மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/016-052

15. பயிர்த் தொழில்,
கைத்தொழில், வாணிபம்

மற்றத் தமிழ் நாடுகளில் இருந்தது போலவே கொங்கு நாட்டிலும் பலவகையான தொழில்கள் நடந்து வந்தன. கொங்கு நாடு கடற்கரை இல்லாத உள்நாடு. ஆகையால், கடல்படு பொருள்களாகிய உப்பும் உப்பிட்டு உலர்த்திய மீன்களும் சங்குகளும் நெய்தல் நிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்டன. அவை மேற்குக் கடற்கரை, கிழக்குக் கடற்கரைப் பக்கங்களிலிருந்து கொண்டு வரப்பட்டன. உமணர் (உப்பு வாணிகர்) உப்பு மூட்டைகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு உள் நாடுகளில் வந்து விற்றனர். கொங்குநாட்டில் வாழ்ந்தவரான ஔவையாரும் இதைக் கூறுகிறார் (‘உமணர் ஒழுகைத்தோடு’ - குறுந். 388: 4). உப்பு வண்டி மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி ஓசை காட்டுவழிகளில் ஒலித்தது.1 உப்பு வண்டிகளில் பாரம் அதிகமாக இருந்தபடியால், சில சமயங்களில் வண்டிகள் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கும் போது அச்சு முறிந்துவிடுவதும் உண்டு. அதற்காக அவர்கள் சேம அச்சுகளை வைத்திருந்தார்கள்.1

கடற்கரைப் பக்கங்களில் சங்கு கிடைக்கும் இடங்களில் கடலில் முழுகிச் சங்குகளைக் கொண்டு வந்து வளையல்களாக அறுத்து விற்றனர். அக்காலத்தில் தமிழ்நாட்டு மகளிர் எல்லோரும் சங்கு வளைகளைக் கையில் அணிந்திருந்தனர். சங்கு வளைகளை அணிவது நாகரிகமாகவும் பண்பாடாகவும் மங்கலமாகவும் கருதப்பட்டது. குடில்களில் வாழ்ந்த ஏழைப் பெண்கள் முதலாக அரண்மனைகளில் வாழ்ந்த அரசியர் வரையில் எல்லாப் பெண்களும் சங்கு வளையல்களை அணிந்திருந்தார்கள். செல்வச் சீமாட்டிகளும் அரசிகளும் பொன்வளையல்களை அணிந்திருந்ததோடு சங்கு வளையல்களையும் கட்டாயமாக அணிந்திருந்தனர். செல்வம் படைத்தவர்கள் வலம்புரிச் சங்குகளை அணிந்தார்கள். சாதாரண மகளிர் இடம்புரிச்சங்கு வளையல்களை அணிந்தார்கள். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசி, கைகளில் பொன் தொடிகளை அணிந்திருந்தாள்.3 கோவலனுடைய மனைவி கண்ணகியார் பொன்தொடி முதலான நகைகளை எல்லாம் விற்ற பிறகும் சங்கு வளையை மட்டும் கடைசி வரையில் அணிந்திருந்தார். அவர் கோவலனை இழந்து கைம்பெண் ஆனபோது கொற்றவை கோயிலின் முன்பு தன்னுடைய சங்கு வளையை உடைத்துப் போட்டார்.3 கைம்பெண்களைத் தவிர ஏனைய மகளிர் எல்லோரும் முக்கியமாக மணமானவர்கள் எல்லோரும் சங்கு வளைகளை அணிந்திருந்தார்கள். இதைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். தமிழ்நாட்டு மகளிர் மட்டுமல்லர். ஏனைய பாரத நாட்டு மகளிர் எல்லோரும் அந்தக் காலத்தில் சங்கு வளைகளை அணிந்தனர். இந்த வழக்கம் மிகப் பிற்காலத்தில் மறைந்துபோய், கண்ணாடி வளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. பாரத நாட்டில் முஸ்லிம்கள் தொடர்பு ஏற்பட்ட பிறகு இந்த மாறுதல் உண்டாயிற்று. இப்போதுங்கூட வடநாடுகளில் சில இடங்களில் மகளிர் சங்கு வளைகளை அணிந்து வருகின்றனர். கொங்குநாட்டு மகளிரும் அந்தக் காலத்தில் சங்கு வளைகளை அணிந்தனர். சங்கு வளைகள் கடற்கரை நாடுகளிலிருந்து கொங்கு நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. பெண்களுக்கு ஆடை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாகச் சங்கு வளைகளும் இருந்தன. ஆகையால், சங்கு வளை வாணிகம் அக்காலத்தில் பெரிதாக இருந்தது.

