மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/003

சங்க காலத்துப்
பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்

முன்னுரை

தமிழ்மொழி மிகப் பழைமையானது. மிகப் பழங்காலத்திலேயே தமிழர் தமிழை வளர்த்தனர். அவர்கள் தமிழ்நூல்களைச் சுவடிகளில் எழுதினார்கள். நூல்களை எழுதுவதற்கு எழுத்து வேண்டும். எழுத்துக்களையும் அமைத்து நூல் எழுதினார்கள். ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் நூல்கள் எழுதப்படுகின்றன. தமிழ் எழுத்துக்கள் காலத்துக்குக் காலம் மாறிமாறி வந்துள்ளன. எழுத்துக்களின் வரி வடிவம் மாறிக்கொண்டு இருந்தபடியால், பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்தின் வரிவடிவம் இன்னதென்று இப்போது தெரியவில்லை. பண்டைக் காலத்துத் தமிழ் எழுத்து மறைந்து போயிற்று.

கி.மு. 3ஆம் நூற்றாண்டில், அசோக மாமன்னர் பாரத நாட்டை அரசாண்ட காலத்தில், தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும், இலங்கையிலும், பௌத்த மதம் வந்து பரவிற்று. அசோக மாமன்னரின் பாட்டனான சந்திரகுப்த மௌரியன் ஆட்சிக் காலத்தில் சமண சமயம் தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும், வந்து பரவிற்று. சமணம், பௌத்தம், என்னும் இரண்டு மதங்களும் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர் அந்த மதங்களின் துறவிகளே. பௌத்த மதத்தோர்களும், சமண சமய முனிவர்களும், ஊர்களிலும், நகரங்களிலும், போய்த் தங்கள் தங்களுடைய மதங்களைப் பரப்பினார்கள். அசோக மாமன்னன் பொறித்துள்ள கல்வெட்டுக்களில் இரண்டு, மாமன்னனாகிய அவர் தமிழகத்திலும், இலங்கையிலும், பௌத்த மதப் பிக்குகளை அனுப்பித் தர்மவிஜயம் (அறவெற்றி) பெற்றதாகக் கூறுகின்றன. அஃதாவது, பௌத்த மதத்தைப் பரவச்செய்ததைக் கூறுகின்றன. அசோக மாமன்னருடைய இரண்டாம் எண்ணுள்ள பாறைக் கல்வெட்டும், பதின்மூன்றாம் எண்ணுள்ள பாறைக் கல்வெட்டும் இந்தச் செய்திகளைக் கூறுகின்றன. தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும் பௌத்தமதத்தைக் கொண்டுவந்து பரவச் செய்த பௌத்த பிக்குகள் பிராமி எழுத்தையுங் கொண்டுவந்து பரவச் செய்தார்கள். அந்தக் காலத்திலேயே சமண சமயத்தைப் பரப்பி வந்த ஆருகத மதத்து முனிவர்களும் பிராமி எழுத்தையும் பரப்பினர்.

தமிழகத்திலும், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பௌத்த சமண மதங்கள் விரைவாகப் பரவியதற்குக் காரணம் என்ன வென்றால், அந்த மதப் பரப்புநர்கள் அந்தந்த நாட்டுத் தாய் மொழியிலேயே தங்கள் மதங்களைப் பரப்பியதுதான். சமயப் பரப்புப்பணியை, நாட்டு மக்களுக்குத் தெரியாத மொழிகள்மூலம் செய்யக் கூடாது என்பதும், அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலேயே மதப் பரப்புதல் செய்ய வேண்டும் என்பதும் பௌத்த சமண சமயங்களின் முக்கியமான கொள்கை. ஆகவே, தமிழகத்துக்கு வந்து பௌத்த சமண சமயங்களைப் பரவச் செய்த தேரர்களும், முனிவர்களும், தங்கள் மதக் கொள்கைகளைப் பாலி, அர்த்தமாகதி (பிராகிருத) மொழிகள் வாயிலாக வளர்க்காமல், தமிழ்மொழி வாயிலாகவே வளர்த்தார்கள். ஆகவே, பௌத்த சமண சமயங்கள் அக்காலத்தில் தமிழகத்தில் விரைவாகப் பரவின.

பிராமி எழுத்து

ஆனால், அவர்களுடைய மத நூல்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருந்தபடியாலும், அந்த நூல்களில் எழுதப்பட்டிருந்த எழுத்து பிராமி எழுத்தாக இருந்தபடியாலும் அவர்கள் மூலமாகப் பிராமி எழுத்து தமிழகத்தில் நுழைந்தது. இவ்வாறு பௌத்த, சமண சமயங்களோடு பிராமி எழுத்தும் தமிழ் நாட்டில் கால் ஊன்றிது. இவ்வாறு கடைச்சங்க காலத்தில், கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிராமி எழுத்து புகுந்தது. அக்காலத்தில் வடஇந்தியா முழுவதும் பிராமி எழுத்து வழங்கி வந்தது. அந்தப் பிராமி எழுத்தைத்தான் அவர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வந்தார்கள்.

அவர்கள் வருவதற்கு முன்னே தமிழகத்தில் தமிழர் ஒருவகையான தமிழ் எழுத்தை எழுதி வந்தனர். அந்தத் தமிழ் எழுத்து, பிராமி எழுத்து வந்த உடனே மறைந்துவிடவில்லை. புதிதாக வந்த பிராமி எழுத்து தமிழகத்தில் பரவுவதற்குச் சில காலஞ் சென்றது. பிராமி எழுத்து தமிழகத்தில் பரவுவதற்கு ஒரு நூற்றாண்டாவது சென்றிருக்க வேண்டும். பௌத்த, சமண சமயங்களை வளர்த்த பௌத்த பிக்குகளும் சமண முனிவர்களும் தங்கியிருந்த இடங்களுக்குப் பள்ளி என்பது பெயர். அவர்கள், ஊர்ச் சிறுவர்களைத் தம்முடைய பள்ளிகளுக்கு அழைத்து அவர்களுக்குக் கல்வி கற்பித்தார்கள்; பள்ளிகளில் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்தபடியால் பாடசாலைகளுக்குப் ‘பள்ளிக்கூடம்’என்று புதிய பெயர் ஏற்பட்டது. அப்பெயர் இன்றளவும் வழங்கிவருகிறது. பள்ளிக்கூடங்களில் அவர்கள் பழைய தமிழ் எழுத்தைக் கற்பித்தார்கள். மத நூல்களைப் படிப்பதற்காகச் சிறுவர்களுக்குப் பிராமி எழுத்தையும் கற்பித்தார்கள். காலப் போக்கில் பழைய தமிழ் எழுத்து பையப்பைய மறைந்துபோய்ப் புதிய பிராமி எழுத்து பரவத்தொடங்கியது. பழைய தமிழ் எழுத்து மறைந்துவிடவே புதிய பிராமி எழுத்து நாட்டில் பயிலப்பட்டது. தமிழ்நூல்கள் பிராமி எழுத்தில் எழுதப்பட்டன. பிராமி எழுத்து கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வரையில் வழங்கிவந்தது.

வட்டெழுத்து

அதன் பிறகு பிராமி எழுத்து வரி வடிவத்தில் மாறுதல் அடையத் தொடங்கி வட்டெழுத்தாக உருவடைந்தது. பிராமி எழுத்து திரிபடைந்த உருவமே வட்டெழுத்தாகும். வட்டெழுத்து ஏறத்தாழ கி.பி.4ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.10ஆம் நூற்றாண்டுவரையில் தமிழகத்தில் வழங்கிற்று. அப்போது சுவடிகளும், கல்வெட்டுக்களும், வட்டெழுத்திலும் எழுதப்பட்டன. பல்லவ அரசர் காலத்தில் தொண்டை நாட்டிலும், சோழ நாட்டிலும், வடடெழுத்து மறைந்து வேறுவகையான பல்லவர் எழுத்து வழங்கிவந்தது. ஆனால், வட்டெழுத்து பாண்டி நாட்டிலும், சேர நாட்டிலும் தொடர்ந்து வழங்கி வந்தது. கி.பி.10ஆம் நூற்றாண்டில், சோழர், பாண்டியரை வென்று அரசாண்ட காலத்தில் பாண்டி நாட்டில் வழங்கிவந்த வட்டெழுத்தை மாற்றிச் சோழர் இக் காலத்துத் தமிழெழுத்தைப் புகுத்தினார்கள். ஆகவே, ஆகவே, 10ம் நூற்றாண்டுக்குப் பிறகு பாண்டி நாட்டில் வட்டெழுத்து மறைந்து போயிற்று. சேர நாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்து பிற்காலத்தில் மாறுதல் அடைந்து கோலெழுத்தாக உருவம் பெற்றது. அண்மைக் காலத்தில் கி.பி. 16ஆம் நூற்றாண்டில், மலையாள மொழியின் தந்தை என்று கூறப்படுகிற துஞ்சத்து இராமாநுசன் எழுத்தச்சன், கிரந்தஎழுத்திலிருந்து1 இப்போதைய மலையாள எழுத்தை உண்டாக்கினார். அதன் பிறகு மலையாள நாட்டில் கோலெழுத்தும் மறைந்து போயிற்று.

