மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/017-052
16. அயல் நாட்டு வாணிகம்
சங்க காலத் தமிழகம் வெளிநாடுகளுடன் கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது போலவே கொங்கு நாடும் அயல்நாடுகளுடன் கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. ஆனால், கொங்கு நாட்டின் கடல் வாணிகத் தொடர்பைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் யாதொரு செய்தியும் காணப்படவில்லை. சங்கச் செய்யுள்களில் முசிறி, தொண்டி, நறவு, கொற்கை, புகார் முதலிய துறைமுகப்பட்டினங்களில் யவனர் முதலியவர்களின் கப்பல்கள் வந்து வணிகஞ் செய்த செய்திகள் கூறப்படுகின்றன. ஆனால், கொங்கு நாட்டுடன் அயல்நாட்டு வாணிகர் செய்திருந்த வாணிகத்தைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. ஆனாலும், கிரேக்க உரோம நாட்டவராகிய யவனர்கள் எழுதியுள்ள பழைய குறிப்புகளிலிருந்து கொங்கு நாட்டுக்கும் யவன நாட்டுக்கும் இருந்த வாணிகத் தொடர்பு தெரிகின்றது.
முசிறி, தொண்டி, நறவு முதலிய மேற்குக் கடற்கரைப் பட்டினங்களில் யவனர்கள் முக்கியமாக மிளகை ஏற்றுமதி செய்துகொண்டு போனார்கள். பாண்டியரின் கொற்கைத் துறைமுகப்பட்டினத்திலிருந்து யவனர் முக்கியமாக முத்துக்களை வாங்கிக்கொண்டு போனார்கள். சோழநாட்டுப் புகார்த் (காவிரிப்பூம்பட்டினம்) துறைமுகப்பட்டினத்திலிருந்து, சாவக நாடு எனப்பட்ட கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து கிடைத்த சாதிக்காய், இலவங்கம், கர்ப்பூரம் முதலிய வாசனைப் பொருள்களையும், பட்டுத் துணிகளையும் யவனர் வாங்கிக்கொண்டு போனார்கள். உள்நடாகிய கொங்கு நாட்டிலிருந்து அக்காலத்தில் உலகப் புகழ்பெற்றிருந்த நீலமணிக் கற்களை யவனர் வாங்கிக்கொண்டு போனார்கள். யானைத் தந்தங்களையும் யவனர் வாங்கிக்கொண்டு போனார்கள். கொங்கு நாட்டிலிருந்தும் யானைத் தந்தங்கள் அனுப்பப்பட்டன. கொல்லிமலையில் இருந்தவர் யானைக் கொம்புகளை விற்றார்கள்.1
கொங்கு நாட்டு நீலமணிக் கற்களை யவனர் வாங்கிக் கொண்டு போனதைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு, யவனர் தமிழ்நாட்டுடன் வாணிகத் தொடர்புகொண்ட வரலாற்றையறிந்து கொள்வது முக்கியமாகும். கிரேக்க நாட்டாரும் உரோம நாட்டாருமாகிய யவனர்கள் வருவதற்கு முன்னே, அதாவது கிருஸ்து சகாப்தத்துக்கு முன்னே, அரபிநாட்டு அராபியர் தமிழ்நாட்டுடனும் வட இந்திய நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் முக்கியமாக இந்தியத் தேசத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகப் பட்டினங்களுக்குத் தங்களுடைய சிறிய படகுகளில் வந்து வாணிகஞ் செய்தார்கள்.
அந்தக் காலத்தில் தெரிந்திருந்த உலகம் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்கள் மட்டுமே. ஆப்பிரிக்கா கண்டத்தில் எகிப்து தேசமும் சில கிழக்குப் பகுதி நாடுகளும் தெரிந்திருந்தன. ஆப்பிரிக்காவின் தெற்கு மேற்குப் பகுதி நாடுகள் உலகம் அறியாத இருண்ட கண்டமாகவே இருந்துவந்தன. அந்தக் காலத்தில், ஐரோப்பாக் கண்டமாகிய மேற்குத் தேசங்களையும் ஆசியாக் கண்டமாகிய கிழக்குத் தேசங்களையும் தொடர்புபடுத்தியது எகிப்து நாட்டு அலக்சாந்திரியத் துறைமுகப்பட்டினம். அலக்சாந்திரியம், கிழக்கு நாடுகளையும் மேற்கு நாடுகளையும் இணைத்து நடுநாயகமாக விளங்கிற்று. பல நாட்டு வாணிகரும் அந்தத் துறைமுகத்துக்கு வந்தார்கள். எல்லா நாட்டு வாணிகப் பொருள்களும் அங்குவந்து குவிந்தன. நீலநதி மத்தியதரைக் கடலில் கலக்கிற புகர் முகத்துக்கு அருகில், அக்காலத்து உலகத்தின் நடுமத்தியில், அலக்சாந்திரியம் அமைந்திருந்தது. அங்குக் கிரேக்கர், உரோம நாட்டார், பாபிலோனியர், பாரசீகர், அராபியர், இந்தியர், சீனர் முதலான பல நாட்டு மக்களும் வாணிகத்தின் பொருட்டு வந்தனர்.
பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரைப் பட்டினங்களிலிருந்து இந்திய வாணிகர் அலக்சாந்திரியம் சென்றனர். ஆனால், காலஞ்செல்லச்செல்ல அராபியர் இந்திய நாட்டுப் பொருள்களைத் தாங்களே வாங்கிக் கொண்டுபோய் அலக்சாந்திரியத்தில் விற்றார்கள். இதற்குக் காரணம் அலக்சாந்திரியத்துக்கும் பாரத நாட்டுக்கும் இடைமத்தியில் அரபுநாடு இருந்ததுதான். இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் இருந்த அரபுநாட்டு அராபியர் கப்பல் வாணிகத்தைத் தங்கள் கையில் பிடித்துக்கொண்டார்கள். மேலும் கிரேக்க, உரோம நாட்டு யவன வாணிகர் இந்திய நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வராதபடியும் அவர்கள் செய்துவிட்டார்கள். கிரேக்க, உரோம நாட்டு யவனர்கள் இந்திய நாட்டுடன் நேரடியாக வாணிகத் தொடர்பு கொண்டால் தங்களுக்குக் கிடைத்த பெரிய ஊதியம் கிடைக்காமற் போய்விடும் என்று அராபியர் அறிந்தபடியால், யவனர்களை இந்தியாவுக்கு வராதபடித் தடுத்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் கப்பல்கள் நடுக்கடலில் பிரயாணஞ் செய்யாமல் கடற்கரையோரமாகவே பிரயாணஞ் செய்தன. அவ்வாறு வந்த யவனக் கப்பல்களை அராபியர் கடற்கொள்ளைக்காரரை ஏவிக் கொள்ளையடித்தனர். அதனால், யவனக் கப்பல்கள் இந்தியாவுக்கு வருவது தடைப்பட்டது. அராபியர் மட்டும் இந்தக் கப்பல் வாணிகத்தை ஏகபோகமாக நடத்திப் பெரிய இலாபம் பெற்றார்கள். அவர்கள் சேர நாட்டில் உலகப் புகழ் பெற்றிருந்த முசிறித் துறைமுகப்பட்டினத்தின் ஒரு பகுதியில் தங்கி வாணிகஞ் செய்தார்கள். முசிறியில் அவர்கள் இருந்து வாணிகஞ்செய்த இடம் பந்தர் என்று பெயர் பெற்றிருந்தது. பந்தர் என்பது அரபு மொழிச்சொல். அதன் பொருள் அங்காடி, பண்டசாலை, துறைமுகம் என்று பொருள். சென்னை மாநகரில் ‘பந்தர் தெரு’ என்னும் பெயருள்ள ஒரு கடைத்தெரு இருக்கிறது. இங்கு முன்பு முஸ்லீம்கள் அதிகமாக வாணிகஞ் செய்திருந்தார்கள். அதனால் அந்தந் தெருவுக்கு இப்பெயர் ஏற்பட்டது. முசிறித் துறைமுகத்தில் அராபியர் பந்தர் என்னும் இடத்தில் வாணிகஞ் செய்திருந்ததைப் பதிற்றுப்பத்துச் செய்யுளினால் அறிகிறோம்.2
உரோமபுரி சாம்ராச்சியத்தை யரசாண்ட அகஸ்தஸ் (Augustus) சக்கரவர்த்தி காலத்தில் யவன வாணிகர் நேரடியாகத் தமிழ்நாட்டுக்கு வரத்தொடங்கினார்கள். அகஸ்தஸ் சக்கரவர்த்தி கி.மு. 29 முதல் கி.பி. 