெரு விறற்கிள்ளி என்றும் அழைக்கப் பட்டான்.

நெடுஞ்சேரலாதனுக்கும். இந்தச் சோழ அரசனுக்கும் போர் மூண்டது. அந்தப் போரானது 'போர்'[66] என்னுமிடத்தில் நடைபெற்றது. சோழன் அவனைப் 'போர்' என்ற நகரத்திற்கு வெளியே எதிர்த்துப் போராடினான். போரில் இருதிறத்துப் படைகளும் அழிந்தன. இறுதியில் வேந்தர் இருவரும் நேரில் வேற்போரில் ஈடுபட்டனர். கிள்ளியானவன் வேற்போரில் வல்லவன் என்பது அவனது பெயரிலேயே விளங்கும். இருபெருவேந்தரும் போரில் சாய்ந்தனர்[67]. நெடுஞ்சேரலாதன் உயிர் நீங்குகின்ற நிலையில் நெடுநேரம் போர்க்களத்திலேயே கிடந்தான். அப்போது கழாத் தலையார் என்னும் புலவர் அவனைக் கண்டு பாடி அவனது கழுத்தில் இருந்த ஆரத்தைப் பரிசிலாகக் கேட்டார். அவனும் வழங்கினான்; பின்னர் மாண்டான்.

இவனுக்குப்பின் சேரநாட்டின் தலைமைப் பொறுப்பினைச் செங்குட்டுவன் ஏற்றான் என்பதைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வரலாறு உணர்த்துகிறது.

கொடைத்தன்மை

இவன் சிறந்த வள்ளல் ஆவான். இவன் நாட்டில் பருவ மழை பொய்த்தல் இல்லை. அப்பருவமழையே தவறிவிட்டாலும் பரிசிலர் விரும்பிவந்த பொருள்களை இவன் அளிப்பதில் தவறியதில்லை[68]. இவனது கைகள் பிறருக்குக் கொடுத்துக் கொடுத்து மிகுந்த வளமை பெற்றிருந்தன[69]. இவனது கொடைத்தன்மையைப் பகைவர்களும் புகழ்ந்தனர்[70].

இவன் கொடையில் கர்ணணனைப் போன்றவன் என்று குமட்டூர்க் கண்ணனார் இவனை ஒப்புமைப்படுத்திப் பாடியுள்ளார்[71]. இவன் உயிர் நீங்கும் நிலையில் போர்க்களத்தில் கிடந்திட்டபோது இவனைக் கண்டு பாடிய கழாத்தலையார் இவனது கழுத்தில் இருந்த மணிமாலையைப் பரிசிலாகக் கேட்டுப் பெற்றார். கண்ணனானவன் கர்ணனிடம் அவன் செய்தபுண்ணியங்களை யெல்லாம் தானமாகக் கேட்டு அவன் இறக்கும் தறுவாயில் இருந்தபோது பெற்ற நிகழ்ச்சி இதனோடு பொருத்தமாய் அமைந்துவிட்டது. முன்னர்ப் புலவர் பாடிய ஒப்புமையானது பின்னர் உண்மை நிகழ்ச்சியாய் அமைந்துள்ளது.

பாடினி,[72] விறலியர்,[73] புலவர், வயிரியர், ஓவியர், சிற்பத் தொழில்களில் வல்ல கண்ணுளர்[74] முதலான பலருக்கு இவன் கொடை வழங்கினான். பரிசில்பெற வந்தவர் பெறத் தகுதியற்றவராய் விளங்கினாலும் அவர்களது அத்தன்மையைப் புறத்தார் உணராவண்ணம் மறைத்துவிட்டு நல்கினான்[75].

மா, களிறு, தேர் ஆகியவற்றைப் பரிசிலாகக் கொடுத்தான்[76]. பகைவர்களிடம் பெற்ற உயர்ந்த அணிகலன்களைப் பரிசிலாகக் கொடுத்தான்[77]. உணவு, உடை முதலானவற்றால் மகிழ்ந்திருக்கும் தன் மகிழ்ச்சியான வாழ்வையே பிறருக்கு அளித்தான்[78]. மிளை, அகழி, மதில், நிலைவாயில், ஆரெயில் முதலானவற்றால் இவனது அரண்மனை, பகைவரால் உள்ளே நுழைய முடியாத அளவு அமைந்திருந்தது; ஆனால், பரிசிலர்கள் எளிதாக நுழைவதாய் அமைந்திருந்தது. பரிசிலர்கள் உள்ளே நுழைந்து, உண்டு, உடுத்து, நுகர்ந்து, மகிழ்ந்து இருந்தனர். இவ்வாறு பரிசிலர்கள் இருந்ததைப் பார்த்துப் பெருமிதத்தோடு மலரும் மார்பினனாய் அவன் விளங்கினான்[79]. இத்தகைய வள்ளன்மையால் இவனைப் பரிசிலர்களின் செல்வம் என்றே அழைத்தனர்[80].

இவன் தன்மீது பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பித்த குமட்டூர்க் கண்ணனார் என்னும் அந்தணப் புலவருக்கு தான் வெற்றி பெற்ற உம்பற்காட்டுப் பகுதியில் ஐந்நூறு ஊர்களைப் பிரமதேயமாகக் கொடுத்தான். மேலும், அவரது வாழ்க்கைச் செலவுக்காகத் தனது எஞ்சிய ஆட்சிக் காலம் முழுவதும் தான் வென்ற தென்னாட்டிலிருந்து வரும் வருவாயில் சரிபாதியும் கொடுத்தான்.

பண்புநலம்

பகைவர்கள் பெரிய தவற்றைச் செய்திருந்தாலும் அவர்கள் பணிந்து திறை தந்தால், திறையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அருள்புரியும் பண்பு நலம் உடையவன்;[81] நிலத்தைப் போல் பொறுமையுடையவன்; நீரைப்போல் சினம் ஆறும் தன்மை உடையவன்; காற்றைப்போல் எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்திருப்பவன்; வெட்டவெளியைப்போல் பரந்த உள்ளம் உடையவன். இந்தப் பண்புகளில் இவன் அந்த நான்கு பூதங்களைப்போல் அளக்க முடியாத தன்மையை உடையவன்[82]. நாள், கோள், திங்கள், ஞாயிறு, அழல் ஆகிய ஐவகை ஒளிப்பிழம்புகள் ஒருங்கிணைந்தால் தோன்றும் ஒளிபோல இவனது பொலிவும் புகழும் விளங்கின[83]. இவனது புகழ் திருமாலின் புகழ்போலப் பரவியிருந்தது[84]. இவனது ஆட்சிக்குக்கீழ் இருந்த நாடுகள் வளமுடனும், இவனைத் எதிர்த்த நாடுகளின் வளமை பாழடைந்தும் காணப்பட்டன[85].

இசை வேட்கை

இவனது தந்தை உதியஞ்சேரல் இன்னிசை முழக்குடன் மகிழ்வாக வாழ்ந்தவன்[86]. இவனும் மகிழ்ச்சியால் முழக்கும் முரசொலியைக் கேட்டுத் தன்னையே பரிசிலாகக் கொடுத்தான்[87] இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இசையின்மீது இருந்த ஈடுபாடு நன்கு விளங்கும்.

பெற்றோர்

இவனது முன்னோர்கள் நாவலந் தண்பொழில் முழுவதும் ஆட்சிபுரிந்து புகழுடன் விளங்கினர்[88]. இவனது தந்தை உதியஞ்சேரலாகும்; தாயார் நல்லினி ஆகும்.

மனைவியின் மாண்புகள்

இவனது மனைவி சிறந்த அழகியாவாள்[89]. அடக்கமான தோற்றப் பொலிவினை உடையவள்[90]. பெரிய சான்றாண்மைப் பண்புகள் அவளிடம் அமையப் பெற்றன; நாணம் மிக்கவள்;[91] கணவனிடம் ஊடல் கொள்ளாத ஆறிய கற்பினை உடையவளாக விளங்கினாள். கணவனொடு ஊடிய காலத்தும் இனிய சொற்களையே கூறுவாள்[92]. அவளே வேளாவிக் கோமான் பதுமன் மகளாவாள்[93]. இவன் பெற்ற பிள்ளைகள் 4, 6 ஆம் பத்தில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளனர்.

'சோழன் மணக்கிள்ளி'யின் மகள் நற்சோணை என்னும் பெயருடைய மற்றொரு பெண்ணை இவன் மணந்தான்[94]. இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இருவர். மூத்தவன் பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்தின் தலைவன். இளையவன் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள்.

காலம்

இவன் 58 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனைப் பாடியதற்குப் பரிசாக 38 ஆண்டுகள் தென்னாட்டில் இருந்து வரும் வருவாயில் குமட்டூர்க் கண்ணனார் பங்கு பெற்றார். இதனை அவன் தனது ஆட்சிக்காலம் முடியும் வரையில் தந்திருக்க வேண்டும. எனவே, இரண்டாம் பத்தானது இவனது இருபதாம் ஆட்சியாண்டில் பாடப்பட்டது எனலாம். இதற்குப் பின்னர்தான் இவன் செங்குட்டுவன் தாயை மணந்திருக்க வேண்டும். திருமணமான ஓராண்டில் செங்குட்டுவன் பிறந்து அவனது இருபதாம் வயதில் இளவரசு பட்டம் கட்டப்பட்டான் என்றால், செங்குட்டுவன் அரியணை ஏறியது[95] நெடுஞ்சேரலாதனது 42ஆம் ஆட்சியாண்டில் எனக் கொள்ளலாம். இதனை ஐந்தாண்டுக் குறியீட்டுக்குச் சரிசெய்து 40ஆம் ஆட்சியாண்டு எனக் குறிப்பிடலாம்.

சிறப்புப் பெயர்கள்

மாமூலனார் இவனைச் 'சேரலாதன்' என்றே குறிப்பிடுகின்றார். பதிற்றுப்பத்துப் பதிகம் மூன்று இவனை 'இமய வரம்பன்' என்று மட்டும் குறிக்கிறது. குடக்கோ,[96] குடவர் கோமான்[97] என்னும் அடைமொழிகள் இவனது ஆட்சியானது தொடக்க நிலையில் குடநாட்டில் தொடங்கியதைத் தெளிவுறுத்துகின்றன. இமயவரம்பன்[98] என்றால் இமயமலையினை வரம்பாக வைத்து ஆண்டவன் என்பது பொருளாகும்.

இவன் 'ஆராத் திருவின் சேரலாதன்'[99] என்றும் குறிப்பிடப்படுகின்றான். இது இவனது செல்வ வளத்தை வெளிப்படுத்துகின்றது.

பல்யானைச் செல்கெழு குட்டுவன்

இவன், பாலை பாடிய கௌதமனார் என்னும் பார்ப்பனப் புலவரால் சிறப்பித்து இரண்டாம் பத்தில் பாடப்பெற்றவன், பாலை என்னும் இவனது ஊர் இப்போதுள்ள பாலக்காடு என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

இவன் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பி; செங்குட்டுவனுக்குச் சிறிய தந்தையாவான்.

பூழியர்கோ

நெடுஞ்சேரலாதன் சேரநாட்டு முடிவேந்தனாய் ஆண்டபோது இவன் பூழி நாட்டில் இருந்துகொண்டு நாடுகாவல் புரிந்து வந்தான். பின்னர்ப் பூழி நாட்டை ஆண்டு கொண்டிருந்ததால் 'பூழியர்கோ'[100] என்று கூறப்பட்டான்.

பூழி நாடானது செருப்பு மலையைத் தன்னகத்தே கொண்டது. செருப்பு மலையில் மணிக்கற்கள் கிடைத்தன. கோவலர் தம் ஆடு மாடுகளைப் புல்வெளிகளில் மேய விட்டுவிட்டு இச்செருப்பு மலையில் கிடைத்த மணிக்கற்களைத் திரட்டி விற்று வாணிகம் செய்துவந்தனர். அக்கால மக்கள் அந்த மணிக்கற்கள் பதித்த அணிகலன்களை விரும்பி அணிந்துவந்தனர்[101]. இந்தப் பூழி நாட்டுக் கோவலர்களுக்கு முல்லைப்பூ குடிப் பூவாகும்.

மழவர் மெய்ம்மறை

மழவர்கள் கொங்கு நாட்டு மக்கள். அவர்களுள் ஒரு சாரார் குவியற் கண்ணியைத் தம் முடியில் அடையாளச் சின்னமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் சேரர்களின் துணைவர்களாய் விளங்கினர். மழவரில் மற்றொரு சாரார் பாண்டியனைச் சார்ந்திருந்தனர். பல்யானைக் குட்டுவன் குவியற்கண்ணி மழவரின் பாதுகாவலனாகக் கவசம் போல் விளங்கினான்[102].

அயிரைப் பொருநன்

ஓர் ஊரில் தங்கியிருந்து ஆண்ட அரசனை அவ்வூரின் பொருநன் எனக் குறிப்பிடுவது வழக்கம். அயிரை மலையிலிருந்த கொற்றவை சேரர்களின் குடித்தெய்வம். இதனை இவன் வழிபட்டான்[103]. இவன் பல நாள்கள் வழிபாட்டில் ஈடுபட்டு அயிரை மலையில் தங்கியிருந்தான். அதனால், 'அயிரைப் பொருநன்'[104] என்னும் சிறப்பினைப் பெற்றான்.

உம்பற்காட்டு வெற்றி

'உம்பல்' என்னும் சொல்லுக்கு யானை என்னும் பொருள் உண்டு. எனவே, உம்பற்காடு என்பது ஆனைக்காடு என்று பொருள்படும். ஆனைமலைப் பகுதியில் இருந்த காடு இப்பெயர் பெற்றிருந்தது. ஆனைமலைக்கு வடக்கில் இருந்தது பூழி நாடாகும். உம்பற்காடானது அப்போது இவனது ஆட்சியின்கீழ் இருந்திருக்க வேண்டும். பூழி நாட்டில் ஆண்ட இவன் உம்பற் காட்டின்மீது படையெடுத்துச் சென்று, வென்று தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்[105].

அகப்பாக் கோட்டையை அழித்தல்

பாகுடி என்பது ஊரின் பெயர்[106]. இந்த ஊர், பெருமலைகளுக்கு இடையே இருந்ததால்[107] அகப்பாக்குடி எனப்பட்டு, 'அகப்பா' என மருவியும் வழங்கப்பட்டது. உம்பற்காட்டைத் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்த பல்யானைக் குட்டுவன் அகப்பாக்கோட்டையைத்தாக்கி வென்று தீக்கிரையாக்கினான்[108]. இக்கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்பதே அவன் நோக்கம்[109].

அகப்பாக் கோட்டை மிக வலிமையானது. உயர்ந்த மதிற்சுவர்; அதில் வரிசை வரிசையாகப் பதுங்குமிடங்கள்; மதிற்சுவரை அடுத்து ஆழமான அகழி; அகழியைச் சுற்றிக் காவற்காடு.

கோட்டைக்குள்ளே நுழைய உயர்ந்த நிலைவாயில்; வாயிற் கதவைச் சாத்தித் தாழிடுவதற்காக வில்விசை முறைப்படி மாட்டித் தொங்கும்படி அமைக்கப்பட்ட கணையமரம்; வாயிலுக்கு முன் அகழியைக் கடக்கும் மரப்பாலம்; பாலத்திற்கு வெளியே போரிடுவதற்காக அமைக்கப்பட்ட வெட்டவெளி; வாயிலிலும் காவற்காட்டிலும் இருந்துகொண்டு கோட்டையைக் காக்கும் நாற்படைகள். இத்தனை பாதுகாவலையும் கொண்டது அகப்பாக் கோட்டை[110] ஆகும்.

அகப்பாக் கோட்டையைச் சூழ்ந்திருந்த மலை தலைமலை ஆகும்[111] இப்பகுதியில் முதியர் என்னும் மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாண்டியரின் ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர்[112]. பல்யானைக் குட்டுவன் முதியரைத் தம் பக்கம் தழுவிக்கொண்டான்[113]. அவர்களுக்காகப் போராடி அகப்பாவில் இருந்த பாண்டிய ஆட்சியாளரை அழித்தான்.

உம்பற்காட்டு வெற்றியாலும் அகப்பா வெற்றியாலும் தனக்குக் கிடைத்த பரந்த நாட்டைப் பகுத்துக் கொடுத்தான்[114]. அப்பகுதியில் உம்பற்காட்டு ஆட்சி, அவனது அண்ணன் மகன் செங்குட்டுவனது நேரடிப் பார்வையில் விடப்பட்டது. அகப்பா, முதியர்க்கு விடப்பட்டது.

அகப்பா வெற்றி, பாண்டியரின் வேற்படைக்குப் பேரச்சத்தை உண்டுபண்ணியது. கொங்குநாட்டைத் தன் ஆட்சியில் கொண்டு வந்த படைக்கே இத்தகைய அச்சத்தை உண்டாக்கியது[115].

சோழ பாண்டியரின் தோல்வி

இவனது போர் வலிமையையும் அதனால் பெற்ற புகழையும் அறியாத சோழரும், பாண்டியரும், சில வேளிர் மன்னர்களும் ஒன்று திரண்டு வந்து இவனைத் தாக்கினார்கள். இவனும் எதிர்த்துத் தாக்கினான். போரில் முதன்முதலில் பகைவரைத் தாக்கும் படை தார்ப்படை எனப்படும்[116]. வேந்தர்களின் இந்தத் தார்ப்படை பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் தாக்குதலால் அழிவுற்றது[117]. இந்த நிலையில் எஞ்சிய படையையும் தாக்கும் பொருட்டு இவன் தன் படைவீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்கிப் போர் விழா நடத்தினான். அப்போது போர்வீரர்கள் வஞ்சினங் கூறலாகிய மந்திரம் சொல்லிக் கடவுளை (அயிரைமலைக் கொற்றவை) வழிபட்டனர். பகைவரின் தார்ப்படை தாக்கியபோது தாம் பெற்ற விழுப்புண்களில் வழியும் குருதியைத் தூவிப் படையின் வெற்றி முரசை முழக்கினர். இந்த முரசொலியின் எழுச்சிமிக்க ஒலியைக்கேட்டு இவனது எதிரிப் படையினர் காடுகளிலும், கடற்பகுதிகளிலும் ஓடி ஒளிந்துகொண்டனர்;[118] எனவே, தொடர்ந்து போரிடாமல் போர்க்களத்தைவிட்டு நீங்கினர். இதன் விளைவால் எதிரியின் நாடுகளில் சில பகுதிகள் அழிவைப் பெற்றன[119].

போர் முறை

பல்யானைச் செல்கெழு குட்டுவன் போர்க் காலங்களில் படைவீரர்கள் தங்கியிருந்த அறைகளிலேயே உடன் தங்கியிருந்து ஊக்கமூட்டினான்;[120] குதிரைகள் பூட்டிய தேரில் சென்று போரிட்டான்[121]. வீரர்கள் தம் வேல்களில் இருந்த புலித்தோல் உறைகளை நீக்கிவிட்டு வெற்றிக்கு அறிகுறியாக வலத்தோளால் அவற்றை உயர்த்தியபோதே வெற்றி மாலையை இவன் சூடிக் கொண்டான். அவனே அவர்களின் படைத்தலைவனாக விளங்கினான்[122].

'பெரும்படைத் தலைவ', 'வயவர்', 'இருக்கை இயலறைக் குருசில்' என்னும் தொடர்களைக் கொண்டு இவன் பெரும் படைத்தலைவனாகவே விளங்கினான் என்று கருத இடமுண்டு; அரசனாக விளங்கவில்லை எனவும் எண்ணலாம். ஆனால், 'கடுஞ்சினவேந்து'[123] என இவன் கூறப்படுவதால் இவன் வேந்தனாகவும் விளங்கினான் என்பது பெறப்படுகிறது.

இருகடல் நீரில் ஒருபகல் ஆடல்

இரண்டாம் பத்தில், இமயத்தில் வில்பொறித்த நிகழ்ச்சி குறிப்பிடப்படாமல் அதன் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல மூன்றாம் பத்தில் 'இருகடல் நீரும் ஒருபகல் ஆடிய' நிகழ்ச்சி[124] அதன் பதிகத்தில் மட்டும் கூறப்பட்டுள்ளது. மற்றும் இவன் நெடும் பாரதாயனார் வழிநின்று காடுபோந்த நிகழ்ச்சியும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சிகள் மூன்றாம் பதிகம் பாடப்பட்டபின் நிகழ்ந்தவை எனலாம். இவன் 25 ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்தான். இம் மூன்றாம் பத்தானது இவனது இருபதாம் ஆண்டில் பாடப்பட்டதாகவும், அண்ணனுக்குப்பின் தம்பி, 5 ஆண்டுகள் கழித்து அரியணையேறினான் என்றும் கொண்டால், இரண்டாம் பத்துப் பாடப்பட்ட பின் சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து மூன்றாம் பத்துப் பாடியிருக்க வேண்டும் என்பது தெரியவரும். அப்போது அவனைப் பாடிய புலவர் விருப்பப்படி பத்து வேள்விகள் செய்துவிட்டுத் தொடர்ந்து ஆண்டு வரும்போது 'இருகடல் நீரும் ஒருபகல் ஆடிய' நிகழ்ச்சி நடைபெற்றிருக்க வேண்டும்.

தன் யானைப் படையின் ஒரு பகுதியை வங்கக் கடலுக்கும் மற்றொரு பகுதியை அரபிக் கடலுக்கும் அனுப்பிக் கடல் நீரைக் கொண்டுவரச் செய்தான். அந்த இரண்டு கடல் நீரையும் ஒரே நாளில் ஊற்றிக்கொண்டு திருமுழுக்காடியபின் இவன் காடு போந்தான்.

பகைவர் நாட்டு அழிவு - தன் நாட்டு வளம்

இவனது ஆட்சிக்குக் கீழிருந்த நாட்டில் வெள்ள நீர் மோதிக் கேட்கும் பூசல் ஒலி அல்லாது மக்கள் கொடுமைகளுக்குள்ளாகி ஓலமிட்டு அழும் பூசல் ஒலி கேட்டதே இல்லையாம்[125]. இவனை எதிர்த்த பகைவர்களது நாடுகள் வளம் நிறைந்தவையாய் இருந்து, இவனால் அழிக்கப்பட்டுப் பொலிவிழந்து காணப்பட்டனவாம்[126]. முருகன் என்னும் மன்னனின் சீற்றத்திற்குள்ளாகிய உரும்பில் கூற்றம் அழிந்தது போல அவை அழிந்துபோயினவாம்[127].

கொடைத்தன்மை

மழை, பருவத்தில் பெய்ய மறந்தாலும் இவன் வந்தவர்களுக்கெல்லாம் உணவளித்தான்[128]. மரபுக் கடவுளைப் பேணுவதற்காக இவன் செய்த வேள்வி 'பெரும் பெயர் ஆவுதி' எனப்பட்டது. தன்னை நாடி வந்தவர்களுக்கு உணவளிக்க இவன் செய்த வேள்வி 'அடுநெய் ஆவுதி' எனப்பட்டது[129]. வயிரியர் தம் வறுமைக் காலத்திலும் பிறரிடம் கையேந்தும் வழக்கம் இல்லை; பொதுவிடங்களில் தம் இசைக்கருவிகளை முழக்குவர். மக்கள் தாமே முன்வந்து அவர்களுக்கு வழங்கிப் பேணுவர். இத்தகைய வயிரியர்களுக்குப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் பொன் அணிகலன்களையும் உணவுப் பொருள்களையும் வழங்கினான்[130]. தம் கொடை முரசை முழக்கி அவர்களைத் தானே அழைத்து வழங்கினான்[131].

தன்னைப் பத்துப் பாடல்களில் சிறப்பித்துப் பாடிய புலவர்க்கு அவர் விருப்பப்படி இவன் கொடை வழங்கியுள்ளான். அக்கொடை பத்து வேள்வியாக அமைந்தது. இத்தகைய வேள்விகளை இவனும் பிற வேந்தர்களும் சங்ககாலத்தில் செய்ததற்கெல்லாம் கொடை உள்ளமே காரணம்; வேந்தர்கள் விருப்பம் அன்று என்பதை இவனது வேள்வி நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது.

பாலைக் கௌதமனார் மூன்றாம் பத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாடல்களைப் பாடி முடித்தார். புலவர் வேண்டியதைக் கேட்டுப் பெறலாம் என்றான் வேந்தன். பார்ப்பனப் புலவர் தாமும் தன் மனைவியும் வானுலகம் புக வேண்டினர். புலவரின் விருப்பத்தை நிறைவேற்ற அரசன் செய்வது குறித்துப் பார்ப்பாரிற் பெரியாரைக் (நெடும்பாரதாயனாரைக்) கேட்டான்.

கௌதமனார் பெயரில் பத்து வேள்விகள் செய்ய வேண்டும் என்றார். வேண்டியனவெல்லாம் கொடுத்து நெடும்பாரதாயனாரையே வைத்து அந்த வேள்விகளை முறைப்படி நடத்தினான். தாயனார் ஒன்பது வேள்விகள் செய்தார். பத்தாம் வேள்வியில் புலவரும் அவரது மனைவி பார்ப்பனியும் மறைந்தனர் என்பதனால் அவர்கள் இறந்துவிட்டனர் என்று தெரிகிறது. இது அவர்கள் அடைந்த சுவர்க்கம். இந்தச் செய்தியானது பதிகத்தில் காணப்படுகின்றது.

பண்புநலம்

தன் வாய்ச்சொல்லாலும் தனக்கிருந்த செல்வாக்காலும், தன் குறிப்புப் பார்வைகளாலும், தான் கேள்விப்பட்ட செய்திகளைக் கொண்டு பிறர்க்கு நெஞ்சாலும் தீமை எண்ணாத கொள்கை உடையவனாய்க் பல்யானைச் செல்கெழு குட்டுவன் விளங்கினான்[132]. நீர், நிலம், தீ, வளி, விசும்பு என்னும் ஐம்பூதங்களை அளந்தறிந்தாலும் அவற்றின் தன்மைகள் அமையப் பெற்றிருந்த இவனது பண்புகளின் பெருமையை அளந்தறிய முடியாது[133]. காலை நேரத்தில் பிறக்கும் தெளிவைப்போல இவனது வாயிலிருந்து பிறக்கும் சொற்கள் அமைந்திருந்தன[134].

தோற்றப் பொலிவு

இவனது மார்பில் எப்போதும் சந்தனம் படிந்திருந்தது[135]. போர்ச் சின்னமாகிய உழிஞைப் பூவையும் இவன் பொன்னால் செய்து அணிந்து கொண்டான்[136]. இவனது மாலையும் பொன்னால் செய்யப்பட்டது[137].

துறவிக்குப் பணிவிடை

இத்தகைய போர்த்திறனும், கொடை உள்ளமும், நற்பண்புகளும், ஆடம்பர வாழ்வும் கொண்டிருந்த இவன் காட்டுக்குச் சென்றான். இவனைப் பாடிய புலவரின் விருப்பத்தை நிறைவேற்ற நெடும்பாரதாயனார் உதவினார். உதவிய தாயனாரின் விருப்பத்தை நிறைவேற்ற இவன் காட்டுக்குச் சென்றான். அங்குத் தாயனாரின் தவத்திற்கு இடையூறு வாராமல் காத்து நின்றான் எனலாம்[138].

சிலகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்துவிட்டுப் பின் துறவு பூண்டான் பல்யானைச் செல்கெழு குட்டுவன். அண்ணன் தொடர்ந்து நாடாண்டு கொண்டிருந்தான் (இளங்கோவடிகள் தன் சிறிய தந்தையான பல்யானைச் செல்கெழு குட்டுவனின் துறவு வழியை இளமையிலேயே பின்பற்றினார்).

முன்னோர்

சினம், காமம், கழிகண்ணோட்டம், அச்சம், பொய்ச்சொல், அன்பு மிகவுடைமை, தெறல், கடுமை முதலான தீய பண்புகள் அறநெறியில் செல்லும் ஆட்சிக்குத் தடையாய் அமைந்துவிடும் என்னும் உண்மையை உணர்ந்து அந்தத் தீய பண்புகளை விட்டு, நல்லன பல செய்து இவனது முன்னோர் வாழ்ந்து வந்தனர். நாட்டுமக்கள் மாசற்ற தெளிவான அறிவினை உடையவர்கள்; பிறரை நலியாதவர்கள்; வேற்றவர் பொருளைப் பறிக்க விரும்பாதவர்கள்; செந்நெறியில் நடப்பவர்கள்; தம்மை விரும்பி வாழும் துணைவரைப் பிரியாதவர்கள்; பிணியின்றி வாழ்ந்தமையால் மூத்துப் பின்னர்தான் இறந்தனர். இவ்வாறு குடிமக்கள் வாழும்படி பல்யானைச் செல்கெழு குட்டுவனது முன்னோர் அரசாட்சி செலுத்தினார்களாம். இத்தகைய உரம் பெற்ற முன்னோரின் வழிவந்து, அவர்களைக் காட்டிலும் மேம்பட்டு உயர்ந்து விளங்கினானாம் பல்யானைக் குட்டுவன்[139].

மனைவியின் மாண்பு

இவன் மனைவி சிறந்த உடலழகும் ஒப்பனை அழகும் கொண்டவள். இவனுடன் இவள் அரியணையில் வீற்றிருந்தாள்[140]. இவளது கற்பு நெறியால் நாட்டில் பருவமழை தவறாமல் பெய்தது[141]. கணவனைப் போலவே இவளும் திருந்திய இயல்மொழியைப் பேசினாள்[142]. பலரும் இவளைத் தம் பாடல்களில் போற்றிப் புகழ்ந்தனர். அவற்றை அவள் விரும்பவில்லை; உலகமெல்லாம் தன் கணவன்வழி ஒழுகும்படி தன் வாழ்க்கைப் பாங்கை அமைத்துக் கொண்டாள். எனினும் ஆறு தொழில்களைச் செய்யும் அந்தணர்களின் சொற்களை இவள் வழி மொழிந்து ஒழுகியது நமக்கு வியப்பைத் தருகிறது. 'கணவன் எவ்வழி மனைவி அவ்வழி' என்பதே நாம் காணும் அமைதி.

சிறப்புப் பெயர்கள்

'செல்போர்க் குட்டுவன்',[143] 'பொலந்தார்க் குட்டுவன்',[144] 'பெரும் பல்யானைக் குட்டுவன்'[145] என்றெல்லாம் இவன் அடை மொழிகளுடன் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளான். பதிகம் இவனைப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று குறிப்பிடுகிறது. பல யானைகள் சேர்ந்த கூட்டமானது மேகக்கூட்டம்போல் காட்சி அளிக்கும். அதனைப் 'பல்யானைச் செல்'[146] எனக் குறிப்பிடலாம். அந்த யானைகளாகிய மேகக் கூட்டத்திடையே இவன் மிகுதியும் தோற்றமளித்ததால் பல்யானைச் செல்கெழு குட்டுவன் எனப்பட்டான்.

பாலைக் கௌதமனார்

இவர் இவன்மீது பாடியுள்ள பத்துப் பாடல்கள் பதிற்றுப் பத்தில் மூன்றாம் பத்தாக அமைந்துள்ளன. பொதுவாகக் 'குட்டுவன்' என்று குறிப்பிட்டுச் செய்திகளைத் தெரிவிக்கும் பாடல்கள் உள்ளன. அந்தக் குழப்பங்கள் பிற சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ் ஓரளவு தெளிவாக்கப்பட்டுள்ளன.

நார்முடிச் சேரல்

'களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்' என்று முழுமையான அடைமொழிகளுடன்கூடிய பெயரால் கூறப்படும் இவன், செங்குட்டுவனது மாற்றாந்தாயின் மகன் ஆவான்; செங்குட்டுவனுக்கு மூத்தவன், தந்தை நெடுஞ்சேரலாதன் ஆவான். தாய் பதுமனின் மகளாவாள். இந்தப் பதுமன் வேளிர் குடியில் ஒரு பிரிவான ஆவியர் குடியைச் சேர்ந்தவன். இந்த ஆவியர்குடி பழனிமலைப் பகுதியில் சிறப்புற்று விளங்கியது.

நன்னன் போர்

வாகை மரத்தைக் காவல் மரமாகக்கொண்டு நன்னன் எழில் மலைப் பகுதியில் அரசாண்டு வந்தான். அவனுக்கும் நார்முடிச் சேரலுக்கும் போர்மூண்டது. போர் 'வாகைப் பறந்தலை' என்னுமிடத்தில் நடைபெற்றது. இந்த இடம் குடமலைக்கு மேற்குப் பக்கம் இருந்தது. போரில் நன்னன் கொல்லப்பட்டான்[147]. அவனது காவல் மரம் 'வாகை' வெட்டிச் சாய்க்கப்பட்டது.

இந்த வெற்றிக்குப்பின் மகிழ்வால் நறவுண்டு மகிழ்ந்தும், இரவலர்களுக்கு வாரி வழங்கியும் இவன் இருந்தான். பின் நேரிமலைப் பகுதிக்குச் சென்று தங்கியிருந்தான்.

இப்போரில் வென்றதன் வாயிலாக நார்முடிச் சேரல் தான் முன்பு இழந்த நாட்டைத் திரும்பப் பெற்றான் என்று கல்லாடனார் கூறுகிறார். இழந்த நாடு எது என்பதனை அறியப் பதிகம் நமக்கு உதவி செய்கிறது. அது 'பூழி நாட்டைப் படையெடுத்துத் தழுவிக்கொண்டான்' என்று கூறுகிறது.

பழனிமலைப் பகுதியில் சிறப்புற்று விளங்கிய ஆவியர்குடிப் பதுமனிடம் இவன் பெண் கொண்டதால் அவர்களின் உதவியும் இப்போரில் கிடைத்திருக்கும். பூழி நாடு பழனி மலைகளுக்கு வடக்கில் உள்ள நாடு.

நெடுமிடல் சாய்தல்

நெடுமிடலை நார்முடிச் சேரல் போரில் சாய்த்தான் எனக் காப்பியாற்றுக் காப்பியனார் கூறுகிறார். நெடுமிடல் பசும்பூட் பாண்டியனின் பகைவர்களால் சாய்க்கப்பட்டவன் எனப் பரணர் கூறுகிறார். மற்ற இரண்டையும் ஒப்பிட்டு நோக்கும்போது பசும்பூட் பாண்டியனின் பகைவனான நார்முடிச் சேரல் நெடுமிடலைக்[148] கொன்றான் என்பது பெறப்படுகிறது.

எவ்வி என்பவனின் மிழலை நாட்டை நெடுஞ்செழியன் (தலையாலங்கானத்துச் செருவென்றவன்) கைப்பற்றினான் என்பது வரலாறு. இதனால் எவ்விக்கும் பாண்டியருக்கும் இடையே பகைமை உணர்வு இருந்தமை புலனாகும். இந்தப் பகைமை உணர்வு காரணமாகப் பசும்பூட் பாண்டியனின் படைத் தலைவனாய் விளங்கிய நெடுமிடல், எவ்விக்குப் பல இடையூறுகள் செய்துவந்தான். இதனால் எவ்வி, சேரலின் உதவியை நாடினான். சேரல் படை எவ்விக்கு உதவியது. போரில் நெடுமிடல் கொல்லப்பட்டான்.

நெடுமிடலைக் கொன்ற நார்முடிச் சேரலின் படையும் எவ்வியின் படையும் அரிமணவாயில் (அரிமழம்), உறத்தூர் (உரத்தநாடு) ஆகிய இடங்களில் கள்ளும், பெருஞ்சோறும் உண்டு மகிழ்ந்தன.

கொடுமிடல் மாய்தல்

கொடுமிடல்[149] என்பவன் பாண்டியனின் மற்றொரு படைத் தலைவன். நெடுமிடல் போரில் சாயவே இவன் பாண்டியர் படைக்குத் தலைமை தாங்கிப் போரை நடத்தினான். இவனும் நெடுமிடலைப் போலவே கொல்லப்பட்டான்.

இந்தப் போர் வெற்றியினால் நார்முடிச் சேரலுக்குக் கிடைத்த நாடு, நெல்லும் கரும்பும் விளையும் நாடாகும்[150].

போரில் இவன் பெருமலை (பழனிமலை) யானைகளைப் பயன்படுத்தி வெற்றிபெற்றான்.

பெரும்படை

இவனது படை வரம்பில்லாத வெள்ளம்போல் வருவது;[151] நால்வகைப் படைகளையும் கொண்டது;[152] பகைவர்களுக்குப் பேய் போன்ற நடுக்கத்தைத் தருவது; ஆயினும், நகைவர்க்கு (மகிழ்ச்சி செய்பவர்களுக்கு) அரண்போல் விளங்கியது[153]. போர் நிழலில் வாழ்வதையே அப்படை மிகவும் விரும்பியது[154].

போராற்றல்

பகைவரது காவல் மரங்களில் இவன் தனது யானைகளைப் பிணிப்பான்; அந்த யானைகளைப் பகைவர் நாட்டிலுள்ள நன்னீர்த் துறைகளில் குளிக்கச் செய்து கலக்குவான். வானை மதிலாகவும், வேல்களைக் காவற்காடாகவும், வில், அம்பு, எஃகம் ஆகியவற்றை அகழியாகவும் தம் படைக்குக் காவலாய் அமையும் படி முரசு முழங்கக் காற்றுப்போல் படையை நடத்திச் சென்று இவன் போரிடுவதை நினைத்தவுடனே பகைவர்கள் நடுங்குவர்[155]. கூளியரும் பறவைகளும் உண்டு மகிழப் பிணம் குவிப்பான்[156]. பகைவர்களுக்கு இவன் எமன் போன்றவன் ஆவான்[157].

வளம் பெருக்குதல்

இவன் நாட்டில் சில பகுதிகள் வளம் குன்றின. அந்த நிலங்களுக்கு இவன் வளப்பத்தை உண்டாக்கினான்[158]. கால்வாய்கள், ஏரிகள் அமைத்து வளமுறச் செய்தான். இவ்வாறு நிலத்தை வளமுறச் செய்ததன் வாயிலாகச் சோர்வு நீக்கிக் குடிமக்களைக் காப்பாற்றினான். இதனால் குடிமக்கள் போர்க் காலங்களில் இவனுக்குப் பெரிதும் உதவினர். உழவர்களின் உதவியால் இவனுக்குப் போர் வெற்றி எளிதாயிற்று[159].

தோற்றப் பொலிவு

இவன் பெரிய மாலையை அணிந்து இருந்தான். காலிலே பெரிய வீரக்கழல் அணிந்திருந்தான்[160]. இவனது மார்பு அகலமும் உறுதியும் கொண்டது[161]. கொடிகள் பறக்கும் தேரில் ஏறிக்கொண்டு இவன் பீடுடன் செல்வது வழக்கம்[162]. யானைமீது செல்வதும் சில வேளைகளில் வழக்கமாயிருந்தது[163].

இவன் தலையில் 'நார்முடி' அணிந்திருந்தான். அது பட்டு நூல் போர்வையைக் கொண்டு செய்யப்பட்டு இருந்தது. இதனால் வெள்ளை நிறத்துடன் நாரால் செய்யப்பட்ட முடிபோல் காட்சியளித்தது. அதில் பொன் கம்பிகள் ஊடுருவிய அழகுக் கரைகள் இருந்தன. அந்தக் கரைகளுக்கிடையே மணிகளும் முத்துகளும் சேர்த்து அழகு செய்யப்பட்டிருந்தன. மணிகள் கரிய நிறமுடைய களாப்பழம் போலவும், பொன் கம்பிகளில் கோக்கப்பட்ட முத்துகள் களங்காய்கள் போலவும் நிறத்தால் தோற்றம் அளித்தன. மணியும் முத்தும் கோக்கப்பட்ட இந்தக் கோவை, களாப்பழமும் களங்காயும் கோத்துக்கட்டிய கண்ணி போல் காட்சியளித்தது. இந்தக் கோவையால் அழகுபடுத்தப் பட்டிருந்த பட்டுத் துணியால் ஆன முடியை இவன் அணிந்திருந்ததால் இவன் 'களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்' என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளான்[164]. இந்தப் பெயர் பாடலின் உள்ளேயே பாடிய புலவரால் குறிப்பிடப்பட்டுள்ளமை வலிமை மிக்க சான்றாகத் திகழ்கிறது.

கொடைத்தன்மை

இனிய பொருள் எதனைப் பெற்றாலும் இவன் அதனைப் பகுத்துண்ணும் பண்பினன் ஆவான்;[165] பாணர்க்கும்,[166] விறலியர்க்கும்,[167] பரிசிலர்க்கும்[168] இவன் பரிசில் வழங்கினான். போர்த் தொழிலில் வல்ல யானைகளை இவன் பரிசிலாக வழங்கியதும் உண்டு[169]. தனக்கு மகிழ்ச்சியூட்டியவர்களுக்கு இவன் நல்ல கலன்களை வழங்கினான்[170].

பண்பு நலம்

போரில் வெற்றி பெற்றாலும் சினம் தணியாத அரசர்கள்தாம் சங்ககாலத்தில் மிகுதி. இவனோ சினங்கொள்ளாமலேயே நெடுமிடல், கொடுமிடல் ஆகியவர்களோடு போரிட்டு வென்றனன்;[171] போர்க் கைதிகளை நன்முறையில் நடத்தினான். இவன் தனது கொள்கையில் சிறிதும் வளைந்து கொடுக்க மாட்டான். இவன் ஆன்று அவிந்து அடங்கிய செம்மலாக விளங்கினான்[172].

சிறப்புப் பெயர்

இவனை வானவரம்பன் என்னும் சிறப்புப் பெயராலும் அழைத்து வந்தனர். இவனது ஆட்சியின்கீழ் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது என்பதை இதனால் உணரலாம்.

'சேரலர் வேந்து'

சேர நாட்டில் ஆங்காங்கே பல அரசர்கள் ஒரே காலத்தில் ஆட்சி செய்துவந்தனர். குட்ட நாட்டை ஆண்டவன் குட்டுவன் என்றும், குட நாட்டை ஆண்டவன் குடவர் கோமான் என்றும், பொறை நாட்டை ஆண்டவன் பொறையன் என்றும் பொதுப்படையாக வழங்கப்பட்டனர். இவன் ஒரு காலத்தில் இத்தகைய சேரர்குடி அரசர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கியமையால் இவன் 'சேரலர் வேந்து'[173] எனக் குறிப்பிடப்பட்டான்.

செல்வமிகுதி

இவனும் இவனது சுற்றத்தார்களும் செல்வத்தை வாரி வாரி வழங்கினர். எனினும் இவனது செல்வம் குறைவுபடவில்லை. அந்த அளவு மிகுதியான செல்வம் இருந்தது[174].

தூங்கெயில் என்பது ஒருவகைக் கோட்டை. அது வானம் என்னும்நகரில் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கோட்டையை அமைத்தவன் கடவுள் அஞ்சி என்பவன். அந்தக் கோட்டையின் காவலன் வண்டன் என்பவன் ஆவான். இந்தக் காவலை நாடு காவல் என்று கொள்ளலாம். அவன் பெருஞ் செல்வனாகவும் கொடையாளியாகவும் விளங்கினான். அந்த வண்டன்போல நார்முடிச் சேரலும் சிறந்து விளங்கினான்[175].

இவனது தந்தை 'ஆராத்திருவின் நெடுஞ்சேரலன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இதனால் இவன் தந்தை வழியே இவனுக்குக் கிடைத்த செல்வம் மிகுதி எனத் தெளிவாகிறது.

ஆட்சி

ஆளுந்திறமை, கொடை, வீரம் இவை அனைத்தும் ஒருங்கே பெற்றவன். மக்கள் மகிழ்வுடன் கடவுளை வழிபட்டு வாழும்படி இவன் நல்லாட்சி நடத்தினான்.

மனைவியின் மாண்பு

அவள் வானத்துச் செம்மீன் போலக் கற்புக்கடம் பூண்டவள்[176]. அவளது கற்பை அறக்கற்பு எனப் புலவர் கூறுகின்றார். அறக்கற்பென்பது ஊடியும் கூடியும் இல்லற நெறியில் வழுவாது கணவனுடன் வாழ்வது, ஏனைய ஆறிய கற்பும், சீறிய கற்பும் இன்றி அவளது கற்பு அறக்கற்பாய் அமைந்தது.

தழைத்த கூந்தல், காதிலே குழை, அந்தக் குழைக்கே ஒளி நல்குவது போல் அமைந்து ஒளிரும் நெற்றி, மார்பிலே பொன்னாலான இழைகள், அந்த இழைகளுக்கு ஒளி ஊட்டுவது போல் விளங்கி அழகுத் தெய்வம் பிய்த்துத் தின்னும் உத்தி. இத்தகைய நலங்களுடன் அவள் விளங்கினாள்.

காப்பியனார்

காப்பியாறு என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் காப்பியனார் என்னும் பெயரைப் பெற்றார். காப்பியன் என்பது காப்பியம் இயற்றியமையால் வழங்கப்பட்ட பெயர் என்றும் தெரிகிறது. தொல்காப்பியனார், பல்காப்பியனார் என்னும் பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கின்றன. இந்தக் காப்பியனார் காப்பி ஆற்றின்மீது காப்பியம் பாடியதால் காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் பெயரைப் பெற்றார் எனக் கொள்வது பொருத்தமாயிருக்கும். காப்பியாறு இப்போது வழங்கும் கபினி என்னும் ஆறாக இருக்கலாம்.

பதிற்றுப்பத்தில் உள்ள இவர் பாடிய பத்துப் பாடல்களில் ஒரு புதுமையான அமைப்பைக் காண்கிறோம். இந்தப் பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளதே அந்தப் புதுமையாகும். ஒரு பாடலின் கடைசிப் பகுதி அடுத்த பாடலின் முதற்பகுதியில் அமையும்படி அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை, பதிற்றுப்பத்து 34, 35, 38 ஆம் பாடல்களின் கடைசி அடி அப்படியே அடுத்த பாடலின் முதல் அடியாக அமைந்திருப்பதையும், பிற பாடல்களில் (இறுதிப் பாடல் நீங்கலாக) இறுதியில் உள்ள இரண்டு சீர்கள் அடுத்த பாடலின் தொடக்கத்தில் அமைந்திருப்பதையும் நாம் பார்க்கிறோம்.

இந்தப் புலவர் திருமால்மீது பற்றுடையவர்போல் காணப்படுகிறார். மாலைக் காலத்தில் துளசி மாலைச் செல்வனை மக்கள் வழிபடுவதாகவும் நார்முடிச் சேரலின் மார்பு திருமாலிருஞ் சோலை மலை (விண்டு விறல்வரை) போல் இருப்பதாகவும் இவர் கூறுவதால்[177] இவரது திருமால் பற்று விளங்குகிறது.

இவர் மாலைக் காலத்துக் காட்சிகளில் மகிழ்ந்து திளைத்துள்ளார். மாலைக் காலத்தில் திருமால் கோயிலின் மணி கேட்பதும், மக்கள் குளிர்ந்த நீர்த்துறைகளில் நீராடிவிட்டு வந்து திருமாலின் திருவடிகளைப் பரவுவதும் இவரது உள்ளத்தைக் கவர்ந்துள்ளன[178].

போர்க்களத்தில் பேய்களும், முண்டங்களும் ஆடுவதும், குருதி பாய்ந்து செக்கச் செவேலெனத் தோன்றுவதும் அந்திமாலையில் தோன்றும் வானக் காட்சிகளை நினைவுக்குக் கொண்டு வருகின்றன[179].

செங்குட்டுவன்

பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனும், சிலப்பதிகாரத்தில் காணப்படும் சேரன் செங்குட்டுவனும் ஒருவனே.

பெற்றோர்

குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் இவனின் தந்தையாவான். 'சோழன் மணக்கிள்ளி' என்பவள் இவனது தாய் ஆவாள்[180].

தாயின் பெயர் சோழ அரசனின் பெயராகவும், ஆண் மகனின் பெயராகவும் அமைந்திருப்பதைப் பிற பெயர்களை ஒப்புநோக்கி அறியலாம். இக்காலத்தில் கணவன் பெயருக்கு முன் 'திருமதி' என்னும் அடைமொழியைச் சேர்த்து மனைவியின் பெயராகக் குறிப்பிடும் வழக்கம்போல, அக்காலத்தில் எல்லாரும் அறிந்த தந்தையின் பெயரால் மகளைக் குறிப்பிடும் வழக்கம் இருந்ததை இந்தப் பெயர் காட்டுகிறது. திருமணமாகுமுன்னர்ப் பெண்டிரைத் தந்தையார் பெயரோடு தொடர்புபடுத்தியோ, தந்தையின் பெயரால் குறித்தோ வந்தது தெரிகின்றது[181].

சிலப்பதிகாரப் பதிகத்துக்கு அடியார்க்கு நல்லார் உரையில் 'சேரலாதற்குச் சோழன் மகள் நற்சோணை ஈன்ற மக்களிருவருள்' என்னும் தொடர் உள்ளதால் 'சோழன் மணக்கிள்ளியீன்ற மகன்' என்னும் பதிற்றுப்பத்து ஐந்தாம் பதிகத்தின் தொடர் கூறுவது சோழன் மகள் நற்சோணையையே குறிக்கும்.

ஆட்சியின் தொடக்கநிலை

இவனது தந்தை நெடுஞ்சேரலாதன் குடநாட்டு மாந்தை நகரில் இருந்துகொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினான். சிறிய தந்தை பல்யானைச் செல்கெழு குட்டுவன் குட்டநாட்டு வஞ்சியில் இருந்து கொண்டு ஆட்சியைத் தொடங்கினான். அண்ணன் நார்முடிச் சேரல் குன்ற நாட்டில்[182] தனது ஆட்சியைத் தொடங்கினான். இவன் குட்டநாட்டுக் கிழக்குப் பகுதியையும் பூழி நாட்டையும் தன்னகத்தே கொண்ட பகுதியில் இருந்து ஆட்சி செய்தான். இந்த ஆட்சித் தொடக்க நிலைகள் தந்தை அரசாண்ட காலத்திலேயே நாடுகாவல் பணி என்ற முறையில் அமைந்தவை[183].

முசிறித் துறைமுகம் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்று இவனைப் பதிற்றுப்பத்தில் பாடிச் சிறப்பித்த பரணர் குறிப்பிடுகிறார்[184]. வஞ்சி மாநகரில் இருந்துகொண்டு இவன் நாடாண்டதைச் சிலப்பதிகாரம் விளக்கமாகக் கூறுகிறது. இவை, இவன் தனது முன்னோருக்குப் பின் முழுமை பெற்றுப் பேரரசனாக, சேரநாட்டுக்கெல்லாம் பெரு வேந்தனாக விளங்கிய காலத்து நாட்டுப் பரப்பு எனக் கொள்வது பொருந்தும்.

மோகூர்ப் போர்

'மோகூர் மன்னன் முரசங்கொண்டு'[185] என்பதால் இப்போர் நிகழ்ச்சி சிறப்புடையது. இது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊராகும்[186]. பழையன் என்பவன் இவ்வூரை ஆட்சிபுரிந்து வந்தான். இவனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனது படைத் தலைவனாக விளங்கிய பழையன் மாறன் எனக் கொள்வதும் பொருத்தமாகும்.

அறுகை என்பவன் அக்காலத்தில் இருந்த மற்றுமோர் அரசன். இவன் குன்றத்தூரில் இருந்து ஆட்சி புரிந்து வந்தான்[187]. இந்த அறுகை செங்குட்டுவனது நண்பன். செங்குட்டுவனது அண்ணன் நார்முடிச் சேரல் குன்ற நாட்டில் தனது ஆட்சியைத் தொடங்கினான். அவன் இருபத்தைந்தாண்டுகள் அரசாண்டான். அண்ணனுக்குப் பின் சுமார் ஐந்தாண்டுகள் கழித்துத் தன் ஆட்சியைத் தொடங்கி ஐம்பத்தைந்தாண்டுகள் செங்குட்டுவன் அரசாண்டான். எனவே, 35 ஆண்டுகள் (55-20) அண்ணனுக்குப் பிறகு அரசாண்டான். அக்காலத்தில் அண்ணனது குன்ற நாட்டுப் பகுதியைக் குன்றத்தூரில் இருந்து கொண்டு இந்த அறுகை ஆண்டு வந்தானாகையால், சேரர்களுக்கு அவன் நண்பனாக விளங்கினான். வஞ்சிக்கும் குன்றத்தூருக்கும் இடைவெளி சற்று அதிகமாக இருந்ததாலும்[188]. செங்குட்டுவனுக்கும் இந்த அறுகைக்கும் நட்பு நீடித்திருக்கிறது.

மோகூர்ப் பழையன் அறுகையைத் தாக்கி வென்றான் போலும். அறுகையைப் பிடித்து வந்து சிறையில் மறைத்து வைத்துக் கொண்டனர்[189]. தன் நண்பனை மறைத்துவைத்த செய்திகேட்டுப் பொறுக்காத செங்குட்டுவன் பழையனை அவனது மோகூரிலேயே தாக்கினான்.

இந்தப் போரில் பழையனுக்குத் துணையாகப் பாண்டியனும் சோழனும் சேர்ந்து கொண்டனர். அன்றியும் வேளிர் அரசர்கள் பலரும் சேர்ந்து கொண்டனர். இவர்களுக்கும், செங்குட்டுவன் படைக்கும் பெரும்போர் நடந்தது. போர்க்களத்தில் குருதியாறு வெள்ளம்போல் ஓடிற்று.

செங்குட்டுவன் பழையனது காவல் மரமாகிய வேப்ப மரத்தை வெட்டிச் சாய்த்தான்; அவனது கோட்டைகள் பலவற்றைக் கடந்தான்; பழையன் கூறிய வஞ்சின மொழிகள் பொய்யாகும்படி வெற்றி பெற்றான். போரில் பழையன் மாண்டான் எனலாம். அவனது வீரர்களும் மாண்டனர்.

தம் கணவன்மார் போரில் மாண்டது கண்டு மோகூரிலிருந்த அவர்களது மனைவியர் கைம்மைக் கோலம் பூண்டனர். கைம்மைக் கோலத்திற்குத் தலைமுடியை மழித்துக் கொள்வது அக்கால வழக்கம். அவ்வழக்கப்படி அவர்கள் மொட்டை அடித்துக் களைந்தெறிந்த முடியைக்கொண்டு கயிறு திரித்து அக்கயிற்றால் தான் வெட்டி வீழ்த்திய வேப்பமரத் துண்டை யானைகளோடு பிணித்துச் செங்குட்டுவன் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தான். அம்மரத்தால் தன் வெற்றிமுரசைச் செய்துகொண்டான்.

குராலம் பறந்தலைப் போர்

மோகூர்ப் போரில் வென்று திரும்புகையில் பழையனது நண்பர்களாக விளங்கிய சில அரசர்கள் செங்குட்டுவனைத் தாக்கினர். அவர்களை இவன் குராலம் பறந்தலை என்னுமிடத்தில் தாக்கி வென்றான்[190].

நேரிவாயில் போர்

சோழநாட்டு உறையூரின் தென்வாயில் நேரிவாயில் எனப் பெயர் பெற்றிருந்தது. பதிற்றுப்பத்தில் 'வாயிற்புறம்' என்று கூறப்படுவதும் இதுவேயாகும். செங்குட்டுவனது மைத்துனர் கிள்ளிவளவன் ஆவான். கிள்ளிவளவன் சோழநாட்டுப் பெரு வேந்தனாவதைச் சோழர் குடியைச் சேர்ந்த ஒன்பது மன்னர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்கள் கிள்ளிவளவனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். செங்குட்டுவன் தன் மைத்துனனுக்கு உதவ முன்வந்தான்.

நேரிவாயிலில் அப்போர் நடைபெற்றது. செங்குட்டுவன் வெற்றிபெற்றான். ஒன்பது குடை மன்னர்களும் ஒரே பகற் பொழுதில் அழிக்கப்பட்டனர்[191]. கிள்ளிவளவன் அரசனாக்கப் பட்டான்.

வியலூர்ப் போர்

வியலூர் என்பது சேரநாட்டின் வடபகுதியில் இருந்த ஓர் ஊர். சிறுகுரல் நெய்தல் வியலூர், வயலை வேலி வியலூர். விரிநீர் வியலூர் என்றெல்லாம் இந்த ஊர் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இந்த வியலூரில் செங்குட்டுவனுக்கு எதிரான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனால், செங்குட்டுவன் இந்த ஊரைத் தாக்கி அழித்தான்[192].

கொடுகூர்ப் போர்

வியலூருக்கு வடபால் ஓர் ஆறு ஓடிற்று. அந்த ஆற்றின் வடகரையில் கொடுகூர் என்னும் ஊர் இருந்தது. வியலூரில் செங்குட்டுவனிடம் தோற்ற படையின் சார்பாளர் கொடுகூரில் செங்குட்டுவனைத் தாக்கினர். செங்குட்டுவன் அவர்களுடன் போரிட்டு அவ்வூரையும் அழித்தான்[193].

இடும்பில் போர்

இது சோழநாட்டு ஊராகும். இவ்வூர் தேவாரத்தில் 'இடும்பாவனம்' என்றும் இக்காலத்தில் இரும்பாதவனம் என்றும் வழங்கப்படுகிறதென்பர்[194]. செங்குட்டுவன் வெட்சிப் பூச்சூடி ஆனிரைகளைக் கவரும் போரில் ஈடுபட்டான். அவன் தான் கவர்ந்துவந்த ஆனிரைகளை இந்த ஊரின் புறத்தே இளைப்பாற்றிப் பின் தன் நாட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தான். ஆனிரைகளுக்கு உரியவர்கள் இவனை அவ்வூரில் எதிர்த்துத் தாக்கினர். நடந்த போரில் செங்குட்டுவன் வெற்றி பெற்றான்.

கொங்குநாட்டுப் போர்

சோழ அரசனும் பாண்டிய அரசனும் சேர்ந்து கொங்கு நாட்டில் செங்குட்டுவனைத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் போர்க்களம் குருதியால் செங்களம் ஆகியது. இந்தப் போரில் செங்குட்டுவன் வெற்றி பெற்றான்;[195] களவேள்வி செய்து வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தான்.

தக்கணப் போர்

வஞ்சிக் காண்டத்தில் தக்கணப் போர் பற்றிய செய்தி காணப்படுகிறது,[196] தமிழ்நாட்டின் வடஎல்லைப் பகுதிகளில் பல்வேறு குடியைச் சேர்ந்தவர்கள் செல்வாக்குப் பெற்று விளங்கினர். கொங்கணர்,[197] கலிங்கர்,[198] கருநாடர்,[199] பங்களர்,[200] கங்கர்,[201] கட்டியர்,[202] வடஆரியர்[203] என்போர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் எல்லோருமே தமிழைத் தாய் மொழியாக உடையவர்கள் அல்லர்[204]. இவர்களுக்கும் செங்குட்டுவன் தலைமையேற்ற தமிழர் படைக்கும் போர் நடந்தது. போர் வேங்கடமலைப் பகுதியில் நடைபெற்றது. இந்தப் போரில் செங்குட்டுவன் வெற்றி பெற்றான்.

கடல் பிறக்கோட்டல்

இவன் நிலப் போர்களில் வெற்றி பெற்றது போன்றே கடற்போரிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றான்[205]. இப்போரைப்பற்றிக் குறிப்பிடும் இடங்கள் பலவற்றில் போர்க்களம் கடலாக உருவகம் செய்யப்பட்ட இடங்கள் பல உண்டு. நிலப் பகுதிகளில் நடந்த போரே உருவக நிலையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றும். உண்மை அஃது அன்று. 'நீர்புக்குக் கடலொடு உழந்தான்'[206] என்னும் தொடரைச் சில இடங்களில் 'கடற்படை' என்றே கொள்ள வேண்டும்.