நான்குவகை எழுத்துக்கள்

தொடக்க காலத்திலிருந்து இன்று வரையில் தமிழர் நான்கு வகையான எழுத்துக்களை எழுதி வந்தனர் என்பதை அறிகிறோம். சங்ககாலத்தில் வழங்கிவந்த பழந்தமிழ் எழுத்து, பிறகு வந்த பிராமி எழுத்து, பிராமியிலிருந்து உருவம் பெற்ற வட்டெழுத்து, தற்காலச் சோழர் எழுத்து என்பவை அவை. பழந்தமிழ் எழுத்துச் சுவடிகளும், பிராமி எழுத்துச் சுவடிகளும், வட்டெழுத்துச் சுவடிகளும், இக்காலத்தில் அடியோடு மறைந்துபோய்விட்டன. ஏனென்றால் ஓலைச் சுவடிகள் இரண்டு நூற்றாண்டுக்கு மேல் நிலைத்திருப்பதில்லை. ஆகவே அந்த எழுத்துச் சுவடிகள் இப்போது முழுவதும் மறைந்து விட்டன. ஆனால் வட்டெழுத்தின் வரிவடிவம் இப்போதும் நமக்குக் கிடைத்திருக்கிறது. மலைக் குகைகளிலும், குன்றுப் பாறைகளிலும், செப்பேடுகளிலும், எழுதப்பட்ட வட்டெழுத்துச் சாசனங்கள் அழியாமல் கிடைத்துள்ளன. வட்டெழுத்துக்கு முன்பு வழங்கிவந்த பிராமி எழுத்துக்கு முன்பு வழங்கப்பட்ட பழைய தமிழ் எழுத்தின் வரிவடிவம் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. சங்ககாலத்தில் எழுதப்பட்ட பழைய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டால் ஒருவேளை அந் நடுகற்களின் பழைய தமிழ் எழுத்து வடிவத்தைக் காணக்கூடும். (இப்போது கிடைத்துள்ள நடுகற்கள் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நடுகற்கள்.)

பிராமி எழுத்தின் கரந்துறை வாழ்க்கை.(அஞ்ஞாதவாசம்)

நம்முடைய இப்போதைய ஆய்வு பிராமி எழுத்தைப்பற்றியதாதலால் இதைத் தொடர்ந்து ஆராய்வோம். தமிழகத்தில் வழங்கி வந்த பிராமி எழுத்து ஏறத்தாழ கி.பி. 3ஆம் நூற்றாண்டில் மறைந்துவிட்டது என்று கூறினோம். ஆனால் மலைக் குகைகளிலும், பாறைக் குன்றுகளிலும், அந்தக் காலத்தில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் அழியாமல் இன்றளவும் நிலைபெற்றிருக்கின்றன. பதினேழு நூற்றாண்டுகள் மறைந்து கிடந்த அந்த எழுத்துக்கள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. 1700 ஆண்டுகள் மறைந்து கிடந்த பிராமி எழுத்துக்கள், மலைக்குகைகளிலே ஒளிந்துகிடந்த அந்த எழுத்துக்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது வரையில் அவை மறக்கப்பட்டு மறைந்து கிடந்தன. மறக்கப்பட்டு மறைந்து கிடந்ததற்குக் காரணம், இடைக் காலத்திலே புதிய புதிய எழுத்துக்கள் தோன்றி வழங்கி வந்ததுதான்.

என்ன மொழி?

கி.பி. 4ஆம் நூற்றாண்டில் மறைந்துபோன பிராமி எழுத்து 20ஆம் நூற்றாண்டில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தைச் சேர்ந்த ஆங்கிலேயர் ஒருவர் 1906ஆம் ஆண்டு பாளையங்கோட்டைக்கு அடுத்த மருகால்தலை என்னும் ஊருக்குச் சென்றவர், அவ்வூருக்கு அருகில் உள்ள குன்றுகளுக்குச் சென்றார். அங்கு ஒரு குன்றில் இயற்கையாக அமைந்துள்ள குகையின் வாயிலின் அருகில் சென்ற போது குகைவாயிலின் மேற்பாறையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். பிறகு அவர், அந்த எழுத்துக்களைப் பற்றித் தொல்பொருள்-ஆய்வுத்துறை மேலாளருக்குத் தெரிவித்தார். தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலர் மருகால்தலைக் குன்றுக்குப் போய் அங்கிருந்த எழுத்துக்களைப் படிஎடுத்து வந்தனர். பிறகு இந்தச் செய்தியை 1907ஆம் ஆண்டு எபிகிராபி ஆண்டு அறிக்கையில் வெளியிட்டார்கள். இந்த எழுத்துக்களை அவர்கள் அப்போது படிக்கத் தெரியாமல் இருந்தார்கள். இந்தக் கல்வெட்டெழுத்து, பிராமி எழுத்தாக இருக்கிறபடியால் இந்தக் கல்வெட்டின் வாசகம் பாலி மொழியில் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். இதற்கு முன்பே வட இந்தியாவிலும், இலங்கையிலும், பிராமி எழுத்துச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அவை பாலி (பிராகிருத) மொழியில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள். மருகால் தலை பிராமி கவ்வெட்டும் பாலி மொழியில் எழுதப்பட்டதென்று அவர்கள் ஊகித்தார்கள். அவர்கள் தங்களுடைய அறிக்கையில் ‘அசோக மாமன்னருடைய சாசன எழுத்துக்களைப் போன்ற எழுத்தினால் இந்தப் பாலிமொழிச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது. பாலி மொழியில் எழுதப்பட்டிருக்கிறபடியால், அந்தப் பழங்காலத்தில் பாண்டி நாட்டில் பாலிமொழி தெரிந்திருந்தது என்பது தெரிகிறது” என்று எழுதினார்கள்.2 இது பிராமி எழுத்தினால் எழுதப்பட்ட தமிழ்மொழி வாசகம் என்பதை அறியாமல் அவர்கள் பாலி மொழி வாசகம் என்று கூறினார்கள்.

மருகால்தலை பிராமி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வேறு பல பிராமிக் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டிலும் மற்ற இடங்களிலும் புதியவாகப் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனைமலை, திருப்பரங்குன்றம், மாங்குளம் (அரிட்டாபட்டி), முத்துப்பட்டி, வரிச்சியூர், அழகர்மலை, கருங்காலக்குடி, கீழவளவு, மேட்டுப் பட்டி (சித்தர் மலை), விக்கிரமமங்கலம் (உண்டான் கல்லு), கொங்கர் புளியங்குளம், சித்தன்னவாசல், புகழூர், அரச்சலூர், மாமண்டூர், மாலகொண்டா முதலான இடங்களில் பழைய பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவ்வப் போது எபிகிராபி ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டன.