14 வரையில் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் அலக்சாந்திரியம் உட்பட எகிப்து தேசமும் மேற்கு ஆசியாவில் சில நாடுகளும் உரோம சாம்ராச்சியத்தின் கீழடங்கின. அரபு நாட்டின் மேற்குக் கரையில் இருந்த (செங்கடலின் கிழக்குக் கரையிருந்த) அரபுத் துறைமுகங்களை இந்தச் சக்கரவர்த்தி தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தான். பிறகு யவனக் கப்பல்கள் இந்திய தேசத்தின் மேற்குக் கடற்கரைப் பட்டினங்களுக்கு நேரடியாக வந்து வாணிகஞ்செய்யத் தலைப்பட்டன. இவ்வாறு கிரேக்க, உரோமர்களின் வாணிகத்தொடர்பு கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது. அப்பொழுது யவனக் கப்பல்கள் நடுக்கடலின் வழியாக வராமல் கடற்கரையின் ஓரமாகவே பிரயாணஞ்செய்தன. கரையோரமாக வருவதனால் மாதக் கணக்கில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், ஏறத்தாழ கி.பி. 47இல் ஹிப்பலஸ் என்னும் கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் நடுக்கடலின் ஊடேகப்பலைச் செலுத்தி விரைவாக முசிறித் துறைமுகத்துக்கு வந்தான். அந்தப் பருவக்காற்றுக்கு யவன மாலுமிகள், அதைக் கண்டுபிடித்தவன் பெயரையே வைத்து ஹிப்பலஸ் என்று பெயர் சூட்டினார்கள். இதன் பிறகு, யவனக் கப்பல்கள் அரபிக்கடலின் ஊடே முசிறி முதலிய துறைமுகங்களுக்கு விரைவாக வந்துபோயின. இதனால் அவர்களுக்கு நாற்பது நாட்கள் மிச்சமாயின.
தொடக்கக் காலத்தில் யவனர் செங்கடலுக்கு வந்து வாணிகஞ் செய்தபோது அந்தக் கடலுக்கு எரித்திரைக்கடல் என்று பெயர் கூறினார்கள். எரித்திரைக்கடல் என்றால் செங்கடல் என்பது பொருள். பிறகு, அவர்கள் செங்கடலுக்கு இப்பால் பாரசீகக் குடாக்கடலுக்கு வந்தபோது, இந்தக் கடலுக்கும் எரித்திரைக் கடல் என்று அதே பெயரிட்டார்கள். பிறகு, அரபிக்கடலில் வந்து வாணிகஞ்செய்தபோது அரபிக் கடலுக்கும் அப்பெயரையே சூட்டினார்கள். பின்னர் இந்து சமுத்திரம், வங்காளக்குடாக் கடல்களில் வந்து வாணிகஞ் செய்தபோது இந்த கடல்களுக்கும் எரித்திரைக் கடல் என்றே பெயரிட்டார்கள். இந்தக் கடல்களில் எல்லாம் வந்து எந்தெந்தத் துறைமுகப் பட்டினங்களில் யவனர் வாணிகஞ்செய்தார்கள், என்னென்ன பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்தார்கள் என்பதைக் குறித்து யவன நாட்டார் ஒருவர் கி.பி. 89ஆம் ஆண்டில், பழைய கிரேக்க மொழியில் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்த நூலின் பெயர் பெரிப்ளஸ் மாரிஸ் எரித்ரை (The Periplus Maris Erythrai) என்பது.
அகஸ்தஸ் சக்கரவர்த்தி யவன - தமிழக வாணிகத்தைப் பெருக்கினான். தமிழ்நாட்டு மிளகும் முத்தும் இரத்தினக் கற்களும் யானைத் தந்தங்களும் யவன நாட்டுக்கு ஏற்றுமதியாயின. மிளகு பெரிய அளவில் ஏற்றுமதியாயிற்று. அதற்காக அகஸ்தஸ் சக்கரவர்த்தி பெரிய மரக்கலங்களைக் கட்டினான். மேலும், மிளகு முதலிய பொருள்களை வாங்குவதற்குப் பொன் நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையும் அனுப்பினான். இவ்வாறு, கி.பி. முதல் நூற்றாண்டில் யவன - தமிழகக் கடல் வாணிகம் சிறப்பாக நடக்கத்தொடங்கிற்று.
