மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3/020

துளு மொழியும் தமிழ் மொழியும்

கன்னட நாடு, ஆந்திர நாடு, மலையாள நாடுகளைப் போலவே துளு நாடும் திராவிட நாட்டைச் சேர்ந்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளைப் போலவே துளு மொழியும் திராவிட இன மொழியாகும். அசோகச் சக்ரவர்த்தியின் சாசனங்களிலே கூறப்படுகிற சத்தியபுத்திர நாடு என்பது துளுநாடே என்பதை முன்னமே கூறியுள்ளோம்.

சங்க காலத்திலே துளு நாட்டில் வழங்கி வந்த மொழி தமிழ் என்பதையும் துளு நாட்டு அரசர் தமிழ்ப் புலவரை ஆதரித்ததையும் துளு நாட்டையும் துளு நன்னர்களையும் தமிழ்ப் புலவர் பாடிய செய்யுள்கள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பதையும் இந்நூலில் ஆங்காங்கே எடுத்துக்காட்டினோம். சங்க காலத்துக்குப் பிறகு, துளு நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பு அற்றுப் போனபடியினாலே, பிற்காலத்திலே துளுநாட்டுத் தமிழ் தனித்து நின்றது. பிறகு. தமிழ்நாடாக இருந்த சேரநாடு, மொழி மாறுபட்டுக் கேரள நாடாகவும் மலையாள மொழியாகவும் மாறிப் போன காலத்தில், துளுநாட்டுத் தமிழுக்கும் தமிழ்நாட்டுத் தமிழ் மொழிக்கும் இருந்த தொடர்பு முழுவதும் அற்றுப் போய்விட்டது. அதனால், துளு நாட்டிலே வழங்கி வந்த தமிழ்மொழி பிற்காலத்திலே சிதைந்தும் திரிந்தும் மருவியும் உருமாறிவிட்டது. இவ்வாறு துளு மொழி தமிழினின்று அகன்று தன்னந்தனியே வளர்வதாயிற்று.

நெடுங்காலம் தனித்து ஒதுங்கியிருந்தபோதிலும், இலக்கியம் படைக்காத வெறும் பேச்சு மொழியாகவும் கொச்சை மொழியாகவும் இருந்தபோதிலும், அது திராவிட மொழிகளிலிருந்து அதிகமாக மாறுபடவில்லை. இந்தியா தேசத்தின் வடமேற்கில் ஆப்கானிஸ் தானத்தில் அயல் மொழிகளுக்கு இடையிலே தன்னந்தனியே அகப்பட்டுக் கொண்ட ‘ப்ருஃகூயி’ என்னும் திராவிட மொழியைப் போல, வேற்று மொழிகளுக்கிடையே அகப்பட்டுக்கொள்ளாமல் துளு மொழி திராவிட இன மொழிகளின் சூழ்நிலையிலே இருந்தபடியால் அதன் மொழி அதிகமாக மாறுபடவில்லை. அயல் மொழி பேசும் மக்கள் துளு நாட்டிலே வராதபடி அதன் இயற்கைச் சூழ்நிலை இருந்தபடியாலும் அயல் மொழிக்காரர் துளு நாட்டில் நுழைந்து அந்த மொழியைக் கெடுக்கவில்லை.

