மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/018
17. சேரநாட்டு முத்து[1]
இக்காலத்தில் மலையாள நாடாக மாறிப்போன சேரநாடு, பண்டைக் காலத்திலே தமிழ்நாடாக இருந்தது. தமிழ்நாடாக இருந்த சேர நாட்டைச் சேர மன்னர்கள் அரசாண்டார்கள். சேர நாட்டின் பழைய வரலாற்றுக் குறிப்புகள் பழைய தமிழ் நூல்களிலே காணப்படுகின்றன. பழைய சங்க நூல்களிலே காணப்படுகிற செய்திகளில் சேரநாட்டு முத்தைப் பற்றிய செய்தியும் ஒன்றாகும். இச்செய்தியைக் கேட்பவர் வியப்படைவார்கள். “இது என்ன புதுமை! பாண்டிநாடு தானே முத்துக்குப் பேர்போனது. சேர நாட்டிலும் முத்து உண்டாயிற்றா!” என்று கூறுவர்.
ஆம். பாண்டிய நாட்டுக் கொற்கைக் கடலிலே உண்டான முத்துக்கள் உலகப் புகழ் பெற்றவைதான். தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் பாண்டி நாட்டு முத்துக்களைப் புகழ்ந்து பேசுகின்றன. பாரத தேசத்தில் மட்டும் அல்லாமல் எகிப்து தேசத்திலும் உரோமாபுரியிலும் பண்டைக் காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்கள் புகழ் பெற்றிருந்தன. உரோமாபுரிச் சீமாட்டிகள் தங்கள் நாட்டுப் பொன்னைக் கொடுத்துத் தமிழ் நாட்டு முத்துக்களைப் பெற்றுக்கொண்டார்கள். மேல் நாட்டு யவன கப்பல்கள் தமிழ் நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து ஏனைய பொருள்களோடு முத்துக்களையும் வாங்கிக் கொண்டு போயின.
பேர்போன பாண்டிய நாட்டு முத்துக்கள் உண்டான அதே காலத்தில் மேற்குக் கடற்கரையிலே சேர நாட்டிலேயும் முத்துக்கள் உண்டாயின. பாண்டிய நாட்டு முத்துக்களுக்கு அடுத்தபடியாகச் சேர நாட்டு முத்துக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறப்பும் மதிப்பும் பெற்றிருந்தன. இதற்குத் தமிழ் நூலில் மட்டுமல்லாமல் வடமொழி நூலிலும் சான்று கிடைக்கின்றது.
சேர அரசர்களைப் பற்றிக் கூறுகிற பதிற்றுப்பத்து என்னும் சங்கத் தமிழ் நூலிலே சேர நாட்டில் முத்து உண்டான செய்தி கூறப்படுகிறது. பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தில், கபிலர் என்னும் புலவர் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் சேர மன்னனைப் புகழ்ந்து பாடுகிறார். அதில், சேர நாட்டுப் பந்தர் என்னும் ஊர் முத்துக்களுக்கும் கொடுமணம் என்னும் ஊர் பொன் நகைகளுக்கும் பேர் பெற்றிருந்தது என்று கூறுகிறார்.
“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
கடனறி மரபில் கைவல் பாண!
தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை”
என்று (7-ஆம் பத்து 7-ஆம் செய்யுள்) பாடுகிறார்.
இதற்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் இவ்வாறு விளக்கம் கூறுகிறார். “கொடுமணம் என்பது ஓரூர். பந்தர்ப் பெயரிய - பந்தர் என்று பெயர்பெற்ற. கைவல் பாண! நெடுமொழி யொக்கலொடு நீ சான்றோர் பெருமகன் நேரிப்பொருநனாகிய செல்வக் கோமானைப் பாடிச் செல்லின், பந்தர்ப் பெயரிய மூதூர் தெண்கடல் முத்தமொடு கொடுமணம் பட்ட நன்கலம் பெறுகுவை என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க”. இவ்வாறு கூறுகிறபடியினாலே, சங்ககாலத்திலே பந்தர் என்னும் ஊர் சேர நாட்டுக் கடற்கரையில் இருந்ததென்பதும் அவ்வூர்க் கடலில் முத்து குளிக்கப்பட்டதென்பதும் தெரிகின்றன.
