மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/014
13. சங்ககாலத்து இசைச்செய்தி[1]
நிலவுலகத்திலே மிருகம்போலத் திரிந்து வாழ்ந்த ஆதிகாலத்து மனிதர், நாகரிகம் அடைந்து நற்பண்பு பெற்ற காலம் முதல் இசைக் கலையை வளர்த்து வருகிறார்கள். உலகத்திலே இசைக்கலை நெடுங்காலமாக வளர்ந்து வருகிறது. முழு நாகரிகம் பெறாமல் காட்டுமிராண்டிகளாக வாழும் மக்களுங்கூட இக்காலத்தில் இசைபாடி மகிழ்கிறார்கள். துன்பமும் துயரமும் சூழ்ந்த மனித வாழ்க்கையிலே சிறிது நேரம் ஓய்வு கொண்டு இசையைப் பாடியும் இசையைக் கேட்டும் மனச்சாந்தியடைகிறது மனித இனம்; இசையைப் பயின்று இசையைப் பாடி இசையைக் கேட்டு இசையில் திளைத்து இசையில் முழுகி மகிழ்கின்றனர் மனிதர். இசைப்பாட்டைச் சுவைத்து இன்பமடையாதவன் மனிதன் அல்லன்; அவனைக் கொடிய துஷ்டமிருகம் என்று கூறலாம். இசைக்கலையாகிய நுண்கலை மானிடர் எல்லோருக்கும் உரியது. குழந்தை முதல் கிழவர் வரையில் எல்லோரையும் இசைக்கலை இன்புறுத்தி மகிழ்விக் கிறது. மனித குலத்தின் வரப்பிரசாதமாக, இன்சுவை அமுதமாக, ஆனந்தத் தேனாக இசைப்பாட்டின் இன்பவூற்று மக்களின் மனத்தை மகிழ்விக்கிறது.
தொன்றுதொட்டு இசைக்கலையைத் தெய்விகப் பொருளாகக் கருதிவருகின்றனர் தமிழர். தமிழ்நாட்டின் புனிதமான விழுமிய பொருளாக இருக்கிறது இசைச்செல்வம். கடவுளுக்குச் செலுத்தும் அன்புக் காணிக்கையை, பக்தியை, இசைப் பாட்டாகக் கொடுத்தான் தமிழன். வைணவ ஆழ்வார்கள் இசைத்தமிழைப் பாடித் திருமாலின் திருவருளைப் பெற்றார்கள்; சைவ அடியார்களும் இசைத் தமிழைப் பாடியே சிவபெருமானின் திருவளைப் பெற்றார்கள். பௌத்தரும் சமணருங்கூட புத்த பகவனையும் அருக தேவனையும் இசைத்தமிழ் பாடி மனமுருகி வணங்கினார்கள்.
பண்டைக் காலத் தமிழர், சங்கம் அமைத்துத் தமிழை ஆராய்ந்தார்கள். அவர்கள் வெறும் இயற்றமிழைமட்டும் ஆராயவில்லை. இயற்றமிழோடு இசைத்தமிழையும் ஆராய்ந்தனர்; இசையோடு இயைபுடைய நாடகக்கலையையும் ஆராய்ந்தனர். எனவே, அவர்கள் ஆராய்ந்தது முத்தமிழ்; அதாவது, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று தமிழ். இயல் இசை நாடகத்தைச் சங்கப் புலவர்கள் ஆராய்ந்தனர் என்பது ஒருபுறமிருக்க, நாரத முனிவரும் அகத்திய முனிவரும் தமிழிசையை வகுத்த பெரியோர் என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன.
இசைக்கலையை ஆராய்ந்த தமிழர் அதை ஏழாகப் பிரித்து, எழு பெயர்களைச் சூட்டினார்கள். அவர்கள் சூட்டிய ஏழு இசைப்பெயர்கள் இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழை என்பன.அப் பழைய பெயர்களை மாற்றி இப்போது ஷட்ஜம், இருஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று புதுப் பெயர்கள் கூறுகிறார்கள்.