இவன் பின்னிடச் செய்த கடற்படை எது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவன் தந்தை நெடுஞ்சேரலாதன் கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தைக் காவல் மரமாக உடைய கூட்டத்தாரை வென்றான். அப்போரில் செங்குட்டுவன் துணைநின்று தந்தைக்கு வெற்றி தேடித் தந்திருக்கலாம் அல்லது தந்தையால் அடக்கப்பட்ட கடல் கூட்டத்தார் இவன் காலத்து மீண்டும் குழப்பம் விளைவித்தபோது மீண்டும் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கலாம்.

செங்குட்டுவனைப் போன்று பழங்காலப் பாண்டிய அரசன் ஒருவனும் கடலில் வேலிட்டதை (கடற் போரில் வென்றதை) இவ்விடத்தில் நினைவுகூரலாம்[207].

கடல் பிறக்கோட்டிய இந்தச் செயலைக் கடல் கடந்த செயலாக எண்ணிப் போற்றிய நிலையும் உண்டு[208].

தகடூர்ப் போர்

செங்குட்டுவன் தகடூரை முற்றுகையிட்டான்[209]. அப்போது அங்கு அவனது முற்றுகையை எதிர்த்துப் போரிடுவோர் இல்லை. எனவே, இவன் வறிதே தன்னாடு திரும்பினான். அப்போது அங்கு இவனது பெருஞ் சினத்திற்குத் தீனி கிடைத்தது. கடலை முற்றுகையிட்டான். கடலில் தன்னை எதிர்த்த பகைவர்களைக் கடலுக்கப்பால் ஓட்டிவிட்டான். தகடூர்ப் போரானது கடல் பிறக்கோட்டிய நிகழ்ச்சிக்குமுன் நடைபெற்றதாகும்.

இமயத்தில் வில் பொறித்தல்

செங்குட்டுவன் தன் முன்னோர்களைப்போலவே தானும் இமயமலையில் தன் வில் சின்னத்தைப் பொறித்தான்[210].

கடம்பெறிதல்

செங்குட்டுவன் தன் தந்தை நெடுஞ்சேரலாதனைப் போலவே கடப்ப மரத்தைக் காவல் மரமாக உடைய கூட்டத்தாரை வென்றான்[211]. இந்த வெற்றி தன் தந்தை வெற்றியின் கூறுபாடாயிருக்கலாம். அல்லது இவனது ஆட்சிக் காலத்தில் மீண்டும் போர் மூண்டு அடைந்த வெற்றியாக இருக்கலாம்.

இரண்டாம் வடநாட்டுப் போர்

முதலாம் வடநாட்டுப் போர் மேலே கூறப்பட்டுள்ளது. பின்னர்ச் செங்குட்டுவன் தன் தாயாரைக் கங்கையில் நீராட்டுவதற்காக வடநாடு சென்றான். அப்போது ஆரிய மன்னர் ஆயிரவர் இவனை எதிர்த்துத் தாக்கினர். செங்குட்டுவன் அவர்களைப் போரிட்டு வென்றான். இஃது இவனது இரண்டாம் வடநாட்டுப் போராகும்[212].

மூன்றாம் வடநாட்டுப் போர்

பாண்டிய நாட்டில் தன் கணவனை இழந்து சேரநாட்டுக்கு வந்து விண்ணுலகடைந்த கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபட விரும்பிய தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்று செங்குட்டுவன் விரும்பியதால், இம் மூன்றாம் வடநாட்டுப் போர்[213] நடைபெற்றது. கண்ணகிக்குக் சிலை செய்வதற்கு வேண்டிய கல்லை இமயமலையிலிருந்து எடுத்து வருவதென முடிவு செய்தான்[214].

அவனது படைத் தலைவன் வில்லவன் கோதை வீரமுழக்கம் செய்தான்[215].

வடநாடு செல்லும் வழியில் உள்ள மன்னர் எல்லாரும் அவன் வரும் வழியில் தமிழ்நாட்டுச் சின்னங்களாகிய வில், புலி, கயல் கொடிகளைப் பறக்க விடவேண்டுமென்று ஓலை அனுப்பும்படி கூறினான். 'ஓலை அனுப்ப வேண்டா' என்றும் வஞ்சிமாநகரில் உள்ள ஒற்றர்களே செய்தியை அறிவிப்பர் என்றும் அவனது மற்றொரு படைத்தலைவன் அழும்பில்வேள் கூறினான்[216]. வஞ்சியில் வடநாட்டுப் படையெழுச்சி குறித்துப் பறையறையப் பட்டது.

'வடநாட்டு மன்னர் தலையில் கண்ணகிக்குக் கல் ஏற்றிக் கொண்டுவராமல் மீள்வேனே யானால் என்னைக் கொடுங்கோலன் என்று இகழ்க' எனச் செங்குட்டுவன் வஞ்சினம் கூறினான். இவனது ஆசான் இவனைப் புகழ்ந்தான். கணியன் நல்ல நேரம் பார்த்துச் சொன்னான். படைகள் புறப்பட்டன. வஞ்சிப்போர் அவர்களின் நோக்கம். செங்குட்டுவன் சிவனையும் திருமாலையும் வழிபட்டான். வஞ்சியை விட்டு வந்து நீல மலையில் தங்கினான்.

நீலமலைப்[217] பாடி வீட்டில் இருக்கும்போது கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தான். கொண்கான நாட்டவரும், குடகு நாட்டவரும் இந்தக் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி மகிழ்வூட்டினர். அப்போது சஞ்சயன் என்னும் தூதன் வந்தான். நூற்றுவர் கன்னராகிய தம் மன்னர், செங்குட்டுவன் சார்பில் சென்று இமயத்தில் கண்ணகிக்குக் கல்லெடுத்து வந்து தர விழைவதாக அவன் கூறினான். கல்லெடுப்பதோடு கனகவிசயர்க்குப் பாடம் கற்பிப்பதே தன் நோக்கமாகையால் தானே செல்ல விரும்புவதாகவும், நூற்றுவர்கன்னர் விரும்பினால் செங்குட்டுவன் கங்கையைக் கடக்க உதவி செய்யலாம் என்றும் அத்தூதனிடம் கூறினான்.

சஞ்சயன் போனபின் சட்டை அணிந்த தென்னவர் ஆயிரவர் செங்குட்டுவனுக்குத் திறை தந்து தம் அரசன் பாண்டியன் அளித்த வாழ்த்து மடலையும் தந்தனர்.

பின்னர்ச் செங்குட்டுவன் படை நடத்திச் சென்று கங்கை ஆற்றை அடைந்தான். ஆற்றைக் கடக்க நூற்றுவர் கன்னர் உதவினர். செங்குட்டுவன் தன் படையுடன் கங்கையின் வட கரையை அடைந்தான்.

வடநாட்டு அரசர்கள் கனக விசயர் தலைமையில் திரண்டனர். உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் ஆகியோர் அவ்வாறு திரண்டவர்களில் சிலராவர். இவர்கள் செங்குட்டுவனை எதிர்த்துத் தாக்கினர்[218].

கடும்போர் நிகழ்ந்தது. செங்குட்டுவன் தும்பை சூடி நூழில் போரில் ஈடுபட்டான். போர் மொத்தத்தில் 18 நாழிகைதான் (சுமார் 7 மணி நேரந்தான்) நடைபெற்றது. செங்குட்டுவன் வெற்றி பெற்றான். கனகவிசயர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் மற்றும் 52 பேர் போர்க்களத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையை அறிந்த ஏனைய வடநாட்டு அரசர்கள் துறவிக்கோலம் பூண்டு தப்பி ஓடினார்கள். இவன் தன் வஞ்சினத்தை முடித்துக்கொண்டான். இமயமலையில் கண்ணகிக்குக் கல் எடுத்தான்; கனகவிசயர் தலையில் சுமத்திக் கொண்டு வந்து கங்கையில் நீராட்டினான்.

தோற்ற ஆரிய அரசர்கள் கங்கை ஆற்றின் தென்கரையில் செங்குட்டுவனுக்குப் பாடிவீடு அமைத்துக் கொடுத்தனர். அந்தப் பாடி வீட்டில் இருந்துகொண்டு தன் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த தனது வீரர்களுக்கெல்லாம் சிறப்புச் செய்தான். அப்போது தமிழ் நாட்டிலிருந்து வந்த மறையவன் மாடலனுக்குத் தன் எடைக்கு எடை பொன்னைப் பரிசிலாகக் கொடுத்தான்[219]. நூற்றுவர்கன்னர்க்கு நன்றியுடன் விடை கொடுத்து அனுப்பினான்; பின்னர்த் தன் நாட்டுக்குத் திரும்பினான்.

செங்குட்டுவன் அறவேள்வி ஒன்று செய்தான். அப்போது தன் நாட்டுச் சிறையில் இருந்தவர்களையெல்லாம் விடுதலை செய்தான். மற்றும் தான் கைது செய்து வந்திருந்த கனக விசயரையும் விடுதலை செய்தான். வஞ்சி நகருக்கு வெளியே பூஞ்சோலையில் இருந்த வேளாவிக்கோ மாளிகையில் அவர்களை விருந்தினர்களாகத் தங்க வைத்தான்.

கடவுள் பத்தினிக்குச் சிலைசெய்து கோயில் கட்டி வழிபாடு செய்தான். அந்த வழிபாட்டு விழாவில் தமிழ்நாட்டு அரசர்களுடன் பிற நாட்டு அரசர்களும் கலந்துகொண்டனர். விடுதலை பெற்ற கனக விசயரும், அவர்களுடன் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை பெற்ற வடநாட்டு அரசர் 52 பேரும், குடக நாட்டுக் கொங்கர், மாளுவ நாட்டு வேந்தர், இலங்கை அரசன் கயவாகு ஆகியோரும் விழாவில் கலந்து கொண்ட சிலர் ஆவர். இவர்கள் தம் நாட்டிலும் கண்ணகிக்குக் கோயில் அமைக்க இருப்பதாகவும், அமைத்து வழிபடும்காலை பத்தினித் தெய்வம் வந்திருந்து அருள்புரிய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர்.

இவன் வஞ்சியில் இருந்து புறப்பட்டது முதல் வெற்றி பெற்று மீண்டதுவரை கடந்து சென்ற காலம் 32 மாதங்கள்[220] ஆகும்.

போர்ச் சிறப்பு

இவன் கடற்போரிலும் மலைப் போரிலும் ஈடுபட்டான். அப்பகுதிகளில் பல கோட்டைகளைக் கைப்பற்றினான்; பாசறைகளில் பல நாள்கள் தூங்காதிருந்தான். அப்போது இவனுக்குப் பால் உணர்வுகள் தோன்றுவதே இல்லை[221].

போரில் தான் கொன்று குவித்த வீரர் பிணங்களிடையே வெற்றிக் களிப்போடு தோள்கொட்டித் துணங்கைக் கூத்து ஆடினான்[222].

இவனது போர் வெற்றிகள் பலவற்றைச் சிறப்பித்து விறலியர் இவனது தொன்னகரான வஞ்சியில் இரவில் தெரு விளக்கொளியில் ஆடிப்பாடினர்[223].

இவனது போர்வீரர்கள் - இவன் கூறும் வஞ்சின மொழிகள் இவனுக்குக் கைகூடுமாறு செய்த 'ஒன்றுமொழி மறவர்'[224] - வீரக்கழலே அன்றிக் கொடைக்கழலும் அணிந்திருந்தனர்: அம்பு தைத்துப் புண் ஆறிய அழகிய மார்பினை உடையவர்கள். இவர்கள் தும்பைப்பூச் சூடியதில்லை. அதாவது, வலியச் சென்று போர் தொடுத்தது இல்லை; பனம்பூமாலையை அணிந்திருந்தனர்[225].

கொடைத்தன்மை

போர் வெற்றியால் பகைவர்கள் நாட்டிலிருந்து இவனுக்குக் கிடைத்த பொருள்கள்,[226] கடல் வாணிகத்தால் இவனுக்குக் கிடைத்த பொருள்கள்[227] ஆகியவற்றை இவன் கொடையாக வழங்கினான்.

விறலியருக்கு ஆரம், பிடி முதலானவற்றை வழங்கினான்;[228] பாணர்க்குப் பொன்னாலான தாமரையை வழங்கினான்;[229] வீரர்களுக்குக்கள்ளும் மாவும் வழங்கினான்;[230] கொண்டி மன்னர்களுக்குப் போர்க் களிறுகளை வழங்கினான்.[231] அகவலர்களுக்குக் (குறி கூறுபவர்களுக்குக்) குதிரைகளும்,[232] பரிசில் நாடி வந்தவர்களுக்குக் களிறுகளும் இவன் வழங்கினான்[233].

பதிற்றுப்பத்தில் தன்னைப் பாடிச் சிறப்பித்த பரணர் என்னும் புலவர்க்கு உம்பற்காடு என்னும் பகுதியில் அரசுக்குக் கிடைத்த வருவாய் அனைத்தையும் கொடுத்தான். அதனுடன் இவனது அருமை மகன் குட்டுவன் சேரல் என்னும் பெயர் கொண்டவனைப் புலவர்க்குப் பணிவிடை செய்வதற்கென்று அனுப்பிவைத்தான்[234]. வடநாட்டு வெற்றிக்குப்பின் கங்கையாற்றின் தென்கரையில் பாடி வீடமைத்துத் தங்கியிருந்தபோது தமிழ்நாட்டிலிருந்து வந்த மாடலன் என்னும் மறையவனுக்குத் தன் எடைக்கு எடை பொன் கொடுத்தான் என்ற செய்தியைச் சிலப்பதிகாரத்தால் அறியலாம்.

பண்பு நலம்

இவன் பெருஞ்சினம் கொண்டவன்[235]. போர் முழக்கத்தைக் கேட்பதில் பெரும் விருப்பினன்[236].

சினத்தீயைப்போலவே இவன் தண்ணிய சாயலையும் உடையவன். இவனது அருள் காவிரி நீர் போலவும், குமரி முனை நீர் போலவும் பயனும், புனிதத் தன்மையும்[237] உடையதாயிருந்தது.

தோற்றப் பொலிவு

சந்தனம் பூசி அதன்மேல் வண்ணக் குழம்புகளால் வகைபெற எழுதி வண்டுகள் மொய்க்குமாறு பொலிவுடன் இவனது மார்பு விளங்கியது[238]. பொன்னாலாகிய மாலையையும் அணிந்திருந்தான்[239]. கணையமரம் போன்ற வலிமை மிக்க விலா எலும்புக் கட்டுடன் அகன்றிருந்தது அவன் மார்பாகும்[240]. மன்னர்களின் ஏழு முடிகளைக் கோத்து அணிந்திருந்தான் எனக் கூறுவோரும் உளர்[241]. இவன் பார்வைக்கு அடக்கம் உடையவனாகக் காணப்பட்டான். எனினும், யாருக்கும் வணங்காத ஆண்மை உடையவனாக விளங்கினான்[242]. யானைமீதும் தேர்மீதும் இவன் ஏறிச் சென்றான்[243].

சிறப்புச் செயல்கள்

இவனது செயல்களில் சிறப்பு மிக்கனவாக இரண்டைக் குறிப்பிடலாம். அஃதாவது கற்பரசி கண்ணகிக்குச் சிலையமைத்துத் தெய்வமாக்கி வழிபட்டதும், காஞ்சியம் பெருந்துறை என்னுமிடத்தில் தன் ஆயத்தார் புடைசூழ நீர்விழாக் கொண்டாடியதும்[244] ஆகும்.

மனைவி

இவனது மனைவி வேண்மாள் ஆவாள். இவளைச் சோழர் குடிப்பெண் என்பர். இவள் சிறந்த அழகியாவாள்[245]. இவன் பிற மகளிரோடு மகிழ்ந்திருந்ததாகத் தெரிகிறது[246].

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

இவன் தந்தை நெடுஞ்சேரலாதன்; தாய் வேளாவிக் கோமான் பதுமன் மகள்; அண்ணன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், இவன் செங்குட்டுவனுக்கும் இளையவன் எனலாம்[247].

நாடு

பயன்படுத்த முடியாமல் அழியும் செல்வவளம் மிக்க நகரம் பந்தர்[248]. இது கடற்கரையில் இருந்தது[249]. இக்கடற்கரைப் பகுதி 'கானலம் பெருந்துறை' என்னும் பெயரைப் பெற்றிருந்தது. இப்பெருந்துறைப் பகுதியையும் அதனை அடுத்திருந்த வயல் வளம் மிக்க நன்னாட்டையும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தன் தொடக்க காலத்தில் ஆண்டு வந்தான். இக்காலத்தில் பந்தர் இவனது தலைநகரமாகக்கூட அமைந்திருக்கக்கூடும். இது இவனது தந்தை நெடுஞ்சேரலாதன் குடநாட்டிலிருந்து ஆண்டு கொண்டிருந்த காலம்.

தென்னை வளம்மிக்க துறைமுகம் நறவு. இது குட்டநாட்டின் வடபால் கொண்கான நாட்டில் இருந்தது. அப்பகுதியில் வாழ்ந்த இனத்தவரோடு இவன் மகிழ்ந்து வாழ்ந்துவந்தான்[250]. கொண்கான நாடு முல்லைவளம் மிக்க நாடு. அந்நாட்டு மக்கள் புன்புலத்தை உழுது விளையும் கதிர்மணிகளைப் பெற்று வாழ்ந்து வந்தனர். அந்த நாட்டு மக்கள் இவனது தலைமையை விரும்பி ஏற்றனர்[251].

நெடுஞ்சேரலாதனுக்குப் பின் செங்குட்டுவன் தலைமையின் கீழ்ச் சேரநாட்டு ஆட்சி அமைந்தது. அப்போது இவன் தான் ஆண்டு கொண்டிருந்த நாட்டுக்குத் தெற்கிலிருந்த குட நாட்டு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றான்[252].

இவனது ஆட்சிக்காலம் முழுவதும் நாடு காவல் பணியாய் அமைந்திருந்தது எனலாம்.

இவன் தன்னை அண்டி வாழ்ந்த மழநாட்டுக் குடிமக்களுக்குக் கவசம்போல் அமைந்து அவர்களைக் காத்து வந்தான்[253]. தன் ஆட்சியை விரும்பாத மழவர்களை இவன் வென்று அவர்களின் தொகை குறையுமாறு செய்தான்.

மழவர்களுக்குக் கவசம்போல் விளங்கியது போலவே இவன் குதிரைமலைப் பகுதியிலிருந்த வில்லோர் குடிமக்களுக்கும் பாதுகாவலனாய் விளங்கினான்[254].

போர்

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தன் முன்னோர் வென்ற நாடுகளை யெல்லாம் தானும் வென்றான்[255]. வேந்தர்தம் தார்ப் படை அழிந்து அலறுகையில் மலைநாட்டைக் கைப்பற்றினான்[256]. வேந்தர்கள் போர்க்களத்தில் மெய்மறந்தனர்[257]. மனைவியைப் பிரிந்திருந்தவன் வேந்தர்களின் எயிலைப் பிரிந்திருக்வில்லை[258] என்பது இவன் உழிஞைப் போரில் ஈடுபட்டிருந்த நிலைமையைக் காட்டும். இவனுக்கு நண்பர் அல்லாத ஏனைய மழவர் இவனது பகைவர்களுடன் சேர்ந்து கொண்டு இவனைத் தாக்கியபோது இவன் அவர்களைக் கொன்று அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தான்[259]. போர்களில் இவன் பல மன்னர்களைத் தோற்றோடும்படி செய்தான்[260]. பகைவர்கள் இவனுக்குத் திறைதந்த போது அதனை ஏற்றுக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டு விட்டு மீண்டான்[261].

தண்டாரணியப் போர்

இவையேயன்றி ஆறாம் பத்துப் பாடப்பட்ட காலத்திற்குப் பின் இவன் கரந்தைப் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான். தண்டாரணியத்தில் வாழ்ந்த மக்கள் இவனது குடநாட்டில் புகுந்து வருடை ஆடுகளைக் கவர்ந்து சென்றனர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியத்துக்கே படையெடுத்துச் சென்று அவர்கள் கவர்ந்துசென்ற ஆடுகளை மீட்டுக்கொண்டு வந்தான். அவற்றைத் தொண்டி நகருக்குக் கொண்டு வந்து ஆட்டுக்குரியாருக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தான்[262].

படைச் செருக்கு

இவனது வெற்றிகளுக்கு உறுதுணையாய் அமைந்தவை போர்த் திறமும் இவனது படையின் ஆற்றலுமாகும்.

நாகப்பாம்பை இடிகொல்வதுபோலப் பகைவர்களைக் கொல்லும் ஆற்றல் மிக்கவன் இவன்[263]. இவனது படை வீரர்கள் வாண்முகம் பொறித்த தழும்பினைப் பெற்றவர்களாய்ப் பயிற்சித் திறம் மிக்கு விளங்கினர்[264]. தும்பை சூடித் தேரில் ஏறிவந்து இவனது நாட்டைத் தாக்கிய பகைவரின் தார்ப்படையை இவர்கள் போந்தை சூடி எதிர்த்து வென்று கொன்றனர்[265]. இவனது படைகள் பகைவரின் யானைகளைக் கண்டு நிலைகொள்ளாது பாய்ந்தன[266].

கொடைத் தன்மை

எல்லா வசதிகளையும் பெற்றவர்கள் செல்வர்கள். இவன் அத்தகைய வசதிகளையெல்லாம் பெற்றிருந்ததோடு அவற்றைப் பிறர்க்கு அளித்துச் செல்வர் செல்வனவாக விளங்கினான். சேர்ந்தோரையெல்லாம் பாதுகாக்கும் கோட்டை அரணாக இவன் விளங்கினான்[267]. இரவலர்கள் யாரும் இவனை நாடி வாராத காலத்தில் இவன் தானே சென்று தேடிப் பிடித்துத் தேரில் ஏற்றிக்கொண்டு வந்து அவர்களுக்குப் பரிசில்கள் நல்கினான்[268]. அவர்கள் ஆசைப்பட்ட மொழிகளைப் பேசி, பின் பேசியபடியே நடந்து தன் சொல்லை உண்மையாக்கினான்[269]. இரவலர்களுக்குப் பரிசில் நல்கியதோடு அமையாது அவர்கள் வாழ்ந்த ஊர்களையே வளம் பெருகச் செய்தான்[270].

இவன் இரவலர்கள் சிறு துன்பம் அடைவதைக்கண்டு பெரிதும் அஞ்சி அதனைப் போக்கினான்[271]. இத்தகைய பண்புகள் நிறைந்த இவனைப் பலரும் 'வள்ளல்' என்று புகழ்ந்துரைத்தனர்[272].

இவனேயன்றி இவனது நாட்டு மக்களும், தம்மிடமிருந்த பல வகை வளங்களையும் பகுத்துண்ணும் பண்பினராய் விளங்கினர். அவர்கள் நெறி தவறாது அறம் புரிந்து வாழ்ந்து வந்தனர்[273].

இவன் பார்ப்பனர்க்குப் பசுக்களைக் கொடுத்ததோடு தான் ஆண்ட குடநாட்டில் ஓர் ஊரை அவர்களின் நல்வழ்வுக்கென்று ஒதுக்கிக் கொடுத்தான்[274].

இவனைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் சிறப்பித்துப் பாடினார். அவர் பெண்பாற் புலவர். அப்புலவரைச் சிறப்பித்து அவன் பரிசில்கள் வழங்கினான்; அவர் நகை செய்து போட்டுக் கொள்ளவேண்டி ஒன்பது கா நிறையுள்ள பொன் கொடுத்தான்; செலவுக்காக நூறாயிரம் காணம் பணம் கொடுத்தான். இவற்றிற்கு மேலாக தன் பக்கத்தில் அமர இருக்கை அளித்துப் பெருமைப்படுத்தினான்[275].

பண்பு நலம்

இவனது கை இரப்போர்க்குக் கொடுப்பதற்காகக் கவிந்ததேயன்றி, எதை விரும்பியும் மலர்ந்ததில்லை[276]. பிறரை விரும்பி அவர்களுக்கு நலம் பயப்பனவற்றைச் செய்யும் நெஞ்சப் பாங்கு உடையவன்[277]. 'இன்று வாண்மறவர் வென்று கொடுத்த உணவை உண்டோம். நாளை கோட்டை கடந்தபின்தான் உணவு' என்று போர்க் காலத்திலும் பொய் கூறாது உண்மையையே பேசி வந்தான்[278]. 'பகைவர் திறைதரின் அவற்றை ஏற்று அவர்களைப் பணிகொள்வாயாக' என்று இவன் அறிவுரை கூறப்பட்டுள்ளான்[279]. இதனைப் பார்க்கும்போது பகைவர் பணிந்தாலும் அவர்களை ஏற்காத பண்பினனாக ஒரு காலத்தில் விளங்கினான் என்பது பெறப்படும்.

சிறப்புச் செயல்கள்

இவன் ஆடல் கலையில் தேர்ச்சி மிக்கவன்[280]. விழாக் காலத்தில் விளக்கொளியில் கோடியர் முழவு முழங்க மைந்தரும் மகளிரும் தழுவிக்கொண்டு ஆடும் துணங்கை ஆட்டத்தில் இவனும் தலைக்கை தந்து (தலைமையிடம் கொண்டு) நெளிந்து ஆடினான்[281]. வெற்றிக்குப் பின் போர்க்களத்தில் ஆடும் துணங்கை ஆட்டத்திலும் இவன் பங்கு கொண்டான்[282]. இவ்வாறு ஆட்டத்தில் ஈடுபட்டுத் தன் மனைவியையும் மறந்து நீண்ட நாள் வெளியில் தங்கிவிட்டதும் உண்டு[283]. அரசாட்சியை மறந்து தங்கிவிட்டதும் உண்டு[284].

இவன் தனது நாட்டைக் குழந்தையைக் காக்கும் தாய்போலக் காத்து வந்தான்[285]. நன்னடத்தைக்குப் பெருமதிப்பளித்துச் சான்றோர்களைப் பேணி வந்தான்[286].

உருவத் தோற்றம்

ஒளிவீசும் அணிகலன்களை இவன் அணிந்திருந்தான். போர்ச் சின்னமாக அணியும் உழிஞைப் பூவையும் பொன்னால் செய்து அணிந்துகொள்ளும் அணிவேட்கையன்[287]. வேங்கையை வென்ற களிற்றின்மீது ஏறிக்கொண்டு இவன் சென்றது உண்டு[288].

சிறப்புப் பெயர்கள்

வானவரம்பன்[289] ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்[290] என்பன இவனது சிறப்புப் பெயர்கள். இவன் ஆடற்கலையில் சிறந்து விளங்கினான் என்று குறிப்பிட்டோம். இதனாலோ, வருடை ஆடுகளை மீட்டுக்கொண்டு வந்தமையாலோ இவன் 'ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்' என்று சிறப்பிக்கப்பட்டான்.

மனைவி

இவன் மனைவி சிறந்த அறிவுநலம் வாய்க்கப்பெற்றவள்[291]. இவன் ஆட்டத்தில் ஈடுபட்டுப் பலநாள் வெளியில் தங்கியிருந்த போது அவனைப் பிரிந்து தனிமையில் இவள் வாழ்ந்துவர நேர்ந்தது. அவன் பல நாள்கள் கழிந்து மீண்டும் இவளிடம் வந்த போது இவள் ஊடினாள்[292]. பிற சேர வேந்தரின் மனைவியைப் போல ஆறிய கற்புடையவள் அல்லள்; கணவனை ஊடித் திருத்தும் சீறிய கற்பினள். இவளேயன்றி வேறு மனைவியரும் இவனுக்கு இருந்தனர்.

உதியன் கால்வழி அரசர்கள்
(திரண்ட நோக்கு)

உதியன் கால்வழி அரசர்கள் என்று தெளிவாகத் தெரியவருபவர் அறுவர் என்று கண்டு அவர்களது வரலாற்றைத் தனித் தனியே விரிவாக அறிந்தோம். இனி அவர்கள் அறுவரது உறவு முறைகள், அரசாண்ட இடங்கள், போர்கள், சிறப்புச் செயல்கள் முதலானவற்றை ஒருங்கிணைத்துத் திரட்டி ஆய்வுக் கண்ணோட்டத்தில் நோக்குவோம்.

அடியில் காணும் பட்டியல் அவர்களது உறவு முறையினை விளக்கும்.

உதியன் கால்வழி அரசர்களின் உறவு முறை
(பதிற்றுப்பத்துப் பதிகத்தில் உள்ளபடி)

உதியஞ் சேரற்கு வெளியன் வேள் மான் (மகள்) நல்லினி ஈன்ற மகன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன்
இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன்
ஆராத்திருவின் சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
குடவர்கோமான் நெடுஞ் சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்
குடக்கோ நெடுஞ் சேரலாதற்கு வேளாவிக் கோமான் தேவி ஈன்ற மகன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்
முன் கண்ட அட்டவணைச் செய்தியைக்கொண்டு கீழ்க் காணும் உருவமைதியால் இந்த அரசர்களது உறவினை விளக்கலாம்.

உதியஞ் சேரல் (நல்லினி)
┌───────────┴───────────┐
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்பல்யானைச் செல்
(குடவர்சேரமான் நெடுஞ்சேரலாதன்)கெழுகுட்டுவன்
(குடக்கோ நெடுஞ்சேரலாதன்)
(ஆராத்திருவின் சேரலாதன்)

┌────────────┬──────┴──────┬─────────┐

களங்காய்க்கடல்பிறக்ஆடுகோட்(இளங்கோ
கண்ணிகோட்டியபாட்டுச்சேரஅடிகள்)
நார்முடிச்சேரல்செங்குட்டுவன்லாதன்


(தாய்(தாய்(தாய்(தாய்
வேளாவிக்சோழன்வேளாவிக்சோழன்
கோமான்மணக்கோமான்மணக்
பதுமன் தேவி)கிள்ளி)தேவி)கிள்ளி)

குட்டுவன் சேரல்

இந்த உறவுமுறையைச் செங்குட்டுவனை மையமாகக் கொண்டு காணின், செங்குட்டுவன் தலைமுறை, செங்குட்டுவனின் தந்தை தலைமுறை, செங்குட்டுவனின் பாட்டன் தலைமுறை செங்குட்டுவனின் மகன் தலைமுறை என்ற முறையில் நான்கு தலைமுறைகள் அமைகின்றன. இந்த நான்கு தலைமுறையினர் காலம் சுமார் 100 முதல் 150 ஆண்டுகள் என்று கொள்வது……

இலங்கைக் கயவாகு அரசன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலையமைத்து விழா எடுத்த போது வந்திருந்தான் என்று கூறப்படுவதைக் கொண்டு, விழா நடந்த காலம் கி. பி. 175 என்று கொள்ளலாம். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்த போது, அவன் அரியணையேறி ஐம்பது ஆண்டு நிறைவுற்றிருந்தது. எனவே, செங்குட்டுவன் அரியணை ஏறியது கி.பி. 125 எனத் தெரிகிறது. செங்குட்டுவன் 55 ஆண்டு அரசு வீற்றிருந்தான் என்று பதிகம் கூறுகிறது. எனவே, அவன் அரசாண்ட காலம் கி. பி. 125—180 எனக் கருதலாம். இவன் கால இறுதியில், கயவாகு வேந்தன் (கி. பி. 174—196) இலங்கையில் அரசாண்டான் எனத் தெரிகிறது.

அண்ணன் தம்பியருக்கிடையே அகவை இடைவெளி ஐந்து என்று பொதுவகையாகக் கொள்வோமானால், செங்குட்டுவனின் அண்ணன் நார்முடிச் சேரல் கி. பி. 120-ல் அரியணை ஏறினான் என்றும் செங்குட்டுவனது தம்பி கி. பி. 130-ல் அரியணை ஏறினான் என்றும் கொள்ளலாம். இவ்வாறு கணிக்கும்போது நார்முடிச்சேரல் கி. பி.120 முதல் 145 வரை அரசாண்டான் என்றும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கி. பி. 130 முதல் 168 வரை அரசாண்டான் என்றும் முடிவதைக் காணலாம்.

தந்தைக்கும் மூத்த மகனுக்கும் இடைவெளி அதாவது, ஒரு தலைமுறை 25 ஆண்டுகள் என்று கொள்வோமானால் நார்முடிச் சேரலுக்கும் அவனது தந்தைக்கும் அரியணையேறிய தொடக்க ஆண்டுகள் முறையே கி. பி.120, கி. பி. 95 என்று அமைவதைக் காணலாம். இந்த முறையில் 50 ஆண்டுகள் அரசாண்ட நெடுஞ்சேரலாதன் கி. பி. 95-145 ஆண்டுகளில் அரசாண்டான் எனலாம். இவனது தம்பி பல்யானைச் செல்குழு குட்டுவன் கி. பி. 100-125 ஆண்டுகளிலும், இவர்களின் தந்தை உதியஞ்சேரல் கி. பி. 70 -95 ஆண்டுகளிலும் அரசாண்டனர் என்று முடியும். இந்த அரசாட்சி முறையை அடுத்துள்ள அட்டவணையில் காணலாம். இது பிற சமகால அரசர்களை ஒப்புநோக்கி ஆராயப் பெரிதும் உதவும்.

இனி இவர்களது நாடு, தலைநகர், போர்களும் அவற்றின் முடிவுகளும் ஆகியவற்றை அடுத்துக்காணும் பட்டியலில் காணலாம்.

அரசன் நாடு தலைநகர் போரும் முடிவும்
உதியஞ் சேரல் குட்டநாடு வஞ்சி நாட்டின் பரப்பை விரிவாக்கி னான் முதியரை நண்பராக்கிக் கொண்டான்.
இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன் குடநாடு மாந்தை கடம்பறுத்தல், யவனரைக் கைது செய்துகொண்டு வரல், இமயம் வரை வெற்றி.
பல்யானைச் செல்கெழு குட்டுவன் குட்டநாடு, வஞ்சி, பூழி நாடு, அயிரை மலை, இருகடலையும் எல்லையாகக் கொண்டது வஞ்சி மழவர்க்கு அடைக்கலம் தந்தான்; உம்பற்காட்டில் ஆட்சியை நிலைநாட்டினான்; அகப்பாக் கோட்டையை அழித்தான்; பரிவேள்வி செய்தான்; சோழ பாண்டியரை வென்றான்.
நார்முடிச் சேரல் குன்ற நாடு, இது முதியர்குடி வழியினர் வாழ்ந்த நாடு நன்னனைக் கொன்று அவன் கைப்பற்றியிருந்த பூழி நாட்டைத் தன்னாட்டுடன் சேர்த்துக் கொண்டான். நெடுமிடல், கொடுமிடல் ஆகியோரைக் கொன்றான். (இது பாண்டியனை வென்றது என்று கருதலாம்).
செங்குட்டுவன் பூழிநாடு, மலை நாடு வஞ்சி 1. மோகூர்ப் போரில் பழையனை வென்றான்.
2. குராலம் பறந்தலைப் போரில் வென்றான்.
3. நேரிவாயில் போரில் வென்று சோழக் குடியினர் ஒன்பதின்மரை வீழ்த்தித் தன்மைத்துனச் சோழனுக்கு உதவினான்.
4. வியலூர்ப் போரில் வென்றான்.
5. கொடுகூர்ப் போரில் வென்றான்.
6. சோழநாட்டு இடும்பில் போரில் வெற்றி கண்டான்.
7. கொங்கு நாட்டை வென்று களவேள்வி செய்தான்.
8. தக்கணப் போரில் ஈடுபட்டுக் கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்களர், கங்கர், கட்டியர், வடசூரியர் முதலானோரை வென்றான்.
9. கடல் பிறக்கு ஓட்டினான்.
10. தகடூர்ப்போரில் வெற்றி கண்டான்.
11. இமயத்தில் வில்லைப் பொறித்தான்.
12. கடம்பு எறிந்தான்.
13. இரண்டாம் முறையாக வடநாட்டுப் போரில் வென்று தன் தாயாரைக் கங்கையில் நீராட்டி வந்தான்.
14. மூன்றாம் முறையாக வடநாட்டில் போரிட்டுக் கனக விசயர் தலையில் கண்ணகிச் சிலைக்குக் கல் சுமத்திக் கொணர்ந்தான்.
ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் பொறை நாடு தொண்டி பந்தர், நறவு மலைநாட்டை வென்றான். தண்டாரணியப் போரில் வெற்றிபெற்று வருடை ஆடுகளை மீட்டுவந்தான்.

அந்துவன்

பதிற்றுப்பத்து நூலில் ஏழாம் பத்தின் தலைவனாகச் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளவன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவனது தந்தை அந்துவன் என்னும் சேர அரசன்[293].

அந்துவனின் மனைவி 'பொறையன் பெருந்தேவி', இவள் ஒருதந்தை என்பவனின் மகள். பெருந்தேவி என்னும் வழக்கு பொதுவாக அரசியை உணர்த்தும். எனவே, இவளது பெயர் பொறையனுக்கு மனைவி என்று பொருள் தரும். இதனால் அந்துவன் பொறையர் குடி அரசன் என்பது தெளிவாகப் பெறப்படும். ஆகவே, புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 'சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை'[294] இந்த அரசனே என்பது பெறப்படும்.

நாடு

இவன் கருவூரைத் தலைநகராகக்கொண்டு நாடாண்டு வந்தான். கொங்கு நாட்டிலுள்ள கருவூரே இவனது கருவூர் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

அந்துவனும் மோசியாரும்

உறையூர் ஏணிச்சேரி என்னுமிடத்தில் பிறந்து வளர்ந்த மோசியார் என்னும் பெயர்கொண்ட முடவனார். அந்துவனால் மதிக்கப் பட்ட புலவர். ஒரு நாள் அந்தப் புலவருடன் கருவூர் வேண்மாடத்தில் அரசன் அமர்ந்திருந்தபோது சோழ அரசன் முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி யானைமீது அமர்ந்த வண்ணம் கருவூர்த் தெருவில் செல்வதைக் காண நேர்ந்தது. அந்தக் காட்சி சோழ அரசன் சேர நாட்டின்மீது படையெடுத்து வருவதுபோன்று பொதுவகையால் தோற்றமளித்தது; ஆனால், உண்மை அதுவன்று. சோழன் அமர்ந்திருந்த பட்டத்து யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அது சோழனது கட்டுப்பாட்டிற்குள் நில்லாது விருப்பம்போல் ஓடியது. இந்த நிலையில் தான் அந்த யானை கருவூர்த் தெருவில் ஓடிவந்தது. யானைமீது அரசன் இருந்ததால் அவனைக் காக்கும் பொருட்டுக் காவலர்கள் தொடர்ந்து ஓடிவந்தனர். யானையின் மதங்கொண்ட நிலையையும் சோழனின் அளித்தக்க நிலையையும் வேண்மாடத்தில் சேர அரசனோடு இருந்த புலவர் உணர்ந்து சேர அரசனிடம் எடுத்துக் கூறினார். சேரன் முதலில் சோழன் படையெடுத்து வருவதாக எண்ணினான் போலும். புலவரின் இந்த உரையால் சேரன் தெளிவு பெற்றிருக்கலாம். சோழனை மதங்கொண்ட யானையிடமிருந்து மீட்க உதவியும் இருக்கலாம். சோழன் பிழைத்திருக்கலாம். இருவரும் நண்பர்களாகியிருக்கலாம். முடிவு என்னவாயிருந்தது என்பதற்குச் சான்றில்லை.

சோழன் கருவூர் வரவேண்டிய அளவுக்கு என்ன நிலை நேர்ந்தது என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். எமன் போன்ற யானை மீதிருந்த சோழன் கவசம் சிதைந்த அம்புபட்ட அகன்ற மார்பை உடையவனாக விளங்கினான் என்று கூறப்படுகிறது[295]. இதனால் இவன் பகைவரை எதிர்த்துப் போராடிய நிலையில் யானைமீது வந்திருந்தான் என்பது பெறப்படுகிறது. இவனது மார்பில் அம்புகள் எய்து காயப்படுத்திய பகைவர்கள் யார்? போர் எங்கு நடைபெற்றது? என்பனவற்றை அறிய இயலவில்லை. எனினும் இவன் சேரனைத் தாக்க வந்த போது பகைவர்களால் காயப்படுத்தப்பட்டான் எனவும், யானை மதங்கொண்டு சோழனுக்கு அடங்காமல் திடீரென ஓடவே பகைவர் மேலும் இவனைத் தாக்கவில்லை எனவும், சோழனது வீரர் மன்னனைக் காக்க வாளேந்திய கோலத்துடன் யானையைப் பின்தொடர்ந்தார்கள் எனவும். போரின் தொடக்கம் சோழனுக்கும் சேரனின் படைத் தலைவனுக்கும் இடையில் நிகழ்ந்திருக்கலாம் எனவும் நாம் உய்த்துணர்வதற்கான குறிப்புகள் உள்ளன.

முருகனைச் சிறப்பித்துப் பாடல்

அந்துவன் என்பவன் திருப்பரங்குன்றத்திலுள்ள முருகனைச் சிறப்பித்துப் பாடினான் என்று சங்ககாலப் புலவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்[296]. இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் திருப்பரங்குன்றத்திலுள்ள சங்ககாலக் கல்வெட்டு ஒன்று உள்ளது[297]. அஃது அந்துவன் என்பவனது பெயரைக் குறிப்பிடுகிறது. இந்த அந்துவன் நம் சேர அரசன் அந்துவனாக இருக்கலாம். நல்லந்துவனார் என்னும் புலவர் திருப்பரங்குன்றத்து முருகனைச் சிறப்பித்துப் பாடியுள்ள பாடல் பரிபாடலில் இடம் பெற்றுள்ளது[298]. இவர் நெய்தற்கலிப் பாடல்களையும் மற்றும் சில பாடல்களையும் பாடியவர்[299]. நம் சேர அரசன் அந்துவன் இந்த நல்லந்துவனார் என்னும் புலவர் என்று கருதவும் இடம் உண்டு.

(அந்துவஞ்சாத்தன்[300]. அந்துவன் கீரன்[301] ஆகிய பெயர்களுக்கும் இவனுக்கும் உறவுமுறையில் தொடர்பு இருந்திருக்கவும் கூடும். அந்து வஞ்செள்ளை என்னும் பெயரும் இத்தகையதே.)[302]

பண்பு நலம்

அந்துவன் தன் நுண்மையான கேள்வி அறிவால் பகைவர்களையும் தன் நண்பர்களாகப் பிணித்து வைத்திருந்தான்[303].

இவன், புலவர் மோசியாரோடு வேண் மாடத்தில் மகிழ்வாக இருந்தான். இவனது பேரன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, மேலே கூறப்பட்ட மோசியாரின் மகன் என்று பெயர் அமைப்பால் கொள்ளக் கிடக்கும் புலவர் மோசிகீரனார்க்குக் கவரி வீசினான். இந்த நிகழ்ச்சிகள் புலவர்களிடம் இவர்கள் வைத்திருந்த நட்பையும் நன்மதிப்பையும் புலப்படுத்துகின்றன.

மகன்

இவனது மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆவான்.

செல்வக்கடுங்கோ வாழியாதன்

ஒருதந்தை என்பவனின் மகள் பொறையன் பெருந்தேவி. இவளுக்கும் அத்துவஞ்சேரலிரும்பொறைக்கும் பிறந்த மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன்.

நாடு

இவன் தொடக்க நிலையில் பூழி நாட்டை ஆண்டுவந்தான்[304]. பூழி நாடு நேரிமலையைத் தன்னகத்தே கொண்டது[305]. செருப்பு மலையும் அயிரையும் கூட இப்பூழிநாட்டிலேதான் இருந்தன[306]. பூழி நாட்டிலிருந்த செருப்புமலைப் பகுதியைப் பல்யானைக் குட்டுவன் ஆண்டு கொண்டிருந்த போதுதான், வாழியாதன் அதே நாட்டிலிருந்த நேரிமலைப் பகுதியை ஆண்டுகொண்டிருந்தான். இந்த இருவர் நாட்டுப் பகுதிகளிலும் மணிக் கற்கள் கிடைத்தன[307]. நேரிமலைப் பகுதியில் பலாப்பழம் மிகுதி[308].

இவனைப் பாடிய புலவர் கபிலர், இவன் நறவு என்னும் ஊரில் இருந்த போது பாடினார். இனிய சுனைகளையும் செல்வ வளச் செழுமையையும் கொண்ட பக்கமலைகள் பல சூழ்ந்த நாட்டுப் பகுதியில் அந்த 'நறவு' என்னும் நகரம் இருந்தது[309] என்று கூறப்படுவதால், இவனது தொடக்ககால ஆட்சி பூழி நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும் இவனது பல வெற்றிகளுக்குப்பின் மேலைக் கடற்கரையில் இருந்த நறவுப்பட்டினமும் இவனது ஆட்சிக்கு உட்பட்டது எனலாம்.

'வில்லோர் மெய்ம்மறை' என்று இவன் குறிப்பிடப்படுகிறான். 'வில்லோர்' குடியினர் குதிரைமலைப் பகுதியில் வாழ்ந்துவந்தனர்[310]. அவர்களுக்கு இவன் மார்புக் கவசம்போல் பாதுகாவலாய் விளங்கினான்[311].

தன் தந்தைக்குப்பின் இந்த வாழியாதன், அவன் ஆண்டு கொண்டிருந்த கொங்குநாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவரலானான்[312].

வெற்றிகள்

இவன் எந்த நாட்டோடு, யாரோடு போரிட்டான் என்னும் செய்திகள் பாடல்களில் குறிப்பிடப்படவில்லை. எனினும், பகை வேந்தரின் செம்மாப்பைத் தொலைத்தான்;[313] அவர்களின் காவற் காட்டில் தன் முரசு முழங்க யானைப்படையை நடத்திச் சென்றான்;[314] உழிஞைப் பூச்சூடி மதிலை முற்றுகையிட்டு ஒரே முற்றுகையில் இருவரைத் தோற்றோடும்படி செய்தான்;[315] படையுடன் வளைத்து எயிலை முற்றுகை இட்டான்;[316] இவனது வீரர்கள் பகைவேந்தர் ஊர்ந்துவந்த பட்டத்து யானையின் தந்தத்தைக் கொண்டுவந்து தாம் உண்ட கள்ளுக்கு விலையாகக் கொடுத்தனர்[317] என்னும் செய்திகள் இவன் பகை வேந்தரின் மதிலை முற்றுகையிட்டு வென்றதைக் குறிப்பிடுகின்றன.

பல்யானைக் குட்டுவன் அகப்பாக் கோட்டையை அழித்தான். பாண்டியனையும் அவனைச் சார்ந்தோரையும் வென்றான். இந்தப் போரில் பல்யானைக் குட்டுவனுக்குத் துணையாக வாழியாதன் போரிட்டிருக்க வேண்டும். இந்தப் போர் நிகழ்ச்சிகளே மேற்கண்ட செய்திகளில் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். துணையாக நின்று இவன் போரிட்டமையால் வெற்றிகள் இவனுக்குரியன என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. இவன் உன்னமரத்தின் பகைவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான்[318]. இந்த உன்னமரம் அகப்பா மன்னனின் காவல் மரமாகவோ வேறொருவனுடையதாகவோ இருக்கலாம். யாருடையதாக இருப்பினும் இவன் அந்த உன்ன மரத்தை வெட்டிச் சாய்த்தான் என்பது மட்டும் தெளிவாகிறது[319]. அகப்பாப் போரில் துணையாய் நின்றதோடு மட்டுமன்றி வேறு சில போர்களிலும் இவன் ஈடுபட்டு வெற்றிகண்டான்.

செருப்பல கடந்தான்;[320] பகைவரை ஓட்டினான்;[321] பகைவர் குழுவை நொறுக்கினான்;[322] ஞாயிற்றின்முன் விண்மீன் மறைவது போல இவன்முன் நிற்கமாட்டாது பகைவர் மறைந்தனர்[323] என்னும் செய்திகள் அவ்வெற்றிகளைத் தெரிவிக்கின்றன.

தோற்ற மன்னர்கள் இவனுக்குத் திறை தந்தனர்[324]. யானைகள் அத்திறைப் பொருள்களில் அடங்கியிருந்தன[325]. தன் பகையைத் தேடிக் கொள்வதால் விளையும் தீங்கை, பகைவர்கள் நாட்டை அழிப்பதன் வாயிலாக வெளிப்படுத்திப் பகைநாட்டுக் குடிமக்களையும் உணரும்படி செய்தான்[326]. இதனால், மன்னன் விரும்பாவிட்டாலும் பகைநாட்டு மக்கள் தாமே முன்வந்து இவனுக்கும் இறை (வரி) செலுத்தியதுண்டு[327].

இவனது வெற்றிகளுக்கு உறுதுணையாய் அமைந்தது இவனுடைய படை. இவனது நாற்படை போரில் தேர்ச்சி பெற்றிருந்தது[328]. இவனது வேல், வாள் வீரர்கள் வெற்றி உறுதி தோன்றத் தம் படைக்கருவிகளில் தம் குடிச் சின்னமாகிய போந்தைக் கண்ணியையும் போர் வெற்றிச் சின்னமாகிய வாகைப் பூவையும் தொடக்கத்திலேயே அணிந்து கொண்டு போருக்குச் சென்றனர்[329]. உடம்பெல்லாம் வாள் பட்ட தழும்பு வரிகளும் மார்பில் வேல் பாய்ந்த விழுப்புண் தழும்புகளும் உடையவர்கள் அவர்கள்[330]. போர் தொடங்கினால் இடையில் உணவைப் பற்றிக்கூட அவர்கள் கவலைப்படமாட்டார்கள். பகை வேந்தர் பட்டத்து யானையின் தந்தம், தாம் உண்ட கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு எளிய பொருள்[331].

கொடைத் தன்மை

இவன் சிறந்த வள்ளல்; தன் நாண்மகிழ் இருக்கையில் கொடை விழாக் கொண்டாடிப் பரிசிலர்களுக்கு வேண்டியன வெல்லாம் கொடுத்தான்[332]. சேரநாட்டுப் பந்தர்த் துறைமுகத்தில் கிடைத்த முத்து,[333] களிறு, மா, ஆநிரை, கதிரடித்துக் குவித்துள்ள களம்[334] முதலானவை அவன் வழங்கிய கொடைப் பொருள்கள்.

அக்கொடைப் பொருள்களை அவன் மழையைக்காட்டிலும் மிகுதியாகக் கொடுத்தான்; பாலைப் பண்ணில் பையுள் இசைத் திறத்தைக் கட்டினால் செவிகளில் பாயும் அருளின்பம் போலப் பரிசிலர் உள்ளம் இன்புறும்படி நல்கினான்;[335] அலர்ந்த நெய்தல்போல் மலர்ந்த முகத்துடன் கொடுத்தான்;[336] பெற்றவர்கள் கனவோ என்று மருளும்படி நனவில் கொடுத்தான்;[337] ஏற்றவரின் வறுமையெல்லாம் நீங்கும்படி அளித்தான்[338]. கொடுக்கும்போது பெறுபவர்களின் சிறுமையை அளவுகோலாக இவன் கொண்டதில்லை. தன் பெருமையின் தகவையே அளவுகோலாகக் கொண்டான்[339].

பரிசில் நாடிவரும் வயிரியர்களைத் தன் அரண்மனைக்கு வெளியில் கண்டபொழுதே குதிரைகளுக்கு அணிகலன்களைப் பூட்டிப் பரிசிலாக அனுப்பி வைத்தான். பாசறையிலும் போர்க்களத்திலும் இருந்தபோதும் கொடுத்தான்[340]. நாண்மகிழ் இருக்கையில் நடந்த கொடைப்போரில் பாடினிக்கே வெற்றி[341].

இவ்வாறு இவன் கொடை நல்கிய போதெல்லாம் முன்பு கொடுத்தவற்றை நினைத்துப் பார்த்ததில்லை; இவ்வளவு கொடுக்கிறோமே என்று பெருமித உணர்வு தோன்றி மகிழ்வது மில்லை. கொடுக்கும் போதெல்லாம் பெருவள்ளல்[342].

மற்றும் இவன் வேள்வி செய்து கொடை வழங்கினான்[343]. அவ்வேள்வியில் அந்தணர்களுக்குப் பெறற்கரிய அணிகலன்களைத் தாரை வார்த்துக் கொடுத்தான்;[344] கடவுளர்க்கு உணவூட்டினான்; அதனால் ஐயர்கள் இன்புற்றனர்[345]. வேள்வி செய்த திருமால் வழிநின்ற புரோகிதனுக்கு ஒகந்தூர் என்னும் நெல் மிகுதியாக விளையும் ஊரையே கொடுத்தான்[346].

தன்னைப் பாடிச் சிறப்பித்த புலவர் கபிலர்க்கு நூறாயிரம் காணம் பணமாகக் கொடுத்தான். 'நன்றா' என்னும் குன்றின் மீது ஏறி நின்று தன் கண்ணிற்கண்ட இடமெல்லாம் அவருக்குக் காட்டி அவற்றையெல்லாம் அவருக்குப் பரிசாகக் கொடுத்தான்[347].

பண்பு நலன்

வள்ளன்மைப் பண்புடன் மற்றும் சிலவும் குறிப்பிடத் தக்கனவாய் இவனிடம் அமைந்திருந்தன. இவன் வளமான உள்ளம் படைத்தவன்[348]. பார்ப்பார்க்கல்லது பணியாமை, நட்டோர்க்கல்லது கண் அஞ்சாமை, மகளிர்க்கல்லது மார்பு மலராமை, உலகமே பிறழ்ந்தாலும் சொன்ன சொல் தவறாமை ஆகிய பண்புகள் இவனிடம் குடிகொண்டிருந்தன[349].

சிறப்புச் செயல்கள்

பகைவரை வென்று கிடைத்த கொண்டிப் பொருளை இவன் தமிழ் வளர்க்கும் பணிக்குச் செலவிட்டான்[350].

இவன் பல ஊர்களைத் தோற்றுவித்து, நாடோடிகளாகத் திரிந்து வந்த மக்களை நிலைபெற்று வாழும்படி செய்தான்[351].

தோற்றப் பொலிவு

இவன் சிறந்த அணிகலன்களைத் தன் மார்பில் அணிந்து கொண்டு பொலிவுடன் தோற்றமளித்தான்[352]. கழலும் தொடியும் கூட இவன் அணிந்திருந்தான்[353].

சிறப்புப் பெயர்கள்

செல்வக்கோ,[354] செல்வக்கோமான்,[355] வாழியாதன்,[356] செல்வக் கடுங்கோ வாழியாதன்,[357] சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன்,[358] கோ ஆதன் செல்லிரும் பொறை[359] முதலான பெயர்களால் இவன் குறிப்பிடப்படுகிறான். ஆதன் என்பது இவன் பெயர். வாழி என்பது இக்காலத்தில் திரு என்று குறிப்பிடுவதுபோன்று சங்ககாலத்தில் மன்னர்களுக்குத் தந்த அடைமொழியாயிருக்கக்கூடும். வெற்றிச் செல்வ மிகுதி, மன்னர்களின் அடைக்கல மிகுதி,[360] தம்மைச் சேர்ந்தோர்க்குச் செல்வம்போல் பயன்பட்ட தன்மை[361] முதலான தன்மைகளின் அடிப்படையில் 'செல்வ' என்னும் அடைமொழி இவனது பெயரில் சேர்ந்திருக்கலாம். மழைமேகங்களைக் காட்டிலும் மிகுதியாகக் கொடை வழங்கிய இவனது தன்மையாலும்[362] 'செல்' என்னும் அடைமொழி [363] தோன்றியிருக்கலாம்.

காலம்

இவனைப் பாடிய கபிலர், பாரி இறந்தபின் இவனிடம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, பாரி காலத்திற்குப் பின் இவன் வாழ்ந்தான் என்பது தெளிவாகிறது. பதிற்றுப்பத்து ஏழாம் பத்தில் இவன் கருவூரை ஆண்ட செய்தி குறிப்பிடப்படவில்லை. ஆனால், பாடலிலேயே அச்செய்திக்கான குறிப்பு உள்ளது. எனவே, ஏழாம் பத்து இவன் பூழிநாட்டில் ஆண்டுக் கொண்டிருந்தபோதே, அதாவது அவனது தந்தை கருவூரில் ஆண்டுகொண்டிருந்தபோதே பாடப் பட்டது என்பது தெளிவாகிறது. பல்யானைக் குட்டுவன் அகப்பாக் கோட்டையை அழித்த போரில் இவன் உதவினான் என்பது முன்பே குறிப்பிடப்பட்டது. எனவே, இவன் பல்யானைக் குட்டுவன் அரசாண்ட அதே 25 ஆண்டுக்கால எல்லையில் 25 ஆண்டுகள் அரசாண்டான் எனலாம். இவன் சிக்கற்பள்ளி என்னுமிடத்தில் இறந்து போனான்[364].

முன்னோர்

இவன் 'சேரலர் மருகன்' என்று குறிப்பிடப்படுகிறான்[365]. இதனால் இவன் சேரர் குடியில் தோன்றியவன் என்பது தெளிவாகிறது.

இவனது முன்னோர் தம் கொள்கையில் உறுதிப்பாடு உடையவர். அவர்கள் தம் குடிமக்கள் தளர்ச்சியடையா வண்ணம் நல்லாட்சி புரிந்தனர்; நிலம் நல்ல பயனைத் தரும் வகையில் வேளாண்மைக்கு உதவினர். வெயிலின் கொடுமை நீங்க ஆங்காங்கே மண்டபங்கள் கட்டி உதவினர். பருவமழை தவறாது பொழியக் காடுகளைப் பாதுகாத்து வந்தனர். நாற்றிசையும் வென்று இவ்வாறு நல்லாட்சி புரிந்தனர்.

குடிப்பூ

சேர மன்னர்களின் குடிப்பூவாகிய போந்தைக்கண்ணி இவனது போர்ப்படைக் கருவிகளுக்குச் சூட்டப்பட்டது என்று கூறப்படுவதால்[366] அஃது அவனது குடிப்பூ என்பது தெளிவாகிறது.

மனைவி

வேள் ஆவிக்கோமான் பதுமன் என்பவனின் பெண்மக்கள் இருவருள் ஒருத்தியை வாழியாதனும் மற்றொருத்தியை இமய வரம்பனும் மணந்திருந்தனர். வாழியாதன் மணந்தது இளையவளை எனலாம்.

காமர் கடவுளும் (காமனும்) கண்டு தனக்கும் கிடைக்கவில்லையே என்று எண்ணும் வகையில் பேரழகும் கற்பும் உடையவளாக இவள் விளங்கினாள்.[367]. இவள் தன் கணவனிடம் நகைச்சுவையாகப் பேசியபோதும் பொய்மொழி புனைந்த தில்லை[368]. வாழியாதன் பல மகளிரைத் தழுவி மகிழ்வது உண்டு[369]. இதுபற்றிப் பிறர் கூறிய புறஞ்சொற்களை இவள் பொருட்படுத்தியதில்லை[370]. பெண்மை, மடமை, கற்பு ஆகிய பண்புகளில் இவள் தலைமைபூண்டு விளங்கினாள்[371]. செல்வக் கடுங்கோவின் அரண்மனைக்கேற்ற நல்லோளாக இவள் விளங்கினாள்[372].

அரண்மனை

இவனது அரண்மனையில் ஓவியங்களும் சிற்ப வேலைப்பாடுகளும் நிறைந்திருந்தன[373].

மக்கள்

இவனுக்கு இரண்டு ஆண்மக்கள் இருந்தனர். இவர்களைக் கொண்டு வாழியாதன் முதியர் குடியினரைப் பேணிவந்தான். முதியர் குடியினர் சேரர் சார்பாளர். அவர்களைப் பேணுதல் சேரர்களின் கடமையாகத் தொன்றுதொட்டு அமைந்துவந்தது (உதியஞ்சேரல் பேணியது காணலாம்). இவன் தன் மக்களின் வழியே தன் தொல்லோர் கடமையை நிறைவேற்றினான்[374].

இரண்டு மக்களுள் மூத்தவன் எட்டாம் பத்தின் தலைவன். இளையவன் 9ஆம் பத்துத் தலைவனின் தந்தை. (இவர்களைப் பற்றித் தொடர்புள்ள வரலாற்றுப் பகுதிகளில் காணலாம்.)