தமிழகத்தில் வந்த யவனர்கள் ஏற்றுமதி செய்து கொண்டுபோன பொருள்களில் முக்கியமானது மிளகு. இதற்காகவே முக்கியமாகப் பெரிய கப்பல்கள் கட்டப்பட்டன என்றும், பொற்காசுகளும் வெள்ளிக் காசுகளும் அனுப்பப்பட்டன என்றும் உரோம நாட்டுச் சரித்திரத்திலிருந்து அறிகிறோம். இந்தச் செய்தியைச் சங்கச் செய்யுள்களும் கூறுகின்றன. சேரஅரசர்களின் முசிறித் துறைமுகப்பட்டினத்தில் அழகான யவனக் கப்பல்கள் வந்து பொன்னை (பொற்காசை)க் கொடுத்துக் கறியை (கறி – மிளகு) ஏற்றிக்கொண்டு போயின என்று சங்கப் புலவர் தாயங்கண்ணனார் கூறுகிறார்.
“சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த விளைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி”
(அகம்.149 :7-11)
முசிறித் துறைமுகம் யவனர்களின் பெரிய மரக்கலங்கள் வந்து தங்குவதற்குப் போதுமான ஆழமுடையதாக இல்லை. ஏனென்றால், அங்குக் கடலில் கலந்த பெரியாறு மண்ணை அடித்துக் கொண்டுவந்து ஆழத்தைத் தூர்த்துவிட்டது. அதனால், ஆழமில்லாமற் போகவே யவன மரக்கலங்கள் துறைமுகத்துக்கு அப்பால் கடலிலே நங்கூரம் பாய்ச்சி நின்றன.
மிளகு மூட்டைகளைத் தோணிகளில் ஏற்றிக்கொண்டுபோய்க் கடலில் நின்றிருந்த யவன மரக்கலங்களில் ஏற்றிவிட்டு அதற்கு ஈடாக யவனப் பொற்காசுகளைத் தோணிகளில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள் என்று பரணர் என்னும் சங்கப் புலவர் கூறுகிறார்.
“மனைக் குவைஇய கறிமூடையாற்
கலிச்சும் மைய கரை கலக்குறுந்து
கலந்தந்த பொற் பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து
............
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்குகடல் முழவின் முசிறி!”
(புறம். 343:3-10)
யவன மரக்கலங்கள் மிளகை ஏற்றுமதி செய்துகொண்டு போனதை இப்புலவர்கள் நிகழ்காலத்தில் கூறுவதைக்காண்க., அக்காலத்தில் மிளகு கிரேக்கர், உரோமர் முதலிய மேலைத் தேசத்தவர்க்கு முக்கியமான உணவுப்பண்டமாக இருந்தபடியால் மிளகு வாணிகம் முதன்மைபெற்று இருந்தது. யவனர் மிளகை விரும்பி அதிகமாக வாங்கிக் கொண்டுபோன காரணத்தினாலே சமஸ்கிருத மொழியில் மிளகுக்கு யவனப் பிரியா என்று பெயர் கூறப்பட்டது.
அந்தக் காலத்தில்தான் கொங்கு நாட்டுக்கும் யவன நாட்டுக்கும் வாணிகத்தொடர்பு ஏற்பட்டது. கொங்கு நாட்டிலே சிற்சில சமயங்களில் கதிர் மணிகள் உழவர்களுக்குக் கிடைத்தன என்று பழஞ் செய்யுள்களிலிருந்து அறிகிறோம். கொங்கு நாட்டின் வடக்கிலிருந்த புன்னாட்டின் நீலக்கல் சுரங்கம் இருந்தது என்று பிளினி என்னும் யவனர் எழுதி யிருக்கிறார்.3 படியூரிலும் இந்தக் கதிர்மணிகள் கிடைத்தன. (சேலம் மாவட்டத்துப் படியூர்). கோயம்புத்தூர் மாவட்டத்து வாணியம்பாடியிலும் நீலக்கற்கள் கிடைத்தன. அந்தக் காலத்தில் இந்த நீலக்கற்கள் உலகத்திலே வேறு எங்கேயும் கிடைக்கவில்லை. கொங்கு நாட்டில் மணிகள் கிடைத்ததைக் கபிலர் கூறுகிறார்4. அரிசில்கிழாரும் இதைக் கூறுகிறார்.5 யவனர் இங்கு வந்து இவற்றை வாங்கிக்கொண்டு போனார்கள். உரோம சாம்ராச்சியத்திலிருந்த சீமாட்டிகள் இந்தக் கற்களைப் பெரிதும் விரும்பினார்கள். உரோம சாம்ராச்சியத்தில் இந்த நீலக்கற்கள் ஆக்வா மரினா (aqua marina) என்று பெயர் பெற்றிருந்தது. யவன வாணிகர்கள் கொங்கு நாட்டுக்கு வந்தது, முக்கியமாக இந்தக் கதிர்மணிகளை வாங்குவதற்காகவே. யவனர்கள் கொங்கு நாட்டுக்கு வந்து பொற்காசுகளையும் வெள்ளிக் காசுகளையும் கொடுத்து நீலக் கற்களை வாங்கிக் கொண்டுபோனதற்கு இன்னொரு சான்று, அவர்களுடைய பழைய நாணயங்கள் கொங்கு நாட்டில் சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுதான். கொங்கு நாட்டைச் சேர்ந்த பொள்ளாச்சி, வெள்ளலூர், கரூர் முதலிய ஊர்களில் பழைய காலத்து உரோம நாணயங்கள் பெருவாரியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சேர நாடு, பாண்டி நாடு, புதுக்கோட்டை முதலிய இடங்களிலும் பழங்காலத்து உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு நம்முடைய ஆராய்ச்சிக்குரிய கொங்கு நாட்டில் கிடைத்த உரோம சாம்ராச்சியப் பழங்காசுகளை மட்டுங்கூறுவோம்.
