மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/019

18. தமிழ் நாட்டில் யவனர்[1]

ஐரோப்பா கண்டத்தின் தென்பகுதியில், மத்தியதரைக் கடல் ஓரத்தில் கிரேக்க நாடு இருக்கிறது. கிரேக்க நாட்டுக் கிரேக்கர்கள் பண்டைக் காலத்திலே வீரத்திலும் பண்பாட்டிலும் கல்வியிலும் கலையிலும் சிறப்படைந்திருந்தார்கள். அவர்கள் வளர்த்த சிற்பக் கலைகள் (கட்டிடக் கலையும் உருவங்களை அமைக்கும் கலையும்) உலகப் புகழ்பெற்றவை. அதுபோலவே அவர்கள் மரக்கலம் அமைப்பதிலும் அவற்றைக் கடலில் ஓட்டிக் கப்பல் பிரயாணம் செய்வதிலும் பேர் பெற்றிருந்தார்கள்.

கிரேக்க நாட்டின் ஒரு பகுதிக்கு அயோனியா (Ionia) என்று பெயர். அயோனிய கிரேக்கருக்கு அயோனியர் என்று பெயர். அயோனியர், தமிழில் யவனர் என்று அழைக்கப்பட்டனர். ஆகவே யவனர் என்றார் கிரேக்கர் என்பது பொருளாகும். சுதந்தரமாக நல்வாழ்வு வாழ்ந்திருந்த யவனர்களாகிய கிரேக்கர்கள், பிற்காலத்தில், அவர்களுக்குப் பக்கத்து நாடாகிய இத்தாலி நாட்டுக்குக் கீழடங்கியிருந்தார்கள். இத்தாலி நாட்டின் உரோம சாம்ராச்சியம் ஒருகாலத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் மிகப் புகழ் பெற்றிருந்தது. கிரேக்கராகிய யவனர், உரோத சாம்ராச்சியத்திற்குக் கீழடங்கியபோதிலும், கல்வி, பண்பாடு, கலை முதலியவற்றில் முன்போலவே மேம்பட்டிருந்தார்கள். உரோமர்கள், கப்பல் படைகளை வைத்திருந்தது உண்மைதான். ஆனாலும், அவர்கள் கிரேக்கர்களாகிய யவனர்களைப் போலச் சிறந்த நாவிகர்கள் அல்லர். உரோம சாம்ராச்சிய காலத்திலும் யவனர்கள்தாம் கப்பல் வாணிகராகவும் நாவிகர்களாகவும் திகழ்ந்தார்கள்.

கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் கிரேக்க மன்னனான மகா அலக்சாந்தர் என்பவன் கிழக்கே சிந்துநதிக்கரை வரையில் உள்ள நாடுகளை வென்றான். அவன், எகிப்து தேசத்திலே நீலநதி மத்திய தரைக் கடலில் கலக்கிற இடத்திலே அலக்சாந்திரியம் என்னும் துறைமுகத்தை அமைத்தான். அந்தத் துறைமுகப்பட்டினம் பிற்காலத்தில் உலகப் புகழ் பெற்று விளங்கிற்று. கிரேக்கராகிய யவனர்கள், அலக்சாந்திரியத் துறைமுகப்பட்டினத்திலே குடியேறியிருந்தார்கள்.

.....ஆனால், பெரிய சாம்ராச்சியத்தை வைத்திருந்த உரோமர்கள் அராபியரின் வாணிகத்தைத் தடுத்துச் செங்கடல் துறைமுகங்களைக் கைப்பற்றித் தங்கள் ஆதிக்கத்தில் கீழ்க் கொண்டு வந்தார்கள். அதன் காரணமாக, உரோம சாம்ராச்சியத்திற்குக் கீழடங்கிய துறைமுகப் பட்டினங்களின் மேற்பார்வைக்காரர்களாகச் சில அலுவலாளர்களை நியமித்தார்கள். அவ் அலுவலாளர்கள் பெரும்பாலும் கிரேக்கராகிய யவனர்களாக இருந்தார்கள்.

