மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/023-052
2. வேறு அரசர்கள்
மகேந்திரவர்மன் காலத்தில் வட இந்தியாவை அரசாண்ட மன்னன் புகழ்பெற்ற ஹர்ஷவர்த்தனன். கன்னோசி நாட்டின் அரசனாகிய ஹர்ஷன் கி.பி. 606 முதல் 647 வரையில் அரசாண்டான். இவன் ஆட்சிக்கு வந்தவுடன் ஆறு ஆண்டு போர்செய்து பதினெட்டு அரசர்களை வென்று அவர்களின் நாடுகளைத் தனது நாட்டுடன் சேர்த்துக்கொண்டான். மேலும், கிழக்கே காமரூப (அஸ்ஸாம்) நாட்டின் அரசனாயிருந்த துருவபட்டன் என்பவனும் இவனுக்கு அடங்கிக் கப்பங்கட்டி வந்தனர்.[1] இவ்வாறு வடஇந்தியா முழுவதையும் வென்று மகாராசன் என்னும் சிறப்புப் பெயர்பெற்ற ஹர்ஷவர்த்தனன், தக்கிண தேசத்தையும் கைப்பற்ற எண்ணி, சளுக்கிய நாட்டின் மேல் படையெடுத்தான். சளுக்கிய அரசனான புலிகேசி (இரண்டாவன்), நருமதை யாற்றங்கரையில் ஹர்ஷனை எதிர்த்துப் போர்செய்து வெற்றி கொண்டான். இது கி. பி. 620 இல் நடந்தது. தோல்வியுற்ற ஹர்ஷன் அதன் பிறகு நருமதி யாற்றுக்குத் தெற்கே வரவில்லை. ஹர்ஷவர்த்தனுடைய ஆட்சி, தெற்கே நருமதை யாற்றிலிருந்து வடக்கே இமயமலை வரையில் வட இந்தியா முழுவதையும் கொண்டிருந்தது.
ஹர்ஷவர்த்தனனுடைய இராச்சியத்திற்குத் தெற்கே தக்கண இந்தியாவை அக்காலத்தில் அரசாண்ட மன்னன் இரண்டாம் புலிகேசி. இவன் சளுக்கிய மரபைச் சார்ந்தவன் ஆகையால், இவனுடைய நாடு சளுக்கிய நாடு என்று பெயர் பெற்றது. சளுக்கியருக்கு வல்லபர் என்னும் பெயரும் உண்டு. புலிகேசி கி. பி. 608 முதல் 642 வரையில் அரசாண்டான். இவன் அரசாட்சி பெற்றவுடன் நளர், மௌரியர், கடம்பர், காலசூரி, கங்கர், ஆலூபர், லாடர், மாளவர், கூர்ச்சரர் கலிங்கர் முதலிய அரசர்களை வென்று அவர்கள் நாட்டைத் தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டு தனது இராச்சியத்தைப் பெரிதாக்கிக் கொண்டான்.
இவன் வென்றவர்களில் நளர் என்பவர் நளவாடி விஷயம் என்னும் நாட்டினர். இது பல்லாரி கர்னூல் மாவட்டங்களில்
பல்வர்களுக்குரியதாக இருந்த ஆந்திர நாட்டைப் புலிகேசி, மகேந்திரவர்மனுடன் போர்செய்து கைப்பற்றிக் கொண்டான் என்பதை முன்னமே கூறியுள்ளோம். வடஇந்தியாவை அரசாண்ட ஹர்ஷவர்த்தனன் சளுக்கிய நாட்டின்மேல் படையெடுத்து வந்தபோது, அவனை எதிர்த்து முறியடித்தவன் இந்தப் புலிகேசியே. இதனால் புலிகேசியின் புகழ் எங்கும் பரவிற்று. பாரசீக நாட்டை அரசாண்ட குஸ்ரு (இரண்டாவன்), புலிகேசியின் புகழைக் கேள்விப்பட்டு, இவனிடம் தூதரை அனுப்பி இவனுடன் நட்புக்கொண்டான்.