கொங்கு நாட்டில் பெரும்பாலும் மலைகள் உள்ள குறிஞ்சி நிலங்களும், காடுகள் உள்ள முல்லை நிலங்களும் இருந்தன. நீர்வளம், நிலவளம் பொருந்தின மருதநிலங்களும் இருந்தன. குறிஞ்சி நிலங்களில் வாழ்ந்த மக்கள் மலைகளிலும் மலைச் சாரல்களிலும் தினை அரிசியையும் ஐவனநெல் என்னும் மலை நெல்லையும் பயிரிட்டார்கள். மலைகளில் வளர்ந்த மூங்கிலிலிருந்து மூங்கில் அரிசியும் சிறிதளவு கிடைத்தது. மூங்கிலரிசியைச் சமைத்து உண்டனர். அதை அவலாக இடித்தும் உண்டனர். மலைகளில் மலைத்தேன் கிடைத்தது. மலைச் சாரல்களில் பலா மரங்கள் இருந்தன. அகில், சந்தனம், வேங்கை முதலிய மரங்களும் இருந்தன.

முல்லை (காட்டு) நிலத்தில் வாழ்ந்தவர்கள் வரகு, கேழ்வரகு ஆகிய தானியங்களைப் பயிரிட்டார்கள். அவர்கள் பசுக்களையும் ஆடுகளையும் வளர்த்தார்கள். அவைகளிலிருந்து பால், தயிர், வெண்ணெய், நெய் கிடைத்தன. அவரை, துவரை முதலிய தானியங்களும் விளைந்தன.

மருத நிலங்களில் வயல்களிலே நெல்லும் கரும்பும் பயிராயின. கரும்பை, ஆலைகளில் சாறு பிழிந்து வெல்லப் பாகு காய்ச்சினார்கள். கொங்கு நாடு கரும்புக்குப் பேர்போனது. ஆதிகாலத்தில் தமிழ்நாட்டில் கரும்பு இல்லை. கொங்குநாட்டுத் தகடூரையரசாண்ட அதிகமான் அரசர் பரம்பரையில், முற்காலத்திலிருந்த ஒரு அதிகமான் கரும்பை எங்கிருந்தோ கொண்டுவந்து தமிழகத்தில் நட்டான் என்று ஔவையார் கூறுகிறார் (புறநானூறு. 99: 1-4, 392: 20-21). கரும்புக்கு பழனவெதிர் என்று ஒரு பெயர் உண்டு (பழனம்- கழினி. வெதிர் - மூங்கில்). மூங்கிலைப் போலவே கரும்பு கணுக்களையுடையதாக இருப்பதனாலும் கழனிகளில் பயிர் செய்யப்படுவதாலும் பழனவெதிர் என்று கூறப்பட்டது. மருத நிலங்களில் உழவுத் தொழிலுக்கு எருமைகளையும் எருதுகளையும் பயன்படுத்தினார்கள். குறிஞ்சி, முல்லை நிலங்களில் இருந்தவர்களைவிட மருத நிலத்து மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தார்கள்.

பருத்திப் பஞ்சும் கொங்கு நாட்டில் விளைந்தது. பருத்தியை நூலாக நூற்று ஆடைகளை நெய்தார்கள். நூல் நூற்றவர்கள் பெரும்பாலும் கைம்பெண்களே.

அக்காலத்தில் பண்டமாற்று நடந்தது. அதாவது, காசு இல்லாமல் பண்டங்களை மாற்றிக்கொண்டார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள். குளங்களிலும் ஏரிகளிலும் மீன் பிடித்து வந்து அந்த மீன்களை நெல்லுக்கும் பருப்புக்கும் மாற்றினார்கள். பால், தயிர், நெய்களைக் கொடுத்து அவற்றிற்கு ஈடாக நெல்லைப் பெற்றுக்கொண்டார்கள். இவ்வாறு பண்டமாற்று பெரும்பாலும் நடந்தது. அதிக விலையுள்ள பொருட்களுக்கு மட்டும் காசுகள் வழங்கப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து, அதாவது உரோம தேசத்திலிருந்து வந்த யவனக் கப்பல் வாணிகர், வெள்ளிக்காசு, பொற்காசுகளைக் கொடுத்து இங்கிருந்து விலையுயர்ந்த பொருள்களை வாங்கிக்கொண்டு போனார்கள்.


✽ ✽ ✽

அடிக்குறிப்புகள்

1. ‘உமணர், கணநிரை மணியின் ஆாக்கும்' (அகம். 303: 17-18).

2. 'எருதே இளைய நுகமுணராவே, சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே, அவல் இழியினும் மிசை ஏறினும் அவணதறியுநர் யாரென உமணர், கீழ்மரத் தியாத்த சேமவச்சு' (புறம். 102: 1-5).

3. 'பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை. வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து' நெடுநல்வாடை 141 - 142.

4. 'கொற்றவை வாயில் பொற்றொடி தகர்த்து' (சிலம்பு கட்டுரைகாதை - 181) இங்குப் பொற்றொடி என்றது பொன் வளையலையன்று, சங்கு வளையை. 'பொற்றொடி பொலி வினையுடைய சங்கவளை. துர்க்கை கோயில் வாயிலே தன் கை வளையைத் தகர்த்து’ என்று பழைய அரும்பத உரையாசிரியர் எழுதுவது காண்க.