இசைப்பாட்டை வேறும் வாய்ப்பாட்டாகப் பாடினால் போதாது. அதற்குப் பக்கத் துணையாக வேறு இசைக் கருவிகளும் வேண்டும். மத்தளம். யாழ், குழல் மூன்றையும் சங்காலத்தில் இசைக்கருவிகளாகக் கொண்டிருந்தார்கள். யாழ் என்னும் இசைக்கருவி பழைய காலத்திலே தமிழ்நாட்டிலே சிறப்பாக வழங்கிவந்தது. மிகப் பழைய காலத்திலே உலகம் முழுவதும் இசைக்கருவியாக இருந்தது யாழ். யாழ் என்னும் இசைக் கருவி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை இங்குக் கூறுவது பொருத்தமாகும். வில் என்னும் போர்க்கருவியிலிருந்து யாழ் என்னும் இசைக்கருவி கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
பண்டைக் காலத்திலே-அணுக்குண்டும், வெடிகுண்டும், துப்பாக்கியும், பீரங்கியும் கண்டுபிடிக்கப்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்னே-மனித இனத்துக்கு வேட்டையாடவும் போர் செய்யவும் முக்கிய ஆயுதமாக இருந்தது வில்லும் அம்பும்தான். வில்லில் நாணைப் பூட்டி அதில் அம்பைத் தொடுத்து நாணைப் பலமாக இழுத்து அம்பை விசையாக எய்தவுடன், நாணின் அதிர்ச்சியினால் ஒருவிதமான ஓசை உண்டாயிற்று. அந்த ஓசை வண்டுகளின் ரீங்காரம்போல இனிய ஓசையாக இருந்தபடியால், அக்காலத்து மனிதர் அந்த ஓசை உண்டான காரணத்தை நுட்பமாக ஆராய்ந்து, அதன் பயனாக வில்யாழ் என்னும் இசைக் கருவியை உண்டாக்கினார்கள். கொடிய போர்க் கருவி, மனிதனின் அறிவினாலும் இசை ஆராய்ச்சியினாலும் நல்லதோர் இசைக்கருவியாக மாறிற்று. இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட வில்யாழ், ஆதிகாலத்தில் உலகம் முழவதும் இசைக்கருவியாக வழங்கி வந்தது. இந்த யாழின் ஏழு இசைகளையும் அமைத்து வாசிக்கத் தமிழன் கற்றுக் கொண்டான். சங்க காலத்திலே பாணர் என்போர் யாழ் வாசிப்பதிலும் இசை பாடுவதிலும் புகழ் பெற்றிருந்தார்கள்.
காலஞ் செல்லச்செல்ல யாழிற்குப் பிறகு வீணை என்னும் இசைக்கருவி உண்டாக்கப்பட்டது. வீணை உண்டான பிறகு யாழ் மறைந்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் யாழ் நெடுங்காலம் வழங்கிவந்தது. பிறகு பையப்பைய, கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், யாழ் என்னும் இசைக்கருவி மறைந்துபோய் வீணை என்னும் கருவி வழங்கப்பட்டது. யாழ் மறைந்து இப்போது ஏறக்குறைய 1000 ஆண்டுகள் சென்றுவிட்டபடியால்,அக்கருவியைப் பற்றி ஒன்றும் அறியமுடியவில்லை. அதைப் பற்றிப் பதினைந்து ஆண்டு ஆராய்ச்சி செய்து, முத்தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு விபுலாநந்த அடிகள், 1947ஆம் ஆண்டில் ‘யாழ் நூல்' என்னும் ஓர் அரிய நூலை எழுதியிருக்கிறார்கள். யாழை மறைத்துவிட்ட வீணையும் இப்போது மறைந்து கொண்டிருக்கிறது.