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

இவனது தந்தை செல்வக்கடுங்கோ வாழியாதன். தாய் பழனி மலைப் பகுதியை ஆண்ட பதுமன் என்பவனுக்கு மகளாய்ப் பிறந்து செல்வக் கடுங்கோ வாழியாதனை மணந்தவள்[375] இவளது உடன்பிறந்தாள் ஒருத்தி நெடுஞ்சேரலாதனை மணந்தாள் என்பதை நினைவு கூரலாம்.

நாடு

பெருஞ்சேரலிரும்பொறை தொடக்கக் காலத்தில் ஆண்டு கொண்டிருந்த நாடு இன்னதெனத் தெரியவில்லை. எனினும், அந்த நாடு பகன்றைப் பூக்களைக் குடிப்பூவாகச் சூடும் உழவர்கள் வாழ்ந்த நெல் வளம்மிக்க நாடு என்று தெரிகிறது[376].

வளர்ந்த இடம்

இவன் 'புகார்ச் செல்வன்' என்று கூறப்படுகிறான்[377]. அவ்வாறு இவன் கூறப்படும்போது புகார் நாட்டு உயர்திணை மகளிரும் (செல்வச் சீமாட்டியர்) வயலில் நாரைகளை ஓட்டும் மகளிரும் (உழைக்கும் பெண்டிர்) இரவும் பகலும் பாசிழை களையாது இணைந்து குரவை ஆடும் இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பு இத்தகைய பெண்டிர்க்கிடையே இவன் வளர்ந்தவன் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. இதனால், இவன் புகார் நகரத்தில் இளமையில் வளர்ந்து வந்தான் எனலாம்.

நாடு காத்தல்

'பூழியர் மெய்ம்மறை' என்று இவன் கூறப்படுகிறான். பூழி நாட்டு மக்களுக்குக் கவசம்போன்று விளங்கினான் என்பது இதன் பொருள். இவன் தொடக்கக் காலத்தில் ஆண்டுகொண்டிருந்த நாட்டுக்கு அண்மையில் பூழிநாடு இருந்தது. அந்நாட்டைக் காக்கும் பொறுப்பும் இவனிடம் இருந்தது[378].

காமூர்ப் போர்

கழுவுள்[379] என்பவன் காமூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டவன். இந்தக் காமூர் தோட்டிமலையில் இருந்தது. ஆழமான அகழி, குறுகிய ஞாயில் உறுப்புகளைக் கொண்ட மதில் ஆகிய அரண்களை உடையது அந்த ஊர். அவ்வூர் மக்கள் பசு வளர்த்த இடையர்கள். அரசனது போர் வீரர்களாக வாழ்ந்த அவ்வூர் இளையர்கள் பிற நாடுகளுக்குச் சென்று வெட்சிப் போர் செய்து ஆநிரைகளைக் கவர்ந்துவந்த ஆற்றல்மிக்க வீரர்கள்.

பெருஞ்சேரல் இரும்பொறை கழுவுள் மன்னனது கோட்டையைத் தாக்கினான். வென்று காமூரைத் தீக்கிரையாக்கினான். அதில் எழுந்த தீப்புகை, திசைகளையும் மதில்களையும் மறைக்கும் அளவுக்கு மிகுந்து உயர்ந்தது. இந்தப் போர் காலையில் தொடங்கி மாலையில் முடிவுற்றது. தன் தோல்வியை எண்ணிய கழுவுள், மறுநாள் விடியுமுன்பே காமூரை விட்டு ஓடிவிட்டான். தலைவனை இழந்த காமூர் மக்கள் கலங்கினர்; மேலும் போர் செய்யாமலிருக்கும்படி பெருஞ்சேரலை வேண்டிக் கொண்டனர்; கைம்மாறாகப் போர் யானைகளையும் அணிகலன்களையும் தந்தனர். அவர்கள் தந்த திறைப்பொருளைப் பெற்றுக் கொண்டு பெருஞ்சேரல் மேலும் அவர்களைப் போரிட்டுக் கொல்லாது விட்டு விட்டு மீண்டான். கையூட்டு வாங்கிக் கொண்டு உயிரைக் கொல்லாது விட்டுவிட்டுச் செல்லும் எமன்போல அவன் மீண்டான் என்று கூறப்படுகிறது.

இந்தப் போரில் பெருஞ்சேரல் இரும்பொறையோடு 14 வேளிர் தலைவர்கள் சேர்ந்திருந்தனர் எனத் தெரிகிறது[380]. இந்த வேளிர் தலைவர்கள் தாய்வழி உறவினரான பழனிமலை வேளிர், மனைவிவழி உறவினரான மையூர் வேளிர், இந்த வேளிர்களுக்கு உறவினரான பிற வேளிர் ஆகியோர் சேர்ந்த குழுவினர்[381].

இந்தப் போரில் கழுவுள் மடமை அதாவது, அறியாமை காரணமாகப் பெருஞ்சேரலை எதிர்த்துள்ளான் என்பதை எடுத்துக் கூறிப்[382] போருக்குப்பின் இருவரையும் ஒன்றுசேர்க்க அரிசில்கிழார் முயன்றுள்ளார் எனத் தெரிகிறது. இவரது முயற்சி கைகூடியிருக்கலாம்.

கொல்லிமலைப் போர்

கொல்லிமலையில் நீர்கூர் என்பது பண்டைக்காலத்தில் இருந்த ஓர் ஊர். கழுவுளை வெற்றிகண்ட பெருஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டில் ஊடுருவி அதியமானை இந்த ஊரில் தாக்கினான்[383]. பெருஞ்சேரலின் செல்வாக்கைக் குலைக்க விரும்பிய சோழனும் பாண்டியனும் அதியமானுடன் சேர்ந்து கொண்டனர். போர் கடுமையாக நடைபெற்றது பெருஞ்சேரல் வெற்றி பெற்றான்; பகையரசர்களின் முரசு, குடை, அணிகலன்கள் முதலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டான்.

தன் வெற்றிக்கு அறிகுறியாகப் போர்க்களத்திலேயே களவேள்வி ஒன்று செய்தான். வெற்றிக்கு உதவியவர்களுக்கு வேண்டியவற்றைப் போர்க்களத்திலேயே நல்கல் களவேள்வி எனப்படும்.

மகளிர் வருந்தும் வண்ணம் அவர்கள் முன்னிலையிலேயே பகைவர்களை இவன் கொன்றான்[384]. இத்தகைய கொடுமையை வீரம் என்று கருதியது வியப்பே.

'புகார்ச் செல்வன்' என்று இவன் கூறப்படுவது புகார் நகரில் வளர்ந்தமை நோக்கி என்று முன்னமே கூறியுள்ளோம். புகார் நாட்டை வென்றதால் இவன் இவ்வாறு கூறப்பட்டான் என்று இதற்குப் பொருள் கொள்வாரும் உளர். இப்பொருள் சிறப்பின்று. எனினும் கொல்லி மலைப் போரில் அதியமானுக்குத் துணையாக வந்த இருவேந்தர்களுள் சோழனும் ஒருவன். ஆகையால், அவனை வென்றமை நோக்கி இவ்வாறு கூறப்பட்டான் எனக் கொள்ளுதலும் ஒருவகையில் அமையும். அவ்வாறாயினும் சோழநாட்டைத் தாக்கி வென்றான் என்றோ அதனால் புகார் நாட்டைத் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்தான் என்றோ கூறுவது பொருந்தாது.

தகடூர் வெற்றி

அதியமானின் மகன் எழினி[385]. அதியமான் கொல்லிமலைப் போரில் சேரனிடம் தோற்றபின் பசும்பூட் பாண்டியனது படைத்தலைவனாக அமர்ந்துவிட்டான்[386]. கொல்லிமலைப் போரில் வெற்றிபெற்ற பெருஞ்சேரல் அதியமானின் தலைநகரான தகடூரைத்[387] தாக்கினான். தன் தந்தை அதியமானுக்குத் துணையாகக் குதிரைமலைப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்த எழினி, தன் தந்தையின் தலைநகரைக் காக்க விரைந்து வந்து போரிட்டான்.

தாமரைப் பூக்களையும், நெய்தல் பூக்களையும் வீசி மகளிர் கிளிகளை ஓட்டும் வளம்மிக்க பகுதிகளை உடையதாக அக்காலத் தகடூர் விளங்கியது. அத்தகடூரைச் சுற்றிக் காவற்காடு இருந்தது. இந்தக் காட்டரண் போர்வீரர்களின் பயிற்சிக்களமாக விளங்கியது. தேர்ச்சிபெற்ற வீரர்களின் காவலையும் அது உடையதாக இருந்தது. பெருஞ்சேரல், தகடூரை அரசன் இல்லாத போது தாக்கியதால் எளிதில் கைப்பற்றிக் கொண்டான்; கோட்டையை அழித்துக் கைப்பற்றிக் கொண்டான். கோட்டை அழிந்ததைக் கண்ட மறவர்கள் பாதுகாவல் நாடி ஓடிவிட்டனர்.

எழினி தன் தந்தையின் தலைநகரை மீட்கப் போராடினான்; ஆனால், போரில் கொல்லப்பட்டான்.

குட்டுவன் தகடூரைத் தாக்கிக் கொளுத்தினான் என்றும், அப்போது அவனை எதிர்த்துப் பேராடுவதற்கு ஆள் இல்லை என்றும் பரணர் குறிப்பிடுகிறார்[388]. பெருஞ்சேரல் தகடூரைத் தாக்கியபோது அவனுக்குத் துணையாக[389] வேந்தன் செங்குட்டுவனும் வந்திருந்து தகடூரை வென்ற செய்தியையே பரணர் இவ்வாறு கூறியுள்ளார். செங்குட்டுவன் தகடூரை அழித்துவிட்டு எதிர்ப்போர் இன்றி மீண்டான். பெருஞ்சேரல் கோட்டையில் தங்கியிருந்து ஆட்சிசெய்யத் தொடங்கிய போது எழினி தாக்கிய போர் மூண்டது என்றும், எனினும் சேரரே வெற்றி பெற்றனர் என்றும் கொள்வது பொருத்தமானது.

சேரன் செங்குட்டுவன், பெருஞ்சேரல் இரும்பொறை, அதியமான் ஆகியோர் சமகாலச் சேரர் குடியினர். இவர்கள் மூவரும் பனம்பூமாலை அணிபவர். செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதனும் பெருஞ்சேரல் தந்தை செல்வக்கடுங்கோவும் பழனி மலைப் பகுதியில் ஆண்டவேள் ஒருவனின் இரண்டு பெண் மக்களைத் திருமணம் செய்து கொண்டதால் இவர்களிடையே உறவு நெருக்கமா யிருந்தது. எனவே, இருவரும் சேர்ந்து தம்மோடு உறவு நெருக்கம் இல்லாதவனும், தம் பகைவேந்தரான சோழ பாண்டியரோடு தொடர்பு கொண்டிருந்தவனுமாகிய அதியமானை சேரரின் கிளைக்குடியைச் சேர்ந்த அதியமானை - ஒழிக்கத் திட்டமிட்டு வெற்றிகண்டனர். செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு ஆண்மக்கள் இருந்தனர் என்று குறிப்பிட்டோம். அவர்களுள் மூத்தவன் இங்குக் கூறப்பட்ட பெருஞ்சேரல் இரும் பொறை. இளையவன் ஒன்பதாம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும் பொறையின் தந்தை. அவன் பெயரை ஒன்பதாம் பதிகம் 'குட்டுவன் இரும்பொறை' என்று குறிப்பிடுகிறது. பரணர் தகடூரில் பொருமுரண் பொறாது திரும்பிய குட்டுவன் என்று குறிப்பிடுவது இவனையோ என்று ஐயுறவுக்கும் இட முண்டு. இந்த ஐயுறவு வேண்டியதில்லை. பரணர் குறிப்பிடும் குட்டுவன், குட்டுவன் இரும்பொறை அல்லன். பரணர் குறிப்பிடும் குட்டுவன் தகடூரில் பொருமுரண் பொறாது வென்று கடலை முற்றுகை யிட்டுக் கடல் அலை விலகும்படி நல்ல துறைமுகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டான். இதனாலோ, கடற்போர் வெற்றியாலோ கடல் பிறக்கோட்டினான் என்று அவன் குறிப்பிடப்பட்டுள்ளான். எனவே, நாம் மேலே கூறியவாறு சேரன் செங்குட்டுவனே அதாவது, கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனே பெருஞ்சேரல் இரும்பொறைக்கு உதவியாக இருந்தான் என்று கொள்ள வேண்டும்.

இவனது போரைக் குறிப்பிடும்போது புலியைக் கொன்று விட்டுப் பின் யானை ஒன்றைக் கொல்லும் அரிமா[390] இவனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இஃது இவன் இரண்டு அரசர்களைக் கொன்ற செய்தியைக் குறிப்பிடுகிறது எனலாம். எழினி இவனால் கொல்லப்பட்ட செய்தி தெளிவு. இவனால் கொல்லப்பட்ட மற்றோர் அரசன் பெயர் தெரியவில்லை.

பகைவர் நிலை

இவனைத் துன்புறுத்தியவர் தானியச் சேமிப்புக் களஞ்சியத்தை உடைத்த சிறுவர்கள்போலத் துன்புற்றனர் என்றும்[391] இவனது பகைவர்கள் இவனது ஆற்றலைப் புலவர்கள் கூறும் போது உணர்வதில்லை. இவனது சான்றோர் (படைவீரர்) செயல்படும் போது உணர்வார்கள் என்றும்,[392] வேந்தரும், வேளிரும், பிறரும் ஒன்றுசேர்ந்து வந்தாலும் பணிந்து இவன் வழியில் நடக்காவிட்டால் அவர்களது நாடு இவனால் வெள்வரகு விதைக்கப்பட்டுப் பாழாகும் என்றும்[393] புலவர் கூறுவது இவனது பேராற்றலையும் பகைவரின் எளிமையையும் உணர்த்துவனவாக உள்ளன.

பகைவரின் முரசை அறுத்தும், பகைவரின் பட்டத்து யானைக் கொம்புகளை வெட்டியும் அரியணை செய்து அமர்ந்து, குருதிக் கலப்பில்லாத உணவுப் படையலை ஏற்காத இவனது அயிரை மலைக் குலதெய்வம் போலக் கேடில்லாப் புகழுடன் வாழவேண்டும் என்றும்,[394] போர் முறையில் பகைவரிடம் திறைபெற்று வாழ வேண்டும் என்றும்[395] இவன் வாழ்த்தப்படுகிறான்.

படை

இவனது யானைப் படை கொங்கர்களின் பசுக் கூட்டம்போல் பெரியது. அந்த நாட்டு (தகடூர் நாட்டு) ஆட்டு மந்தைபோல் குதிரைப் படை பெரியது. தேர்ப்படைகளும் காலாட் படைகளும் எண்ணில் அடங்காதவை. இவனது படை வீரர்களில் வேற்படையினர் மிகுதி[396].

கொடைத்தன்மை

படைவீரர், தம்மிடம் வந்து இரந்தவர், இரக்க இருப்பவர், விறலியர் முதலானவர்களுக்கு இவன் கொடை வழங்கினான். கனவிலும் புலவர்கள் பிறரைக் கருதாவண்ணம் மிகுதியாக வழங்கினான். மழைபோல் வரையாது வழங்கினான்[397].

பெருஞ்சேரல் இரும்பொறை தன்னைச் சிறப்பித்துப் பாடிய அரிசில்கிழார் என்னும் புலவருக்குத் தன் அரண்மனையை அரசுரிமையோடு பரிசாகக் கொடுத்தான். தானும் தன்மனைவியும் அரண்மனைக்கு வெளியே வந்து நின்றுகொண்டு அவற்றைப் புலவருக்குக் கொடுத்தான். அவற்றுடன் தன் சொந்தப் பணமாக இருந்த ஒன்பது நூறாயிரம் காணம் பணத்தையும் அவருக்குக் கொடுத்தான். புலவர் அவற்றை ஏற்றுக்கொண்டார். பின்னர்த் தாம் பெற்ற பொருள்களை அவனே ஏற்றுக்கொண்டு ஆளவேண்டுமென்று இரந்து வேண்டினார். பெருஞ்சேரல் புலவரின் வேண்டுகோளை நிறைவேற்றி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். புலவர் அரிசில்கிழார் அதுமுதல் அவனுக்கு அமைச்சராக விளங்கி வந்தார்.

வேள்வி

இவன் நல்லோர் உரைகளைக் கேட்டுப் படிவ நோன்பு தவறாது இருந்து வேள்விகள் செய்தான்[398]. இந்த வேள்வியால் உயர்ந்தோர் (உயர்நிலையிலிருந்த பார்ப்பனர்) மகிழ்ந்தனர். இந்த வேள்வி வேட்டலில் இவனது மனைவி வேறுபட்ட கருத்துடையவளாய் இருந்தாள் (வேள்விக்கு ஒப்பவில்லை). இவர்களுக்கு நாடாளத்தக்க ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவனைக்கொண்டு இவ்வுலகில் உள்ள மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை எல்லாம் இவன் செய்தான். அதாவது, இவன் மகன் அரசனாகவும் மக்கள் தொண்டனாகவும் விளங்கினான். இந்த நிகழ்ச்சி மனைவி இல்லாமல் கணவன் மட்டுமே வேள்வி செய்து மனைவி குழந்தையைப் பெற்றெடுத்த நிகழ்ச்சி ஆகையால், அரிசில்கிழார் என்னும் தமிழ்நெறியறிந்த புலவர்க்கு வியப்பை உண்டாக்கவில்லை. காரணம், வேள்விக்கும் குழந்தைப் பேற்றிற்கும் தொடர்பில்லை. புலவர்க்கு வியப்பை உண்டாக்கியது வேறொன்று இருந்தது. அது அவனிடமிருந்த நரைமூதாளனை அறிவு, தெளிவு பெறச் செய்ததேயாகும்.

பெருஞ்சேரல் இரும்பொறை பார்ப்பானைக் கொண்டு வேள்வி செய்தானல்லனோ? அப்போது அந்த வேள்வியால் பயனில்லை என்பதைத் தானே உணர்ந்திருந்தான். எனினும், நரை மூதாளனாய் உலகியல் முழுதும் உணர்ந்தவன்போல் அவனிடம் வாழ்ந்த பார்ப்பானின் மகிழ்ச்சிக்காகவே வேள்வி செய்தான். தன் படிவ நோன்புகளால் சித்துமுறையில் இருந்து குழந்தைப் பேற்றைப் பெற்றான். இந்தப் 'படிமைச் சித்துத் தவம்' உடையோர் கொடை, மாண்பு, உடல் உள்ள செல்வ வளம், எச்சமாகிய குழந்தைப் பேறு, தெய்வத்தன்மை ஆகியயாவும் கைவரப் பெறலாம் என்பதைத் தெளிவுபடுத்தினான். இவனிடம் தோற்ற நரைமூதாளப் பார்ப்பான் சேர நாட்டை விட்டே ஓடிவிட்டான். இந்தச் செயல் புலவரை வியப்புக்கு உள்ளாக்கியது.

பண்புநலம்

இவனது பண்புகள் குறித்து அரிசில்கிழார்[399] கூறுகிறார். இவன் போரை விரும்பும் உடல்வலிமை மிக்கவன். பிறர்க்கு இவன் துணையாவானே அன்றிப் பிறர் துணையை வேண்டுவதில்லை என்னும் அளவுக்குத் தன்நிகரில்லாதவன்[400] பகைவர்களுக்கு மடங்கல் தீப்போன்றவன்; சினம் மிக்கவன்;[401] போரில் இவன் தன் உயிரைப் போற்றுவதில்லை; பெரியோரைப் பேணுவான்; சிறியோரை அளி செய்து காப்பாற்றுவான்;[402] புகழ்தரும் கல்வி நலம்சான்றவன்;[403] செம்மையான நாநலம் படைத்தவன்;[404] அளக்க முடியாத நற்பண்புகள் மிக்கவன்[405].

இவனது ஆண்மை நலம்[406] கண்டு உலகிலுள்ள ஆண்களின் ஆண்மை தேய்வுற்றது. தோளில் பூமாலையணிந்து மகிழ்வுடன் இவன் வாழ்ந்தான்[407]. பொன்மாலை அணிவதும் உண்டு[408]. புரவி பூட்டின தேரில் போர்க்களம் செல்வதும்,[409] கொடி பறக்கும் தேரில் பிற இடங்களுக்குச் செல்வதும்[410] இவன் வழக்கம். பல வேற்படைகளைத் தாங்கிச் செல்வதும், யானைமீது செல்வதும் உண்டு[411].

மனைவியின் மாண்பு

இவனது மனைவி அந்துவஞ்செள்ளை. அவள் மையூர் (மைசூர்) கிழான் என்னும் வேளிர் தலைவனின் மகள். அறல் போன்ற அழகிய நீண்ட கூந்தலை உடையவள் இவள்[412].

மனைவியர்

இவன் தன் மலர்மாலை குழைய மகளிர் பலரைத் தழுவி மகிழ்ந்தான் என்று கூறப்படுகிறது[413]. இதனால் அந்துவஞ்செள்ளையாகிய பட்டத்தரசியே அன்றிப் பிற மனைவியரும் இவனுக்கு உண்டு எனத் தெரிகிறது.

மகன்

பெருஞ்சேரல் சில காலம் மகப்பேறின்றி இருந்து தன் சித்துப் படிமைத் தவநெறியால் தன் பட்டத்தரசியின்பால் மகனைப் பெற்றான். அவன் நாடாளும் மன்னனாகவும் மக்கள் தொண்டனாகவும் விளங்கினான்[414]. இவன் பெயர் என்னவென்று தெரியவில்லை. நாடாண்ட செய்திபற்றி வேறு குறிப்பும் இல்லை. ஒருவேளை நாடாளத் தொடங்கும்போதே போரில் ஈடுபட்டு மாண்டிருக்க வேண்டும்.

பாடின புலவர்

அரிசில்கிழார் என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். அரிசில் என்பது காவிரியின் கிளை ஆறாய்ச் சோழநாட்டில் பாயும் ஆறு. புகார் நாட்டில் இவன் வளர்ந்தபோது இப்புலவர் இவனுக்கு ஆசிரியராய் விளங்கியிருக்கக்கூடும்.

ஆட்சி ஆண்டு

பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள் அரசாண்டான்[415].

இளஞ்சேரல் இரும்பொறை

பதிற்றுப்பத்து அமைப்பைக் காணும்போது இவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பின் அரசாண்டவன் எனத் தெரிகிறது.

பெற்றோர்

இவனது தந்தையின் பெயர் குட்டுவன் இரும்பொறை; தாயின் பெயர் அந்துவஞ்செள்ளை[416]. செள்ளை என்னும் சொல்லுக்குத் தாய் என்றும் பொருள் உண்டு. எனவே, அத்துவஞ்செள்ளை என்னும் பெயர் அந்துவனது தாய் என்னும் பொருளுடையதாக இருக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது. ஆயின், இளஞ்சேரல் இரும்பொறைக்கு அந்துவன் என்னும் பெயர் கொண்ட மகன் ஒருவன் இருந்தான் என்றும், அவன் தன் பெயரில் தாயைக் குறிப்பிட்டு வழங்கும் அளவுக்குப் பெரும் புகழுடன் விளங்கினான் எனவும் கொள்ள வேண்டிவரும். இந்த அந்துவன் பற்றிய செய்தி எதுவுமே கிடைக்கவில்லை.

இந்த அந்துவஞ்செள்ளையின் தந்தை மையூர்கிழான். மையூர் கிழான் என்பது மையூர் (மைசூர்) மக்களின் தலைவன் என்று கொள்ளக் கிடப்பது. இவன் இளஞ்சேரல் இரும்பொறைக்கு அதாவது, தன் மருமகனுக்கு அமைச்சனாகவும் விளங்கினான்.

தன் அமைச்சுப் பணியில் மையூர்கிழான் உண்மையைப் பெரிதும் போற்றிக் கடைப்பிடித்து ஒழுகி வந்தான்[417]. இவனை இளஞ்சேரல் இரும்பொறை நல்ல அறிவுரை கூறிக் குறுநிலத் தலைவனாக விளங்கும்படி செய்தான்.

தனக்குத் துணையாகக் குறுநிலத் தலைவனாக விளங்கும்படி இவனைச் செய்ய நன்கு அறிவுரை கூறப்பட்டது என்ற செய்தி இவன் முன்பு இளஞ்சேரல் இரும்பொறைக்கு எதிராக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது. எனவே, இளஞ்சேரல் இரும் பொறை இவனுக்குத் தக்க அறிவுரை கூறித் தனக்குத் துணையாகக் குறுநிலத் தலைவனாக ஆக்கிக் கொண்டான். இவனது தந்தை இவனது மகளை மணந்து கொண்டதன் வாயிலாக உறவை வலுப்படுத்திக் கொண்டான்.

மையூர்கிழானின் அமைச்சு இளஞ்சேரல் அரசாட்சியிலா, மையூர் அரசாட்சியிலா என்பது தெரியவில்லை. யாண்டையதாயினும் இவன் அமைச்சன் என்பது மட்டும் உறுதி. (எருமையூரன் வரலாற்றை ஈண்டு நினைவுகூர்தல் நலம்.)

நாடு

இளஞ்சேரல் இரும்பொறையின் மனைவி கொல்லிமலையில் மலர்ந்திருந்த காந்தள் மலரைச் சூடிக்கொண்டாள்[418]. நறவுத் துறைமுகப் பகுதியில் இவனது நாண்மகிழ் இருக்கை இருந்தது[419]. மகளிர் நீராடும் வானியாற்று நீரைக்காட்டிலும் இவன் இனிய தண்ணளி உடையவன்[420]. கொங்கர் கோ,[421] தொண்டியோர் பொருநன்,[422] மரந்தையோர் பொருநன்,[423] குட்டுவர் ஏறு,[424] பூழியர் மெய்ம்மறை,[425] பூழியர்கோ,[426] விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்து[427] என்றெல்லாம் கூறப்படும் இவனைப்பற்றிச் செய்திகள் கொல்லிமலைப்பகுதி, நறவுத் துறைமுகம், வானியாற்றுப்படுகை, கொங்கு நாட்டுப் பகுதி, தொண்டித் துறைமுகப்பகுதி, மாந்தைத் துறைமுகப்பகுதி, குட்ட நாட்டுப் பகுதி, பூழி நாட்டுப் பகுதி, கட்டூரைச் சூழ்ந்த பகுதி ஆகியவை இவனது நாட்டில் அடங்கியிருந்தது என்பதைப் புலப்படுத்தும். இந்தப் பரப்பளவு சேரநாட்டின் வடபகுதி என்று குறிப்பிடத்தக்கது.

விச்சிமலைப் போர்

இப்போது பச்சைமலை என வழங்கும் விச்சிமலைப் பகுதியை ஆண்டவன் 'விச்சிக்கோ'[428] எனப்பட்டான். இவன் அம்மலைப் பகுதியில் 'ஐந்தெயில்' என வழங்கப்பட்ட கோட்டையில் இருந்து கொண்டு அரசாண்டு வந்தான். இளஞ்சேரல் இரும்பொறை அந்தக் கோட்டையைத் தாக்கினான். விச்சி அரசனுக்கு உதவியாக இரண்டு அரசர்கள் சேர்ந்து கொண்டனர். அவர்கள் யார் எனத் தெரியவில்லை. பொதுவகையால் பாண்டியனும் சோழனும் சேரனுக்கு எதிராகப் போரிட்டனர் என்று கூறுவது வழக்கமாக இருந்துவருகிறது, போரில் 'ஐந்தெயில்' கோட்டை அழிந்தது. சேரன் வெற்றி பெற்றான். விச்சி அரசன் போரில் மாண்டான்.

பெருஞ்சோழன் வீழ்ச்சி

பெருஞ்சோழன்[429] என்பவன் கோப்பெருஞ்சோழன் என்று கொள்ளலாம். இவன் பொத்தியை[430] ஆண்டவன். இவனைச் சேரன் வஞ்சினம் கூறி வென்றான் என்று கூறப்படுகிறது. இவ்வாறு சேரன் இவன்மீது வஞ்சினம் கூறக் காரணம், இச்சோழன் விச்சிக்குத் துணையாக நின்றமையால் விளைத்திருக்கவேண்டும் என்று உய்த்துணரக்கிடக்கின்றது. சோழன் விச்சிக்குத் துணையாக இந்தச் சேரனை எதிர்த்து நின்றதை மேலே கண்டோம். பதிற்றுப்பத்துப் பாடலில்[431] இந்தச் சோழன் 'பெரும்பூண் சென்னியர் பெருமான்' என்று குறிப்பிடப்படுகிறான். போர் நடந்தபோது இந்தச் சோழனைத் தன்முன் கொண்டு வந்து நிறுத்துமாறு இளஞ்சேரல் இரும்பொறை தன் படைக்கு ஆணையிட்டான். படைவீரர்கள் முயன்றனர். சோழர் படையினர் அப்போது தம் வேல்களைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். இவ்வாறு ஓடியவர்களின் வேல், கபிலர் நன்றா என்னும் குன்றின் மீதேறிக் கண்ணிற் கண்ட ஊர்களையெல்லாம் பரிசாகப் பெற்றாரே அதனைக் காட்டிலும் அதிக எண்ணிக்கை உடையனவாம்.

பாண்டியன் மாறன் வீழ்ச்சி

'மாறன்' என்று பெயர் முடிவதைக்கொண்டு இளம்பழையன் மாறன், பாண்டியன் என்பது விளங்கும்[432]. இந்தப் பாண்டியன் வித்தை என்னும் ஊரை ஆண்டவன். சோழனை வென்றது போலவே இந்த மாறனையும் இளஞ்சேரல் இரும்பொறை வஞ்சினம் கூறிப் பேராடி வென்றான். எனவே, இவனும் விச்சிக்குத் துணை நின்றவன் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது.

முற்கூறியதுபோல விச்சி அரசன் போரில் மாண்டான். கோப்பெருஞ்சோழனும், இளம்பழையன் மாறனும் சிறைப் பிடிக்கப்பட்டனர். இவர்கள் வஞ்சி மூதூருக்குக் கொண்டுவரப் பட்டனர். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த சதுக்கப் பூதத்தை இவன் வஞ்சிக்குக் கொண்டுவந்து சாந்தி விழா நடத்தினான்.

(செங்குட்டுவன் வடநாட்டுக் கனக விசயரைச் சிறைப்படுத்திக் கொண்டுவந்தான். இவனோ தமிழ்நாட்டு வேந்தரைச் சிறைப் பிடித்துக் கொண்டுவந்தான். இருவரும் வஞ்சிக்குத்தான் கொண்டு வந்தனர். செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை அமைக்க இமயத்திலிருந்து கல் கொண்டுவந்தான். இளஞ்சேரல் இரும்பொறையோ காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த சதுக்கப் பூதத்தைக் கவர்ந்து சென்றான். இருவரும் விழா நடத்தினர். செங்குட்டுவன் சோழ பாண்டியரை அரவணைத்துக் கொண்டவன். இவனோ பகைத்துக் கொண்டவன்.)

இவனது போர்பற்றிப் பொதுவகையில் பல செய்திகள் தரப்படுகின்றன. இவன் வேற்று நாட்டின்மீது படையெடுத்துச் சென்று அங்குத் தங்கியிருந்தான்[433]. அப்போது அவன் யானைப் படையுடன் பாசறையில் தங்கினான்[434]. கொல்லக் கொல்லக் குறையாத தானையில் யானை, மா, மறவர், தேர், தோல் படைகள் இருந்தன[435]. இவன் பல நாடுகளை அழித்து அந்நாட்டுச் செல்வங்களைத் தன் நாட்டுக்கு கொண்டுவந்தான்[436]. இவனால் அழிக்கப்பட்ட கோட்டைகள் எண்ணற்றவை[437]. யானைக் காலில் மூங்கில் முளைகள் நசுங்கி அழிவதுபோல் இவனுக்குச் சினமூட்டியவர் நசுக்கப்பட்டனர்[438]. இவனது படைகள் அணிவகுத்துச் செல்வது கண்ணுக்கினிய காட்சியாயினும் பகைவர்க்கு அது இன்னாதது[439]. இவனது படையில் பலமொழி பேசும் மக்களும் வீரர்களாய் விளங்கினர்[440]. அவர்கள் பகைவர்களைக் காஞ்சியாக்கும் (நிலையாமையாக்கும்) பண்பினர்[441]. இவன் பாசறையில் தங்கியிருந்தபோது வேந்தர்கள் இரவு பகலாய்த் தூங்காமல் நடுங்கிக் கொண்டிருந்தனர்[442]. இவ்வாறு போர் வல்லமை உடையவனாக இவன் திகழ்ந்தான்.

கொடை

இவன் இசைவாணர்களைப் பேணிப் பாதுகாத்து வந்தான்[443]. இசைபாடும் பெண்களுக்கு அரிய நல்ல அணிகலன்களை அளித்துச் சிறப்பித்தான்[444]. வறுமையில் வாடியவர்களுக்கு அவர்களது துன்பம் நீங்கும் அளவுக்குக் கொடுத்தான்[445]. போர் வெற்றியில் கிடைத்த செல்வங்களையெல்லாம் வஞ்சி மூதூருக்குக் கொண்டு வந்து பிறர்க்கு உதவும் வகையில் நல்கினான்[446].

பெருங்குன்றூர்கிழார் இவன் போர்ப் பாசறையில் இருந்த போது கண்டு பாடினார்[447]. அவரது பாடலைப் போற்றி இளஞ்சேரல் இரும்பொறை 32 ஆயிரம் காணம் பணமாகக் கொடுத்தான். பெருங்குன்றூர்கிழாரின் பாடல்திறத்தைக் கண்டு, வியந்து போற்றாதவர்களுக்கு இந்தச் செல்வத்தை அளித்துப் புலவர் பிறரை வியக்கச் செய்ய வேண்டும் என்று கூறி அந்தச் செல்வத்தைக் கொடுத்தான்[448]. புலவர் இந்தப் பணத்தைப் பிறருக்குக் கொடுத்தபின் அவரது வாழ்க்கைக்கு உதவும் பொருட்டு ஊர்களும், வளமனைகளும், அவ்வீட்டில் வாழ்வதற்கு வேண்டிய பொருள் வளமும், வேளாண்மை செய்வதற்காக ஏர் வளமும், இன்பமாக வாழ்வதற்கு வேண்டிய பிற வசதிகளும், எண்ணிலடங்கா அணிகலச் செல்வமும் அவருக்குக் கொடுத்ததோடு அச்செல்வங்களையெல்லாம் முறையாக நிர்வகித்து உதவும் வகையில் ஏற்பாடும் செய்து கொடுத்தான்[449].

இளஞ்சேரல் இரும்பொறையே அன்றி அவனது நாட்டில் இருந்த செல்வர்களும் தம்மை நாடி வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளல்களாக விளங்கினர்[450].

குறிப்பிடத்தக்க செயல்கள்

இளஞ்சேரல் இரும்பொறையின் செயல்களில் குறிப்பிடத்தக்கவை சில உள்ளன. அவை வருமாறு:

சதுக்கப்பூதரை வஞ்சிக்குக் கொண்டுவரல்

பெருஞ்சதுக்கத்து அமர்ந்திருந்த பூதங்களைக் கொண்டுவந்து வஞ்சி நகரில் நிலை நாட்டினான்[451]. இவன் கொண்டுவந்தவை பூதச்சிலைகள் எனக் கொள்ளலாம். இவன் எங்கிருந்து இந்தப் பூதச்சிலைகளைக் கொண்டுவந்தான் என்பது தெரியவில்லை. எனினும் சோழனை வென்ற இவன் சோழ நாட்டுப் புகார் நகரிலிருந்த பூதச்சிலைகளைக் கவர்ந்து வந்தான் என்று உய்த்துணரப்படுகிறது. மணக்கிள்ளி என்ற சோழ அரசன் பீலிவளை காரணமாக இந்திரவிழாக் கொண்டாட மறந்ததனால், காவிரிப்பூம் பட்டினம் கடல்கோளுக்கு இரையானதற்கும், இவன் புகார் நகரத்துப் பூதச்சிலைகளைக் கவர்ந்து வந்ததற்கும்கூடத் தொடர்பிருக்க வாய்ப்பு உண்டு.

இவ்வாறு இளஞ்சேரல் இரும்பொறை நிலைநாட்டிய சிலைக்குச் சாந்தி வேள்வி செய்தான். சாந்தி வேள்வி என்பது நடுகல் விழாவாகும்.

மந்திர மரபில் தெய்வம் பேணல்

தெய்வ வழிபாடு தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவி வந்த வழக்கமே ஆகும். ஆனால், இந்த இளஞ்சேரல் இரும்பொறை மந்திரம் சொல்லிக் கடவுளை வழிபாடு செய்யும் புதிய வழக்கத்தை உண்டாக்கினான்[452]. மந்திரம் என்பது வடமொழி மந்திரம். சேர நாட்டில் இவனது காலத்திற்கு முன் அரசாண்ட இவனது முன்னோர்களில் சிலர் பார்ப்பார்க்கு உயர்வு தந்து வேள்வி செய்தார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே. எனினும், அவர்கள் பார்ப்பனரைக் கடவுளுக்கு மந்திரம் சொல்லும்படி செய்து தாம் பின்னின்று வழிபாடு செய்யவில்லை. இவன்தான் அந்த நிலையை முதன் முதலில் உண்டாக்கியவன் போலும்.

மந்திரம் என்பது வடமொழி மந்திரம் அன்று. திருமந்திரம் என்னும் வழக்கினைக் கொண்டு தமிழில் மந்திரம் இருந்தது என்றும், அதுபோன்ற தமிழ் மந்திரங்களைச் சொல்லிக் கடவுள் வழிபாடு செய்ய இவன் ஏற்பாடு செய்தான் என்றும் கொள்ளலாம். எப்படியாயினும் இவனது காலத்திலேதான் கோயிலில் மந்திரம் சொல்லும் வழக்கம் தோன்றியது என்றும், அதற்கு மக்கள் தம் விருப்பம்போல் தாமே கடவுளின் முன்பு நின்று தம் குறைகளைப் போக்க வேண்டிக் கொண்டனர் என்றும் கொள்ள வேண்டி வரும்.

எது எப்படி ஆயினும் இவன் காலத்தில்தான் வழிபடுவோன் சார்பில் மற்றொருவன் நின்று கடவுளை வேண்டும் இடைத்தரகு நிலை தோன்றியது என்று எண்ணும்படி வரலாற்றுச் சான்று அமைந்துள்ளது.

இன்னிசை முரசு

செங்குட்டுவனின் பாட்டன் உதியஞ்சேரல் 'இன்னிசை முரசின் உதியஞ்சேரல்' என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளான். அதுபோலவே, இவனும் 'இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறை' என்று குறிப்பிடப்பட்டுள்ளான். பொதுவாக மணமுரசு, மறமுரசு, கொடை முரசு என முரசு முழக்கத்தைப் பொருட்பயன் நோக்கிப் பகுத்துக் காட்டுவது வழக்கம். ஆனால், இங்குக் கூறப்பட்ட 'இன்னிசை முரசு'[453] என்னும் தொடர் இசைத்தன்மையை நோக்கி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. முத்தமிழில் ஒன்றாகிய இசையை, முரசு முழக்கி இசைவழிப் போற்றியதால் இவன் இவ்வாறு அழைக்கப்பட்டான்.

செங்கோலாட்சி

இவனது ஆட்சி 'மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல்' என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது[454]. இதனால் இவன் மக்களைப் போலவே பிற உயிரினங்களையும் மாண்புடன் காத்துச் செங்கோலோச்சி வந்தான் என்பது பெறப்படுகிறது. இவனது செங்கோலாட்சியால் நாட்டுவளம் பெருகிற்று என்றும் கூறப்படுகிறது.

தோற்றம்

இவன் குதிரைமேலும் யானைமேலும் உலாச் சென்ற காட்சி மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது.

மனைவியின் மாண்பு

ஒளிபொருந்திய நெற்றி, நீண்ட கண்கள், சீவிப்படிந்த கறு கறுத்த தலைமுடி, அழகே உருவான முகம், வண்டுகள் மொய்க்கும் கூந்தல், காதிலே குழை, கையிலே ஒளிரும் வளையல் முதலானவற்றுடன் இவனது மனைவி பொலிவுடன் விளங்கினாள். அவள் பெருந்தகைமைப் பண்பு உடையவள். அந்தப் பண்புக் கேற்ப அவளது வாயிலிருந்து வரும் மொழிகள் எப்போதுமே மென்மையானவையாய் விளங்கின. அதாவது, அரசி என்ற ஆணவச் சொற்கள் அவளது வாயிலிருந்து வரவில்லை. கொள்கையில் அடக்கமுள்ளவளாயும் கணவன் தன் அகவாழ்வில் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது தன் கடமையைச் செய்யும் ஆறிய கற்பு உடையவளாயும் அவள் விளங்கினாள்[455]. இவளது கற்பு (அருந்ததி) மீனொடு ஒப்பு வைத்து எண்ணக்கூடிய அளவுக்குச் சிறந்தது என்றும் கூறப்பட்டது. தெளிவான இவளது நற்பண்பின் புகழ் ஓங்கியிருந்தது[456].

இவளைச் சுற்றி ஆயத்தார் எப்போதும் இருந்தனர். அவர்கள் ஒளிமிக்க அணிகலன்களை மிகுதியாக அணிந்திருந்தனர். இவளும் மார்பில் சந்தனம், நெற்றியில் பொட்டு, பூமாலை, கச்சுப் போன்ற பூண்வகைகள், மணி பதித்த அணிகலன்கள் முதலானவற்றை அணிந்துகொண்டு பொலிவுடன் விளங்கினாள்.

பாவைபோல் அழகிய ஆயத்துப் பெண்களுக்கு நடுவே, ஓவியம்போல் சிறப்பாகக் கட்டப்பட்ட அந்தப்புர மாளிகையில் இவள் வாழ்ந்துவந்தாள்.

அந்துவன் கால்வழி அரசர்கள்
(திரண்ட நோக்கு)

அந்துவன் கால்வழியில் தோன்றி அரசாண்ட அரசர்கள் என்று தெளிவாக நமக்குத் தெரியவருபவர் நான்கு பேர். அவர்களது வரலாற்றைத் தனித்தனியே முன்பு கண்டோம். இனி, அவர்களது உறவு முறைகள், அவர்கள் ஆண்ட நாடு, அவர்கள் செய்த போர்கள். முதலானவற்றை ஒருங்கிணைத்து ஆய்வுக் கண்ணோட்டத்தில் நோக்க வேண்டும். அடுத்துத் தரப்பட்டுள்ள அட்டவணை அவர்களுடைய உறவு முறையைத் தெளிவாக்கும்.


அந்துவற்கு ஒரு தந்தை ஈன்ற மகன் பொறையன் பெருந்தேவி ஈன்ற மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன்
செல்வக்கடுங் கோவுக்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன் பெருஞ் சேரல் இரும் பொறை
குட்டுவன் இரும் பொறைக்கு மையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்ற மகன் இளஞ் சேரல் இரும் பொறை

இந்தப் பட்டியலில் வேளாவிக் கோமான் பதுமன் தேவியை அதாவது, பதுமனது மகளை செல்வக்கடுங்கோ மணந்தான் என்பதை அறிகிறோம். முன்பு உதியன் கால்வழி அரசர்களது வரலாற்றைத் திரட்டி நோக்கியபோது வேளாவிக்கோமான் பதுமன் தேவியை (அதாவது, பதுமனது மகளை) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மணந்தான் என்று அறிந்தோம். எனவே, பதுமனின் பெண்மக்கள் இருவரை முறையே நெடுஞ்சேரலாதனும் செல்வக் கடுங்கோ வாழியாதனும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது தெரியவருகிறது. இதனால் இவர்கள் இருவரும் சமகாலத்தவர் என்பது தெளிவாகும்.

முன்பு செங்குட்டுவனது காலத்தை அடிப்படையாகக் கொண்டு உதியன் கால்வழியில் தோன்றி அரசாண்ட அரசர்களது காலத்தை அட்டவணை விளக்கத்தில் வரையறுத்துக் கண்டோம். அந்த அட்டவணையில் இங்கு நாம் கண்ட அந்துவன் கால்வழியில் தோன்றிய அரசர்களது ஆட்சிக் காலமும் காட்டப்பட்டுள்ளது.

அங்கு நாம் வரையறுத்துக் கொண்டது போலவே ஒரு தலை முறைக்கும் மற்றொரு தலைமுறைக்கும் இடையிலுள்ள காலம் இருபத்தைந்து ஆண்டுகள் என்றும், அண்ணனுக்கும் தம்பிக்கும் அல்லது அக்காளுக்கும் தங்கைக்கும் இடையிலுள்ள காலம் ஐந்து ஆண்டுகள் என்றும் வைத்துக்கொண்டு இவர்களது காலத்தையும் விளக்கமாகக் காணலாம்.

உதியன் கால்வழி அரசர்களை மூத்த தலைமுறை என்றும், அந்துவன் கால்வழி அரசர்களை இளைய தலைமுறை என்றும் பொதுவாக அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, உதியன் கால்வழியைச் சார்ந்த நெடுஞ்சேரலாதனை மணந்தவள் அக்காள் என்றும், அந்துவன் கால்வழியைச் சார்ந்த செல்வக்கடுங்கோவை மணந்தவள் தங்கை என்றும் நாம் உய்த்துணருதல் பொருத்தமுடையதாகும். அக்காள் தங்கையருக்கிடையே ஐந்து ஆண்டு இடைவெளி என்னும் கோட் பாட்டை நாம் கொண்டிருப்பதால் அக்காளை மணந்த நெடுஞ்சேரலாதன் அரியணை ஏறியபின் தங்கையை மணந்த செல்வக்கடுங்கோ வாழியாதன் ஐந்து ஆண்டுகள் கழித்து அரியணை ஏறினான் என முடியும்.

நெடுஞ்சேரலாதன் கி. பி. 95-ல் அரியணை ஏறினான் என்று பார்த்தோம். எனவே, செல்வக்கடுங்கோ வாழியாதன் கி.பி. 100-ல் அரியணை ஏறினான் எனலாம். நம் கோட்பாட்டுப்படி செல்வக் கடுங்கோவின் தந்தை அந்துவன், அவனுக்கு 25 ஆண்டுகட்கு முன்பு (அதாவது, கி.பி. 75 - 100 ஆண்டுகள்) அரசாண்டான் எனத் தெரிய வரும். 25 ஆண்டுகள் அரசாண்டான் என்று பதிற்றுப்பத்துப் பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்வக்கடுங்கோ வாழியாதன் கி. பி. 100 - 125 கால இடைவெளியில் அரசாண்டான் எனவும், 17 ஆண்டுகள் அரசாண்ட பெருஞ்சேரல் கி. பி. 125 -142 ஆண்டு இடைவெளியில் அரசாண்டான் எனவும் நாம் கொள்ளலாம். பெருஞ்சேரல் ஆண்ட காலத்திற்கும் இளஞ்சேரல் ஆண்ட காலத்திற்கும் இடையிலுள்ள காலத்தில் இளஞ்சேரலின் தந்தையும் வேறு சிலரும் ஆண்டிருக்கக் கூடும். ஆதலால், இளஞ்சேரல் இரும்பொறை கி. பி. 150 - 171 (16 ண்டுகள்) இடைவெளியில் அரசாண்டான் என்பது தெரியவரும்.

இனி அவர்கள் ஆண்ட நாடு, போர் முதலியவற்றைத் திரட்டி நோக்கலாம்.


அரசன் ஆண்ட நாடு செய்த போர்

அந்துவன் (கொங்குக் கருவூர்) (முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி மதங்கொண்டயானைமீது இவனதுகருவூரில் நுழைதல்)

செல்வக் கடுங்கோ வாழியாதன் (கொங்குக் கருவூர் பூழி நாடு) நேரிமலைப் பகுதி, செருப்பு மலைப் பகுதி, நறவுத் துறை முகத்தைத் சூழ்ந்த நாடு, வில்லோர் (குதிரை மலைப் பகுதி) நாடு வேந்தர் செம்மாப்பைத் தொலைத்தான்.

பெருஞ்சேரல் இரும்பொறை (புகார் நாட்டில் வளர்ந்தான்) பூழி நாடு 1. கழுவுளின் காமூரைத் தீக் கிரையாக்கினான்.
2. அதிய மானோடு நீர்கூரில் போரிட்டுச் சோழரையும் பாண்டியரையும் உடன் வென்றான்.
3. எழினியோடு தகடூரில் போரிட்டு வென்றான்

இளஞ்சேரல் இரும்பொறை கொல்லிமலைப் பகுதி வானியாற்றுப்படுகை, நறவுத் துறைமுகப்பகுதி,கொங்கு நாடு, தொண்டித் துறைமுகப் பகுதி. குட்ட நாட்டுப் பகுதி, பூழிநாட்டுப்பகுதி, காட்டூரைச் சூழ்ந்த பகுதி. 1. விச்சியோடு போர்.
2. பெருஞ்சோழனோடு போர்.
3. இளம்பழையன் மாறனோடு போர்.

முன் கண்ட அட்டவணையில் ஒவ்வோர் அரசரும் ஆண்ட நாட்டுப் பகுதிகளையும் அவர்கள் பிற நாட்டு அரசர்களோடு நடத்திய போர்களையும் ஒப்புநோக்கி எண்ணிப் பார்க்கும்போது அந்துவன் கால்வழி அரசர்களின் செல்வாக்குப் படிப்படியாக உயர்ந்தும் தாழ்ந்தும் வந்திருப்பதை நாம் காண முடியும். அந்துவன் சேரல் இரும்பொறை கருவூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தவன் என்பது மட்டும் தெரிகிறது. இந்தக் கருவூர் கொங்கு நாட்டுக் கருவூர். கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் பெயர்கொண்ட அரசன் முதன்முதலாகக் கொங்குநாட்டுக் கருவூருக்கு வந்து சேரர் ஆட்சியை நிலைநாட்டினான் என்று அவனது பெயரால் தெரிகிறது (பிற சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ்க் காணலாம்). இந்தக் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையை அடுத்தோ சில தலைமுறைகளுக்குப் பின்போ அந்துவன் சேரல் அரியணை ஏறிக்கருவூரைச் சேர்ந்த ஒரு சிறு நாட்டுப் பகுதியை ஆண்டுவந்தான்.

இவன் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன் காலத்தில் நாடு பெரிதும் விரிவு உடையதாகக் காணப்படுகிறது. இவனுக்குப் பின் அரியணை ஏறிய பெருஞ்சேரல் இரும்பொறை காலத்தில் செல்வக்கடுங்கோவின் ஆட்சியின்கீழ் இருந்த நாட்டுப் பகுதிகள் சிலவற்றில் போர் மூண்டிருக்கிறது. எனவே, இவனுடைய நாட்டுப் பரப்புச் சற்றுக் குறைந்து போயிற்று எனத் தெரிகிறது.

இவனுக்குப் பிறகு இவனது மகன் இளஞ்சேரல் இரும்பொறை காலத்தில் முன்பு இல்லாத அளவுக்கு நாடு மிகப்பெரிய பரப்புடையதாக விளங்கி இருந்தது. இவனது பெரியப்பன் பெருஞ்சேரல் இரும்பொறை, அதியமானோடு கூட்டுச் சேர்ந்து தன்னை எதிர்த்த சோழரையும் பாண்டியரையும் வென்றான். இவனோ தனித்த முறையில் கோப்பெருஞ்சோழன் என்னும் சோழ அரசனோடும் இளம்பழையன் மாறன் என்னும் பாண்டிய அரசனோடும் போரிட்டு வெற்றி பெற்றிருக்கிறான். இந்த வகையில் இவனது நாடு மிகப்பரந்த எல்லையை உடையதாக விளங்குகிறது.

இளஞ்சேரல் இரும்பொறைக்குப் பின் நாடாண்ட சேர அரசன் யார் என்பது தெரியவில்லை. ஒருவேளை நமக்குக் கிடைக்காமல் போன 10ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் இவனுக்குப் பின் அரியணை ஏறி அரசாண்டிருக்கலாம். இவனை அடுத்துச் சேர நாடு சிதறுண்டு பல குறுநில மன்னர்களின் ஆட்சிக்குக் கீழோ சேர அரசர்கள் பலரது ஆட்சிக்குக்கீழோ வந்திருக்கலாம்.


2. பிற சேர அரசர்கள்

பல்வேறு புலவர்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் பாடிய பாடல்கள் நானூறு கொண்டது புறநானூறு. அவற்றுள் 267, 268 எண்ணுள்ள பாடல்கள் முற்றிலுமாகக் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள பாடல்கள் சிலவற்றில் சில அடிகள் கிடைக்கவில்லை. சில பாடல்களைப் பாடியவர் இன்னார் என்று தெரியவில்லை. சில பாடல்கள் யார்மீது பாடப்பட்டவை என்னும் குறிப்புச் சிதைந்து போயிற்று.

இந்த நானூறு பாடல்களையும் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை. தொகுத்தவர் ஒவ்வொரு பாடலுக்கும் சுருக்கக் குறிப்பு ஒன்று தந்துள்ளார். அக்குறிப்புகளை அறிஞர்கள் 'கொளு' என்று குறிப்பிடுகின்றனர். யாரை யார் பாடினார் என்னும் குறிப்பு அதில் சிறப்பிடம் பெறுகிறது. சில பாடல்களுக்குப் பாடப்பட்ட சூழலும் கூறப்பட்டுள்ளது.

சில அரசர்கள் பெயருக்கு இந்தக் கொளுக் குறிப்புச் செய்த தொகுப்பாசிரியர் மட்டுமே பொறுப்பாளி. எடுத்துக்காட்டாக ஒன்று குறிப்பிடலாம். சேரமான் மாரிவெண்கோ என்ற அரசன், சோழ அரசன் ஒருவனோடும் பாண்டிய அரசன் ஒருவனோடும் சேர்ந்திருந்த போது ஔவையார் பாடியதாகக் கொளுக் குறிப்பிடுகிறது. பாடலில் அவர்கள் பெயர் குறிப்பாலும் உணர்த்தப்படவில்லை. இதுபோன்ற குறிப்புத் தவறாகவும் இருக்கமுடியும் என்பதை 389 ஆம் எண்ணுள்ள பாடல் தெரிவிக்கின்றது. இந்தப் பாடலில் புலவர் தாம் பாடிவந்த அரசனிடம் (யார் என்று தெரியவில்லை) ஆதனுங்கன் போலப் பரிசில் தரவேண்டும் என்று வேண்டுவதைக் காண்கிறோம். பாடலில் கொளுக் குறிப்பு ஆதனுங்கனையே பாடியுள்ளதாகக் குறிப்பிட்டுவிட்டது. இது பொருந்தாக் கூற்று. இதுபோன்ற நிலைகள் இருப்பதால் கொளுக் குறிப்பினால் மட்டும் தெரியவரும் செய்திகளை அப்படியே முழுமையான உண்மைகள் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது.

பதிற்றுப்பத்துச் சேர அரசர்களைப்பற்றிய வரலாற்றில் அவர்களோடு தொடர்புடைய செய்திகள் பிற நூல்களில் எங்கு இருந்தாலும் உடன் எடுத்துக் கூறப்பட்டதுபோல் புறநானூற்றில் சிறப்பாகக் காணப்படும் அரசர்களின் வரலாற்றைக் காணும்போது பிற நூல்களில் கிடைக்கும் செய்திகளும் ஒருங்கு இணைத்துக் கொள்ளப்படுகின்றன.

சேரமான் வஞ்சன்

வாய்மொழி வஞ்சன்[457] என்னும் திருத்தாமனாரின் தொடரால் இவனைப்பற்றி அறிகிறோம்.

நாடு

அருவிகள் பாயும் மலை பாயல் மலை. அந்த மலைப்பகுதியைக் கொண்ட நாட்டுக்கு இவன் அரசனாக விளங்கினான்.

வீரம்

மக்களை மகிழ்விப்போராகிய கூத்தர், பாணர், புலவர்கள் இவனது ஊரில் நுழையலாமே அன்றி, இவனது பகைவர்களால் அவ்வூரை நெருங்கவும் முடியாது. பகைவர்களுக்கு அந்த ஊர் புலிக்கூட்டங்கள் தூங்கும் குகை போன்றது. கட்டுகளால் மாட்சிமைப்பட்ட கடி அரண் ஒன்றில் வாழ்ந்து வந்தான். இங்ஙனம் கூறப்படுவதால் கோட்டையது வலிமையும், இவனைச் சார்ந்தவர்களின் ஆற்றலும் பெறப்படும். இவனது வீரமும் உய்த்துணரப்படும்.

கொடைத்தன்மை

இவன் தன்னை நாடிவந்த புலவர்களுக்கெல்லாம் பரிசில் வழங்கினான். அதிலே ஒரு தனிச் சிறப்பாக இவன் வழங்கினான். பரிசில் பெற வந்தவர்களிடையே உயர்வு தாழ்வு காணாது முன் வந்தவர்களுக்கு முன்னும், பின் வந்தவர்களுக்குப் பின்னும் வரிசை முறைப்படி வழங்கினான்.

திருத்தாமனார் என்னும் புலவர் இவனைப் பாடிச் சென்றார். அவரை இவன் சிறப்பித்த பாங்கில் தனிச்சிறப்பு உண்டு. மான் கறி வறுவலும், கொக்கின் நகம்போலும் நெல்லரிசிச் சோறும் கொடுத்து விருந்து படைத்தல் வியப்பன்று. தூசி படிந்த அவரது கிழிந்த உடையை நீக்கிவிட்டுப் புத்தாடை உடுத்தது வியப்பன்று. இவன் தன் உடையின்மேல் பகட்டுக்காக ஓர் உயர்ந்த ஆடை அணிவது வழக்கம். புகை விரிந்தாற்போல் பொங்கித் தோன்றும் பட்டாடை அது. இவனுக்கே உரித்தான ஒரே ஓர் ஒப்புயர்வற்ற ஆடை அது. அந்த ஆடையை இவன் புலவர்க்கு அணிந்து மகிழ்ந்தான்.

ஒப்புநோக்கம்

அதியமான் தனக்கு எதிர்பாராமல் கிடைத்த நாவல்கனியை அவ்வைக்கு ஈந்து மகிழ்ந்தான். வஞ்சனோ தன்னிடம் இருந்ததையே புலவர்க்கு அளித்து மகிழ்ந்தான்.

பண்பு நலம்

இவன் எப்போதும் சொன்ன சொல் தவறியதில்லை. கோசர்கள் 'வாய்மொழிக் கோசர்' எனச் சிறப்பிக்கப்படுகின்றனர். அவர்கள் வாய் மொழிக்கும் இவனது வாய்மொழிக்கும் வேறுபாடு உண்டு. கோசர்கள் போரில் வஞ்சினம் கூறுவர். கூறிய மொழி பொய் போகாது சூழ்ச்சி செய்தேனும் செயலை நிறைவேற்றிக் கொள்வர். இந்தவகையில் அவர்களது வாய்மொழி வஞ்சின வாய்மொழியாகும். வஞ்சன் வாய் மொழியோ கொடையில் வாய் மொழி. தருவதாகக் கூறி, கூறிய சொல் தவறாமல் நல்குவான். பிறர் புகழ்ந்து கூறினும் அவர்கள் மொழி பொய்போகாதவாறு வழங்குவான். இதுவே இவன் பண்பாகும்; தெய்வ நம்பிக்கை மிக்கவன்; இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் வல்லவன்; எவராலும் வெல்ல இயலாத வீரத்தையுடையவன்.

தோற்றப் பொலிவு

இவன் மார்பு மலை போன்றதாகும். அதில் அரவு போன்ற ஆரம் உள்ளது. அதில் வையகம் விளங்கும் மணிக்கல் பதித்துள்ளது. இந்தக் கோலத்தில் அவனது மேனியே ஒரு பூவாகப் பூத்திருந்தது.

