மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/012-052

11. செங்கட் சோழன்,
கணைக்கால் இரும்பொறை காலம்

செங்கட் சோழனும் கணைக்கால் இரும்பொறையும், கடைச்சங்க காலத்தின் இறுதியில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர்கள் என்று கூறினோம். இவர்கள் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள் என்று சில சரித்திரக் காரர்கள் தவறாகக் கூறியுள்ளதை இங்கு விளக்கிக் காட்ட விரும்புகிறோம். சோழன் செங்கணான் கி. பி. 6ஆம் நூற்றாண்டில், பல்லவ அரசர் காலத்தில் இருந்தான் என்று இவர்கள் எழுதியுள்ளனர். இவர்கள் இவ்வாறு கருதுவதற்குச் சான்று கிடையாது. இவர்கள் காட்டும் ஒரே சான்றும் தவறானது. அதாவது, சங்க காலப் புலவரான பொய்கையாரும் பக்தி இயக்க காலத்தில் இருந்த பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று இவர்கள் தவறாகக் கருதுவதுதான்.

தமிழர் வரலாறு என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய பி.தி. சீனிவாச அய்யங்கார் முதன்முதலாக இந்தத் தவறு செய்தார். களவழி பாடிய பொய்கையாரும் விஷ்ணு பக்தரும் பல்லவர் காலத்திலிருந்தவருமான பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று தவறாகக் கருதிக் கொண்டு, பொய்கையாரால் களவழியில் பாடப்பட்ட சோழன் செங்கணான் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவன் என்று எழுதினார்.1 இதே காரணத்தைக் கூறி மு. இராகவையங்காரும், களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் முதல் திருவந்தாதி பாடிய பொய்கை யாழ்வாரும் ஒருவரே என்று எழுதினார். டி.வி., மகாலிங்கமும் தாம் ஆங்கிலத்தில் எழுதிய தென்னிந்தியப் பழைய வரலாற்றில் காஞ்சீபுரம் என்னும் நூலில், இவர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டு, சோழன் செங்கணான் கி.பி 6ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று கூறியதோடு அல்லாமல் அவன் சிம்மவிஷ்ணு பல்லவன் காலத்தில் இருந்தவன் என்றும் எழுதிவிட்டார்.2 இவர்கள் இப்படி எழுதியிருப்பது ‘கங்காதரா மாண்டாயோ’ என்னும் கதை போலிருக்கிறதே தவிர உண்மையான சான்றும் சரியான ஆதாரமும் இல்லாத கருத்தாகும்.

பொய்கையார் என்னும் பெயர் பொய்கையூரில் பிறந்தவர் என்னும் காரணப் பெயர். பொய்கையூர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்திருக்கலாம். குளப்பாக்கம், குளத்தூர், ஆற்றூர், ஆற்றுப்பாக்கம் என்னும் பெயர்கள் போல. வெவ்வேறு ஊரிலிருந்த பொய்கையார்களை ஒரே பொய்கையார் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? களவழி பாடிய பொய்கையாரும், முதல் திருவந்தாதி பாடிய பொய்கையாரும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நாடுகளில் இருந்தவர்கள். களவழி நாற்பது பாடிய பொய்கையார் மேற்குக் கடற்கரையில் இருந்த தொண்டிப்பட்டினத்தில் சேர நாட்டில் கடைச் சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்தவர். முதல் திருவந்தாதி பாடிய பொய்கையாழ்வார் கிழக்குக் கடற்கரையைச் சேர்ந்த தொண்டை நாட்டில் பிறந்து பக்தி இயக்கக் காலத்தில் (பல்லவ ஆட்சிக் காலத்தில்) இருந்தவர். (பக்தி இயக்கக் காலம் என்பது கி. பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரையில் உள்ள காலம்.)