யவனர்கள் ஆப்பிரிக்காக் கண்டத்திற்கும் அரபி தேசத்துக்கும் இடையில் உள்ள கடலை எரித்ரை கடல் (maris Ery thraei) என்று பெயரிட்டனர். எரித்ரை கடல் என்றால் செங்கடல் என்பது பொருள். பிறகு, யவனர்கள் அரபி நாட்டின் கடற்கரை ஓரமாகவும் பாரசீக வளைகுடாவின் கடற்கரை ஓரமாகவும் வந்தார்கள். பிறகு, இந்தியா தேசத்தின் மேற்குக் கரை ஓரமாக உள்ள துறைமுகப்பட்டினங்களுக்கு வந்தார்கள். அவர்கள் பாரசீக வளைகுடாவிற்கும், மேற்குக் கடலுக்கும் (அரபிக் கடல்) எரித்ரை கடல் (செங்கடல்) என்றே பெயரிட்டார்கள். அரபிக் கடலைக் கடந்து குமரிக் கடலுக்கும் (இந்து மகா சமுத்திரம்), கீழ்க்கடலுக்கும் (வங்காள விரிகுடா) வந்தார்கள். யவனர்கள் இந்தக் கடல்களுக்கும் எரித்ரை கடல் (செங்கடல்) என்றே பெயரிட்டழைத்தார்கள்.

அக்காலத்தில் யவனர்கள் கப்பல்களை நடுக்கடலில் ஓட்டிப் பிரயாணம் செய்யவில்லை; கரை ஓரமாகவே பிரயாணம் செய்தார்கள். கரை ஓரமாகக் கப்பல் பிரயாணம்...... நெடுங்காலம் ஆயிற்று.

ஆனால், இந்தியர்களும் அராபியரும் நடுக்கடலில் பாய் விரித்துக் கப்பல் ஓட்டிப் பிரயாணம் செய்தார்கள். இவர்கள் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கொண்டார்கள். பருவக் காற்றைப் பயன்படுத்திக் கப்பல்களை நடுக்கடலில் ஓட்டிப் பிரயாணத்தை விரைவாக முடித்துக்கொள்ளும் இரகசியத்தை யவனர்கள் ஆதிகாலத்தில் அறியவில்லை. ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில், இப்பலஸ் (Hippalus) என்னும் பெயருள்ள யவனக் கப்பல் நாவிகன், தென்மேற்குப் பருவக் காற்றின் உதவியினால் அரபிக்கடலின் நடுவில் பிரயாணம் செய்து வெகுவிரையில் சேரநாட்டுத் துறைமுகத்துக்கு வந்தான். அது முதல், யவனர்களும் நடுக்கடலில் கப்பல் பிரயாணம் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் பருவக்காற்றுக்கு இப்பலஸ் என்பவன் பெயரையே பெயராக வழங்கினார்கள். இப்பலஸ் பருவக் காற்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு யவன வியாபாரம் தமிழ்நாட்டுடன் அதிகமாவும் விரைவாகவும் நடைபெற்றது.

யவனர்கள் தமிழ்நாட்டுடன் கப்பல் வாணிகத் தொடர்பு கொண்டது கி.மு. முதல் நூற்றாண்டில். இந்த வியாபாரத் தொடர்பு கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் நீடித்திருந்தது. அதாவது, கடைச் சங்க காலத்தில், கிரேக்கராகிய யவனர் தமிழ் நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் சேர சோழ பாண்டிய நாடுகளில் அக்காலத்தில் இருந்த முக்கியமான துறைமுகப்பட்டினங்களில் வந்து வியாபாரம் செய்தார்கள். .............. மொழி தோன்றவில்லை. தமிழ் மொழி வழங்கிற்று. சேரநாட்டின் தலைநகரமாயிருந்த வஞ்சிப் பட்டினத்துக்கு அருகில் இருந்த முசிறிப்பட்டினம், தொண்டி, வக்கரை முதலிய துறைமுகங்களிலும், பாண்டி நாட்டுலிருந்த குமரித் துறைமுகம் கொற்கைத் துறைமுகம் முதலிய துறைமுகங்களிலும், சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினம் முதலிய துறைமுகங்களிலும், தொண்டை நாட்டுச் சேரபட்டினம் (மாவிலங்கை) முதலிய துறைமுகங்களிலும் யவனர்கள் கப்பலில் வந்து வியாபாரம் செய்தார்கள். தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள இலங்கையுடனும் வியாபாரம் செய்தார்கள்.