வஞ்சமன் கூடல்

இவன் காலத்தில் கொங்குநாட்டைச் சேர்ந்த கரூர், சேரர்க்குச் சேர்ந்திருந்தது. கரூருக்கு எட்டுக் கி. மீ. தொலைவில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற வெஞ்சமக் கூடல் என்னும் சிவதலத்தைக் கருங் கற்களால் கட்டினான். அவ்வூர் அவனது பெயரால் வழங்கி வந்தது. வஞ்சமன் கூடல் என்பது பேச்சு வழக்கில் வஞ்சமாங்கூடல் - வெஞ்ச மாங்கூடல் என மருவி வழங்கப்படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்தைப் பற்றித் தேவாரம் பாடியுள்ளார். அப்பாடலைப் பார்த்தால் சேரமான் வஞ்சன் காலத்தில் அவ்வூர் சிறப்புற்று விளங்கியது என்பது தெரிகின்றது. அவ்வூர் சிற்றாற்றின் கீழக்கரையில் உள்ளது.

சேரமான் மாரிவெண்கோ

சேரமான் மாரிவெண்கோ,[458] சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய சேர, சோழ, பாண்டிய அரசர்கள் ஓரிடத்தில் மகிழ்ந்து நட்புறவோடு கூடியிருந்ததாகக் கொளுக் குறிப்பிடுகிறது. பாடலில் 'கொடித் தேர் வேந்தர்' என்று விளித்து அவ்வையார் அறிவுரை கூறியுள்ளார். அவர்கள் 'முத்தீ'ப்போல் இருந்ததாக அவர் குறிப்பிடுவதால் மூன்று அரசர்கள் என்பதும் உறுதியாகிறது. மூன்று அரசர்கள் இன்னார் என்று கொள்வதற்குப் பாடலில் சான்று இல்லை.

பார்ப்பார்க்கும் இரவலர்களுக்கும் கொடை வழங்க வேண்டும் என்றும், மகளிரோடு மதுவருந்தித் திளைத்து வாழ வேண்டுமென்றும் அந்த மூவரையும் அவ்வையார் வாழ்த்துகிறார்.

மூவேந்தர் கூட்டாட்சி

சமயத்திற்கேற்றாற்போல் மூவேந்தர்களில் இருவர் ஒன்று சேர்ந்துகொண்டு மற்றொருவனை எதிர்த்து நிற்றல் சங்ககால வரலாற்றில் பொது நிகழ்ச்சி. ஆனால், மூன்று அரசர்களும் உணர்வால் ஒன்றி உடலால் நெருங்கியிருந்து தமிழ்நாடு முழுவதையும் ஒருமைப்பாட்டு உணர்வுடன் ஆளமுனைந்தது இவன் காலத்தில் தான். இந்த நிகழ்ச்சி தமிழக வரலாற்றில் கிடைக்கும் சான்றுகளில் முதல் அரசியல் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சியாகத் திகழ்கிறது.

சேரமான் பெருஞ்சேரலாதன்

சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும்[459] கரிகால் பெருவளத்தானுக்கும் போர்மூண்டது. போர், வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்றது. இது சோழனுடைய ஊர்[460]. எனவே, இந்தச் சேர அரசன் படையெடுத்துத் தாக்கினான் எனத் தெரிகிறது. போரில் கரிகால் வளவன் வெற்றி பெற்றான். எனினும், முடிவு எல்லா மக்களுடைய உள்ளத்தையும் உருக்கும் அவலமாக முடிந்தது.

போர்க்களத்தில் இரண்டு அரசர்களும் நேருக்குநேர் நின்று போரிட்டனர். கரிகாலன் வலிமையுடன் வேல் வீசினான். அந்த வேல் சேரலாதனின் மார்பில் பாய்ந்து முதுகில் கழன்றோடி விட்டது. இதனால் தன் முதுகில் காயம்பட்டதை அறிந்த சேரலாதன் போரிடுவதை நிறுத்திவிட்டான். போர்க்களத்திலேயே வடக்குத் திசையை நோக்கி அமர்ந்து உயிர்துறந்தான்.

தமிழர்கள் மார்பில் படும் காயம் ஒவ்வொன்றையும் தமக்குக் கிடைத்த பேறு என்று கருதுவர்[461]. முதுகில் எதிர்பாராது காயம் பட்டாலும் அப் புண் தம்மைப் புறமுதுகு காட்டியவர் என்று சிலரையேனும் எண்ணத்தூண்டும் என்று எண்ணி அப்புண்ணை ஆற்றிக்கொள்ளாமலேயே மாய்வர். நெடுஞ்சேரலாதன் தன் முதுகில் பட்ட புண் தானே ஆறித் தான் பிழைத்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணிப் போர்க்களத்திலேயே வடக்கிருந்தான். புறப்புண்ணோடு தன் நாட்டுக்குச் செல்ல விரும்பாமல் போர்க்களத்திலேயே வடக்கிருந்தான். தன் மானத்திற்கு இழிவு நேர்ந்த அப்பொழுதிருந்தே தன் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாய்த்துக் கொண்டான். வடக்கிருத்தல் என்பது வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாமல் உயிர் துறப்பது. தன் வாளைத் தனக்கு எதிரே ஊன்றி வைத்துவிட்டு வடக்கிருக்கும் பழக்கத்தால் அது 'வாள் வடக்கிருத்தல்'[462] எனப்பட்டது.

மக்கள் அவலம்

எந்த இசைக்கருவியும் முழங்கவில்லை; வீரர்கள் கள் உண்ண வில்லை; உறவினர்கள் தேறல் அருந்தவில்லை; உழவர்கள் தம் கடமை ஆற்றும்போது சோர்வை மறைக்க எழுப்பும் ஓசையை எழுப்பவில்லை; ஊர்களிலே மகிழ்ச்சி நடமாட்டம் இல்லை. இவ்வாறு எங்கும் அவலம். சேரனுக்காகச் சோழ நாட்டிலேயே இத்தகைய அவலம். படையெடுத்துத் தாக்கிய பகைவன் சாகிறான் என்பதில்கூட அவலம். இது சோழநாட்டு மக்கள் நிலை[463].

சான்றோர் அவலம்

சேரலாதன் நிலைமைபற்றிய செய்தி சான்றோரிடையே பரவியது. கேட்ட சான்றோர் ஆங்காங்கே தாமும் வடக்கிருந்தனர்; உயிர் துறந்தனர்[464].

புலவர் கருத்து

இவன் இறந்துவிட்டபின் ஞாயிறு தோன்றிப் பயன் இல்லை; பகலும் இரவுதான்[465]. இவ்வாறு கூறுகிறார் கழாத்தலையார்.

வெண்ணிக் குயத்தியார், வென்ற கரிகாலனிடம் கூறுகிறார்:[466] 'வென்ற சோழனுக்கு வெற்றிப் புகழ், தோற்ற சேரனுக்கோ வீரப் புகழ். வெற்றிப் புகழைக் காட்டிலும் வீரப் புகழ் நல்லதாம்.'

இவ்வாறெல்லாம் பெருஞ்சேரலாதனின்மீது அதாவது, படை யெடுத்துத் தாக்கியவன்மீது எல்லாருக்கும் இரக்கம் தோன்றக் காரணம் என்ன? கரிகாலன் செய்த கொடுமை. பகைவன் மார்பில் வேலைப் பாய்ச்சியது கொடுமையா? இல்லை. அது அவன் கடமை. பின் என்ன? அவன் வலிமையிலே சோர்வு. மார்பில் பாய்ந்து முதுகில் வெளிவரும்படி எய்த அவனது பெருவலிமையிலா சோர்வு? இல்லை இல்லை. பகைவனுக்குப் போரிட வாய்ப்பு நல்குவது தமிழர் போர்த்துறைகளிலே தலைமையான பண்பு. படைக்கலம் இல்லாதவனோடு படைக்கலம் தந்து போரிடுவான். இறுதித் தாக்குதலில் அன்றி எடுத்த எடுப்பிலேயே திடீரென்று கொன்றுவிடமாட்டான். கரிகாலன் செய்த பிழை அதுதான். எடுத்த எடுப்பிலேயே முதல் வீச்சிலேயே அரசரை வீழ்த்திவிட்டான். இந்த நிகழ்ச்சியைக் கொடிய சூழ்ச்சி. மோசமான சூழ்ச்சி என்று எல்லோரும் கருதினர். கரிகால் வளவன் இளைஞன். அவனிடம் சூழ்ச்சி இல்லை. ஏதோ இளமைத் துடுக்கு நிகழ்ந்துவிட்டது. அரசன் செயலை மக்கள் உள்ளம் ஏற்றுக்கொள்ளவில்லை; குறைகூறவும் இடமில்லை; விளைவு, பகைவன்மீது இரக்க உணர்வு; மரியாதை நிகழ்ச்சி. நாட்டுத் தலைவர்களை இழக்கும்போது இப்போது நாம் துக்கம் கொண்டாடுவதில்லையா? அதுபோல அன்று மக்கள் துக்கம் கொண்டாடினர். பகைவன் இறந்ததற்காகத் துக்கம் கொண்டாடினர்.

கொல்லிமலைத் தலைவன் ஓரியைக் காரி கொன்றான். அப்போது ஓரிக்காக அவன் நாட்டுமக்கள் துக்கம் கொண்டாடினார்கள்.

ஒல்லையூர் நாட்டில் பெருஞ்சாத்தன் மாய்ந்தான். அப்போது அவனால் நலமடைந்தோர் துக்கம் கொண்டாடினார்கள். இந்தத் துக்க நிகழ்ச்சிகளையெல்லாம் விஞ்சிய துக்க நிகழ்ச்சி பெருஞ்சேரலாதனுக்காகக் கொண்டாடப்பட்ட துக்க நிகழ்ச்சி.

ஞாயிறும் திங்களும்

நிறைமதிநாள் மாலை நேரத்தில் ஒரு சுடர் மறைகிறது. ஒரு சுடர் எழுகிறது. சேரலாதன் மறைகிறான்; கரிகால் வளவன் எழுகிறான். ஆற்றல் மிக்க ஞாயிறு சேரலாதன். ஒளிமிக்க திங்கள் கரிகால் வளவன்[467]. இந்த உவமையால் பெறப்படுவது என்ன? வெண்ணிக்குயத்தியார் கூறுவதுபோல்[468] சேரன் சோழனைக் காட்டிலும் நல்லவன்; வல்லவன்.

வேறு பெயர்

'சேரமான் பெருந்தோளாதன்' என்னும் பெயரும் இவனுக்கு வழங்கிவந்ததாகத் தெரிகிறது[469].

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்[470]

நாட்டுப் பரப்பு

வங்காளக் குடாக்கடலும் அரபிக்கடலும் இவனுடைய கடல்கள் என்று சொல்லும்படி இவனது நாட்டுப் பரப்பு தமிழகத்தின் தென்பகுதி முழுவதும் பரவியிருந்தது.

வானவரம்பன்

இவனே வானவரம்பன் என்னும் சிறப்புப் பெயரை முதன் முதலில் பெற்றவன் என்று தெரிகிறது. ஞாயிறு இவனது கீழைக்கடலில் தோன்றி இவனது மேலைக்கடலில் மறைந்தது என்று சான்று கூறுகிறது. வடக்கில் இருந்த நாடுகள் இவனைப் புகழ்ந்து கொண்டிருந்தமையால் ஒரு வகையில் இவனுக்கு அடங்கியவை. தென்புறம் கடலாகும். எனவே, இவனது நாட்டுக்கு எந்த வகையில் வரம்பு (எல்லை) கூறுவது. மேலே உள்ள வானத்தைக் கூறுவதைத்தவிர வேறுவழியில்லை. எனவே, 'வானவரம்பன்' என்று இவனைப் பலரும் சிறப்பித்துக் கூறி மகிழ்ந்தனர்.

இந்தப் புகழ்ச்சிகளைப் பொருள் நுட்பத்தோடு கேட்டறிந்த முரஞ்சியூர் முடிநாகராயர் அவனை நேரில் கண்டபோது அதே சிறப்புகளைப் பெருமிதத்தோடு வியப்பும் மகிழ்வும் தோன்றக் கூறி மகிழ்ந்தார்.

போரும் சோறும்

ஐவருக்கும் நூற்றுவருக்கும் போர் நடந்தது. ஐவர் என்பவர் பஞ்சபாண்டவர். நூற்றுவர் என்பவர் துரியோதனன் முதலானோர். இருவருக்கும் நடந்த போர் பாரதப்போர். இப்போரில் ஈடுபட்டவர்களுக்கெல்லாம் இவன் சோறு வழங்கினான்; பெருஞ்சோற்றுவிழா நடத்திச் சிறப்பாக வழங்கினான்; நண்பர், பகைவர் என்று வரையறுத்துக் கொள்ளாது (வரையாது) எல்லோருக்கும் வழங்கினான்.

பாண்டியரில் பஞ்சவர், கௌரியர் என்போர் கிளைக் குடியினர் ஆவர். இந்தக் கிளைக்குடியினர்க்கிடையே போர் நடந்தபோது இவன் இவ்வாறு நடந்துகொண்டான் என்று அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி கருதுகிறார். 'பொலம்பூண் ஐவர்'[471] எனச் சங்கப் பாடல் குறிப்பொன்று கூறுகிறது. அது பாண்டியரைக் குறிப்பிடுகிறது. எனவே, பாண்டியரும் ஐவர் எனத் தெரிகின்றது. நூற்றுவர் என்பார், ஈரைம்பதின்மரைக் கொள்ளலாம். எனவே, இது கௌரியர் என்னும் துரியோதனன் முதலானோரைக் குறிக்காமல் பாண்டியரில் ஒரு குடியினராகிய 'கவுரியரை' குறிப்பிட்டிருக்கலாம். பாண்டிய நாட்டில் உள்நாட்டுப் போர் நிகழ்ந்தபோது இவன் இரு படைக்கும் உணவு வழங்கியிருக்கலாம் என்று கருதவும் வாய்ப்புண்டு.

பண்புநலன்

பகைவர் செயல்களைப் பொறுத்துக்கொள்வதில் இவன் நிலம் போன்றவன்; சூழ்ச்சித்திறன் அகலத்தால் வானத்தைப் போன்றவன்; வலிமையில் காற்றைப் போன்றவன்; பகைவரை அழிப்பதில் தீப் போன்றவன்; கொடையில் நீரைப் போன்றவன்.

சுற்றம்

பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், வேதநெறி திரிந்தாலும் இவனோடு உறவில் திரியாத தன்மை உடையது இவனது சுற்றம்.

இத்தகைய சுற்றத்துடன் இமயமலையும் பொதியமலையும் போல அசைவின்றி வாழவேண்டும் என்று இவன் வாழ்த்தப்படுகிறான். ஆட்சிப்பரப்பு பொதியத்திலும், புகழ்ப்பரப்பு இமயத்திலும் விளங்கியமை நோக்கி இவன் இவ்வாறு வாழ்த்தப்படுகிறான்.

உதியஞ்சேரல், சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்
இருவரும் வெவ்வேறு அரசர்கள்

உதியஞ்சேரல் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்

1. செங்குட்டுவனுக்குப் பாட்டன் பாரதப்போர் நடந்த காலத்தவன். கால்வழி தெரியவில்லை.
2. பேய்க்கு பெருஞ்சோறு அளித்தான். வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தான்.
3. பாடிய புலவர் கடைச்சங்ககாலத்தவர் பாடிய புலவர் தலைச்சங்கக் காலத்தவர் (களவியல் உரை).
4. பகைவர்களை வென்றான் பகைவர்க்கும் நண்பர்க்கும் நடு நிலையாளனாய் விளங்கினான்.

இளங்கோ கருத்து[472]

இவன் சேர அரசன். பாரதப்போரில் சோறு அளித்தான். சேரர் குடியில் சேரன், பொறையன், மலையன் என்னும் பெயருடன் வரும் கிளைக் குடிகள் உண்டு. அந்தக் குடிகளில் இவன் எந்தக் குடியைச் சேர்ந்தவனானாலும் இவன் சேரர் குடியினன், இவனால் சேரர் குடிக்கே பெருமை.

பெயர் ஒப்புமை, வள்ளன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இருவரையும் ஒருவர் என்று கூறுகின்றார். இந்த ஒப்புமை மேம் போக்கானது. ஆழ்ந்த நோக்கில் வேற்றுமைகளே மிகுதி. எனவே, இருவேறு அரசர்கள் என்று கொள்வதே சரியானது.

பாரதப்போரே கட்டுக்கதை என்பது சிலர் துணிபு. இஃது உண்மையாயின், இவன் அப்படையினருக்கு உணவு கொடுத்தான் என்று கூறுவது வரம்பிகழ்ந்த புகழ்ச்சி. பாரதப் போர் நிகழ்ந்தது உண்மையாயின், இவன் அப்படையினர்க்குச் சோறு வழங்கியதும் உண்மை.

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள்
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை

இந்த அரசனின் பெயரைப் புறநானூற்றுக் கொளுக் குறிப்பிடுகிறது[473]. பாடலில் பெயர் இல்லை.

நாடு

இவன் கானக நாடன் என்றும் பாடலில் குறிப்பிடப்படுகிறான். எருமை போன்ற கருங்கற்களுக்கிடையில் ஆடுமாடுகள் மேய்வது போல யானைகள் மேயும் கானக நாடு அந்த நாடு என்று பாடல் கூறுகிறது. உம்பல் என்னும் சொல்லுக்கு யானை என்பது பொருள். உம்பற் காட்டில் (இக்காலத்து ஆனைமலைப் பகுதி) யானைகள் மிகுதி. பாடல் குறிப்பால் இவன் தொடக்கக் காலத்தில் ஆனைமலைப் பகுதியில் அரசாண்டு கொண்டிருந்தான் என்று கருதலாம்.

கொங்கு நாட்டில் ஒரு கருவூர் உண்டு. இவ்வூர் சேரநாட்டுக் கருவூர் நினைவாகப் பெயர் சூட்டப்பெற்றது என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்து. காவிரிக் கரையிலுள்ள முசிறியும் தாராபுரத்திற்கு வழங்கிவந்த வஞ்சி என்னும் பெயரும் இந்த முறையில் சேரர்களால் நினைவுச் சின்னப் பெயர்களாக வழங்கப்பட்டவை.

உம்பற்காட்டில் ஆட்சி செய்துகொண்டிருந்த கோப்பெருஞ்சேரல் இரும்பொறை இந்தக் கொங்குநாட்டுக் கருவூருக்கு வந்து அரியணையேறி அரசு புரியலானான். ஒருவேளை இவனே இக்கருவூர் வந்து ஆளத்தொடங்கிய முதல் சேர அரசனாக இருக்கலாம். ஆனதுபற்றி இவனுக்குக் 'கருவூர் ஏறிய' என்னும் சிறப்பு அடைமொழி கொடுக்கப் பட்டிருக்கலாம். இந்தச் சிறப்பு அடைமொழியில் 'ஒள்வாள்' என்னும் அடைமொழியும் உள்ளது. இந்த அடைமொழி இவன் வாட்போரில் கொங்குநாட்டில் பெற்ற வெற்றியைக் குறிப்பதாக இருக்கலாம்.

நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் இவனைக் கண்டு பாடினார். அன்பும் அருளும் இல்லாதவர்களோடு சேராமல் நாட்டைக் குழந்தையைப்போல் பேணி வளர்க்கவேண்டும் என்று அவனுக்கு அறிவுரை கூறினார். இஃது அவன் புதிதாகக் கைப்பற்றிய நாட்டில் நடந்துகொள்ளவேண்டிய முறையைக் கூறியதாகக் கொள்வது பொருத்தம்.

புறநானூற்றுப் பாடலில் கொளுக் குறிப்பு ஒரு கதையை உருவாக்கியுள்ளது.

இந்தப் புலவரின் தலை, பிணம் தின்னும் நரிகளே வெருண்டு ஓடும்படி அமைந்திருந்தது. இந்த நிலை அவருக்கு ஒரு சாபக் கேட்டால் அமைந்தது. சாபம் கொடுத்தவர் அவருக்குச் சாப விடுதியும் குறிப்பிட்டிருந்தார். சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறையைக் கண்டபோது சாபக்கேடு நீங்கிப் புலவர் தம் உடம்பு மீண்டும் கைவரப் பெறுவார் என்பது அந்தச் சாப விடுதி. புலவர் அவ்வாறே கண்டார். தம் உடம்பு கைவரப் பெற்றார். கண்டவன் இன்னான் என உணர்ந்து பாடினார். இந்தக் கதைக்குக் கொளு இடமளிக்கிறது; பாடலில் இடமில்லை. நிகழக்கூடிய நிகழ்ச்சியும் அன்று.

புலவரின் பெயர் நரிவெரூஉத்தலையார் என்று குறிப்பிடப் படுகிறது. இவர் தமது பாடல் ஒன்றில் 'நரைமுதிர் திரை' என்று பாடியுள்ளார்.[474] 'அணில் ஆடு முன்றி'லைப் பாடியவர் அணிலாடு முன்றிலார் என்றும், 'செம்புலப் பெயல் நீர் போல' என்று பாடியவர் செம்புலப் பெயல் நீரார் என்றும் பெயர் பெற்றிருப்பது போல், 'நரைமுதிர் திரை' என்று பாடியுள்ள இவர் நரைமுதிர் திரையார் என்று பெயர் பெற்றிருக்கலாம். இந்தப் பெயர் நாளடைவில் மருவி நரிவெரூ உத்தலையார் என்று அமைந்திருக்கலாம்.

முதன் முதலில் கருவூருக்கு வந்த சேர அரசனாக இவன் இருப்பதால் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் அந்துவஞ்சேரலுக்கும் இவன் காலத்தால் முற்பட்டவன் என்று ஆகிறது. எனவே, புறநானூறு தொகுக்கப்பட்ட காலத்திற்கும் இவன் காலத்திற்கும் இடைவெளியாக ஐந்தாறு தலைமுறைகளேனும் இருக்க வேண்டும். இந்த நிலையில் பெயரின் திரிபு வழக்கு இயல்பே. திரிபு வழக்கால் எழுந்த கற்பனைக் கருத்து மிகுதி. இதில் ஓரளவு உண்மை இருக்குமானால் அஃது இந்த அரசனைக் கண்ட மகிழ்ச்சியால் புலவர்க்குத் தோன்றிய புத்துணர்வை உணர்த்துவதாய் இருக்கும்.

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ[475]

நாடு

தண்பொருநை ஆறு பாயும் விறல் வஞ்சி நகர்க்கு இவன் வேந்தன்[476]. இப்போதுள்ள தாராபுரம், வஞ்சி என்னும் பெயர் பெற்றிருந்தது. அந்தப் பகுதியில் இருந்துகொண்டு இவன் அரசாண்டான் எனத் தெரிகிறது.

வெற்றிகள்

இவன் கோட்டைகள் பலவற்றைக் கடந்தான்[477]. அக்கோட்டையிலிருந்த வலிமைமிக்க வீரர்களைப் புறங்கண்டான். எந்தக் கோட்டையை வென்றான் என்பது தெரியவில்லை.

கொடை

இவன் தன் வெற்றி மகிழ்ச்சியில் பாணர்களுக்குப் பொன்னால் தாமரைப் பூக்கள் செய்து வெள்ளி நாரால் தொடுத்துப் பரிசில்களாக வழங்கினான். இவனது வெற்றிப் புகழை அதாவது, மறப்புகழைப் பாடிய பாடினிக்குக் கழஞ்சு எடை கொண்ட பொன் இழைகள் செய்து வழங்கினான்.

புலமை நலம்

இவன் பாலைத் திணையைச் சிறப்பித்துப் பாடுவதில் வல்லவன். இவனது பாடல்களில் ஒன்று மட்டும் மருதம்[478]. பிற யாவும் பாலைத் திணை மேலன.

பாடல்களில் உவமை நயங்களும் பிற நயங்களும் மிகுதி. எடுத்துக்காட்டாக ஒன்றைக் காணலாம்.

வேனில் காலத்தில் மரங்கள் தழைத்திருப்பதை இவன் கூறுகிறான். சோம்பல் இல்லாதவனிடம் செல்வம் தழைப்பதுபோல் மரங்கள் தழைக்கின்றன. அவனது செல்வத்தின் பயனைப் பலரும் துய்ப்பதுபோல் மரக்கொம்புகளில் வண்டுகள் படிந்து உண்கின்றன. சில மரங்கள் மாயவளின் மேனிபோல் கரும் பச்சையான தளிர்களை ஈனுகின்றன. அவள் மேனியிலே சுணங்கு இருப்பதுபோன்று அத்தளிர்களின்மீது பூந்தாதுகள் உதிர்ந்துள்ளன[479].

கல்வெட்டுச் சான்று

கருவூரை அடுத்த புகழூரில் சங்ககாலத்துக் கல்வெட்டு உள்ளது. தாமிழி எழுத்துகளாலான அக்கல்வெட்டில் 'கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ' என்னும் குறிப்பு வருகிறது. இந்தக் குறிப்பு நம் பாலை பாடிய பெருங் கடுங்கோவையே குறிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆயின், இவனது தந்தையின் பெயர் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று முடியும்.

செல்வக்கடுங்கோ வாழியாதனுக்குப் பெருஞ்சேரலிரும்பொறை, குட்டுவன் இரும்பொறை என்னும் பெயரைக் கொண்ட இரண்டு ஆண் மக்கள் இருந்தனர் என்பதை முன்பே கண்டோம். இந்தச் செய்திகள் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர் என்னும் நிலையை உண்டாக்கும். இவனுக்கு இரண்டு பிள்ளைகள்தாம் இருந்தனர் என்று பாடல் ஒன்று கூறுகிறது[480]. எனவே, மூவர் என்று கூறுவது பொருந்தாது. குட்டுவன் இரும்பொறை என்னும் பெயர் நம் பாலை பாடிய பெருங்கடுங்கோவுக்கு வழங்கப்பட்ட பெயராக இருக்கலாம். இவன் தானே புலவனாக விளங்கியதனால் இவன்மீது வேறு ஒரு புலவர் பதிற்றுப்பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பிக்கவில்லை போலும்.

புகழூர்க் கல்வெட்டு பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ என்று குறிப்பிடுகிறது. பதிற்றுப்பத்துப் பதிகம் குட்டுவன் என்பவனின் மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்று குறிப்பிடுகிறது. இந்தச் செய்திகளும் ஒன்றோடொன்று தொடர்பு உள்ளவைபோல் காணப்படுகின்றன. பொறையன், கடுங்கோ ஆகிய பெயர்கள் ஒரே அரசனுக்கு வழங்கிய நிலையும் உண்டு என்பதை 'மாந்தரம் பொறையன் கடுங்கோ' என்பவனது வரலாற்றில் காணலாம்.

இந்தச் செய்திகளையெல்லாம் திரட்டி நோக்கி இந்தப் பாலை பாடிய பெருங்கடுங்கோவை ஒன்பதாம் பதிற்றுப்பத்துத் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தை என்றும் கருதலாம்.

சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை

நாடு

குடநாட்டிலிருந்து ஆட்சி செய்துகொண்டிருந்தவன் இவன் என்பது இவனது பெயரிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.

போர்

இடிபோன்று போர்முரசு முழங்கப் பெரும்படையுடன் படையெடுத்துச் சென்று, எதிர்த்த அரசர்கள் அழியும்படி வெற்றி கொள்ளும் வல்லமை பெற்றவன் இவன்[481]. ஒருமுறை இவன் பகை அரசனை அழித்தபோது பகைவர்கள் கையற்று வருந்தினர்[482]. இந்தச் செய்திகள் ஏதோ எல்லோரையும் பொதுப்படக் கூறுவது போல் கூறப்பட்ட செய்திகளாக உள்ளன. சிறப்பாக இவனது போரைப்பற்றிக் குறிப்பிட ஒன்றுமில்லை.

கொடை

பெருங்குன்றூர்கிழார் இவனிடம் பரிசில் பெற வந்தார்; வள்ளல் என்று இவனைப் புகழ்ந்து பாடினார். தாயிடம் பால் இல்லாமையால் பாலுண்ண மறந்த தன் குழந்தையின் நிலையைக் கூறித் தன் வறுமை நிலைமையையும், பக்கத்து வீடுகளுக்குச் சென்றேனும் உண்டு வாழும் எலிகூட உணவின்றிச் செத்து மடிந்துள்ள தன் வீட்டுச் சுவரைக் கூறித் தன்னைச் சூழ்ந்துள்ள வறுமையையும் கூறிப் பரிசில் நல்குமாறு வேண்டினார். அவன் முதல் நாள் பரிசிற் பொருளைக் காட்டி நல்குவதுபோல் பாசாங்கு செய்தான். புலவர் மறுநாளும் பாடினார். தரவில்லை, மூன்றாம் நாளும் பாடினார். முடிவு தெரியவில்லை. கொடுத்திருக்கலாம்.

மாந்தரன்

மாந்தரன் என்னும் பெயர் தனித்தும் பல்வேறு அடை மொழிகளுடனும் காணப்படுகிறது. மாந்தரன்[483], மாந்தரம் பொறையன்கடுங்கோ,[484] சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை[485], சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை[486], சேரல் மாந்தரஞ் சேரல் இரும் பொறை[487], கோச்சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறை[488] இவ்வாறு ஆறு வேறு தொடர்மொழிகளால் குறிப்பிடப்படும் மாந்தரன் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. எனவே, தனித் தனியே இவர்களைப் பற்றிய செய்திகளை முதலில் காண்போம்.

மாந்தரன்

ஒன்பதாம் பத்துத் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை மாந்தரனின் வழிவந்தவன்.

நல்லாட்சி

இந்த மாந்தரன் அறக்கடவுள் வாழ்த்தும்படி நல்லாட்சி புரிந்தவன். இவனது ஆட்சியில் கோள்நிலை திரியவில்லை வானம் பருவமழை தவறாமல் பொழிந்தது. மக்களுக்கு அச்சம் என்பதே இல்லை. இவனது நாட்டிலிருந்த பொருள்களுக்குப் பாதுகாப்பு மிகுதி. மக்களிடம் அறியாமை என்பது இல்லை. சமூகவாழ்வில் இன்பம் பெருக்கெடுத்திருந்தது. கல்வி பல்வேறு துறைகளில் பல்வேறு அறிஞர்களிடம் துறைபோகிக் கிடந்தது.

திறை பெறல்

வாள்வேந்தர்கள் பலர் இவனுக்குக் களிறும் கலமும் பரிசிலாகத் தந்து இவன் சொன்னபடி செயலாற்றி வந்தனர்.

மாந்தரம் பொறையன் கடுங்கோ

நாடு

இவன் பெயரில் 'மாந்தரன்' என்று வாராமல் 'மாந்தரம்' என்று வருவதால் இது நாட்டின் பெயர் என்பது பெறப்படுகிறது.

பொறையன் என்பது பொறை நாட்டோடு தொடர்பு உடையது. கடுங்கோ என்பது 'இருங்கோ', 'இளங்கோ' என்பன போல் அரசன் பெயராகும்.

புகழ்

பரிசில் வேண்டிச் சென்றவர்களின் கொள்கலம் நிறையும்படி கொடை வழங்கினான். இவனது வள்ளன்மையைப் புலவர்கள் போற்றிப் பாடினார்கள். அவர்கள் செந்நா மேலும் சிவப்புறும்படி பாடினார்களாம்.

படை

வெல்லுதற்கு அரிய படை இவனிடம் இருந்தது என்று கூறப்படுவது பொதுப் புகழ்ச்சியாகப்படுகிறது.

சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை[489]

புறநானூற்றைத் தொகுத்தவர், இவனுக்கும் சோழ அரசன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் நடந்த போரைக் குறிப்பிடுகிறார். போரில் இவன் தோற்றான். சோழன் வென்றான். சோழனது வெற்றிக்குக் காரணம் சோழனது ஆற்றல் அன்று. சோழனுக்குத் துணையாகத் தேர்வண் மலையன் என்னும் சிற்றரசன் இருந்ததே ஆகும். இந்தச் செய்தி பாடலிலும் கூறப்பட்டுள்ளது. பாடலில் அரசர்களுடைய பெயர் குறிப்பிடப்படவில்லையே அன்றிப் பாடலில் உள்ள செய்தியும் புறநானூற்றைத் தொகுத்தவர் கொளுவில் தரும் செய்தியும் ஒன்றே. எனவே, இவனைப்பற்றிக் கூறப்படும் போர்ச்செய்தி ஐயத்திற்கிடமின்றி உண்மை எனத் தெரிகிறது[490].

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

யானையைப் போல் கூர்மையான பார்வையும் முருகனைப் போன்ற அழகும் உடையவனாக இவன் விளங்கியமையால் இவனது பெயரில் 'யானைக்கண்'. 'சேய்' என்னும் அடைமொழிகள் முறையே அமைந்தன. பாடலில் 'வேழ நோக்கின் விறல் வெஞ்சேய்' என்று இந்த அடைமொழி குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு

மரந்தை அல்லது மாந்தைத் துறைமுகத்தைத் தலைநகராகக் கொண்ட நாடு மாந்தர நாடு. இந்த நாட்டுக்கு இவன் அரசன் என்பது இவனது பெயரால் விளங்கும் உண்மையாகும்.

வெற்றிகள்

வயலும், மலையும், மணலும், கழியும், கானலும் தன்னகத்தே கொண்ட தொண்டி நகரில் இருந்தவர்களோடு இவன் போரிட்டு அவர்களை அழித்து வென்று சிலகாலம் தங்கி அரசாண்டான்[491].

கொல்லி வெற்றி

தொண்டி நகரில் போரிட்டு வென்று சிலகாலம் அங்குத் தங்கி அரசாண்டதுபோலவே கொல்லியிலும் சிலகாலம் தங்கி அரசாண்டான்[492].

சிறைபட்டு மீளல்

இவன் மேலே கூறியவாறு பல வெற்றிகள் பெற்று ஆளுகையில் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் பகையைத் தேடிக்கொண்டான். இந்த நெடுஞ்செழியன் இவனைத் தந்திரமாகக் கைதுசெய்து சிறையில் அடைத்தான். யானை பொய்க்குழியில் விழுந்தது இவன் சிறைப்பட்டதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளபடியால் பாண்டியன் இவனைப் போரில் வென்று கைது செய்யவில்லை; தந்திரமாகக் கைது செய்தான் என்பது தெரிகிறது.

குழியை அழித்துவிட்டு யானை தப்பிச் சென்று தன் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டது. இவன் சிறையிலிருந்து தப்பிச் சென்ற செயலுக்கு உவமையாகக் கூறப்பட்டிருப்பதால் இவன் பிறருடைய உதவியின்றித் தானே சிறையைத் தகர்த்தெறிந்து விட்டுத் தப்பிவிட்டான் என்பது தெரிகிறது[493].

பகையரசர் பணிவு

இவனை அண்டினால் தாம் இழந்த நாட்டையும் செல்வத்தையும் திரும்பப் பெறலாம் என்று சில அரசர்கள் இவனைப் பணிந்தனர்[494]. இவன் சினந்தால் தம் கோட்டையை அழித்து விடுவான் என்று சிலர் இவனைப் பணிந்தனர். வேந்தர்கள் பணிந்து திறை கொடுத்தனர்.

படை

இவனது தோல்படை மேகக் கூட்டம் போன்றது. யானைப் படை மலைபோல் உயர்ந்த யானைகளைக் கொண்டது. இவை கடல்போல் பெரியன[495].

இவனது வீரர்கள் பனம்போழைச் செருகிக்கொண்டு வெறிக் குரவை ஆடினர்.

கொடைத்தன்மை

இவன் முரசு முழக்கி இரவலரை அழைத்துக் கொடை நல்கினான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவனிடம் பரிசில் பெற்றபின் வேறொருவரிடம் சென்று பெறவேண்டி நிலை இல்லாதவாறு இவன் மிகுதியாகக் கொடுத்தான். தனக்கு வேண்டுமென்று எதையும் வைத்துக்கொள்ளாது கொடுத்தான்[496].

ஆட்சி

இவனது நாட்டு மக்கள் சோறு ஆக்கும் தீ அன்றி வேறு தீ அறியார்; வெயில் அல்லது வேறு சூடு அறியார்; வானவில் அன்றிக் கொலைவில் அறியார்; உழுபடை அன்றிக் கொல்படை அறியார். இவன் நாட்டு மண்ணைக் கருவுற்ற பெண்கள் விரும்பி உண்ணுதல் அன்றிப் பகைவர் கொள்ளார். இவனது கோட்டையிலே அம்புகள் பயன்படுத்த வாய்ப்பின்றிக் கிடந்தன. நாட்டிலே அறம் தூங்கியது. மக்களுக்கு நல்ல நிமித்தம் கெட்ட நிமித்தம்பற்றிக் கவலையே இல்லை[497]. விறுவிறுப்பு இல்லாத அமைதியான இன்பமான வாழ்க்கையாகும். இவன் பாதுகாக்கும் நாடு தேவர் உலகம்போல் இன்பத்தையே துய்த்தது.

முன்னோர் ஆட்சி

குமரி முதல் இமயம் வரை மேற்கிலும் கிழக்கிலும் இரு கடல்களுக்கிடையில் ஆண்ட அரசர்கள் எல்லாம் ஒன்றுபட்டு இவனது முன்னோருக்கு வழிமொழிந்து வாழ்ந்தனர். இவனது முன்னோர் கொடியவற்றை நீக்கிச் செங்கோலோச்சினர். காடுகளைத் திருத்தி விளைநிலமாக்கினர்[498].

பண்பு நலம்

கடலின் ஆழம், நானிலத்தின் பரப்பு, திசையின் நீளம், வானத்தின் உயரம் இவற்றையெல்லாம் அளந்துவிட்டாலும் இவனது அறிவு, ஈரம், இரக்க உணர்வு ஆகியவற்றை அளக்க முடியாது என்று கூறுவதால்[499] இவன் நல்ல பண்பாளன் என்பதை அறியலாம்.

ஐங்குறுநூறு தொகுப்பித்தல்

அகத்துறையில் அரிய நூல் ஒன்றைத் திறமையாளர்களைக் கொண்டு உருவாக்க வேண்டுமென்று இவன் விரும்பினான். அறிவில் சிறந்து விளங்கிய புலவர் கூடலூர்கிழாரிடம் அப்பணியை ஒப்படைத்தான். அவர் ஐந்து திணைகளையும், ஐந்து புலவர்களிடம் பகிர்ந்தளித்தார். ஒவ்வொருவரும் 100 பாடல்கள் பாடவேண்டும் என்றும் அந்த நூறும் பத்துப் பத்தாகத் தனித் தனித் தலைப்பின்கீழ் அமையவேண்டும் என்றும் அவர் வரையறை கூறியிருந்தார். அவர் கூறியபடி ஓரம்போகியார் மருதத்திணைப் பாடல்களைப் பாடினார். அம்மூவனார் நெய்தல், கபிலர் குறிஞ்சி, ஓதல் ஆந்தையார் பாலை, பேயனார் முல்லை என்ற முறையில் பிற திணைக்குரிய பாடல்களும் பாடப்பெற்றன. அவை கூடலூர் கிழாரால் தொகைநூலாக உருவாக்கப் பட்டன. தலைப்புக்குப் பத்துப் பாடல், திணைக்குப் பத்துத் தலைப்பு என்ற நிலையைக் காணும்போது இது திட்டமிட்டுப் பாடிய தொகுப்பு நூல் என்பது புலனாகிறது.

சேரல் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

விளங்கில் வெற்றி

விளங்கில் என்பது மாடமாளிகைகள் நிறைந்த ஊர். 'தெற்றி' என்னும் ஒருவகை விளையாட்டு அங்குள்ள மக்களுக்குச் சிறப்பு விளையாட்டாகும். இவன் அந்த ஊரைத் தாக்கினான். அதன் சிறப்புகளைத் தன் வாட்படை கொண்டு அழித்தான்[500].

காலம்

இவன் தனது விளங்கில் வெற்றியைப் புலவர் ஒருவர் நன்கு சிறப்பித்துப் பாடவேண்டும் என்று விரும்பினான். கபிலர், செல்வக்கடுங்கோ வாழியாதனைச் சிறப்பித்துப் பத்துப்பாடல்கள் பாடியது அவன் நினைவுக்கு வந்தது. அப்போது கபிலர் இல்லை; இறந்துவிட்டார். அவர் இருந்தால் நலமாயிருக்குமே என்று எண்ணி ஏங்கினான். இந்த ஏக்கத்தை நிறைவுசெய்யப் பொருந்தில் இளங்கீரனார் என்ற புலவர் தாமே முன்வந்தார். கபிலரைப்போல் இவர் இவன்மீது பத்துப் பாடல்கள் பாடியிருக்கக்கூடும். பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் ஏதோ காரணத்தால் இதை விட்டிருக்கக்கூடும்.

இவன் தன் காலத்தில் கபிலர் இல்லை எனக் கூறுவது இவனது காலத்தை வரையறுக்க உதவி செய்யும். செல்வக் கடுங்கோவை அடுத்து அரியணையேறியவன் பெருஞ்சேரல் இரும்பொறை ஆவான். சேரல் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இந்தப் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய அரிசில்கிழாரைப் பற்றி எண்ணவில்லை. எனவே, இவனது காலம் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கும் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் இடைப்பட்டது என்பது தெரிகிறது.

வானவன் வரலாற்றில் இவனைப்பற்றி மேலும் காணலாம்.

கோச்சேரமான் யானைக்கட்சேய்
மாந்தரஞ் சேரல் இரும்பொறை[501]

இவனது வரலாற்றைப் புறநானூற்றுக் கொளுக் குறிப்பு ஒன்று சுட்டுகிறது.

மனைவி

இவன் ஒருத்தியை மணந்து உவகையுடன் வாழ்ந்தவன் எனத் தெரிகிறது. இறந்தவன் தெய்வப் பெண்களுக்குத் துணையாகச் சென்றான் என்று கூறப்படும்போது தன் துணை (மனைவி), ஆயம் இவற்றை மறந்தான் என்று கூறப்படுவதால் அதை உணரமுடிகிறது.

கொடைத்தன்மை

அளந்து கொடுத்து அறியாதவன்; அளக்காமல் அள்ளி அள்ளிக் கொடுத்தவன்.

தோற்றப் பொலிவு

'மணிவரை அன்ன மாயோன்' என்று இவன் கூறப்படுவதால் கறுகறுத்த இவன் பொலிவு வெளிப்படுகிறது.

யானைக்கண் என்பதனோடும் இந்த நிற ஒருமைப்பாடு தொடர்புகொண்டுள்ளதை நாம் உணர முடிகிறது.

கூடலூர்கிழார் வானியலில் வல்லவர். சில கோள்நிலைக் குறிகளால் இந்த அரசன் இன்ன நாளில் இறந்துபடுவான் எனக் கணித்து அறிந்தார். ஆனால், தம் கணிப்புப்படி நடவாதிருக்க வேண்டுமென்று விரும்பி அரசன் நோயற்று இருக்கவேண்டுமென வாழ்த்தினார். வாழ்த்துப் பலிக்கவில்லை; கணிப்புப் பலித்தது. கணித்த நாளில் அவன் இறந்தான். இறந்தது கண்டு புலவர் வருந்திப் பாடினார்.

இறந்த நாள்

மேழ ஓரை, கார்த்திகை நாள் அந்த நாளின் முதல் கால் பகுதியாகும். அது பாதி இரவாகும். முடப்பனையின் (அனுடம்) நிலை அடி வெள்ளி, கடைக்குளத்தின் (புனர்பூசம்) நிலை கடை வெள்ளி. இந்த எல்லையில் பங்குனி மாதத்து முதல் பதினைந்து நாளில் உச்சம் உத்தரமீன், அந்த உத்தரமீன் உச்சியிலிருந்து சாய்ந்தது. அதற்குப்பின் எட்டாம் மீனாகிய மூலம் அதற்கு எதிரே எழுந்தது. அந்த உத்தரத்திற்குமுன் எட்டாம் மீனாகிய மிருகசீரிடம் துறையிடத்தே தாழ்ந்தது. அப்போது ஓர் எரிமீன் கீழ்த்திசையிலோ வடதிசையிலோ செல்லாது நிலத்திற்கு விளக்காக விழுந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த ஏழாம் நாள் அவன் இறந்தான்[502].

மேலே தனித்தனியே கண்ட வரலாற்றில் வரும் செய்திகள் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக உள்ளன. அன்றியும் குறுங்கோழியூர் கிழாரால் பாடப்பட்ட மூன்று பாடலுக்கு நான்கு வகையான தொடர் அமைப்புகள் உள்ளன. எல்லாமே புறநானூற்றைத் தொகுத்தவரால் குறிப்பிடப்பட்டவை. எனவே, நால் வேறு பெயர்களில் கூறப்பட்டுள்ளவரும் ஒருவனே எனக் கருதலாம்.

வானவன்

வானவன் யார்? ஒருவனா? பலரா? என்பனவற்றைத் தெரிந்து கொள்வதற்கு அவனது செயல்களையும் இருப்பிடங்களையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்[503].

இமயத்தில் வில் பொறித்தவன்

வஞ்சி நகரில் இருந்த வானவன் ஒருவன் இமயத்தில் வில்லைப் பொறித்தான்[504]. இவன் 'மாண்வினை நெடுந்தேர் வானவன்' என்று கூறப்பட்டுள்ளான். இந்த வானவனுக்கும், சோழ அரசன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்கும் போர் நடந்தது. வஞ்சி நகரில் நடந்த அந்தப் போரில் இந்த வானவன் மாண்டான். வஞ்சி நகரம் வருத்தத்திற்கு உள்ளாகியது.

இமயத்தில் வில்லைப் பொறித்தவன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர அரசன் ஆவான். இந்தச் செயலில் அவனுக்குத் துணையாக இருந்தவர்கள் இருவராவர். ஒருவன் அவனது மகன் செங்குட்டுவன்; மற்றொருவன் அவன் காலத்தில் கொங்கு நாட்டுப் பகுதியில் சிறப்புற்று விளங்கிய மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர அரசனாவான்[505].

நெடுஞ்சேரலாதன் (வேல்பஃறடக்கை) பெருநற்கிள்ளியோடு போரிட்டு இறந்தான். எனவே, இங்குக் குறிப்பிடப்பட்ட வானவன் செங்குட்டுவனாகவோ, மாந்தரஞ்சேரல் இரும் பொறையாகவோ தான் இருக்க முடியும்.

செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை அமைத்தபின் துறவு பூண்டான் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. எனவே, கிள்ளிவளவனோடு போரிட்டு இறந்தவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையே என்பது தெளிவாகிறது. இந்தக் கருத்தை மேலும் சில சான்றுகள் உறுதி செய்கின்றன.

வானவன் கொல்லிமலைப் பகுதியை ஆண்டு வந்தான்[506] மாந்தரஞ்சேரல் கொல்லிமலை நாட்டைத் தாக்கிப் போரில் வென்று அங்குத் தங்கி அரசாண்டபோது குறுங்கோழியூர்கிழார் இவனை நேரில் கண்டு பாடியுள்ளார்[507]. இவை வானவன் என்று குறிப்பிடப்படுபவனும், மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

இந்த வானவனின் படைத் தலைவன் பிட்டன் ஆவான்[508]. மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கு 'மாந்தரம்பொறை கடுங்கோ' என்னும் பெயரும் உண்டு. புகழூரில் உள்ள சங்ககாலத்துக் கல்வெட்டு கடுங்கோ அரசனையும்[509]. பிட்டனையும் குறிப்பிடுகிறது. எனவே, வானவன் என்பவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையே என்பது கல்வெட்டுச் சான்றாலும் உறுதி செய்யப்படுகிறது.

இவனைச் செல்வக்கடுங்கோ வாழியாதனின் மகன் என்று அந்தச் சங்ககாலக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.

செல்வக்கடுங்கோவின் மக்கள் இரண்டு பேர், ஒருவன் பெருஞ்சேரல் இரும்பொறை (தகடூரை வென்றவன்). அவன் எட்டாம் பத்தின் தலைவனாவான்[510]. மற்றொருவன் குட்டுவன் இரும்பொறை. இவன், ஒன்பதாம் பத்துத் தலைவனின் தந்தை ஆவான்[511]. மாந்தரஞ் சேரல் தொண்டி நகரில் போர் தொடுத்து வென்று அங்கும் சில காலம் தங்கி அரசாண்டான்[512]. தொண்டி, குடநாட்டில் இருந்த துறைமுகம். குடநாட்டை அடுத்திருந்த குட்டநாட்டில் இவன் முதன்முதலில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினான் எனல் பொருந்தும். இதனால் இவன் குட்டுவன் இரும்பொறை என்றும் கூறப்பட்டான். இவற்றை யெல்லாம் ஒன்றுசேர்த்து எண்ணும்போது குட்டுவன் இரும்பொறை, மாந்தரஞ்சேரல் இரும்பொறை, வானவன் என்ற பெயரால் குறிப்பிடப் படுவோர் அனைவரும் ஒருவரே என்று ஐயம் திரிபு இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். இவன் பதிற்றுப்பத்து எட்டாம் பத்துத் தலைவனின் தம்பியாவான். சங்ககாலக் கல்வெட்டு இவனைப் 'பெருங்கடுங்கோ' என்று குறிப்பிடுகிறது என்பதைக் கண்டோம். இந்தப் பெருங்கடுங்கோ, பாலை பாடிய பெருங்கடுங்கோ வஞ்சி நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தவன் என்பதை அவனது வரலாற்றால் அறியலாம்[513]. வானவன் வஞ்சி நகரில் இருந்து கொண்டு அரசாண்டதும் இதுவும் ஒன்றாய் அமைந்து இவர்களுடைய வரலாறுகள் எல்லாமே ஒன்றுக்கொன்று எள்ளவும் முரண்பாடு இல்லாமல், குழப்பம் இல்லாமல் தெளிவாய் அமைவதைக் காண்கிறோம்.

இந்த முடிவுகள் எல்லாம் மேலும் ஆய்வுக்குரியவை. சோழ அரசர் இருவரோடு இவன் போராடினான். முதலில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு போரிட்டுத் தோற்றான்[514]. பின்பு, கிள்ளிவளவனோடு போரிட்டு மாண்டான்[515].

குடகடலில் நாவாய் ஓட்டல்

தொண்டி, மாந்தை ஆகிய மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இவனுக்கு உரித்தாயிருந்தன. இவன் கடல் வாணிகத்தில் கவனம் செலுத்தினான். இவனது கப்பல்கள் அரபிக்கடல் வழியே மேலை நாடுகளுக்குச் சென்று பொன்னைக் கொண்டு வந்தன. கப்பல் வாணிகத்தில் இவனோடு போட்டியிட எவராலும் முடியவில்லை. எனவே, இவனது கப்பல்கள் வாணிகத்தில் ஈடுபட்டதிலிருந்து அரபிக்கடலில் பிறரது கப்பல்கள் செல்லவில்லை[516].

கொடைத் தன்மை

யாழ் இசையில் வல்ல 'கோடியர்' எனும் மக்கள் இவனை நாடிச் சென்றனர். அவர்கள் இவனிடம் பரிசில் பெற்றார்கள் எனலாம்[517].

சிறப்புப் பெயர்கள்

'வெல்போர் வானவன்'[518], 'நற்போர் வானவன்'[519] ஆகிய தொடர்கள் இவனது போர் ஆற்றலையும், வெற்றியையும் உணர்த்துகின்றன. 'சினமிகு தானை வானவன்'[520], 'பொருந்தார் முனையரண் கடந்த வினைவல் தானை வானவன்'[521] ஆகிய தொடர்கள் இவனது படையின் ஆற்றலை விளக்குகின்றன.

'வில்கெழு தடக்கை ... ... வானவன்'[522]

'பெரும்படைக் குதிரை ... ... வானவன்'[523] ஆகியவை இவனது போர்க்கோலத்தைக் காட்டுகின்றன.

'தேனிமிர் நறுந்தார் வானவன்'[524] 'நெடுந்தேர் வானவன்'[525] ஆகியவை இவனது தோற்றப் பொலிவை நன்கு புலப்படுத்துகின்றன.

சோழிய ஏனாதி திருக்குட்டுவன்[526]

குட்டுவன் என்னும் பெயர் இவன் சேரர் குடியைச் சேர்ந்தவன் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. அதனை வலியுறுத்தும் சான்றாக அவனைப் பாடிய புலவர், அவனது தந்தை வஞ்சி நகரத்தவன் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, சேரர் குடியினன் என்பது தெளிவு.

இவன் நாடு

இவன் வெண்குடை என்னும் ஊரில் இருந்துகொண்டு அரசாண்டு வந்தான். அந்த ஊர் வயல்கள் நிறைந்த ஊர். இவன் தந்தை வஞ்சி நகரத்தவன்.

தோற்றம்

மார்பிலே சந்தனம், தோளிலே வில், வலிமைமிக்க கைகளில் கூர்மையான வாள். இந்தக் கோலத்துடன் இவன் காட்சியளித்தான்.

கொடைத் தன்மை

குமரனார் என்னும் புலவர் மதுரையில் வாழ்ந்தவர். அவரது தந்தை கோனாட்டு எறிச்சலூரில் வாழ்ந்த மாடலன். இந்தக் குமரனார் இந்தக் குட்டுவனை வள்ளல் என்று பலரும் புகழ்வதைக் கேட்டிருந்தார். வெண்குடை நகருக்குச் சென்று இந்தக் குட்டுவனின் தந்தை நகரான வஞ்சியைச் சிறப்பித்துப் பாடினார். கேட்ட இந்தக் குட்டுவன் பெரிதும் மகிழ்ந்து கொல்லும் போர் யானை ஒன்றைப் பரிசிலாக வழங்கினான். புலவர் யானையைக் கண்டு அஞ்சி ஒதுங்கினார். புலவர் பரிசில் சிறியது என்று எண்ணி ஒதுங்கினார் என்று எண்ணினான். முன்பு அளித்ததைக் காட்டிலும் மிகப் பெரிய மற்றுமொரு யானையைப் பரிசிலாக அளித்தான். இதனால், புலவர் நடுநடுங்கிப்போய் அவனிடம் பரிசில் கேட்பதையே நிறுத்திவிட்டாராம்.

இவ்வாறு அவனது கொடைத் தன்மை அமைந்திருந்தது.

ஏனாதிப் பட்டம்

'ஏனாதி' என்னும் பட்டம் படைத்தலைமை பூண்டு சிறப்புடன் போராடியவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பட்டம். வேளாண்மையில் சிறந்தவர்களுக்குக் 'காவிதி'ப் பட்டமும் வாணிகத்தில் சிறந்தவர்களுக்கு ‘எட்டி'ப் பட்டமும் இவ்வாறு சிறப்புக் கருதித் தமிழ்நாட்டில் வழங்கப் பட்ட பட்டங்களாகும். இந்தக் குட்டுவனுக்கு அளிக்கப்பட்ட இந்தப் பட்டத்தில் 'சோழிய' என்னும் அடைமொழி உள்ளது. இதனால், இந்தப் பட்டத்தை அளித்தவன் சோழ அரசன் என்பது தெளிவாகத் தெரிகிறது. சோழன், சேரனுக்கு இத்தகைய பட்டம் அளித்துச் சிறப்பிக்கக் காரணம் என்ன?

இந்தக் குட்டுவன் சோழரது படைத் தலைமை பூண்டு சிறப்புடன் போராடிச் சோழனுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்க வேண்டும். இதனால் இவன் இந்தச் சிறப்புப் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் படைப்பணியை இவன் தனது இளமைக் காலத்தில் ஆற்றியிருக்கலாம். சோழன் பாராட்டிப் பட்டம் வழங்கியதோடு தன் சார்பாக அல்லது தனக்குத் துணையாக வெண்குடையில் இருந்து கொண்டு ஆளும்படி அமர்த்தியிருக்கலாம். வெண்குடை மக்கள் அவனது நற்பண்புகளை எண்ணி அவனைத் தம் ஊர் 'கிழவோன்' என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம். இவ்வாறு இவன் 'வெண்குடை கிழவ'னாக விளங்கினான்.

இந்தப் பட்டத்தை இவனுக்கு வழங்கிய சோழன், சேட் சென்னி (இலவந்திகைப் பள்ளியில் இறந்தவன்) என்பதை ஏனாதி திருக்கிள்ளி வரலாற்றில் காணலாம்.

3. சேர அரசப் புலவர்கள்

பிற புலவர்களால் பாடப்பெற்றுள்ள சேர அரசர்கள் வரலாற்றை இதுவரை கண்டோம். இவர்களே அன்றித் தாம் பாடிய பாடல்களால் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ள சேர அரசர்களும் உண்டு.


1. கருவூர்ச் சேரமான் சாத்தன்
2. சேரமான் இளங்குட்டுவன்
3. சேரமான் எந்தை
4. சேரமான் கணைக்கால் இரும்பொறை
5. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
6. பாலைபாடிய பெருங்கடுங்கோ
7. மருதம் பாடிய இளங்கடுங்கோ
8. முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

'சேரமான்' என்னும் சொல் சேரர் குடிமகன் என்னும் பொருளைத் தரும். இது சேரர் குடியினர் அனைவர்க்கும் உரியது. சேரர்குடி, சேர நாட்டை அரசாண்ட குடி; சேர நாட்டுக் குடிமக்கள் அன்று.

சேரர் குடியைச் சேர்ந்த அரசன் ஒருவனின் மகன் எத்தனை பேர் இருந்தாலும், அத்தனை பேரும் ஆங்காங்கே சிறு பகுதிக்கேனும் அரசர்களாக விளங்கிய நிலைமையை அவர்களது வரலாற்றில் நாம் காண்கின்றோம். எனவே, சேரமான் என்னும் அடைமொழி பெற்றுள்ள அனைவரும் ஒரு சிறு பகுதிக்கேனும் அரசர்களாக விளங்கினார்கள் என்று கொள்வது பொருத்தமானது. இந்த வகையில் பிறரால் பாடப்படாவிட்டாலும் தாம் பாடல்கள் பாடிச் சங்கப் பாடல்களில் இடம் பெற்ற புலவர்கள் - 'சேரமான்' என்னும் அடைமொழியுடன் சங்கநூல்களைத் தொகுத்தோரால் குறிப்பிடப்பட்டுள்ள புலவர்கள் - சேர அரசர்கள் என்றே கொள்ளத்தகும்.

மற்றும் பாலைப்பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ ஆகிய பெயர்களில் 'கோ' என்னும் சொல் அவர்கள் அரசர்களே என்பதை உணர்த்துகின்றன. 'முடங்கிக் கிடந்த நெடுஞ் சேரலாதன்' என்னும் பெயரில் 'சேரல்' என்னும் குடிப் பெயர், இவன் அரசன் என்பதை உணர்த்துகிறது. அந்துவன் என்னும் பெயர், பெயர் ஒப்புமையால் தோன்றக்கூடிய உய்த்துணர்வு.

கருவூர்ச் சேரமான் சாத்தனார்[527]

காதலன் யாமத்தில் வந்திருக்கிறான்; வெளியில் காத்திருக்கிறான். தோழி அவனுக்குக் கேட்கும்படி காதலியிடம் கூறுகிறாள். 'வா என்றும் சொல்ல முடியவில்லை. போ என்றும் சொல்ல முடியவில்லை. என்ன செய்வோம்?' என்பது அவளது கூற்று. இந்தக் கருத்தமைந்த பாடலை அவன் பாடியுள்ளான்.

சேரமான் இளங்குட்டுவன்[528]

காதலி காதலனுடன் சென்றுவிட்டாள்; தாய் தந்தையருக்குத் தெரியாமல் சென்றுவிட்டாள். செய்தி அறிந்த செவிலித் தாய் அவளை வளர்த்த தாய்க்கு வருந்திக் கூறுகிறாள். தான் ஆயத்தாரோடு பந்தடிக்கும்போதே கன்றும் அவளது காலடிகள், வெயில் காயும் காட்டில் எப்படி நடந்து சென்றனவோ என்பது அவளது ஏக்கம். இந்தக் கருத்தமைந்த பாடலை இவன் பாடியுள்ளான்.