பிராமிக்கு முந்திய எழுத்து

தமிழ் இலக்கியங்களின் பழைமையை அறியாதவர்கள், தமிழ் இலக்கியங்கள் கி.பி, 8ஆம் நூற்றாண்டு, 10ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியவை என்று அக்காலத்தில் எழுதியும் பேசியும் வந்தனர். பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவர்கள் தங்களுடைய கருத்து தவறு என்பதைக் கண்டார்கள். பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிற்கும், கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தவை யாகையால், தமிழ் இலக்கியங்கள் அக்காலத்திலேயே தோன்றிவிட்டன என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், பிராமி எழுத்து தமிழகத்திற்கு வருவதற்கு முன்னமே வேறு தமிழ் எழுத்து இருந்தது எயும் அறியாமல் பிராமி எழுத்து தமிழகத்துக்கு வந்தபிறகுதான் தமிழருக்கு எழுத்து கிடைத்தது என்றும் பிராமி எழுத்தினால் அவர்கள் இலக்கியங்களை எழுதினார்கள் என்றும்; சிலர் சொல்லத் தொடங்கினார்கள். அஃதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழில் எழுத்தும் இல்லை; இலக்கியமும் இல்லை என்பது இவர்கள் கருத்து.

அரிட்டாபட்டி கழுகுமலைக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட கற்படுக்கைகள், பிராமி எழுத்துக்கள், இவற்றைப்பற்றி 1907 ஆம் ஆண்டு கல்வெட்டுத்துறை, இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்து. தமிழ் எழுத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றியும், வட்டெழுத்தின் தோற்றம் வளர்ச்சியைப் பற்றியும் விளக்கந் தருகிற அரிய சான்றாக இருக்கிறது என்று எழுதியமை முன்னமே காட்டினோம்.

'தமிழ் நாட்டின் தெற்கு வட்டாரங்களில் பாறைகளிலும், குகைகளிலும், எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் எழுதப்பட்டவை. அந்தக் கல்வெட்டுக்கள், தமிழ் எழுத்தும் தமிழ்மொழியும் உருவடைந்து கொண்டிருந்த காலத்தைத் தெரிவிக்கின்றன. தமிழரின் வட இந்தியக் கலாசாரத் தொடர்பு வளர்ச்சிக் காலத்தை இவை தெரிவிக்கின்றன' என்று திரு.கே.ஏ. நீலகண்ட சாத்திரி எழுதியுள்ளார்.3 (கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே பிராமி எழுத்தும் தமிழகம் வந்துவிட்டது. சாத்திரி கி.மு. முதல் நூற்றாண்டு என்று காலத்தைக் குறைத்துக் கூறுகிறார்.)

தமிழ்நாட்டு வரலாற்றைப் பொறுத்தவரையில் பல தவறான கருத்துக்களை வெளியிட்ட திரு. நீலகண்ட சாத்திரி பிராமி எழுத்தைப் பற்றியும் தவறாகக் கூறியுள்ளார்.

திரு. நீலகண்ட சாத்திரியின் இந்தத் தவறான கருத்தை ஐரோப்பியத் தமிழறிஞராகிய டாக்டர் கமல் சுவலபில் அவர்களும் ஆராயாமல் இவரைப் பின்பற்றுவது வியப்பாக இருக்கிறது. இந்த அறிஞர், சாத்திரி கூறிய தவறான கருத்தையே பொன்போலப் போற்றி எழுதியுள்ளார்.

அசோகருடைய காலத்தில் அல்லது அவருடைய காலத்துக் குச் சற்றுப் பிறகு தமிழ் எழுத்து தமிழருக்குத் தெரிந்திருந்தது. கி.மு. 2ஆம் நூற்றாண்டளவில் தமிழ் மொழிக்குத் தமிழ்-பிராமி எழுத்து அமைத்துக்கொள்ளப்பட்டது. அமைத்துக் கொண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு அவ்வெழுத்து இலக்கியம் எழுதப் பயன்படுத்தப் பட்டது என்னும் கருத்துப்பட டாக்டர் கமல் சுவலபில் எழுதுகிறார்.4 இந்தத் தவறான கருத்தையே அவர் மீண்டும் இன்னோர் இடத்தில் எழுதுகிறார்: கி.மு. 250ல் அல்லது அதற்குச் சற்றுப்பின்னர் அசோகன் (கி.மு. 272- 232) உடைய தெற்குப் பிராமி எழுத்து தமிழ் ஒலியமைதிக்குப் பொருந்தத் தமிழில் அமைத்துக் கொள்ளப்பட்டது. கி.மு. 200 - 100 க்கு இடையில் பௌத்த-சைனத் துறவிகள் இருந்த இயற்கைக் குகைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டன என்று கூறுகிறார்.5

இவை ஆழ்ந்து ஆராயாமல் மேற்போக்காகக் கூறப்படுகிற கருத்துக்கள். தமிழின் பழைமையை யறிந்தவர், பிராமி எழுத்து வருவதற்கு முன்பு தமிழில் எழுத்து இல்லை, நூல்கள் இல்லை என்று கூறமாட்டார். தொடக்கக்காலத்தில் தமிழில் ஏதோ ஒரு வகையான தமிழ் எழுத்து வழங்கி வந்தது. பிராமி எழுத்து தமிழகத்துக்குப் புதிதாக வந்த பிறகு, அதற்கு முன்பு வழங்கிவந்த பழைய தமிழ் எழுத்து மறைந்துபோய், பிராமி எழுத்து நிலைத்து விட்டது. ‘பழையன கழிதலும் புதியனபுகுதலும், வழுவல கால வகையினானே’ என்பது எழுத்து மாறுதலுக்கும் பொருந்தும். பழைய எழுத்தை மாற்றிப் புதிய எழுத்தை மேற்கொண்டதைத் துருக்கி நாட்டிலும் காண்கிறோம். துருக்கி மொழியின் பழைய எழுத்து அரபி எழுத்து. அரபி எழுத்தில் பழைய துருக்கி மொழி இலக்கியங்கள் எழுதப்பட்டன. அண்மைக் காலத்தில் துருக்கி நாட்டில் சீர்திருத்தங்களை உண்டாக்கிய துருக்கியின் தந்தை எனப்படும் ஆட்டா டர்க் என்பவர் பழைய அரபி எழுத்தை மாற்றிப் புதிதாக இலத்தீன் எழுத்தை (ஆங்கில எழுத்தை) அமைத்துவிட்டார். இப்போது துருக்கியர் துருக்கி மொழி இலக்கியங் களைப் புதிய இலத்தீன் எழுத்தினால் எழுதி வருகிறார்கள். இப்போது இலத்தீன் எழுத்தினால் எழுதி வருவதனால், இலத்தீன் எழுத்து தான் துருக்கி மொழியின் ஆதி எழுத்து, இலத்தீன் எழுத்து வந்த பிறகுதான் துருக்கி இலக்கியம் உண்டாயிற்று என்று கூறுவது பொருந்துமா? அப்படிக் கூறுவது தவறு அல்லவா? இதுபற்றி விரிவாக எழுதுவதற்கு இஃது இடம் அன்று.

பிராமி எழுத்து வந்தபிறகுதான் தமிழர் இலக்கியம் வளர்த்தனர் என்று இவர்கள் கூறுவது தவறு. பிராமி எழுத்து வருவதற்கு முன்பே கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ் இலக்கியங்களும், நூல்களும், எழுதப்பட்டிருந்தன. கி.மு. 8ஆம் நூற்றாண்டிலே தொல்காப்பியம் எழுதப்பட்டது. இவற்றையறியாமல் பிராமி எழுத்து வந்த பிறகுதான் தமிழில் இலக்கியம் தோன்றியது என்று இவர்கள் கூறுவது தவறு. பிராமி எழுத்து வருவதற்கு முன்பு பழைய தமிழ் எழுத்து தமிழகத்தில் வழங்கி வந்தது. பிராமி எழுத்து வந்த பிறகு பழைய தமிழ் எழுத்து மறைந்துவிட்டது என்பதுதான் தமிழின் பழைமைக்கும் வரலாற்றுக்கும் பொருத்தமானது.