தமிழரின் கப்பல்களும், பாரத நாட்டு ஏனையோரின் கப்பல்களும், அராபியரின் கப்பல்களும் அக்காலத்தில் நடுக்கடலிலும் செல்லத்தக்க தரமுடையனவாக இருந்த போதிலும், அவை யவனருடைய கப்பல்களைப் போலச் சிறந்த வேலைப்பாடுடையவை யல்ல. யவனக் கப்பல்கள் நல்ல வேலைப்பாடும் உறுதியும் அழகும் உள்ளனவாக இருந்தன. யவனரின் நல்ல கப்பல்களைக் கண்ட சங்கப் புலவராகிய தாயங்கண்ணனார் என்னும் புலவர் “யவனர் தந்த வினை மாண் நன்கலம்” என்று புகழ்ந்திருக்கிறார் (புறம். 149). மற்றொரு சங்கப் புலவராகிய நக்கீரர் என்னும் புலவரும் “யவனர் நன்கலம்” என்று புகழ்ந்திருக்கிறார் (நெடுநல்வாடை).

யவனர்கள் தமிழ்நாட்டிலிருந்து முக்கியமாக மிளகு, முத்து, நவமணிகள், அகில், சந்தனக்கட்டை முதலிய பொருள்களையும், இலங்கையிலிருந்து இலவங்கம், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் முதலிய .................. மாற்று வியாபாரம் செய்யவில்லை. பொன்னைக் கொடுத்துப் பொருள்களை வாங்கிக்கொண்டு போனார்கள். இதனால் உரோமாபுரியிலிருந்து நாணயங்கள் நமது நாட்டில் குவிந்தன. உரோமாபுரியிலிருந்த அறிஞர்கள், தங்கள் நாட்டிலிருந்து வாணிகத்தின் மூலமாகத் தமது நாட்டுப் பொன் அயல் நாடுகளுக்குச் செல்வதைப் பற்றி அக்காலத்தில் முறையிட்டிருக்கிறார்கள். யவனர்கள் வியாபாரத்தின் பொருட்டுக் கொண்டுவந்த உரோம நாட்டு நாணயக் குவியல்கள், சமீப காலத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் இலங்கையிலும் பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன.

தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலே யவன வியாபாரிகள் தங்கியிருக்க விடுதிகள் இருந்தன. அன்றியும், யவன வீரர்கள் பாண்டியனுடைய மதுரைக் கோட்டை வாயில்களைக் காவல் காத்தனர் என்னும் செய்தியைச் சிலப்பதிகாரம், நெடுநல்வாடை முதலிய நூல்களிலிருந்து அறிகிறோம். சங்கச் செய்யுளில் காணப்படாத செய்தியொன்று அண்மைக் காலத்தில் தெரியவந்தது. அது, புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு என்னும் இடத்தில் யவனர்களின் பண்டகசாலை இருந்தது என்பதாகும். பிரெஞ்சு நாட்டுத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் தற்செயலாக அரிக்கமேட்டில் யவனர்களின் பண்டக சாலை இருந்ததைக் கண்டுபிடித்தார். பிறகு தொல்பொருள் துறை அதிகாரிகள் அந்த இடத்தை நன்கு தோண்டிப் பார்த்தனர். அங்கு யவனர்கள் வைத்திருந்த பீங்கான்களும் மட்கலங்களும், பிராமி எழுத்து எழுதப்பட்ட பானை ஓடுகளும் பிறபொருள்களும் காணப்பட்டன. இந்த .................... யவனர்களின் பண்டகசாலை இருந்த செய்தி அறியப்பட்டது.

(Arikamedu : An Indo-Roman Trading station on the east coast of India. P. 17- 24. Ancient India No.2)

அகஸ்தஸ் ஸீஸர் என்னும் உரோமச் சக்கரவர்த்தியின் பேரால், முசிறித் துறைமுகத்தின் அருகில் யவனர்கள் ஒரு கோயிலை அமைத்திருந்தார்கள். அந்தக் கோயிலும் முசிறித் துறைமுகமும், பெரியாற்று வெள்ளப்பெருக்கினால் அழிந்துவிட்டன. யவனர்களின் ஓதிம விளக்குகளும், பாவை விளக்குகளும் தமிழ்நாட்டுச் சீமான்களின் மாளிகைகளில் அக்காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட செய்தியைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிகிறோம்.