சேரமான் எந்தை[529]

காதலன் தன்னை விட்டுவிட்டுச் செல்கிறான் என்று கவலைப்படுகிறாள் காதலி; கண்ணீர் வடிக்கிறாள். தோழி அவளைத் தேற்றுகிறாள். இந்தக் கண்ணீரோடு உன்னை விட்டுவிட்டு யார் செல்வார்; மராமரம் வேனில் காலத்தில் பூத்திருக்கும் தேமூர் போன்ற அழகி நீ. உன்னையும் உடன்கொண்டு செல்வார் என்பது அவளது ஆறுதல் மொழி.

இந்தக் கருத்தமைந்த பாடலை இவன் பாடியுள்ளான்.

நாடு

தலைவியின் அழகைத் தேமூர் என்னும் ஊரின் அழகோடு ஒப்பிட்டு இவன் பாடியுள்ளான். எனவே, தேமூரில் தங்கி இவன் ஆட்சி புரிந்து வந்தான் எனலாம்.

(தேமூர் ஒண்ணுதல், என்பதற்குத் தேமல் ஊர்ந்து ஒளிவீசும் நெற்றி என்றும் பொருள் கொள்ள இடம் உண்டு.)

சேரமான் கணைக்கால் இரும்பொறை[530]

இவன் தான் பாடிய பாடலில் விழுப்புண்பட்டு இறக்க வழியின்றிக் கட்டிப்போட்ட நாய்போல் கிடக்கும் நிலையை வெளிப்படுத்துகிறான். பிறர் முயற்சியால் கிடைத்த நீரை வயிற்றுத் தீத்தணிய இவ்வுலகில் உண்பர் உண்டோ? இல்லை என்கிறான்.

புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் தம் கொளுக் குறிப்பில் விளக்கமான வரலாற்றைத் தருகிறார்.

சோழ அரசன் செங்கணான் என்பவனோடு இவன் போரிட்டான். போர் 'திருப்போர்ப்புறம்' என்னுமிடத்தில் நடைபெற்றது. போரில் சேரன் பிடிபட்டான். குடவாயில் (குடவாசல்) என்னும் ஊரில் ஒரு கோட்டம். அந்தக் கோட்டத்தில் ஒரு சிறை. அந்தச் சிறையில் இவன் அடைக்கப் பட்டான். சிறையில் அடைபட்டுக் கிடக்கையில் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான், கிடைக்கவில்லை. காலம் தாழ்ந்து வேறொருவன் முயற்சியால் தண்ணீர் கிடைக்கப்பெற்றான். அதனைக் கையிலே வாங்கினான் உண்ண மனம் வரவில்லை. மேலே கண்ட கருத்தமைந்த பாடலைப் பாடினான். தண்ணீரைக் குடிக்காமலேயே மாண்டு போனான்.

களவழி என்னும் நூலுக்கும் இந்தப் போருக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. சோழன் செங்கணான் வரலாற்றில் இதனைத் தெளிவாகக் காணலாம்.

தோற்றம்

கணைய மரம்போல் வலிமைமிக்க கால் இருந்தமையாலோ, கணுக்காலுக்கும் கீழ் இல்லாத காலை உடையவனாக இருந்தமையாலோ, கணைகள் தாக்கிய விழுப்புண்களைத் தழும்புகளாகக் கொண்டிருந்தமையாலோ, பிற எதனாலோ இவனது பெயரோடு கணைக்கால் என்னும் அடைமொழி அமைந்துள்ளது.

மருதம் பாடிய இளங்கடுங்கோ[531]

குடும்பத் தலைவன் குடும்பத் தலைவியை விட்டுவிட்டு வேறொருத்தி நலத்தைத் துய்க்கும் கொடுமையை விளக்கும் மருதத்திணைப் பாடலை இவன் பாடியுள்ளான்[532].

மகனைப் பெற்ற பின்னும் கணவனைக் காணாது வாழ்கிறாளே அவள் 'என்ன கடத்தளோ' (எத்தகைய கடப்பாட்டாளோ) என்று இவன் குறிப்பிடுகிறான்[533].

இவன் பருவூர்ப் போர்க்களத்தில் சோழனுக்கும், சேர பாண்டியர்க்கும் நடந்த போரில் சேர பாண்டியரைப் போரில் கொன்று. 'அஃதை' என்னும் பெண்மணியின் தந்தை வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டுள்ளான்[534].

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்[535]

காதலனுக்குக் காதலியின் தோழி அறிவுரை கூறுகிறாள்.

துறைவ, 'ஒரு நாள் வந்து, உன் வண்ணம் எப்படி என்று கேட்டு விட்டுச் சென்றால் உன் பெருமைக்குக் குறைவு வந்து விடுமோ' என்பது அவள் கூற்று. திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை இவ்வாறு நயமாகக் கூறுவதாகப் பாடியுள்ள இவனது புலமைத் திறம் பாராட்டுதலுக்கு உரியது.

இவன் எங்கு முடங்கிக் கிடந்தான்? ஏன் முடங்கிக் கிடந்தான்? முடப்பட்டுக் கிடந்தானா? என்பன போன்ற வினாக்கள் இவன் பெயரிலுள்ள அடைமொழியில் தோன்றும்; விடைக்குச் சான்று இல்லை.

சேரன் செங்குட்டுவன்

சங்க காலச் சூழ்நிலை

சேரன் செங்குட்டுவனுடைய வரலாற்றை ஆராய்கிறபோது அவ்வரசன் வாழ்ந்திருந்த காலநிலை, சூழ்நிலை முதலியவைகளை அறிய வேண்டியது அவசியமாகும். செங்குட்டுவனுடைய வரலாற்றுக் குறிப்புகள் சங்க நூல்களிலேதான் காணப்படுகின்றன. ஆகவே, அவன் சங்க காலத்தில் - கடைச் சங்க காலத்தில் - வாழ்ந்திருந்தான் என்பது தெரிகின்றது. அவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்தான். அக்காலத்து அரசியல் சூழ்நிலை சங்க நூல்களிலிருந்து தெரிகின்றது.

அக்காலத்தில் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர் ஆட்சி செய்திருந்தார்கள். அக்காலத்தில் சேரநாடு தமிழ் நாடாக இருந்தது. மூவேந்தருக்குக் கீழடங்கி, குறுநில மன்னர்களாகிய சிற்றரசர்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு அக்காலத்தில் வேளிர் அல்லது வேளரசர் என்பது பெயர். அக்காலத்தில் தமிழகம் சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, துளு நாடு (கொங்கண நாடு), தொண்டை நாடு (அருவா நாடு) கொங்கு நாடு என்று ஆறு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. சேர, சோழ, பாண்டி நாடுகளை முடியுடைய பேரரசர் மூவர் அரசாண்டனர். கொங்காண நாடாகிய துளு நாட்டை நன்னர் என்னும் பெயருடைய வேளிர் அரசாண்டனர். கொங்கு நாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் பேரரசர் (முடிமன்னர்) அக்காலத்தில் இல்லை. கொங்கு நாட்டையும் தொண்டை நாட்டையும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். கடைச் சங்க காலத்தின் இறுதியில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டின் மத்தியில்) மாறுதல் ஏற்பட்டது.

சோழன் கரிகால் வளவன் தொண்டை நாட்டைக் கைப்பற்றி அதைச் சோழ இராச்சியத்துடன் இணைத்துச் சேர்த்துக் கொண்டான். சேரன் செங்குட்டுவனுடைய தகப்பனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் கொங்கு நாட்டின் தெற்குப் பகுதிகள் சில சேர இராச்சியத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. செங்குட்டுவனின் தமயனான களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் காலத்தில் கொங்கண நாடாகிய துளு நாடு சேரர் ஆட்சியின் கீழடங்கியது. சேர அரசர்கள் கொங்கு நாட்டைச் சிறிதுசிறிதாகக் கைப்பற்றிக் கொண்டிருந்தபோது, சோழபாண்டியர் வாளாவிருக்கவில்லை. சோழரும் பாண்டியரும் கொங்கு நாட்டைத் தாங்களும் பிடித்துக் கொள்ள முயற்சி செய்தார்கள். அதனால் சேர சோழ பாண்டியர்களுக்கு அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன.

சங்க இலக்கியங்களை ஆராய்ந்து பார்க்கிறபோது சோழ அரசர்களைப் பற்றி ஒரு செய்தி தெரிகிறது. சோழ மன்னர் பரம்பரையில் ஒன்பது தாயாதிகள் இருந்தனர். அவர்கள் முடி மன்னனாகிய பெரிய சோழ அரசனுக்குக் கீழடங்கிச் சிற்சில நாடுகளையரசாண்டனர். ஆனால், அவர்கள் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சோழ குலத்து அரசர் தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டதைச் சங்க நூல்களில் காண்கிறோம். தாயாதிகள், சமயம் நேர்ந்த போதெல்லாம் முடியரசனுடன் போர் செய்து கலகம் உண்டாக்கினார்கள். கரிகாற் சோழன் அரசு கட்டில் ஏறினபோது ஒன்பது தாயாதிகள் அவனுக்கு எதிராகக் கலகஞ் செய்து போரிட்டார்கள். அவர்களையெல்லாம் அவன் வென்று அடக்கிய பிறகு முடி சூடினான். கரிகாற் சோழன் இறந்த பிறகு அவன் மகனான கிள்ளிவளவன் சிம்மாசனம் ஏறியபோதும் ஒன்பது தாயாதிகள் கலகஞ் செய்து போரிட்டார்கள். அப்போது, செங்குட்டுவன், சோழரின் உள்நாட்டுப் போரில் தலையிட்டுப் போர்செய்து தன் மைத்துனனான கிள்ளி வளவனைச் சிம்மாசனம் ஏற்றினான். தாயாதிப் போர் ஒருபுறமிருக்க, சோழ, அரசர்களில் அண்ணன் தம்பிகளும் சில வேளைகளில் ஒருவருக் கொருவர் போர் செய்தனர். தகப்பனும் மகனுங் கூடத் தங்களுக்குள் போர் செய்து கொண்டதைச் சங்க இலக்கியங்களில் பார்க்கிறோம்.

ஆனால், சோழர்களுக்கு நேர்மாறாகச் சேர அரசர் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்தனர். சேர அரசர்களில் தாயாதி அரசர்கள்கூட சண்டையிட்டுக் கொள்ளவில்லை. சேர அரசர் தங்களுக்குள் போர் செய்துகொண்டதைச் சங்க நூல்களில் காணக்கிடைக்கவில்லை. சேர அரசர் ஒற்றுமையாக இருந்த காரணத்தினால்தான் கொங்கு நாட்டையும் துளு நாட்டையும் கைப்பற்ற முடிந்தது.

சோழர் குடியில் ஒன்பது தாயாதிகள் இருந்ததையும் அவர்கள் சோழ நாட்டின் பகுதிகளை (ஒரே சமயத்தில்) முடிபுனைந்த அரசனுக்கு அடங்கி ஆட்சி செய்ததையும் கூறினோம். அது போலவே, சேர அரசர் பரம்பரையில் மூத்த வழியரசர் இளையவழி அரசர் என்று இரு தாயாதிகள் இருந்தனர். இவர்களும் ஒரே காலத்தில் சேர இராச்சியத் தின் வெவ்வேறு பகுதிகளை யரசாண்டார்கள். பாண்டியர்களில் மதுரைப் பாண்டியனும் கொற்கைப் பாண்டியனும் என்று இரண்டு அரசர்கள் ஒரே காலத்தில் அரசாண்டதைச் சங்க நூல்களில் பார்க்கிறோம். பாண்டிய இளவரசன் கொற்கையில் இருந்தான். ஆனால், அவர்களில் ஐந்து கிளையினர் இருந்தனர் என்றும் அவர்கள் வெவ்வேறு இடங்களை அரசாண்டனர் என்றும் அறிகிறோம். அதனால்தான் பாண்டியருக்குப் பஞ்சவர் என்ற பெயரும் இருந்தது.

சங்க காலத்தில் வீரர்களுக்குப் பெருமதிப்பு இருந்தது. வீரச் செயல்கள் புகழ்ந்து போற்றப்பட்டன. வீரர்களின் வீரச் செயல்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடினார்கள். போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் அமைத்துப் போற்றினார்கள். போரும் வீரமும் ஒரு கலையாகவே மதிக்கப்பட்டன. போர்ச் செயலைப் பற்றி இலக்கண நூல்களும் இலக்கிய நூல்களும் தோன்றின. புறப் பொருள் இலக்கியங்கள் பெரிதும் போர்ச் செயலைப் பற்றியே கூறுகின்றன. சங்க காலத்தில் வாழ்க்கையின் குறிக்கோள், காதலும் போருமாக (அகமும் புறமும் ஆக) இருந்தது. சங்க காலத் தமிழகம் வீரர்களைப் போற்றியது; வீரத்துக்கு வந்தனையும் வழிபாடும் செய்தது. வெற்றிக்கும் வீரத்துக்கும் கடவுளாகக் கொற்றவைத் தெய்வம் வழிபடப்பட்டது.

சங்க காலத்தில் போர்க்களஞ் செல்லாத அரசர்கள் வீரர்களாக மதிக்கப்படவில்லை. ஆகவே, அரசர்கள் ஏதோ காரணத்தை முன்னிட்டுப் போர் செய்துகொண்டிருந்தார்கள். சங்க இலக்கியத்தில் போர்ச் செயல்கள் அதிகமாகக் காணப்படுவதற்குக் காரணம் இந்தச் சூழ்நிலைதான். போரில் விழுப்புண்பட்டவன் போற்றிப் புகழப்பட்டான். முதுகில் புறப்புண் படுவது இகழ்ச்சிக் குரியதாக இருந்தது. தப்பித் தவறிப் போர்க்களத்திலே முதுகில் புறப்புண்பட்டால், புண்பட்டவர்கள் பட்டினி கிடந்து உயிர் விட்டார்கள்.

அரசனுடைய படை வீரர்கள் எல்லைப் புறங்களிலே சென்று, அயல்நாட்டு எல்லைப்புற ஊர்களிலிருந்து ஆடு மாடுகளைப் பிடித்துக் கொண்டு போனார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து வந்து மாற்றரசரின் வீரர்கள் போர் செய்து ஆடு மாடுகளை மீட்டுக் கொண்டு போனார்கள். இவ்விதமாக நிகழ்ந்த போரிலே இறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வீரத்தைப் போற்றினார்கள்.

தம் வாழ்க்கைக் காலத்தில் போரிடாமல், போர்க்களத்தைப் பார்க்காமல், இறந்துபோன அரசர்களைத் தருப்பைப் புல்லின் மேல் கிடத்தி அவர்களின் மார்பை வாளினால் வெட்டிப் புண் உண்டாக்கிப் பிறகு அடக்கம் செய்தனர். இந்த வழக்கம் சங்க காலத் தமிழகத்தில் இருந்ததைக் கூலவாணிகன் சாத்தனாரும் ஔவையாரும் கூறுகின்றனர். உதயகுமரன் என்னும் சோழ அரசகுமரன் இறந்தபோது, அவன் தாயாகிய இராசமாதேவி துன்பப்பட்டதை யறிந்து வாசந்தவ்வை என்னும் முதியாள் அரசியிடஞ் சென்று ஆறுதல் கூறினாள். அப்போது அவ்வம்மையார்,

தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து
செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்கென
மூத்துவிளிதல் இக்குடிப் பிறந்தோர்க்கு
நாப்புடை பெயராது நாணுத்தக வுடைத்து

என்று கூறியதாக மணிமேகலை சிறைவிடுகாதையில் (13–16) கூலவாணிகன் சாத்தனார் இச்செய்தியைக் கூறுகிறார்.

அதிகமான் நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகடூர்க் கோட்டையை எதிர்த்தப் பகையரசருடன் போர் செய்து விழுப்புண்பட்டு நின்றான். அப்போது அவனுடைய வீரத்தைப் புகழ்ந்து பாடின ஔவையார், புண்படாமல் இறக்கும் அரசர் வாளினால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதைக் கூறுகிறார்.

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி
மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென
வாள்போழ்ந் தடக்கலும் உய்ந்தனர் மாதோ

(புறம் 93:7-11)

என்று ஔவையார் கூறுகிறார்.

இவ்விதமாக வீரவழிபாடு போற்றப்பட்ட காலத்தில் இருந்த கண்ணகியார், தன் கணவன் கோவலனுக்கு அநீதி செய்த பாண்டியனை அவைக்களத்தில் வழக்காடி வென்று, பாண்டியன் அரண்மனையைத் தீப்பற்றி எரியச் செய்து, பிறகு உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட மறக்கற்பைப் போற்றித்தான் அவருக்குப் பத்தினிக் கோட்டம் அமைக்கப்பட்டது.

பண்டைக் காலத்தில் காதலும் வீரமும் போற்றப்பட்டதைச் சரித்திரத்தில் காண்கிறோம். அந்த முறையிலே சங்ககாலத் தமிழகத்திலும் காதலும் வீரமும் (அகமும் புறமும்) போற்றப்பட்டன. முக்கியமாக, வீரமும் வெற்றியும் போற்றிப் புகழப்பட்டன, அரசர்களின் வீரத்தைப் புலவர்களும் இசைவாணர்களும் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்த சூழ்நிலை தமிழகத்திலே இருந்த காலத்திலே சேரன் செங்குட்டுவன் வாழ்ந்திருந்தான். அக்காலத்துச் சூழ்நிலை அவனுடைய வாழ்க்கையை உருவாக்கிற்று. அவன் வரலாற்றை இனி ஆராய்வோம்.

சங்க காலத்துச் சேர அரசர்

கடைச் சங்க காலத்துச் சேர அரசர்களில் பேரும் புகழும் பெற்றவன் சேரன் செங்குட்டுவன். சங்க காலத்துத் தமிழ்நாட்டு வரலாற்றில் செங்குட்டுவனுக்கு முக்கியமான இடம் உண்டு. சிறந்த வீரனாகவும் கொடையாளியாகவும் விளங்கியது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் பத்தினித் தெய்வ வணக்கத்தை இவன் ஏற்படுத்தினான். மேலும், சங்க காலத்துச் சரித்திர ஆண்டுகளைக் கணக்கிடுவதற்கு இவனுடைய வரலாறு துணையாக நிற்கிறது. செங்குட்டுவனும் அவனுடைய நண்பனான இலங்கையரசன் கஜபாகுவும் சமகாலத்து அரசர் என்பதனாலே இவர்கள் காலத்தை ஆதாரமாகக் கொண்டு சங்க காலத்து வரலாற்றுக் காலங்களைக் கணித்துவிடலாம். சேரன் செங்குட்டுவனும் கஜபாகு அரசனும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர்கள் என்பதைப் பின்னர் விளக்குவோம்.

சேரன் செங்குட்டுவனுடைய வரலாற்றை ஆராய்வதற்கு முன்பு அவனுடைய முன்னோர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், சேரன் செங்குட்டுவன் வீரமும் முயற்சியும் ஆள்வினையும் உடைய பேரரசனாக இருந்தாலும், அவன் தானாகவே உயர் நிலையைப் பெறவில்லை. அவனுடைய பாட்டன், தந்தை, சிற்றப்பன், அண்ணன் தம்பியர் முதலிய சுற்றத்தார்களும் சேர இராச்சியத்தை வளர்த்து மேன்மைப்படுத்தியுள்ளனர். செங்குட்டுவனும் இளமைக் காலத்திலிருந்தே தந்தை, தமயன், தம்பி முதலியவர்களுடன் உடனிருந்து உழைத்துச் சேர இராச்சியத்தை வளர்த்திருக்கிறான். செங்குட்டுவன் ஆட்சிக்கு வந்த காலத்தில் சேர நாடு சிறப்புப் பெற்றிருந்ததற்கு இவனுடைய முன்னோரும் காரணமாக இருந்தனர். ஆகவே, செங்குட்டுவன் வரலாற்றைக் கூறும்போது அவனுடைய முன்னோர்களின் வரலாறுகளையும் அறிய வேண்டுவது முறையாகும். சங்க காலத்துச் சேரமன்னர்களின் முறையாக எழுதப்பட்ட வரலாறு கிடையாது, சங்க இலக்கியங்களில் அங்கும் இங்குமாகச் சில வரலாறுகள் சிதறிக் கிடக்கின்றன. பதிற்றுப்பத்து என்னும் தொகை நூலில் எட்டுச் சேர அரசர்களின் வரலாறு கிடைக்கிறது. கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு செங்குட்டுவன் வரலாற்றையும் அவனுடைய உறவினர் வரலாற்றையும் ஆராய்ந்து காண்போம்.

பாட்டன் (உதியன் சேரல்)

செங்குட்டுவனுடைய பாட்டன் உதியன்சேரல் என்பவன். உதியன் சேரலின்மேல் பாடப்பட்டது பதிற்றுப்பத்து முதலாம் பத்து என்று தெரிகிறது. முதலாம் பத்து இப்போது கிடைக்கவில்லை. ஆகையால் உதியன் சேரலினுடைய முழு வரலாற்றை அறிந்து கொள்ள முடியவில்லை. 'நாடுகண் அகற்றிய உதியஞ் சேரல்' என்று இவனை மாமூலனார் என்னும் புலவர் கூறுகிறார் (அகம் 65 : 5; நாடு கண் அகற்றிய நாட்டை விசாலப் படுத்திய). இதனால் இவன், சுற்றுப்புற நாடுகளை வென்று சேர இராச்சியத்தின் எல்லையை விரிவு படுத்தினான் என்பது தெரிகிறது.

உதியஞ்சேரலின் அரசியின் பெயர் நல்லினி. நல்லினி, வெளியன் வேண்மான் என்னும் அரசனுடைய மகள். இவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள் பிறந்தனர். மூத்த மகன் நெடுஞ்சேரலாதன். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்றும் கூறப்படுகிறான் (பதிற்றுப்பத்து 2ஆம் பத்து, பதிகம்). இளையமகன் பெயர் குட்டுவன். இவனைப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று கூறுவர். (பதிற்றுப்பத்து 3ஆம் பத்து, பதிகம்)

உதியஞ்சேரலும் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனும் ஒருவரே என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர், இவர்கள் வெவ்வேறு அரசர்கள் என்று கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியில் இப்போது நாம் புக வேண்டுவதில்லை.

தாயாதிப் பாட்டன் (அந்துவன்)

சேரன் செங்குட்டுவனுக்குத் தாயாதிப் பாட்டன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அந்துவன் என்று பெயர். சேர அரசர் பரம்பரையில் இளைய கால்வழியில் வந்தவன் அந்துவன். அந்துவனுக்குப் பொறையன் என்றும் பெயர் உண்டு. அவன், 'ஒருதந்தை' என்னும் அரசனின் மகளைத் திருமணஞ் செய்திருந்தான். அவளுக்குப் 'பொறையன் பெருந்தேவி' என்பது பெயர்.

மடியா உள்ளத்து மாற்றார்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி யந்துவற் கொருதந்தை
ஈன்றமகள், பொறையன் பெருந்தேவி

(பதிற்றுப்பத்து 7ஆம் பத்து, பதிகம்)

பழைய உரையாசிரியர் 'ஒருதந்தை' என்பதற்கு இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: "இதன் பதிகத்து 'ஒருதந்தை' என்றது பொறையன் பெருந்தேவியின் பிதாவுடைய பெயர்." என்று அவர் எழுதுகிறார். அந்துவன் பொறையனுக்கும் பொறையன் பெருந்தேவிக்கும் பிறந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன் (பதிற்றுப் பத்து 7ஆம் பத்து, பதிகம்)

இந்த அந்துவன்பொறையன், 'மடியா உள்ளத்து மாற்றார்ப் பிணித்தவன்' என்று சொல்லப்படுகிறபடியினாலே, பகையரசருடன் போர் செய்து வென்றவன் என்று தெரிகிறான். எனவே, செங்குட்டுவனுடைய பாட்டனான உதியஞ்சேரலும், தாயாதிப் பாட்டனான அந்துவன் பொறையனும் ஒத்துழைத்துச் சேர நாட்டின் எல்லையை விரிவுபடுத்தினார்கள் என்பது தெரிகிறது.

தந்தை (நெடுஞ்சேரலாதன்)

சேரன் செங்குட்டுவனுடைய பாட்டன் உதியஞ் சேரலுக்கு இரண்டு மக்கள் இருந்தனர் என்றும் அவர்கள் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்றும் கூறினோம். பாட்டனான உதியஞ்சேரல் எத்தனை ஆண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. அவன் இறந்த பிறகு மூத்த மகனான நெடுஞ்சேரலாதன் சேர நாட்டை யரசாண்டான். இவனுக்கு இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் பெயரும் உண்டு. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்றும் இவனைக் கூறுவர். குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர் இவ்வரசன்மீது பதிற்றுப்பத்து இரண்டாம் பத்துப் பாடினார். 2ஆம் பத்திலிருந்து, இவ்வரசனைப் பற்றிய சிறப்புக்களையும் செய்திகளையும் அறிந்து கொள்கிறோம்.

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் (இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன்) இரண்டு மனைவியரை மணஞ் செய்திருந்தான். ஒவ்வொரு மனைவிக்கும் இரண்டிரண்டு ஆண் மக்கள் பிறந்தனர். வேள் ஆவிக்கோமான் மகள் பதுமன்தேவி என்னும் மனைவி வயிற்றில் பிறந்தவர் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும்(4ஆம் பத்து, பதிகம்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் (6ஆம் பத்து, பதிகம்) ஆவர். சோழன் மணக்கிள்ளி மகள் (நற்சோணை) வயிற்றில் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனும் (சேரன் செங்குட்டுவனும்) இளங்கோ அடிகளும் பிறந்தனர் (5ஆம் பத்து, பதிகம், சிலம்பு வரந்தருகாதை 170-183).

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய மனைவியர் இருவரில் ஒருத்தி வேள் ஆவிக்கோமான் பதுமன் தேவி என்று அறிந்தோம். அவளுடைய தங்கையை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தாயாதித் தம்பியாகிய செல்வக்கடுங்கோ வாழியாதன் மணஞ் செய்திருந்தான். அவளுக்கும் வேளாவிக் கோமான் பதுமன்தேவி என்று பெயர். (8ஆம் பத்து, பதிகம்). எனவே, இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும் அவனுடைய தாயாதித் தம்பி செல்வக் கடுங்கோ வாழியாதனும் முறையே தமக்கை தங்கையரைத் திருமணஞ் செய்திருந்தனர் என்பது விளங்குகிறது. செல்வக் கடுங்கோ வாழியாதன் அந்துவன் பொறையனின் மகன் என்பதை முன்னமே கூறினோம்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் செய்த போர் நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை மூன்று. அவை: மேற்கடல் தீவில் இருந்து குறும்பு செய்தவர்களை வென்று அடக்கி அவர்களுடைய கடம்ப மரத்தை வெட்டியது. ஆரிய மன்னரை வென்றது. யவன அரசரை வென்று சிறைப்பிடித்தது. மேலும் இவன், சேர மன்னரின் அடையாளமாகிய வில்லின் அடையாளத்தை இமயமலையின் பாறையில் பொறித்து வைத்தான். இவற்றை விளக்கிக் கூறுவோம்.

1. சேர நாட்டுக்கு வடமேற்கே மேற்கடலில் (அரபிக் கடலில்) துளு நாட்டுக்கு உரியதான ஒரு கடல் துருத்தி (துருத்தி - தீவு) இருந்தது. அந்தத் தீவில் துளு நாட்டு நன்னனுக்கு அடங்கிய குறும்பர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்கள் காவல் மரமாகக் கடம்ப மரத்தை வளர்த்து வந்தனர். அந்தக் குறும்பர்கள் சேர மன்னருக்கு மாறாக நெடுங்காலமாகக் குறும்புசெய்துகொண்டிருந்தார்கள். வாணிகத்தின் பொருட்டுச் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்துகொண்டிருந்த யவனக் கப்பல்களை வராதபடி இவர்கள் இடை மறித்துத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு பல காலமாகக் குறும்பு செய்துகொண்டு வந்தார்கள் என்று தெரிகிறது. கி.பி. 80-இல் இருந்த பிளினி (Pliny) என்னும் யவனர் (கிரேக்கர்) தாம் எழுதியுள்ள யவன வாணிகக் குறிப்பிலிருந்து இச்செய்தி தெரிகிறது. சேர நாட்டுக்கு வந்து கொண்டிருந்த யவன வாணிகக் கப்பல்களை இங்கிருந்த கடற் கொள்ளைக்காரர் துன்புறுத்திக் கொள்ளையடித்தனர் என்று அவர் எழுதியுள்ளார்.

இவ்வாறு குறும்பு செய்துகொண்டு சேர நாட்டுக் கப்பல் வாணிகத்தைத் தடைசெய்து கொண்டிருந்த இக்குறும்பர்களை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தன்னுடைய கடற் சேனையைச் செலுத்தி வென்று அவர்களின் காவல் மரமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டினான். இச்செய்தியை இவனைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார் 2ஆம் பத்தில் கூறுகிறார்:

பவர் மொசிந்து ஒல்கிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்றெறி முழங்குபனை செய்த வெல்போர்
நாரரி நறவின் ஆர மார்பின்
போரடு தானைச் சேரலாத! (2ஆம் பத்து 1:12-16)

துளங்கு பிசிருடைய மாக்கடல் நீக்கிக்
கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை
ஆடுநர் பெயர்த்துவந் தரும்பலி தூஉய்க்
கடிப்புக் கண்ணுறூஉந் தொடித்தோள் இயவ (2ஆம் பத்து 7: 4-7)

இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன் (2ஆம் பத்து 10 : 2-5)

நெடுஞ்சேரலாதன் கடம்பறுத்த செய்தியை மாமூலனார் என்னும் புலவரும் கூறுகிறார்.

வலம்படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பறுத்து (அகம் 127 : 3-4)


சால்பெருந் தானைச் சேரலாதன்
மால்கடல் ஓட்டிக் கடம்பறுத் தியற்றிய
பண்ணமை முரசின் கண்ணதிர்ந் தன்ன (அகம் 347 : 3-5)

கடல் தீவில் குறும்பு செய்து கொண்டிருந்த கப்பற் கொள்ளைக்காரர்களை வென்றவன் சேரலாதன்தான். ஆனால், அந்தக் கடற்போரை நேரில் சென்று நடத்தியவன் அவன் மகனான செங்குட்டுவனே. இதனைப் பின்னர் விளக்கமாகக் கூறுவோம். செங்குட்டுவன் இளமையிலிருந்தே தன் தந்தை, சிறிய தந்தை, தமயன் முதலியவர்களுடன் சேர்ந்து பகைவருடன் போர் செய்திருக்கிறான்.

2. நெடுஞ்சேரலாதன் மற்றும் பல போர்களைச் செய்து வென்றான் என்று குமட்டூர்க் கண்ணனார் 2ஆம் பத்தில் கூறுகிறார். இப்போர்கள் எங்கெங்கு யாருடன் நிகழ்ந்தன என்பதைக் கூறவில்லை. ஆரிய அரசரை வென்றான் என்பதை, 'பேரிசைமரபின் ஆரியர் வணக்கி' என்னும் பதிகத்தின் அடியினால் அறிகிறோம். தமிழகத்தின் வடக்கிலிருந்த கன்னடத்தாரையும் தெலுங்கரையும் வடவர் அல்லது வடுகர் என்றும் அவர்களுக்கப்பால் வடக்கே இருந்தவர்களை ஆரியர் என்றும் கூறுவது சங்க காலத்து மரபு. நெடுஞ்சேரலாதன் 'ஆரியரை வணக்கினான்' என்று கூறப்படுவதால், தக்காண தேசத்துக்கப்பால் இருந்த ஆரிய அரசருடன் போர் செய்து வென்றான் என்று அறிகிறோம். அவன் காலத்தில் தக்கண தேசத்தைச் சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) அரச பரம்பரையார் அரசாண்டார்கள். தக்காணத்துச் சதகர்ணியரசர்களுக்கும் சேர நாட்டுச் சேர மன்னர்களுக்கும் நெடுங்காலமாக நட்புறவு இருந்திருக்கிறது. சதகர்ணியரசன் வடநாட்டு ஆரிய அரசருடன் போர் செய்தபோது அப்போரில் அவனுக்குத் துணையாக இச்சேரன் சென்று போரை வென்றிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. எனவே, நெடுஞ்சேரலாதன் ஆரிய அரசருடன் செய்த போர் சதகர்ணியரசருக்குச் சார்பாக வடநாட்டில் செய்த போராக இருக்க வேண்டும். அக்காலத்தில் வடநாட்டைச் சிறுசிறு மன்னர்கள் ஆண்டனர்; பேரரசர் இருந்திலர்.

வடநாட்டு அரசரை வென்றதற்கு அடையாளமாக நெடுஞ் சேரலாதன் இமயமலையில் தன்னுடைய வில் அடையாளத்தைப் பொறித்து வைத்தான். இதனை,

ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்
தொன்று முதிர் வடவரை வணங்கவிற் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
                                                           (அகம் 396 : 16-19)

என்று பரணரும்,

வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீ ரோட்டிக் கடம்பறுத் திமயத்து
முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து
(அகம் 127 : 3-5)

என்று மாமூலனாரும்,

அமைவரல் அருவி இமயம் விற்பொறித்து. என்று 2 ஆம் பத்துப் பதிகமும் கூறுவது காண்க. இவனைச் சிலப்பதிகாரம்,

கடற்கடம் பெறிந்த காவலன்வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன்வாழி
(சிலம்பு 23 : 81-82)

என்றும்,

மாநீர் வேலிக் கடம்பெறிந் திமயத்து
வானவர் மருள மலைவிற் பூட்டிய வானவன்
(சிலம்பு 25 : 1-2)

என்றும் கூறுகிறது.

3. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை வென்றுச் சிறைப்பிடித்து அவர்கள் தலையில் நெய்யை யூற்றிக் கைகளைப் பின் கட்டாகக் கட்டிக் கொண்டு வந்து அவர்களிடமிருந்து வயிரம் முதலிய பெருஞ்செல்வங்களைப் பெற்றுக்கொண்டான் என்று 2ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது.

நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்த்தலை பெய்து கைபிற் கொளீஇ
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி

என்று கூறுகிறது.

இதற்குப் பழைய உரையாசிரியர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: 'இதன் பதிகத்து யவனர்ப் பிணித்தென்றது யவனரைப் போருள் அகப்படுத்தியென்றவாறு. நெய்த்தலைப் பெய்து கைபிற் கொளீஇ யென்பதற்கு அக்காலத்துத் தோற்றாரை நெய்யைத் தலையிற் பெய்து கையைப் பிறகு பிணித்தென்றுரைக்க. அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டென்றது அந்த யவனரைப் பின்தண்டமாக அருவிலை நன்கலமும் வயிரமுங் கொண் டென்றவாறு.'

நெடுஞ்சேரலாதன் யவனரை வென்ற செய்தி பதிகத்தில் மட்டுங் கூறப்படுகிறபடியால், குமட்டூர்க் கண்ணனார் இவன்மீது 2ஆம் பத்துப் பாடிய பிறகு, அந்த யவனப் போர் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதலாம். இவன் யவனருடன் போர் செய்தது கிரேக்க நாட்டுக்கோ அல்லது உரோமாபுரிக்கோ சென்று போர் செய்தான் என்று கருதக்கூடாது. தக்காணத்து மேற்குக் கரைப் பக்கமாகச் சில ஊர்களை யரசாண்டிருந்த யவன அரசர்களுடன் போர் செய்து அவர்களைச் சிறைப் பிடித்தான் என்பதே சரித்திர உண்மையாகும். இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்தியாவுக்குள் வந்த சாகர்கள் பையப்பையத் தெற்கே மேற்குக்கரைப் பக்கமாக வந்து, சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) அரசர்களுக்குரியதாக இருந்த தக்காண தேசத்தின் மேற்குக்கரைப் பகுதிகளையும் மாளவம் முதலிய இடங்களையும் கைப்பற்றிக்கொண்டு அரசாண்டார்கள். அது காரணமாகச் சதகர்ணிய அரசர்களுக்கும் சாக அரசர்களுக்கும் நெடுங்காலம் போர் நடந்தது. அப்போரில் சில சமயம் சதகர்ணிகளும் சில சமயம் சாக அரசர்களும் வெற்றி பெற்றார்கள். இப்போர் தொடர்ந்து நெடுங்காலம் நடந்தது. இந்தப் போர்களில் சேரமன்னர் சதகர்ணிகளுடன் நட்பாக இருந்து அவர்களுடன் சேர்ந்து சாக அரசர்களுடன் போர் செய்தார்கள். சாக அரசர் யவனர் (கிரேக்கர்) அல்லர். ஆனாலும், அவர்களுக்கு யவனர் என்னும் பெயர் வழங்கிவந்தது. அவர்கள் விந்தியமலைப் பிரதேசத்தில் அரசாண்டனர். நெடுஞ்சேரலாதன் யவனரை வென்று சிறைப் பிடித்தான் என்பது, இந்தச் சாக யவனரைத்தான். சதகர்ணியரசர் (நூற்றுவர் கன்னர்) சார்பாக நெடுஞ்சேரலாதன் சாக யவனருடன் போர் செய்து அவர்களைச் சிறைப் பிடித்ததை இச்செய்தி கூறுகிறது.

சாக யவனர் விந்தியமலைப் பிரதேசத்தில் கி.பி. முதலாவது இரண்டாவது நூற்றாண்டுகளில் அரசாண்டார்கள் என்று இந்திய சரித்திரங் கூறுகிறது. அந்தச் சாகர்கள் தக்காண இராச்சியத்தை யரசாண்ட சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) உடன் அடிக்கடி போர் செய்துகொண்டிருந்தார்கள். சேர மன்னர்கள் சதகர்ணியரசருக்கு நண்பர்களாகையால், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் நூற்றுவர் கன்னர் சார்பாகச் சாக அரசர்களுடன் விந்தியப் பிரதேசத்தில் போர் செய்து அவர்களைச் சிறைப்பிடித்தான். இதற்குச் சான்று பதிற்றுப்பத்து 9ஆம் பத்தில் காணப்படுகிறது, இளஞ்சேரல் இரும் பொறையின் முன்னோர்களைக் கூறும்போது, நெடுஞ்சேரலாதனைக் கூறுகிற இடத்தில்,

கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து
தெண்கடல் வளைஇய மலர்தலை யுலகத்துத்
தம்பெயர் போகிய ஒன்னார் தேயத்து
துளங்கிருங் குட்டம் தொலைய வேலிட்டு
அணங்குடைக் கடம்பன் முழுமுதல் தடிந்து

என்று (9ஆம் பத்து 8: 2-6) கூறுகிறது.

இதற்குப் பழைய உரைகாரர் "கடவுட்பெயரிய கானம் என்றது விந்தாடவியை" என்று எழுதுகிறார். விந்தாடவி என்றது விந்திய மலைப் பிரதேசம். இதற்குக் தண்டாரணியம் என்றும் பெயர் உண்டு. அக்காலத்தில் இப்பிரதேசத்தைச் சாகயவன அரசர்கள் ஆண்டனர். இந்த அரசர்களைத்தான் நெடுஞ்சேரலாதன் வென்றுசிறைப்பிடித்தான். இவன் மகனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் யவனரின் வருடைப் பசுக்களைக் கவர்ந்துகொண்டு வந்தான் என்று 6ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது.

சில ஆராய்ச்சிக்காரர்கள், நெடுஞ்சேரலாதன் சிறைப்பிடித்தயவனர், கிரேக்க நாட்டிலிருந்து வாணிகத்தின் பொருட்டு வந்து சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினங்களில் குடியேறியிருந்த யவனராக இருக்கக் கூடும் என்று கருதுகின்றனர்.[536] இது தவறான கருத்து. தங்கள் நாட்டில் வாணிகம் செய்யவந்த யவனரைச் சிறைப்பிடித்தான் என்பது அசம்பாவிதமானது. அவன் விந்திய மலைப் பிரதேசத்தில் அரசாண்டுகொண்டிருந்த சாக யவனரைச் சிறைப்பிடித்தான் என்பது மேலே கூறப்பட்டது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை 2ஆம் பத்துப் பாடிய குமட்டூர்க் கண்ணனார் பெற்ற பரிசில், 'உம்பற்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயமும் முப்பத்தெட்டி யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகமும்' பெற்றார் என்று பதிகக் குறிப்புக் கூறுகிறது. உம்பற் காடு, இவ்வரசனுடைய தம்பியாகிய பல்யானைச் செல் கெழுகுட்டுவனால் புதிதாகக் கைப்பற்றப்பட்டது. இது கொங்கு நாட்டைச் சேர்ந்த ஊர்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான் என்று கூறப்படுகிறான். இவன் எப்படி இறந்தான் என்பது கூறப்படவில்லை. ஆனால், இவன் சோழ அரசனுடன் போர் செய்து போர்க்களத்தில் இறந்துபோனான் என்னும் செய்தியை வேறு இடத்திலிருந்து அறிகிறோம். இவன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியுடன் போர் செய்தான். அந்த போர், போர் என்னும் இடத்தில் நடந்தது. அப்போரில் இருதரத்து வீரர்களும் யானைகளும் குதிரைகளும் மாண்டனர். அன்றியும் இரண்டு அரசர்களும் புண்பட்டுப் போர்க்களத்திலேயே விழுந்து சிலகாலம் உயிர் போகாமல் கிடந்தனர். இந்த நிகழ்ச்சியை நேரில் கண்ட கழாத்தலையார் என்னும் புலவர் மறக்களவழி பாடினார் (புறம் 368). அந்தப் பாட்டின் கீழ்க் குறிப்பு, 'சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற் கிள்ளியோடு போர்ப்புறத்துப் பொருது, வீழ்ந்தார் அழுங்கத் தன்னதாக உயிர்போகாது கிடந்தானைக் கழாத் தலையார் பாடியது' என்று கூறுகிறது (இதில், வீழ்ந்தார் அழுங்க என்பதற்கு நண்பரும் உறவினரும் மனம் வருந்த என்பது பொருள். வீழ்ந்தார்-விரும்பினவர், அன்புடையவர்).

போர்க்களத்தில் உயிர் போகாமல் கிடந்த சேரன் பிறகு போர்க்களத்திலேயே இறந்துபோனான். அப்போதும் கழாத்தலையார் அவனைப் பாடினார் (புறம் 62). அப்பாட்டின் கீழ்க் குறிப்பு, 'சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் போர் புறத்துப் பொருது வீழ்ந்தாரைப் பாடியது' என்று கூறுகிறது. இவ்விரு அரசரும் போர்க்களத்தில் புண்பட்டு விழுந்து கிடந்ததைப் பரணரும் நேரில் பாடினார் (புறம் 63). இதனால் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் சம காலத்தவர் என்பதும் இருவரும் ஒருங்கே போர்க்களத்தில் இறந்தனர் என்பதும் தெரிகின்றன.

(குறிப்பு: சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் எழுதிய திரு. வி. ஆர். இராமச்சந்திர தீஷிதர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பெருஞ் சேரலாதன் என்னும் இரண்டு வெவ்வேறு அரசர்களை ஒருவர் என்று எண்ணிக்கொண்டு தவறான செய்தியைக் கூறியுள்ளார். பெருஞ் சேரலாதன் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) கரிகால் சோழனுடன் வெண்ணி என்னும் இடத்தில் போர்செய்து இறந்தான் என்று எழுதுகிறார். (சிலம்பு. ஆங்கில மொழி பெயர்ப்பு, பக்கம் 13). சேரலாதன் என்னும் பெயர் ஒற்றுமையைக் கொண்டு இருவரையும் ஒருவராகக் கருதிவிட்டார்).

சிறிய தந்தை (பல்யானைச் செல்கெழு குட்டுவன்)

சேரன் செங்குட்டுவனின் தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பியொருவன் இருந்தான் என்று முன்னமே கூறினோம். அவன் பெயர் பல்யானைச் செல் கெழு குட்டுவன் என்பது. அவன் செங்குட்டுவனின் சிறிய தந்தை. அவன்மீது பாடப்பட்டது 3ஆம் பத்து. அவன் கொங்கு நாட்டுப் பகுதியை வென்றான்.

மாகெழு கொங்கர் நாடகப் படுத்த
வேல் கெழுதானை வெருவரு தோன்றல்

என்பதனால் (3-ஆம் பத்து 2 : 15-16) இதனை யறியலாம்.

மதில் அரண் உடைய அகப்பா என்னும் நகரத்தை இவன் வென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தினான்.

துஞ்சுமரந் துவன்றிய மலரகன் பறந்தலை
ஓங்குநிலை வாயிற் றூங்குபு தகைத்த
வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக்
கடிமிளைக் குண்டு கிடங்கின்
நெடுமதில் நிறையப் பதணத்து
அண்ணலம் பெருங்கோட்டு அகப்பா வெறிந்த
பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ
(3-ஆம் பத்து 2 : 21-27)

இதனையே, 'அகப்பா எறிந்து பகற்றீ வேட்டு' என்று பதிகம் கூறுகிறது.

இவனிடம் பல யானைப் படைகள் இருந்தன. அதனால் இவன் கோட்டைகளை யெளிதில் வென்றான்.

அமர்கோள் நேரிகந்து ஆரெயில் கடக்கும்
பெரும்பல் யானைக் குட்டுவன் (3-ஆம் பத்து 9 : 13-14)

கொங்கு நாட்டைப் பிடிப்பதற்கு முன்பு இவன் உம்பல் காட்டைக் கைப்பற்றினான் (உம்பல் யானை). உம்பல் காடு என்பது இப்போது யானைமலை என்று வழங்கும் பிரதேசம். இது, சேர நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் இடையில் உள்ளது. உம்பல் காட்டையும் கொங்கு நாட்டையும் வென்ற இவன் தன் மரபில் உள்ள முதியவர்களைத் தான் வென்ற அந்த நாட்டுப் பகுதிகளின் தலைவராக்கினான்.

மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்து
(3-ஆம் பத்து, பதிகம்)


என்று இச்செய்தி கூறப்படுகிறது.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் பெயருக்கு ஏற்ப இவனிடம் பெரிய யானைப் படை இருந்தது என்று கூறினோம். அந்த யானைகளைக் கீழ்க்கடல் முதல் மேற்கடல் வரையில் வரிசையாக ஆங்காங்கே நிறுத்தி அந்த யானைகளின் மூலமாகக் கீழ்க்கடல் நீரையும் மேற்கடல் நீரையும் ஒரே நாளில் கொண்டு வரச் செய்து அந்நீரினால் இவன் திருமுழுக்குச் செய்து கொண்டான்.

கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி
இருகடல் நீரும் ஒருபகல் ஆடி

(3-ஆம் பத்து. பதிகம்)

என்று இச்செய்தி கூறப்படுகிறது.

கொற்றவை, வீரர் வணங்கும் வெற்றிக்கடவுள். சேர நாட்டை யடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி அயிரை மலை என்று பெயர் பெற்றிருந்தது. அந்த மலை மேல் கொற்றவையின் கோவில் இருந்தது. அயிரைமலைக் கொற்றவை, சேரர்களின் குல தெய்வமாக இருந்தபடியால் வெற்றிவீரனாகிய இவன் அத்தெய்வத்தை வணங்கி வழிபட்டான்.

பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக் கௌதமனார் 3-ஆம் பத்துப் பாடினார். அதற்குப் பரிசாக அப்புலவரும் அவருடைய மனைவியாகிய பார்ப்பனியும் சுவர்க்கம் பெற்றார்கள் என்று மூன்றாம் பத்து அடிக்குறிப்பு கூறுகிறது. 'பாடிப் பெற்ற பரிசில்: 'நீர் வேண்டிய கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியில் பார்ப்பானையும் (பாலைக் கௌதமனாரையும்) பார்ப்பனியையும் காணாராயினார்' என்று மூன்றாம் பத்தின் அடிக்குறிப்பு கூறுகிறது. இவன், பாலைக் கௌதமனாருக்குச் சுவர்க்கங் கொடுத்ததைச் சோழ நாட்டிலிருந்த பராசரன் என்னும் பார்ப்பான் அறிந்து, சேர நாட்டுக்குச் சென்று, இவனுடைய அவைக்களத்தில் பார்ப்பனருடன் வேதம் ஓதி வெற்றிகொண்டு பார்ப்பன வாகை பெற்றான். இவனுக்கு இச்சேரன் செல்வங்களைப் பரிசாகக் கொடுத்தான். இதனைச் சிலப்பதிகாரக் கட்டுரை காதை கூறுகிறது.


குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேல் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி
நீடுநிலை மலையம் பிற்படச் சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பு
மறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க
நாவலங் கொண்டு நண்ணார் ஓட்டிப்
பார்ப்பன வாகை சூடி யேற்புற
நன்கலங் கொண்டு தன்பதி பெயர்வோன்

(சிலம்பு 23:62-73)

இவ்வரசன் இருபத்தைந்து ஆண்டு ஆட்சி செய்தான். தெய்வ பக்தியுள்ள இவ்வரசனுடைய புரோகிதர் நெடும்பாரதாயனார் என்பவர். அவர் இல்வாழ்க்கையைத் துறந்து தவஞ்செய்யக் காட்டுக்குப் போனார். அதுகண்டு இவ்வரசன் அரசையும் மனையையும் துறந்து அவருடன் காட்டுக்குச் சென்றான்.


ஒடுங்கா நல்லிசை யுயர்ந்த கேள்வி
நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த
பல்யானைச் செல்கெழு குட்டுவன்

என்ற இச்செய்தியைப் பதிகம் கூறுகிறது. இதற்குப் பழைய உரைகாரர் கூறும் விளக்கம் இது: "நெடும்பார தாயனார் முந்துறக் காடு போந்தவென்றது தன் புரோகிதராகிய நெடும்பாரதாயனார் தனக்கு முன்னே துறந்து காடுபோக அது கண்டு தானும் துறவுள்ளம் பிறந்து துறந்து காட்டிலே போன என்றவாறு."

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் அவன் தம்பியாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் உம்பற்காட்டையும் கொங்கு நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றிச் சேர இராச்சித்தோடு சேர்த்து இராச்சியத்தை விரிவுபடுத்தினார்கள்.

வேறு சிறிய தந்தை (செல்வக்கடுங்கோ வாழியாதன்)

சேரன் செங்குட்டுவனுக்கு அந்துவன் பொறையன் என்னும் தாயாதிப் பாட்டன் ஒருவன் இருந்ததை முன்னமே கூறினோம். அந்தப் பாட்டனுக்குச் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று ஒரு மகன் இருந்தான். எனவே, அவனும் செங்குட்டுவனுக்குச் சிறிய தந்தை முறையினன் ஆவான். மேலும் செல்வக்கடுங்கோ, செங்குட்டுவனுடைய மாற்றாந்தாயாகிய (தன் தந்தையின் மூத்த மனைவியாகிய) வேளாவிக்கோமான் பதுமன் தேவி என்பவளின் தங்கையை மணஞ்செய்திருந்தான். அவளுக்கும் வேளாவிக் கோமான் பதுமன் தேவி என்பது பெயர். இச்செய்தியை எட்டாம் பத்துப் பதிகத்தினால் அறிகிறோம்.

செல்வக்கடுங்கோவை 7-ஆம் பத்துப் பாடியவர் கபிலர். பாரி வள்ளலால் ஆதரிக்கப்பட்ட கபிலர், அவன் இறந்த பிறகு இச்சேரனிடம் வந்து இவனைப் பாடினார்.

செல்வக்கடுங்கோ வாழியாதன் பல போர்க்களங்களைக் கண்டவன். போர்க்களத்தில் பல புண்பட்ட இவனுடைய மார்பு, இறைச்சியைக் கொத்தும் (ஊனம்) மரக்குறடுபோல வடுக்கள் உள்ளதாக இருந்தது. அந்த வடுக்களை இவன் சந்தனம் பூசி மறைத்திருந்தான்.


எஃகா டூனங் கடுப்ப மெய்சிதைந்து
சாந்தெழில் மறைத்த சான்றோர் பெருமகன்

(7-ஆம் பத்து 7 : 17-18)

(ஊனம் -இறைச்சியைக் கொத்துவதற்கு உள்ள மரக்குறடு; சான்றோர் - (இங்கு) வீரர்.)

இவன் பல போர்களைச் செய்து நாடுகளைக் கைப்பற்றினான்; களவேள்வி செய்தான்.


நாடுபல படுத்து நண்ணார் ஓட்டி
வெருவரு தானைகொடு செருப்பல கடந்து
ஏத்தல் சான்ற இடனுடைவேள்வி ஆக்கி

என்று 7-ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது.

மேலும், இவன் அறநெறியறிந்து தன் புரோகிதனைவிட அறிவிற்சிறந்திருந்தான் என்று கூறப்படுகிறான்.

புரோசுமயக்கி

மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழியாதன்

(7-ஆம் பத்து, பதிகம்)

'புரோசு மயக்கி யென்றது தன் புரோகிதனிலும் தான் அறநெறியறிந்தென்றவாறு' என்று பழைய உரை விளக்கங் கூறுகிறது.

இவன் மீது 7-ஆம் பத்துப் பாடிய கபிலருக்கு இவன் பல ஊர்களைப் பரிசாக வழங்கினான். 'பாடிப் பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து நன்றா வென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ' என்று 7-ஆம் பத்தின் பதிக அடிக் குறிப்புக் கூறுகிறது.

கபிலர் அனேக ஊர்களைப் பரிசு பெற்ற செய்தியை இவ்வரசனின் பேரனாகிய இளஞ்சேரல் இரும்பொறையை 9-ஆம் பத்துப் பாடின பெருங்குன்றூர் கிழாரும் கூறுகிறார். இளஞ்சேரல் இரும் பொறையுடன் போர் செய்து தோற்று ஓடிய சோழனின் வீரர்கள் போர்க்களத்தில் விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கையானது கபிலன், செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் பரிசாகப் பெற்ற ஊர்களைவிட அதிகமாக இருந்தது என்று அவர்கூறுகிறார். (9-ஆம் பத்து. 5)


தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற்
கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைக்
சூடா நறவின் நாண்மகிழ் இருக்கை
யரசவை பணிய வரம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலையில் நெஞ்சில்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே

(9-ஆம் பத்து 5 : 6-13)


(இதில் நன்றா என்னும் குன்று, நாடுகாண் நெடுவரை என்று கூறப்பட்டுள்ளது காண்க.)

குண்டுகட் பாலியாதனார் என்னும் புலவர் 'இது கனவா நனவா' என்று ஐயுறும்படி இவ்வரசன் அவருக்குப் பெருந் தொகையைப் பரிசிலாக வழங்கினான். அப்போது அப்புலவர் இவ்வரசன்மீது ஒரு செய்யுளைப் பாடி வாழ்த்தினார் (புறம் 387)

செல்வக்கடுங்கோ இருபத்தைந்து யாண்டு ஆட்சிசெய்தான். இவன் சிக்கற்பள்ளி என்னும் இடத்தில் இறந்தான். ஆனது பற்றி இவன், சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று கூறப்படுகிறான்.

அண்ணன் (களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு இரண்டு மனைவியரும் நான்கு மக்களும் இருந்தனர் என்றும் அவர்கள் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், ஆடு கோட்பாடுச் சேரலாதன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், இளங்கோ அடிகள் என்பவர் என்றும் கூறினோம். நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு, அவனுடைய மூத்த மகனும் செங்குட்டுவனுடைய அண்ணனுமாகிய களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் அரசனானான். இவனுக்கு வானவரம்பன் என்னும் சிறப்புப் பெயர் உண்டு.

இவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்று பெயர் பெற்றதற்குக் காரணங் கூறுகிறார் பதிற்றுப்பத்தின் பழைய உரையாசிரியர்: 'களங்காய்க்கண்ணி நார்முடி யென்றது களங்காயாற் செய்த கண்ணியும் நாராற் செய்த முடியுமென்றவாறு. தான் முடி சூடுகின்ற காலத்து ஒரு காரணத்தால் முடித்தற்குத் தக்க கண்ணியும் முடியும் உதவாமையிற் களங்காயால் கண்ணியும் நாரால் முடியும் செய்து கொள்ளப்பட்டன வென்றவாறு” என்று அவர் விளக்கங் கூறுகிறார்.

இதைச் சான்றாகக் கொண்டு திரு. மு. இராகவையங்கார் அவர்கள் தாம் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில் இவ்வாறு கற்பித்து எழுதுகிறார்: "முடிசூடுகின்ற சமயத்தில் முடித்தற்குரிய கண்ணியும் கிரீடமும் பகைவர் கவர்ந்ததனால் உதவாமை பற்றி, அவற்றுக்குப் பிரதியாகக் களங்காயற் கண்ணியும் நாரால் முடியுஞ் செய்து புனைந்துகொண்டு பட்டம் பெற்றமையின் 'களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்' என்னும் பெயர் பெற்றான்" என்று எழுதியுள்ளார்.

இவர் கூறும் காரணத்தைத் திரு. கே.என். நீலகண்ட சாஸ்திரியார் உடன்படாமல் மறுக்கிறார். முடிசூடுஞ் சமயத்தில் பகைவர் வந்து கிரீடத்தைக் கவர்ந்திருக்க முடியாது என்று சாஸ்திரியார் சுட்டிக் காட்டுகிறார் (K.A. Nilakanta Sastri, A Comprehensive History of India, Vol. II, P. 521). ஆனால், சாஸ்திரியாரும் முடியும் கண்ணியும் உதவாமற் போனது ஏன் என்பதற்குக் காரணம் கூறவில்லை.

பொன்முடியும் கண்ணியும் முடிசூட உதவாமற் போனதற்குத் தகுந்த காரணம் உண்டு. அக்காரணம் என்ன வென்றால், இவனுடைய தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெரு விறற்கிள்ளியோடு போர் செய்து போர்க்களத்தில் புண்பட்டு விழுந்து கிடந்து பிறகு உயிர் நீங்கினான் என்பதை முன்பு கூறினோமல்லவா? அவன் போர்க்களத்தில் விழுந்த சமயத்தில் அவன் புனைந்திருந்த முடியும் கண்ணியும் சிதைந்து போயிருக்கக் கூடும். அல்லது கெட்டுப் போயிருக்கக்கூடும். ஆகையினாலே, திடீரென்று முடிசூட்டுவிழா ஏற்பட்ட காரணத்தினால், அவ்வமயம் பொன்முடியும் கண்ணியும் உதவாமற் போகவே, அச்சமயத்துக்கு வாய்ப்பாகக் களங்காயாற் கண்ணியும் நாரினால் முடியும் புனைந்து முடி சூட்டப்பட்டான். இதுவே களங்காய்க் கண்ணியும் நார்முடியும் சூடியதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இவன் எக்காலமும் நார்முடியையே தரித்திருக்க வில்லை. நவமணிகள்பதித்த முத்து வடங்கள் சூழ்ந்த மணி முடியைத் தரித்துக் கொண்டிருந்தான்.


இலங்கு மணிமிடைந்த பசும்பொற் படலத்து
அவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்கச்
சீர்மிகு முத்தந் தைஇய
நார்முடிச் சேரல்...

(4ஆம் பத்து 9 : 14-17)

என்று இவன் கூறப்படுகிறான். ஆனாலும், நார்முடிச் சேரல் என்ற பெயரே இவனுக்கு நிலைத்துவிட்டது.

சேரமன்னர் கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாகக் கைப் பற்றிச் சேர இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டு வருவதைக் கண்ட கொங்கு நாட்டுத் தகடூர் மன்னனாகிய நெடுமிடல் எழினி என்பவன் பாண்டியனுடைய உதவியுடன் இச்சேரனை எதிர்த்தான். அவனை நார்முடிச்சேரல் தோல்வியுறச் செய்தான்.


நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்
பெருமலை யானையொடு புலங்கெட இறுத்து

(4ஆம் பத்து 2 : 10-11)

நார் முடிச்சேரல் பல போர்களைச் செய்ய வேண்டியிருந்தது. அந்தப் போர்களில் கடுமையானது துளு நாட்டு நன்னனுடன் செய்த போர். இந்தப் போர்களில் இவனுடைய தம்பியராகிய சேரன் செங்குட்டுவனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், பெருஞ்சேரல் இரும்பொறையும் உதவியாக இருந்தார்கள்.

சேர நாட்டுக்கு வடக்கேயிருந்த துளு நாட்டு நன்னன், சேர நாட்டின் வட பகுதியிலிருந்த பூழி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். மேலும், நன்னன் கொங்கு நாட்டின் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டிருந்தான். நன்னனுடைய வளர்ச்சி சேர நாட்டின் வீழ்ச்சியாக இருந்தது. ஆகையால், நார் முடிச்சேரல் நன்னன்மேல் படையெடுத்தான். வலிமைமிக்க நன்னனும் பின்வாங்கவில்லை. இந்தப் போர் நிலைச்செருவாகச் சில காலம் நடந்தது. கடைசியில் நார்முடிச் சேரல் வெற்றிபெற்றான். தான் இழந்த பூழி நாட்டை மீட்டுக் கொண்டு பிறகு நன்னனுடைய துளுநாட்டிலும் புகுந்து போர்செய்தான். இப்போரில் சேரன் செங்குட்டுவன் நன்னனுடைய நாட்டில் கடற்கரைப் பக்கமாகப் புகுந்து அவனுடைய நாட்டைத்தாக்கிப் போர் செய்து வியலூர், கொடுகூர், நறவு முதலிய ஊர்களைக் கைப்பற்றினான். நார்முடிச் சேரல் மற்றொரு பக்கமாக நன்னனைத் தாக்கினான். இவன் தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் மற்றொரு புறத்தில் தாக்கிப் போரிட்டான். இவர்களை எதிர்த்த நன்னன் கடம்பின் பெருவாயில், வாகைப் பெருந்துறை என்னும் இடங்களில் போர் செய்தான். கடைசியில் நன்னன் தோல்வியுற்றுப் போர்க்களத்தில் இறந்து போனான். துளு நாடு (கொங்கண நாடு) சேரருக்குக் கீழ்ப்படிந்தது. இச்செய்தியை,


எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்
பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன்
சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த
தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்

(4ஆம் பத்து 10 : 13-16)

என்றும்,


ஊழின் ஆகிய உயர்பெருஞ் சிறப்பில்
பூழிநாட்டைப் படையெடுத்துத் தழீஇ
உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செருவின் ஆற்றலை யறுத்தவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச்
செருப்பல செய்து செங்களம் வேட்டு

(4ஆம் பத்து, பதிகம்)

என்றும் பதிற்றுப்பத்து 4ஆம் பத்து கூறுகிறது

கல்லாடனார் என்னும் புலவரும் இந்த வெற்றியைத் தம்முடைய செய்யுளில் போற்றுகிறார்.

குடா அது
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய
வலம்படு கொற்றந் தந்த வாய்வாள்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன வளம்

(அகம் 199 : 18-24)

இவ்வாறு, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் காலத்தில் கொங்கண நாடாகிய துளு நாடு சேர இராச்சியத்துக்கு அடங்கியது. நன்னனுடைய மகன் சேர அரசருக்குக் கீழடங்கித் துளு நாட்டை யரசாண்டான். அவன் 'நன்னன் உதியன்' என்று பெயர் பெற்றான். பரணர் என்னும் புலவர், தாம் பாடிய அகநானூற்றுச் செய்யுளில்,


நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்
தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த பொன்

(அகம் 258 : 1-3)

என்று நன்னன் உதியனைக் கூறுகிறார். நன்னன் என்பது துளு நாட்டு அரசர் குடிப்பெயர், உதியன் என்பது சேர நாட்டு அரசர் குடிப்பெயர். சேரனுக்கு அடங்கியவன் என்பதற்காக இவன் தன் பெயருடன் உதியன் என்னும் பெயரைச் சூடிக் கொண்டான்.

களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் இருபத்தையாண்டு அரசாண்டான். இவன்மீது நான்காம் பத்துப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பவர். "பாடிப்பெற்ற பரிசில்: நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதில் பாகங்கொடுத்தான் அக்கோ."

பெருஞ்சேரல் இரும்பொறை (தாயாதி அண்ணன்)

இவன் செங்குட்டுவனின் தாயாதி அண்ணன், இளைய கால் வழியில் வந்த செல்வக்கடுங்கோ வாழியாதனின் மகன் இவன். இவனும் நார்முடிச் சேரலின் காலத்தில் இருந்தவன். இடையர் குலத்தில் பிறந்த கழுவுள் என்பவன் குறும்பு செய்து கொண்டிருந்ததை இவன் அடக்கினான்.

ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப்
பதிபாழாக வேறுபுலம் படர்ந்து

(8ஆம் பத்து. 1 : 17-18)

அந்தக் கழுவுள் எந்த நாட்டில் இருந்தான் என்பது தெரியவில்லை. இவன் யாகங்களைச் செய்தான் என்று கூறப்படுகிறான் (8ஆம் பத்து. 4) தன்னுடைய புரோகிதனாகிய நரைமூதாளனைத் துறவு கொள்ளும்படிச் செய்தான்.


முழுதுணர்ந்த தொழுக்கும் நரைமூ தாளனை
வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்
தெய்வமும் யாவதும் தவமுடையோர்க் கென
வேறுபடு நனந்தலைப் பெயரக்
கூறினை பெருமநின் படிமை யானே

(8ஆம் பத்து. 4 : 24-28)

கொங்கு நாட்டில் அதிகமான் அரசர்கள் ஆண்டுவந்த தகடூரை இவன் வென்றான்.

வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயில் இறும்பிற் றகடூர் நூறி

(8ஆம் பத்து. 8: 8-9)

இவன் காலத்தில் தகடூரை ஆட்சி செய்தவன் அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன். நெடுமான் அஞ்சி, அதிகமான் நெடுமிடல் அஞ்சியின் மகன். நெடுமிடல் அஞ்சி, பெருஞ்சேரல் இரும்பொறையின் தமயனான நார்முடிச்சேரலினால் வெல்லப் பட்டவன். பிறகு அவன் துளு நாட்டு நன்னனுடன் போர் செய்து மாண்டான். அவன் மகனான நெடுமான் அஞ்சியுடன் பெருஞ் சேரல் இரும்பொறை போர் செய்து தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். அஞ்சிக்கு உதவியாகச் சோழனும் பாண்டியனும் இருந்தனர். தகடூர்ப் போரில் கடைசியாக வெற்றி பெற்றவன் பெருஞ்சேரல் இரும்பொறை.


பல்வேற் றானை யதிக மானோடு
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசுங் குடையும் கலனுங் கொண்டு
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத்
துகள்தீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத்
தகடூர் எறிந்து நொச்சிதந் தெய்திய
அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சேரல் இரும்பொறை

என்று இவனை எட்டாம் பத்துப் பதிகம் கூறுகிறது.

இவனை 8ஆம் பத்துப் பாடியவர் அரிசில்கிழார். இப்பத்தைப் பாடியதற்குப் பரிசிலாக இவர் இவனுக்கு அமைச்சராக அமர்ந்தார் "பாடிப் பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் (அரசனும் அரசியும்) புறம்போந்து நின்று கோயிலுள்ளவெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டில் (சிம்மாசனம்) கொடுக்க அவர் யான் இரப்ப இதனை ஆள்க வென்று அமைச்சுப்பூண்டார்." என்று 8ஆம் பத்தின் அடிக் குறிப்புக் கூறுகிறது.

தகடூரை வென்ற பிறகு இவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்று பெயர் பெற்றான். தகடூர்ப் போரைப் பற்றித் 'தகடூர் யாத்திரை' என்னும் ஒரு நூல் இயற்றப்பட்டது. அந்நூல் இப்போது மறைந்துவிட்டது. அந்நூலின் சில செய்யுட்களைத் தொல்காப்பியப் புறத்திணையியலின் உரையில் நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டியுள்ளார். புறத்திரட்டிலும் சில செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை புலவர்களிடத்தில் பெருமதிப்புக்கொண்டு அவர்களைப் போற்றினான். இவனுடைய முரசு வைக்கும் கட்டிலிலிருந்த முரசைக் கழுவுவதற்குக் கொண்டு போயிருந்தார்கள். அவ்வமயம் மோசிகீரனார் என்னும் புலவர், அது முரசு கட்டில் என்பதை அறியாமல் அதன்மேல் படுத்து உறங்கிவிட்டார். முரசுகட்டில் சிம்மாசனம் போன்று மதிப்புக்குரியது. அதில் யாரும் அமர்வதும் படுப்பதும் கூடாது. மோசிகீரனார் அதில் படுத்து உறங்குவதைக் கண்ட பெருஞ்சேரல் இரும்பொறை இவர் செயலுக்காக வருந்தாமலும், சினங் கொள்ளாமலும் இருந்ததோடு, தன் கையினால் விசிறி கொண்டு அவருக்கு வீசிக் கொண்டிருந்தான். புலவர் விழித்தெழுந்து நடந்ததை யறிந்து அரசனுடைய தமிழன்பை வியந்து பாடினார் (புறம். 50).

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழு யாண்டு அரசாண்டான்.

சேர அரசர் பரம்பரை
(பதிற்றுப்பத்துப் பதிகத்தின்படி)
மூத்த வழி


உதியன்‌ சேரல் வெளியன்‌ வேண்மாள்‌
(வானவரம்பன்‌)நல்லினி
┌───────┴─────────────────┐
வேளாவிக்குடக்கோசோழன்பல்யானைச்
கோமான்│நெடுஞ்சேரல்மணக்கிள்ளிசெல்கெழு
பதுமன்‌ தேவி Iஆதன்மகள்குட்டுவன்
(இமயவரம்பன்)நற்சோணை(3ஆம்‌ பத்து)
2ஆம்‌ பத்து25 ஆண்டு
58 ஆண்டு
┌───────┴───────┐└─┐
களங்காய்க்ஆடுகோட்பாட்டுச்‌│
கண்ணி நார்முடிச்சேரலாதன்
சேரல்‌(வானவரம்பன்‌)
(வானவரம்பன்‌)6ஆம்‌ பத்து
4ஆம்‌ பத்து38 ஆண்டு
25 ஆண்டு
┌─────┴───────┐
இளங்கோகடல்பிறக்கோட்டியஇளங்கோ அடிகள்‌
வேண்மாள்செங்குட்டுவன்‌‌(சிலப்பதிகாரக்
(இமயவரம்பன்‌)காவிய ஆசிரியர்‌)
5ஆம்‌ பத்து
55 ஆண்டு

குட்டுவன்‌ சேரல்‌

இளைய வழி

 அந்துவன்பொறையன்
பொறையன்பெருந்தேவி

செல்வக்கடுங்கோவேளாவிக் கோமான்
வாழியாதன்பதுமன் தேவி
(7 ஆம் பத்து)
25 ஆண்டு

தகடூர் எறிந்தமையூர்கிழான் மகள்
பெருஞ்சேரல்அந்துவஞ்செள்ளை
இரும்பொறை
(8ஆம் பத்து)
17 ஆண்டு

இளஞ்சேரல் இரும்பொறை
(9 ஆம் பத்து)
16 ஆண்டுகள்

சேரன் செங்குட்டுவன்

இவன், இமயவரன்பன் நெடுஞ்சேரலாதனின் மகன் என்பதையும் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் தம்பி என்பதையும் ஆடு கோட்பாட்டுச் சேரலாதனுக்கும் இளங்கோவடிகளுக்கும் தமயன் என்பதையும் முன்னமே யறிந்தோம். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை இவனுடைய தாயாதி அண்ணன் என்பதையும் அறிந்தோம், நெடுஞ்சேரலாதனின் இரண்டு மனைவியரில் சோழன் மணக்கிள்ளியின் மகளான நற்சோணை இவனுடைய தாய். இளமையிலேயே இவன் சிறந்த வீரனாக விளங்கினான். இவன் தன் தந்தை, தமயன்மார்களின் ஆட்சிக் காலத்தில், இளவரசனாக இருந்த போதே, அவர்கள் செய்த போர்களில் இவனும் கலந்து கொண்டு பகைவருடன் போர் செய்திருக்கிறான். இவன் அரசாட்சிக்கு வந்தபோதும் பல போர்களைச் செய்து வெற்றி பெற்றான். செங்குட்டுவனுடைய தந்தையான நெடுஞ்சேரலாதன், தன் நாட்டுக்கு அருகிலே கடலில் இருந்த தீவு ஒன்றில் இருந்து கொண்டு, தனக்கு எதிராகக் குறும்பு செய்து கொண்டிருந்த பகைவரை வென்று அவருடைய காவல் மரமாகிய கடம்ப மரத்தை வெட்டி அதனால், முரசு செய்தான் என்று முன்னமே கூறினோம் (அகம் 127 : 3-5, 347 : 3-6; பதிற்றுப்பத்து 2 ஆம் பத்து 1: 2-16, 2 : 2-3, 7 : 4-7, 10 : 2-5; சிலம்பு 28 : 135 - 136). இந்தக் கடல்தீவுப் போர், நெடுஞ்சேரலாதன் காலத்தில் நிகழ்ந்தது. ஆனால், இந்தப் போரை முன்நின்று நடத்தி வெற்றி பெற்றவன், அக்காலத்தில் இளைஞனாக இருந்த செங்குட்டுவனே. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. இதனால், நெடுஞ்சேரலாதனுக்காக அவன் மகன் செங்குட்டுவன் இந்தப் போரை நடத்தி வென்றான் என்பது தெரிகின்றது.

பதிற்றுப்பத்து 5 ஆம் பத்து 5 ஆம் செய்யுளில் பரணர் என்னும் புலவர் இக்கடற்போர்ச் செய்தியை இவ்வாறு கூறுகிறார்:


தானைமன்னர்
இனியா ருளரோ நின் முன்னும் இல்லை
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
விலங்குவளி கடவும் துளங்கிருங் கமஞ்சூல்
வயங்குமணி யிமைப்பின் வேல் இடுபு
முழங்கு திரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே

என்று அவர் கூறுகிறார்.

"கடல் மறுத்திசினோராகிய தானைமன்னர் இனியாருளரோ. நின் முன்னும் இல்லையெனக் கூட்டி வினைமுடிவு செய்க. கடல் மறுத்தல் என்றது கடலிற் புக்கு ஒருவினை செய்தற்கு அரிதென்பதனை மறுத்தலை" என்று இதற்கு விளக்கங் கூறுகிறது பதிற்றுப்பத்தின் பழைய உரை.

செங்குட்டுவன் காலத்திலும் அவனுடைய தந்தை நெடுஞ்சேரலாதன் காலத்திலும் இருந்த பரணரே, செங்குட்டுவன்தான் முதல் முதல் கடற்போர் செய்தான், அவனுக்கு முன்பு கடற்போர் செய்தவர் இலர் என்று கூறுகிற படியினாலே செங்குட்டுவன் இந்தக் கடற் போரைத் தன் தந்தை ஏவியபடி செய்தான் என்பது தெரிகின்றது. நெடுஞ்சேரலாதனை 2 ஆம் பத்துப் பாடிய குமட்டூர்க் கண்ணனாரும் இக்கருத்தையே கூறுகிறார்.


பவர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்றெறி முழங்குபனை செய்த வெல்போர்
நாரரி நறவின் ஆர மார்பின்
போரடு தானைச் சேரலாத

(2ஆம் பத்து 1: 12-16)

என்று அவர் கூறுகிறார். இதில் 'கடம்பின் கடியுடை முழு முதல் துமிய ஏஎய்' என்று கூறுவது காண்க (ஏய்=ஏவி). தந்தை ஏவிய படி செங்குட்டுவன் இப்போரைச் செய்து வென்றான். இதனால் தான், கடற்போரை முதல்முதலாகச் செய்தவன் செங்குட்டுவன் என்று பரணர் கூறினார். கடற்போரைச் செய்த காலத்தில் செங்குட்டுவனுக்கு வயது 20 அல்லது 25 இருக்கும்.

அரபு நாட்டிலிருந்தும் எகிப்து, ரோமாபுரி முதலிய நாடுகளிலிருந்தும் வாணிகத்தின் பொருட்டுக் கடல் வழியாக வந்த மரக்கலங்களைச் சேர நாட்டின் துறைமுகப்பட்டினங்களுக்கு வராதபடி இடை மறித்துத் தடுத்துக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த குறும்பர்களை அடக்குவதற்காக இப்போர் நடந்தது என்று கருதலாம். பிளினி என்னும் யவனர் இவ்விடத்தில் கடற்கொள்ளைக்காரர் இருந்தனர் என்று எழுதியுள்ளார். கடற்றீவிலிருந்த இந்தக் குறும்பர்கள் தங்களுக்குக் காவல் மரமாகக் கடம்ப மரத்தை வளர்த்திருந்தார்கள். அந்தக் காவல் மரத்தைத்தான் செங்குட்டுவன் வெட்டினான். அந்தக் குறும்பர்கள், துளு நாட்டு நன்னனுக்கு அடங்கியிருந்த துளுவர் எனத் தோன்றுகின்றனர்.

தந்தையும் மகனும் சேர்ந்து நடத்திய போர் ஆகையினாலே, கடம்பறுத்த செய்தி இருவர் மேலும் கூறப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில் திரு. மு. இராகவையங்கார் அவர்கள், நெடுஞ்சேரலாதன் செய்த கடற்போர் வேறு, செங்குட்டுவன் செய்த கடற்போர் வேறு என்று பொருள்பட எழுதியிருப்பது தவறாகும்.


கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்

(சிலம்பு 29, வள்ளைப்பாட்டு, 3)

என்றும்,


பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்
கங்கைப் பேரியாற் றுக் கரை போகிய
செங்குட்டுவன்

(சிலம்பு. 30, கட்டுரை: 12-14)

என்று செங்குட்டுவன் செய்த கடற்போர்ச் செய்தி சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது.

செங்குட்டுவனின் கடற் போரைப் பரணர் ஒரு செய்யுளில் உயர்வு நவிற்சியாக நயம்படக் கூறுகிறார். நிலத்திலே போர் செய்வதற்குப் பகையரசர் கிடைக்காத படியாலே செங்குட்டுவன் கடலில் சென்று போர் செய்தான் என்று அவர் கூறுகிறார்.


படைநிலா விலங்கும் கடல்மருள் தானை
மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஓங்குதிரைப் பௌவம் நீங்கவோட்டிய
நீர் மாண் எஃகம்

(அகம். 212 : 15-20)

என்று அவர் கூறுகிறார்.

செங்குட்டுவனுடைய கடற்போர் அவனுக்குப் பெரும்புகழை உண்டாக்கிற்று,


கடம் பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்

(சிலம்பு. 29, ஊசல்வரி)

என்றும்,

பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்
கங்கைப் பேரியாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்

(சிலம்பு. 30, கட்டுரை, 12-14)

என்றும்,

நீர்புக்குக்
கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ

(5ஆம் பத்து. 8 : 3-4)


என்றும் இவன் புகழப்படுகிறான். கடற்போரில் வெற்றி பெற்ற படியால் இவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்றும் சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் என்றும் சிறப்புப் பெயர் பெற்றான்.

செங்குட்டுவனின் தமயனான களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் அரசாட்சிக்காலத்தில் கொங்காணத்து (துளு நாட்டு) நன்னனுடன் போர் நடந்தது. அப்போர் நிலைச் செருவாகப் பல காலம் நடந்தது. அந்தப் போரிலும் செங்குட்டுவன் தன் தமயன் சார்பாகப் போர் செய்து வெற்றி பெற்றான்.

கொங்காணத்து (துளு நாட்டு) நன்னனுடன் இவர்கள் போர் செய்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், சேரர்களுக்கு உரியதாயிருந்த பூழி நாட்டை நன்னன் கைப்பற்றிக் கொண்டது. இரண்டாவது காரணம், சேரர், கொங்கு நாட்டின் தென் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும் போது, நன்னன் கொங்கு நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டிருந்தான். நன்னனின் ஆக்கமும் உயர்வும் சேரர்களுக்கு ஆபத்தாக இருந்தது. இக்காரணங்களினால் நார்முடிச் சேரல் துளு நாட்டு நன்னனுடன் போர் செய்தான். சேரர், துளு நாட்டை மூன்று பக்கங்களிலிருந்து தாக்கினார்கள். துளு நாட்டின் தெற்குப் பக்கத்திலிருந்து நார்முடிச்சேரல் தாக்கினான். கிழக்குப் பக்கத்திலிருந்து அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தாக்கினான். மேற்குப் பக்கத்தில் கடற்கரையோரமாகச் செங்குட்டுவன் தாக்கினான். துளு நாட்டு நன்னனும் சேனைப் பலமுள்ளவன். ஆகையால் அவன் இவர்களைக் கடுமையாக எதிர்த்தான். இப்போர் நிலைச்செருவாகப் பலகாலம் நடந்தது என்பதை முன்னமே கூறினோம். மேற்குக் கடற்கரைப் பக்கமாகப் போர் செய்த செங்குட்டுவன் துளு நாட்டுக் கடற்கரைப் பக்கத்திலிருந்த வியலூர், கொடுகூர் என்னும் ஊர்களை வென்று கைப்பற்றினான்.

உறுபுலி அன்ன வயவர் வீழச்
சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து

(பதிற்று . 5ஆம் பத்து, பதிகம்)

என்று பரணரும்,

கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின்
சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின்

(சிலம்பு 28 : 114 - 115)

என்று இளங்கோவடிகளும் இச்செய்தியைக் கூறுகிறார்கள்.

வியலூர் துளு நாட்டில் இருந்தது என்பதை மாமூலனார் என்னும் புலவர்,


அகவுநர்ப் புரந்த அன்பிற் கழல்தொடி
நறவுமகி ழிருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர்

(அகம் 97 : 11-13)

என்று கூறினார்.

சேர அரசர்கள் கொங்கு நாட்டைக் கொஞ்சங் கொஞ்சமாகக் கைப்பற்றினார்கள் என்று முன்னமே கூறினோம். கொங்கு நாட்டில் பேரரசன் இல்லாமல் சிறுசிறு குறுநில மன்னர்கள் இருந்தபடியால் அவர்களைச் சேரர் எளிதாக வென்று அந் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது சோழ பாண்டிய அரசர் வாளா இருக்கவில்லை. கொங்கு நாட்டுச் சிற்றரசர்களுக்கு உதவியாக இருந்து சோழரும் பாண்டியரும், சேரர் கொங்கு நாட்டைக் கைப்பற்றாதபடி தடுத்து வந்தார்கள். அதனால் சோழ பாண்டியருடன் சேர அரசர் போர் செய்ய வேண்டியதாயிற்று. செங்குட்டுவனுடைய பங்காளித் தமயனான தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும்பொறை கொங்கு நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருந்த போது, சோழ பாண்டியர் கொங்கருடன் ஒன்று சேர்ந்து அவனை எதிர்த்தார்கள். அப்போது செங்குட்டுவன், அண்ணனான பெருஞ்சேரலிரும்பொறைக்கு உதவியாகச் சென்று சோழ பாண்டியருடன் போர் செய்து வென்றான். இச்செய்தியை இளங்கோவடிகள்,


நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக்
கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி
பகைப்புறத்துத் தந்தனர் ஆயினும் ஆங்கவை
திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன

(சிலம்பு 25 : 152 - 158)

என்றும்,


கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவாரிய ரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டம் கட்புலம் பிரியாது

(சிலம்பு 25 : 156-159)

என்றும் அமைச்சனாகிய வில்லவன் கோதை கூறியதாகச் சிலப்பதிகாரம் கூறுவது காண்க. இப்போரில் கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்களர், கங்கர், கட்டியர், ஆரியர் ஆகிய பல நாட்டு வீரர்கள் போர் செய்தது கூறப்படுகிறது. இதில் கூறப்பட்ட பங்களர், கட்டியர், கங்கர் என்பவர்கள் அக்காலத்துத் தமிழகத்தின் எல்லைப் புறத்தில் இருந்தவராவர். பங்களர் என்பவர் பங்கள நாட்டவர். பங்கள நாடு, வேங்கடமலைக்கு மேற்கே இருந்த தமிழகத்தின் எல்லைப்புற நாடு. பங்கள நாட்டைப் பற்றிய சாசன எழுத்துக்கள் சில தமிழில் கிடைத்துள்ளன. இந்தப் பங்களரைப் பங்களார் (வங்காளர்) என்று தவறாகக் கருதிக் கொண்டு பங்காளர் என்னும் பெயரைக் கூறுகிற சிலப்பதிகாரம் பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல், சங்ககாலத்து நூல் அன்று என்று பிழையான கருத்தைத் திரு. வையாபுரிப் பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி போன்ற அறிஞர்கள் தவறாக எழுதியுள்ளார்கள் (இவர்களின் தவறான முடிபை முன்பு ஒரு கட்டுரையில் மறுத்து எழுதியிருக்கிறேன்).

செங்குட்டுவன் செய்த போர்களில் மற்றொரு போர், பேர்பெற்ற மோகூர்ப் போர். மோகூர் என்பது பாண்டி நாட்டில் மதுரைக்கு வடகிழக்கே 7 மைல் தூரத்தில் இருக்கிறது. இது பிற்காலத்தில் வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகத் திருமோகூர் என்று பெயர் பெற்று விளங்குகிறது. மோகூரைப் பழையன் என்னும் குடிப் பெயரையுடைய சிற்றரசர் பரம்பரையாக ஆண்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் பாண்டிய அரசர்களின் சேனைத் தலைவராக இருந்தவர்கள். அந்தப் பழையர்களில் ஒருவன் அறுகை என்னும் வீரனை வென்று புகழ் பெற்றிருந்தான். தோல்வியடைந்த அறுகையின் சார்பாகச் செங்குட்டுவன் மோகூரின் மேல் படையெடுத்துச் சென்று, பழையனுடன் போர் செய்து வென்று, அவனுடைய காவல்மரமாக இருந்த வேப்பமரத்தை வெட்டி, அதனால் முரசு செய்தான். செங்குட்டுவனுடைய இந்த மோகூர்ப் போர் வெற்றியை 5ஆம் பத்தில் பரணர் பாடுகிறார்:


நுண்கொடி யுழிஞை வெல்போர் அறுகை
சேணன் ஆயினும் கேள்என மொழிந்து
புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்கு
அரண்கள் தாவுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன
மோகூர் மன்னன் முரசங் கொண்டு
நெடுமொழி பணித்தவன் வேம்புமுதல் தடிந்து
முரசுசெய முரற்சிக் களிறுபல பூட்டி
ஒழுகை யுய்த்த கொழுவில் பைந்துணி

(5 ஆம் பத்து. 4 : 10-17)

என்றும்,


வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து
மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழூஉநிலை அதிர மண்டி
… … … … … … … … … … … … … … … … … … … … …
படுபிணம் பிறக்கப் பாழ்பல செய்து
படுகண் முரசம் நடுவட் சிலைப்ப
வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக்
கருஞ்சினை விறல்வேம் பறுத்த
பெருஞ்சினக் குட்டுவன்

(5ஆம் பத்து, 9 : 7-17)

என்றும்,


பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
முரரை முழுமுதல் துமியப் பண்ணி
வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர்
பல்லிருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி

(5ஆம் பத்து, பதிகம். 13-17)

என்றும் இப்போர்ச் செய்தி கூறப்படுகிறது.

(பழைய உரை: வாலிழை கழிந்த பெண்டிர் என்றது அப்பழையன் பெண்டிரை. கூந்தல் முரற்சி என்றது, அவர் கூந்தலை அரிந்து திரித்த கயிற்றினை, குஞ்சர ஒழுகை பூட்டியது அப்பழையன் வேம்பினை ஏற்றிக் கொண்டு போதற்கு.)

பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு
வேம்பு முதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப்
போந்தைக் கண்ணி பொறைய

(சிலம்பு 27 : 124-126)

என்று இப்போர்ச் செய்தியை இளங்கோவடிகள் கூறுகிறார். செங்குட்டுவனுடைய மோகூர்ப் போர் இவ்வளவு பெருமையடைந்ததற்குக் காரணம் என்ன வென்றால், மோகூர் பழையனுக்கு உதவியாகப் பாண்டியனும் சோழனும் வேறு சில வேளிர்களும் வந்து செங்குட்டுவனுடன் போர் செய்தபடியால் தான். ஆகவே, செங்குட்டுவன் பலமான எதிர்ப்பைத் தாங்கி வெல்ல வேண்டியதாயிருந்தது.

குறிப்பு : மோகூரின் மேல் மோரியர் படையெடுத்து வந்து போர் செய்தனர் என்றும் கூறப்படுகிறது. வம்பமோரியர், மோகூரின் மேல் படையெடுத்து வந்ததற்குச் சான்று மாமூலனாரின் அகப்பாட்டு. (அகம் 251). இச்செய்யுளில் மாமூலனார்,

வெல் கொடித்
துனைகா லன்ன புனைதேர்க் கோசர்
தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில்
இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி யுருளிய குறைத்த
இலங்குவெள் ளருவிய அறைவாய் உம்பர்,

(அகம் 251 : 6-14)

என்று கூறுகிறார். மோரியர் (மௌரியர்) மோகூரின் மேல் படையெடுத்து வந்ததைப் பற்றி (அகம் 281 : 7-12, 69 : 10-12, 62 : 10-11; புறம் 175 : 6-8) வேறு சில செய்யுட்களும் கூறுகின்றன. ஆனால், இச்செய்யுட்கள் மௌரியரைக் கூறுகின்றன; மோகூரைக் கூறவில்லை. மோரியர், மோகூரின் மேல் படை யெடுத்து வந்த செய்தியைக் கூறுவது மாமூலனாரின் ஒரே ஒரு செய்யுள் மட்டுந்தான். அச்செய்யுட் பகுதி மேலே காட்டப் பட்டது.

மோரியர் மோகூரின்மேல் படையெடுத்து வந்தது பற்றிப் பல அறிஞர்கள் ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். பி. டி. சீநிவாச அய்யங்கார், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார், மு. இராகவையங்கார் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார், இலக்கண விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர், இராமச்சந்திர தீக்ஷிதர் முதலிய பல அறிஞர்கள் இது பற்றி எழுதியிருக்கிறார்கள். திரு. மு. இராகவையங்கார் அவர்கள் தாம் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில், மோகூர் - மௌரியர் போரைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்: "மோரிய வரசர் திக்குவிசயஞ் செய்து கொண்டு தென்றிசை நோக்கி வந்தபோது, இப்பழையன் அவர்களுக்குப் பணியாமையால், அவர்க்கும் இவனுக்கும் பெரும்போர் நிகழ்ந்ததென்று தெரிகின்றது" என்று எழுயிருக்கிறார். மற்றும் பல அறிஞர்கள் இது பற்றிப் பல கருத்துக்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அவை எல்லாம் தவறானவை. மாமூலனார் செய்யுளில் ஒரே ஒரு எழுத்துப் பிழை ஏடெழுதுவோரால் நிகழ்ந்துவிட்டது என்று நான் கருதுகிறேன்.

மோகர் என்று எழுதப்பட வேண்டியது மோகூர் என்று எழுதியதுதான் அந்தப் பிழை என்று கருதுகிறேன்.


தெம்முனை சிதைத்த ஞான்றை மோகர்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழுதானை வம்ப மோரியர்

என்று அது இருக்க வேண்டும். மோகர் பணியாமையின் என்று இருக்க வேண்டிய சொல் மோகூர் பணியாமையின் என்று ஏடெழுதுவோரால் பிழையாக எழுதப்பட்டிருக்க வேண்டும். மோகர் என்பவர் கொங்கண நாட்டின் (துளு நாட்டின்) கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்த போர்ப் பிரியராகிய ஓர் இனத்தார். அவர்கள் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்திருந்தனர். அவர்களுடைய சந்ததியார் இன்றும் மோகர் என்னும் அந்தப் பெயருடனே துளு நாட்டில் (தென் கன்னட மாவட்டம்) இருக்கிறார்கள். (See Thurston's Caste and Tribes of South India) பாண்டி நாட்டிலும் பரதவர் என்னும் இனத்தார் போர் விருப்ப முடையவராகப் பாண்டியனுக்கு அடங்காமல் குறும்பு செய்து கொண்டிருந்தபோது அவர்களை நெடுஞ்செழியன் வென்று அடக்கினான் என்பதை அறிகிறோம். இதை மதுரைக் காஞ்சி 'தென்பரதவர் மிடல்சாய' என்று கூறுகிறது. அது போன்று, துளு நாட்டு மோகர் பணியாமையினால் அவர்களை வெல்வதற்கு மோரியப் படை வந்தது. இச்செய்தியைத்தான் மாமூலனார் தம் செய்யுளில் கூறினார். மோகர் என்னுஞ் சொல் மோகூர் என்று தவறாக எழுதப்பட்டபடியால், அது பல ஆராய்ச்சிக்கு இடங்கொடுத்துப் பலப்பல முடிவுக்கு இடமாயிற்று. இது பற்றி விரிவாக எழுதுவதற்கு இது இடமன்று.

சோழ நாட்டிலும் செங்குட்டுவன் ஒரு போரை வென்றான் என்று 5ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது.

வெந்திறல்
ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து
நிலைச் செருவின் ஆற்றலை யறுத்து

(பதிகம் 17-20)

(குடிக்குரியோர் என்றது அரசிற்குரியாரை என்று பழையவுரை விளக்கங்கூறுகிறது). சோழன் கரிகாலன் இறந்த பிறகு அவன் மகனான கிள்ளிவளவன் முடி சூடியபோது சோழ அரசர் குடியில் பிறந்த தாயாதிகள் ஒன்பது பேர் முன்வந்து தங்களுக்கு ஆட்சியுரிமையுண்டென்று குழப்பம் உண்டாக்கினார்கள். அதனால் சோழ நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்தது. அது நிலைச்செருவாக நீண்டு நடந்தது. அப்போது செங்குட்டுவன், தன் மைத்துனனான கிள்ளிவளவன் சார்பாக ஒன்பது அரசருடனும் போர் செய்து வென்று ஆட்சியைக் கிள்ளி வளவனுக்குக் கொடுத்தான். இதனைச் சிலப்பதிகாரமும் கூறுகிறது.


மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநா டழிக்கும் மாண்பினர் ஆதலின்
ஒன்பது குடையும் ஒருபகல் அழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்

(சிலம்பு. நீர்ப்படை: 118-123)

என்றும்,

ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச்செரு வென்று

(சிலம்பு, நடுகல்: 116-117)

என்றும் கூறுவது காண்க. (நேரிவாயில் - உறையூர் தெற்கில் வாயிலதோர் ஊர்: அரும்பதவுரை)

செங்குட்டுவன் வடநாடு சென்றபோது கங்கைக் கரையிலே போர் செய்திருக்கிறான். கங்கைக் கரையில் இவன் இரண்டு போர்களைச் செய்தான் என்பதைச் சிலப்பதிகாரத்தினால் அறியலாம். ஒன்று செங்குட்டுவன் தன் தாயைக் கங்கை நீராட்டக் கொண்டு போனபோது நிகழ்ந்தது. மற்றொரு போர், அவன் கண்ணகிக்கு இமயத்தில் கல்லெடுக்கச் சென்றபோது நிகழ்ந்தது. அவற்றைப் பற்றி யாராய்வோம்.


கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை யாட்டிய அந்நாள்
ஆரியமன்னர் ஈரைஞ் நூற்றுவர்க்
கொருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்

(சிலம்பு. காட்சி 160-165)

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

இதனால், தன் தந்தை நெடுஞ்சேரலாதன் போர்க் களத்தில் புண்பட்டுக் கிடந்து இறந்த பிறகு, இவன் தன் தாயைக் கங்கைக் கரைக்கு அழைத்துச் சென்றதும் அவ்வமயம் அங்கிருந்த அரசர்களுடன் போர் செய்ய நேரிட்டுப் போர் செய்து வென்றதும் அறியப்படுகிறது. இந்தச் செய்தியைப் பற்றி திரு. மு. இராகவையங்கார் தாம் எழுதிய 'சேரன்செங்குட்டுவன்' என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்: 'இனிச் செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதன், முற்கூறியபடி பெருவிறற் கிள்ளியுடன் பொருது இறந்தபோது, அவன் மனைவியரும் உடனுயிர் நீத்தனர் என்பது புறநானூற்றின் 62ஆம் பாடலாற் புலப்படுகின்றது. இதனால், செங்குட்டுவன் தாய் நற்சோணையும் தன் கணவன் சேரலாதனுடன் சககமனஞ் செய்தவள் என்பது பெறப்படும்; ஆயின், அத்தாயின் பொருட்டு அமைத்த பத்தினிப் படிமத்தை (உடன் கட்டையேறிய பத்தினியின் உருவம் வரைந்த சிலை) செங்குட்டுவன் கங்கை நீராட்டச் சென்றவனாதல் வேண்டும். கங்கைக்கரையில் செங்குட்டுவன் நிகழ்த்திய இவ்வரிய செயல் அவனது கன்னிப் போராகக் கருதப்படுகின்றது.'

ஐயங்கார் அவர்கள் கூறுவதுபோல உடன்கட்டை ஏறித் தீக்குளித்த செய்தி புறம் 62ஆம் செய்யுளில் கூறப்படவில்லை. குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியும் போரில் பொருது இருவரும் புண்பட்டு விழுந்து சிலகாலம் உயிர் போகாமல் கிடந்தனர். அப்போது அம்மன்னரின் மனைவியர் அவர்களைத் தழுவிக்கொண்டு வருந்தினார்கள் என்பதே அச்செய்யுளின் வாசகம்.


இடங்கெட ஈண்டிய வியன்கட் பாசறைக்
களங்கொளற் குரியோர் இன்றித் தெருவர
உடன்வீழ்ந் தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி யாங்க மைந்தனரே

(புறம் 62 : 11-15)

என்று அச்செய்யுள் கூறுகிறது. இதில், அவர் மனைவியர் தீக்குளித்த செய்தி கூறப்படவில்லை. அக்காலத்தில், அரசியர், இறந்த கணவருடன் உடன்கட்டை ஏறவேண்டும் என்னும் கட்டாயமும் இல்லை. விரும்பினால் தீப்பாயலாம் என்பதே அக்காலத்து வழக்கம். ஐயங்கார் அவர்கள் கூறுவது போல, செங்குட்டுவன் தாய் தீப்பாய்ந்து இறக்க, அவருடைய எலும்பை அல்லது உருவச்சிலையைச் செங்குட்டுவன் கங்கையில் கொண்டு போய் நீராட்டினான் என்று கொண்டாலும் இழுக்கில்லை. ஆனால், இதுபற்றித் திரு. நீலகண்ட சாஸ்திரியார் கூறுவதுதான் வியப்பாக இருக்கிறது.

மேலே காட்டிய புறம் 62 ஆம் செய்யுள், நெடுஞ்சேரலாதன் இறந்தபோது அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்தார் என்று கூறுவதாகச் சாஸ்திரியாரும் கருதுகிறார். கருதுவதோடு அமையாமல், சிலப்பதிகாரம் கூறுகிற செய்தி அதாவது செங்குட்டுவன் தன் தாயைக் கங்கைக்கு நீராட்டச் சென்ற செய்தி பொய்யான கட்டுக்கதை என்று கூறுகிறார். அதற்கு இவர் அரும்பதவுரையாசிரியர் எழுதியதை ஆதாரம் காட்டுகிறார்.


கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோமகளை யாட்டிய அந்நாள்

என்று சிலம்பு (காட்சிக்காதை 160 - 161) அடிகளுக்கு உரை எழுதுகிற அரும்பத உரையாசிரியர், 'எங்கோமக ளென்றது, செங்குட்டுவன் மாதாவை; அவளை இவன் கொண்டுபோய்த் தீர்த்தமாட்டினதொரு கதை' என்று எழுதுகிறார். அரும்பத உரையாசிரியர், தீர்த்தமாட்டினதொருகதை என்று எழுதியிருப்பதை நீலகண்ட சாஸ்திரியார், அது பொய்க் கதையென்று அரும்பத உரையாசிரியர் கூறியதாகப் பொருள் செய்துகொண்டார்[537]. சரித்திரங்களையும் கதை என்று கூறுவது அக்காலத்து வழக்கம். தேசிங்குராஜன் கதை, கட்டபொம்மன் கதை, முத்துப்பட்டன் கதை, மதுரைவீரன் கதை என்றுதான் கூறப்படுகிறதே தவிர, தேசிங்குராஜன் சரித்திரம், கட்டபொம்மன் சரித்திரம், முத்துப்பட்டன் சரித்திரம் என்று கூறப்படவில்லை. கதை என்று கூறப்படுவதனாலே தேசிங்குராஜன், கட்டபொம்மன் முதலியவர்களைப் பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என்று சாஸ்திரியார் கருதுகிறாரா? இராமாயணக் கதை, பாரதக் கதை என்றுதான் வழங்கப்படுகின்றன. அவையும் இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளன. அரும் பதவுரையாசிரியர் கதை என்று எழுதியதன் கருத்து 'ஒரு வரலாறு' என்னும் பொருளுடையது. சாஸ்திரியார் கருதுவதுபோல பொய்க்கதை என்று பொருள் கொள்வது தவறு. அது உண்மைச் செய்தியே.

செங்குட்டுவன் தன் தாயை உயிருடன் கங்கைக் கரைக்கு நீராட்ட அழைத்துச் சென்றிருந்தாலும் அல்லது இறந்துபோன அவள் எலும்புகளைக் கங்கையில் போடச் சென்றிருந்தாலும் அவன் அதன் பொருட்டுக் கங்கைக்குச் சென்றது உண்மையே. செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோ அடிகளே இதனைக் கூறுவதனால் இதை உண்மை என்றே கொள்ளலாம். சாஸ்திரியார், சிலப்பதிகாரத்தைப் புனைகதை என்று கூறுவதற்கு எத்தனையோ தவறான சான்றுகளைக் காட்டுகிற வகையில் இதையும் ஒரு சான்றாகக் கொண்டார். எனவே, செங்குட்டுவன் கங்கையில் நீராட்டினான் என்பது நிகழ்ந்திருக்கக் கூடிய நிகழ்ச்சியே. இது செங்குட்டுவன் இளவரசனாக இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி.

செங்குட்டுவன் தன் முதிர்ந்த வயதில் இரண்டாம் முறையாகக் கங்கைக்குச் சென்றது கண்ணகிச் சிலை செய்யக் கல்கொண்டு வருவதற்காக வடநாடு சென்ற போது. இச்செய்தியை இவன்மேல் பாடப்பட்ட 5ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது.


கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
கானவில் கானங் கணையிற் போகி
ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை
இன்பல் அருவிக் கங்கை மண்ணி

(5ஆம் பத்து, பதிகம்)

என்று பதிகம் கூறுகிறது.

இதிலும் திரு. கே.எ. நீலகண்ட சாஸ்திரியார் குறை காண்கிறார். சிலப்பதிகாரம் நிகழ்ச்சிகளை அழகுபடுத்தி அலங்கரித்துக் கூறுகிறது என்று இவர்குறை கூறுகிறார். ஒரு ஆரிய அரசனை வென்றதை ஆயிரம் அரசரை வென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது என்று சுட்டிக் காட்டுகிறார். சிலப்பதிகாரம் சரித்திர வரலாற்றைக் கூறுகிற காவிய நூல் என்பதைச் சாஸ்திரியார் மறந்துவிட்டு, அதைச் சரித்திரத்தை மட்டும் கூறுகிற தனி வரலாற்று நூல் என்று கருதிக் கொண்டு இவ்வாறெல்லாம் குறை காண்கிறார். காவிய நூலில் அலங்காரங்களும் கற்பனைகளும் இல்லாமற் போனால் அழகுபடுமோ? சரித்திர ஆராய்ச்சி செய்கிறவர் காவிய நூலிலே கற்பனைகளைத் தள்ளி விட்டு வரலாற்றை மட்டுங்கொள்ள வேண்டும்.

செங்குட்டுவன் கண்ணகிச் சிலைக்காக வடநாடு சென்றதும் கங்கையில் அச்சிலையை நீராட்டியதும் முதலிய செய்திகள், அவனைப் பரணர் பாடிய 5ஆம் பத்தில் கூறப்படவில்லை. பதிகம் மட்டும் கூறுகிறது. ஏன் பரணர் கூறவில்லையென்றால், அவர் செங்குட்டுவன் மேல் 5ஆம் பத்துப் பாடியபோது இந்நிகழ்ச்சிகள் நிகழவில்லை. அப்புலவர் செங்குட்டுவனுடைய தந்தை, பாட்டன் காலத்திலும் இருந்தவர். அவர் செங்குட்டுவனைப் பாடியபோது மிகுந்த வயதுள்ளவராக இருந்தார். இந்நிகழ்ச்சிகள் செங்குட்டுவனுடைய பிற்கால வாழ்க்கையில் நிகழ்ந்தவை. அப்போது பரணர் இறந்து போனார்.

சேர அரசர் தக்காண தேசத்தை யாண்ட சதகர்ணி அரசருடன் நட்புக் கொண்டிருந்தார்கள் என்பதை முன்னமே கூறினோம். செங்குட்டுவனும் சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) அரசருடன் நட்பாக இருந்தான். அவன் பத்தினிச்சிலைக்குக் கல் கொண்டுவர வடநாடு செல்ல விருப்பத்தைக் கேள்விப்பட்ட சதகர்ணியரசர் (நூற்றுவர் கன்னர்) 'நீர் இமயம் போக வேண்டாம். உமக்கு வேண்டியதை நாங்கள் செய்து தருகிறோம்' என்று தங்கள் தூதுவர் மூலம் சொல்லியனுப்பினார்கள்.


வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த
நூற்றுவர் கன்னரும் கோற்றொழில் வேந்தே
வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது
கடவுள் எழுதவோர் கற்கே யாயின்
ஓங்கிய விமயத்துக் கற்கால் கொண்டு
வீங்கு நீர்க் கங்கை நீர்ப்படை செய்தாங்கு
யாந்தரும் ஆற்றலம் என்றனர் என்று
வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்கஎன

(சிலம்பு - கால்கோள்: 148-155)

அதுகேட்ட செங்குட்டுவன் தான் மற்றொரு காரியத்துக்காகவும் வடநாடு போவதாக அவர்களுக்குத் தெரிவித்துக் கங்கையாற்றைக் கடந்து போவதற்கு தோணிப்பாலம் முதலியன செய்து தரும்படித் தூதுவர் மூலம் சதகர்ணியரசருக்குக் கூறினான்.


நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன
வங்கப் பெருநிரை செய்க தாம்

(சிலம்பு - கால்கோள்: 164-165)

என்று தூதுவர் மூலம் நூற்றுவர்கன்னர்க்குச் செய்தி சொல்லியனுப்பியதாகச் சிலம்பு கூறுகிறது.

இவன் விரும்பியவாறே நூற்றுவர்கன்னர் கங்கையாற்றில் தோணிப்பாலம் அமைத்துத் தந்தனர்; இவன் தன் சேனைகளுடன் அப்பாலத்தைக் கடந்து இமயஞ் சென்றான்.


பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து
கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற்பெற்ற
வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி

(சிலம்பு - கால்கோள்: 175-177)

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

எனவே, செங்குட்டுவன் இமயமலைக்குச் சென்றபோது பேரரசராகிய சதகர்ணியரசரின் உதவிபெற்றுச் சென்றான் என்பதும், அவ்வரசர்கள் இவனுடன் நட்பினராக இருந்தார்கள் என்பதும் தெரிகின்றன.

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தைந்து ஆண்டு வீற்றிருந்தான். இவன் இளவரசுப் பட்டங் கொண்டது முதல் இவ்வாண்டுகள் கணக்கிடப்பட்டன என்று தோன்றுகின்றது.

செங்குட்டுவன் மீது 5ஆம் பத்துப் பாடிய புலவர் பரணர் என்பவர். இதன்பொருட்டு இவர் பெற்ற பரிசில், உம்பற்காட்டு வாரியையும் செங்குட்டுவனுடைய மகனான குட்டுவன் சேரலையும் பெற்றார். செங்குட்டுவன் தன் மகனான குட்டுவன் சேரலைப் பரணருக்குக் கொடுத்தான் என்றால், அவனை அவருடைய மாணவனாகக் கொடுத்தான் என்பது பொருள். எனவே, பரணரிடம் செங்குட்டுவன் மகன் குட்டுவன் சேரல் கல்வி பயின்றான் என்பது தெரிகின்றது.

பரணர் உம்பர்காட்டு வாரியைப் பரிசிலாகப் பெற்றார் என்று கூறப்படுகிறார். செங்குட்டுவனுடைய தந்தையான இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனை 2ஆம் பத்துப் பாடிய குமட்டூர்க் கண்ணனாரும் உம்பற்காட்டில் ஐஞ்ஞூறூர்ப் பிரமதாயம் பரிசிலாகப் பெற்றார் என்பதை இங்கு நினைவுகூரவேண்டும்.

இளஞ்சேரல் இரும்பொறை

இவனுக்குக் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை என்றும், சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை என்றும் பெயர்கள் உண்டு. இவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பியான குட்டுவன் இரும்பொறையன் மகன். அதாவது, செங்குட்டுவனுடைய தாயாதித் தமயனின் மகன். இவனும் செங்குட்டுவன் காலத்தில் இருந்தவன், பொலத்தோப் பொறையன் என்றும் பல்வேற் பொறையன் என்றும் இவன் கூறப்படுகிறான். இவன், சேரநாட்டின் ஒரு பகுதியை யரசாண்டான். எந்தப் பகுதி என்பது திட்டமாகத் தெரியவில்லை. சேர இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த கொங்கு நாட்டையரசாண்டிருக்கக் கூடும். வானியாற்றின் நீர் போன்று மென்மையான உள்ளம் உடையவன் என்று இவன் கூறப்படுகிறான் (பதிற்று. 9ஆம் பத்து. 6 : 12-13) வானியாறு கொங்கு நாட்டில் ஓடுகிறது.

இளஞ்சேரல் இரும்பொறையைப் பதிற்றுப்பத்து 9ஆம் பத்தில் பாடினவர் பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர். இப்புலவர் இவ்வரசனிடம் பரிசு பெறச் சென்றார். ஆனால், இவன் பரிசு கொடுக்கக் காலந் தாழ்த்தினான். அதனால் அவர் மனம் வருந்திப் பாடினார். இப்பாடல்களில் அவருடைய வறுமைத் துன்பம் நன்கு புலப்படுகிறது. (புறம். 210, 211) பரிசு கொடுக்கக் காலந்தாழ்த்திய இளஞ்சேரல் இரும்பொறை, இப்புலவர் அறியாமல் இவருக்கு வீடும் மனையும் ஊரும் அமைத்துப் பிறகு அவற்றைக் கொடுத்தான். 'அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்படவகுத்துக்' கொடுத்தான் என்று பதிற்றுப்பத்து ஒன்பதாம்பத்தின் கீழ்க்குறிப்புக் கூறுகிறது.

பிறகு பெருங்குன்றூர்கிழார் இவ்வரசன் மேல் 9ஆம் பத்துப் பாடினார். இதற்குப் பரிசாக 'மருளிலார்க்கு மருளக்கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரங் காணம்' (காணம்-பொற் காசு) கொடுத்தான்.

இளஞ்சேரல் இரும்பொறை சென்னியர் பெருமான் (சோழன்) ஒருவனை வென்றான்.


நன்மரந் துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேன் முத்தைத் தம்மென
… … … … … … … … … … … … … … … … …
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே

(9ஆம் பத்து. 5)

இதற்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் இதனை இவ்வாறு விளக்குகிறார்: 'இளஞ்சேர லிரும்பொறை சென்னியர் பெருமானுடைய நாடுகள் பலவற்றையும் எமக்குக் கொண்டு தந்து அச்சென்னியர் பெருமானை எம்முன்னே பிடித்துக் கொண்டு வந்து தம்மினெனத் தம் படைத் தலைவரை ஏவச் சென்னியர் பெருமான் படையாளர் பொருது தோற்றுப் போகட்ட வெள்வேல் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவன் நாடுகாண் நெடுவரையின் நாள் மகிழிருக்கைக் கண்ணே தன்முன் திணைமுதல்வரைப் போல அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கையைப் பாடின கபிலன் பெற்ற ஊரினும் பலவென மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க.'

இதனால், இவனுடைய படைவீரர் சென்னியர் பெருமான் (சோழன்) உடன் போர் செய்தனர் என்பதும் அப்போரில் சோழனுடைய படைவீரர் தங்கள் வேல்களைப் போர்க்களத்தில் போட்டுவிட்டு ஓடினார்கள் என்பதும், அந்த வேல்களின் எண்ணிக்கை, செல்வக்கடுங்கோ வாழியாதனைப் (பதிற்றுப்பத்து ஏழாம் பத்து) பாடின கபிலர் பரிசாகப் பெற்ற ஊர்களின் தொகையைவிட அதிகமாக இருந்தன என்பதும் தெரிகின்றன. இவ்வாறு தோற்றுப்போன சோழன் பெயர் கூறப்படவில்லை. ஆனால், அச்சோழன் பெயர் 'பொத்தியாண்ட பெருஞ்சோழன்' என்று (9ஆம் பத்துப் பதிகம்) கூறுகிறது. இந்தப் போரைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

மேலும், இளஞ்சேரல் இரும்பொறை ஐந்தெயில் என்னும் கோட்டையை முற்றுகையிட்டுச் சோழன், பாண்டியன், விச்சி, இளம்பழையன் மாறன் என்பவர்கயுைம் வென்று அவர்களிடமிருந்து கொண்டு வந்த பொருள்களை வஞ்சிமூதூரில் வைத்துப் பலருக்கும் வழங்கினான் (9 ஆம் பத்து, பதிகம், அடி 3-9)

பூதர் என்னும் தெய்வங்களைக் கொண்டு வந்து வஞ்சி மூதூரில் அமைத்து அவற்றிற்குச் சாந்தியும் சிறப்பும் செய்தான். இதனை,


அருந்திறல் மரபிற் பெருஞ்சதுக் கமர்ந்த
வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ
ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு

(9ஆம் - பத்து. 13-15)

என்பதனாலும்


சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன்

(சிலம்பு - நடுகல்: 147-148)

என்பதனாலும் அறியலாம்.

இளஞ்சேரல் இரும்பொறைக்கு அமைச்சனாக இருந்தவர் மையூர்கிழார் என்பவர். மையூர்கிழாரை இவ்வரசன் அறநெறியில் வல்லவனாகச் செய்தான்.

மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரையறு கேள்விப் புரோசு மயக்கி.

என்று 9ஆம் பத்துப்பதிகம் கூறுகிறது. இதற்குப் பழைய உரை, 'அமைச்சியல் மையூர்கிழானைப் புரோசு மயக்கி யென்றது தன், மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும் அறநெறி அறிவானாகப் பண்ணி யென்றவாறு' என்று விளக்கங் கூறுகிறது.

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினான்கு ஆண்டு வீற்றிருந்தான் என்று 9ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது.

இளஞ்சேரல் இரும்பொறை செங்குட்டுவனுக்கு முன்னமே, செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்னமே இறந்து போனான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.


சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்
மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின்
யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்

என்று சிலம்பு, நடுகற்காதை (147-150) கூறுகிறது காண்க.

(வஞ்சிமா நகரத்தில் சதுக்கப்பூதரை அமைத்தவன் இளஞ் சேரல் இரும்பொறை என்று முன்னமே கூறினோம்). இதனை யறியாமல் திரு. நீலகண்ட சாஸ்திரியார், செங்குட்டுவனுக்குப் பிறகும் இளஞ்சேரல் இரும்பொறை உயிர்வாழ்ந்திருந்தான் என்று கூறுகிறார். செங்குட்டுவன் உத்தேசம் கி.பி. 180-லும், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை உத்தேசம் கி.பி. 190-லும் இருந்தனர் என்று இவர் கூறுவதனால் இது தெரிகிறது (pp. 522, 589, A Comprehensive History of India. Vol II, K.A. Nilakanta Sastri, 1957.) செங்குட்டுவன் உயிரோடு இருக்கும் போதே இறந்துபோன இளஞ்சேரல் இரும்பொறை அவனுக்குப் பிறகு எப்படி உயிர் வாழ்ந்திருக்க முடியும்? இளஞ்சேரல் இரும்பொறை இளமையிலேயே போர்க்களத்தில் இறந்து போனான்போலும்.

செங்குட்டுவன் ஆட்சி

செங்குட்டுவன் காலத்தில் சேர இராச்சியம் பெரியதாக இருந்தது. சேரநாடும் கொண்கான (துளு) நாடும், கொங்கு நாட்டின் பெரும்பகுதியும் இவனுடைய சேர இராச்சியத்தில் அடங்கியிருந்தன. இவனுடைய பாட்டன்மார், தந்தை, சிறிய தந்தை, தமயன் ஆகியோர் சேர இராச்சியதைப் பெரிதாக்கி வளர்த்ததை முன்னமே கூறினோம். மூத்த கால்வழியில் வந்தவன் ஆகையால் சேர இராச்சியத்தின் பேரரசனாகச் செங்குட்டுவன் இருந்தான். இவனுக்குக் கீழடங்கி இவனுடைய தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் இளஞ்சேரல் இரும்பொறையும் சேர நாட்டுப் பகுதிகளையரசாண்டனர்.

செங்குட்டுவனுக்கு ஆட்சித்துணையாக ஐம்பெருங் குழு இருந்தது. ஐம்பெருங் குழு என்பது அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், சாரணர் என்பவர். செங்குட்டுவனுடைய தலைமை அமைச்சன் பெயர் வில்லவன் கோதை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.


பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென
வில்லவன் கோதை வேந்தற்கு உரைக்கும்

(சிலம்பு - காட்சி: 150-151)

('பல்யாண்டு வாழ்க என்று இனிச் சொல்லுகின்றான், வில்லவன் கோதை யென்னும் மந்திரி' என்பது அரும்பதவுரை.) இந்த வில்லவன் கோதை, செங்குட்டுவன் பத்தினிக்குக் கல் எடுக்க வட நாடு சென்றபோது அவனுடன் சென்றான்.


வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேற் றானைப் படைப்பல ஏவி

(சிலம்பு - கல்கோள்: 251-252)

கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து விழா செய்த பிறகு செங்குட்டுவன், விழாவுக்கு வந்திருந்த அரசர்களுக்கு ஏற்றபடி வகைகளைச் செய்து கொடுக்கும்படி அமைச்சனாகிய வில்லவன் கோதையை ஏவினான் என்று சிலம்பு சொல்லுகிறது.