நன்னரைப் பற்றிய செய்யுட்கள்

ஒரு மொழி இலக்கிய வளமும் கலை வளமும் பெற வேண்டுமானால், அம்மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கையும் கணிசமான அளவு இருக்க வேண்டும். அதிக அளவு மக்கள் தொகை இல்லாத படியாலும் இருந்த மக்கள் தொகையில் பெரும்பகுதி மக்களைக் கன்னட மொழியும் மலையாள மொழியும் கவர்ந்து கொண்டபடியாலும், துளுநாட்டிலே துளுமொழி பேசுவோரின் தொகை குறைந்து போயிற்று. சேர நாட்டில் வழங்கிய தமிழ் மொழி பிற்காலத்தில் மலையாள மொழியாக மாறிப்போன பிறகு, அந்த மலையாள மொழி தன் நாட்டுக்கு அருகிலிருக்கும் துளு நாட்டின் தென் பகுதியில் ஆதிக்கம் செலுத்திற்று. அவ்வாறே, துளு நாட்டின் வடக்குப் பகுதியில் கன்னட மொழி ஆதிக்கம் பெற்றது. மலையாளமும் கன்னடமும் திராவிட மொழியாக இருந்த போதிலும் துளு மொழிக்கு அம்மொழிகள் வேற்றுமொழிகள் தானே துளு நாட்டின் தெற்கிலும் வடக்கிலும் முறையே மலையாளமும் கன்னடமும் இடம்பெற்றபடியால், துளு நாட்டின் நடுப்பகுதியில் மட்டும் துளு மொழி நிலைபெறுவதாயிற்று.

சங்க காலத்திலும் அதன் பிற்காலத்திலும் ஏறக்குறைய கி.பி.4 ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் பேசும் நாடாக இருந்த துளு நாடு, பிறகு, அரசியலினால் தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து தனித்தியங்கிற்று. பிறகு துளுநாட்டுத் தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டுத் தமிழ் மொழிக்கும் தொடர்பற்றுப் போன காரணத்தினால் துளுநாட்டுத் தமிழ் சிதைந்தும் மருவியும் மாறுபட்டுக் கொச்சை மொழியின் நிலைக்குக் குன்றிப் போயிற்று. இப்போது துளு மொழி பழைய மொழியிலிருந்து பெரிதும் மாறுபட்டுச் சிதைந்து இருக்கிறது. துளுநாடு தன் பழைய இலக்கியத்தைக் கைவிடாமலிருந்தால் இந்தத் தாழ்ந்த நிலையை யடைந்திருக்காது.

சென்ற 19ஆம் நூற்றாண்டிலே, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே, மேல் நாட்டுக் கிருஸ்துப் பாதிரிமார் துளு நாட்டு மக்களை மதமாற்றஞ் செய்ய முற்பட்டார்கள். அவர்கள் துளு மொழியிலே கிருஸ்து மத நூல்களை எழுதத் தொடங்கினார்கள். துளு மொழிக்குத் தனி எழுத்து இல்லாதபடியால், அவர்கள் அடுத்த நாடாகிய கன்னட நாட்டில் வழங்கிய கன்னட எழுத்தையே துளு மொழிக்கும் வழங்கினார்கள்.

துளு நாட்டின் தலைநகரமான மங்களூரில் கிருஸ்துவ மிஷனரிமார் பெஸல் மிஷன் பிரஸ் (The Basel Mission Press) என்னும் அச்சகத்தை அமைத்து அதன் மூலமாகத் துளு மொழியில் கிருஸ்து மத நூல்களை வெளியிட்டார்கள். அந்த அச்சகத்தில் முதல்முதலாக மத்யூ அப்போஸ்தலரின் சுவிசேஷம் (Gospell of St. Mathew) என்னும் நூல் 1842 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இது லித்தோகிராப் என்னும் எழுத்தினால் அச்சிடப்பட்டது. புதிய ஏற்பாடு என்னும் விவிலிய நூல் 1859 இல் அச்சிடப்பட்டது. பிரிகல் பாதிரியார் துளு மொழி இலக்கண நூலை (A Grammar of the Tulu Language by Rev. J. Brigal) ஆங்கில மொழியில் எழுதி 1872 ஆம் ஆண்டில் அச்சிட்டார். மவ்னர் பாதிரியார் துளு ஆங்கில அகராதியை (Tulu- English Dictionary by Rev. Mauner) எழுதி அச்சிட்டார். இவ்வாறு 19ஆம் நூற்றாண்டில் துளுமொழியில் இலக்கியம் தோன்றிற்று. ஆனால், மேன் மேலும் துளுமொழி இலக்கியம் வளரவில்லை. இது வருந்தத்தக்கது.

