மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/024-052

3. சமயநிலை

1. சமண சாக்கிய மதங்கள்

மகேந்திரவர்மன் காலத்திலே தமிழ்நாட்டிலே சமண சமயமும் சாக்கிய மதமும் செழித்திருந்தன. சமண சமயம் என்பது, ஆருகத மதம்; அஃதாவது ஜைன சமயம். சாக்கிய மதம் என்பது, பௌத்த சமயம். இந்த இரண்டு சமயங்களும் சேர சோழ பாண்டியநாடு என்னும் மூன்று தமிழ்நாடுகளிலும் பரவி நிலை கொண்டிருந்தன. இந்த மதங்களை மக்கள் பெருவாரியாக ஆதரித்தார்கள். சமணருடைய பள்ளிகளும் பாழிகளும், பௌத்தருடைய பள்ளிகளும் விகாரைகளும் நாடெங்கும் ஊரெங்கும் நிறைந்திருந்தன. சமணத் துறவிகளும் பௌத்தப் பிக்குகளும் எங்கும் நிறைந்திருந்தனர். இந்த நிலையைச் சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் நன்றாக விளக்கிக் கூறுகிறார். ஞானசம்பந்தருடைய தந்தையாராகிய சிவபாத விருதயர், நாட்டில் சைவம் குன்றியிருந்ததையும் சமண சாக்கியம் பெருகியிருந்ததையும் கண்டு மனம் வருந்தினர் என்று சேக்கிழார் இவ்வாறு கூறுகிறார்: -


“மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதியரு மறைவழக்கம் அருகியான் அடியார்பால்
பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறு தொழியக்கண்டு
ஏதமில்சீர்ச் சிவபாத இரு தயர்தாம் இடருழந்தார்.”

(திருஞான - கஅ.)

சிவபாதவிருதயர் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்தவர். ஆனால், ஞானசம்பந்தர் இவருக்கு மகனாக இன்னும் பிறக்கவில்லை. நாவுக்கரசரும் இக்காலத்தில் இருந்தவராவர். தொண்டைநாட்டையும் சோழநாட்டையும் அரசாண்ட மகேந்திவர்மனே சமண சமயத்ததவனாக இருந்தான். பிற்காலத்தில் இவன் நாவுக்கரசரால் சைவசமயத்தில் சேர்க்கப்பட்டான்.

இவ்வாறே பாண்டியநாட்டிலும் சமணசமயம் பெருகிச் சைவ சமயம் குன்றியிருந்ததைச் சேக்கிழார் கூறுகிறார் :


“பூழியர் தமிழ்நாட் டுள் பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்
சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலி யோடு
மூழிநீர் கையிற் பற்றி அமணரே யாகி மொய்ப்ப.”

“பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்
செறியுமுக் குடையு மாகித் திரிபவர் எங்கும் ஆகி
அறியுமச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ
நெறியினிற் சித்தஞ் செல்லா நிலைமையில் நிகழுங் காலை” (திருஞான : 601-2)

இக்காலத்தில் பாண்டியநாட்டை அரசாண்ட மன்னன் செங்கோற்சேந்தன்.

இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் சமணசமயமும் பௌத்தமதமும் பெருகிற் செழித்திருந்தன; சைவ வைணவ சமயங்கள் குன்றியிருந்தன.

2. சைவ வைணவ மதங்கள்

சூமண சாக்கிய மதங்கள் சிறப்புற்றிருந்தன என்று சொன்னால், மற்றச் சைவ வைணவ மதங்கள் இல்லாமற் போயின என்று கருதக் கூடாது. அக்காலத்தில் சைவ வைணவ சமயங்களும் இருந்தன. சைவக் கோயில்களும் வைணவக் கோயில்களும் ஆங்காங்கே தமிழ்நாட்டில் இருந்தன. ஏன்? சைவ மடங்கள்கூடச் சிற்சில இடங்களில் அக்காலத் தில் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால், சைவ வைணவச் சமயங்கள் சிறப்புப் பெறாமல் இருந்தன.

சைவ சமயப் பிரிவுகள்

அக்காலத்திலே சைவசமயத்தில் காபாலிகம், பாசுபதம், பைரவம் முதலான பிரிவுகள் இருந்தன. என்னை?

“விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவீனிற் பொலியும் திருவாரூர் அம்மமானே.”

என்றும்,

“தலையிற் றரித்தவென்புத் தலைமயிர் வடம்பூண்ட
விலையிலா வேடர்வீழி மிழலையுள் விகிர்தனாரே.”

என்றும்,

“தலையறுத்த மாவிரதம் தரித்தான் தன்னை.”
“பசுபதியைப் பாசுபத வேடத்தானை.”
“பஞ்சவடி[1] மார்பினானை.”

என்றும் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் கூறுவது காண்க. மகேந்திரவர்மனும் தான் எழுதிய மத்தவிலாசப் பிரஹசனம் என்னும் நூலிலே, திருவேகம்பத்தில் காபாலிகர், பாசுபதர் இருந்த செய்தியைக் கூறுகிறான். இவற்றினால் அக்காலத்தில் இந்த மதங்கள் இருந்தன என்பது தெரிகிறது.