புலிகேசியின் சளுக்கிய இராச்சியம் வடக்கே நருமதையாறு முதல் தெற்கே வடபெண்ணையாறு வரையிலும், மேற்கே அரபிக்கடல் முதல் கிழக்கே வங்காளக்கூடாக் கடல் வரையிலும் பதவியிருந்தது. இந்தச் சளுக்கி இராச்சியத்தின் கிழக்குப் பகுதியைப் புலிகேசி தன் தம்பியாகிய குப்ஜவிஷ்ணுவர்த்தனனுக்குக் கொடுத்தான். குப்ஜவிஷ்ணுவர்த்தனன் கலியாணியைத் தலைநகராக கொண்டிருந்தான் சளுக்கிய நாட்டின் மேற்குப் பகுதியைப் புலிகேசி அரசாண்டான். இவன் தலைநகரம் வாதாபி என்னும் பாதாமி நகரம்.
இவ்வாறு மகேந்திர வர்மன் காலத்தில் வட இந்தியாவை ஹர்ஷவர்த்தனனும் தக்கண இந்தியாவைப் புலிகேசியும் அரசாண்டனர். புலிகேசியின் சளுக்கிள இராச்சியத்திற்குத் தெற்கே மகேந்திர வர்மனுடைய பல்லவ இராச்சியம் இருந்தது. இந்தப் பல்லவ இராச்சியம், தொண்டைமண்டலம் சோழமண்டலம் என்னும் இரண்டு மண்டலங்களைக் கொண்டிருந்தது. அஃதாவது வடக்கே வடபெண்ணையாறு
பல்லவ இராச்சியத்திற்குத் தெற்கே பாண்டிநாடு இருந்தது. மகேந்திரவர்மன் காலத்தில் பாண்டிநாட்டை அரசாண்ட பாண்டியன் சேந்தன் என்பவன். இந்தச் சேந்தன், பாண்டியன் மாறவர்மனுடைய மகன்; பாண்டியன் கடுங்கோனுடைய பேரன். இந்தச் சேந்தன் எத்தனை ஆண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. இவனைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது.
“மற்றவர்க்கு மருவினிய ஒரு மகனாகி மண்மகளை மறுக்கடிந்து விக்ரமத்தின் வெளிற்பட்டு விலங்கல்வேல் பொறி வேந்தர் வேந்தன் சிலைத் தடக்கைக் கொலைக் களிற்றுச் செழியன் வானவன் செங்கோற்சேந்தன்.”[3]
இந்தச் செங்ககோற் சேந்தனுடைய மகன், நெடுமாறன் என்பவன். “நிறைக் கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன்” என்று இவனைச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் கூறுகிறார். இந்த நெடுமாறன் முதலில் சமண சமயத்தவனாக இருந்தான். பிறகு திருஞானசம்பந்தரால் சைவ சமயத்தவனாக்கப்பட்டான். திருநாவுக்கரசர் பாண்டிநாட்டில் தல யாத்திரை செய்தபோது அவரை வர வேற்றுப் போற்றியவன் இவனே.
பாண்டி நாட்டிற்கு மேற்கே சேரநாடு இருந்தது. இக் காலத்தில் சேர நாட்டை யரசாண்ட சேர மன்னன் பெயர் தெரியவில்லை.
மகேந்திரவர்மன் காலத்தில் பாரத நாட்டின் அரசியல் நிலை இத. இனி, பாரத நாட்டுடன் சேர்ந்ததும் தமிழ் நாட்டின் அருகில் உள்ளதுமான இலங்கைத் தீவின் அரசியல் நிலை இக் காலத்தில் எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்.
தமிழ்நாட்டின் தென் கிழக்கில் சிங்களத் தீவு என்னும் இலங்கைத் தீவு இருக்கிறது. பண்டைக் காலத்தில் இந்தத் தீவிற்கும் தமிழ்நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. ஏனென்றால், பௌத்த சமயம் தமிழ் நாட்டில் சிறப்படைந்திருந்தது. காஞ்சிபுரம், நாகைப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், பூதமங்கலம், போதிமங்கை முதலிய இடங்களில் பௌத்தப் பள்ளிகளும் பௌத்த விகாரைகளும் இருந்தன. ஆகவே பௌத்த நாடாகிய இலங்கையிலிருந்து பௌத்தர்கள் தமிழ் நாட்டிற்கு வருவதும், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'இலங்கைக்குச் செல்வதும் வழக்கமாயிருந்தது. அன்றியும் இலங்கையை ஆண்ட சிங்கள அரசர்கள், அடிக்கடி தமிழ்நாட்டு அரசர்களின் துணையை நாடினார்கள். ஆகவே, சமயச்சார்பாகவும் அரசியல் சார்பாகவும் தமிழ் நாட்டிற்கும் இலங்கைத் தீவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.
