மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/001
பண்டைத் தமிழகம்
ஆவணம் - பிராமி எழுத்துகள்
- நடுகற்கள்
குறிப்பு: மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் (1981) என்னும் தலைப்பில் வெளியிட்ட நூல்.
பதிப்புரை
ஒரு நாட்டின் வரலாற்றினைச் செம்மையாக அறிந்து கொள்ள இன்றியமையாதது வேண்டப்படுவனவற்றுள் கல்வெட்டுக்கள் முதன்மையான இடம்பெறத் தக்கவை. ஏனெனில், ஏடுகள்மூலம் கிடைக்கும் சான்றுகளில் மிகைப்படுத்தப்பட்டனவும், மாறுபாடுடைய கருத்துக்களும் இடம் பெறக்கூடும்.
எனவேதான் இற்றை நாள் ஆராய்ச்சியாளர்கள் தம்முடைய ஆராய்ச்சிக்குக் கல்வெட்டுக்களின் துணையைச் சிறப்பாகக் கருதுகின்றனர். அங்ஙனமே தமிழ் இலக்கியம் பயில்வோர்க்கும் ‘கல்வெட்டு' ஒரு முதன்மையான பாடமாக வைக்கப்படுகின்றது.
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் என்னும் இவ்வாராய்ச்சி நூல், ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்டது. பிற கல்வெட்டாராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகளோடு ஒப்பிட்டு அவற்றுள் காணப்படும் குறைகளையும் நிறைகளையும் எடுத்து விளக்கும் இந் நூலாசிரியரின் ஆராய்ச்சித்திறம், ஆராய்ச்சி மாணவர்கட்குப் பெருந்துணை புரியவல்லது.
சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகள் பல்வேறு நூல்களில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றைப் பற்றிய கருத்துகளும் நூல்களிலும் கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகளிலும் பரவிக் கிடக்கின்றன. அவற்றைப் பற்றி ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்கட்கு அனைத்தையும் தேடிக் கண்டுபிடிப்பது கடினம். அந்த அரிய பணியை ஆய்வுப் பேரறிஞராகிய இந் நூலாசிரியர் இந்நூல் வழி எல்லாக் கல்வெட்டுக்களையும் மூல வரிவடிவத்துடன் கொடுத்து எளிமைப்படுத்தியுள்ளார். தமிழ்க் கல்வெட்டுக்களைப் பற்றி ஆயும் வரலாற்று மாணவர்கட்கும், தமிழ் வரி வடிவத்தினைப் பற்றி ஆயும் மொழியாராய்ச்சி மாணவர்கட்கும் இந் நூல் பெருந்துணையாக அமையும்.
இந்நூலை அச்சிடப் பெருந்துணையாயிருந்தவர் திரு. ஊ. ஜயராமன் அவர்கள். ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய அனைத்தையும் அச்சில் கொண்டுவர வேண்டுமென்று அவர் அரும்பாடுபட்டுவருகிறார். அங்ஙனமே இதனைக் கழகவழி வெளியிட இசைவளித்த நூலாசிரியரின் பேத்திமார் ம. அழகம்மாள், ம. அன்புமணி ஆகிய இருவர்க்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். பல கல்வெட்டுக்களின் மூலப்படியைப் படியெடுக்க உதவியவை South Indian Paleography, கல்வெட்டுக் கருத்தரங்கு ஆகிய நூல்களாகும். இரு கல்வெட்டுக்களின் மூலப்படியைப் பெற்றுத் தந்த திரு. கொடுமுடி சண்முகம் அவர்கட்கும் எம் நன்றி உரித்தாகுக.
ஆக்கியோர் மறைவுக்குப்பின் வெளிவரும் (Posthumous edition) இதனை, நூலகங்களும் ஆராய்ச்சி மாணவர்களும் வாங்கிப் பயன்படுத்துவதே இந் நூலாசியருக்குக் காட்டும் நன்றிக் கடனாகும்.
– சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்