மன்னவர்க் கேற்பன செய்க நீயென
வில்லவன் கோதையை விருப்புடன் ஏவி

(சிலம்பு - நடுக்கல்: 201-202)

சிலப்பதிகாரம் செங்குட்டுவனுடைய புரோகிதனைக் கூறுகிறது. ஆனால், அவன் பெயரைக் கூறவில்லை. அவனை ஆசான் என்று கூறுகிறது. ஆசான் என்பதற்குப் புரோகிதன் என்று அரும்பத உரையாசிரியர் உரை கூறுகிறார். வடநாட்டு வேந்தர் தமிழக வேந்தரை இகழ்ந்து கூறியதற்காகச் செங்குட்டுவன் வஞ்சினஞ் கூறியபோது, அருகிலிருந்த ஆசான் (புரோகிதன்) அவனுடைய கோபம் தணியும்படிச் சில வார்த்தை கூறினான். (சிலம்பு. கால்கோள். 19-24) பத்தினிக் கோட்டத்துக்குச் செங்குட்டுவன் போனபோது ஆசானாகிய புரோகிதனும் உடன் போனான். (சிலம்பு. நடுகல். 222 - 223)

செங்குட்டுவனுடைய சேனைத் தலைவன் பெயர் அழும்பில் வேள் என்று தெரிகிறது. பத்தினிக் கடவுளுக்குக் கல் எடுக்கச் செங்குட்டுவன் வடநாடு செல்லக் கருதியபோது, அமைச்சனாகிய வில்லவன் கோதை, இதற்காகத் தாங்கள் செல்ல வேண்டாம், வட நாட்டரசருக்குக் கடிதம் எழுதினால் அவர்கள் கல் எடுத்து அனுப்புவார்கள் என்று கூற, சேனைத் தலைவனாகிய அழும்பில் வேள், வடநாட்டுச் செலவுபற்றி வஞ்சிமாநகரத்தில் பறையறைந்து தெரிவித்தால் இச்செய்தியை ஒற்றர் மூலமாக வடநாட்டரசர் அறிவார்கள் என்று கூறினான். அதைச் செங்குட்டுவன் ஏற்று அவ்விதமே செய்தான் (சிலம்பு. காட்சி 173 - 178) கண்ணகிக்கு விழா தொடங்கியபோது, சிறைப் பட்டிருந்த அரசர்களைச் சிறையிலிருந்து விடும்படி சேனாபதியாகிய அழும்பில்வேளை ஏவினான்.


சிறையோர் கோட்டம் சீமின் யாங்கணும்
கறைகெழு நாடு கறைவீடு செய்ம்மென
அழும்பில் வேளோடு ஆயக் கணக்கரை
முழங்குநீர் வேலி மூதூர் ஏவி

(சிலம்பு - நடுக்கல். 203 - 206)

செங்குட்டுவனுக்குத் தூதர் பலர் இருந்தார்கள். அத்தூதர்களின் தலைவன் பெயர் சஞ்சயன். அவர்கள் தலைக்கீடு (தலைப்பாகை?) கட்டிச் சட்டையணிந்திருந்தனர்.

சஞ்சயன் முதலா தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈரைஞ் நூற்றுவர்

(சிலம்பு - கால்கோள்: 137-138; 143 - 145)
கங்கையாற்றில் தோணிப்பாலம் அமைக்கும்படி செங்குட்டுவன் சதகர்ணியரசனுக்குக் கூறும்படி சஞ்சயனைத் தூது அனுப்பினான் (சிலம்பு: கால்கோள். 163 - 166).

சாரணர்கள் (ஒற்றர்) பலர் இருந்தனர். அவர்கள் சட்டையணிந்திருந்தனர். அவர்களின் தலைவன் நீலன், போரில் சிறைப் பிடிக்கப்பட்ட கனக விசயரைச் சோழனிடத்திலும் பாண்டியனிடத்திலும் சென்று காட்டிவரும் படி செங்குட்டுவன், நீலன் தலைமையில் ஒற்றர்களை யனுப்பினான். (சிலம்பு - நீர்ப்படை: 187 - 191). அவன் அவர்களை அழைத்துப்போய்க் காட்ட, அவர்களைக் கண்ட சோழனும் பாண்டியனும் சொன்ன செய்தியை நீலன் வந்து செங்குட்டுவனுக்குக் கூறினான் (சிலம்பு. நடுகல். 80 - 109).

செங்குட்டுவன் அவையில் 'பெருங்கணி' என்னும் நிமித்திகன் இருந்தான். செங்குட்டுவனின் வடநாட்டு யாத்திரையிலும் இவன் உடன் சென்றிருந்தான். இவன் முழுத்தம் (முகூர்த்தம்) கணித்து அரசனுக்குரிய நல்ல முழுத்தத்தை அவ்வப்போது கூறிக் கொண்டிருந்தான். இவன்,


ஆறிரு மதியினும் காருக வடிப்பயின்று
ஐந்து கேள்வியும் அமைந்தோன்

(சிலம்பு - கால்கோள்: 25 - 26)

(ஆறிருமதியினும் - இராசி பன்னிரண்டினும்; ஐந்து கேள்வி - நட்பு ஆட்சி எச்சம் பகை நீசக்கோள்; திதி வாரம் நக்ஷத்திரம் யோகம் கரணமுமாம். அரும்பதவுரை).

செங்குட்டுவன் வடநாட்டுக்குப் புறப்படும் நல்ல வேளையைக் கணித்துக் கூறியவன் இவனே. (சிலம்பு- கால்கோள். 27-31)

செங்குட்டுவன் வடநாட்டில் வெற்றி பெற்றுக் கண்ணகிக்குக் கல் எடுத்து நீர்ப்படை செய்த பிறகு அவன் பாசறையில் அமர்ந்திருந்த போது இப்பெருங்கணியன்,

எண்ணான்கு மதியம் வஞ்சிநீங்கியது
மண்ணாள் வேந்தே வாழ்க

(சிலம்பு - நீர்ப்படை: 149-150)


என்று புறப்பட்டு வந்த காலத்தைக் கூறினான். செங்குட்டுவன், கண்ணகிக் கோட்டத்தைக் காணச் சென்றபோது இவனும் உடன் சென்றான் (சிலம்பு - நடுகல்: 222).

செங்குட்டுவன் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பேரரசனாக இவன் இருந்தான். பத்தினிப் படிவம் அமைப்பதற்குக் கல் கொண்டு வர இமயம் போக வேண்டியதில்லை, வடநாட்டரசருக்குத் திருமுகக் கடிதம் எழுதினால் அவர்கள் கல்லை எடுத்து அனுப்புவார்கள் என்று செங்குட்டுவனுக்குக் கூறிய அவன் அமைச்சனான வில்லவன் கோதை, சேர சோழ பாண்டியன் ஆகிய மூவேந்தரின் முத்திரைகளை இட்டுக் கடிதம் எழுதும்படி கூறினான்.


வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்
தென்தமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி
மண்தலை யேற்ற வரைக ஈங்கென

(சிலம்பு - காட்சி: 170 - 172)

(மண்தலை ஏற்ற இலச்சினை மண் (முத்திரை) ஏற்ற ஓலைகளை.)

இவ்வாறு இவன் கூறியது, சோழ பாண்டியருக்கும் மேம்பட்ட சிறப்பைச் செங்குட்டுவன் பெற்றிருந்தான் என்பதைத் தெரிவிக்கிறது. இது வெற்றுப் புகழ்ச்சியன்று, உண்மை நிலையே என்பது சரித்திரத்தை யாராய்ந்து பார்த்தால் தெரிகிறது.

துளு நாடாகிய கொங்கண நாடு இவன் ஆட்சிக்கு அடங்கியிருந்தது. மோகூர்ப் பழையனுடன்செங்குட்டுவன் செய்த போரில் மோகூர்ப் பழையனுக்குத் துணையாகச் சோழ அரசனும் பாண்டிய அரசனும் வந்து செங்குட்டுவனை எதிர்த்துத் தோற்றார்கள். மேலும், சோழன் கிள்ளிவளவன் ஆட்சி ஏற்ற போது, சோழர் குடியிற் பிறந்த ஒன்பது அரசர் அவனை எதிர்த்துப் போராடி உள்நாட்டுக் குழப்பத்தை உண்டாக்கிச் சோழ நாட்டின் அமைதியைக் கெடுத்தார்கள். அப்போதும் செங்குட்டுவன், கிள்ளிவளவன் சார்பாக ஒன்பது அரசருடன் போர் செய்து வென்று கிள்ளிவளவனுக்குச் சோழ ஆட்சியைக் கொடுத்தான் (இவைகளை முன்னமே கூறியுள்ளோம்) இவை யெல்லாம், செங்குட்டுவன் சோழ பாண்டிய அரசரைவிட மேம்பட்டிருந்தான் என்பதைத் தெரிவிக்கின்றன. மேலும் இவன், அக்காலத்துப் பேரரசனாக விளங்கிய நூற்றவர் கன்னர், (சதகர்ணி) என்னும் அரசனின் நண்பனாகவும் இருந்தான். எனவே, இவையெல்லாம் செங்குட்டுவன் தமிழகத்தின் பேரரசனாக இருந்தான் என்பதைத் தெரிவிக்கின்றன அல்லவா?

செங்குட்டுவன் வாழ்க்கை

செங்குட்டுவன், இளங்கோ வெண்மாள் என்னும் அரசியைத் திருமணஞ் செய்திருந்தான். (சிலம்பு - காட்சி. 5) அவளுக்கு வேண்மாள் என்றும் பெயர் உண்டு. 'வதுவை வேண்மாள் மங்கல மடந்தை' (சிலம்பு நடுகல் 51). இவர்களுக்குப் பிறந்த மகன் குட்டுவன் சேரல். குட்டுவன் சேரலைப் பரணருக்குச் செங்குட்டுவன் கொடுத்தான். (5ஆம் பத்துப் பதிகம்). கல்வி கற்பிப்பதற்காகக் கொடுத்தான் போலும்.

செங்குட்டுவன் வாழ்ந்த அரண்மனை 'இலவந்தி வெள்ளி மாடம்' என்று பெயர் பெற்றிருந்தது.

விளங்கில வந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ வேண்மாள் உடனிருந் தருளி

(சிலம்பு. காட்சி 4-5)

வஞ்சிமா நகரத்துக்கு வெளியே கடற்கரைக்கு அருகில் 'வேளாவிக் கோ மாளிகை' என்னும் அரண்மனை இருந்தது.


பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துக்
தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
வேளாவிக்கோ மாளிகை

(சிலம்பு. நடுகல்: 196 - 198)

என்பதனால் இதையறியலாம்.

வேனிற்காலத்தில் செங்குட்டுவன் அரண்மனையில் வசிப்பது இல்லை. பேராற்றங்கரை யோரத்தில் இருந்த மரச்சோலைகளில் கூடாரம் அமைத்து அதில் சுற்றத்தோடு தங்கியிருப்பது வழக்கம். இச்செய்தியைப் பரணர் இவனைப் பாடிய 5ஆம் பத்துச் செய்யுளில் கூறுகிறார்.


நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவிற்
பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை

மேவரு சுற்றமோடு உண்டினிது நுகரும்
தீம்புனல் ஆயம்.

(5ஆம் பத்து. 8 : 13-17)

(பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை யென்றது வேனிற் காலத்து மனையில் வைகாது பொழில்களிலே வதியும் பெரிய செல்வ அழகையுடைய இல்வாழ்க்கை யென்றவாறு... இச்சிறப்பானே, இதற்குப் (இச்செய்யுளுக்கு) 'பேரெழில் வாழ்க்கை' என்று பெயராயிற்று' - பழைய உரை.)

இவனுடைய வேனிற்காலப் பொழில் வாழ்க்கையை இளங்கோவடிகளும் கூறுகிறார்.


வானவர் தோன்றல் வாய்வாட் கோதை
விளங் கிலவந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ வேண்மாள் உடனிருந் தருளித்
துஞ்சா முழவின் அருவி யொலிக்கும்
மஞ்சுசூழ் சோலை மலைகாண்குவ மெனப்
பைந்தொடி ஆயமொடு பரந்தொருங் கீண்டி
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்’
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை
இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப

(சிலம்பு - காட்சி: 3-23)

வழக்கம்போல ஓராண்டு வேனிற் காலத்தில் இவ்வாறு பொழிலில் தங்கியிருந்தபோதுதான் செங்குட்டுவன் கண்ணகியின் செய்தியைக் குன்றம் வாழும் மக்கள் சொல்லக் கேட்டறிந்தான். அப்போதுதான் அவனுக்குக் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைக்கும் எண்ணம் தோன்றியது.

இசைவாணர்களையும் ஆடற் கலைஞர்களையும் இவன் ஆதரித்தான்.

ஆடுசிறை யறுத்த நரம்புசேர் இன்குரல்
பாடு விறலியர் பல்பிடி பெறுக
துய்வீ வாகை நுண்கொடி யுழிஞை


வென்றி மேவ லுருகெழு சிறப்பிற்
கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக
மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே யென்று
மிகல்வினை மேவலை

(5ஆம்பத்து, 3 : 21-29)

இவன், வடநாட்டு யாத்திரையிலிருந்து திரும்பி வந்து வெள்ளி மாடம் என்னும் மாளிகையில் நிலா முற்றத்தில் அரசி வேண்மாளுடன் இருந்தபோது, பறையூர் கூத்தச் சாக்கையன் வந்து கொட்டிச் சேதம் என்னும் கொடுகொட்டிச் சேதக் கூத்தைப் பாடியபோது அதனைக் கண்டு மகிழ்ந்தான் என்பது சிலப்பதிகாரம் படித்தவர் அறிந்ததே.

பத்தினித் தெய்வ வழிபாட்டை இவன் உண்டாக்கினான். இவன் உண்டாக்கிய பத்தினித் தெய்வ வழிபாடு தமிழ்நாடு முழுவதும் பரவியது அல்லாமல் இலங்கையிலும் பரவிற்று. போரில் வீரங்காட்டி இறந்தவருக்கு நடுகல் நட்டுப் போற்றுவது அக்காலத்து வழக்கம். பாண்டிய அரசனிடம் வழக்குத் தொடுத்து அவன் செய்த அநீதியை எடுத்துக்காட்டி வெற்றி பெற்ற கண்ணகி, தன் கற்பு ஆற்றலினால் பாண்டியனின் அரண்மனையையும் எரித்துத் தன் உயிரை உண்ணாவிரதமிருந்து மாய்த்துக் கொண்ட வீரச் செயலைப் பாராட்டி அப்பத்தினிக்கு வழிபாடு அமைத்தான் செங்குட்டுவன். ஆண் மகனுடைய வீரம், பெண் மகளுடைய கற்புக்குச் சமானமானது என்று போற்றினான் செங்குட்டுவன்.

செங்குட்டுவன் காலம்

பதிற்றுப்பத்து, சேர அரசர்கள் ஒவ்வொருவரும் எத்தனை ஆண்டு ஆட்சி செய்தார்கள் என்பதைக் கூறுகிறது. ஆனால், சகாப்த ஆண்டினைக் கூறவில்லை. ஆகவே அவர்கள் அரசாண்ட காலத்தைச் சகாப்த ஆண்டுப்படி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால், நற்காலமாக ஒரு காலக் குறிப்புக் கிடைத்திருக்கிறது. அந்தக் குறிப்பைக் கொண்டு இவ்வரசர்களின் காலத்தை ஒருவாறு கணித்துவிடலாம். செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக்கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்தபோது, அவ்விழாவுக்கு வந்திருந்த அயல்நாட்டு அரசர்களில் இலங்கையரசனான கஜபாகுவும் (முதலாவன்) ஒருவன். இவனைக் கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்று சிலப்பதிகார நூல் கூறுகிறது. இதனால் செங்குட்டுவனும் கஜபாகுவும் (முதலாவன்) சமகாலத்து அரசர்கள் என்பது தெரிகின்றது. முதலாம் கஜபாகு கி.பி. 173 - முதல் 191 - வரையில் அரசாண்டான் என்று மகாவம்ச நூலின் ஆதாரத்தைக் கொண்டு சரித்திர ஆசிரியர்கள் எல்லோரும் முடிவு செய்து ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

கஜபாகு, பத்தினிக் கோட்ட விழாவுக்கு வந்திருந்த ஆண்டு தெரியவில்லை. அவன் ஆட்சிக் காலத்தில் இடைப்பகுதியில், உத்தேசமாகக் கி.பி. 180இல் வந்தான் என்று சொல்லலாம். அதாவது, கி.பி. 180இல் செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்தான் என்று கொள்ளுவோம். அது செங்குட்டுவனின் 50ஆவது ஆட்சி ஆண்டு. எப்படி எனில்,


வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோ யாயினை

(சிலம்பு - நடுகற் காதை. 129-132)

என்றும்,

நரைமுதிர் யாக்கை நீயும் கண்டனை

(சிலம்பு - நடுகல். 158)

என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறபடியினாலே, செங்குட்டுவன் தனது 70ஆம் வயதில் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்தான் என்று கொள்ளலாம். ஐந்து ஆண்டுக்குப் பிறகு தன்னுடைய 75ஆம் வயதில் இவன் காலமாயிருக்க வேண்டும். இவன் இளவரசுப் பட்டம் பெற்றது ஏறத்தாழ கி.பி. 130இல் ஆகும். இவன் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று 5ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுவது, இவனுடைய இளவரசுக் காலத்தையும் சேர்த்தேயாம். எனவே செங்குட்டுவன் ஆண்ட காலம் ஏறத்தாழ கி.பி. 130 முதல் 185 வரையில் என்று உத்தேசமாகக் கொள்ளலாம்.

செங்குட்டுவனுடைய தமயனான நார்முடிச் சேரல் இவனுக்குப் பத்து ஆண்டு மூத்தவன் என்று கொள்ளலாம். அவன் 25 ஆண்டு ஆட்சி செய்தான் என்று 4 ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. எனவே, நார்முடிச்சேரல் உத்தேசமாகக் கி.பி. 120 முதல் 145 வரையில் அரசாண்டான் என்று கொள்ளலாம்.

இவர்களுடைய தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செங்குட்டுவனுக்கு ஏறத்தாழ ஐந்து ஆண்டு இளையவன் என்று கொண்டால் அவன் ஆட்சி செய்த 38 ஆண்டுகள் உத்தேசம் கி.பி.140 முதல் 178 வரையில் ஆகும்.

செங்குட்டுவனுடைய தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் 58 ஆண்டு ஆட்சிசெய்தான் என்று 2ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. எனவே அவன், உத்தேசம் கி.பி. 72 முதல் 130 வரையில் ஆட்சி செய்தான் என்று கொள்ளலாம். செங்குட்டுவனின் சிறிய தந்தையாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டு ஆட்சிசெய்தான் என்று கூறப்படுகிறபடியால், அவன் உத்தேசமாகக் கி.பி. 82 முதல் 107 வரையில் ஆட்சிசெய்தான் என்று கொள்ளலாம்.

செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்ததும் அக்கோட்டத்துக்குக் கஜபாகு வந்திருந்ததும் ஆகிய நிகழ்ச்சிகள் உத்தேசம் கி.பி. 180இல் நிகழ்ந்தன என்று கொண்டு கணித்தால் இந்த முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. இதில் சேர அரசர்கள் ஆண்ட காலம் என்பது அவர்கள் இளவரசுப் பட்டம் பெற்ற ஆண்டையும் சேர்த்துக் கணிக்கப்பட்டது. இவ்வாறு கணித்தால் ஏறத்தாழ மேலே கூறிய முடிவுக்கு வருகிறோம்.

இளையவழி பரம்பரையில் வந்த சேர அரசர்கள் மூத்த வழி அரசரின் சம காலத்தில் சேர நாட்டின் வேறு பகுதிகளையர சாண்டார்கள். ஆகவே, அவர்கள் ஆட்சிகாலமும் மேலே கூறிய மூத்த வழி அரசர் ஆட்சிக் காலத்தில்அடங்கியிருக்கின்றன. அவர்களில் செல்வக் கடுங்கோ வாழியாதன், செங்குட்டுவனுடைய தந்தையாகிய நெடுஞ்சேரலாதன் காலத்தில் 25ஆண்டு ஆட்சி செய்தான். நெடுஞ்சேரலாதனும் செல்வக்கடுங்கோ வாழியாதனும் வேளாவிச் சேரமான் பதுமன்தேவி என்னும் பெயருள்ள தமக்கை தங்கையரை மணஞ்செய்திருந்தார்கள் (4 ஆம் பத்து 8ஆம் பத்துப் பதிகங்கள்) செல்வக்கடுங்கோ வாழியாதனுடைய மகனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் நெடுஞ்சேரலாதனின் மூத்தமகனான நார்முடிச் சேரலும் சமகாலத்தில் இருந்தவர்கள். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனான இளஞ் சேரல் இரும்பொறையும் சேரன் செங்குட்டுவனும் சமகாலத்தில் இருந்தவர்கள். ஆனால், செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்னமே இளஞ்சேரல் இரும்பொறை இறந்து விட்டான். இச்செய்தியைச் சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம்.

சதுக்கப் பூதரை வஞ்சியுள்தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன்

அதாவது இளஞ்சேரல் இரும்பொறை முன்னமே இறந்து போனான் என்று சிலம்பு நடுகற்காதை (147-148) கூறுகிறது.

எனவே, சேர வேந்தர் காலத்தைத் திட்டவட்டமாக அறுதியிட்டுக் கூற முடியாமற் போனாலும் உத்தேசமாக ஏறத்தாழ சரியான ஆண்டுகளைப் பெற முடிகிறது. இதன்படி இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் கி.பி. 72 முதல் 130 வரையிலும், அவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் கி.பி. 82 முதல் 107 வரையிலும், நெடுஞ்சேரலாதனின் மூத்த மகனான நார்முடிச் சேரல் கி.பி. 120 முதல் 145 வரையிலும், மற்றொரு மகனான சேரன் செங்குட்டுவன் (கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்) கி.பி. 130 முதல் 185 வரையிலும், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கி.பி. 140 முதல் 178 வரையிலும் அரசாண்டார்கள்.

சேர மன்னன் செங்குட்டுவன் ஏறத்தாழக் கி.பி. 130 முதல் 185 வரையில் ஆட்சி செய்தான் என்று கூறினோம். ஆனால், திரு. கே. ஜி. சேஷையர் அவர்கள் தாம் எழுதிய சங்ககாலத்துச் சேரர் என்னும் ஆங்கில நூலில் செங்குட்டுவன் கி.பி. 125 இல் ஆட்சி செய்யத் தொடங்கினான் என்று கூறுகிறார். ஐந்து ஆண்டு வித்தியாசத்தை ஒருவாறு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர், செங்குட்டுவனை நெடுஞ்சேரலாதனின் பேரன் என்று கூறுவது தான் வியப்பாக இருக்கிறது. பதிற்றுப்பத்து 5ஆம் பத்தின் பதிகம், 'குடவர்கோமான் நெடுஞ்சேரலாதற்கு, சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்' செங்குட்டுவன் என்று தெளிவாகக் கூறுகிறது. சேஷையர் அவர்கள், நெடுஞ் சேரலாதன் என்பதற்குக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்று பொருள் கற்பித்துக் கொண்டு, நார்முடிச்சேரலின் மகன் செங்குட்டுவன் என்று மாற்றிக் கூறுகிறார். ஆனால் பதிற்றுப்பத்து, நெடுஞ்சேரலாதனின் மகன் செங்குட்டுவன் என்றும் நார்முடிச் சேரலின் தம்பி என்றும் கூறுகிறது. சேஷையர் அதனை மாற்றி நார்முடிச் சேரலின் மகன் செங்குட்டுவன் என்று கூறுகிறார். இதற்கு இவர் காட்டும் காரணம் வியப்பாக இருக்கிறது. இவர் கணிக்கும் காலக் கணக்குக்குப் பொருத்தமாக செங்குட்டுவன் ஆட்சிக்காலம் அமையாதபடியால் இவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இதைத் தம்முடைய நூலில் இவ்வாறு விளக்கிச் சொல்கிறார்[538].

"செங்குட்டுவன் ஆட்சிக்கு வந்தது கி.பி. 125 என்று கொண்டால், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி. 17 இல் ஆட்சிக்கு வந்திருத்தல் வேண்டும். அவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் உத்தேசமாக கி.பி. 75இல் ஆட்சி தொடங்கியிருக்க வேண்டும். களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் ஆட்சிக்கு வந்தது கி.பி. 100 ஆக இருக்கவேண்டும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டு ஆண்டான் என்றால், அவனுடைய தம்பி எப்போது ஆட்சி செய்திருக்க முடியும்? தம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி ஏற்கும்போது அவன் 60 வயது சென்றவனாக இருக்க வேண்டும். அவன் இறந்த போது 85 வயது இருக்க வேண்டும். ஆகவே, செங்குட்டுவன், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகனாக இருந்தால், அவன் ஆட்சி ஏற்றபோது அவனுக்கு குறைந்தபட்சம் 50 வயது இருக்கும். அவன் 55 ஆண்டு ஆட்சி செய்தான் என்பதை ஏற்றுக் கொண்டால் அவன் இறந்தபோது அவனுக்கு நூறு வயதுக்கு மேல் இருக்கும். 5ஆம் பத்துப் பதிகம் அவன் 55 யாண்டு வீற்றிருந்தான் என்று கூறுவதற்கு, 55 யாண்டு உயிர் வாழ்ந்திருந்தான் என்று பொருள் கொள்ள முடியாது. அப்படிப் பொருள் கொண்டால் அவன் 5ஆண்டுதான் ஆட்சி செய்தான் என்று கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே, 5ஆம் பத்தின் பதிகம் நெடுஞ்சேரலாதன் என்று கூறுவதற்குப் பெரிய சேரலாதன் என்றும் அது நார்முடிச் சேரலைக் குறிப்பிடுகிறது என்றும் நான் பொருள் கொள்கிறேன். ஆகவே, இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய பிள்ளைகள் நால்வரில் ஒருவனாகச் செங்குட்டுவன் இருக்க முடியாது. இப்படிக் கொள்வோமானால், இந்தக் காலக்கணிப்புச் சிக்கல் எளிதாகச் சரிப்பட்டு விடுகிறது."

இவ்வாறு, தாம் கணிக்கும் காலக்கணக்கு சரியாக அமைவதற்குப் பொருத்தமாகப் பழைய வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும் என்று நீதிபதியாக இருந்த சேஷையர் தீர்ப்புக் கூறுகிறார். இவருடைய தீர்ப்பு சரித்திரத்துக்கு ஏற்கத்தக்கது அன்று. பழைய வரலாற்றுக்குத் தக்கபடி காலத்தைக் கணிக்க வேண்டுமேயல்லாமல், இவருடைய தவறான கணக்குக்குத் தக்கபடி சரித்திர ஆதாரத்தையே மாற்றுவது சரியன்று.

இவர், தவறான கணக்குப் போட்டு அதற்குத் தக்கபடி சரித்திரச் சான்றை மாற்றுவதற்குக் காரணம் நன்றாகத் தெரிகிறது. ஒருவருக்குப் பின் ஒருவராகத் தந்தை, சிறிய தந்தை, தமயன், தம்பியர் அரசாண்டார்கள் என்று (பிற்காலத்துச் சரித்திர முறையைப் பின்பற்றி) இவர் காலத்தைக் கணித்த படியால் சிக்கல் ஏற்பட்டு இடர்ப்பட்டு அதைத் தீர்க்க மகனைப் பேரன் என்று முறை மாற்றுகிறார். இளவரசுப் பட்டம் ஏற்றது முதல் இவர்கள் ஆட்சி தொடங்கிற்று என்று கொண்டு இவர்கள் ஆட்சிக் காலத்தைக் கணக்கிட்டால் இப்படிப்பட்ட சிக்கலும் இடர்ப்பாடும் நேர்ந்திராது. மேலே நாம் கணித்து முடிவு செய்த ஆட்சிக் காலங்களில் இவ்விதச் சிக்கல்கள் இல்லாதிருப்பது காண்க. எனவே, செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஏறத்தாழக் கி.பி. 130 முதல் 185 வரையில் அரசாண்டான் என்று கொள்ளலாம்.

இனி, 'சேரன் செங்குட்டுவன்' என்னும் நூலை எழுதிய திரு. மு. இராகவையங்கார் அவர்கள் செங்குட்டுவன் கால ஆராய்ச்சி என்னுந் தலைப்பில் சில செய்திகளைக் கூறிச் செங்குட்டுவன் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று கூறுகிறார். சமுத்திர குப்தன் என்னும் அரசன் மாந்தராசன் என்பவனை வென்றான் என்று ஒரு சாசனம் கூறுவதைச் சான்று காட்டி, அதில் கூறப்படுகிற மாந்தராசன் மாந்தரஞ் சேரல் என்றும், ஆகவே சமுத்திரகுப்தனால் வெல்லப்பட்ட மாந்தராசா (மாந்தரஞ் சேரல்) காலத்தில் இருந்த செங்குட்டுவன் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்று இவர் கூறுகிறார். இவர் கூறுவது வருமாறு:

வடநாட்டில் மகத நாடாண்ட ஆந்திர சக்ரவர்த்திகளது வீழ்ச்சிக்குப் பின் பிரபலம் ஏற்று விளங்கிய குப்த வமிச சக்கரவர்த்திகளுள்ளே சமுத்திரகுப்தன் என்பான் திக்விஜயஞ் செய்து, இப்பரத கண்ட முழுவதையும் தன் வெற்றிப்புகழைப் பரப்பினான் என்பது சாசன மூலம் அறியப் படுகின்றது. இம்மன்னர் பெருமான் கி.பி. 326இல் பட்ட மெய்தியவன். இவனது தென்னாட்டுப் படையெழுச்சியில் ஜயிக்கப்பட்ட வேந்தருள்ளே கேரள தேசத்து மாந்த ராஜா ஒருவனென்று கூறப்படுகின்றது. இம்மாந்தராஜா என்பவன் சங்க நுல்களிற் கூறப்படும் மாந்தரன் என்பவனாகவே தோற்றுகின்றான். ஆனால், இப்பெயர் கொண்டவரிருவர் இருந்தன ரென்பதும், அவருள் ஒருவன் செங்குட்டுவனுக்குச் சிறிது முன்னும், மற்றொருவன் அவனுக்குச் சிறிது பின்னும் இருந்தவனென்பதும் முன்னமே குறிப்பிட்டோம். இவருள் முன்னவனே சமுத்திர குப்தனால் வெல்லப்பட்டவனாகக் கருதினும், அச்சேரன் 4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவனாதல் வேண்டும். அம்மாந்தரனைப் பாடிய பரணரே செங்குட்டுவனையும் பாடியிருத்தலால், நம் சேரன் (சேரன் செங்குட்டுவன்) அம்மாந்தரனுக்குச் சிறிது பிற்பட்டவனென்பது பெறப்படும். அஃதாவது, 5ஆம் நூற்றாண்டின் முற்பாகமென்க (சேரன் செங்குட்டுவன், முதல் பதிப்பு 1915, பக். 171-172)

இவ்வாறு எழுதிய திரு. மு. இராகவையங்கார் அந்த நூலில் மேலும் சிலவற்றைக் கூறுகிறார். அகம் 181ஆம் செய்யுளில் 'வம்பமோரியர்' வந்தனர் என்று கூறப்படுவதையும், அகம் 215ஆம் செய்யுளில் மோகூர் பணியாமையால் வம்பமோரியர் படையெடுத்து வந்தனர் என்று கூறப்படுவதையும் சுட்டிக் காட்டி, அவ்வாறு வந்த 'வம்ப மோரியர்' என்பவர் குப்தவம்சத்து அரசன் என்று கூறுகிறார். பிறகு, மோகூர் வேந்தனைச் செங்குட்டுவன் வென்றதைச் சுட்டிக் காட்டிக் கடைசியாக இவ்வாறு முடிக்கிறார்:

"இச்சமுத்திர குப்தன் கி.பி. 375 வரை ஆட்சிபுரிந்தவன் எனப்படுகிறான். எனவே, இவனால் வெல்லப்பட்ட மாந்தரன், மேற்கூறியபடி செங்குட்டுவனுக்குச் சிறிது முற்பட்டவனாகவும், பழையன்மாறன் செங்குட்டுவனுக்குச் சமகாலத்தவனாகவும் தெரிதலின், நம் சரித்திர நாயகனான சேரன் (செங்குட்டுவன்) காலமும் 4ஆம் நூற்றாண்டின் முற்பகுதி அல்லது 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகக் கொள்ளல் பொருத்தமாம். ஆயின், சமுத்திரகுப்தன் மகனான சந்திரகுப்த விக்கிர மாதித்தன் (கி.பி. 375-413) அல்லது அவன் மகனான குமாரகுப்தன் (413- 455) காலங்களும், நம் சேரர் பெருமான் காலமும் ஒன்றாகச் சொல்லலாம்" (சேரன் செங்குட்டுவன், முதல் பதிப்பு 1915, பக் 177-178)

மு. இராகவையங்கார் அவர்கள் ஆதாரமாகக் காட்டும் சான்று சமுத்திரகுப்தனின் அலகாபாத் சாசனமாகும். அந்தச் சாசனத்தில் 'கௌராளக - மாந்த ராஜா' என்னும் ஒரு வாசகம் காணப்படுகிறது. டாக்டர் பிஃளீட் அவர்கள் அந்தச் சாசனத்தை வெளியிட்ட போது, கௌராளக என்பது கைரளக என்றிருக்க வேண்டும் என்று கூறிக் கைராளிக மாந்தராஜா என்பது கேரளமாந்தராஜா என்று எழுதினார். இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு ஐயங்கார் அவர்கள் மேலே காட்டியபடி மனம் போனபடியெல்லாம் எழுதிவிட்டார். பிறகு, 1898 ஆம் ஆண்டில் டாக்டர் கில்ஹார்ன் என்பவரும் டாக்டர் பிஃளீட் என்பவரும் சேர்ந்து அந்தச் சாசனத்தை மறுபடியும் ஆராய்ந்து பார்த்ததில் அச்சாசனத்தின் சரியான வாசகம் குணலமாந்தராஜா என்றும் (கௌரள மாந்தராஜா அன்று), சமுத்திர குப்தன் வென்ற குணல மாந்தராஜா கொல்லோர (கொல்லேர்) ஏரிக்கருகில் இருந்தவன் என்றும் அறிந்து வெளியிட்டனர். ஆகவே, மு. இராகவையங்கார் (மாந்தராஜா - மாந்தரன்) இட்டுக்கட்டி முடிவு செய்தது (சமுத்திர குப்தன் காலமும் செங்குட்டுவன் காலமும் ஒன்றே என்ற முடிவு) சரிந்துவிழுந்து நொறுங்கிப் போயிற்று. அதனால், ஐயங்கார் அவர்கள் தம்முடைய சேரன் செங்குட்டுவன் என்னும் நூலின் 2ஆம் பதிப்பு முதலிய மற்றப் பதிப்புகளில் சமுத்திர குப்தன் காலம் என்பதை அடியோடு மறைத்து விட்டார். ஆனாலும், தகுந்த காரணம் காட்டாமலே செங்குட்டுவன் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்றே பிற்பதிப்புகளிலும் விடாப்பிடியாக எழுதியுள்ளார்.

'சேரன் செங்குட்டுவன்' என்னும் நூலின் 2ஆம் பதிப்பு 1929இல் வெளிவந்தது. சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலத்தில் செங்குட்டுவன் இருந்தான் என்று இவர் முதற்பதிப்பில் எழுதியது ஆதாரமற்ற பொய்ச் சான்று என்று இவர் அறிந்த பிறகு, அச்சான்றை 2ஆம் பதிப்பில் வெளியிடாமல் மறைத்து விட்டார். மறைத்துவிட்ட பிறகும், 2ஆம் பதிப்பு முதலிய மற்றப் பதிப்புகளில் எல்லாம், தக்க சான்று காட்டாமலே செங்குட்டுவன் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்று எழுதிக்கொண்டே வந்தார். பிற்பதிப்புக்களில் எல்லாம், "5ஆம் நூற்றாண்டே செங்குட்டுவனும் சங்கத்துச் சான்றோரும் வாழ்ந்த காலமாதல் வேண்டும் என்று தக்க காரணங் காட்டி இந்நூலின் முதற் பதிப்பில் முடிவு கட்டலானேன்". "இவற்றுள்ளே கண்டு நோக்குமிடத்து யான் கண்டு வெளியிட்ட 5ஆம் நூற்றாண்டுக் கொள்கையே பெரிதும் பொருத்தமுடையது என்று சொல்லத் தடையில்லை. அது பற்றி யான் புதியவாக அறிந்த செய்திகளுடன் வைத்து ஆராய்ந்து கண்ட முடிவினை அறிஞரது ஆராய்ச்சிக்குரியதாகத் தனியே வெளியிட விரும்புவதனால், இப்போது அதனை இந்நூலுட் சேர்க்காது நிறுத்திக் கொள்ளலாயிற்று" என்று எழுதியுள்ளார். ('சேரன் செங்குட்டுவன்', 6ஆம் பதிப்பு. 1947, பக். 199, 200.)

இவர்கண்ட 'புதிய முடிவு' 37 ஆண்டுகளாகியும் வெளிவரவில்லை. அவரும் காலமாய்விட்டார். சான்று காட்டாமலும் காரணம் கூறாமலும் 'தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்னும் பழமொழிக்கு ஏற்ப இவர் பிடிவாதமாக இருந்து கொண்டு, செங்குட்டுவன் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்று பதிப்பித்துக் கொண்டே தாம் கண்ட 'புதிய முடிவு' இன்ன தென்பதைக் கூறாமலே போய்விட்டார். இவர் போக்கை என்னென்பது!

ஆனால், முதற் பதிப்பில் கூறாத ஒரு கருத்தைப் பிற்பதிப்புகளில் சேர்த்துவிட்டார். இது 1830 - இல் இலங்கையில் கண்டெடுக்கப் \பட்டு இங்கிலாந்துக்குக் கொண்டு போகப்பட்ட கண்ணகியின் வெண்கலச்சிலை யுருவத்தைப் பற்றிய செய்தி. இது பற்றி அவர் எழுதுவது இது:

"இச்சரித்திர நாயகனால் (சேரன் செங்குட்டுவனால் தெய்வமாக வணங்கப்பெற்ற பத்தினி தேவியின் (கண்ணகி) செப்புத்திருமேனியொன்று (லண்டன் பிரிட்டிஷ் - மியூஸியத்தில்) இருந்ததை டாக்டர் ஆனந்த குமாரசுவாமியவர்கள் பிரதிசாயை யெடுத்துப் பிரசுரித்திருக்கிறார்கள். அப்பிரதிமை இலங்கை யினின்று 1830-ஆம் வருஷம் இங்கிலாந்துக்குக் கொண்டு போகப் பட்டதாம். அப்பத்தினித் தேவி படிவத்துக்கு ஒரு பிரதியெடுத்து இந்நூலுட் சேர்த்திருக்கின்றேன். இளங்கோவடிகள் கூறியபடி செங்குட்டுவன் காலத்தே இலங்கையிற் கயவாகுவால் பிரதிஷ்டிக்கப்பட்ட பத்தினியின் சரியான சாயலை இது காட்டுவது போலும்."

இவ்வாறு முகவுரையில் கூறிய ஐயங்கார், 'சமகாலத்தசர்' என்னுந் தலைப்பில் அந்நூலில் இப்பத்தினி உருவம் பற்றிக் கீழ்க் காணுமாறு எழுதுகிறார் (இவ்விஷயம் முதற்பதிப்பில் எழுதப்படவில்லை. பிற்பதிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளது)

"கயவாகு என்பான் இலங்கா தீவத்தை ஆண்டுவந்த அரசன். இவன் செங்குட்டுவனது பத்தினிப் பிரதிஷ்டைக்கு வந்திருந்து, தன்னாட்டிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டுமென்று அத்தேவியைப் பிரார்த்தித்தும், அவட்குத் தன் தலைநகரில் கோட்டமெடுத்து வழிபட்டும் போந்தவனென்பது சிலப்பதிகாரத்தால் அறியப்பட்டது. இலங்கையின் இன்ன கோயிற்கு உரியதென்று அறியப்படாத படிவம் ஒன்று கிடைத்துள்ளது. அப்படிவத்தின் படம் இந்நூலின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிவம் 5ஆம் நூற்றாண்டுக் குப்த சக்ரவர்த்திகள் காலத்துச் சிற்பவமைதி யுடையதாகும் என்று அத்துறை வல்லோர் கருதுவர் (Medieval and Modern Sculpture by V.A. smith, p. 248). இதனால், இலங்கைப் படிவம் செங்குட்டுவன் காலத்தில் அந்நாட்டார்களால் அமைக்கப்பட்ட வையாக வேண்டும் என்று கருதுதல் பொருத்தமேயாகும்."

இவ்வாறு ஐயங்கார் அவர்கள் கூறுவதன் கருத்து இது: இலங்கையில் கிடைத்த கண்ணகியின் (பத்தினித் தெய்வத்தின்) உருவம் குப்த அரசர் காலத்துச் சிற்ப அமைப்பு உடையது. குப்தர் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு. ஆகவே, இந்தப் பத்தினித் தெய்வ உருவமும் அதையமைத்த கஜபாகு அரசனும் அவன் காலத்தவனான செங்குட்டுவனும் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்பதாம்.

ஐயங்கார் அவர்கள் கூறுவதுபோல, இலங்கையில் கிடைத்த பத்தினித் தெய்வ உருவப்படிவம் குப்தர் காலத்துச் சிற்ப அமைப்பு உடையதென்றே ஒப்புக் கொண்டாலும், இவர் காட்டுவது தவறான சான்றாக இருக்கிறது. இந்தப் படிவத்தைக் கஜபாகு அரசன் அமைத்தான் என்றாவது, அவன் காலத்தில் அமைக்கப்பட்ட சிற்பம் இது என்றாவது சொல்ல முடியாது. ஏனென்றால் கஜபாகு, கண்ணகிக்கு உருவம் அமைக்கவில்லை. அக்காலத்தில் பெரும்பாலும் கோவில்களில் இருந்தது போலக் கஜபாகு அரசன் பீடிகை மட்டும் (பலிபீடம்) அமைத்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. சிலப்பதிகாரத்தை ஊன்றிப் படித்தவர் இதனை நன்கு அறிவர். சிலப்பதிகாரம் கூறுவதைப் பாருங்கள். அது கேட்டுக் கடல் சூழிலங்கைக் கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலிபீடிகைக் கோட்ட முந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தருமிவளென ஆடித்திங்களகவை யினாங் கோர் பாடி விழாக்கோள் பன்முறையெடுப்ப மழைவீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையாவிளையுள் நாடாயிற்று." (சிலம்பு, உரைபெறு கட்டுரை 3)

'நாட்பலி பீடிகைக் கோட்டம் - நித்தலும் பலியிடுமிடத்தையுடைய கோட்டம்' என்று அரும்பதவுரையாசிரியர் கூறுகிறார்.

எனவே, கஜபாகு அரசன் இலங்கையில் கண்ணகிக் கோட்டம் அமைத்து அதில் பலிபீடம் மட்டும் ஏற்படுத்தினான் என்பது தெரிகிறது. கண்ணகியின் உருவம் அமைக்கவில்லை. கண்ணகிக்கு அடையாளமாகச் சிலம்பு வைத்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் கோவில்களில் தெய்வங்களின் உருவம் அமைக்கப்படவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அடையாளக் குறிகள் அமைக்கப்பட்டிருந்தன. முருகனுக்கு வேலும், இந்திரனுக்கு வெள்ளை யானை அல்லது வச்சிரமும், புத்தருக்குப் பாதமும் இவை போன்று அடையாளங்கள் மட்டும் வைத்து வழிபடப் பட்டன. அந்த முறையிலேதான் கஜபாகு அரசனும் தான் அமைத்த கண்ணகியின் கோவிலில் பலிபீடம் மட்டும் அமைத்தான் என்று சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை கூறுகின்றது.

(குறிப்பு: இலங்கையில் கிடைத்த இந்தச் செப்புத் திருமேனி இதுகாறும் கண்ணகியின் உருவம் என்று கருதப்பட்டு வந்தது. இப்போது, அவ்வுருவம் தாராதேவி என்னும் பௌத்தத் தெய்வத்தின் உருவம் என்று கருதப்படுகிறது.)

எனவே, இராகவையங்கார் அவர்கள், பிற்காலத்துக் கண்ணகி உருவம் ஒன்றைச் சான்றாகக் காட்டி அது கஜபாகு காலத்து உருவம் என்று தவறாகக் கருதிக் கொண்டு, அவ்வுருவம் குப்த அரசர்கள் கால முறைப்படி அமைந்தது என்று கூறி, ஆகவே கஜபாகுவும் செங்குட்டுவனும் கி.பி. 5ஆம் நூற்றாண்டினர் என்று முடிவு கூறுவது தவறான பிழையுள்ள கருத்தாகும். ஆகவே, ஐயங்கார் அவர்கள் காட்டும் சான்று ஒப்புக் கொள்ளக் கூடாதது. அவர் கூறும் முடிவாகிய கி.பி. 5ஆம் நூற்றாண்டுக் காலமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.

எனவே, நாம் மேலே கூறிய கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியே சேரன் செங்குட்டுவனும் கஜபாகு அரசனும் வாழ்ந்திருந்த காலம் என்பது பொருத்தமாகத் தெரிகிறது.

மகாவம்சம் என்னும் நூல் கூறுகிற இலங்கையரசனான கஜபாகு கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தான் என்று சரித்திரக்காரர்கள் எல்லோரும் ஆராய்ந்து ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். எனவே, சேரன் செங்குட்டுவன் இருந்த காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பதில் ஐயம் இல்லை.

இனிச் சேர நாட்டைச் சூழ்ந்திருந்த ஏனைய இராச்சியங்களின் அக்காலத்து நிலையை யாராய்வோம்.

கொங்கணத்து நன்னர்

துளுநாட்டுக்குக் கொங்கண நாடு என்றும் பெயர் உண்டு. கொங்கணம், கொண்கானம் என்றும் கூறப்படும். சேர நாட்டுக்கு வடக்கே துளு நாடாகிய கொங்கண நாடு இருந்தது. இதன் வடக்கு எல்லை கோகர்ணம், தெற்கு எல்லை சேர நாடு, மேற்கில் மேல்கடல் (அரபிக் கடல்) இருந்தது. கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் இருந்தன. துளு நாட்டையும் அதற்குக் கிழக்கில் இருந்த கன்னட நாட்டையும் இடையில் இருந்து உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைகள் பிரித்து வைத்தன. துளு நாட்டின் கடற் கரைப் பகுதிகள் சமநிலமாகவும் கிழக்குப் பகுதிகள் மலைகள் உள்ள மேட்டு நிலமாகவும் இருந்தன. இப்போதைய தென் கன்னட மாவட்டமும் வட கன்னட மாவட்டத்தின் தெற்குப் பகுதியும் சேர்ந்ததுதான் பழைய துளு நாடாகிய கொங்கண நாடு (இது, இப்போது மகாராட்டிர தேசத்தில் உள்ள கொங்காண நாடு அன்று). சங்க காலத்தில் துளு நாடாகிய கொங்கண நாடு, தமிழ் வழங்கிய தமிழ் நாடாக இருந்தது. கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் பேசப்பட்ட சேர நாட்டில், தமிழ் மொழி சிதைந்து வேறுபட்ட மலையாள மொழியாக மாறிப்போனது போல, தமிழ் மொழி பேசப்பட்ட துளு நாட்டிலும் பிற்காலத்தில் தமிழ் மொழி சிதைந்து துளு மொழியாக மாறிவிட்டது.

நமது ஆராய்ச்சிக்குரியதான கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் துளு நாட்டை நன்னர் என்னும் பெயருள்ள வேள்குல மன்னர் அரசாண்டார்கள். துளு நாட்டுக்குக் கொங்கண நாடு என்னும் பெயரும் உண்டாகையால், நன்னர்களுக்குக் "கொங்காணங் கிழார்" என்னும் பெயரும் வழங்கி வந்தது. கொங்காணங் கிழாராகிய நன்னர்கள் தமிழ்ப் புலவர்களைப் போற்றி ஆதரித்தார்கள். அக்காலத்துத் தமிழ் புலவர்களும் நன்னர்களைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

நன்னன் - 1

நம்முடைய ஆராய்ச்சிக்குரிய கி.பி. 2ஆம் நூற்றாண்டில் துளு நாட்டை அரசாண்ட நன்னனை முதலாம் நன்னன் என்று கூறுவோம். இந்த நன்னர், செங்குட்டுவனுடைய தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் இருந்தவன் என்று தெரிகிறான். இவன் 'பெண் கொலைபுரிந்த நன்னன்' என்று கூறப்படுகிறான்.

இந்த நன்னனுக்குரியதாக மாமரம் ஒன்று இருந்தது. இந்த மாமரத்தை இவன் தன்னுடைய காவல் மரமாக வளர்த்திருந்தான் போலும். அந்த மாமரத்தின் பக்கமாக ஒரு சிற்றாறு ஓடிக் கொண்டிருந்தது. அந்த மாமரத்திலிருந்த மாங்கனியொன்று சிற்றாற்றில் விழுந்து நீரில் அடித்துக் கொண்டுபோயிற்று. ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒரு பெண் அந்த மாங்கனியை எடுத்துத் தின்றாள். இச்செய்தியை அறிந்த நன்னன் அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான். அரசருக்குரிய பொருள்களைக் களவு செய்வது அக்காலத்தில் கொலைத் தண்டனைக் குரிய குற்றமாகக் கருதப்பட்டது. அரசனுக்குரிய மாங்கனி என்பதையறியாமல் நீரில் மிதந்து வந்த மாங்கனியை அப்பெண் எடுத்துத் தின்றாள். ஆயினும், அவளுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது. அறியாமல் செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டுமென்றும் அக்குற்றத்துக்குத் தண்டமாகத் தொண்ணூற்றொன்பது யானைகளையும் அப்பெண்ணின் எடையுள்ள பொன்னையும் கொடுப்பதாகவும் அப்பெண்ணின் பெற்றோர் கூறி அவளைக் கொல்லாமல் விடும்படி வேண்டினார்கள். நன்னன் அவ்வேண்டுகோளுக்கு உடன்படாமல் அவளைக் கொன்றுவிட்டான். இதனால் அவன் மக்களின் வெறுப்புக்கு ஆளாகிப் 'பெண் கொலை புரிந்த நன்னன்' என்று தூற்றப் பட்டான்.


மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற் றொன்பது களிற்றொடு அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ

(குறுந்தொகை. 292 : 1-5)

என்று பரணர் என்னும் புலவர் இச்செய்தியைக் கூறுகிறார்.

இவனுடைய கொடுஞ்செயலைக் கண்டு இவன்மீது சினங்கொண்ட கோசர் என்னும் செல்வாக்குள்ள ஒரு இனத்தார் ஏதோ சூழ்ச்சி செய்து இவனுடைய மாமரத்தை அடியோடு வெட்டிவிட்டார் என்னும் செய்தியைப் பரணரே கூறுகின்றார்.

நன்னன்
நறுமா கொன்று ஞாட்பிற் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே

(குறுந்தொகை. 73 : 2-5)

நன்னனுடைய மாமரத்தைக் கோசர் வெட்டினார்கள் என்பதைச் சரித்திர ஆசிரியர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், நன்னனுடைய பட்டத்து யானையைக் கொன்றார்கள் என்று கூறுகிறார். (S. Krishnaswamy Ayyangar, Beginnings of South Indian History, pp. 84. 85) மா என்பதற்கு மாமரம் என்றும் மிருகம் (யானை) என்றும் பொருள் உண்டு. ஆனால், இங்குக் கோசர் கொன்றது யா யன்று, மா மரத்தையேயாகும்.

இந்த நன்னன் பிண்டன் என்பவனுடன் போர் செய்து வென்றான். (அகம். 152 : 9-12) தன் பகைவரைப் போரில் கொன்று அவர்களுடைய மனைவியரின் கூந்தலைச் சிரைத்து அதனால் கயிறு திரித்தான் (நற். 270 : 8-10)

இவனுடைய கொங்கு நாட்டுக்கு அருகிலே கடலிலே சிறு தீவு ஒன்று இருந்தது. அத்தீவு இவனுடைய ஆட்சிக்கு உரியது. அத்தீவில் இருந்தவர்களைக் கொண்டு, யவன வாணிகக் கப்பல்கள் சேர நாட்டுக்குப் போகாதபடி இவன் தடுத்தான். இந்தத் தீவைக் கடந்துதான் யவனக் கப்பல்கள் சேர நாட்டுக்கு வர வேண்டும். வருகிற கப்பல்களை இந்தீவில் இருந்தவர்கள் கொள்ளையடித்துத் தடுத்தனர். அதனால் யவன வாணிகக் கப்பல்கள் சேர நாட்டுத் துறைமுகப்பட்டினங்களுக்கு வருவது தடைப்பட்டது. அந்தக் கடற் கொள்ளைக்காரர்கள் அத்தீவில் கடம்ப மரத்தைத் தங்கள் காவல் மரமாக வளர்த்து வந்தார்கள்.

செங்குட்டுவனுடைய தந்தையான நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன் தலைமையில் ஒரு கடற்படையை அத்தீவுக்கு அனுப்பி, அங்கிருந்த கடற் கொள்ளைக்காரருடன் போர் செய்து அவர்களை வென்றான். அத்தீவில் அவர்கள் வளர்த்து வந்த காவல் மரமாகிய கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தி அத்தீவில் உள்ளவர்களின் குறும்பை யடக்கினான் (2 ஆம் பத்து 1 : 12-16, 10 : 2-6).

அத்தீவில் இருந்த கடற்கொள்ளைக் கூட்டத்தார் கடம்ப மரத்தைக் காவல் மரமாக வளர்த்து வந்தது உண்மையே. ஆனால், அவர்கள் கடம்பர் அல்லர். அவர்களைக் கடம்பர் என்று சங்க நூல்கள் கூறவில்லை. இக்காலத்துச் சிலர், கடம்ப மரத்தைக் காவல் மரமாக வளர்த்த அவர்களைக் கடம்பர் என்று தவறாகக் கூறுகின்றனர். சங்க காலத்தில் மாமரம், புன்னைமரம், வேப்ப மரம், வாகைமரம் முதலிய மரங்களை அரசர் தங்கள் காவல் மரமாக வளர்த்து வந்தார்கள். இக்காலத்தில் கொடி மரங்களை நாட்டுவதுபோல அக்காலத்தவர் காவல் மரங்களை வளர்த்து வந்தார்கள். கொடிகளைப் பகைவர் கைப்பற்றிக் கொண்டால் கொடிக்குடையவர் தோற்றனர் என்று கருதப்படுவது போல, காவல் மரங்களைப் பகைவர் வெட்டிவிட்டால் வெட்டுண்ட காவல் மரத்துக்குரியவர் தோற்றவராகக் கருதப்பட்டனர்.

ஆனால், காவல் மரத்தின் பெயரை அம்மரத்துகுரியவர் சூட்டிக் கொள்வதில்லை. புன்னை மரத்தையுடையவர் புன்னையர், வேப்ப மரத்தையுடையவர் வேம்பர் (மோகூர் மன்னன் வேம்பைக் காவல் மரமாக வளர்த்தான்), வாகை மரத்தை வளர்த்தவர் வாகையர் என்று பெயர் பெறவில்லை. அது போன்று துளு நாட்டுத் தீவில் இருந்தவர் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்ததனாலே அவர்கள் கடம்பர் என்று பெயர் பெறவில்லை.

இதனையறியாமல் இக்காலத்துச் சிலர் அத்தீவிலிருந்தவரைக் கடம்பர் என்று தவறாகக் கூறுவதோடு அமையாமல் அக்கடம்பர், பிற்காலத்தில் சரித்திரத்தில் கூறப்படுகிற கடம்ப அரசர்களின் முன்னோர்கள் என்றும் எழுதியுள்ளனர் (K.N. Sivaraja Pillai, The Chronology of the Early Tamils, 1932, P. 111, Foot Note, 124, 176. Footnote 1; P. T. Srinivasa Iyengar, History of the Tamils, 1929, p.501; K.G. Sesha Aiyar, Cera Kings of the Sangam Period, 1937 p. 19) ஆனால், பிற்காலத்துக் கடம்ப அரசர் பரம்பரையை உண்டாக்கினவன் மயூரசர்மன் என்னும் பிராமணன் என்று சரித்திரம் கூறுகிறது. இந்த மயூரசர்மன் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் இருந்தவன். காஞ்சீபுரத்துப் பல்லவ அரசர்களுடன் பகைத்து அவர்களுக்கு எதிராக பனவாசி இராச்சியத்தை ஏற்படுத்தினவன். ஏறத்தாழ கி.பி. 360 இல் முடிசூடிக் கொண்டவன். எனவே, கடம்ப அரசர் பரம்பரை ஏற்பட்டதே கி.பி. 4ஆம் நூற்றாண்டில். அப்படியிருக்கக் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இருந்த துளு நாட்டுத் தீவிலிருந்தவர்களுக்கு (அவர்கள் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்த காரணத்தினாலே) கடம்பர் என்று அவருக்கு இல்லாத பெயரைப் புதிதாகக் கொடுத்து அவரைக் கடம்ப அரசரின் முன்னோர் என்று கூறுவது பொருந்தாது. இது சரித்திர உண்மைக்கு ஒவ்வாத தவறு ஆகும். இவ்வாறு சரித்திரத்துக்கு மாறுபடக் கூறி, துளு நாட்டுத் தீவிலிருந்த கடம்ப மரத்தைப் பிற்காலத்துக் கடம்ப குல அரசருடன் இணைத்து முடிபோட்டு, கி.பி. 2ஆம் நூற்றாண்டிலிருந்த நெடுஞ்சேரலாதனைக் கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்த கடம்ப அரசர்கள் காலத்தில் அமைத்துக் கூறுகிறார் சீநிவாச அய்யங்கார். (P. T. Srinivasa Iyengar, History of the Tamils, p. 501) ஆனால், கடம்ப அரசர்களின் முன்னோர் இத்தீவில் இருந்தவர் என்று தாம் கூறியதை இவரே தாம் எழுதிய இந்திய தேச சரித்திரத்தில் கூறாமல் மறைத்துவிட்டார். 1929-ல் இவர் எழுதிய 'தமிழர் சரித்திரத்தில்' துளு நாட்டுத் தீவில் இருந்தவர்கள் கடம்ப குலத்து அரசரின் முன்னோர் என்று கூறிய இவர், 1942இல் தாம் எழுதிய 'அட்வான்ஸ் ஹிஸ்டரி ஆப் இண்டியா' (P. T. Srinivasa Iyengar, Advanced History of india (Hindu Period) Revised Edition 1942, p.264) என்னும் நூலில் இச்செய்தியை அறவே மறைத்துவிட்டுக் கடம்ப அரசர்களின் ஆதி புருஷன் மயூரசர்மன் என்று எழுதியிருக்கிறார். இதனால் இவர் முன்பு கூறியது தவறு என்று இவர் பிறகு உணர்ந்து கொண்டார் என்பது தெரிகிறது.

நன்னன் - 2

முதலாம் நன்னனுக்குப் பிறகு துளு நாட்டை யரசாண்டவன் அவன் மகனான நன்னன் என்பவன். இவனை இரண்டாம் நன்னன் என்று கூறுவோம். இவன், செங்குட்டுவனின் காலத்தில் இருந்தவன். இந்த நன்னன் தன்னுடைய துளு இராச்சியத்தைப் பெரிதாக்க முயற்சி செய்தான். துளு நாட்டுக்குத் தெற்கே இருந்த சேர நாட்டின் வடபகுதியான பூழி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். மேலும், கொங்கு நாட்டின் வடக்குப் பகுதியைச் சேர்ந்திருந்த புன்னாட்டையும் கைப்பற்றினான். புன்னாடு அக்காலத்தில் நீலக் கல்லுக்குப் பேர் போனது. அங்கு அக்காலத்தில் நீலக்கல் சுரங்கம் இருந்தது. புன்னாட்டு நீலக்கற்கள் உரோமாபுரி முதலிய அயல் நாடுகளிலும் புகழ் பெற்றிருந்தது. தொன்னாட்டுக்கு அக்காலத்தில் வந்த யவன வாணிகர் அந்நீலக்கற்களையும் வாங்கிக் கொண்டு போனார்கள்.

அக்காலத்தில் சேர அரசர்கள் தங்கள் நாட்டை யடுத்திருந்த கொங்கு நாட்டின் தென் பகுதிகளைக் கைப்பற்றிச் சேர இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர். மேலும், கொங்கு நாட்டு வேறு பகுதிகளைக் கைப்பற்றவும்முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் இந்த நிலையில் இந்த நன்னன், சேர நாட்டுக்குரிய பூழி நாட்டையும் வட கொங்கிலிருந்த புன்னாட்டையும் கைப்பற்றிக் கொண்டபடியினாலே சேர அரசர் இந்த நன்னனைப் பகைத்து இவனை ஒடுக்க எண்ணினார்கள். ஆகவே, இந்நன்னன் மேல் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் போர் தொடுத்தான்.