வடக்குப் பிராமியும் தெற்கு பிராமியும்

பிராமி எழுத்து வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், அக்காலத்தில் வழங்கிவந்தது. ஆனால் தென்னிந்திய பிராமிக்கும், வட இந்திய பிராமிக்கும், வரி வடிவில் சிறு வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகளை யறியாத காலத்தில் இவை சரியாகப் படிக்கப்பவில்லை. பிறகு தென்னிந்திய பிராமி எழுத்தைச் சரியாகப் படிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஆந்திர நாட்டிலே கிருஷ்ணா வட்டாரத்தில் பட்டிப்ரோலு என்னும் ஊரில் பழங்காலப் பௌத்தத் தூபி ஒன்று உண்டு. அந்தத் தூபியைத் திறந்து தொல்பொருள் ஆய்வாளர் ஆராய்ந்து பார்த்தபோது அந்தத் தூபிக்குள் வட்ட வடிவமான கல் பேழை காணப்பட்டது. அந்தப் பேழையின் விளிம்பைச் சுற்றிலும் பிராமி எழுத்து வாசகம் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பிராமி எழுத்துக்கும் வட இந்தியப் பிராமி எழுத்துக்கும் சிறு வேற்றுமை காணப்பட்டது. பட்டிப்ரோலு பிராமி எழுத்து தென் இந்திய பிராமி எழுத்துக்களைச் சரியாகப் படிப்பதற்கு உதவியாக அமைந்தது. தென் இந்தியப் பிராமி எழுத்தைத் திராவிடி என்று கூறினார்கள். பட்டிப்ரோலு பிராமி எழுத்து எபிகிராபியா இண்டிகா என்னும் வெளியீட்டில் வெளியிடப்பட்டுள்ளது.6

தமிழ்நாட்டுப் பிராமி எழுத்துக்களில் தமிழுக்கே தனிச் சிறப்பாக உள்ள ழ, ற, ன என்னும் எழுத்துக்களும் காணப்படுகின்றன. இந்தச் சிறப்பு எழுத்துக்களைப் பிராமி எழுத்து வருவதற்கு முன்னே தமிழகத்தில் வழங்கிவந்த பழைய தமிழ் எழுத்திலிருந்து எடுத்துப் பிராமி எழுத்துக்களோடு அமைத்துக்கொண்டனர் என்று தோன்றுகிறது.

பிராமி எழுத்தின் ஒலி வடிவம்

பழங்காலத்தில் பாரத நாடு முழுவதும் வழங்கிவந்த பிராமி எழுத்து பிற்காலத்தில், வேறு எழுத்துக்கள் தோன்றிவிட்ட காரணத்தினால், மறக்கப்பட்டு மறைந்துபோயிற்று. நெடுங்காலத்துக்கு முன்பே பிராமி எழுத்துச் சுவடிகள் மறைந்துவிட்டன. ஆனால், மலைப் பாறைகளிலும் குகைகளிலும் எழுதி வைக்கப்பட்ட பிராமி எழுத்துச் சாசனங்கள் அழியாமல் வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் அங்கங்கே இருக்கின்றன. இவற்றையெல்லாம் தொல்பெருள் ஆய்வுத் துறையினர் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்தனர். பிராமி எழுத்தின் வரி வடிவங்களே காணப்பட்டவை யெல்லாம். அவற்றின் ஒலி வடிவங்கள் மறைந்துபோயின. அவற்றின் ஒலி வடிவங்கள் ஒருவருக்கும் தெரியவில்லை. அசோக மாமன்னரின் பிராமி எழுத்துக் கல்வெட்டுக் களும், மற்றும் வேறு பல பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும், அவ்வெழுத்துக்களின் ஒலி வடிவம் தெரியாதபடியால், படிக்கப் படாமலே கிடந்தன. இந்தக் கல்வெட்டுக்களைப் படிக்க, திறவுகோல் கிடைக்காமல் இருந்தது.

கடைசியாக கி.பி. 18ஆம் நூற்றாண்டில் பிரின்ஸிப் என்னும் பெயருள்ள ஆங்கிலேயர் பல காலம் முயன்று பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களைப் படித்துத் திறவுகோலைக் கண்டுபிடித்தார். அஃதாவது பிராமி எழுத்தில் மறைந்துபோன ஒலி வடிவத்தைக் கண்டுபிடித்தார். அக்காலத்தில் ஆங்கிலேய தளபதிக்கு அங்குப் பழங்காசுகள் கிடைத்தன. அந்தக் காசுகளை அவர் வங்காள நாட்டுக்கு அனுப்பினார். பழம் பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பிரின்ஸிப் அந்தப் பழங்காசுகளை ஆராய்ந்தார். அந்தப் பழங்காசுகள் சிலவற்றில் அசோக மன்னர்காலத்து எழுத்துக்கள் (பிராமி எழுத்துக்கள்) பொறிக்கப்பட்டிருந்தன. அக் காசுகளின் மறுபக்கத்தில் பழைய கிரேக்க எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருந்தன. கிரேக்க எழுத்துச் சொற்களே பிராமி எழுத்திலும் எழுதப்பட்டிருந்தது என்பதை யறிந்த இவர் கிரேக்க ஒலியைக் கொண்டு பிராமி எழுத்துக்களின் ஒலியைக் கண்டுபிடித்தார். இப்படிப் பல காலம் உழைத்ததன் விளைவாகப் பழைய பிராமி எழுத்துக்களின் மறைந்துபோன ஒலி வடிவத்தைக் கண்டறிந்தார். பிராமி எழுத்தின் வரி வடிவத்துக்கு ஒலி வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதனால், பழைய பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டன. பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த பிராமி எழுத்து வாசகம் 18ஆம் நூற்றாண்டில் படிக்கப்பட்டது.

தமிழ்ப் பிராமியின் வாசகம்

1906ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது தமிழ்நாட்டில் ஆங்காங்கிருந்த பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அந்த எழுத்துக்கள் நெடுங்காலம் படிக்கப்படவில்லை. பழம்பொருள் ஆய்வுத் துறையினர், இவ்வெழுத்துக்கள் பாலி மொழி அல்லது பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருப்பதாகக் கருதினார்கள். இந்தக் கருத்து பல ஆண்டுகள் நிலவியிருந்தது. இந்தப் பிராமி எழுத்துக்கள் தமிழ்மொழியில் எழுதப்பட்டன என்பதைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அறிந்தனர். பிறகு இவ்வெழுத்துக்களைப் படித்த சிலர் தமிழராக இருந்தும் இக் கல்வெட்டுகளின் கருத்தைச் சரியாக அறியவில்லை. காரணம் என்னவென்றால், இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட காலத்தில் (கடைச் சங்க காலத்தில்), தமிழ்நாட்டில் இருந்த இலக்கியங்களையும், பழக்க வழக்கங்களையும், நாகரிகங்களையும், அறியாதது தான். மற்றும், வட இந்திய (ஆரிய) தொடர்புகளை இந்தக் கல்வெட்டுக்களோடு இணைக்க வேண்டும் என்னும் கருத்துடன் இவர்கள் ஆராய்ந்தனர். இதனால் இவர்களுடைய ஆராய்ச்சிகள் பிழைபட்டுள்ளன. அவர்கள் வெவ்வேறு கருத்துக்களை வெளி யிட்டனர். தவறு இல்லாமல் சரியாக வாசிக்கப்பட்ட வாசகங்கள் மிகச் சிலவே.

வடமொழி வெறி

தமிழ்நாட்டிலுள்ள பிராமி எழுத்துச் சல்வெட்டுக்களை ஆராய்ந்து படித்துக் பொருள் காண்பவர் நடுநிலையுள்ளவராக இருக்கவேண்டும். அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட காலத்துப் பழக்க வழக்கம் முதலியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். விருப்பு வெறுப்பு இல்லாமல் உண்மை காணும் கருத்து உள்ளவராகவும், நேர்மையாளராகவும் இருக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வெறுப்பு உணர்வு உள்ளவராக இருத்தல் கூடாது.

தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்த ஒருவர் அளவுகடந்த சமற்கிருத வெறியுள்ளவராக இருக்கிறார். அதுபற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் அவர் தமிழ்மொழிமீதும் தமிழர் மீதும் வெறுப்புள்ளவராகவும், தவறான எண்ணமுள்ளவராகவும் இருக்கிறார். அவர் அவற்றைத் தம் இடத்திலேயே வைத்துக் காண்டால் தவறு இல்லை. ஆனால் தமிழ் மொழியைப்பற்றித் தாக்கி எழுதியிருக்கிறார். ஆகவே அதை இங்கு எடுத்துக்காட்ட வேண்டியிருக்கிறது. திரு.சி. கிருட்டிணராவ் என்பவர் வெறுப்புணர்வுடன் எழுதியுள்ளதை இங்குக் காட்டவேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்களை முதல் முதலாகப் படித்தவர் எபிகிராபி இலாகாவில் இருந்த ராவ்சாகிப் எச். கிருட்டிண சாத்திரியும், திரு.கே.வி. சுப்பிரமணிய அய்யரும் ஆவர். இவர்கள் தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களை சமற்கிருத- பிராகிருத மொழிக் கண்ணோட்டத்தோடு படித்து அரைகுறையான கருத்துக்களைக் கூறினார்கள். இவர்கள் தங்கள் ஆராய்ச்சியில், இந்தக் கல்வெட்டுக்களில் தமிழ்ச் சொற்களும் இருக்கின்றன என்று கூறினார்கள். இவர்களுக்குப் பிறகு இந்தக் கல்வெட்டெழுத்துக்களை ஆராய்ந்த நாராயண ராவ், இவர்கள் கூறியதை முழுவதும் மறுத்துக் கல்வெட்டுக்களுக்குத் தொடர்பில்லாதவற்றைக் கூறித் தமக்குள்ள தமிழ் வெறுப்பையும் சமற்கிருத வெறியையும் காட்டியுள்ளார். இவர் எழுதியுள்ள தன் சுருக்கம் இது:

எபிகிராபி இலாகாவிலிருந்த ராவ் சாகிப்,எச். கிருட்டிண சாத்திரி 1919ஆம் ஆண்டில் புனாவில் நடைபெற்ற அகில இந்திய முதலாவது ஓரியண்டல் மாநாட்டில், தமிழ்நாட்டுப் பிராமி கல் வெட்டெழுத்துக்களைப் பற்றி ஒரு கட்டுரை படித்தார். திரு.கே.வி. சுப்பிரமணிய அய்யர் 1924ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் அதே பொருள் பற்றி ஒரு கட்டுரை படித்தார். இந்த இரண்டு கட்டுரைகளும் இந்தப் பிராமி எழுத்துக்களின் பொருளை ஒருவாறு கூற முயன்றுள்ளன. இவர்களுடைய இந்த முயற்சிகள் இரண்டு வகையான கேடுகளுக்குக் காரணமாக உள்ளன. 1. இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களிலே, வேறு பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் காணப்படாத எழுத்துக்கள் காணப்படுவதால், அந்த எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்க முடியாதது ஒன்று. 2. இவர்கள் இருவரும் இந்தக் கல்வெட்டுக்களில் சில தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்பதை ஒத்துக்கொண்டிருப்பது இன்னொன்று.

திரு. சுப்பிரமணிய அய்யர், இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் தமிழ்மொழியில் எழுதப்பட்டவை என்று முன்னமேயே முடிவு செய்துகொண்டு இக்கல்வெட்டுக்களில் உள்ள சில எழுத்துக்களுக்கு முன்பின் அறியாத ஒலிகளைக் கற்பித்துக்கொண்டு படித்து அதிகக் குழப்பத்தை உண்டாக்கிவிட்டார். இந்தக் பிராமி சொற்றொடர்களைத் தமிழ்மொழிச் சொற்றொடர்கள்தாம் என்று நிலை நிறுத்தமுடியாத இவருடைய கற்பனைகள், இவரை இவைபற்றி ஆராய்ச்சி செய்யத்தூண்டி, இவருடைய கருத்துக்களுக்கு ஒப்பப் பல வகையான மாற்றங்களைச் செய்துவிட்டது. கிருட்டிண சாத்திரியும் கூட இவை தமிழ்மொழிக் கல்வெட்டுகள் என்பதை ஒப்புக்கொண்டு இவற்றில் தமிழ்ச் சொற்களையும் பிராகிருத மொழிச் சொற்களையும் கலந்து வாசகங்களைத் தாறுமாறாக்கிவிட்டார்.

இந்தக் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை என்று எனக்குத் தோன்றுகிறது. மிகப் பழைய காலமாகிய கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவற்றைத் தமிழ்மொழி என்று கூறித் தமிழுக்குப் பழைமை கொடுப்பது கூடாது. கி.மு. 3ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களைத் தற்கால தமிழுடன் பொருத்தி உருமாற்றுவது விழிப்புணர்வு இன்றித் தவறான வழியில் செலுத்துவதாகும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கல்வெட்டுக்களைப் படித்த கிருட்டிண சாத்திரி, சுப்பிரமணிய அய்யர் போன்றவர்களே அதிகமாக மாறுபடுகிற போது நான் மட்டும் சரியாகப் படித்துப் பொருள் காண்பேன் என்று நான் சொல்லவில்லை. அப்படிக் கூறுவது அறியாமையாகும். இந்தக் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டிருப்பதனாலும், ஏனைய (வடநாட்டுப்) பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருப்பதனாலும், இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவையே என்று கருதி இவற்றிற்குப் பொருள் காண முயல்கிறேன்.

இந்தக் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ளன என்பதை நினைவில் வைக்க வேண்டும். இதுவரையில் கண்டு பிடிக்கப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம் பிராகிருத மொழியில்தான் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் இரண்டொரு எழுத்துக்கள் தவிர மற்ற எழுத்துக்கள் எல்லாம் தெளிவாகத் தெரிகின்றன. இவற்றைக் கிருட்டிணசாத்திரி திறமையாகப் படித்திருக்கிறார். இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் புதுமையாகக் காணப்படுகிற இரண்டொரு எழுத்துக்களைக் கொண்டு இந்தக் கல்வெட்டுக்கள் பிராகிருதம் அல்லாத மொழி (தமிழ்மொழி) என்று கருதுவது கூடாது. இந்தப் பிராமிக் கல்வெட்டுக்களில், ஏனைய பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் காணப்படாத எழுத்துக்கள் காணப்படுகின்றன. சில எழுத்துக்கள் வியப்பான புதிய உருவத்தைப் பெற்றுள்ளன.

இந்தக் கல்வெட்டுக்களின் வியப்பான அமைப்பு என்னவென்றால், இவை பிராகிருத மொழியைச் சேர்ந்த பைசாச மொழி என்பதே. பிராகிருத மொழி இலக்கண் ஆசிரியர் கருத்துப்படி, பாண்டி நாட்டிலே பேசப்பட்ட மொழி பைசாச மொழியாகும். அவர்களுடைய இந்தக் கருத்தை இந்தக் கல்வெட்டுக்கள் மிகப் பொருத்தமாக உறுதிப்படுத்துகின்றன.

இவ்வாறு திரு.நாராயண ராவ் தமக்குள்ள அளவு கடந்த தமிழ் வெறுப்பினையும், அளவு கடந்த சமற்கிருத வெறியையும் வெளிப்படையாகக் காட்டியுள்ளார்7 இந்தச் சமற்கிருத வெறியருடைய கோமாளித்தனமான ஆராய்ச்சியை, பிராமி எழுத்து ஆராய்ச்சியில் பிறகு பார்ப்போம்.

இந்தியாவில் வழங்கி வருகிற மொழிகளில் தமிழ்மொழி மிகப் பழைமையானது என்பதையும் அது சமற்கிருதத்தைவிடத் தொன்மையானது என்பதையும் செம்மை மனம் படைத்த அவர்கள் அறிவார்கள். வெறுப்பும், மொழிவெறியுங் கொண்ட நாராயணராவ் போன்றவர்கள் உண்மையை அறியமாட்டார்கள்.

என்ன மொழி?