பழைய காலத்திலிருந்தே துளுமொழியில் இலக்கிய நூல்கள் ஏற்பட்டிருக்குமானால் அவ்விலக்கிய நூல்கள், பழந்தமிழ்ச் சொற்களை ஒத்திட்டு ஆராய்வதற்குப் பெரிதுந் துணையாக இருந்திருக்கும். சங்க காலத்து இலக்கியங்களில் வழங்கப்பட்டு இப்போது வழக்கிழந்து போன பல தமிழ்ச் சொற்கள் இன்றும் துளு மொழியில் சிதைந்தும் மருவியும் உருமாறி வழங்குகின்றன. பழமையான இலக்கியம் இல்லாத நிலையிலும் துளு மொழியில் பல தூய தமிழ்ச் சொற்கள் சிதைந்து காணப்படுகின்றன என்றால், பழைய இலக்கியங்களைத் துளு மொழி பெற்றிருக்குமானால், அத்துளு இலக்கியம் பழந்தமிழ்ச் சொற்களை ஆராய்வதற்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ் மொழியில் இப்போது வழக்கிழந்து போன பழைய சொற்கள் இப்போதும் துளு மொழியில் சிதைந்து காணப்படுவதை இங்கு எடுத்துக் காட்டுவோம். அதற்கு முன்பு துளு நாட்டு ஊர்ப்பெயர்கள் பல தமிழ்ச் சொல்லாக அல்லது திராவிட இனச் சொல்லாக இருப்பதைக் காட்டுவோம்.

கல்

கல்1 என்னுஞ் சொல் சங்க இலக்கியங்களில் மலை அல்லது குன்று அல்லது மலைச் சிகரம் என்னும் பொருளில் வழங்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இச்சொல் இப்பொருளில் பிற்காலத் தமிழில் வழக்கிழந்து விட்டது. ஆனால், துளுநாட்டிலே கல் என்னுஞ் சொல் பழைய பொருளில் இன்னும் வழங்கிவருகிறது. கார்க்கல் என்பது கருநிறமுள்ள மலை என்னும் பொருளுடைய சொல் (கார்- கருமை; கல்- மலை). துளு நாட்டிலே கருநிறப் பாறைக் குன்றுகள் உள்ள ஒரு ஊர் இருக்கிறது. அவ்வூருக்குக் கார்க்கல் என்று பழைய பெயர் உண்டு. இப்போது அப்பெயர் சிதைந்து கார்கள என்று வழங்குகிறது (கார்க்கல் - கார்கல - கார்கள). இவ்வூரில் உள்ள கோமட்டேசுவரர் உருவம் பேர்போனது. 41 அடி5 அங்குலம் உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட இந்தக் கோமட்டேசுவரர் உருவம் கார்க்கல் நகரத்துக்குச் சிறப்பைத் தருகின்றது. கார்க்கல் (கார்கள) நகரத்தின் பெயரே இந்தத் தாலுகாவுக்குப் பெயராக அமைந்திருக்கிறது.

துளு நாட்டின் கிழக்கெல்லையாக அமைந்திருப்பது உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைகள் என்று கூறினோம். அந்த மலைகளில் உயரமான சிகரங்கள் கல் என்று பெயர் கூறப்படுகின்றன (கல் - மலை). ஆனெ கல்லு (ஆனைக்கல்), ஏர்கல்லு, அம்மெதி கல்லு, கடாயி கல்லு என்று அச்சிகரங்கள் பெயர் பெற்றுள்ளன.

அங்காடி

அங்காடி என்னும் சொல் பழைய தமிழ்ச் சொல். இதன் பொருள் கடை, கடைத்தெரு என்பது. அல்லங்காடி, நாளங்காடி முதலிய அங்காடிகளைச் சங்க நூல்களில் காண்கிறோம். இச் சொல் இப்பொருளிலே இன்றும் தமிழ்நாட்டில் வழங்குகிறது. தெலுங்கிலே இச்சொல் ‘அங்கடி’ என்று வழங்கி வருகிறது.