இலங்கை வரலாற்றைக் கூறுகிற மகாவம்சம் என்னும்நூலின் பிற்பகுதியாகிய சுல்லவம்சம் என்னும் நூலின் 44 ஆம் அதிகாரத்திலிருந்து இந்தக் காலத்து அரசியல் நிலையை அறியலாம். அதனைக் கூறுவோம். மகேந்திர வர்மன் காலத்தில் இலங்கைத் தீவின் அரசியல் நிலை, மிகக் குழப்பமான நிலையில் இருந்தது. அரச பதவிக்காகச் சிலர், அடிக்கடி கலகம் உண்டாக்கியும் போர் செய்தும் வந்தபடியினாலே நாட்டில் அமைதி நிலவவில்லை. ஏறக்குறைய கி. பி. 500 முதல் 630 வரையில், அஸதாவது மகேந்திரவர்மன் பல்லவ நாட்டை அரசாண்ட அதே காலத்தில் அக்கபோதி, ஜேட்டதிஸ்ஸன், தாட்டோபதிஸ்ஸன், கஸ்ஸபன் என்னும் நான்கு அரசர்கள் இலங்கைத் தீவின் அரசாட்சிக் காகப் பல முறை போர் செய்தார்கள். இவர்களைப்பற்றிய வரலாறு இது:
இரண்டாம் அக்கபோதி: இவன் ஏறக்குறைய கி. பி. 601 முதல் 611 வரையில் அரசாண்டான். இவன் முதலாம் அக்கபோதியின் மகன். இவனைக் குட்ட ராசன் என்றும் குட்ட அக்கபோதி என்றும் கூறுவர். (குட்ட என்றால் இளைய என்பது பொருள்.) இவன், சங்கபத்திரை என்பவளை மணஞ் செய்திருந்தான்.
இவன் காலத்தில் கலிங்கநாட்டு அரசன் அரசு துறந்து தன் மனைவியுடனும் அமைச்சனுடனும் இலங்கைக்கு வந்து, தூபராம விகாரையின் தலைவராக இருந்த ஜோதிபாலர் என்னும் பௌத்தபிக்கு விடத்தில் துறவு பூண்டான். இவர்களை அக்கபோதியும் சங்கபத்திரையும் போற்றி வந்தனர். (கலிங்கமன்னன் அரசு துறந்து இலங்கைக்கு வந்ததன் காரணம், சளுக்கிய அரசன் புலிகேசி இவனுடன் போர் செய்து இவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதனால் என்று கருதப்படுகிறது.)
இரண்டாம்அக்கபோதி காலஞ்சென்ற பிறகு, சங்க திஸ்ஸன் என்பவன் அரசனானான். இவன் ஏறக்குறைய கி. பி. 611 முதல் 617 வரையில் அரசாண்டான். இவன் காலத்தில் உரோகண நாட்டில் இருந்த மொக்கல்லானன் என்பவன் அரசபதவிக்காக இவனுடன் போர் செய்தான். இருவருக்கும் போர் நடக்கும்போது, சங்கதிஸ்ஸனுடைய சேனாபதி சங்கதிஸ்ஸனையே எதிர்த்துப் போரிட்டான். இரண்டு சேனைகளுக்கிடையே அகப்பட்டுக்கொண்ட சங்கதிஸ்ஸன் போர்க் களத்தில் போராடியபோது, அவனுடைய பட்டத்து யானை ஒரு மர நிழலை நாடிச்சென்றது. அப்போதுமரக்கிளை தடுத்தபடியினாலே அரசனுடைய கொற்றக்குடை கீழே விழுந்துவிட்டது. அக்குடையை மொக்கல்லானனுடைய வீரர்கள் கொண்டுபோய் மொக்கல்லானனிடம் கொடுத்தார்கள். அவன் குன்றின்மேல் ஏறி நின்று அக்குடையை உயர்த்தினான். அது கண்ட சங்கதிஸ்ஸனுடைய சேனைகள் மொக்கல்லானன் வெற்றி பெற்றதாக நினைத்து அவனிடம் போய்விட்டார்கள். இவ்வாறு தனக்குத் தோல்வி ஏற்பட்டதைக் கண்ட சங்கதிஸ்ஸன் தன் மகனுடன் அருகில் இருந்த காட்டினுள் ஓடி ஒளிந்தான்.
