மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/016
15. பண்டைத் தமிழகத்தின் வடவெல்லை[1]
பண்டைத் தமிழகத்தின் வடவெல்லையைக் குறிக்கும் போதெல்லாம் நெடியோன் குன்றமாகிய வேங்கடமலையை மட்டுமே பண்டை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளனர். ‘வடவேங்கடந் தென்குமரி, ஆயிடைத், தமிழ்கூறு நல்லுலகம்’ என்று கூறிப்போந்தது தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்.
“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புன னாட்டு”
(சிலப்., வேனிற்காதை)
என்றும்,
“குமரி வேங்கடம் குணகுட கடலா
மண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பில்”
(சிலப்., வஞ்சி, கட்டுரை)
என்றும் இளங்கோவடிகள் கூறியுள்ளார். பிற்காலத்து நன்னூலாரும்,
“குணகுடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள்”
என்று வேங்கடமலையினையே வடவெல்லையாகக் கூறியிருக்கின்றார். இங்கு நாம் ஆராயப்புகுவது நன்னூலார் கூறிய தமிழ்நாட்டு எல்லையைப் பற்றி அன்று; இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுக்கு முற்பட்ட, அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த தமிழ் நாட்டில் வடவெல்லையைப் பற்றியே இங்கு ஆராய்ச்சி செய்யப்படுகின்றது.
திருவேங்கடமலை தமிழ் நாட்டின் வடவெல்லையாக இருந்ததென்பதில் சற்றும் ஐயமில்லை. ஏனென்றால், பண்டை ஆசிரியர் அனைவரும் வடவெல்லையாகக் கூறியுள்ளனர். திருவேங்கடமலைக்கு அப்பால் வேறு மொழி பேசப்பட்டது என்பதை,
“பனிபடு சோலை வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேஎத்தர்”
(அகம்., 211)
“புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து
நடையருங் கானம் விலங்கி நோன்சிலைத்
தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்
பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும்
மொழிபெயர் தேஎம்....” (அகம்., 295)
எனவே, வேங்கடமலை தமிழ் நாட்டின் வடவெல்லை என்பதும், அம்மலைக்கு அப்பால் வேறு மொழி பேசப்பட்ட ‘மொழிபெயர் தேயம்’ இருந்தது என்பதும் வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது.
ஆனால், வேங்கடமலையைமட்டும் வடவெல்லையாகக் கூறியது எவ்வாறு பொருந்தும்? வேங்கடமலை தமிழகத்தின் வடக்கே குணகடல் முதல் குடகடல்வரையிலும் கிழக்கு மேற்காய் நீண்டு கிடக்கும் ஒரு மலையன்று; அது குணகடலின் பக்கமாகக் கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த ஒரு பகுதிமட்டுமே. எனவே, கீழ்க் கடற்பக்கமுள்ள ஒரு மலையைமட்டும் வடவெல்லையாகக் கூறியது தமிழ்நாட்டின் வடவெல்லையை முற்றும் குறிப்பிட்டமாகுமோ? தமிழ் நாட்டின் வடக்கே மேற்கடற் பக்கமாகவும் ஓர் எல்லை கூறவேண்டுவது இன்றியமையாததன்றோ? அவ்வாறு ஓரெல்லை இருந்தே தீர வேண்டும். இல்லையென்றால், அது தமிழகத்தின் வடவெல்லை முழுவதும் கூறப்பட்டதாகாது. கிழக்கு தொடர்ச்சி மலையிலுள்ள வேங்கடமலையை வடவெல்லையாகக் கூறியதுபோல மேற்குத் தொடர்ச்சி மலையிலும் ஓர் எல்லை கூறப்படவேண்டும். அவ்வாறு ஏதேனும் ஓர் எல்லை இருந்ததா? சங்க நூல்களில் இதற்கு ஏதேனும் விடை கிடைக்கின்றதா என்பதை ஆராய்வோம்.