பொள்ளாச்சி (கோயம்புத்தூர் மாவட்டம்): இங்கு ஒரு பானை நிறைய உரோமாபுரி வெள்ளிக்காசுகள் 1800ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டன. 1809ஆம் ஆண்டிலும் ஒரு புதையல் கண்டெடுக்கப்பட்டது. இந்தப் புதையலில் கிடைத்த காசுகள் பொற்காசுகளா, வெள்ளிக் காசுகளா என்பது தெரியவில்லை. 1888ஆம் ஆண்டிலும் உரோமபுரிக்காசுப் புதையல் கண்டெடுக்கப்பட்டது.
வெள்ளலூர் (கோயம்புத்தூர் அருகில் போத்தனூருக்குச் சமீபம்): இவ்வூரிலும் உரோமதேசத்துப் பழங்காலக் காசுப் புதையல்கள் கிடைத்தன. 1842ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட புதையலில் 378 வெள்ளிக்காசுகளும் 1850ஆம் ஆண்டில் கிடைத்த புதையலில் 135 வெள்ளிக்காசுகளும் 1891ஆம் ஆண்டில் கிடைத்த புதையலில் 180 வெள்ளிக் காசுகளும் இருந்தன. 1931 ஆம் ஆண்டில் கிடைத்த புதையலில் 121 காசுகள் இருந்தன. இவற்றில் 23 நாணயங்களில் முத்திரையில்லாமல் வெறுங்காசாக இருந்தன. முத்திரையிடுவதற்கு முன்பு அவசரமாக இவை தங்கச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டன என்று தெரிகிறது.
கரூர் (கோயம்புத்தூர் மாவட்டம்): இங்கு 1800ஆம் ஆண்டில் உரோமதேசத்துப் பொற்காசு ஒன்று கிடைத்தது. 1806ஆம் ஆண்டிலும் இன்னொரு பொற்காசு கிடைத்தது. 1888ஆம் ஆண்டில் 500 வெள்ளிக் காசுகள் உள்ள புதையல் கண்டெடுக்கப்பட்டது. இவற்றில் 117 காசுகள் தேய்மானமில்லாமல் புதியவையாக இருந்தன. இவை ஒவ்வொன்றும் 3.76 கிராம் எடையுள்ளவை.
கலயமுத்தூர் (பழனிக்கு மேற்கே ஆறு கல் தொலைவில் உள்ளது): இவ்வூரில் 1856 ஆம் ஆண்டில் உரோமதேசத்துப் பழங்காசுகள் கிடைத்தன.