3. பக்தி இயக்கம்

பௌத்த சமண மதங்கள் பெருகிச் சைவ வைணவ மதங்கள் குன்றியிருந்தபோதிலும் அக்காலத்தில் பக்தியியக்கம் தோன்றியிருந்தது. பிற்காலத்திலே சைவ வைணவ சமயங்கள் செழித்து வளரவும் பௌத்த சமண மதங்கள் குன்றி மறையவும் காரணமாக இருந்தது இந்தப் பக்தி இயக்கந்தான். சைவ நாயன்மார்களும் வைணவ அடியார்களும் இந்தப் பக்தி இயக்கத்தைப் பரவச் செய்தார்கள். மகேந்திரவர்மன் காலத்தில் சமயப் பூசல்கள் மும்முரமாக நிகழ்ந்தன. சமண சமயம், பௌத்த மதத்தையும் சைவ வைணவ சமயங்களையும் தாக்கிற்று. அவ்வாறே பௌத்த மதம் சமணமதத்தையும் சைவ வைணவ மதங்களையும் தாக்கிற்று. அங்ஙனமே சைவ வைணவ சமயங்கள் சமண சமயத்தையும் பௌத்த மதத்தையும் தாக்கின. நாளடைவில் பக்தி இயக்கம் வெற்றி பெற்றது. சமண பௌத்த மதங்கள் குன்றத் தொடங்கின.

மகேந்திரவர்மன் காலத்தில் பௌத்த மதத்தையும் சமண மதத்தையும் எதிர்த்துச் சைவசமயத்தை ஆதரித்துப் பக்தியைப் பரவச் செய்தவர் திருநாவுக்கரசு நாயனார். இவர் சைவசமயப் பிரசாரம் செய்யத் தொடங்கியது. இவருடைய வயோதிக காலத்தில். முதன் முதலாகச் சைவ சமயப்பிரசாரம் செய்யக்கிளம்பி ஊர்ஊராகச் சுற்றுப் பிரயாணம்செய்து சைவத்தை நிலைநாட்டியவர் இவரே ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாக இவர் தமது முதுமைக்காலத்தில் சமயத்தொண்டு செய்து தமது 81 ஆவது வயதில் சிவகதியடைந்தார்.

4. திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர், திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்னும் ஊரில் இருந்த புகழனார், மாதினியார் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்து மருணீக்கியார் என்னும் பெயருடன் வளர்ந்து வந்தார். சைவசமயத்திலே பிறந்த இவர் இளமையில் கல்வியை நன்குகற்றுத் தேர்ந்தார் வாலிபப் பருவத்திலே பெற்றோரை இழந்தார். உண்மைச் சமயம் எது என்பதையறிய ஆவல் கொண்டு பல சமயக் கொள்கைகளை ஆராய்ச்சி செய்தார். அக்காலத்தில் பாடலிபுரம்[2] என்னும் இடத்தில் இருந்த, பேர்போன சமண மடத்தில் சேர்ந்து சமண சமய நூல்களையெல்லாம் துறைபோகக் கற்றுத் தேர்ந்தார்.

இவருடைய சமய அறிவையும் கல்வி அறிவையும் கண்ட சமணர்கள் இவரைத் தம் மதகுருவாக அமைத்துத் தருமசேனர் என்னும் பெயர் கொடுத்துப் போற்றினார்கள். தருமசேனர் பாடலிபுரத்துப் பள்ளியிலே சமண சமயத் தலைவராக இருந்தார். நெடுங்காலம் சமண குருவாக இருந்து தமது வாழ்நாளின் பெரும்பாகத்தை அங்கே கழித்தார்.

தருமசேனருடைய முதுமைப்பருவத்தில் இவருக்குக் கொடிய சூலைநோய் கண்டது. அந்நோய் நாளுக்கு நாள் கடுமையாக இருந்தது. மணி மந்திர மருந்துகளினாலும் இவருடைய சூலைநோய் தீரவில்லை. நோயின் துன்பத்தை இவர் தமது திருவதிகைப் பதிகத்தில் நன்கு விளக்கிக் கூறுகிறார். “தோற்றாதென் வயிற்றி னகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்,” என்றும், “சுடுகின்றது சூலை” என்றும், “பயந்தே யென்வயிற்றினகம்படியே பறித்துப் புரட்டி யறுத்து ஈர்த்திட நான் அயர்ந்தேன்” என்றும், “கலித்தே யென் வயிற்றி னகம் படியே கலக்கிமலக்கிட்டுக் கவர்ந்து தின்ன அலுத்தேன்” என்றும் இவர் கூறுவதிலிருந்து இந்நோயின் கொடுமையை நன்கறியலாம். இந்நோய் தீராதென்று கைவிடப்பட்ட இவர்,நோய் பொறுக்க முடியாத நிலையில், தம் தமக்கையாரான திலகவதியார் இருந்த திருவதிகை என்னும் ஊருக்குச் சென்று அவரைக் கண்டார். தமக்கையார், சிவபெருமானை வழிபட்டால் சூலைநோய் தீரும் என்று கூற அவ்வாறே இவர் சைவசமயத்தில் சேர்ந்து சிவபெருமானை வழிபட்டார். அப்போது அவருக்கிருந்த சூலைநோய் நீங்கிவிட்டது. அது முதல் இவர் சைவசமயத்தையும் பக்தியியக்கத்தையும் பரவச் செய்வதில் தமது வாழ்நாட்களைக் கழித்தார். தருமசேனர், சமண சமயத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வந்த பின்னர், இவருக்குத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் சூட்டினார்கள். வடமொழியாளர் திருநாவுக்கரசர் என்னும் பெயரை வாகீசர் என்று மொழி பெயர்த்துக் கொண்டார்கள்.