வெற்றிபெற்ற மொக்கல்லானன், இலங்கையின் அரசனானான். இவனை மூன்றாம் மொக்கல்லானன் என்றும் தல்ல மொக்கல்லானன் என்றும் கூறுவர். இவன் 6 ஆண்டு அரசாண்டான். தோல்வியுற்றுக் காட்டிற்கு ஓடிய சங்கதிஸ்ஸனும் அவன் மகனும் பௌத்தபிக்குகளைப் போல வேடம் பூண்டு உரோகண நாட்டிற்குப் போனார்கள். போகும் வழியில் இவர்கள், மொக்கல்லானன் ஆட்களால் அடையாளம் கண்டறியப்பட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு இறந்த சங்கதிஸ்ஸ னுடைய இன்னொரு மகன் ஜேட்ட திஸ்ஸன் என்பவன், மலைய நாட்டில் சென்று மறைந்திருந்தான்.
மொக்கல்லானனுடைய சேனாபதி சிலாமேகவண்ணன் என்பவன். இவன் அரசனைப் பகைத்து உரோகண நாட்டிற்குப் போய்ச் சேனை யொன்றைச்சேர்த்துக்கொண்டு, மலைய நாட்டில் மறைந்திருந்த ஜேட்டதிஸ்ஸனுடன் (இவன் சங்கதிஸ்ஸனுடைய மகன்) நட்புக் கொண்டு அரசனாகிய மொக்கல்லானன் மேல் படையெடுத்துச் சென்றான். மொக்கல்லானன் சிலாமேகவண்ணனைப் போர்க்களத்தில் எதிர்த்தான். ஆனால் போரில் தோற்று ஓடினான். அவனைச் சிலாமேகவண்ணன் சீயகிரிக்கு அருகில் கொன்றான். மொக்கல்லானனைக் கொன்று வெற்றிபெற்ற சிலா மேக வண்ணன், ஜேட்டதிஸ்ஸனை அநுராதபுரத்திற்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தான். ஆனால், இவனுடைய உண்மையான நோக்கத்தை யறிந்த ஜேட்டதிஸ்ஸன், தன்னைக் கொன்றுவிடுவான் என்று தெரிதந்து, இவனிடம் வராமலே மலைய நாட்டிலேயே இருந்து விட்டான். ஆகவே, சிலாமேகவண்ணன் இலங்கையின் அரசனானான்.
ஜேட்டதிஸ்ஸனுடைய அம்மாமன் சிறீநாகன் என்பவன் தமிழ் நாட்டிற்கு வந்து ஒரு சேனையைத் திரட்டிக் கொண்டு இலங்கைக்குப் போய்ச் சிலாமேகவண்ணனுடன் போர் செய்தான். ஆனால், இப்போரிலும் சிலாமேகவண்ணனே வெற்றி பெற்றான். இவன் ஒன்பது ஆண்டு அரசாண்டான். கடைசியில் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இவனுக்குப் பிறகு அக்கபோதி என்பவன் அரசானானான். இவனை மூன்றாம் அக்கபோதி என்று கூறுணுவர். சிறீசங்கபோதி என்றும் இவனுக்குப் பெயர் உண்டு.