துளு நாட்டிலும் இப்பெயரையுடைய ஊர்கள் இருக்கின்றன. உப்பினங்கடி, பெள்தங்கடி, ஹொசங்கடி (புதிய அங்காடி) என்னும் பெயருள்ள ஊர்கள் துளு நாட்டில் இப்போதும் உள்ளன.

ஊர்

ஊர்2ல். துளு நாட்டிலேயும் ஊர் என்னும் பெயருள்ள பல ஊர்கள் இன்றும் உள்ளன. பைந்தூரு, பெர்டூரு, பார்கூரு, மங்களூரு, பாணெமங்களூரு, பசரூரு, கொல்லூரு, ஸீரூரு, பைலூரு, சங்வத்தூரு, ஜால்சூரு, புத்தூரு, வேணூரு என்னும் ஊர்கள் துளு நாட்டில் இப்போதுள்ள ஊர்கள்.

வெதிரி

வெதிரி என்னும் சொல் மூங்கில் என்னும் பொருளில் தமிழ்ச் சங்க நூல்களில் வழங்கப்பட்டுள்ளது. இச்சொல் தமிழுக்கு மட்டுமல்லாமல் திராவிட இனமொழிகளுக்குப் பொதுச் சொல்லாக இருந்தது. கன்னட மொழியிலும் துளு மொழியிலும் இச்சொல் பயிலப்படுகிறது. மூங்கில் காடாக இருந்த இடங்கள் வெதிரி என்று வழங்கிப் பிறகு பெதிரி என்று திரிந்துள்ளன. துளு நாட்டிலே மூடுபதிரி, படுபத்ரி என்று இரண்டு ஊர்கள் உள்ளன. இவை மூடபத்ரி படுபத்ரி என்றும் மூடபதிரே, படு பதிரே என்றும் வழங்கப்படுகின்றன. மூடுவெதிரி, படுவெதிரி, என்னும் பெயர்களே இவ்வாறு மருவி வழங்கப்படுகின்றன (மூடு, மூடல் - கிழக்கு, வெதிரி - மூங்கில் காடு, படு - மேற்கு, வெதிரி - மூங்கிற்காடு). மூங்கிற் காடாக இருந்து பிறகு ஊராக மாறிய இடம் என்பது இவற்றின் பொருள்.

துளுநாட்டில் சுப்பிரமணியம் என்னும் பெயருள்ள ஒரு மலையுண்டு. அதற்கு அடுத்த ஊருக்கு சுப்பிரமணியம் என்று பெயர் வழங்குகிறது. முருகனை மலைமேல் வைத்து வழிபட்டனர் பழந்தமிழர். குன்றுகளிலும் மலைகளிலும் முருகனை வழிபட்ட தமிழரைப் போன்றே துளுநாட்டினரும் முருகனை மலைமேல் வைத்து வழிபட்டனர். அந்த மலை அக்காலத்தில் முருகன் மலை என்று பெயர் இருந்திருக்கும். இப்போது முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் பெற்றபிறகு, அந்த மலைக்குச் சுப்பிரமணியம் என்றே பெயர் கூறுகின்றனர். அந்த வழியாகப் பாயும் ஆற்றுக்குக் குமாரதாரீ என்று பெயர் கூறுகின்றனர். குமரன் - முருகன். குமாரதாரி என்பது முருகன் ஆறு என்னும் பொருள் உடையது.

இவ்வாறு துளுநாட்டின் இடப்பெயர்கள் பல தமிழ்ச் சொல்லாகவே அமைந்துள்ளன.

இனி, சங்ககாலத்தில் வழங்கிப் பிறகு மறைந்துபோன தமிழ்ச்சொற்கள் இக்காலத்திலும் துளுமொழியில் சிதைந்தும் மருவியும் வழங்குவதைக் காட்டுவோம். விரிவஞ்சி சில சொற்களை மட்டும் ஆராய்வோம்.