இதே செய்தியை அரிசில்கிழார் என்னும் புலவரும் கூறுகிறார். பதிற்றுப்பத்து எட்டாம் பத்தில், பெருஞ்சேரலிரும்பொறை என்னும் சேர மன்னனை அரிசில்கிழார் பாடுகிறார். அதில் கொடுமணம், பந்தர் என்னும் ஊர்களைக் கூறுகிறார்.
“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்”
என்று (8-ஆம் பது, 4-ஆம் செய்யுள்) கூறுகிறார். இதில், கொடுமணம் என்னும் ஊர் பொன் நகைகளுக்குப் பேர்பெற்றிருந்ததும், பந்தர் என்னும் ஊர் முத்துக்களுக்குப் புகழ் பெற்றிருந்ததும் கூறப்படுகின்றன.
வடமொழியில் அர்த்தசாஸ்திரம் என்னும் பொருளியல் நூலை எழுதிய கவுடல்லியர், அந்நூலில் சேரநாட்டு முத்துக்களைப் பற்றியும் கூறுகிறார். புகழ் பெற்ற அர்த்தசாஸ்திரத்தை எழுதிய கவுடல்லியர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே மகத நாட்டை அரசாண்ட சந்திரகுப்த மௌரியனின் (அசோக சக்கரவர்த்தியின் பாட்டன்) அமைச்சராக இருந்தார் என்பது யாவரும் அறிந்ததொன்றே. அர்த்தசாஸ்திரத்தின் மூன்றாம் பகுதியில் பதினோராம் அதிகாரத்தில் பல தேசத்து முத்துக்களைப் பற்றிக் கூறுகிறார். முதலில் தாம்ரபர்ணிகம், பாண்டிய கவாடகம் என்னும் முத்துக்ளைக் கூறுகிறார். இப் பெயர்களிலிருந்தே இவை பாண்டிய நாட்டில் உண்டான முத்துக்கள் என்பதை அறிகிறோம். பிறகு பாஸிக்யம் என்னும் முத்தைக் கூறுகிறார். பாஸிக்யம் என்பது மகத நாட்டில் பாடலிபுரத்துக்கு அருகில் உண்டான முத்து. பின்னர் கௌலேயம் என்னும் முத்தைக் கூறுகிறார். கௌலேயம் என்பது இலங்கையில் ஈழ நாட்டில் உண்டான முத்து. அதன் பிறகு கௌர்ணேயம் என்னும் முத்தைக் கூறுகிறார். கௌர்ணேயம் என்பது சேரநாட்டிலே மேற்குக் கடலிலே உண்டான முத்து.
கவுடலிய அர்த்தசாஸ்திரத்துக்குத் தமிழ் மலையாளத்தில் உரை எழுதிய ஒருவர் இதைப்பற்றி நன்றாக விளக்கி எழுதியுள்ளார். (பெயர் அறியப்படாத இந்த உரையாசிரியர், தமிழிலிருந்து மலையாள மொழி தோன்றிக்கொண்டிருந்த காலத்தில் இருந்தவர். ஆகவே, இவருடைய உரையில் தமிழ் - மலையாளச் சொற்கள் அதிகமாகக் கலந்துள்ளன.) இந்த உரையாசிரியர் கௌர்ணேயம் என்னும் சொல்லை இவ்வாறு விளக்குகிறார். “கௌர்ணேயமாவிது மல நாட்டில் முரசி ஆகின்ற பட்டினத்தினரிகே சூர்ண்ணி யாற்றிலுளவாமவு’ என்று விளக்கம் கூறியுள்ளார். இதைத் தமிழில் சொல்லவேண்டுமானால், “கௌர்ணேயம் ஆவது மலை நாட்டில் முரசி ஆகிய பட்டினத்தின் அருகே சூர்ணி ஆற்றில் உண்டாவது” என்று கூறவேண்டும்.