அக்கபோதிக்கு மானா என்னும் பெயருள்ள தம்பியொருவன் இருந்தான். அக்கபோதி, மானாவைத் துணை வேந்தனாக்கி அவனைத் திக்கிண தேசத்திற்கு அரசனாக்கினான். அக்கபோதி நெடுங்காலம் அரசாளவில்லை. அவன் அரசாட்சிக்கு வந்த ஆறாவது மாதத்தில், மலைநாட்டில் ஒதுங்கியிருந்த ஜேட்டதிஸ்ஸன் (சங்கதிஸ்ஸனுடைய மகன்) சேனையொன்றைத் திரட்டிக்கொண்டு தாட்டா சிவன் என்னும் அமைச்சனுடன் அநுராதபுரத்தின்மேல் படையெடுத்து வந்தான். அக்கபோதி, ஜேட்டதிஸ்ஸனுடன் போர்செய்து தோற்றான். தோற்று மாறுவேடம் பூண்டு தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்தான்.
வெற்றிபெற்ற ஜேட்டதிஸ்ஸன் இலங்கையின் அரசனானான். இவனை மூன்றாம் ஜேட்டதிஸ்ஸன் என்பர். இவனும் நெடுங்காலம் அரசாளவில்லை. ஏனென்றால், போரில் தோற்றுத் தமிழ் நாட்டிற்கு ஓடிய அக்கபோதி தமிழச் சேனையொன்றைத் திரட்டிக்கொண்டு இலங்கைக்கு வந்து ஜேட்டதிஸ்ஸனை எதிர்த்தான். இவன் அழைத்து வந்த தமிழப்படையின் தலைவன் வெலுப்பன் என்பவன். வெலுப்பன் என்பது வேலப்பன் என்பதன் திரிபாக இருக்கக் கூடும்.
காலவாபி என்னும் இடத்திலே அக்கபோதி அழைத்துவந்த தமிழச்சேனையை ஜேட்டதிஸ்ஸனுடன் போர்செய்து அவனைக் கொல்ல முயற்சித்தான். வெலுப்பனால் தான் உயிர் இழப்பது உறுதி யென்றறிந்த ஜேட்டதிஸ்ஸன் தன் உடைவாளினால் தன்னைத்தானே குத்திக் கொண்டு இறந்தான். ஆகவே அக்கபோதி மறுைபடியும், இரண்டாம் முறையாகத் தமிழப்படையின் உதவியினால் இலங்கைக்கு அரசனானான். இவன் அழைத்துவந்த தமிழப் படையினரில் பெரும்பாலோர் அநுராதபுரத்திலே தங்கிவிட்டார்கள். இவன் முன்போலவே தன் தம்பியாகிய மானா என்பவனைத் துணைவேந்தனாக்கி இலங்கையை அரசாண்டான். ஆனால், மானா அரண்மனையின் அந்தப்புரத்திலே கூடாபொழுக்கமாக நடந்துகொண்டபடியால்அவன் சிரச்சேதம் செய்யப்பட்டான். ஆகவே மற்றொரு தம்பியாகிய கஸ்ஸபன் என்பவனைத் துணை வேந்தனாக்கினான்.
போர்க்களத்திலே உயிரைவிட்ட ஜேட்டதிஸ்ஸனுடைய அமைச்சனான தாட்டாசிவன், தன்னுடைய அரசன் இறந்துவிட்டபடியாலும், அக்கபோதி வெற்றியடைந்தபடியாலும் தனஙககு இலங்கையில் செல்வாக்கு இல்லையென்பதையறிந்து தமிழ் நாட்டில் சென்று அடைக்கலம் புகுந்தான் அடைக்கலம் புகுந்த தாட்டாசிவன் அக்கபோதியை வென்று இலங்கையரசைத் தான் அடைவதற்குச் சமயம் பார்த்திருந்தான். இச்சமயத்தில் மானா என்னும் உபராசன் கொல்லப்பட்டான் என்பதைக் கேள்விப்பட்டு உடனே புதியதோர் தமிழச்சேனைகளை அழைத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்று அநுராதபுரத்திற்கு அருகில் உள்ள திந்திணி என்னும் ஊரில் பாசறை யமைத்தான்.