சென்ற 19ஆம் நூற்றாண்டிலே தஞ்சாவூர் அரண்மனையில் இசைவாணராக இருந்த வித்துவான் வடிவேலுப் பிள்ளை அவர்கள், பிடில் என்னும் ஐரோப்பிய இசைக்கருவியை ஆராய்ந்து அதனை நமதுநாட்டு இசைப்பாட்டிற்கு ஏற்ற இசைக்கருவியாக அமைத்துக் கொடுத்தார். (வடிவேலுப் பிள்ளை பிடில் வாசித்ததைக் கேட்டு மகிழ்ந்த திருவாங்கூர் அரசரான சுவாதித் திருநாள் மகாராஜா அவர்கள், தந்தத் தினால் செய்த பிடில் கருவியொன்றை 1834ஆம் ஆண்டில் பிள்ளை அவர்களுக்குப் பரிசாக வழங்கினார்கள்) அதுமுதல் பிடில் என்னும் இசைக் கருவி வாய்ப்பாட்டிற்குத் தகுந்த துணைக்கருவியாக வழங்கிவருகிறது.
வாய்ப்பாட்டிற்கு மற்றொரு துணைக்கருவியாக இருந்தது புல்லாங்குழல் அல்லது வேணு என்பது. புல் என்றாலும், வேணு என்றால் மூங்கில் என்று அர்த்தம். ஆதிகாலத்தில் மூங்கிற் குழையினால் செய்யப்பட்ட கருவியாதலால், இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. புல்லாங்குழல் எப்படி இசைக்கருவியாயிற்று தெரியுமா? காட்டில் வளர்ந்த மூங்கிற் புதர்களில், சில மூங்கிற் குழாய்களை வண்டுகள் துளைத்துத் துளைகள் உண்டாக்கின. அந்தத் துளைகளின் வழியாகக் காற்று புகுந்து விசையோடு வெளிப்பட்டபோது, அந்தக் குழையிலிருந்து இனிமையான ஓசை உண்டாயிற்று. அதைக் கேட்டு வியப்படைந்த மனிதன், அந்த மூங்கிற்குழாயை ஆராய்ந்து பார்த்தான். பிறகு அதில் துளைகளை அமைத்து ஊதி அதை இனிய இசைக் கருவியாக்கினான். பிற்காலத்திலே வெண்கலக் குழையினாலும் மரத்தினாலும் புல்லாங்குழலை உண்டாக்கினார்கள். பழைய வில்யாழ் மறைந்துவிட்டதுபோலப் புல்லாங்குழல் மறைந்து போகாமல் இன்றளவும் நிலைபெற்றிருக்கிறது. உலகம் உள்ள அளவும் இந்த இசைக்கருவி நிலைபெற்றிருக்கும்.
மத்தளமும் ஆதிகாலமுதல் இன்றுவரையும் இருந்து வருகிற பழைய இசைக்கருவியாகும்.
இசைக்கலையை மிக உயர்ந்த நிலையில் வளர்த்த தமிழர் வெறும் பாட்டோடுமட்டும் நின்றுவிடவில்லை. பாட்டோடு தொடர்புடைய ஆடற்கலையையும் வளர்த்தார்கள். இக்காலத்தில் தமிழ் நாட்டு இசைக்கலையும் பரதநாட்டியமும் உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன என்றால் அதற்குக் காரணம் அக்காலம்முதல் தமிழர் இக் கலைகளை வளர்த்து வந்ததுதான். யாழ் வாசிப்பதிலும், இசை, பாடுவதிலும், நாட்டியம் ஆடுவதிலும் சிறந்தவர்களுக்குப் பட்டங் களையும் பரிசு களையும் வழங்கி மேன்மைபடுத்தினார்கள் அக் காலத்துத் தமிழர்கள், யாழ் வென்றி, ஆடல் வென்றி, பாடல் வென்றி என்று தமிழ் நூல்களில் கூறப்படுவது கலைஞர்களுக்குப் பட்டமும் பரிசும் வழங்கியதேயாகும். இசைக்கலை நாட்டியக் கலைகளில் தேர்ந்தவர்களுக்குத் தலைக்கோலி என்னும் பட்டமும், தலைக் கோல் பரிசும் வழங்கப்பட்டன. தலைக் கோல் ஆசான் என்று ஆண் மகனுக்கும், தலைக்கோலி என்று பெண் மகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. தலைக்கோல் என்பது தங்கத்தினாலும் வெள்ளியினாலும் பூண்கள் அமைத்து நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கெட்டியான மூங்கிற் கோலாகும். இக்காலத்தில் பொற்பதக்கங்கள் பரிசளிப்பது போல அக்காலத்தில் தலைக்கோல் பரிசளிக்கப்பட்டது. பண்டைக் காலத்தில் தமிழர் இசைக் கலையை வளர்த்த வரலாற்றின் சுருக்கம் இது. இனி சங்ககாலத்தில் இருந்த இசை இலக்கிய நூல்கள் எவை என்பதைக் கூறுவோம்.