இவையில்லாமல், ஏறக்குறைய 1000 வெள்ளிக் காசுகளைக் கொண்ட உரோமாபுரி நாணயங்கள் ஒரு பெரிய மட்பாண்டத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டது. இவை மதராஸ் படியில் ஐந்து, ஆறு படி கொண்ட நாணயங்கள். இக்காசுகள் உருக்கிவிடப்பட்டனவாம். இவை கொங்கு நாட்டில் கிடைத்தவை. இடம் குறிப்பிடப்படவில்லை. போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் நடுவதும், இறந்தவரைத் தாழியில் இட்டுப் புதைப்பதும் சங்க காலத்து வழக்கம். அவ்வாறு புதைக்கப்பட்ட ஒரு பண்டவர் குழியில் (கொங்கு நாட்டில்) ஒரு உரோம தேசத்து வெள்ளிக்காசு கண்டெடுக்கப்பட்டது (1817).6
கொங்கு நாட்டில் இன்னும் பல உரோமதேசத்து நாணயப் புதையல்கள் இருக்கக்கூடும். கிடைத்துள்ள காசுகள் எல்லாம் பொற்காசுகளும் வெள்ளிக் காசுகளுமாக உள்ளன. செப்புக் காசுகள் மிகச் சில. இக்காசுகள் எல்லாம் உரோம சாம்ராச்சியத்தை யரசாண்ட உரோமச் சக்கரவர்த்திகளின் தலையுருவம் பொறிக்கப்பட்டவை. சில காசுகளில் அவ்வரசர்களின் மனைவியரின் உருவம் பொறிக்கப் பட்டிருக்கின்றன. கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதி வரையில் உரோம சாம்ராச்சியத்தை யரசாண்ட அரசர்களின் உருவங்களும் முத்திரைகளும் இக்காசுகளில் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காலம் நம்முடைய ஆராய்ச்சிக்குரிய கடைச்சங்க காலத்தின் இறுதியாகும். இந்தக் காசுகள், அக்காலத்தில் தமிழ்நாட்டுக்கும் உரோமாபுரி நாட்டுக்கும் நடந்த வாணிகத் தொடர்பை உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காட்டுகின்றன.
கிடைத்துள்ள இந்தக் காசுகளிலே கீழ்க்கண்ட உரோமச் சக்கரவர்த்திகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை: துருஸஸ் (Drusus the Elder கி.மு. 38 முதல் கி.பி. 9 வரையில் அரசாண்டான்), அகஸ்தஸ் (கி.மு. 29 முதல் கி.பி. 14 வரையில் அரசாண்டான்), தைபிரியஸ் (கி.பி. 14 முதல் 37 வரையில் அரசாண்டான்), கெலிகுலா (கி.பி. 37 முதல் 41 வரையில் அரசாண்டான்), கிளாடியஸ் (கி.பி. 41 முதல் 54 வரையில் அரசாண்டான்), நீரோ (கி.பி. 54 முதல் 68 வரையில் அரசாண்டான்) டொமிஷியன் (கி.பி. 81 முதல் 96 வரையில்), நெர்வா (கி.பி. 96 முதல் 98 வரையில்), திராஜன் (98 முதல் 117), ஹேத்திரியன் (117 முதல் 138 வரையில்), கம்மோடியஸ் (180 முதல் 193 வரையில்). மற்றும், துருஸஸின் மனைவியான அந்தோனியாவின் முத்திரை பொறிக்கப்பட்டதும், ஜர்மனிகஸின் மனைவியான அக்ரிப் பைனாவின் உருவ முத்திரை பொறிக்கப்பட்டதுமான காசுகளும் கிடைத்திருக்கின்றன.7
தமிழ்நாட்டுக்கு வந்து பொருள்களை வாங்கிக்கொண்டு போன யவனக்கப்பல் வியாபாரிகள் காசுகளைக் கொடுத்தே பொருள்களை வாங்கிக்கொண்டு போனார்கள். இந்தச் செய்தியைச் சங்க செய்யுட்கள் கூறுகின்றன. அக்காலத்திலிருந்த பிளைனி (Pliny) என்னும் உரோமாபுரி அறிஞரும் இதைக் கூறியுள்ளார். பரணர், தாம் பாடிய புறம். 343 ஆம் செய்யுளில்,
“மனைக் குவைஇய கறிமூடையாற்
கலிச்சும் மைய கரை கலக்குறுந்து
கலந்தந்த பொற் பரிசம்
கழித்தோணியாற் கரை சேர்க்குந்து.”
(புறம். 343:3-6)
என்று கூறுகிறார்.
சேர நாட்டு முசிறித் துறைமுகத்தில் யவனக் கலங்கள் (மரக் கலங்கள்) பொற்காசுகளைக் கொண்டுவந்து நின்றபோது, தோணிகளில் கறி (மிளகு) மூட்டைகளை ஏற்றிக்கொண்டுபோய் யவன மரக்கலங்களில் இறக்கிவிட்டு அதற்கு விலையாக அவர்கள் கொடுத்த பொற்காசுகளைத் தோணிகளில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள் என்பது இதன் பொருள்.
புலவர் தாயங்கண்ணனாரும் இதைக் கூறுகிறார்.
“சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி.”