தாட்டாசிவன் தமிழப்படையுடன் தமிழ்நாட்டிலிருந்து போருக்கு வந்த செய்தியை அறிந்த அக்கபோதி, சேனையுடன் சென்று அவனுடன் போர்செய்தான். இந்தப் போரில் தாட்டாசிவன் வெற்றி யடைந்து அக்கபோதி தோல்வுயுற்றான். தோல்வியடைந்த அக்கபோதி, முடி முதலிய அரச சின்னங்களையெல்லாம் விட்டுவிட்டு, ஏகாவலி என்னும் பெயருள்ள முத்துமாலை ஒன்றைமட்டும் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு ஓடினான். தமிழச் சேனையினால் வெற்றிபெற்று அரசாட்சியைக் கைப்பற்றிய தாட்டாசிவன், ஏகாவலி என்னும் முத்துவடம் ஒன்று தவிர மற்ற அரச சின்னங்களை அணிந்து இலங்கையின் அரசனானான். அரசனான பிறகு தாட்டாசிவன்தன்
பெயரைத் தாட்டோபதிஸ்ஸன் என்று மாற்றிக்கொண்டான். இவன் தமிழ்நாட்டில் எங்கிருந்து தமிழச் சேனைகளை அழைத்து வந்தான் என்பது தெரியவில்லை. பாண்டிய நாட்டிலிருந்து அழைத்து வந்திருக்கக்கூடும்.
தோற்று ஓடிய அக்கபோதி தமிழ்நாட்டிலே எந்த அரசனிடம் அடைக்கலம் புகுந்தான் என்பது தெரியவில்லை. ஆனால், தமிழப் படையை அழைத்துக் கொண்டு இலங்கைக்கு வந்து தாட்டோபதிஸ்ஸனுடன் போர் செய்தான். இந்தப் போரில் அக்கபோதி வெற்றியடைந்து தாட்டோபதிஸ்ஸன் தோல்வியடைந்தான். ஆகவே, அக்கபோதி மூன்றாவது முறையாக மீண்டும் அரசனானான். போரில் தோற்று அரசை இழந்த தாட்டோபதிஸ்ஸன் மீண்டும் படைதிரட்டத் தமிழ்நாடு சென்றான். இவ்வாறு தாட்டோபதிஸ்ஸனும் அக்கபோதியும் பலமுறை போர் செய்து, தோற்பதும் வெல்வதும் அரசாள்வதும் அரசு துறப்பதுமாக மாறி மாறி இலங்கையை அரசாண்டார்கள். இவர்கள் தமிழ்நாட்டிலிருந்து அடிக்கடி போர்வீரர்களை அழைத்துக் கொண்டு வந்தபடியால், தமிழ வீரர்கள் அநுரையில் அதிகமாகக் குடியேறினார்கள். அநுராத புரத்தில் தமிழர்களின் செல்வாக்கு அதிகமாயிற்று.
அக்க போதியும் தாட்டோபதிஸ்ஸனும் மாறிமாறிப் போர் செய்து கொண்டிருந்தபடியால், போரின் காரணமாக நாட்டிலே வறுமை உண்டாயிற்று. நாட்டுமக்கள் பொருளை இழந்து துன்பப்பட்டனர். நிலபுலன்கள் விளையாமல் மக்கள் அல்லல் அடைந்தார்கள். அடிக்கடி போர் செய்தபடியினாலே அரசர்களிடம் பொருள் இல்லாமற் போயிற்று. ஆகவே, அவர்கள் பௌத்தப் பள்ளிகளிலும் விகாரைகளிலும் இருந்த பொன்னையும் பொருளையும் கவர்ந்து அப்பொருள்களைப் போருக்காகச் செலவுசெய்தார்கள்.