திருநாவுக்கரசர் சைவசமயத்திற்கு வந்து பக்தி இயக்கத்தைப் பிரசாரம் செய்தது, இவரது இளமை கழிந்த முதுமைப் பருவத்திலாகும். இதனை இவர் தமது பாடலகளிலே குறிப்பிட்டீருக்கிறார். இவர் சமணசமயத்தை விட்டுச் சைவசமயத்தில் புகுந்தபோது இவருக்கு வயது ஐம்பத்தைந்து அல்லது அறுபது இருக்கலாம். என்னை?


“ழனபெலாம் இளைய காலம்
        ழர்த்தியை நிளையா தேரடிக்
கண்கண இருமி நாளும்
        கருத்தழிந் தருத்த மின்றிப்
பின்பகல் உணங்கல் அட்டும்
பேதைமார் போன்றேன் உள்ளம்
        அன்பனாய் வாழ மாட்டேன்
அதிகைவீ ரட்டனாரே”
(திருவதிகை வீரட்டம், நேரிசை ச.க.)

“பாலனாய்க் கழிந்த நாளும்
        பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும்
        மெலிபொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும்
        குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித்
        திருக்கொண்டீச் சரத்து ளானே”
(திருக்கொண்டீச்சரம். திருநேரிசை. கூ.)


“விளைக்கின்ற வினையை நோக்கி
        வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக
        முயல்கிலேன் இயல வெள்ளந்
திளைக்கின்ற முடியி னான்றன்
        திருவடி பரவ மாட்டாது
இளைக்கின்றேன் இருமி யூன்றி
        என்செய்வான் தோன்றி னேனே.”
(குறைந்த திரு நேரிசை.)

“தயைவிழ் கோதை நல்லார்
        தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லேன் எந்தாய்
        என் செய்வான் தோன்றினேனே.”
(குறைந்த திருநேரிசை.)

தடியொடுங்கி வந்தடைந்தேன்
ஒழிப்பாய் பிழைப்ப வெல்லாம்.
(திருவாரூர்.2)

என்று இவரே தம்மைப்பற்றிக் கூறுவது காண்க. இவ்வாறாக, சமண சமயத்தைவிட்டுச் சைவமதத்தைச் சேர்ந்த பின்னர், திருநாவுக்கரசர் திருமணம் செய்து கொண்டு மக்களைப் பெற்றுக் குடும்பத்தோடு வாழ்ந்திருந்து பின்னர் மீண்டுந் துறவுபூண்டிருக்க வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சிக்காரர் எழுதுகிறார்.[3]

இதற்கு இவர் காட்டும் சான்று என்ன வென்றால்,

“மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்புஞ்
சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் தலம தோரேன்.”

என்னும் குறைந்த நேரிசை (உ) செய்யுளாகும். இதனை ஆதாரமாகக் கொண்டு, நாவுக்கரச்ர திருமணம் செய்து கொண்டு பிள்ளைப்பேற்றுடன் வாழ்ந்தார் என்று இவர் கூறுவது பொருந்தாது. நாவுக்கரசர் திருமணஞ்செய்து கொண்டார் என்று பெரியபுராணம் கூறவில்லை. மேலும் இளமை கழிந்த முதிய வயதில் இவர் சைவரானார் என்பதே துணிபு. திருமணஞ்செய்து இல்லறத்தில் வாழ்ந்திருந்தார் என்பதற்கு இவர் மேற்கோள் காட்டுகிற அதே குறைந்த நேரிசைப் பதிகத்தின் கூ ஆவது பாடலில்,

“தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லே னெந்தாய் என் செய்வான் தோன்றி னேனே.”

என்று கூறுவது இக்கருத்துக்கு மாறுபடுகிறது.