பக்தி இயக்கக் காலத்தில், ஏறத்தாழ கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்த பொய்கையாழ்வார் மானிடரைப் பாடாமல், விஷ்ணுவையே பாடித் தொழுதுகொண்டிருந்தவர். அவர் எந்த அரசனையும் வணங்கித் துதித்துப் பாடியவர் அல்லர். ‘வாய் அவனை அல்லது வாழ்த்தாது’ (11) என்றும் ‘மால் அடியை அல்லால் மற்றும் எண்ணத்தான் ஆமோ’ (31) என்றும் ’நாளும் கோள் நாகணை யான் குரைகழலே கூறுவதே’ (63) என்றும் ‘நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும் பாடிலும் நின் புகழே பாடுவன்’(83) என்றும் ‘மாயவனை அல்லாமல் இறையேனும் ஏத்தாது என் நா’ (94) என்றும் உறுதி கொண்டிருந்த பொய்கையாழ்வார் மனிதரைப் பாடாத திருமால் பக்தர்.

ஆனால், கடைச்சங்க காலத்தில் இருந்த பொய்கையாரோ, மனிதனாகிய செங்கட்சோழன் மேல் களவழி நாற்பது பாடிய புலவர். மேலும் அவர், சேரமான் கோக்கோதை மார்பனையும், பொறை யனையும் புகழ்ந்து பாடியுள்ளார். ‘தெறலழுந்தானைப் பொறையன் பாசறை’யைப் பாடியுள்ளார் (நற். 18). மேலும், சேரமான் கோக்கோதை மார்பனை அவர்,


“கள் நாறும்மே கானலத் தொண்டி
அஃதெம் ஊரே, அவன் எம் இறைவன்”
(புறம் 48)

(அவன் - கோதை மார்பன்)

என்றும்,

“நாடன் என்கோ ஊரன் என்கோ
பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ
யாங்கன மொழிகோ ஓங்குவாள் கோதையை”
(புறம் 49)

என்றும் பாடியுள்ளார். செங்கண் சோழனையும், கொங்கு நாட்டுப் பொறையனையும் சேரமான் கோக்கோதை மார்பனையும் பாடிய இந்தப் பொய்கையார், திருமாலையோ அல்லது வேறு கடவுளையோ பாடியதாக ஒரு செய்யுளேனும் கிடைக்கவில்லை.

எனவே, மனிதரை (அரசரைப்) பாடிக்கொண்டிருந்த பொய்கையாரும், மானிடரைப் பாடாமல் திருமாலையே பாடிக்கொண்டிருந்த பொய்கையாழ்வாரும் ஒருவராவரோ? வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு பொய்கையார்கள் எப்படி ஒரே பொய்கையார் ஆவர்? பெயர் ஒற்றுமை மட்டும் இருந்தால் போதுமா? எனவே, பொய்கையார் வேறு பொய்கையாழ்வார் வேறு என்பது நன்றாகத் தெரிகிறது.

இனி டிவி. மகாலிங்கம் கூறுவதை ஆராய்வோம். தொண்டை நாட்டையரசாண்ட பல்லவ அரசர் மரபைச் சேர்ந்த சிம்மவர்மனுடைய மகனான சிம்மவிஷ்ணுவின் காலத்தில், புறநானூற்றிலும் களவழி நாற்பதிலுங் கூறப்பட்ட செங்கணான் இருந்தான் என்று இவர் எழுதுகிறார்.3 சிம்மவிஷ்ணு சோழநாட்டின் மேல் போருக்குச் சென்ற போது அவனை எதிர்த்தவன் செங்கட் சோழன் என்று கூறுகிறார். செங்கட் சோழனும் சிம்விஷ்ணுவும் 6ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள் என்றும், செங்கணான் சேரனை (கணைக்காலிரும்பொறையை) வென்ற பிறகு அவனுடைய கடைசிக் காலத்தில் சிம்மவிஷ்ணு செங்கணானை வென்றான் என்றும் எழுதுகிறார்.3 இவர் கூறுவது இவருடைய ஊகமும் கற்பனையும் ஆகும். பல்லவ சிம்மவிஷ்ணு சோழ நாட்டை வென்றான் என்றும் பல்லவரின் பள்ளன்கோவில் செப்பேடு கூறுகிறது (சுலோகம் 5). சிம்மவிஷ்ணு இன்னொரு சிம்மவிஷ்ணு என்பவனை வென்றான் என்று அதே சாசனம் (சுலோகம் 4) கூறுகிறது. இதிலிருந்து சோழ நாட்டையரசாண்ட சிம்மவிஷ்ணுவைத் தொண்டை நாட்டையரசாண்ட பல்லவ சிம்மவிஷ்ணு வென்று சோழநாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது. ஆனால், மகாலிங்கம், பல்லவ சிம்மவிஷ்ணு, சோழன் செங்கணானுடன் போர் செய்து சோழ நாட்டை வென்றான் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? சாசனம் கூறுகிற பெயரை மாற்றி இவர் தம் மனம் போனபடி கூறுவது ஏற்கத்தக்கதன்று.