தாட்டோபதிஸ்ஸன் மகா விகாரை, அபயகிரி விகாரை, ஜேதவன விகாரை என்னும் விகாரைகளில் இருந்த பொன்னையும் பொருளையும் கவர்ந்து கொண்டதோடு, தாகோப (தாதுகர்ப்பம்) என்னும் பௌத்தப் பள்ளிகளில் இருந்த விலையுயர்ந்த பொருள்களையும், பொன் நகைகளையும், பொன்னால் செய்யப்பட்டிருந்த புத்த விக்கிரகங்களையும் கவர்ந்து கொண்டான், தூபாராமம் என்னும் பள்ளியில் இருந்த பொன் கலசங்களையும் அதைச்சேர்ந்த சேதியத்தில் அமைத்திருந்த நவரத்தினங்கள் பதித்த பொற்குடையையும் கவர்ந்து கொண்டான். இவ்வாறு இவன் பௌத்தப் பள்ளிகள், பௌத்த விகாரைகள் முதலியவற்றில் இருந்த செல்வங்களைக் கவர்ந்து அவைகளைப் போருக்காகச் செலவு செய்தான்.
இவ்வாறே அக்கபோதியும் புத்த விகாரைகளில் இருந்த பொருள்களைக் கவர்ந்து கொண்டான். அக்கபோதியின் தம்பியாகிய கஸ்ஸபன் (உபராசன்) தூபராம சேதியத்தைத் திறந்து, அதற்கு முன்னைய அரசர்கள் தானமாக வழங்கியிருந்த பொன்னையும் பொருளையும் கவர்ந்து கொண்டான். தக்கிண விகாரையிலிருந்த சேதியங்களுக்குரிய பொன்னையும் நிதிகளையும் கவர்ந்தான்.
இவ்வாறு இந்த அரசர்கள் தமக்குள் அடிக்கடி செய்து வந்த போர்களுக்காகப் பௌத்த மடங்களையும் பௌத்தக் கோயில்களையும் கொள்ளையிட்டு அவற்றின் பொருள்களை கவர்ந்து கொண்டார்கள்
கடைசியாகத் தாட்டோபதிஸ்ஸன் அக்கபோதியை வென்று மீண்டும் அரனானான். தோற்றுப்போன அக்கபோதி, உரோகண நாட்டிற்குச் சென்றான்; அங்கே நோய்வாய்ப்பட்டு இறந்தான். அக்கபோதி இறந்த பிறகும் தாட்டோபதிஸ்ஸன் அமைதியாக அரசாள முடியவில்லை. ஏனென்றால், அக்கபோதியின் தம்பியும் உபராசனுமாக இருந்த கஸ்ஸபன் படையெடுத்து வந்து போர்செய்த தாட்டோபதிஸ்ஸனை வென்றான். போரில் தோற்ற தாட்டோபதிஸ்ஸன் பொன்முடி மணிவடம் முதலிய அரச சின்னங்களைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு போய்விட்டான். வெற்றி பெற்ற கஸ்ஸபன், அரச சின்னங்களை அணியாமலே இலங்கைக்கு மன்னனானான். இந்தக் கஸ்ஸபனை, இரண்டாம் கஸ்ஸபன் என்று சரித்திர நூலோர் கூறுவர்.
கஸ்ஸபன் இலங்கைக்கு அரசனான சில ஆண்டு கழித்துத் தோற்று ஓடிய தாட்டோபதிஸ்ஸன் படை திரட்டிக்கொண்டு போருக்கு வந்தான். கஸ்ஸபன் அவனை எதிர்த்துப் போர் செய்தான். இந்தப் போரில் தாட்டோப திஸ்ஸன் இறந்துபோனான். ஆகவே, கஸ்ஸபனே இலங்கையை அரசாண்டு வந்தான்.[4]
போரில் இறந்த தாட்டோபதிஸ்ஸனுடைய தங்கை மகனும் உபராசனாக இருந்தவனும் ஆன ஹத்ததா தன் என்பவன் போர்க்களத்தில் உயிர் தப்பிப்பிழைத்துத் தமிழ் நாட்டிற்கு ஓடிவந்து அடைக்கலம் புகுந்தான்.
மகேந்திரவர்மன் காலத்திலே இலங்கைத் தீவின் அரசியல் நிலை இது. இதனால், இலங்கை அரசியலில் மறைமுகமாகத் தமிழ் நாட்டின் தொடர்பும் இருந்து வந்ததை அறிகிறோம். அக்காலத்தில் இலங்கையின் தலைநகராமாக அநுராதபுரத்தில் தமிழ் வீரர்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் அதிகமாக இருந்தது.