நாவுக்கரசர் சமணசமயத்தைவிட்டுச் சைவசமயத்துக் வந்த பின்னர்த் திருமணஞ்செய்து கொண்டிருந்தால், அதனைத் தவறாமல் பெரியபுராணம் கூறுமன்றோ? அவ்வாறு கூறாதபடியினாலும், சைவ சமயத்துக்கு வந்த போது முதிய வயதினராகையினாலும் இவர் திருமணஞ் செய்து கொண்டார் என்பது சிறிதும் பொருந்தாது. அப்படியானால், நாவுக்கரசர் வாக்கினாலேயே அகச்சான்று இருக்கிறதே; ஆகவே, மணம் செய்து கொண்டார் என்பது உண்மைதானே என்று மக்கள் கருதுவர். அவ்வாறு கருதுவது தவறு அடியார்கள், மனவிை மக்கள் இல்லாதவர்களாயிருந்தாலும் குடும்பப்பாசம் உடையவர் போல ஆண்டவனிடம் முறையிடுவது மரபு. இந்த மரபையொட்டிப் பாடிய ஒரு செய்யுளை மட்டும் ஆதாரங் காட்டி இவர் மணஞ்செய்து கொண்டு வாழ்ந்தார் என்று கூறுவது பொருந்தாது. ஏனைய சான்றுகள், மணஞ்செய்து கொண்டார் என்பதற்கு மாறுபடுகின்றன. கனி மரப்பாராமல், ஏனைய சான்றுகளையும் ஆராயாமல் ஏதோ ஓர் ஆதாரத்தை மட்டும் மேற்கோள் காட்டி ஒரு கருத்தை நிலை நாட்ட “ஆராய்ச்சி” யாளர்கள் முற்படுவார்களாகும். அது பெருங்கேடாக முடியும். உதாரணமாக ஒன்று கூறுவோம்:

காரைக்கால் அம்மையார் என்பவர் பெண்பாலார் என்பதும் எல்லோரும் அறிந்த செய்தி. இவ்வம்மையார் இயற்றியுள்ள திரு விரட்டை மணிமாலையில்,

“நினையா தொழுதிகண் டாய்நெஞ்ச மேயங்கோர் தஞ்சமென்று
மனையா ளையுமக்க டம்மையுந் தேறியோ ராறுபுக்கும்
நனையாச் சடைமுடி நம்பனந் தாதைநொந் தாதசெந்தீ
யனையா னமார் பிரானண்ட வாண னடித்தலமே.”

என்று பாடியுள்ளார். பெண்பாலாராகிய அம்மையார், இப்பாடலில் மனையாளையும் மக்கள் தம்மையும் என்று கூறியுள்ளது கொண்டு, இது அவரே கூறிய அகச்சான்று ஆகையால், “காரைக்கா லம்மையார் பெண்பாலார் அல்லர்; ஆண் மகன். அவர் பெண்ணாக இருந்தால் கணவனையும் மக்களையும் என்று கூறியிருப்பார். அப்படிக் கூறாமல் மனையாளையும் மக்களையும் என்று கூறியபடியால் காரைக்கால் அம்மையார் ஆண்மகனே” என்று ஓர் ஆராய்ச்சியாளர் கிளம்புவாரானால் எப்படியிருக்கும்! ஆகவே கவி மரபாகவோ அன்றி வழுவமை தியாகவோ கவிஞர்கள் கூறிய செய்திகளைப் பகுத்தறிவுகொண்டும் ஏனைய சான்று கொண்டும் ஆராயாமல் மனம்போனவாறு கூறத் துணிவது உண்மைக்கு மாறுபட்ட தவறான முடிபாகும். நிற்க.

சமணசமயத் தலைவராக இருந்தபோது தருமசேனர் என்று பெயர் பெற்றிருந்த மருணீக்கியார், சைவசமயத்தில் சேர்ந்தபோது நாவுக்கரசர் என்னும் பெயர் பெற்றார் என்று கூறினோம். பிற்காலத்திலே இவருடன் சேர்ந்து சைவ சமயத்தைப் பரப்பிய இவருக்கு மிக இளையரான ஞானசம்பந்தர், இவரை முதன்முதல் கண்டபோதும் அதன் பிறகும் இவரை “அப்பரே” என்று அழைத்தார். அதாவது தந்தை போன்ற பெரியவர் என்பது பொருள். ஆகவே, சம்பந்தர் காலத்தில் நாவுக்கரசர் மிக்க வயது முதிர்ந்தவராக இருந்தார் என்பது இதனால் தெரிகிறது.

5. மகேந்திரன் சைவனானது

நாவுக்கரசர், சமணசமயத்தவனாக இருந்த மகேந்திர வர்மனைச் சைவசமயத்தில் சேர்த்தார் என்று கூறுவர். இதற்குப் பெரியபுராணச் செய்யுள் ஆதாரமாகக் காட்டப்படுகிறது. ஆனால், பெரியபுராணம் மகேந்திரன் பெயரைக் கூறவில்லை; பல்லவ அரசர்களின் பொதுப் பெயராகிய காடவன், பல்லவன் என்னும் பெயர்களை மட்டும் கூறுகிறது காடவ அரசன் சைவசமயத்தைச் சேர்ந்தபிறகு பாடலிபுரத்திலிருந்த சமணப் பள்ளியை, (அப்பர் தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த அதே சமணப் பள்ளியை) இடித்து அந்தக் கற்களைக் கொண்டுபோய் திருவதிகைச் சிவன் கோயிலிலே குணதரவீச்சரம் என்னும் கோயிலைக் கட்டினான் என்று பெரியபுராணம் கூறுகிறது.


"வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூடஇடித் துககொணர்ந்து குணதாவீச் சரம்எடுத்தான்.”

என்பது அச்செய்யுள்.

இப் பெரியபுராணச் செய்யுளில் சேக்கிழார் குணதரவீச்சரம் என்று கூறியுள்ளார். குணதரன் என்னும் அரசன் கட்டிய கோயில் என்பது இதன் பொருள். குணதரன் என்னும் பெயர் குணபரன் என்னும் பெயரின் மரூஉ என்றும், ஆகவே குணபரன் குணதரன் என்னும் இரண்டு சொற்களும் ஒரே அரசனைக் குறிக்கின்றன என்றும், இப்பெயர்கள் மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயர்கள் என்றும், ஆகவே அப்பால் சைவனாக்ப்பட்டவன் மகேந்திரவர்மன்தான் என்றும், அவ்வரசன் தனது சிறப்புப் பெயராகிய குணதரன்[4] (குணபரன்) என்னும் பெயரால் குணதரவீச்சரம் கட்டினான் என்றும் சரித்திர ஆராய்ச்சிக்காரர் கூறுவர்.

வல்லம் குகையில் உள்ள தமிழ் எழுத்து.

“குணபரன்” என்பது இதன் வாசகம்

திருவதிகையில் குணதரவீச்சரம் கட்டிய காடவனாகிய பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவன் என்றும், அவனைத்தான் நாவுக்கரசர், சமண மதத்திலிருந்து சைவமதத்திற்கு மாற்றினார் என்றும், நாவுக்கரசரும் மகேந்திரவர்மனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் முதன் முதலாக ஆராய்ந்து கூறியவர் திரு.வி.வெங்கையா அவர்களாவார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் சுருக்கம் இது:-

திருநாவுக்கரசர் அல்லது அப்பர் என்பவருடைய காலத்தில் இருந்த திருஞானசம்பந்தர் அப்பருக்கு இளையவர். பெயர் குறிக்கப்படாத ஒரு பல்லவ அரசன் நாவுக்கரசரை முதலில் துன்புறுத்திப் பிறகு அவரைப் போற்றினான். இந்த அரசனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. குணதரன் என்பது. இந்த அரசனுக்குக் கீழ்ப்பட்டுச் சிற்றரசனாக இருந்த ஒருவன் தன்னுடைய அரசன் பெயரினால் குணதரவீச்சரம் என்னும் கோயிலைக் கட்டினான் என்று சொல்லப்படுகிறது. செங்கல்பட்டுக்கு அடுத்த வல்லம் கிராமத்துக் குகைக்கோயில் சாசனம் ஒன்று குணபரனை மகேந்திர போத்தரசன் என்று கூறுகிறது. டாக்டர் ஹல்ட்ஸ்[5] என்பவர், ஊதயேந்திரச் செப்பேட்டுச் சாசனத்தில் கூறப்படுகிற இரண்டு மகேந்திரவர்மன் என்று அறுதியிட்டுக் கூறுகிறார். குணதரன், குணபரன் என்னும் பெயர்களில் மிகச் சிறுவேறுபாடுதான் காணப்படுகிறது. வல்லம் குகைக்கோயில் சாசனத்தில் கூறப்படுகிற குணபரன் என்னும் மகேந்திரன்தான், திருநாவுக்கரசரை முதலில் துன்புறுத்திப் பிறகு போற்றினான் என்றும், பெரிய புராணம் கூறுகிற குணதரன் ஆவன் என்றும் துணிந்து கூறலாம். ஞானசம்பந்தர், முதலாம் நரசிம்ம வர்மன் காலத்தில் இருந்தவர் என்று முன்னமே கூறியுள்ளேன். ஞான சம்பந்தருக்கு மூத்தவர் நாவுக்ரசர் ஆகையினாலே, வல்லம் சாசனம் கூறுகிற குணபாரனாகிய மகேந்திரபோத்தரசன் (இவனைப் பெரிய புராணம் கூறுகிற குணதரன் என்று துணிந்து கூறுகிறேன்) முதலாம் நரசிம்மவர்மனுடைய தந்தையாகிய மகேந்திரவர்மனாகத்தான் இருக்க முடியும்.[6]

பெரியபுராணம் கூறுகிற குணதரன் என்னும் பெயரும் வல்லத்துச் சாசனம் கூறுகிற குணபரன் என்னும் பெயரும் ஒரே அரசனைத்தான் குறிக்கின்றன; அந்த அரசன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவன் என்று திரு. வி. வெங்கையா அவர்கள் கொண்ட முடிவைச் சரித்திர ஆசிரியர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, மகேந்திர வர்மனும் நாவுக்கரசரும் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.[7]

தமது முதிர்ந்த வயதிலே, சமணசமயமும் பௌத்த மதமும் வலிமை பெற்று இருந்த காலத்திலே, தன்னந்தனியே தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராகச் சுற்றுப்பிரயாணஞ் செய்து பக்தி இயக்கத்தையும் சைவ சமயத்தையும் வளர்த்துப் பரப்பிய முதல் சமயகுரவர் திருநாவுக்கரசரே. ஏனைய சமயங்களின் ஆதிக்கம் வலுப்பட்டிருந்த காலத்திலே, தளர்ந்த வயதிலும் அஞ்சாமல் சென்று பரப்பி மற்றவர்களுக்கு வழிகாட்டிய பெருமை நாவுக்கரசருக்கேயுரியது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளாகச் சமயப் பிரசாரம் செய்தபிறகு இவருக்குத் துணையாக ஞான சம்பந்தர் தோன்றினார்.