இந்த உரையில் முரசி பட்டினமும் சூர்ணியாறும் கூறப்படுகின்றன. இவற்றை விளக்கவேண்டும். முரசி என்பது முசிறி, புறநானூறு முதலிய சங்க நூல்களிலே கூறப்படுகிற முசிறிப்பட்டினம் இதுவே. யவன வாணிகர் மரக்கலங்களில் வந்து தங்கிய துறைமுகங்களில் இதுவும் ஒன்று. யவனராகிய கிரேக்கர் முசிறியை (Muziris) என்று கூறினர். முசிறியை வடமொழியாளர் முரசி என்றும் மரிசி என்றும் வழங்கினார்கள். பிற்காலத்தில் மலையாளிகள் முசிறியை முயிரி என்று வழங்கினார்கள். முயிரி, முயிரிக்கோடு என்றும் கூறப்பட்டது. (முசிறிக்கு அருகிலே சேர மன்னனின் தலைநகரமான வஞ்சிமா நகர் இருந்தது. வஞ்சி, வஞ்சிக்களம் என்றும் பெயர் பெற்றிருந்தது. பிற்காலத்தில் திருவஞ்சிக்களம், திருவஞ்சிக்குளம் என்று மருவிற்று) முசிறி பிற்காலத்தில் கொடுங்கோளுர் என்றும், பின்னர் கொடுங்ஙல்லூர் என்றும் பெயர் பெற்றது.
சூர்ணியாறு என்பது பெரியாற்றின் வடமொழிப் பெயர். மருத்விருத ஆறு என்றும் இதற்குப் பெயர் உண்டு. பெரியாற்றைப் பேரியாறு என்று சங்க நூல்கள் கூறுகின்றன. இந்த பேரியாற்றின் கரையிலே சேரன் செங்குட்டுவன் தன் சுற்றத்துடன் தங்கி இயற்கைக் காட்சியைக் கண்ட செய்தியைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
“நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை
இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப”
என்பது சிலப்பதிகாரம். (காட்சிக்காதை. 21-23)
எனவே, இவ்வுரையாசிரியர் கூறுகிற முரசி, முசிறித் துறைமுகம் என்பதும் சூர்ணியாறு பெரியாறு என்பதும் ஐயமற விளங்குகின்றன. பெரியாறு கடலில் கலக்கிற இடத்துக்கு அருகிலே சேரனுடைய தலை நகரமான வஞ்சியும் அதற்கு அருகில் முசிறியும் இருந்தன. வஞ்சிமா நகரத்துக்கு அருகில் இருந்தவை கொடுமணம், பந்தர் என்னும் ஊர்கள். பந்தர் என்னும் ஊரிலேதான் முத்துக் குளிக்கும் சலாபம் இருந்தது.
பந்தர் என்னும் பெயர் அரபிச் சொல். பந்தர் என்னும் அரபிச் சொல்லுக்கு அங்காடி அல்லது கடைத்தெரு என்பது பொருள். கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலே யவனராகிய கிரேக்கர் தமிழ் நாட்டுடன் வாணிகம் செய்ய வந்தார்கள். யவனர் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அராபியர் தமிழகத்துடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் இந்த இடத்துக்குப் பந்தர் என்று பெயர் சூட்டியிருக்கலாம்.