இந்த ஆராய்ச்சிக்கும் மேற்குறித்த சங்கப் புலவர் மாமூலனாரே நமக்குத் தோன்றத்துணையாக இருந்து வழிகாட்டுகின்றார். குடகடலுக்கு அருகில், தமிழ் நாட்டின் வடஎல்லையாக ஒரு மலையை அவர் குறிப்பிடுகின்றார். அது ஏழில்மலை அல்லது ஏழிற் குன்றம் என்பது. தலைமகன் (காதலன்) பிரிவின்கண் தலைமகள் (காதலி) தோழிக்கு சொல்லியதாக இப்புலவர்பெருமான் செய்த செய்யுள் ஒன்றில் தற்செயலாக இதனைக் குறிப்பிடுகின்றார். அது வருமாறு:
“அரம்போ ழல்வளை செறிந்த முன்கை
வரைந்துதாம் பிணித்த தொல்கவின் றொலைய
வெவனாய்ந் தனர்கொல் தோழி ஞெமன்ன்
தெரிகோ லன்ன செயிர்தீர் செம்மொழி
யுலைந்த வொக்கல் பாடுநர் செலினே
யுரன்மலி யுள்ளமொடு முனைபா ழாக
அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்ன னன்னாட்டு
ஏழிற் குன்றத்துக் கவாஅற் கேழ்கொளத்
திருந்தரை நிவந்த கருங்கால் வேங்கை
யெரிமருள் கவள மாந்திக் களிறுதன்
வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை
கல்லூர் பாம்பிற் றோன்றும்
சொல்பெயர் தேஎத்த சுரனிறந் தோரே” (அகம், 349)
நன்னன் என்னும் சிற்றரசனது ஏழிற் குன்றத்துக்கப்பால் மொழிபெயர்தேயம் - அஃதாவது, தமிழ் அல்லாத வேறுமொழி வழங்கும் தேசம் இருந்ததென்பது இப்பாட்டில் பெறப்படுகின்றது. இந்த ஏழிற்குன்றம் குடகடற் பக்கமாக மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த கொங்கண நாடாகிய துளுநாட்டில் உள்ளது. எனவே, தமிழ் நாட்டின் வடவெல்லை மேற்கடற் பக்கமாகவுள்ள ஏழிற் குன்றத்தையும் கீழ்க்கடற் பக்கமாகவுள்ள வேங்கட மலையையும் கொண்டிருந்தது என்பது நன்கு விளங்குகின்றது.
ஏழில்மலை இப்போது மலபார் மாவட்டத்தில் உள்ள கண்ணனூருக்கு வடக்கே பதினெட்டு மைலுக்கப்பால் இருக்கிறது. இங்கு ஏழில்மலை என்னும் இரயில் நிலையமும் உண்டு, ஏழில்மலை என்பதை உச்சரிக்கத் தெரியாதவர்கள் அதனை எலிமலை என்று வழங்கினர். பிற்காலத்தில் அந்த எலிமலையை வடமொழியில் மூஷிக மலை (மூஷிகம்-எலி) என்று மொழி பெயர்த்துக்கொண்டனர். அந்த மலைப்பகுதியை ஆண்ட அரசகுலத்தைப் பற்றி ‘மூஷிக வம்சம்’ என்னும் வடமொழி நூலையும் எழுதிவிட்டனர். பிற்காலத்தில் போர்ச்சுகீசியர் இந்த மலையை மவுண்ட டி எல்லி என்று கூறினர். தமிழ் நாடாக இருந்த சேரநாடு பிற்காலத்தில் மலையாள பாஷை பேசும் நாடாக மாறிவிட்ட பிறகு, ஏழில் மலை தமிழகத்தின் வடவெல்லையைக் குறிக்காமற் போயிற்று. ஆனால், சங்க காலத்தில் தமிழகத்தின் மேற்குக் கரையில் வடவெல்லையாக இருந்தது ஏழில்மலை என்பது நன்கு தெரிகின்றது.