6. அப்பரின் சமயப் பற்று

திருநாவுக்கரசர் சைவசமயத்தில் திண்மையான பற்றும் அழுத்த மான உறுதியும் கொண்டிருந்தார். இந்த உறுதி இவரிடத்தில் மேன் மேலும் வளர்ந்துகொண்டே இருந்தது. இந்த உறுதியை இவர் தமது திருப்பாக்களில் ஆங்காங்கே கூறியுள்ளார். அவற்றில் சில வருமாறு:

“பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றும்
சுற்றா யலைகடல் மூடினுங் கண்டேன் புகல்நமக்கு
உற்றான் உமையவட் டகன்பன் திருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன் மொய்கழலே.”

“மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல்நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோம் திருப்ா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.”


“வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்டு
ஊனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே.”

“கண்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப்
பன்னெடுஞ் காலம் மழைதான் மறக்கினும் பஞ்சமுண்டென்
றென்னொடும் சூளறும் அஞ்சல்நெஞ் சேஇமை யாதமுக்கண்
பொன்நெடுங் குன்றமொன் றுண்டுகண் டீர்இப் புகலிடத்தே.”

“தப்பி வானந் தரணிகம் பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவி
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.”

7. அப்பர் காலத்து நாயன்மார்

திருநாவுக்கரசர் காலத்தில் இருந்த சைவ அடியார்கள் அப்பூதியடிகள், முருக நாயனார், சிறுத்தோண்டர், திருநீல நக்கர், நெடுமாறநாயனார், பாண்டிமாதேவியார், குலச்சிறையார், குங்குலியக்கலயர், ஞானசம்பந்தர், திருநீல கண்ட யாழ்ப்பாணர் முதலானோர்.

திருநாவுக்கரசர், மகேந்திரவர்மன் காலத்திற்குப் பிறகு அவன் மகன் மாமல்லன் முதல் நரசிம்மவர்மன் காலத்திலும் உயிர்வாழ்ந்திருந்தார். நரசிம்மவர்மனுடைய படைத்தலைவர்களில் யானைப் படைத் தலைவராக இருந்தவர் பரஞ்சோதியார் எனப்படும் சிறுத்தொண்டர். சிறுத்தொண்டர், சளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் தலை நகரான வாதாபியை வென்றார் என்று பெரியபுராணம் கூறுகிறது.' இது நிகழ்ந்த ஆண்டு கி. பி. 642 என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். வாதாபியை வென்றபிறகு சிறுத் தொண்டர், படைத்தலைவர் பதவியிலிருந்து நீங்கி சைவத் தொண்டு செய்துவந்தார். அக்காலத்தில் சிறுத்தொண்டர் நாவுக்கரசருடனும் மிக இளைஞரான ஞானசம்பந்த ருடனும் நண்பர் ஆனார். வாதாபியை வென்றபிறகு சிறுத் தொண்டருக்குக் குழந்தை பிறந்ததென்றும், அக்குழந்தை பள்ளியில் சேர்க்கப்பட்ட காலத்தில் ஞானசம்பந்தர் அவர் இல்லஞ்சென்றார் என்றும் பெரிய புராணம் கூறுகிறது. அதாவது ஏறக்குறைய கி.பி.648 இல் சம்பந்தரும் சிறுத்தொண்டரும் சந்தித்திருக்கவேண்டும். சிறுத்தொண்டர் நாவுக்கரசரைத் திருப்புகலூரில் சந்தித்ததும் இதே ஆண்டாக இருக்கலாம். இந்த ஆண்டிற்குப் பிறகு, கி.பி.649 இல் ஞானசம்பந்தர் பாண்டியன் மாற வர்மனை (நெடுமாறனை)ச் சைவனாக்கியிருக்கவேண்டும். நெடுமாறன் சைவனான பிறகு நாவுக்கரசர் பாண்டியநாட்டிற்கு யாத்திரை சென்றார். பாண்டிநாட்டில் நாவுக்கரசரைப் பாண்டியன் நெடுமாறனும் பாண்டி மாதேவியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் வரவேற்றனர். பாண்டி நாட்டு யாத்திரையிலிருந்து திரும்பிவந்த சிலநாட்களுக்குப் பிறகு (ஏறக் குறைய கி. பி. 650 இல்) நாவுக்கரச் சிவகதியடைந்திருக்கக் கூடும்.