நன்னனுடைய மறவன் (சேனைத் தலைவன்) மிஞிலி என்பவன். மிஞிலி துளு நாட்டில் பாரம் என்னும் ஊரில் இருந்தான். அவன் சிறந்த வீரன்.

வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும், பாரம்

என்று நற்றிணைச் செய்யுள் (265 : 3-5) கூறுகிறது.

இந்த நன்னன் காலத்திலும் நார்முடிச்சேரல் காலத்திலும் பாண்டி நாட்டை அரசாண்டவன் பசும்பூட் பாண்டியன் என்பவன். பசும்பூட் பாண்டியனுடைய மறவன் (சேனைத் தலைவன்) அதிகமான் நெடுமிடல் என்னும் சிற்றரசன். அதிகமான் நெடுமிடல் கொங்கு நாட்டுத் தகடூரின் அரசன். நெடுமிடல் நன்னனுடைய துளு நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான், இவனை, நன்னனுடைய சேனைத் தலைவனான மிஞிலி வாகைப் பறந்தலை என்னும் இடத்தில் எதிர்த்துப் போரிட்டான். அப்போரில் அதிகமான் நெடுமிடல் இறந்துபோனான்.

கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை.

(குறுந்தொகை 393 : 3-5)

அதிகமான் இந்தப் போரில் இறந்ததைப் பரணர் அகம் 142 ஆம் செய்யுளிலும் கூறுகிறார். பாழி என்னும் இடத்தில் அவன் இறந்ததாகக் கூறுகிறார். வாகைப் பறந்தலை, பாழி என்னும் இடங்கள் ஒன்றே. இவை வெவ்வேறு இடங்கள் என்று கூறுவது பிழையாகும்.

சேர அரசனான களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலும் நன்னன் மேல் போர் தொடுத்தான். நார்முடிச்சேரல், தன்னுடைய மறவன் (சேனைத் தலைவன்) ஆன வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்பவனைப் புன்னாட்டின் சார்பாக நன்னன் மேல் போர் செய்யத் துளு நாட்டுக்கு அனுப்பினான். ஆய் எயினன் துளு நாட்டுக்குப் படையெடுத்துச் சென்றபோது மேலே கூறிய மிஞிலி அவனைப் பாழி என்னும் இடத்தில் எதிரிட்டுப் போர் செய்தான். கடுமையாக நடந்த அந்தப் போரில் சேரனுடைய சேனைத் தலைவனான ஆய்எயினன் இறந்துபோனான்.

பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென
யாழிசை மறுகில் பாழி யாங்கண்
அஞ்சல் என்ற ஆய் எயினன்
இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித்
தன்னுயிர் கொடுத் தனன் (அகம்.396: 2-6)

கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருது களம்பட்டென
(அகம். 148 : 7-8)


வேறு இரண்டு அகப்பாட்டிலும் இச்செய்தி கூறப்படுகிறது (அகம். 181 : 3- 7; 208 : 5-9)

நார்முடிச்சேரல் தன்னுடைய சேனாபதி தோல்வியடைந்து இறந்ததற்காகத் தான் தொடுத்த போரை நிறத்தவில்லை. அவன் தொடர்ந்து துளு நாட்டின்மேல் சில காலம் போர் செய்தான். அப்போர் 'நிலைச்செரு' வாக நீண்டது. நார்முடிச்சேரல் ஒரு புறமும் அவன் தம்பியாகிய செங்குட்டுவன் இன்னொரு புறமும் மற்றொரு தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வேறொரு புறமும் சென்று துளு நாட்டைத் தாக்கிப் போர் செய்தார்கள். செங்குட்டுவன், கடற்கரைப் பக்கமாகப் போய்த் துளு நாட்டைத்தாக்கிப் போர் செய்து வியலூர், கொடுகூர், நறவு முதலிய ஊர்களைக் கைப்பற்றினான். நார் முடிச்சேரல் நடுப்பகுதியில் சென்று போர் செய்து தான் முன்பு இழந்து விட்ட பூழிநாட்டை மீட்டுக்கொண்டதல்லாமல், நன்னனுடைய நாட்டுக்குள் புகுந்து போர் செய்தான். நன்னன், நார்முடிச் சேரலை எதிர்த்துப் போரிட்டான். பெருவாயில், வகைப் பெருந்துறை என்னும் இடங்களில் போர் நடந்தது. கடைசியில் நன்னன் தோற்று இறந்துபோனான். வெற்றி பெற்ற நார்முடிச்சேரலுக்குத் துளு நாடு அடங்கிற்று.

குடாஅது
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய
வலம்படு கொற்றந் தந்த வாய்வாள்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்தநாடு தந்தன்ன வளம்

(அகம். 199 : 18-24)

இவ்வெற்றியைப் பதிற்றுப்பத்து 4ஆம் பத்துங் கூறுகிறது (4ஆம் பத்து. 4 : 14-16. பதிகம்)

நன்னன் போரில் இறந்த பிறகு துளு நாடு நார்முடிச் சேரலுக்குக் கீழடங்கிற்று. துளு நாட்டின் பேர்பெற்ற துறைமுகப் பட்டினமாகிய நறவு என்னும் பட்டினத்தில், நார்முடிச்சேலின் தம்பியும் செங்குட்டுவனின் தம்பியுமாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தங்கி அரசாண்டான்.

பொங்குபிசிர்ப் புணரி மங்குலோடு மயங்கி
வருங்கடல் ஊதையில் பனிக்கும்
துவ்வா நறவின் சாயினத் தாளே (6ஆம் பத்து 10 : 10-12)

நன்னன் - 3

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் துளு நாட்டை வென்ற பிறகு இரண்டாம் நன்னனின் மகனான நன்னன் என்பவன் சேர அரசருக்குக் கீழடங்கித் துளு நாட்டையரசாண்டான். இவனை மூன்றாம் நன்னன் என்று கூறுவோம். இந்த மூன்றாம் நன்னன், நன்னன் உதியன் என்று பெயர் பெற்றான். நன்னன் என்பது இவன் குடிப்பெயர். உதியன் என்பது சேர அரசனின் குடிப் பெயர். சேர ஆட்சிக்குக் கீழடங்கியபடியால் இவன், சேரனின் குடிப்பெயராகிய உதியன் என்னும் பெயரையும் தன் பெயருடன் இணைத்து நன்னன் உதியன் எனப்பட்டான். இவன் இருந்த ஊர் பாழி என்பது. 'நன்னன் உதியன் அருங்கடிப் பாழி' என்று அகப்பாட்டுக் கூறுகிறது (அகம் 358 : 1).

பெரும்பூட் சென்னி என்னும் சோழன், சேரருக்கு உரியதான கொங்கு நாட்டுக் கட்டூரின் மேல் தன் சேனைத் தலைவனான பழையன் என்பவனை அனுப்பினான். பழையன் கட்டூரின் மேல் படையெடுத்தும் சென்றான். அவனைச் சேர அரசன் சார்பாக இந்த மூன்றாம் நன்னனும் (நன்னன் உதியன்), ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்னும் வேறு சிற்றரசர்களும் எதிர்த்துப் போர் செய்து போர்க்களத்தில் கொன்றுவிட்டார்கள். (அகம். 44 : 7-11) இச்சிற்றரசர்கள் சேரர்களுக்குக் கீழடங்கியவர் எனத் தோன்றுகின்றனர்.

குறிப்பு: நன்னன் என்னும் பெயருள்ள வேறு சில அரசர்களும் அக்காலத்தில் இருந்தார்கள். பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மா என்னும் ஊரை (இப்போதைய தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள செங்கம்) நன்னர் என்னும் பெயருள்ள அரச குடும்பத்தார் அரசாண்டனர். அந்த நன்னர்களில் ஒரு நன்னன் மேல் பாடப்பட்டதுதான் மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை. இந்தச் செங்கண்மாத்து நன்னர் வேறு, துளு நாட்டு மன்னர் வேறு. பெயர் ஒற்றுமை காரணமாக இருவரையும் ஒரே குலத்தவராகக் கருதுவது தவறு.

பாண்டிய மன்னர்

பசும்பூண் பாண்டியன்

செங்குட்டுவன் காலத்தில் பாண்டிய நாட்டை அரசாண்ட மன்னர் யாவர் என்பது பற்றி ஆராய்வோம். செங்குட்டுவனின் தமயனான களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலத்தில் பாண்டி நாட்டை அரசாண்ட அரசன் பசும்பூட் பாண்டியன் என்பது தெரிகிறது. பசும்பூட் பாண்டியனைப் பரணர் என்னும் புலவர் தமது செய்யுள்களில் குறிப்பிடுகிறார். (பரணர், நார்முடிச்சேரல், செங்குட்டுவன் ஆகியோர் காலத்தில் இருந்த புலவர். செங்குட்டுவன்மீது 5ஆம் பத்துப் பாடியவர். செங்குட்டுவன் இமயம் சென்றதற்கு முன்பு காலமானவர்.) பரணர், பசும்பூட் பாண்டியனும் கொங்கு நாட்டுத் தகடூர் அதிகமானும் நண்பர் என்றும் பாண்டியன் கொடி அதிகமானுடைய மலையில் பறந்தது என்றும் கூறுகிறார் (அகம். 162 : 17-23) அதிகமான், பசும்பூண் பாண்டியனுடைய சேனைத் தலைவன் என்றும் கூறுகிறார். 'பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன்' (குறுந். 393 : 4) (வினை-போர்)

பசும்பூட்பாண்டியன் காலத்திலிருந்த மதுரைக் கணக்காயனார் என்னும் புலவர், இவன் செங்கோலாட்சியும் அறநெறியும் உடையவன் என்று கூறுகிறார்.


அறங்கடைப் பிடித்த செங்கோ லுடனமர்
மறஞ்சாய்த் தெழுந்த வலனுயர் திணிதோள்
பலர்புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன் (அகம் 338 : 3-5)

பசும்பூட் பாண்டியன் கொங்கு நாட்டிலிருந்த கொங்கரை ஓட்டி அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றினான் என்றும் அவ்வெற்றியை மதுரை மக்கள் ஆரவாரத்தோடு கொண்டாடினார்கள் என்றும் நக்கீரர் கூறுகிறார்.


வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி
நாடுபல தந்த பசும்பூட் பாண்டியன்
பொன்மலி நெடுநகர்க் கூடல் ஆடிய
இன்னிசை ஆர்ப்பு (அகம். 253 : 4-7)

(நக்கீரனார் இப்பாண்டியனுடைய காலத்துக்குப் பின் இருந்தவர். இச்செய்தியை இவர் தமது தகப்பனாராகிய மதுரைக் கணக்காயனாரிட மிருந்து தெரிந்து கொண்டார் போலும்.) இதனால், பசும்பூட் பாண்டியன் கொங்கு நாட்டின் சில பகுதிகளை வென்று கொண்டான் என்பது தெரிகின்றது. பேரரசன் இல்லாமல் சிற்றரசர்கள் மட்டும் ஆட்சி செய்து கொண்டிருந்த கொங்கு நாட்டைச் சேர அரசர்கள் சிறிதுசிறிதாகக் கைப்பற்றிச் சேர இராச்சியத்தைப் பெருகச் செய்து கொண்டபோது, பாண்டியரும் சோழரும் வாளா இருக்கவில்லை. அவர்களும் கொங்கு நாட்டைக் கைப்பற்ற முயற்சி செய்தனர். அவ்வாறு முயற்சி செய்தவர்களில் பசும்பூட் பாண்டியனும் ஒருவன். இவன், கொங்கு நாட்டின் ஒரு பகுதியை யரசாண்ட தகடூர் மன்னர் பரம்பரையில் வந்த அதிகமான் நெடுமிடல் என்பவனைத் துணையாகக் கொண்டு கொங்கு நாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றினான். அதிகமான் நெடுமிடல், சேர மன்னர் கொங்கு நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டு வருவதையறிந்து, தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை யுணர்ந்து, தனக்கு உதவியாகப் பசும்பூட் பாண்டியனுடன் நட்புக் கொண்டான் என்பது தெரிகிறது. பசும்பூட் பாண்டியனுக்குப் பகைவராகிய சில அரசர்கள் இப்பாண்டியனுடைய துணைவனாகிய நெடுமிலுடன் போர் செய்து ஒரு போரில் அவனைத் தோற்கச் செய்தனர். இதனை,

யாழிசை மறுகின் நீடூர் கிழவோன்
வாய்வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும்பூட் பொருந்தலர் (அகம். 266 :10-12)

என்றும் பரணர் கூறுகிறார்.

பசும்பூட் பாண்டியனுடைய சேனாபதியாகிய அதிகமான் நெடுமிடலினை, நார்முடிச்சேரல் (செங்குட்டுவனின் தமயன்) வென்றான் என்று காப்பியாற்றுக் காப்பியனார் கூறுகின்றார்.

நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்
பெருமலை யானையொடு புலங்கெட இறுத்து

(4ஆம் பத்து. 2 : 10-11)

இதன் பழைய உரையாசிரியர் நெடுமிடல் என்பதற்கு இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: 'நெடுமிடல் - அஞ்சி. இற் (இயற்) பெயராம்.'

இவனுடைய சேனாபதியாகிய நெடுமிடல் துளு நாட்டில் போர் செய்து அப்போரில் உயிர் துறந்தான் (பரணர். குறுந். 373 : 3-6). பசும்பூண் பாண்டியனைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. இவன் எத்தனை ஆண்டு அரசாண்டான் என்பதும் தெரியவில்லை.

நெடுஞ்செழியன் - 1

இவனுக்குப் பிறகு பாண்டி நாட்டையரசாண்டவன் நெடுஞ்செழியன் என்பவன். வேறு சில நெடுஞ்செழியர் இருந்தபடியால் அவர்களில் இருந்து பிரித்தறிவதற்காக இந்நெடுஞ்செழியனை 'ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்' என்று கூறுவர். இவன், ஆரியப் படையை வென்ற செய்தி விபரமாகத் தெரியவில்லை. அப்போர் எங்கு நடந்தது என்பதும் தெரியவில்லை. இந்நெடுஞ் செழியன் கவி பாடும் புலமையுடையவன். இவன் இயற்றிய 'உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே' என்று தொடங்கும் செய்யுள் கல்வியின் சிறப்பைக் கூறுகின்றது. இச்செய்யுள் புறநானூற்றில் (புறம். 183) தொகுக்கப் பட்டிருக்கிறது.

நெடுஞ்செழியன் மதுரையிலிருந்து அரசாண்ட காலத்தில், இவனுடைய தம்பியாகிய வெற்றிவேற் செழியன், பாண்டி நாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய கொற்கைப்பட்டினத்தில் இருந்து அரசாண்டான். இந்த நெடுஞ்செழியனை எதிர்த்துச் சோழனும் சேரனும் போர் செய்தனர் என்றும் அப்போர் மதுரைக்கு அருகில் நடந்தது என்றும் அப்போரில் நெடுஞ்செழியன் வெற்றி பெற்றான் என்றும் பரணர் கூறுகிறார். (அகம். 116 :13-19)

நெடுஞ்செழியன் ஆட்சிக் காலத்தில் கோவலன் மதுரையில் தவறாகக் கொலையுண்டான். பெரும் பொருளைச் செலவு செய்து வறுமையடைந்த கோவலன் பொருள் ஈட்டுவதற்காகக் கண்ணகியுடன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து மதுரைக்குச் சென்றான். சென்று கண்ணகியின் காற்சிலம்பை விற்கப் பொற்கொல்லனிடம் விலை கூறியபோது, அப்பொற்கொல்லன், நாட்டுக்குப் புதியவனாகிய கோவலன்மீது களவுக் குற்றஞ்சாற்றிக் கொல்வித்தான். கண்ணகியார், பாண்டியன் சபைக்கு நேரில் சென்று வழக்குரைத்துக் கோவலன் கள்வன் அல்லன் என்பதை மெய்ப்பித்தார். தான் தவறு செய்து அநியாயமாகக் கோவலனைக் கொன்றதை யுணர்ந்த நெடுஞ்செழியன் இதய அதிர்ச்சியினால் சிம்மாசனத்தில் இருந்தபடியே உயிர்விட்டான். ஆகவே, இவனுக்கு 'அரசு கட்டிலிற்றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்' என்றும் பெயர் ஏற்பட்டது. (அரசு கட்டில் - சிம்மாசனம்; துஞ்சிய - இறந்த)

வட வாரியர் படை கடந்து
தென்றமிழ் நாடொருங்கு காணப்
புரைநீர் கற்பிற் றேவி தன்னுடன்
அரைசு கட்டிலிற் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ் செழியன்

என்று இப்பாண்டியனைச் சிலப்பதிகாரம் (மதுரைக் காண்டம், கட்டுரை) கூறுகின்றது. இவன் எத்தனை ஆண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. இவனும் சேரன் செங்குட்டுவனும் சம காலத்தவர்.

வெற்றிவேற் செழியன்:

'ஆரியப்படை கடந்த,' 'அரசுகட்டிலில் துஞ்சிய' பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகு, கொற்கைப் பட்டினத்தில் இளவரசனாக இருந்த வெற்றிவேற் செழியன், பாண்டி நாட்டின் அரசனானான். (சிலம்பு 27 : 127–138). இப்பாண்டியன் ஆட்சிக்கு வந்த உடனே, கோவலன் தவறாகக் கொலை செய்யப்பட்ட காரணத்தை விசாரித்து உண்மையறிந்து, அரச நீதி தவறுவதற்குக் காரணமாக இருந்த பொற்கொல்லனையும் அவனுக்கு உதவியாயிருந்தவர்களையும் தண்டித்தான். (சிலம்பு 27 : 127-130, உரைபெறு கட்டுரை 1). இவன் கண்ணகிக்கு மதுரையில் விழாச் செய்தான் என்று சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை கூறுகிறது.

கங்கைக் கரையிலே போர் செய்து தோல்வியடைந்த கனக விசயரைச் செங்குட்டுவன் சிறைப்பிடித்து வந்து, அவர்களைச் சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டும்படித் தன் உத்தியோகஸ்தனான நீலனை அனுப்பினான். நீலன் பாண்டிநாடு சென்று வெற்றிவேற் செழியனுக்குக் கனகவிசயர்களைக் காட்டிய போது வெற்றிவேற் செழியன், செங்குட்டுவனின் வெற்றியைப் போற்றவில்லை. 'போர் செய்யமுடியாமல் துறவி வேடம் பூண்டு போர்க்களத்திலிருந்து ஓடிய இவர்களைச் சிறைப்பிடித்து வந்தது புதுமையாக இருக்கிறது!' என்று கூறினான் (சிலம்பு. 28 : 97-107). செழியன் பாண்டி நாட்டின் அரசனான பிறகு நன்மாறன் என்று பெயர் பெற்றான் என்பர். பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்பவன் இவனே. இப்பாண்டியன் எத்தனை ஆண்டு அரசாண்டான் என்பதும் இவனைப் பற்றிய வேறு செய்திகளும் தெரியவில்லை. இவனும் சேரன் செங்குட்டுவன் காலத்தில் இருந்தவன். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் உயிர் நீத்ததும் வெற்றிவேற் செழியன் மதுரையில் வந்து முடி சூடியதும் ஏறக்குறைய கி.பி. 175ஆம் ஆண்டில் ஆகும்.

நெடுஞ்செழியன் - 2

வெற்றிவேற் செழியனுக்குப் பிறகு பாண்டி நாட்டை அரசாண்டவன் மற்றொரு நெடுஞ்செழியன். இந்த நெடுஞ்செழியன், இவனுக்கு முன்பு இருந்த ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலிற் துஞ்சிய நெடுஞ்செழியனின் வேறு என்பதைத் தெரிவிக்க இவனைத் 'தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்' என்று கூறுவர். இந்த நெடுஞ்செழியன் மீது பாடப் பட்டதுதான் மதுரைக்காஞ்சி. இப்பாண்டியன், சேரன், செங்குட்டுவன் இறந்த பிறகு பாண்டி நாட்டை யரசாண்டான். இவன் செங்குட்டுவன் காலத்துக்குப் பின் இருந்தவனாகலின் இவனைப் பற்றிய ஆராய்ச்சி இங்கு வேண்டுவதில்லை. ஆனால், ஒரு முக்கியமான செய்தியை இங்கு கூற வேண்டும். அதென்னவெனில்,

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வேறு, தலையாலங் கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் வேறு. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூடல் (மதுரை) பறந்தலையில் சேர, சோழ அரசர்களை வென்றான். இச்செய்தியைப் பரணர் தம் செய்யுளில் (அகம். 116 : 12-18) கூறுகிறார். தலையாலங்கானத்துப் பறந்தலைப் போரில் சேர சோழர்களை வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியுள்ளார் (புறம். 25). இவர்கள் வெவ்வேறு காலத்தில் இருந்த வெவ்வேறு நெடுஞ்செழியர்கள். இதனை அறியாமல், இவ்விரு நெடுஞ்செழியரும் ஒருவரே என்று தவறாகக் கருதிக்கொண்டார். திரு. பி. டி. சீநிவாச ஐயங்கார். இருவரையும் ஒருவர் என்றே தவறாகக் கருதிக்கொண்டு, தாம் ஆங்கிலத்தில் எழுதிய 'தமிழர் சரித்திரம்' என்னும் நூலில் தவறாக எழுதி விட்டார். (P. T. Srinivasa Aiyangar, history of the Tamils, 1924, p. 444) மேலும், ஐயங்கார் மற்றொரு தவற்றையும் செய்துவிட்டார். செங்குட்டுவன் காலத்திலும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்திலும் இருந்த பரணரைப் பிற்காலத்தில் இருந்த தலையாலங்கானத்துப் போர் வென்ற நெடுஞ்செழியன் காலத்துக்கும் பிற்பட்டவர் என்று மற்றொரு தவறான செய்தியை எழுதிவிட்டார். (P. T. Srinivasa Aiyangar, history of the Tamils, 1924, p. 444) செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்திலும் (5ஆம் பத்து), ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை அகப்பாட்டிலும் (அகம். 116 : 12-18) குறிப்பிட்டுப் பாடிய பரணர், செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்பே காலமானார். இதனை அறியாமல், சீநிவாச ஐயங்கார், செங்குட்டுவனுக்குப் பிறகு இருந்த தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கும் பிற்காலத்தில் பரணர் இருந்தார் என்று எழுதியுள்ளார். இவ்வாறெல்லாம் தவறாகக் கூறுவதன் காரணம் என்னவென்றால் வெவ்வேறு நெடுஞ்செழியரை ஒரே நெடுஞ்செழியன் என்று பிழையாகக் கருதிக்கொண்ட தவறேயாம்.

மோகூர் மன்னன்:

பாண்டியர்களுக்குக் கீழடங்கிப் பாண்டி நாட்டு மோகூரில் சிற்றரசர் பரம்பரை ஒன்று இருந்தது. மோகூர் சிற்றரசருக்குப் பழையர் என்னும் குடிப்பெயர் உண்டு. மோகூர்ப் பழையர்கள் பாண்டியர், படைக்குச் சேனைத் தலைவராக இருந்தவர்கள்.

மோகூர், இப்போதுள்ள மதுரைக்கு வடகிழக்கே ஏழு மைல் தூரத்திலும், அழகர்மலைக்குத் தெற்கே பத்து மைல் தூரத்திலும் இருக்கிறது (இவ்வூர், பிற்காலத்தில் திருமோகூர் என்று பெயர் பெற்று வைணவர்களின் 108 திருப்பதிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. இவ்வூர்க் காளமேகப் பெருமானைப் பிற்காலத்திலிருந்த நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாடியுள்ளனர்). மோகூர்ப் பழையர்கள் தங்கள் ஊரில் வேப்பமரத்தைக் காவல் மரமாக வளர்த்து வந்தனர்.

சேரன் செங்குட்டுவன் காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்), இருந்த மோகூர்ப் பழையனுக்கும் அறுகை என்பவனுக்கும் பகை ஏற்பட்டுப் பழையன், அறுகையைப் போரில் வென்றான். அதனால் அறுகை, பழையனுக்கு அஞ்சி ஒடுங்கினான். அறுகையின் நண்பனான சேரன் செங்குட்டுவன், மோகூர்ப் பழையன் மேல் படையெடுத்துச் சென்று அவனுடைய காவல் மரத்தை வெட்டி வீழ்த்திப் பழையனையும் போரில் கொன்றான். (பதிற்று. 5ஆம் பத்து. 4: 10-17, 9 : 7-17. பதிகம் 13-17. சிலம்பு. 27: 124-126). இந்தப் பழையன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன்) காலத்தில் இருந்தவன்.

மோகூர்ப் பழையன் இறந்த பிறகு அவனுடைய மகன் 'பழையன்’ என்னும் குடிப்பெயருடன் மோகூரையரசாண்டான். இவன் தலையாலங்கனத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்திலும் இருந்தான். மதுரைக் காஞ்சியில்,

பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன.

(மதுரை. அடி.508 -509)

என்று கூறப்படுகிற மோகூர்ப் பழையன் இவனே.

மோகூர்ப் பழையர்களின் முன்னோன் ஒருவன் கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கைக்குச் சென்று, இலங்கையரசனை வென்று அநுராதபுரத்தில் சில ஆண்டுகள் அரசண்டான் என்னும் செய்தியை மகாவம்சம் என்னும் பாலி மொழி நூலில் அறிகிறோம். அவனை, அந்நூல் பிளயமாரன் என்று கூறுகிறது.[539]

அகம் 251ஆம் செய்யுளில் மாமூலனார் என்னும் புலவர், வம்பமோரியர் மோகூரின் மேல் படையெடுத்து வந்தனர் என்று கூறுகிறார். இது பற்றிப் பல ஆராய்ச்சிக்காரர்கள் பல கட்டுரைகளை எழுதியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர், வம்பமோரியர் மோகூரின் மேல் படையெடுத்து வந்ததாக எழுதியுள்ளனர். மோரியர், மோகூரின்மேல் படையெடுத்து வரவில்லை. அவர்கள் துளு நாட்டுக் கடற்கரையோரத்தில் வசித்திருந்த 'மோகர்' என்னும் இனத்தார் மீது படையெடுத்துச் சென்றனர். இதுபற்றி இந்நூல் தொடர்புரை காண்க.

பாண்டிய அரசர்

பசும்பூண் பாண்டியன்

நெடுஞ்செழியன் - 1
(ஆரியப்படை கடந்தவன், அரசுகட்டிலிற் றுஞ்சியவன்)

வெற்றிவேற் செழியன்
(சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்)

நெடுஞ்செழியன் - 2
(தலையாலங்கானத்துச் செரு வென்றவன்)

சோழ அரசர்

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் சோழ அரசர் குடியில் பிறந்த சில அரசர்கள் சோழ நாட்டின் வெவ்வேறு பகுதிகளை யரசாண்டனர். அவர்கள் அடிக்கடி தங்களுக்குள் போர் செய்து கொண்டிருந் தார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த பேர்பெற்ற சோழ அரசன் உருவப் பஃறேரிளஞ் சேட் சென்னி என்பவன். இளஞ்சேட் சென்னியும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் (இவன் செங்குட்டு வனின் தந்தை) சமகாலத்தில் இருந்த அரசர்கள். இவ்விருவரும் போர் என்னும் இடத்தில் போர் செய்தார்கள். அந்தப் போர்க்களத்தில் இவ்விருவரும் புண்பட்டு விழுந்து சிலகாலம் உயிர் போகாமல் கிடந்து பிறகு இறந்துபோனார்கள். அப்போது அவர்களைப் போர்க்களத்தில் கழாத்தலையார், பரணர் என்னும் புலவர்கள் பாடினார்கள் (புறம். 62, 63, 368).

வேற்பஃறடக்கைப் பெருவிற்கிள்ளிக்குப் பிறகு கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன், முடிசூடி அரசாண்டான். அவன் ஆட்சிக்கு வராதபடி அவனுடன் சோழகுலத்து அரசர் ஒன்பது பேர் போர் செய்தார்கள் (பட்டினப்பாலை 220, 227). அவர்களைக் கரிகாலன் வாகைப் பெருந்தலை என்னும் இடத்தில் வென்றான். அந்த ஒன்பது தாயாதியரசர்களைக் கரிகாலன் வென்று சோழநாட்டை யரசாண்டான். (அகம். 125 : 16-21). கரிகாற் பெருவளத்தான் தொண்டை நாட்டை யரசாண்ட தொண்டைமான் இளந்திரையன் என்பவனையும் வென்று தொண்டை நாட்டைச் சோழ இராச்சியத்தோடு இணைத்துக் கொண்டான். இதைப் பட்டினப்பாலை,


பல்லொளியர் பணிபு ஒடுங்கத்
தொல் அருவாளர் தொழில் கேட்ப (பட்டினப். 274, 275)

என்று கூறுகிறது. (அருவாளர் என்பது தொண்டை நட்டார்).

தொண்டை நாட்டை யரசாண்ட தொண்டைமான் இளந்திரையன் மேல் பெரும்பாணாற்றுப்படை பாடின கடியலூர் உருத்திரங் கண்ணனாரே கரிகாற் சோழன்மீது பட்டினப்பாலை பாடினார். இளந்திரையன்மீது பெரும்பணாற்றுப்படை பாடிய பின்னர், கரிகாற் சோழன் தொண்டை நாட்டை வென்றிருக்க வேண்டும். ஏனென்றால், கடியலூர் உருத்திரங்கண்ணனாரே கரிகாலன் அருவா நாட்டை (தொண்டை நாட்டை) வென்றதாகக் கூறுகிறார். எனவே, உருத்திரங்கண்ணனார் காலத்திலேயே தொண்டை நாடு, சோழ இராச்சியத்துக்குக் கீழடங்கிற்று.

அக்காலத்தில் தக்ஷிணபதம் என்னும் தக்காண நாட்டைச் சதகர்ணி (சாதவாகனர்) அரசர் ஆட்சி செய்தார்கள். சேர அரசர், சதகர்ணியரசருடன் நண்பராக இருந்ததுபோலவே கரிகாற் சோழனும் அவர்களுடன் நண்பனாக இருந்தான். அக்காலத்தில் தக்காணத்துக்கு அப்பாலிருந்த வட இந்தியாவில் பேரரசர் இல்லை. வட இந்தியாவில் சிறுசிறு நாடுகளைச் சிற்றரசர்கள் பலர் அரசாண்டார்கள். கரிகாற் சோழன் வட இந்தியாவின் மேல் திக்குவிசயஞ்செய்து சில அரசர்களை வென்றான். வென்று அவர்களிடமிருந்து சில பொருள்களைப் பெற்றான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.


மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபிற் றோரண வாயிலும்.

இவன் பெற்றுக்கொண்டான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. (சிலம்பு 5: 99-104) இவர்களில் அவந்தி வேந்தன் கரிகாலனுக்கு நண்பன் என்று அரும்பதவுரையாசிரியர் கூறுகிறார். உவந்தனன் கொடுத்த - மித்திரனாய்க் கொடுத்த என்று அவர் உரை கூறுவது காண்க. அவந்தி தேசத்தின் தலைநகரம் உஞ்சை என்னும் உச்சயினி நகரம். அவந்தி தேசம் அக்காலத்தில் சதகர்ணியரசன் ஆட்சியிலிருந்தது. அவன் கரிகாலனுக்குத் தோரண வாயிலை உவந்து (மகிழ்ச்சியோடு) கொடுத்தான் என்று இளங்கோவடிகள் கூறுவது பொருத்தமேயாகும்.

கரிகால்சோழன்மேல் பட்டினப்பாலையைக் கடியலூர் உருத்திரன் கண்ணனார் பாடினார். இவன் மேல் பொருநர் ஆற்றுப்படையை முடத்தாமக்கண்ணியார் பாடினார்.

இசை நாடகக் கலையில் பேர்பெற்றிருந்த மாதவி என்பவள் கரிகாற் சோழன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் அவன் அவையில் அரங்கேறித் தலைக்கோலிப் பட்டத்தைப் பெற்றாள். சோழன் கரிகாலன், நார்முடிச்சேரல் ஆட்சிக் காலத்திலும் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்திலும் சோழ நாட்டை அரசாண்டான்.

கரிகாலனுக்குப் பிறகு சோழ நாட்டை யரசாண்டவன் கிள்ளிவளவன் என்பவன். இவன் ஆட்சிக்கு வந்த போது வழக்கம் போல சோழ அரச குலத்துத் தாயாதிகள் ஒன்பது பேர் இவனை எதிர்த்தார்கள். அவர்கள் அரசுரிமைக்காக நாட்டில் குழப்பம் உண்டாக்கி உள்நாட்டுப் போரை நடத்திக்கொண்டிருந்தார்கள். கிள்ளிவளவன் செங்குட்டுவனுக்கு மைத்துனன் ஆகையால், செங்குட்டுவன் சோழரின் உள்நாட்டுப் போரில் தலையிட்டுக் கிள்ளிவளவன் சார்பாகப் போர் செய்து பகைவரை வென்று தன் மைத்துனனுக்கு முடிசூட்டினான். இச்செய்தி சிலப்பதிகாரத்திலிருந்து கிடைக்கிறது.


மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநா டழிக்கும் மாண்பினர் ஆதலின்
ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்

(சிலம்பு, நீர்ப்படை 118, 123)

என்றும்

ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச்செரு வென்று

(சிலம்பு. நடுகல். 116 - 117)


என்றும் சிலம்பு கூறுவது காண்க. மேலும், பதிற்றுப்பத்து 5ஆம் பத்துப் பதிகமும், இச்செய்தியை

ஆராச் செருவின் சோழர்குடிக் குரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து
நிலைச் செருவின் ஆற்றலை யறுத்து

என்று கூறுகிறது. கிள்ளிவளவன் தம்பி இளங்கிள்ளி என்பவன் தொண்டை நாட்டைக் காஞ்சீபுரத்திலிருந்து அரசாண்டான் (மணிமேகலை 18: 172-176)

எனவே, செங்குட்டுவன் காலத்தில் சோழ நாட்டை யரசாண்ட சோழர்கள் உருவப்பஃறேரிளஞ்சேட் சென்னியும் சோழன் கரிகாலனும் கிள்ளிவளனும் ஆவர். இவ்வரசர் காலத்திலேயே இவர்களுக்கு அடங்கி வேறு சில சோழர்களும் அரசாண்டார்கள்.

இலங்கை அரசர்கள்

இளநாகன்

நமது ஆராய்ச்சிக்குரிய கி.பி. 2ஆம் நூற்றாண்டில், இலங்கையை அரசாண்ட அரசர்களைப் பற்றி ஆராய்வோம். இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இளநாகன் என்னும் அரசன் (கி.பி. 91 முதல் 101 வரையில்) அரசாண்டான். இவன் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டில் திஸ்ஸ ஏரிக்குச் சென்றபோது இவனுடன் இருந்த லம்ப கர்ணர் என்பவர் இவனைவிட்டு அநுரைக்கு வந்து விட்டார்கள். லம்ப கர்ணர் அக்காலத்தில் செல்வாக்குள்ள உயர் தரத்தவர். அவர்கள் தன்னை விட்டுப் போய் விட்டதற்காகச் சினங்கொண்ட இளநாகன், அவர்களை மகாதூப சேதியத்துக்குப் பாதை அமைக்கும்படி தண்டித்தான். அவர்கள் தங்கள் கைகளாலே வேலை செய்து பாதையமைக்குமாறும் தாழ்ந்த இனத்தவரான சண்டாளர்களை அவர்களின் மேற் பார்வையாளராக இருக்கவும் கட்டளையிட்டான். இவ்வாறு தங்களை இழிவு படுத்தியதற்காகச் சினங்கொண்ட லம்பகர்ணர் ஒன்று சேர்ந்து அரசனைப் பிடித்துச் சிறையில் வைத்துவிட்டு அரசாட்சியைத் தாங்களே நடத்தினார்கள். சிறைப்பட்ட இளநாகன் தன்னுடைய கொற்ற யானையின் உதவியினால் சிறையிலிருந்து தப்பித்துத் தன் மகனான சந்தமுகசிவனுடன் மகாதிட்டைத் துறைமுகத்தில் கப்பல் ஏறி எதிர்க் கரையில் இருந்த நாட்டுக்குப் (தமிழ் நாட்டுக்கு) போய்விட்டான். (Mahavamsa xxxv. 16-26)

தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்த இளநாகன் எங்குத் தங்கினான், யார் உதவியைப் பெற்றான் என்பது தெரியவில்லை. மூன்று ஆண்டு தமிழ்நாட்டில் தங்கியிருந்து தமிழ்ச் சேனைகளைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் இலங்கைக்கு வந்தான். இலங்கையின் தென் பகுதியான உரோகண நாட்டின் துறைமுகமாயிருந்த 'சக்கரகொப்ப' என்னும் இடத்தில் கரையிறங்கினான். பிறகு, ஹங்காரப்பிட்டி என்னும் இடத்துக்கு அருகில் கபல்லக்கண்ட என்னும் இடத்தில் லம்ப கர்ணருடன் போர் செய்து வென்று மீண்டும் தன் அரசாட்சியைக் கைப்பற்றினான். போரை வென்ற பிறகு இவன் திஸ்ஸ ஏரிக்குப் போனபோது லம்பகர்ணர்களைத் தன் தேரில் பூட்டி இழுக்கச் செய்தான். இவன், முன்பு கூறியபடி ஆறு ஆண்டு அநுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்தான். (Mahavamsa xxxv, 27-45)

சந்தமுகசிவன்:

இளநாகன் இறந்த பிறகு அவன் மகனான சந்தமுகசிவன் (சந்திரமுக சிவன்) ஏழு ஆண்டு எட்டுத் திங்கள் (கி.பி. 101-110) இலங்கையை யரசாண்டான். இவன், தன் தந்தை இளநாகன் அரசு இழந்து தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்திருந்தபோது, அவனுடன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தான் என்பது தெரிகிறது. எங்கே எவரிடத்தில் தங்கினான் என்பது தெரியவில்லை. இவனுடைய அரசி தமிளாதேவி (தமிழத்தேவி) என்று கூறப்படுகிறாள். எனவே, இவன் தமிழ்நாட்டு அரசகுடும்பத்தில் திருமணஞ் செய்து கொண்டான் என்பது தெரிகிறது. எந்த அரச குடும்பத்தில் மணந்தான் என்பது தெரியவில்லை. மணிகாரகாம என்னும் ஊரில் இந்த அரசன் நிலங்களுக்கு நீர் பாய ஒரு ஏரியை உண்டாக்கி அந்த ஏரியையும் நிலங்களையும் இஸ்ஸரசமண என்னும் இடத்திலிருந்த பௌத்தப் பிக்குகளுக்குத் தானமாகக் கொடுத்தான் இவனுடைய அரசியான தமிளாதேவி, மணிகாரகாமத்திலிருந்து தனக்குக் கிடைத்த வரிப் பணத்தைப் பௌத்தப் பிக்குகளுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டாள் (Mahavamsa xxxv. 46-48).

யஸலாலக திஸ்ஸன்:

திஸ்ஸ ஏரியில் நிகழ்ந்த நீர் விளையாட்டு விழாவின்போது, சந்தமுகசிவனை அவன் தம்பியான யஸலாலக திஸ்ஸன் கொன்று இலங்கையை யரசாண்டான். அவன் ஏழு ஆண்டு எட்டுத் திங்கள் வரையில் (கி.பி. 110-118) அரசாண்டான் (Mahavamsa xxxv, 49-50). ஆனால், இவனும் தன்னுடைய வாயிற் காவலான சுபன் என்பவனால் கொல்லப்பட்டான்.

யஸ்லாலக திஸ்ஸனுடைய வாயிற்காவலன் சுபன் என்பவன். அந்தச் சுபன் உருவத்தில் இவ்வரசனைப் போலவே இருந்தான். ஆகவே, அரசன் சுபனுக்குத் தன்னைப்போல ஆடையணிவித்து விளையாட்டாக வேடிக்கை பார்ப்பது வழக்கம். காவற்காரனாகிய சுபன் அரச ஆடைகளுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் போது அமைச்சர்கள் சென்று, அவனை அரசன் என்று எண்ணிக் கொண்டு வணங்கும்போது காவல்காரன் வேஷத்தில் வாயிலில் இருக்கும் உண்மையான அரசன் நகைத்து வேடிக்கை பார்ப்பான். அடிக்கடி இப்படி நிகழ்ந்தது. ஒரு நாள் காவற்கார சுபன் சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்த போது காவற்காரன் வேஷத்தில் வாயிலில் இருந்த அரசன் உரத்துச் சிரித்தான். அதனைக் கண்ட சுபன் சினந்து, 'இந்தக் காவலன் ஏன் இப்படிச் சிரிக்கிறான். இவனைக் கொண்டுபோய்ச் சிரச்சேதம் செய்யுங்கள்' என்று கட்டளையிட்டான். அக்கட்டளைப்படியே அவனைக் கொன்றுவிட்டார்கள். பிறகு காவலாளியாயிருந்த சுபன், சுபராசன் என்னும் பெயருடன் இலங்கையை யரசாண்டான் (Mahavamsa, xxxv. 51-56).

சுபராசன்:

சுபராசன், கி.பி. 118 முதல் 124 வரையில், ஆறு ஆண்டு அநுராத புரத்திலிருந்து இலங்கையை யரசாண்டான். சுபராசன் ஆட்சிக்கு வந்தபோது, அவனை வசபன் என்னும் பெயருள்ள ஒருவன் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுவான் என்று நிமித்திகர் கூறினர். ஆகவே, சுபராசன் தன் இராச்சியத்தில் உள்ள வசபன் என்னும் பெயருள்ளவர்களையெல்லாம் கொன்றுவிடும்படி கட்டளையிட்டான். இவனுடைய சேனைத்தலைவனுக்கு உறவினன் ஒருவன் வசபன் என்னும் பெயர் படைத்திருந்தான். அந்தச் சேனைத்தலைவன், அரசன் கட்டளைப்படி தன் உறவினான வசபனை அரசனிடம் கொடுக்க எண்ணினான். அவனுடைய எண்ணத்தை அவனுடைய மனைவியாகிய பொத்தா என்பவள் மூலமாக அறிந்த வசபன் தப்பி ஓடி உரோகண நாட்டுக்குச் சென்றான். சென்று தனக்கு ஆக்கந் தேடிக்கொண்டு சேனையைத் திரட்டினான். பிறகு, அரசன்மேல் படையெடுத்து வந்து போர்செய்து வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனுடைய உறவினனான சேனைத்தலைவன் போரில் இறந்து விட்டான்.

வசபன்:

வசபன் அரசாட்சியைக் கைப்பற்றிய பிறகு தான் தப்பிப் போக உதவியாயிருந்த பொத்தாவை அரசியாக்கினான் (Mahavamsa xxxv, 59- 70). இவன் நீண்டகாலம் ஆட்சிசெய்தான். கி.பி. 124 முதல் 168 வரையில் நாற்பது ஆண்டு அரசாண்டான். இவன் தன் மகனான வங்க நாசிக திஸ்ஸன் என்பவனுக்குச் சுபராசனின் மகளான மஹாமத்தா என்பவளைத் திருமணஞ் செய்து வைத்தான் (Mahavamsa xxxv, 69- 70) . வசபன், செங்குட்டுவனின் தமயனான நார்முடிச்சேரலின் ஆட்சிக்காலத்திலும் செங்குட்டுவன் ஆட்சிக்காலத்திலும் இருந்தவன் என்று தெரிகிறான்.

வங்கநாசிக திஸ்ஸன்:

வசபன் நெடுங்காலம் அரசாண்டபடியால், அவன் மகனான வங்கநாசிக திஸ்ஸன் வயதுசென்ற பிறகு ஆட்சிக்கு வந்தான். கி.பி. 168 முதல் 171 வரையில், மூன்று ஆண்டு இவன் ஆட்சி செலுத்தினான். இவன் மகன் கஜபாகு காமணி என்பவன். இவன் செங்குட்டுவன் காலத்தில் இருந்தவன்.

கஜபாகு காமணி:

வங்கநாசிக திஸ்ஸன் இறந்த பிறகு அவன் மகனான கஜபாகு காமணி என்பவன் இலங்கையின் அரசனானான். இவன் கி.பி. 171 முதல் 193 வரையில், இருபத்திரண்டு ஆண்டு ஆட்சி செய்தான். சிலப்பதிகாரம் கூறுகிற 'கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்' என்பவன் இவனே. செங்குட்டுவன் வஞ்சிமா நகரத்தில் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துக் குடமுழுக்குச் செய்தபோது அந்த விழாவுக்கு இவன் வந்திருந்தான். பத்தினி வழிபாட்டை இலங்கையில் உண்டாக்கியவனும் இவனே. (சிலம்பு. 30 : 160, உரைபெறு கட்டுரை 3). (பிற்காலத்து நூலாகிய பூஜாவலி, சோழ அரசன் ஒருவன் இலங்கைக்குச் சென்று போர் செய்து சிங்களவரைச் சிறைப்பிடித்து வந்து காவிரியாற்றுக் கரை கட்டுவித்தான் என்றும், பிறகு கஜபாகு அரசன் சோழநாட்டுக்குப் போய்ச் சிங்களவரைச் சிறைமீட்டுக் கொண்டுவந்தான் என்றும் கூறுகிறது. இச்செய்தியை மகாவம்சம் கூறவில்லை. பழைய தமிழ் இலக்கியங்களும் கூறவில்லை. எனவே, இச்செய்தி நம்பத்தக்கதன்று.)

மகாவம்சம் கூறுகிற கஜபாகுவும், சிலப்பதிகாரம் கூறுகிற 'கடல் சூழ் இலங்கைக் கயவாகு'வும் ஒருவரே என்பதையும் இந்தக் கஜவாகு, சேரன் செங்குட்டுவனின் காலத்தில் இருந்தவன் என்பதையும் சரித்திரக்காரர் எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், ஒருவர் இருவர் கஜபாகுவும் செங்குட்டுவனும் சம காலத்தவர் அல்லர் என்று கூறி மறுக்கின்றார். இவர் மறுப்பை ஆராய்ந்து பார்ப்போம்.

திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் தாம் ஆங்கிலத்தில் எழுதிய 'தமிழ்மொழி - இலக்கிய வரலாறு' (S. Vaiyapuri Pillai, History of Tamil Language and Literature, 1956. p. 144). என்னும் நூலில் 144ஆம் பக்கத்தில் இவ்வாறு பொருள்படும்படி எழுதுகிறார்:

"இலங்கையரசன் கஜபாகு என்பவன் செங்குட்டுவனுடைய அவைக்கு வந்திருந்தான் என்பதற்குச் சான்று இல்லாதது சரித்திர நோக்குக்கு முக்கியமானதாகும். உரைபெறு கட்டுரையில் சிலப்பதிகாரமே இதை மறுக்கிறது. பதிற்றுப்பத்தின் 5ஆம் பத்து இலங்கையைப் பற்றியாவது கஜபாகுவைப் பற்றியாவது ஒன்றுமே சொல்லவில்லை. உண்மையில் பதிற்றுப்பத்து முழுவதிலும் இலங்கையைப் பற்றியாவது அதன் அரசர்களைப் பற்றியாவது யாதொரு குறிப்பும் இல்லை. செங்குட்டுவனையும் அவன் தன் தலைநகரில் அமைத்த கண்ணகிக் கோவிலையும் கூறுகிற மணிமேகலை காவியமுங்கூட கஜபாகுவைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. கடைசியாக, சேர அரசன் கண்ணகிக்குக் கோவில் அமைத்து விழா செய்தபோது கஜபாகு அரசன் அங்குச் சென்றிருந்தான் என்பது பற்றியாவது, அவன் தன் நாடாகிய இலங்கையில் கண்ணகி வழிபாட்டை ஏற்படுத்தியதைப் பற்றி யாவது மகாவம்சம் என்னும் நூல் ஒன்றுமே கூறவில்லை."

இவ்வாறு வையாபுரியார் காரணங்களைக் காட்டி மறுப்புக் கூறுகிறார். இவர் கூறும் காரணங்களையும் மறுப்புக்களையும் ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

1. சேர மன்னன் செங்குட்டுவன் தன் தலைநகரில் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்தபோது இலங்கைக் கஜபாகு வேந்தன் அங்கு வந்திருந்தான் என்று சிலப்பதிகாரம் வரந்தருகாதையில் கூறியிருப்பதை, சிலம்பு உரைபெறு கட்டுரை மறுக்கிறது என்று வையாபுரியார் கூறகிறார். பி. டி. சீநிவாச ஐயங்காரும், இவர் கூறுவது போலவே, கஜபாகு, கண்ணகிக் கோட்டத்துக்கு வந்திருந்தான் என்று சிலப்பதிகாரம் வரந்தரு காதை கூறுவதை சிலம்பு உரைபெறு கட்டுரை மறுக்கிறது என்று தாம் எழுதிய தமிழர் சரித்திரம் (P. T. Srinivasa Iyengar, History of the Tamils, 1929, p. 380). என்னும் நூலில் எழுதுகிறார். இவர்கள் கூறுவதை ஆராய்ந்து பார்ப்போம். உரைபெறு கட்டுரையின் வாசகம் இது:

அது கேட்டுக் கடல்சூழிலங்கைக் கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித்திங்கள் அகவையினாங்கோர் பாடிவிழாக் கோள் பன்முறை யெடுப்ப மழைவீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று.

'இதில் 'அது கேட்டு' என்றிருப்பதை இவர்கள் சுட்டிக் காட்டி, கஜபாகு வேந்தன் யாரோ ஒருவர் கண்ணகி தெய்வத்தைப் பற்றிக் கூறக் கேட்டுப் பத்தினித் தெய்வத்துக்குக் கோயில் அமைத்தான் என்றும், ஆகவே, அவன் வஞ்சிமாநகரத்துக் கண்ணகிக் கோவிலுக்கு வந்திருந்தான் என்று சிலம்பு வரந்தருகாதை கூறுவதை உரைபெறு கட்டுரை மறுக்கிறது என்றும் கூறுகிறார்கள். இவர்கள் கூறுவது உண்மைபோலக் காணப்பட்டாலும் நன்கு ஆராய்ந்து பார்த்தால், இது சிலப்பதிகாரத்தை மறுக்கவில்லை என்பதும் சிலப்பதிகாரத்தை ஆதரிக்கிறது என்பதும் விளங்கும். இவர்கள் சிலப்பதிகாரத்தை நன்கு படிக்காமல் அவசரப்பட்டுத் தவறான முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

'அது கேட்டு' என்று உரைபெறு கட்டுரை கூறுவதன் பொருள் என்னவென்றால். கண்ணகியார் இவர்களுக்கு அசரீரியாகக் கூறிய வாக்கைக் கேட்டு என்பது. இதற்குச் சான்று சிலப்பதிகாரத்திலேயே இருக்கிறது.

குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
என்னாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்
ஆங்கது கேட்ட அரசனும் அரசரும்
ஓங்கிருந் தானையு முறையோ டேத்த

என்று சிலம்பு வரந்தரு காதை (159-166) கூறுகிறது.

இந்த அகச் சான்றை அறியாமல், சீநிவாச ஐயங்காரும் வையாபுரிப்பிள்ளையும் உரைபெறு கட்டுரை 'மறுக்கிறது' என்று எழுதியது உண்மைக்கு மாறான தவறு ஆகும். எனவே, உரை பெறு கட்டுரை 'மறுக்க'வில்லை; ஆதரிக்கிறது என்பது தெரிகிறது. ஆகையால், உரைபெறு கட்டுரையும் வரந்தரு காதையும் கஜபாகு வேந்தன், செங்குட்டுவன் வஞ்சி நகரத்தில் அமைத்த பத்தினிக் கோட்டத்துக்கு வந்திருந்தான் என்பதை வலியுறுத்துகின்றன. ஆகவே இவர்கள் கூறுவது வெறும் போலியுரை எனத் தள்ளுக.

2. 'பதிற்றுப்பத்தின் 5ஆம் பத்து இலங்கையைப் பற்றியாவது கஜபாகுவைப் பற்றியாவது ஒன்றுமே பேசவில்லை. உண்மையில் பதிற்றுப்பத்து முழுவதிலும் இலங்கையைப் பற்றியாவது தன் அரசர்களைப் பற்றியாவது யாதொரு குறிப்பும் இல்லை' என்று வையாபுரியார் சுட்டிக்காட்டுகிறார்.

ஆம். இவர் சுட்டிக்காட்டுவது உண்மையே. செங்குட்டுவனின் புகழையும் சிறப்பையும் பேசுகிற பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து இலங்கை மன்னன் கஜபாகுவைக் குறிப்பிடவில்லைதான். அது மட்டுமா? செங்குட்டுவன் கங்கைக் கரையில் கனக விசயருடன் போர்செய்து அவர்களைச் சிறைப்பிடித்ததையும் கண்ணகிச் சிலையமைக்க இமயமலையிலிருந்து கல் எடுத்து வந்ததையும் பத்தினிக் கோட்டம் அமைத்ததையும் கூறவே இல்லை (பதிகம் மட்டும், செங்குட்டுவன் கல் எடுத்துக் கங்கையில் நீராட்டியதைக் கூறுகிறது). இவ்வளவு முக்கியச் செய்திகளை 5ஆம் பத்து ஏன் கூறவில்லை? இதை வையாபுரியார் அறியாமற் போனதுதான் வியப்பாக இருக்கிறது! இதன் காரணத்தை விளக்குவோம்.

செங்குட்டுவன்மீது 5ஆம் பத்துப் பாடியவர் பரணர் என்னும் புலவர். அவர் செங்குட்டுவன்மேல் 5ஆம் பத்துப் பாடியபோது அதிக வயது சென்றவராக இருந்தார். கண்ணகிக் கோட்டம் அமைத்தது முதலிய நிகழ்ச்சிகள் செங்குட்டுவனின் பிற்கால வாழ்க்கையில் நிகழ்ந்தவை. ஆகவே, தாம் 5ஆம் பத்துப் பாடிய காலத்தில் செங்குட்டுவன் செய்திருந்த புகழ்ச் செய்திகளை மட்டும் அவர் பாடினார். ஆகவே, பிற்காலத்தில் நிகழ்ந்த கண்ணகிக் கோட்டம் அமைத்தது, கஜபாகு விழாவுக்கு வந்திருந்தது முதலிய செய்திகள் ஐந்தாம் பத்தில் இடம் பெறவில்லை.

எனவே, தாம் 5ஆம் பத்துப் பாடிய காலத்தில் நிகழாத செய்திகளை (கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து அந்த விழாவுக்குக் கஜபாகு வந்தது முதலான பிற்காலத்தில் நிகழ்ந்தவற்றை) பரணர் எவ்வாறு பாடக்கூடும்? ஆகவேதான், 5ஆம் பத்தில் இச்செய்திகள் இடம் பெறவில்லை. இதனை அறியாமல் வையாபுரியார் கூறுவது போலி மறுப்பு என விடுக.

5ஆம் பத்துப் பதிகத்தில், செங்குட்டுவன் கங்கைக் கரைக்குச் சென்றதும் பத்தினிக் கடவுளுக்குக் கல் கொண்டு வந்ததும் கூறப்படுகின்றன. பதிகச் செய்யுளை பரணர் பாடவில்லை. பதிற்றுப் பத்துப் பதிகச் செய்யுட்களைப் பதிற்றுப்பத்தைப் பாடிய புலவர்கள் பாடவில்லை. அந்தந்த அரசர்கள் இறந்த பிறகு பதிகச் செய்யுட்கள் அரண்மனைப் புலவர்களால் பாடிச் சேர்க்கப் பட்டவை. ஆகவேதான், 5ஆம் பத்தின் பதிகத்தில் மட்டும் கண்ணகிக்குக் கல்கொண்டு வந்த செய்தி கூறப்பட்டுள்ளது.

3. 'செங்குட்டுவனையும் அவன் தன்னுடைய தலைநகரில் அமைத்த கண்ணகிக் கோவிலையும் கூறுகிற மணிமேகலைக் காவியம் கஜபாகுவைப் பற்றி ஒன்றும் கூறவில்லை' என்று வையாபுரியார் கூறுகிறார்.

செங்குட்டுவன் கண்ணகிக்கு அமைத்த பத்தினிக் கோட்ட வரலாற்றினை மணிமேகலை காவியம் கூறவில்லை. கூற வேண்டிய அவசியமும் அக்காவியப் போக்குக்கு ஏற்படவில்லை. மணிமேகலை 26ஆம் காதையில் 77 முதல் 90ஆம் அடி வரையில் செங்குட்டுவனின் வீரத்தை மணிமேகலை சிறப்பித்துக் கூறுகிறது. அங்கேயும் கண்ணகிக் கோட்டம் அமைத்த விவரத்தைக் கூறவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை. செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் அமைத்ததை மணிமேகலைக் காவியம் கூறியிருப்பது போலவும் அதில் கஜபாகுவைப் பற்றிக் கூறாமல் விட்டிருப்பது போலவும் வாசகர்கள் நினைக்கும்படி வையாபுரியார் இச்செய்தியைப் புனைந்துரைக்கிறார். இது போலி மறுப்பு. செங்குட்டுவன் பத்தினிக்கோட்டம் அமைத்த வரலாற்றை விளக்கமாகக் கூறவேண்டிய சந்தர்ப்பமே மணிமேகலைக்கு ஏற்படாதிருக்கும்போது, அக்காவியம் ஏன் கஜபாகுவைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்று கேட்பது விதண்டாவாதமாக இருக்கிறது. எனவே, இதுவும் போலி மறுப்பு என விடுக.

4. சேரன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரத்தில் கண்ணகிக்குக் கோவில் அமைத்துத் திருவிழாச் செய்தபோது கஜபாகு அரசன் அங்கு வந்திருந்தான் என்றாவது, அவன் தன் சொந்த நாடாகிய இலங்கையில் கண்ணகி வழிபாட்டை ஏற்படுத்தினான் என்றாவது இலங்கை நூலாகிய மகாவம்சம் ஒன்றுமே கூறவில்லை என்று கூறுகிறார்.

மகாவம்சம் இதுபற்றி ஒன்றும் கூறாதது உண்மைதான். மேல் போக்காக மகாவம்சத்தைப் படித்தவர்கள் இது முக்கியமான மறுப்பு என்றும் கருதுவார்கள். ஆனால், மகாவம்சத்தை ஆராய்ந்து படித்தவர் இந்தக் காரணத்தை உண்மை என்று கொள்ளமாட்டார்கள். மகாவம்சம் ஏன் எழுதப்பட்டது? யாரால் எழுதப் பட்டது? எந்த நோக்கத்தோடு எழுதப்பட்டது? என்பதை அறிந்தவர்கள், கஜபாகு பத்தினிக் கடவுள் வழிபாட்டைப் பற்றி மகா வம்சம் சொல்லாத காரணத்தை அறிவார்கள். மகாவம்சம், பௌத்த மத பிக்ஷவினால் எழுதப்பட்ட நூல். இலங்கையில் பௌத்த மதம் எப்படி வந்தது? அது எப்படி வளர்ந்தது? எந்தெந்த அரசர்கள் எந்தெந்தவிதமாக அந்த மதத்தை வளர்த்தார்கள்? என்பதைக் கூறுவதே மகாவம்சம் எழுதப்பட்டதன் முக்கிய நோக்கமாகும்.

எந்தெந்த அரசர்கள் எந்தெந்தப் பிரிவேணைகளை (பௌத்தப் பல்கலைக்கழகங்களை) அமைத்தார்கள், எந்தெந்த தாகோபாக்களை (தாதுகர்ப்பங்களைக்) கட்டினார்கள், எந்தெந்த பௌத்த விகாரைகளை ஏற்படுத்தினார்கள், பௌத்தப் பிக்குகளை எந்தெந்த விதத்தில் ஆதரித்தார்கள், எந்தெந்த மானியங்களைப்