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டையரசாண்டவர் களப்பிர அரசர்கள். களப்பிரருக்குக் கீழ்ச் சோழ அரசர் அக்காலத்தில் சிற்றரசராக இருந்தார்கள். ஆகவே, சுதந்தரமும் ஆற்றலும் படைத் திருந்த செங்கட் சோழன், களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்குக் கீழடங்கிச் சிற்றரசனாக வாழ்ந்திருந்திருக்க முடியாது. அவன், களப்பிரர் ஆட்சிக் காலத்துக்கு முன்பு சோழர்கள் சுதந்தரர்களாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் தான் வாழ்ந்திருக்க வேண்டும். கடைச்சங்க காலத்துக்குப் பிறகு (கி.பி. 250க்குப் பிறகு) சோழ நாடு களப்பிரர் ஆட்சிக்குக் கீழடங்கியிருந்தது. ஏறத்தாழ கி. பி. 575இல் பல்லவ சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் களப்பிரரிடமிருந்து வென்று கைப்பற்றினான். பிறகு, சோழ நாடு கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவர் ஆட்சிக்குப்பட்டிருந்தது. கி.பி 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சோழர்கள் மறுபடியும் சுதந்திரம் பெற்றுப் பேரரசர்களாக அரசாண்டார்கள். ஆகவே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10ஆம் நூற்றாண்டு வரையில் சோழர்கள் களப்பிரருக்கும் பின்னர் பல்லவருக்கும் கீழடங்கிச் சிற்றரசர்களாக இருந்த காலத்தில் சோழன் செங்கணான் இருந்திருக்கமுடியாது. செங்கணான், களப்பிரர் சோழ நாட்டைக் கைப்பற்றுவதற்கு முன்னரே கி.பி. 250க்கு முன்பு இருந்தவனாதல் வேண்டும்.

பள்ளன்கோவில் செப்பேடு கூறுகிறபடி, பல்லவ சிம்மவிஷ்ணு வென்ற சோழ நாட்டுச் சிம்ம விஷ்ணு களப்பிர அரசன் என்பது சரித்திரசிரியர்கள் முடிவு செய்துள்ள உண்மையாகும். சரித்திரக்காரர்களின் இந்த முடிவுடன் மகாலிங்கம் புதிதாகக் கற்பனையாகவும் ஊகமாகவும் கூறுகிற செய்தி முரண்படுகிறது.

பொய்கையாரைப் பொய்கையாழ்வாருடன் இணைத்துக் குழப்புவதும், பிறகு பொய்கையார் களவழியில் பாடிய செங்கணானைக் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று இணைத்துக் குழப்புவதும். பிறகு அந்தச் செங்கணானைப் பல்லவ சிம்மவிஷ்ணுவின் சம காலத்தவன் என்று ஊகிப்பதும், பிறகு செங்கணானைச் சோழ நாட்டில் அரசாண்ட சிம்மவிஷ்ணுவுடன் (களப்பிர அரசனுடன்) இணைத்துக் குழப்புவதும் உண்மையான சரித்திரத்துக்கு உகந்ததன்று. முதற் கோணல் முற்றுங்கோணல் என்னும் பழமொழி போல, பொய்கையாழ்வாரில் தொடங்கிய தவறு பல தவறுகளில் வந்து முடிந்தது.

எனவே, நாம் தொடக்கத்தில் கூறியதுபோல, சோழன் செங்கணானும் அவன் வென்ற கணைக்கால் இரும்பொறையும் அவர்கள் காலத்திலிருந்த பொய்கையாரும் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தார்கள் என்பதே சரியாகும்.

✽ ✽ ✽

அடிக்குறிப்புகள்

1. (P. 608 - 610 History of the Tamils, P.T. Srinivasa Iyengar. 1929).

2. (P. 49, 38-59. Kanchipuram in Early South Indian History, T.V. Mahalingam. 1969).

3. (P. 49. K.E.S.I.H.)

4. (P. 58-59 K.E.S.I.H).