தாழை

தாழை என்னுஞ் சொல் கைதை என்னும் தாழைப் புதருக்குப் பெயராக வழங்கப்படுகிறது. சங்க இலக்கியங்களிலே தாழை என்னுஞ் சொல் தென்னை மரத்துக்கும் பெயராக வழங்கப்பட்டிருந்தது. சங்க காலத்துக்குப் பிறகு தென்னை என்னும் பொருளில் தாழை என்னுஞ் சொல் வழக்கிழந்துவிட்டது. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, நற்றிணை முதலிய சங்க இலக்கியங்களிலே தென்னைமரம், தாழை என்று கூறப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இந்தச் சொல் வழக்கிழந்து போயிற்று. ஆனால் துளுமொழியிலே இச்சொல் இன்றும் வழங்கி வருகிறது. துளு மொழி, பிற்காலத்தில் ழகர எழுத்தை இழந்துவிட்டபடியால், ழகரத்துக்குப் பதிலாக றகர எழுத்தை வழங்குகிறது. எனவே, தாழை என்னும் பழைய சொல் இப்போதைய துளு மொழியில் தாறெ என்று கூறப்படுகிறது. தாறெ என்றால் துளு மொழியில் (தாழை) தென்னை மரம் என்பது பொருள். இதனால் துளு மொழி மிகப் பழைய சொற்களைக் கொண்டிருக்கிறது என்பது தெரிகிறதல்லவா?

அறிவர்

அறிவன், அறிஞர் என்னுஞ் சொற்கள் தொல்காப்பியத்திலும் ஏனைய சங்க இலக்கியத்திலும் பயின்று வருகின்றன. அறிவன், அறிவர் என்னுஞ் சொல்லுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், இளம்பூரண அடிகள் முதலியோர் முனிவர் என்றும் இருடிகள் என்றும் பொருள் எழுதியுள்ளனர். ஆனால், இவர்கள் கூறும் உரை பொருத்தமாகத் தோன்றவில்லை. அறிவர் என்னும் பெயருள்ளவர் வான சாத்திரத்தையறிந்தவர் என்னும் பொருளே சரியானதென்று தோன்றுகிறது. (சங்க காலத்திலேயே (சங்க காலத்தின் இறுதியில்) அறிவன் என்னுஞ் சொல் மறைத்து கணிவன் என்னுஞ் சொல் வழங்கப்பட்டது.)

அறிவன் என்பது முனிவரையும் ரிஷிகளையுங் குறிக்கிறதா அல்லது மக்கள் சமூகத்தில் வானசாத்திரத்தையறிந்தவரைக் குறிக்கிறதா என்னும் ஐயப்பாடு உண்டாகிறது. அந்த ஐயப்பாட்டைத் தீர்ப்பது போல துளு மொழிச் சொல் உதவி செய்கிறது. துளுவிலும் குடகு மொழியிலும் அறிவர் என்னுஞ் சொல் அருவர் என்று வழங்கப்படுகிறது. அருவர் என்பவர் குடகு நாட்டில் திருமணம் முதலிய சடங்குகளைச் செய்யும் புரோகிதராக இன்றும் இருக்கின்றனர். இவர்கள் பிராமணர் அல்லாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, வானநூலை யறிந்து திருமணத்திற்குரிய நன்னாளைக் குறிக்கும் கணிவருக்கு அறிவர் என்னும் பெயர் இருந்ததென்பதும், அப்பெயர் மறைந்து போன பிறகும், குடகு மொழியில் அச்சொல் இன்றும் திருமணம் செய்யும் குருமாருக்குப் பெயராக வழங்கிவருகிறதென்பதும் தெரிகின்றன. இதனால், தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களில் கூறப்படுகிற அறிவர் என்பவர் அக்காலத்துத் தமிழ்ச் சமூகத்தில் வானநூல் பயின்றவரென்பது தெரிகின்றது.