பண்டைத் தமிழ்நாட்டின் வடவெல்லை கீழ்ப்புறமாக வேங்கட மலையும், மேற்புறமாக ஏழிற்குன்றமும் என அறிந்தோம். இனி, இந்த இரண்டு மலைகளுக்கும் இடையே உள்ள நாடுகளில் வடவெல்லையாக இருந்தவை என்பதையும் ஆராய்வோம். இதனையும் மாமூலனார் விளக்குகின்றார்.
“குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேயம்!”
(குறும்....)
என்று கட்டி என்னும் சிற்றரசனது நாடு தமிழ்நாட்டின் வடவெல்லையாக இருந்ததென்றும், அவனது நாட்டுக்கப்பால் வேறு மொழி பேசப்படும் தேயம் இருந்ததென்று அவர் கூறுகின்றார். அகநானூறு 44ஆம் பாட்டில் சோழனுக்கும் சேரனுக்கும் நடந்த போரில் பல சிற்றரசர்கள் சேரனுக்கு துணையாக இருந்தனர் என்றும், அவர்களுள் கட்டி என்பவனும் ஒருவன் என்றும் அறியக் கிடைக்கின்றது. குறுந்தொகை கூறும் கட்டியும், அகநானூறு கூறும் கட்டியும் ஒருவனே என்பது ஆராய்ச்சியில் விளங்குகின்றது. கட்டியரசர் கொங்கு நாட்டின் பகுதியை ஆண்டனர்.
அன்றியும், சேரனுக்கு உதவியாகச் சென்றவர்களுள் கங்கன் என்பவனும் கூறப்படுகின்றான் (அகம்... இந்தக் கங்கன் என்பவனும் தமிழ் நாட்டின் வடவெல்லையில் இருந்த நாட்டினை அரசாண்ட ஒரு சிற்றரசன் ஆவான். சிலப்பதிகாரம் கட்டி, கங்கன் என்பவர்களைக் கட்டி கங்கர் என்று இரண்டு குழுவினராகக் கூறுகின்றது. பங்களர் என்பவர் பங்கள நாட்டை ஆண்டனர். பங்கள நாடு இப்போதை சித்தூர், வட ஆர்க்காடு மாவட்டங்களில் இருந்தது. இது வங்காள நாடு என்னும் வங்கம் அன்று. சிலப்பதிகாரம், காட்சிக் காதை 157ஆம் அடியில் “பங்களர் கங்கர் பல்வேற்கட்டியர்” என்று பங்களரைக் கூறுகிறது. பங்களரும் தமிழகத்தின் வடவெல்லையில் இருந்தனர். பங்களர், கங்கர், கட்டியர் ஆகிய இவர்கள் தமிழ் நாட்டின் வடவெல்லையில் இருந்தவர் என்பதற்குச் சாசனச் சான்றுகள் உள்ளன.
“பாணன் நன்னாட் டும்பர்” (அகம்., 113:17)
என்றும்,
“பல்வேற் பாணன் நன்னாடு” (அகம்.,325:17)
என்றும்,
கூறப்படுகிற வாணாதிராயரின் நாடும், தமிழகத்தின் வடவெல்லையில் இருந்ததாகும்.
எனவே, பங்களர், கங்கர், கட்டியர், பாணர் (வாணாதிராயர்) ஆகியோர் தமிழகத்தின் வடவெல்லையில் இருந்தவர் என்பது தெரிகின்றது.
இதுகாறும் ஆராய்ந்தவற்றால், வேங்கடமலைமட்டும் தமிழகத்தின் வடவெல்லை அன்றென்றும், மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த ஏழில்மலையும் ஓர் எல்லையென்றும், இம்மலைகளுக்கிடையில் இருந்த நாடுகளில் கங்கர், பங்களர், கட்டியர், பாணர் முதலியோர் வாழ்ந்து வந்தனரென்றும், இவர்கள் வாழ்ந்த நாடுகள் தமிழகத்தின் வடவெல்லையாக இருந்தனவென்றும் அறிந்தோம்.
✽✽✽
- ↑ மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சமயங்கள் வளர்த்த தமிழ் (1966) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.