ஏறக்குறைய கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் யவனரின் தமிழ்நாட்டு வாணிகத் தொடர்பு நின்றுவிட்டது. கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில், ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளாக யவனர் தமிழ்நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த காரணத்தினாலே, யவன (கிரேக்க) மொழிச் சொற்கள் சில தமிழில் கலந்திருக்க வேண்டும். ஏனென்றால், ஒரு நாட்டார் மற்ற நாட்டாருடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்களின் மொழிச் சொற்கள் மற்ற மொழியுடன் மற்ற மொழியுடன் கலப்பது இயற்கை. இந்த இயற்கை, இறந்துபோய் வழக்கிலில்லாத மொழியைவிட, பேச்சு வழக்கில் உள்ள மொழிகளுக்கு மிகவும் பொருத்தமாகும். தமிழ் மொழியில் கலந்துள்ள கிரேக்க மொழிச் சொற்கள் எவை என்று இன்னும் நன்கு பேச்சு வழக்கில் கலந்த கிரேக்க மொழிச் சொற்கள் பல இருந்திருக்க வேண்டும். தமிழ் இலக்கியத்தில் கலந்துள்ள கிரேக்க மொழிச் சொற்கள் முழுவதும் ஆராயப்படவில்லை. இப்போது தெரிந்தவரையில், தமிழில் கலந்துள்ள கிரேக்க மொழிச் சொற்கள் இரண்டே. அவை மத்திகை, சுருங்கை என்பன. மத்திகை என்பது குதிரை ஓட்டும் சம்மட்டி (சவுக்கு) என்னும் பொருள் உள்ள யவன மொழிச் சொல். சுருங்கை என்பது நகரத்துக் கழிவுநீர் (சாக்கடை நீர்) போவதற்காகப் பூமியில் அமைக்கப்படுகிற கால்வாய் என்னும் பொருள் உள்ள யவன மொழிச் சொல். இவ் விரண்டு சொற்களும் சங்க காலத்துத் தமிழ் நூல்களிலும் பிற்காலத்துத் தமிழ் நூல்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

ஓரை என்னும் சொல்லும் ஹோரா என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தமிழ் மொழியில் புகுந்தது என்று சிலர் கருதுகிறார்கள். இது பற்றிக் கருத்து வேற்றுமை உண்டு. ஓரை என்னும் சொல், வட மொழியில் உள்ள யவனிகா என்னும் சொல்லைப் போல ஓசையினால் கிரேக்க மொழி போல மயங்கச் செய்கிற ஒரு சொல்லாகும். நாடக மேடைகளில் கட்டப்படுகிற திரைச்சீலைக்கு வடமொழியில் யவனிகா என்றுபெயர். யவன நாட்டிலிருந்து வந்த திரைச் சீலை யாகையால், இதற்கு யவனிகா என்று பெயர் வந்தது. பண்டைக் காலத்தில் யவனர்கள் (கிரேக்கர்கள்) தமது நாடக மேடைகளில் திரைச்சீலை உபயோகப்படுத்தவில்லை. திரைச்சீரை உபயோகப்படுத்தப்படாத நாட்டிலிருந்து திரைச்சீலை வடமொழியாளருக்கு வந்தது என்றால் அதை எப்படி நம்புவது? தமிழர் நாடக மேடைகளில் உபயோகித்து வந்த திரைச் சீலைக்கு எழினி என்பது பெயர். எழினி என்னும் சொல்லை வடமொழியாளர் உச்சரிக்க முடியாமல் அதை யவனிகா என்று உச்சரித்தனர் என்று தோன்றுகிறது. யவனர் என்னும் சொல்லும் யவனிகா என்னும் சொல்லும் ஓசையினால் ஒத்திருப்பதனால், யவனிகா என்பது கிரேக்க மொழிச் சொல் என்று மயங்குவதற்கு இடமாயிருப்பது போலவே, ஓரை என்னும் தமிழ்ச் சொல்லும் ஹோரா என்னும் கிரேக்க மொழிச் சொல்லுடன் ஓசையால் ஒத்திருப்பது கொண்டு அதனைச் சிலர் கிரேக்க மொழிச் சொல் என்று கருதுகிறார்கள். இதுபற்றி இப்போது ஆராய்ந்தால் இடம் பெருகும் என்னும் அச்சத்தினால் ஆராயாது விடுகிறோம்.

கடைச் சங்க காலத்தின் பிற்பகுதியிலே, ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளாக யவனர்கள் தமிழ்நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும், அவ்வாணிகத்தைக் கடல் வழியாகச் செய்தனர் என்பதும் இக்கட்டுரையினால் ஒருவாறு விளக்கப்பட்டன.



  1. கலைக்கதிர். பிப்ரவரி. 1961.