அக்காலத்தில் இருந்த இசை இலக்கிய நூல்கள் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அந்நூல்களின் பெயர்கள் மட்டும் நமக்குத் தெரிகின்றன. சிலப்பதிகாரக் காவிய உரை, இறையனார் அகப்பொருள் உரை, சீவக சிந்தாமணி உரை, யாப்பருங்கல உரை முதலிய உரை நூல்களில் சங்ககாலத்து இசை இலக்கியங்களின் பெயர்கள் கூறப்படுகின்றன. பெருநாரை, பெருங்குருகு என்னும் இரண்டு இசையிலக்கிய நூல்களை அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். முதுகுருகு, முது நாரை என்னும் இரண்டு நூற் பெயர்களை இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் கூறுகிறார். பெருநாரைக்கு முதுகுருகு என்றும், பெருங்குருகுக்கு முதுநாரை என்றும் பெயர்கள் வழங்கினார்கள் போலும். இந்நூல்களை இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள் தெரியவில்லை.
இசை நுணுக்கம் என்பது ஓர் இசைத் தமிழ் நூல். இதன் பெயரே இது இசைக்கலையைப் பற்றிய நூல் என்பதைத் தெரிவிக்கிறது. இந் நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் சிகண்டி என்பது. சயந்தகுமாரன் என்னும் அரச குமாரனுக்கு இசைக் கலையைக் கற்பிப்பதற்காக இந்நூல் இயற்றப்பட்டது.
பஞ்சபாரதீயம் என்னும் இசைநூலை நாரதர் என்பவர் இயற்றினார். பஞ்சமரபு என்னும் நூலை எழுதியவர் அறிவனார் என்பவர். இசைத்தமிழ் பதினாறு படலம் என்னும் நூலை சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் குறிப்பிடுகிறார். இந்த நூல் 16 படலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது; ஒவ்வொரு படலமும் பல ஒத்துகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
யாமளேந்திரர் என்பவர் இந்திரகாளியம் என்னும் இசைநூலை எழுதினார். முறுவல், சயந்தம், செயிற்றியம் என்னும் பெயருள்ள இசை நூல்களும் இருந்தன. பரதம், அகத்தியம் என்னம் இசை நூல்களும் அக்காலத்து நூல்களே. பரதசேனாபதீயம் என்னும் நூலை இயற்றியவர் ஆதிவாயிலார் என்பவர். பாண்டியன் மதிவாணனார் என்பவர் மதிவாணனார் நாடகத் தமிழ் நூல் என்னும் பெயருள்ள நூலை இயற்றினார். இவை இசை, நாடகம் இரண்டையும் கூறுகிற நூல்கள். இத்தனை நூல்கள் அக்காலத்தில் இருந்தன என்றால், அக்காலத்தில் இசைக்கலை மிக உயர்ந்த நிலையில் இருந்ததென்பது தெரிகிறதல்லவா? இசைக்கலை உயர்ந்த நிலையில் இருந்ததற்குக் காரணம், அக்காலத்து அரசர்களும் பிரபுக்களும் கலைஞர்களை ஆதரித்து வந்ததுதான். சங்ககாலத்துப் பிறகு வேறு சில இசை நூல்கள் இயற்றப்பட்டன. அவற்றை இங்குக் கூறவேண்டியதில்லை.
