மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/020-052


19. சங்க காலத்துத் தமிழெழுத்து

கடைச்சங்க காலத்தில் வழங்கிவந்த தமிழ் எழுத்தின் வரி வடிவம் எது என்பது இக்காலத்தில் ஒரு கேள்வியாக இருக்கிறது.

தமிழகத்தில் பழங்காலத்தில் வழங்கிவந்தது வட்டெழுத்துதான் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கருதிவந்தனர். அக்காலத்தில் பிராமி எழுத்து தமிழகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. பிறகு, பிராமி எழுத்துக்கள் தமிழ்நாட்டு மலைக் குகைகளில் எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. பாண்டி நாடு, புதுக்கோட்டை, தொண்டை நாடு, கொங்கு நாடு ஆகிய நாடுகளில் மலைக்குகைகளில் கற்பாறைகளிலே பொறிக்கப்பட்ட பிராமி எழுத்துக்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையில்லாமல், அரிக்கமேடு, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம், உறையூர் முதலிய இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்தபோது அவ்விடங்களில் கிடைத்த மட்பாண்டங்களிலும் பிராமி எழுத்துக்கள் காணப்பட்டன. இவ்வெழுத்துகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு உட்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. இந்தச் சான்றுகளைக் கொண்டு சிலர் சங்க காலத்தைக் கணக்கிடுகிறார்கள். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாரத தேசத்தை யரசாண்ட அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் வடஇந்தியாவிலிருந்து பிராமி எழுத்தைப் பௌத்தப்பிக்குகள் தமிழகத்தில் கொண்டுவந்தார்கள் என்றும் இந்தப் பிராமி எழுத்து வந்தபிறகு இதைத் தமிழர் நூல்எழுதப் பயன்படுத்திக்கொண்டனர் என்றும் அதற்கு முன்பு தமிழில் எழுத்து இல்லை என்றும் இப்போது ஒரு சிலர் கூறுகின்றனர். பிராமி எழுத்து தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பு இங்கு எழுத்தே கிடையாது என்பது இவர்கள் கூற்று இதுதவறான கருத்து. பிராமி எழுத்து தமிழகத்துக்கு வருவதற்கு முன்பு ஏதோ ஒரு வகையான எழுத்து வழங்கிவந்தது. அந்த எழுத்தினால் சங்க நூல்கள் எழுதப்பட்டன.

பிராமி எழுத்தின் தோற்றத்தைப் பற்றி வெவ்வேறு அபிப்பிராயங்கள் கூறப்படுகின்றன. அசோகச் சக்கரவர்த்தி காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிராமி எழுத்து இருந்துவந்தது. ஆகவே, அசோகர் காலத்துக்கு முன்னமே தமிழ்நாட்டில் பிராமி எழுத்து வழங்கி வந்தது என்பது ஒரு கருத்து. பிராமி எழுத்து, தென்இந்தியாவில் தோன்றிவளர்ந்து பிறகு வடஇந்தியாவுக்குச் சென்றது என்பது இன்னொரு கருத்து. தமிழ்நாட்டில் பிராமி எழுத்து வருவதற்கு முன்பு ஏதோ ஒரு வகையான எழுத்து இருந்துவந்தது. பிராமி எழுத்து தமிழ்நாட்டுக்கு வந்து வேரூன்றிய பிறகு பழைய தமிழ்எழுத்து பையப்பைய மறைந்துவிட்டது என்பது வேறொரு கருத்து.