பூதம்

சங்க காலத்திலே பூதம் என்னும் தெய்வ வணக்கம் இருந்ததை அறிகிறோம். பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங்களில் பூதவணக்கம் கூறப்படுகிறது. அந்தப் ‘பூதங்கள்’ திருமால், சிவன் போன்ற உயர்ந்த தெய்வங்களைப் போன்ற நிலையில் இல்லாவிட்டாலும் இந்திரன், முருகன் போன்ற உயர்ந்த நிலையில் வைத்து வணங்கப்பட்டன. பிற்காலத்தில் பூதம் என்பதற்குக் கொடிய துர்த்தேவதை, சிறுதேவதை என்னும் பொருள் கற்பிக்கப்பட்டது போல,சங்க காலத்தில் ‘பூதம்' என்னும் தெய்வம் இழிவான நிலையில் வைத்து எண்ணப்படவில்லை. பூதம் என்னும் தெய்வம் உயர்நிலையில் வைத்து அக்காலத்தில் கருதப்பட்ட படியால்தான் அக்காலத்து மக்களும் அப்பெயரைத் தங்கள் பெயராகக் கொண்டிருந்தார்கள்.

பூதபாண்டியன், பூதனார், சேத்தம் பூதனார், குன்றம் பூதனார், இளம் பூதனார், கரும்பிள்ளைப் பூதனார், காவன் முல்லைப் பூதனார், கோடை பாடிய பெரும்பூதனார், வெண்பூதனார், காவிப்பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் நப்பூதனார் முதலிய புலவர்கள், அரசர்களின் பெயரைக் காணும்போது அக்காலத்தில் பூதம் என்னும் தெய்வம் உயர்ந்த நிலையில் வைத்துக் கருதப்பட்ட சிறந்த தெய்வமாக இருந்தது என்பது தெரிகின்றது. பிற்காலத்திலே பூதத்தாழ்வார் என்னும் வைணவ ஆழ்வார் ஒருவர் இருந்ததையும் அறிவோம். ஆனால், பிற்காலத்தில் பூதம் என்னுஞ் சொல் இழிந்த பொருளில் சிறுதெய்வம் துஷ்ட தெய்வம், என்று கருதப்பட்டது. நாற்றம் என்னுஞ்சொல், மணம் என்னுஞ் சிறந்த பொருளில் வழங்கிப் பிற்காலத்தில் துர்நாற்றம் என்னும் இழிந்த பொருள் பெற்றது போல, பூதம் என்னும் சொல்லும் முற்காலத்தில் உயரிய பொருளில் வழங்கிப் பிறகு இழிந்த பொருள் பெற்றுவிட்டது.

ஆனால், துளு நாட்டில் அந்தப் பழைய பெயர் உள்ள கோவில்கள் இன்றும் இருக்கின்றன. பூதகோட்ய (பூதகோட்டம்), பூதஸ்தானம் (ஸ்தானம் - இடம், ஸ்தலம்) என்னும் பெயருள்ள பூதக் கோவில்கள் இன்றும் துளு நாட்டில் உள்ளன. பூதசதுக்கம் என்றும் தமிழில் கூறப்பட்டவையே பூதகோட்ய என்றும் பூதஸ்தானம் என்றும் வழங்கப்படுகின்றன. ஆனால், இப்பூத வணக்கத்தில் பல வேறுபாடுகளும் மாற்றங்களும் காலப் போக்கில் ஏற்பட்டிருக்கக்கூடும். என்றாலும் பழைய பூதம் என்னும் பெயரைத் துளு நாட்டினர் இன்றும் விடாமல் வழங்கி வருவது கருதத்தக்கது.