சேர நாட்டில் உண்டான முத்துக்குக் கௌர்ணேயம் என்று ஏன் பெயர் வந்தது? இது பற்றி ஒருவரும் ஆராய்ச்சி செய்யவில்லை. கௌர்ணேயம் என்பது சௌர்ணேயம் என்னும் சொல்லின் திரிபு என்று தெரிகிறது. சௌர்ணேயம் என்றால், சூர்ணியாற்றில் தோன்றியது என்பது பொருள். சூர்ணியாறு கடலில் கலக்கிற இடத்தில் உண்டானபடியினால் அந்த முத்துக்களுக்குச் சூர்ணேயம் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம். வடமொழி இலக்கணப்படி சூர்ணேயம் சௌர்ணேயம் ஆயிற்று. பிறகு சகரம் ககரமாக மாறிற்று. சேரம் கேரம் (சேரலன் - கேரளன்) ஆனது போல. தாமிரபரணி ஆறு கடலில் கலக்கிற புகர் முகத்தில் கடலில் உண்டாகிற முத்துக்குத் தாம்ரபர்ணிகம் என்று பெயர் ஏற்பட்டது போல, சூர்ணி ஆறு கடலிற் கலக்கிற புகர்முகத்தில் உண்டான முத்துக்குச் சௌர்ணேயம் என்று பெயர் உண்டாயிற்று என்று கருதலாம்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தவராகக் கருதப்படுகிற கவுடல்லியர் தமது அர்த்தசாஸ்திரத்திலே சேர நாட்டில் முத்து உண்டானதைக் கூறியுள்ளார். கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்தவராகக் கருதப்படுகிற கபிலரும், அரிசில் கிழாரும் சேர நாட்டில் பந்தர் என்னும் பட்டினத்தில் முத்துக் குளிக்கும் இடம் இருந்ததைப் பதிற்றுப்பத்தில் கூறியுள்ளனர். இவற்றிலிருந்து இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சேர நாட்டில் முத்துச் சலாபம் இருந்த செய்தி தெரிகிறது.
சேர நாட்டின் தலைநகரமாயிருந்த வஞ்சிமா நகரமும் (இதற்குக் கருவூர் என்றும் கரூர்ப்பட்டணம் என்றும் வேறு பெயர் உண்டு. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இப்போது இருக்கின்ற கருவூர் (கரூர்) அன்று கருவூர்ப்பட்டினமாகிய வஞ்சிமாநகரம்) சேர நாட்டின் துறைமுகப்பட்டினமாக இருந்த முசிறியும் கொடுமணம், பந்தர் என்னும் ஊர்களும் அடுத்தடுத்துக் கடற்கரை ஓரமாக இருந்தன. கொடுமணம் பந்தர் என்னும் ஊர்கள் வஞ்சிமா நகரத்துடன் இணைந்திருந்த ஊர்கள் என்று தெரிகின்றன. இந்தப் பட்டினங்களும் ஊர்களும் பிற்காலத்தில் மறைந்துவிட்டன. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, கி.பி. 1341-ல் பெய்த பெரு மழையினாலே, பெரியாறு வெள்ளம் தாங்கமாட்டாமல் கரைவழிந்தொடிப் பல இடங்களை அழித்துவிட்டது. அதனால், பழைய நில அமைப்புகள் மாறியும் அழிந்தும் போகப் புதிய காயல்களும் கழிகளும் தோன்றிவிட்டன.
சேர நாட்டின் தலைநகரமான பழைய வஞ்சி மூதூர் (கருவூர்), இப்போது கொடுங்ஙலூர் (ஆங்கிலத்தில் cranganur) என்னும் பெயருடன் ஒரு சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது. பழைய துறைமுகமாகிய முசிறி மறைந்து போயிற்று. பிற்காலத்தில் கடற்கரை ஓரமாகப் புதிதாக அமைந்த நீர்நிலைப் பகுதியில் இப்போது கொச்சி துறைமுகம் காட்சியளிக்கிறது. பழையன கழிந்து புதியன புகுந்தன. ஆனால், பழைய இலக்கியங்கள் பழைய சிறப்புக்களை நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன.
✽ ✽ ✽
- ↑ **தெ. பொ. மீ. மணிவிழா மலர். 1961.