(அகம். 149:7-11)
இதில், யவனருடைய மரக்கலங்கள் முசிறித் துறைமுகத்துக்கு வந்து கறியை (மிளகை) ஏற்றிக்கொண்டு பொன்னைக் (பொன், வெள்ளிக் காசுகளை) கொடுத்துவிட்டுச் சென்றது கூறப்படுகிறது.
உரோமாபுரியிலிருந்த பிளைனி (Pliny) என்னும் அறிஞர் கி.பி. 70ஆம் ஆண்டில் உரோமாபுரிச் செல்வம் கிழக்கு நாடுகளுக்குப் போவதைக் குறித்துக் கவலை தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் நூறாயிரம் ஸெஸ்டர் (11,00,000 பவுன்) மதிப்புள்ள பொன்னும் வெள்ளியும் வாணிகத்தின் பொருட்டுக் கிழக்கு நாடுகளுக்குப் போய்விடுவதை அவர் கண்டித்திருக்கிறார். உரோம நாட்டுச் சீமான்களும் சீமாட்டிகளும் வாசனைப் பொருள்கள், நகைகள் முதலியவைக்காக உரோமநாட்டுப் பொன்னை விரயஞ்செய்ததாக அவர் கூறியுள்ளார். சங்கப் புலவர்கள், யவன வாணிகர் பொன்னைக் கொண்டுவந்து கொடுத்துப் பொருள்களை வாங்கிக்கொண்டு போனார்கள் என்று கூறியது போலவே பிளைனியும் உரோமாபுரிப்பொன் கிழக்கு நாடுகளுக்குப் போய் விடுகிறது என்று கூறியிருப்பது காண்க.
உரோமாபுரிச் சாம்ராச்சியத்தில் அக்காலத்தில் ஸ்பெய்ன் தேசமும் அடங்கியிருந்தது. அந்த ஸ்பெய்ன் தேசத்தில் தங்கச் சுரங்கம் இருந்தபடியால், அங்கிருந்து உரோமாபுரிச் சக்கரவர்திகளுக்கு ஏராளமாகப் பொன் கிடைத்தது. அகஸ்தஸ் சக்கரவர்த்தி இந்தப் பொன்னைக்கொண்டு நாணயங்கள் அடித்து வெளிப்படுத்தினார். அந்த நாணயங்களைக் கொண்டுவந்த யவன மாலுமிகள், அதிகச் சரக்குகளை (முக்கியமாக மிளகை) ஏற்றிக்கொண்டு போவதற்காகப் பெரிய மரக்கலங்களைக் கொண்டு வந்தார்கள்.
இவ்வாறு கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடைப்பெற்ற யவன - தமிழ வாணிகத்தினால் கொங்குநாடு கதிர் மணிகளை யவன நாட்டுக்கு விற்றுப் பெரும் பொருள் ஈட்டியது. அந்த யவன நாட்டுப் பழங்காசுகளில் சிறு அளவுதான் இப்போது அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள உரோம நாணயங்கள். இன்னும் புதையுண்டிருக்கிற உரோம நாணயங்கள் எவ்வளவென்று நமக்குத் தெரியாது.
கொங்கு நாட்டிலிருந்து யவன வாணிகர் வாங்கிக்கொண்டுபோன இன்னொரு பொருள் யானைத் தந்தம். கொங்கு நாட்டைச் சார்ந்த யானைமலைக் காடுகளிலும் ஏனைய காடுகளிலும் யானைக் கொம்புகள் கிடைத்தன. சேர நாட்டு மலைகளிலும் யானைக் கோடுகள் கிடைத்தன. யவன வாணிகர் யானைக் கோடுகளையும் வாங்கிச் சென்றார்கள். கொங்கு நாட்டுக் கொல்லிமலை ஓரிக்கு உரியது. கொல்லிமலையில் வாழ்ந்த குடிமக்கள், விளைச்சல் இல்லாமல் பசித்தபோது தாங்கள் சேமித்து வைத்திருந்த யானைக் கொம்புகளை விற்று உணவு உண்டார்கள் என்று கபிலர் கூறுகிறார்.8
சேரன் செங்குட்டுவன் வேனிற்காலத்தில் சேரநாட்டுப் பெரியாற்றுக் கரையில் சோலையில் தங்கியிருந்தபோது அவனிடம் வந்த குன்றக்குறவர் பல பொருள்களைக் கையுறையாகக் கொண்டு வந்தனர். அப்பொருள்களில், யானைக் கொம்பும் அகிற் கட்டைகளும் இருந்தன.9 சேரநாட்டு, கொங்குநாட்டு மலைகளில் யானைக் கொம்புகள் கிடைத்தன என்பது இதனால் தெரிகிறது. யவனர் வாங்கிக்கொண்டு போன பொருள்களில் யானைக் கொம்பும் கூறப்படுகிறது.