பிராமி எழுத்துக்கு முன்பு தமிழில் வேறுஎழுத்து இல்லை என்பதற்குச் சான்று இல்லை. பிராமி எழுத்துக்கு முன்பு ஏதோ ஒரு வகையான தமிழ் எழுத்து வழங்கியிருக்க வேண்டும். வேறு வகையான எழுத்து இருந்ததா இல்லையா என்பதற்குச் சான்று வேண்டுமானால், சங்க காலத்திலே நடப்பட்ட நடுகற்களைக் (வீரகற்களைக்) கண்டுபிடிக்க வேண்டும். சங்ககாலத்து நடுகற்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சங்ககாலத்து நடுகற்கள் போரில் இறந்துபோன வீரர்களின் நினைவுக் குறியாக நடப்பட்டவை. அந்த நடுகற்களில் இறந்த வீரனுடைய பெயரையும் சிறப்பையும் எழுதியிருந்தபடியால், அந்த நடுகற்களைக் கண்டுபிடித்தால், அவற்றில் எழுதப்பட்ட எழுத்து பிராமி எழுத்தா அல்லது வேறு வகையான எழுத்தா என்பது விளங்கிவிடும். ஆனால், அந்தக் காலத்து வீர கற்கள் இதுவரையில் ஒன்றேனும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் தமிழ்நாட்டு மலைக் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற படியால், அக்காலத்து நடுகற்களிலும் பிராமி எழுத்துதானே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் கருதக்கூடும். இப்போது தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழைய பிராமி எழுத்துக்கள், பௌத்த, சமண முனிவர்கள் தங்கித் தவஞ்செய்வதற்காக அமைக்கப்பட்ட மலைக் குகைகளிலே எழுதப்பட்டவை. ஆனால், பௌத்த, சமணர் அல்லாத துறவிகள் மலைக்குகைகளில் தங்கித் தவஞ்செய்யவில்லை. பௌத்த, சமணர்களுக்காக அமைக்கப்பட்ட மலைக் குகைகளிலே பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கிறபடியால் இவ்வெழுத்துக்களைப் பௌத்த மதத்தாரும் சமண மதத்தாரும் மட்டும் உபயோகித்திருக்க வேண்டும். பௌத்த, சமண மதத்தாரல்லாத அரசர் முதலியோர் அக்குகைகளைத் தானஞ் செய்திருந்தாலும், அவை வடநாட்டு மதங்களைச் சார்ந்த பௌத்த, சமணருக்காக அமைக்கப்பட்டபடியால் அவற்றில் பிராமி எழுத்தை எழுதியிருக்கவேண்டும். பௌத்த, சமணரல்லாத ஏனைய மதத்தாரும் நாட்டு மக்களும் அக்காலத்தில் பிராமியல்லாத ஏதோ ஒரு பழைய தமிழ் எழுத்தை வழங்கி இருக்கக்கூடும். இதன் உண்மையை யறிவதற்குத்தான் பழைய காலத்து நடுகற்களைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறுகிறோம்.

கடைச்சங்க காலத்துக்கு முன்னே, பிராமி எழுத்து வருவதற்கு முன்பு, ஏதோ ஒரு வகையான எழுத்து தமிழ்நாட்டில் வழங்கியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. பிராமி எழுத்து வந்தபிறகு தமிழர் புதிய பிராமி எழுத்தை ஏற்றுக்கொள்ளாமல் பழைய எழுத்தையே வழங்கியிருக்க வேண்டும். அப்போது பௌத்த, சமணர் பிராமியையும், மற்றத் தமிழர் பழைய தமிழ் எழுத்தையும் ஆக இரண்டெழுத்துக்களும் சிலகாலம் வழங்கியிருக்க வேண்டும். மிகப் பழைய காலத்தில் கால்டியா போன்ற தேசங்களில் சமய குருமார் எழுதிவந்த எழுத்து வேறாகவும் அதேசமயத்தில் பாமர மக்கள் எழுதிவந்த எழுத்து வேறாகவும் இருந்ததுபோல கடைச்சங்க காலத் தமிழகத்திலும் (தொடக்கக் காலத்தில்) ஜைன, பௌத்த மதத்தவர் வழங்கின பிராமி எழுத்து வேறாகவும் மற்றவர் வழங்கின பழைய எழுத்து வேறாகவும் இருந்தன என்று தோன்றுகிறது. பௌத்த, சமண மதங்கள் தமிழகத்தில் வேரூன்றிய பிறகு அவர்கள் பள்ளிக்கூடங்களைத் தங்கள் பள்ளிகளில் அமைத்துப் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தபோது பிராமி எழுத்தைப் பிரசாரஞ்செய்தனர். பிராமி எழுத்து பிரசாரஞ் செய்யப்பட்ட பிறகு, பழைய தமிழ் எழுத்து பையப்பைய மறைந்து போயிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. எந்தக் கருத்தானாலும் உண்மை தெரிய வேண்டுமானால், முன்பு கூறியதுபோல, பழைய நடுகற்களைக் கண்டுபிடிக்க வேண்டும். நூற்றுக்கணக்காக நடப்பட்ட சங்க காலத்து நடுகற்கள் பூமியில் புதைந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்தால் அவற்றில் எழுதப்பட்டுள்ள அக்காலத்து எழுத்தின் வரிவடிவம் நன்கு விளங்கும்.

இப்போது நமக்குத் தெரிந்திருக்கிற வரையில் பிராமி எழுத்தே தமிழகத்தில் வழங்கிவந்த பழைய எழுத்து என்பதில் ஐயமில்லை. பிராமி எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டெழுத்துகள் கொங்கு நாட்டிலுங் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு ஆராய்வோம்.

✽ ✽ ✽