தமிழ்நாட்டுப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டபோது, கல்வெட்டு ஆராய்ச்சிக்காரருக்குக் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. இலங்கையிலும், வடஇந்தியாவிலும் காணப்படுகிற பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருக்கிறபடியால், தமிழ்நாட்டில் காணப்படுகிற பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். அவ்வாறே கல்வெட்டு இலாகா ஆண்டு அறிக்கையிலும் இவை பாலி மொழியில் எழுதப்பட்டவை என்று எழுதினார்கள். ஆனால் படிக்க முயன்றபோது பிராகிருத மொழிக்கு மாறுபாடான வாக்கியங்களும், சொற்களும் காணப்பட்டன. கடைசியில் இந்த எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளது தமிழ் மொழி என்று அறிந்தனர். ஆனால், பாலி, அர்த்தமாகதி போன்ற பிராகிருத மொழிச் சொற்களும் இக்கல்வெட்டுக்களின் இடையிடையே காணப்படுகின்றன. இந்தச் சொற்களைச் சமற்கிருத மொழிச் சொற்கள் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் அவர்களுடைய கருத்து தவறானது. அவை சமற்கிருத மொழிச் சொற்கள் அல்ல; பிராகிருத மொழிச் சொற்கள். இந்தக் கல்வெட்டெழுத்துக்களை எழுதியவர் பௌத்த சைன சமயத்தவர். இவர்கள் பிராகிருத மொழியைப் பயின்றவர். ஆகவே இந்தக் கல்வெட்டு வாக்கியங்களில் பிராகிருத மொழிச் சொற்களைச் சேர்த்து எழுதினார்கள். சங்க காலத்திலே தமிழில் வட இந்திய மொழியான பிராகிருதச் சொற்களே முதலில் கலந்தன. ஏனென்றால், பிராகிருத மொழியைப் பயின்றவர் பௌத்த சமண சமயத்தார்களே. தமிழ்நாட்டில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம் தமிழ்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அவை கடைச்சங்க காலத்தில் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. அவை பிராகிரு மொழி பயின்ற பௌத்த சமணர்களால் எழுதப்பட்டவையாகையால் இத்தமிழ் மொழித் தொடரின் இடையிடையே பிராகிரு மொழிச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. பிராகிருத மொழிச் சொற்கள் கலவாத தமிழ் மொழித் தொடர்களும் இந்தக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

இடர்ப்பாடுகள்

பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களைப் படிப்பதில் இடர்ப் பாடுகள் உள்ளன. இவ்வெழுத்துக்கள் கற்பாறைகளில் எழுதப்பட்டுள்ள படியால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த எழுத்துக்கள் காலப் பழைமையினாலுந் தட்பவெப்பக் கால நிலைகளினாலும் தேய்ந்தும், மழுங்கியும், உருமாறியும், உள்ளன. கற்பாறைகளில் உள்ள கீறல், பிளவு, வெடிப்பு, புள்ளி புரைசல்கள் முதலானவற்றினால் கல்வெட்டெழுத்துக்களின் சரியான வடிவம் தெரிவதில்லை. சில இடங்களிலே இன்ன எழுத்துதான் என்று அறிய முடியாதபடி சிதைந்துள்ளன. அவற்றின் சரியான வடிவத்தைக் கண்டுபிடித்துப் படிப்பது சங்கடமாக இருக்கிறது.

எழுத்தைப் பொறித்த கற்றச்சர் சில சமயங்களில் இடையே எழுத்துக்களைப் பொறிக்காமல் விட்டுவிடுவதும் உண்டு. இந்தப் பிழை பெரும்பாலும் ஒற்றெழுத்து இரட்டித்து வரும் இடங்களில் காணப்படுகின்றது. பளி, கொடுபிதவன், குறு, குன்றது, தசன், உபு, இயகன் என்று இடமறிந்து படிக்க வேண்டும்.

புள்ளி இடப்பட வேண்டிய எழுத்துக்கள் பெரும்பாலும் புள்ளி இல்லாமலே பொறிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறுகிறோம். பெருங்கடுங்கொன, தமமம, அதிட்டானம், கிரன, ஊர, ஆதன என்று பொறிக்கப்பட்டிருக்கும். இவற்றைப் புள்ளியிட்டு முறையே பெருங்கடுங்கோன், தம்மம், அதிட்டானம், கீரன், ஊர், ஆதன் என்று படிக்க வேண்டும்.

இகர ஈற்றுச் சொற்களும் ஐகார ஈற்றுச் சொற்களும் சில இடங்களில் யகரமெய் சேர்த்து எழுதப்பட்டுள்ளன. மனிய், ஆந்தைய், மதிரைய், கனிய், பாளிய், வழுத்திய் என்று எழுதப் பட்டவை முறையே மனி, ஆந்தை, மதிரை, கனி, பாளி, வழுத்தி என்று படிக்கப்பட வேண்டும். சில இடங்களில் இகர ஈற்றுச் சொற்களின் கடைசியில் இகரமும் யகர மெய்யும் சேர்த்து எழுதப்பட்டிருப்பதும் உண்டு. நெல்வெளிஇய், பாளிஇய் என்பனவற்றை நெல்வெளி,பாளி என்று படிக்கவேண்டும். இவ்வாறு எழுதுவது அக்காலத்து முறை.

குறியீடுகள்

பிராமி எழுத்து வாக்கியங்களின் இறுதியில் சில குறிகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. கொங்கர் புளியங்குளம், அழகர் மலை இவ்விரண்டு இடங்களில் உள்ள பிராமி எழுத்துச் சொற்றொடர்களின் கடைசியில் இக்குறிகள் காணப்படுகின்றன. மற்ற இடங்களில் இக்குறிகள் காணப்படவில்லை. அந்தக் குறிகள் இவை.

இந்தக் குறியீடுகளும் வேறுசில குறியீடுகளும் இலங்கையில் உள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன.

இந்தக் குறியீடுகள், வாக்கியத்தின் முடிவைக் காட்டுகின்றன என்று அறிஞர் சிலர் கருதுகிறார்கள். கிருட்டிணசாத்திரி, கே.வி.சுப்பிரமணிய அய்யர், ஐ.மகாதேவன், டி.வி. மகாலிங்கம் ஆகியோர் இவ்வாறு கருதுகின்றனர். இவர்களுடைய கருத்து தவறானது என்று தோன்றுகிறது. இந்தக் குறிகள் வேறு ஏதோ பொருளைத் தெரிவிக்கின்றன.

卐 இந்தக் குறியை சுவஸ்திகம் என்றும் இது மங்கலத்தைக் குறிக்கிறது என்றும் திரு.கிருட்டிணசாத்திரி கருதுகிறார். இவர் கூறுவது தவறு என்று தோன்றுகிறது. சுவஸ்திகத்தின் குறி 卐 இப்படி இருக்கும். நாற் சதுரமாக அமைந்த குறி வேறு எதையோ குறிக்கிறது என்று தோன்றுகிறது.

மேலே காட்டப்பட்ட குறிகள் ஏதோ எண்ணின் அளவை (பொன் அல்லது நாணயத்தின் மதிப்பைத்) தெரிவிக்கின்றன என்று தோன்றுகிறது. கொங்கர் புளியங்குளத்துக் கல்வெட்டில்,

‘பாகலூர் போத்தன் பிட்டன் ஈந்தவை பொன்’
‘குட்டு கொடங்கு ஈத்தவன் சிறு ஆதன் பொன்’

என்று எழுதப்பட்டுள்ளன. இந்தச் சொற்றோடர்களின் இறுதியில் உள்ள குறிகள், இவர்கள் செலவு செய்த பொன்னின் மதிப்பைத் தெரிவிக்கின்றன என்பது இந்தக் குறியீடுகளின் முன் உள்ள ‘பொன்’ என்னும் சொல்லினால் அறிகிறோம். எனவே இந்த அடையாளங்கள் இவர்கள் இக்குகைகளில் கற்படுக்கைகளை அமைப்பதற்குச் செலவு செய்த பொன்னின் அளவை (மதிப்பைத்) தெரிவிக்கின்றன என்பது ஐயமில்லாமல் தெரிகிறது.

அழகர் மலைப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களிலும் குறியீடுகள் காணப்படுகின்றன. ஆனால், குறியீடுகளின் முன்பு 'பொன்' என்னும் சொல் இல்லை. இல்லாமற்போனாலும் இக்குறியீடுகள் செலவு செய்யப்பட்ட பொன்னின் மதிப்பைக் குறிக்கின்றன என்று கருதலாம். அக்குறியீடுகள் இவை:

‘மதுரை பொன் கொல்லன் ஆதன் ஆதன்'

‘மதுரை உப்பு வாணிகன்’

‘பணித வாணிகன் நெடுமூலன்'

‘அணிகன்’

'கொழுவாணிகன் இளஞ்சேந்தன்’

இந்தப் பெயர்களின் இறுதியில் உள்ள குறியீடுகள் இப்பெயருள்ளவர் இக்குகையில் கற்படுக்கைகளை அமைப்பதற்காகச் செலவு செய்த தொகையைக் குறிக்கின்றன என்பது நன்றாகத் தெரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிவந்த இந்தக் குறியீடுகள் குறிப்பிடுகிற பொன்னின் அளவு (மதிப்பு) இன்னதென்று இப்போது தெரியவில்லை.