கொங்கு நாடு உள்நாடாகையால் அதற்குக் கடற்கரை இல்லை; ஆகையால் துறைமுகம் இல்லை. ஆனால், கொங்குநாட்டை யரசாண்ட ‘பொறையர்’ சேர அரசரின் பரம்பரை யாராகையால், அவர்கள் சேர நாட்டுத் துறைமுகங்களில் இரண்டைத் தங்களுக்கென்று வைத்திருந்தார்கள். அவற்றின் பெயர் தொண்டி, மாந்தை என்பன. கொங்கு நாட்டுப்பொறையர் மேற்குக் கடற்கரைத் தொண்டியைத் தங்களுக்குரிய துறைமுகப் பட்டினமாக வைத்துக்கொண்டு வாணிகஞ் செய்தனர். கொங்கு நாட்டையரசாண்ட இளஞ்சேரலிரும்பொறை ‘வளைகடல் முழவில் தொண்டியோர் பொருநன்’ என்று கூறப்படுகிறான் (9ஆம் பத்து 8 : 21). ‘திண்டேர்ப் பொறையன் தொண்டி’ (அகம். 60 : 7). யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, ‘தன் தொண்டியோர் அடுபொருநன்’ என்று கூறப்படுகிறான் (புறம். 17 : 13). குறுந்தொகை 128ஆம் செய்யுள் ‘திண்டேர்ப் பொறையன் தொண்டி’ என்று கூறுகிறது (குறுந். 128 :2). யவனர் தொண்டியைத் திண்டிஸ் என்று கூறினார்கள்.
இதனால், கொங்குநாடு சேர அரசர் ஆட்சிக்குட்பட்டிருந்த காலம் வரையில், தொண்டித் துறைமுகம் கொங்குநாட்டின் துறைமுகப் பட்டினமாக அமைந்திருந்தது என்று கருதலாம். பிற்காலத்தில் சோழர், கொங்குநாட்டைக் கைப்பற்றி யரசாண்டபோது தொண்டி, கொங்குத் துறைமுகமாக அமையவில்லை.
✽ ✽ ✽
அடிக்குறிப்புகள்
1. ‘காந்தளஞ் சிறுகுடி பசித்தெனக், கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத் துண்ணும், வல்வில் ஓரிக் கொல்லிக் குடவரை’. (குறும். - 100:3-5)
2. “இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து நன்கல வெறுக்கை துஞ்சம் பந்தர் கமழுந்தாழைக் கானலம் பெருந்துறை” (6ஆம் பத்து. 5: 3-5) (“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு, பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்” (7ஆம் பத்து. 7: 1-2) “கொடு மணம் பட்ட வினைமாண் அருங்கலம், பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” (8ஆம் பத்து, 4: 5-6).
3. Pliny, Nat. Hist. BK. XXXVII. Cap. V.
4. இலங்கு கதிர்த்திருமணி பெறூஉம், அகன்கண் வைப்பின் நாடு, 7ஆம் பத்து 6-19 -20).
5. “கருவிவானந் தண்டளி சொரிந்தெனப், பல்விதையுழவர் சில்லேறாளர், பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல், கழுவுறு கலிங்கங் கடுப்பச்சூடி, இலங்குகதிர்த் திருமணி பெறூஉம், அகன் கண் வைப்பின் நாடு” 8ஆம் பத்து 6: 10-15).
6. M.J.L.S. XIII. P. 214.
7. M.J.L.S. Vol. XIII., Roman Coins found in India, J.R.A.S. XXIII. J.B.B.R.A.S.I (1843) P. 294 Num. Chrn. 1891, Roman History from Coins. Michael Grant. 1968.
8. “காந்தளஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக், கடுங்கண் வேழத்துக்கோடு நொடுத் துண்ணும், வல்வில் ஓரி கொல்லிக் குடவரை.” (குறும். 100: 3-5). வேழத்துக்கோடு - யானைக்கொம்பு. நொடுத்து - விலை கூறி விற்று.
9. “யானைவெண்கோடும் அகிலின் குப்பையும்”. (சிலம்பு. காட்சி – 37.)