இது போன்று பல பழந்தமிழ்ச் சொற்களின் திரிபுகளைத் துளு மொழியில் காணலாம். உப்பாடு, (உப்பில் அடப்பட்டது - ஊறுகாய்), நுடி (பேச்சு), நுடிகட்டு (குறிசொல்லுதல்), நின்னி (எதிரொலி), கோறி (கோழி), பிலிநாயி (புலிநாய் - கழுதைப் புலி), நாகு (பெண் எருமை) கேரி (கேரி - சேரி), சேரிதெரு. உதாரணமாக துளு நாட்டுப் பாரகூரில் மூடுகேரி - கிழக்குச் சேரி- கிழக்குத் தெரு, கோட்டெகேரி - கோட்டைத் தெரு, மணிகார கேரி முதலியன), நீர்நாள் (ஒரு மாதத்தின் பெயர்), கார்தெல் (ஒரு மாதத்தின் பெயர்), பொந்தேல், புயிந்தேல், பேரார்தெ (மாதங்களின் பெயர்கள்) முதலிய சொற்கள் பழைய திராவிட மொழியின் தொன்மையைக் காட்டுகின்றன. விரிவஞ்சி இதனோடு நிறுத்துகிறேன்.

துளு மொழியில் பழைய இலக்கியம் இல்லாதது பற்றி அம்மொழியைப் புறக்கணிப்பது தவறாகும். பழைய திராவிடச் சொற்களை ஆராய்வதற்குத் துளு மொழி பெரிதும் பயன்படுகிறது. முக்கியமாகப் பழைய தமிழ்ச் சொற்களை ஆராய்வதற்குத் துளு மொழி மிகமிகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை. தமிழ் மொழியை நன்றாகக் கற்ற பேரறிஞர் துளு மொழியையும் பயின்றுஅதிலுள்ள பழைய திராவிடச் சொற்களை ஆராயவேண்டும். துளு மொழியிலுள்ள சொற்கள் சிதைந்தும் திரிந்தும் உருமாறியும் இருக்கும். அவற்றையெல்லாம் செம்மைப்படுத்தி, பழந்தமிழ்ச் சொற்களுடன் ஒப்பிட்டு ஆராய வேண்டுவது தமிழரின் கடமையல்லவா?

அடிக் குறிப்புகள்

1. தமிழ்நாட்டிலே ஒரு மலை 'திண்டுக்கல்' என்று பெயர் பெற்றிருக்கிறது. ஆந்திர நாட்டிலும் 'தோர்ணக்கல்' என்னும் பெயருள்ள ஒரு மலையுண்டு. இலங்கைத் தீவில் உள்ள சில மலைகள் கல (பயடய) என்று பெயர் கூறப்படுகின்றன. கல என்பது கல் என்பதன் மரூஉ. இலங்கையில் உள்ள மலையுச்சிகளில் தட்டையான பாறைக் கல்லின் மேல் அக்காலத்து வேடர் ஆண்டுக்கு இரு முறை கலெயெக்க (கல் இயக்கன்- முருகன்) என்னும் தெய்வத்துக்கு ஆடல் நிகழ்த்தி வணங்கினர். அதனை வேலனின் வெறியாடலுடன் ஒப்பிடலாம். அந்த மலைப் பாறைகள் கல (கல்) என்று பெயர் பெற்றிருந்தன. ஆண்டிய கல நெல்லியா கல, கணெமுல்லெ கல, கோபல்லவெ கல முதலியன.

2. திராவிட இனத்தார் வாழ்கிற நாடுகள் பலவற்றில் ஊர் என்னும் பெயருள்ள ஊர்கள் பல உண்டு. ஆனால், பாரசீகக் குடாக் கடலின் கரைமேல் யூபிரிடிஸ், தைகிரிஸ் என்னும் ஆறுகள் பாய்கிற பழைய சுமெரிய நாட்டிலே ஊர் என்னும் பெயருள்ள ஊர்கள் சில இருந்தன. அவை ஊர், நிப்பூர் எரிதூர் (எருதூர்), ஊருக், அஸ்ஸூர் என்று பெயர் பெற்றிருந்தன. இப்பெயர்களும், வேறு சில காரணங்களும் சுமெரிய நாட்டுக்கு திராவிட மக்களுக்கும் மிகப் பழைய காலத்தில் நெருங்கிய தொடர்பு இருந்ததைக் காட்டுகின்றன என்று சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் கருதுகிறார்கள்.