சங்ககாலத்திலே இசைப்பாட்டுகளை அமைப்பதற்குக் கலிப்பாவும் பரிபாடலும் உபயோகப்பட்டன. “கலியும் பரிபாடலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன” என்று பேராசிரியர் என்னும் உரையாசிரியர் தொல்காப்பிய உரையில் கூறுகிறார். பரிபாடலும் கலிப்பாவும் கடவுளை வாழ்த்துவதற்கும், இன்பச் செய்திளைக் கூறுவதற்கும் இசைப்பாட்டாகப் பயன்பட்டன என்று வேறு ஓர் உரையாசிரியர் கூறுகிறார். கணக்கற்ற பரிபாடல்கள் சங்க காலத்தில் இயற்றப்பட்டன. ஆனால், அவை பிற்காலத்திலே மறைந்துபோயின.
கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட எழுபது பரிபாடல்களில் பல பரிபாடல்கள் மறைந்துவிட்டன. இப்போது நமக்குக் கிடைத்திருப்பவை 22 பரிபாடல்களே. இவை கிடைத்திருப்பது நமது நல்ல திர்ஷ்டமே ஆகும். மாதிரிக்காகவாவது 22 பரிபாடல்கள் கிடைத்திருக்கின்றனவே என்று மகிழ்கிறோம். கிடைத்துள்ள பரிபாடல்களில், அப்பாடல்களைச் செய்த ஆசிரியர் பெயர்களும், அவற்றிற்கு இசை வகுத்தவர் பெயர்களும், அப்பாடல்களை எந்தப் பண்ணில் பாட வேண்டும் என்னும் குறிப்பும் அப்பாடல்களின்கீழ் எழுதப்பட்டிருக்கின்றன. இக்காலத்தில் பரிபாடலைப் பாடும் கலைவாணர் இலர்; எப்படிப் பாடவேண்டும் என்பதும் தெரியாது.
பரிபாடலிலிருந்து ஒன்றைமட்டும் நாம் தெரிந்து கொள்கிறோம். பரிபாடல்கள் தெய்வங்களையும், மலைகளையும், ஆறுகளையும், ஊர்களையும் சிறப்பித்துப் பாடுகின்றன. இளம்பூரண அடிகள் என்னும் உரையாசிரியரும் இதைக் கூறுகிறார். “பரிபாடற்கண் மலையும், யாறும், ஊரும் வருணிக்கப்படும்" என்று அவர் எழுதுகிறார். இதற்கு ஏற்பவே, இப்போது நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல்கள் தெய்வங்களையும், மதுரை நகரத்தையும், திருப்பரங்குன்றம் என்னும் மலையையும், வைகையாற்றையும் புகழ்ந்து பாடுகின்றன.
இக்காலத்து இசைக்கலைஞர்கள் தெய்வங்களைப் பற்றிய இசைப்பாட்டுகளையே பாடுகிறார்கள். மலைகள், ஆறுகள், கடல்கள், நாடுகள், நகரங்கள் முதலியவற்றைப் பாடுகிறதில்லை. சங்க காலத்து இசைக்கலைவாணர்களோ தெய்வங்களைப் பற்றித் தேவபாணி பாடியதோடு மலை, ஆறு, கடல், காடு, நாடு நகரங்களையும் பாடினார்கள். அது போலவே இக்காலத்துப் பாடகர்களும் நமது பாரததேசத்தின் கடல்வளம், காட்டுவளம், ஆற்றுவளம், மலைவளம், நாட்டுவளம், நகரவளம், தொழில்வளம் முதலிய வளங்களையெல்லாம் இன்னிசைப் பாவினால் பாடித் தேசபத்தியையும் நாட்டுப் பற்றையும் வளரச் செய்வார்களாக.
✽✽ ✽
- ↑ மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சமயங்கள் வளர்த்த தமிழ் (1966) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.