நாவுக்கரசர் சிவகதிபெற்றது, அவரது 81-ஆவது வயதில் என்று சைவநூல்கள் கூறுகின்றன. எந்த ஆண்டில் என்பது தெரியவில்லை. ஆனால், ஏறக்குறைய கி.பி.650 இல் நாவுக்கரசர் சிவகதியடைந்தார் என்று கொள்ளலாம். எனவே இவர் பிறந்த ஆண்டு ஏறக்குறைய கி.பி.569ஆகும்.[8]

8. முகம்மது நபி[9]

திருநாவுக்கரசர் பக்தி நெறியைத் தமிழ்நாட்டிலே பரப்பிய அதே காலத்தில் மற்றொரு பெரியால் இன்னொரு நாட்டிலே ஒரு புதிய மதக் கொள்கையைப் பரப்பிய செய்தியை இங்குக் குறிப்பிட வேண்டியது முறையாகும். ஏனென்றால், அந்தப் புதிய மதம் இப்போது உலக மதங்களில் ஒன்றாகப் பொலிகிறது. நாம் குறிப்பிடுவது முகம்மது நபி என்பவரையும், அவர் உண்டாக்கிய இஸ்லாம் மதத்தையும் ஆகும்.

அரபு நாட்டிலே மெக்கா என்னும் நகரத்திலே அப்துல்லா என்பவர் ஒருவர் இருந்தார். அப்துல்லாவின் மனைவியார் அமீனா என்பவர். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை கி.பி.569 இல் பிறந்தது. இந்தக் குழந்தைக்கு முகம்மது என்று பெயரிட்டார்கள். முகம்மது என்னும் குழந்தை வளர்ந்து மணஞ்செய்யும் வயதடைந்தபிறகு கதிஜா என்னும் சீமாட்டியை மணஞ்செய்து கொண்டு வர்த்தகத்தொழில் செய்துவந்தார். இவ்வாறு வாழ்ந்துவந்த முகம்மது, தமது நாற்பதாவது வயதில் கடவுளின் திருவருள் கிடைக்கப்பெற்றார். கடவுளின் திருவருள் முழுவதும் கிடைக்கப்பெற்ற முகம்மது நபி (கடவுளால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி) என்று போற்றப் பெற்றார். ஆகவே இவர் முகம்மதுநபி என்றும், நபி நாயகம் என்றும் அழைக்கப்பெற்றார். இவர் கண்ட சமயத்துக்கு இஸ்லாம் என்பது பெயர். இஸ்லாம் சமயத்தின் வேதத்துக்குக் குர்ஆன் என்பது பெயர். குர்ஆன் வேதம் அரபிமொழியில் எழுதப்பட்டது.

முகம்மதுநபி தாம் கண்ட புதிய இஸ்லாம் சமயத்தை மெக்கா நகரத்து மக்களுக்குப் போதித்தார். அவர்களில் சிலர் இவர் மதத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், பலர் பழைய கொள்கையைவிடாமல் இவரைப் பகைத்தார்கள். பகைத்து இவரைக் கொல்லவும் சூழ்ச்சிசெய்தார்கள். அவர்களின் கொடிய எண்ணத்தை அறிந்த நபிநாயகம் அவர்கள், ஒருவரு மறியாமல் மெக்காவைவிட்டு மதீனா என்னும் நகரத்திற்குப் போய் விட்டார். இவ்வாறு மெக்காவிலிருந்து மதீனாவுக்குப் போனதை முஸ்லிம்கள் ஹிஜ்ரா என்று கூறுவர். ஹிஜ்ரா கி.பி.622 இல் ஏற்பட்டது.

முகம்மது நபி தமது இஸ்லாம் மதத்தை மக்களுக்குப் போதித்தார். அதனால் பகைமையுண்டாகித் தம்மை எதிர்த்தவர்களுடன் போர் செய்து அவர்களை வென்றார். இவர் காலத்திலேயே இவருடைய மதம் அரபு நாடு முழுவதும் பரவிவிட்டது. நபிநாயகம் அவர்கள் இஸ்லாம் மதத்தின் மதகுருவாகவும், அரசியல் தலைவராகவும் விளங்கினார். இவர் கி.பி.632 ஆம் ஆண்டில் ஜூன் திங்கள் 7 ஆம் நாள் காலமானார்.

மகேந்திரவர்மனும், திருநாவுக்கரசரும் வாழ்ந்திருந்த அதே காலத்தில், உலகப் பெரியார்களில் ஒருவராகிய முகம்மது நபி அவர்களும் வாழ்ந்திருந்தார். ஆகையினாலே, கால ஒற்றுமையைக் கருதி அவரைப்பற்றி ஈண்டுக் குறிப்பிடவேண்டியதாயிற்று.

  1. 1. பஞ்சவடி என்பது மாவிரத சமயத்தார் பூணும் மயிர்ப் பூணூால்.
  2. 1. பாடலிபுரம், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இருக்கிறது. இங்கிருந்த சமணப் பள்ளி அக்காலத்தில் பேர்போன மடமாக இருந்தது. இந்தச் சமணப் பள்ளியில் தான் லோகவிபாகம் என்னும் நூலைச் சர்வநந்தி என்பவர் சக ஆண்டு 380 இல் எழுதி முடித்தார். அஃதாவது கி. பி. 458 இல் சிம்மவர்மன் என்னும் பல்லவமன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த காலத்தில் அவ்வரசனுடைய 22 ஆவது ஆட்சி ஆண்டில் லோகவிபாகம் பாகத மொழியிலிருந்து வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. (Mys. Arhl. Rep. 1909-10, Para. 112) அதாவது நாவுக்கரசர் பிறப்பதற்கு 160 ஆண்டுகளுக்கு முன்னே இந்நூல் இந்தப் பள்ளியில் மொழி பெயர்க்கப்பட்டது.
  3. 1. Origin and early History of Saivism in South India. by C. V. Narayana Ayyar, Page, 390.
  4. 1. பெரியபுராணம் பாடிய சேக்கிழார் குணதரவீச்சரம் என்று கூறியிருக்கிறார். பெரியபுராணம் பதிப்புகள் எல்லாவற்றிலும் குணதரவீச்சரம் என்றே காணப்படுகிறது. பெரிய புராண வசனம் எழுதிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களும் குணதரவீச்சரம் என்றே எழுதியிருக்கிறார். ஆனால், 1950-ஆம் ஆண்டில் (விக்ருதி ஆண்டு ஆவணி மூலநாள்) திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தார் வெளியிட்ட பெரியபுராணத்தில் குணதர வீச்சரம் என்னும் பெயர் குணபரவீச்சரம் என்று அச்சிடப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்திற்குக் காரணம் கூறப்படவில்லை. இக்காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்காரர்களின் ஆராய்ச்சியை ஆதாரமாகக் கொண்டு இச்சொல் இவ்வாறு மாற்றப்பட்டது போலும். இதுபோலவே, சில ஆண்டுகளுக்கு முன்னர்த் தேவாரத்தை பதிப்பித்த சைவப் பெரியார் ஒருவர், நாவுக்கரசர் தேவாரத்தில் “குலங்கெடுத்துக் கோணீக்க வல்லான் தன்னை” என்ற அடியை மாற்றி, “குலங்கொடுத்துக் கோணீக்க வல்லான் தன்னை” என்று தம் விருப்பப்படி மாற்றி அச்சிட்டிருக்கிறார். பதிப்பாசிரியர்கள் நூலிலுள் சொல்லையோ அடியையோ மாற்றினால் அதற்குக் காரணம் கூறவேண்டுவது முறையாகும். காரணங்கூறாமலே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நூலில் சொற்களை மாற்றியமைப்பது பெருந்தவறாகும். சைவத்திற்கு தமிழிற்கும் தொண்டு செய்வதாகாது.
  5. 1. Dr. Hultzsch.
  6. 2. Epi. Ind. Vol. III.
  7. 1. முதல் மகேந்திரவர்மனுடைய பேரனான இரண்டாம் மகேந்திரவர்மன் காலத்தில் நாவுக்கரசர் இருந்தார் என்று ஒரு ஆசிரியர் கூறுகிறார். (Studies in South Indian Jainism. P. 66 by M. S. Ramaswami Aiyengar.) இந்தக் கருத்தைச் சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இரண்டாம் மகேந்திரவர்மன் காலத்தில் நாவுக்கரசர் இருந்தார் என்பது எந்தவிதத்திலும் பொருந்தவில்லை. ஆகவே, இக்கருத்து தவறானது. நாவுக்கரசர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திலே இருந்தவர் என்பதுதான் ஆராய்ச்சிக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது.
  8. 1. திருநாவுக்கரசர் கி.பி.600 முதல் 681 வரையில் உயிர் வாழ்ந்திருந்தார் என்று சிலர் கருதுவது தவறாகும். மகேந்திரவர்மனைத் திருநாவுக்கரசர் சைவனாக மாற்றிய காலத்தில் அவர் வயது முதிர்ந்தவராக இருந்தார் என்று பெரிய புராணத்தினால் அறிகிறோம். அஃதாவது அப்போது நாவுக்கரசருக்கு 50 வயதுக்கு மேலிருக்கவேண்டும். மகேந்திரவர்மன் கி.பி.630 க்குப் பிறகு வாழவில்லை என்பது சரித்திர ஆசிரியர்களின் முடிபு.
  9. 2. அப்பர் கி.பி. 600 இல் பிறந்தவரானால், அவர் தமது 30 ஆவது வயதில் மகேந்திரவர்மனைச் சைவனாக்கியருக்க வேண்டும். ஆனால் இவர் வரலாறு இதற்கு மாறுபட்டதாகத் தெரிகிறது. ஆகவே கி.பி.600 க்கும் 681 க்கும் இடையில் நாவுக்கரசர் வாழ்ந்திருந்தார் என்று கூறுவது தவறு.