கற்படுக்கைகள் ஏன்?

அந்தப் பழங்காலத்திலே பௌத்த சமயத்துத் தேரர்களும், சைன சமயத்துத் துறவிகளும், ஊர்களில் தங்காமல் ஊருக்கப்பால் காடுகளில், மலைக்குகைகளில் இருந்து தவம் செய்தார்கள். பாயில் படுக்காமல் தரையில் படுப்பது அவர்களுடைய நோன்பு. அவர்கள் இருந்த குகைகளின் கற்றரைகள் இயற்கையாகக் கரடுமுரடாகவும் மேடுபள்ளமாகவும் இருந்தன. ஆகவே, அவர்களுடைய சாவகர்கள் (சாவகர் சிராவக இல்லறத்தார்) கற்றரைகளைச் சமப்படுத்திச் செம்மையாக்கி வழவழப்புள்ள கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தார்கள்.

மழை பெய்தால் பாறைகளின் மேலிருந்து வழிந்து வருகிற மழைநீர், குகை வாயிலின் மேற்பாறை வழியாக விழுந்து குகையின் உட்புறத்தை நனைத்து ஈரமாக்கிவிடும். குகை வாயிலின் மேற்புறப் பாறையிலிருந்து விழுகிற நீர் காற்றினால் உந்தப்பட்டுக் குகை முழுவதும் பாய்ந்து நனைத்துவிடும். அதனால் குகைக்குள் இருக்கும் துறவிகளின் உடம்பு நனைந்து ஈரமாக்கிக் குளிரும் காய்ச்சலும் ஏற்படும். இவ்வாறு நேராதபடி, குகை வாயிலின் மேற்பாறையிலிருந்து மழைநீர் வாயிற்புறத்தில் விழாதபடி தடுத்து மழைநீர் பாறைகளின் இரு புறமும் பக்கவாட்டமாக வழிந்து போகும்படி உளியினால் மேற்புறப் பாறையைச் செதுக்கித் தூம்புபோல அமைத்தனர். இவற்றை யெல்லாம் கற்றச்சரைக் கொண்டு செய்விக்கவேண்டும். கற்றச்சருக்குக் கூலியாகப் பொருள் தர வேண்டும்.

பொருள் செலவு செய்து மலைக்குகைகளில் கற்படுக்கைகளை அமைத்தும் மழைநீர் உள்ளே விழாதபடி தடுத்துப் பக்கங்களில் வழிந்து போகும்படி தூம்புகளைச் செதுக்கியும் கொடுத்தனர். தாங்கள் அளித்த கொடைகளைப் பற்றி ஏடுகளில் தங்கள் பெயர்களை எழுதிவைப்பது உலக இயற்கை. இவற்றை அமைத்துக் கொடுத்தவர் தங்கள் பெயர்களைக் கற்படுக்கைகளிலும், குகைவாயில்களின் மேலும் செதுக்கிவைத்தனர். குகைகளில் இருந்த துறவிகள் பௌத்த-சைன மதத்தவர் ஆகையாலும் அவர்களுக்காகப் படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவரும் அந்த மதங்களைச் சேர்ந்தவர் ஆகையினாலும் அந்த மதத்தார் கையாண்டு வந்த பிராமி எழுத்தினால் இதை எழுதி வைத்தார்கள். (சைவ வைணவ மதத்துத் துறவிகள் காடுகளிலும் குகைகளிலும் வசிக்கவில்லை. ஆகவே அவர்களுக்குக் குகைகளில் கற்படுக்கைகள் அமைக்கப்படவில்லை.)

சங்கச் செய்யுட்கள் ஏன் கூறவில்லை?

கடைச் சங்க காலத்திலே (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையில் எழுதப்பட்ட சங்கச் செய்யுட்களிலே இந்தக் குகைகளைப் பற்றியும் இங்கு இருந்த முனிவர்களைப் பற்றியும் ஏன் கூறப்படவில்லை என்று கேள்வி எழுகிறது. சங்கச் செய்யுட்களை எழுதினவர் பெரும்பாலும் பௌத்த-சமணர் அல்லாத சைவ-வைணவர்கள். மேலும் அவர்கள் அகப்பொருள் புறப்பொருள்களைப் பற்றி, செய்யுட்களைச் செய்தனர். காதலையும், வீரத்தையும் பற்றிப் பாடின செய்யுட்களில் துறவிகள் (சமண பௌத்தத் துறவிகள்) இடம்பெற வேண்டிய வாய்ப்பு இல்லை. ஆகவே இவற்றைப் பற்றிய செய்திகள் சங்கச் செய்யுட்களில் இடம் பெறவில்லை.

ஆனால், சங்கச் செய்யுட்களிலே காடுகளில் குகைகளில் வசித்த முனிவர்களைப் பற்றிய குறிப்புகள் குறிப்பாகக் காணப்படுகின்றன. சல்லியங்குமரனார் நற்றிணை 141ஆம் செய்யுளில் ‘குன்றுறை தவசியரை’க் குறிப்பிடுகிறார்.8

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், சமண மதத்துத் துறவிகள் மலைப்பக்கங்களில் இருந்ததைக் குறிப்பாகக் கூறுகிறார்.9

கலித்தெகை மருதக்கலி 28ஆம் செய்யுள் ‘கடவுட்பாட்டு‘ என்று கூறப்படுகிறது. (கடவுள்-முனிவர், துறவிகள்). இந்தச் செய்யுளிலும் சமண சமயத்துத் துறவிகள் மலையில் இருந்தது குறிப்பாகக் கூறப்படுகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சமண சமயத் துறவிகள் மலைகளில் இருந்து தவஞ் செய்தனர். இதைத் திருஞான சம்பந்தர் ’ஆனைமாமலை ஆதியாய இடங்களில்' சமண சமயத் துறவிகள் இருந்ததைக் கூறுகிறார்.

பிராமிக் கல்வெட்டுக்களினால் அறியப்படுபவை

தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் எழுதப்பட்டவை. இதே காலத்தில்தான் சங்கச் செய்யுட்கள் (கடைச் சங்கச் செய்யுட்கள்) பாடப்பட்டன. சங்கச் செய்யுட்கள் பெரும்பாலும் தனித்தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளன. அச் செய்யுட்களில் பிராகிருத மொழி வடமொழிச் சொற்களின் கலப்பு மிகச் சிலவே. ஆனால், அக்காலத்தில் வேற்றுமொழி (முக்கியமாக பிராகிருத மொழியும் சமக்கிருத மொழியும்) கலப்பு ஏற்படவில்லை என்று கருதுவது வரலாற்றுக்குப் பொருந்தாது. பிராகிருத மொழிச் சொற்கள் கடைச்சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கி வந்ததைப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்குகின்றன. அச் சொற்களைக் காட்டுவோம். தம்மம் (தருமம்), ஸாலகன், நிகமம், உபாசன், விஸுவன் (ஓர் ஆளின் பெயர்) அதிட்டானம், காஞ்சணம், பணிதம், கரஸபன் (ஆளின் பெயர்) காயிபன் (ஆளின் பெயர்) குவிரன், கோயிபன் (கோசிபன்) குலஸ, ஸெட்டி முதலியன.

கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் கிரேக்க-உரோம நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்து வாணிகஞ் செய்த யவனர் வாயிலாக, சில கிரேக்க மொழிச் சொற்கள் சங்ககாலத் தமிழில் கலந்துவிட்டதைக் காண்கிறோம். அவை, சுருங்கை, மத்திகை, கலம் (மரக்கலம்), கன்னல் முதலியன. வாணிகத்துக்காக வந்துபோன யவனரின் கிரேக்க மொழிச் சொற்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன என்றால், மதச்சார்பாகத் தமிழகத்துக்கு வந்து ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த பௌத்த-சமண சமயத்தவர்கள் மூலமாகப் பாலி, சூரசேனி என்னும் பிராகிருத மொழிச் சொற்கள் தமிழோடு கலக்காமல் இருக்குமோ? கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வந்து தமிழகத்தோடு கலந்துபோன பௌத்த சமண சமயங்களின் ‘தெய்வ’ மொழியாகிய பாலி, சூரசேனி மொழிச் சொற்கள் சமயச்சார்பாகத் தமிழரிடையே கலக்காமல் இருந்திருக்க முடியுமா? பௌத்த-சமண சமயங்களை மேற்கொண்ட தமிழர் பிராகிருத மொழிகளைக் கற்றனர். வடமொழியையும் கற்றனர். அதனால் அவர்கள் சமயநூல் எழுதினபோது அந் நூல்களில் பிராகிருத மொழிச் சொற்களைக் கலந்து எழுதினார்கள். சீத்தலைச்சாத்தனார் தமிழை நன்கு கற்றவர். அதனோடமையாமல், பௌத்தர் என்னும் முறையில் பாலி மொழியையும் நன்கு கற்றவர். ஆகவே, அவருடைய மணிமேகலையில் தாராளமாகப் பாலி மொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவர் காலத்தவரான இளங்கோ அடிகள் தாய்மொழியாகிய தமிழ்மொழியை நன்றாகக் கற்றவர். அதனோடு அமையாமல், சமணர் என்னும் முறையில் பிராகிருத மொழியையும் நன்கு கற்றவர். அவர் இயற்றிய சிலப்பதிகாரத்தில் பல பிராகிருத மொழிச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. அதே காலத்திலிருந்த சங்கப் புலவர்கள் தனித்தமிழ் கற்றவர்கள். அவர்கள் அயல்மொழிகளைக் கற்றவர் அல்லர். அவர்கள் தனித்தமிழ் மொழியில் தமிழ் மரபுப்படி அகப்புறப் பொருள் பற்றிய செய்யுட்களை இயற்றினார்கள். அதனால் அவர்களின் செய்யுட்கள் தனித்தமிழாக உள்ளன. அவர்கள் காலத்தில் வேற்றுமொழிகள் தமிழில் கலக்கவில்லை என்று கூறுவது வரலாற்றுக்கும் உண்மைக்கும் பொருந்தாது. தனித்தமிழ்ப் புலவர்களான சங்கப் புலவர் காலத்திலேயே பிராகிருதச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன என்பதற்கு பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும் மணிமேகலை சிலப்பதிகாரக் காவியங்களும் சான்று பகர்கின்றன. இந்த வரலாற்று உண்மையை யறியாத சிலர், கடைச் சங்ககாலத்தில் வேறுமொழிச் சொற்கள் கலக்கவில்லை என்றும், தனித் தமிழ் வழங்கிற்று என்றும் கூறுவதும், மணிமேகலை, சிலப்பதிகாரக் காவியங்கள் சங்ககாலத்துக்குப் பிறகு சில நூற்றாண்டு கழித்து எழுதப்பட்டன என்று கூறுவதும் வரலாற்றுக்கும் உண்மைக்கும் பொருந்தாத சான்றுகளாகும். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு (பௌத்த, சமண மதங்களோடு) வந்த பாலி, சூரசேனி முதலான பிராகிருத மொழிச் சொற்கள் கலவாமல், கடைச் சங்கம் முடிகிற வரையில் காத்துக்கொண்டிருந்து, கி.பி, 3ஆம் நூற்றாண்டில் கடைச் சங்கம் முடிந்த பிறகு தமிழில் கலந்தது என்று கூறுவது மொழியின் இயற்கையும் வரலாற்று உண்மையும் அறியாதவர் கூறும் கூற்றாகும்.

சங்க காலத்திலேயே பிராகிருதம் போன்ற வடமொழிச் சொற்கள் பௌத்தத் தமிழரிடையே புகுந்து பொதுமக்களிடையேயும் பரவி விட்டது என்பதே வரலாற்று உண்மை. அதற்குச் சான்றாக இருப்பது பிராமிக் கல்வெட்டெழுத்துக்களில் காணப்படுகிற பிராகிருத மொழிச் சொற்கள்.

தமிழ்மொழி உயிருள்ள மொழி. நெடுங்காலமாக வழங்கி வருகிறமொழி. உலகத்திலே, வழங்கி வருகிற உயிருள்ள மொழிகள் எல்லாம் வாணிகம், சமயம், அரசாட்சி, கலை முதலியவற்றின் தொடர்பாக வேற்றுமொழிச் சொற்களையும் பெற்றுக் கொள்வது இயல்பு. இந்த இயல்புப்படி சங்க காலத்திலேயும் சமயத் தொடர்பு பற்றி (பௌத்தம், சமணம்) பிராகிருத மொழிச் சொற்கள் தமிழில் கலந்து விட்டன. இந்த வரலாற்று உண்மையை மறுக்க முடியாது. சங்க காலத்தில் அயல்மொழிச் சொற்கள் கலவாமல் தூய தமிழ் மட்டும் இருந்தது என்று கூறுவது பொருந்தாது. வடநாட்டுப் பௌத்தமும், சமணமும் வந்தபோதே அவர்களோடு பிராகிருத மொழியும் வந்து விட்டது. அவர்கள் வருவதற்கு முன்பு, வேறு மொழித் தொடர்பு இல்லாத காலத்தில், தூய தமிழ் வழங்கியது உண்மை. ஆனால், வேறு மொழிகளைச் சமய மொழியாகக் கொண்ட பௌத்தமும், சமணமும் தமிழகத்திலே வந்து (கி.மு. 3ஆம் நூற்றாண்டு வரை) 500 ஆண்டுகளாகத் தமிழரோடு உறவாடிக்கொண்டிருந்த காலத்தில் வேறு மொழிச்சொற்கள் கலவாமல் தூய தமிழ்மொழிதான் வழங்கிற்று என்று கூறுவது பொருந்தாது. சங்க இலக்கியங்களில் தூய தமிழாக இருக்கின்றன என்றால், அவை தமிழ் மரபுப்படி இயற்றப்பட்டவை. அகப் பொருள், புறப் பொருள்களைப் பற்றிப் பாடப்பட்டவை. ஆகவே பழந்தமிழ் மரபு அவற்றில் காணப்படுகின்றன. ஆனால் அந்தக் காலத்திலேயே தமிழ்மொழியில் வேறு மொழிச் சொற்களும் ம் கலந்துவிட்டன. அந்தத் தமிழ் இலக்கியங்கள்தாம் சிலப்பதிகாரமும், மணிமேகலையும்.

பிராமிக்கு முன்பு

பிராமி எழுத்து பௌத்த-சைன மதங்களின் சார்பாகத் தமிழகத்துக்கு வந்தது. பிராமி எழுத்து வருவதற்கு முன்பு தமிழில் வேறுவகையான எழுத்து நடைமுறையில் இருந்தது. தொல்காப்பியம் முதலான பழைய இலக்கண இலக்கிய நூல்கள் பழைய தமிழ் எழுத்தினால் எழுதப்பட்டன. பிராமி எழுத்து தமிழகத்தில் நுழைந்த பிறகு, பழைய தமிழ் எழுத்து மெல்ல மெல்ல ஒதுக்கப்பட்டுப் புதிய பிராமி எழுத்து மெல்ல மெல்ல முதன்மை பெற்றது. இந்த எழுத்து மாறுதல் திடீரென்று ஏற்படவில்லை. பழை எழுத்து மறைவதற்கும் புதிய எழுத்து இடம் பெறவும் பலகாலம் சென்றிருக்க வேண்டும். இரண்டு நூற்றாண்டுகளாவது சென்றிருக்க வேண்டும். பௌத்த-சைன மதங்களின் கொள்கை பரப்புதலினாலே பிராமி பிராமி எழுத்து தமிழகத்தில் விளக்கமடைந்தது.

அறிஞர் சிலர் பிராமி எழுத்து வந்தபிறகுதான் தமிழ் மொழியில் இலக்கியங்கள் ஏற்பட்டன என்றும், அதற்கு முன்பு தமிழில் இலக்கிய நூல்கள் எழுதப்படவில்லை என்றும் கூறுகின்றனர். அவர்கள் கூற்று தவறானது. பிராமி எழுத்து தமிழகத்தில் புகுவதற்கு முன்பே தமிழருக்கு உரிய தமிழ் எழுத்தும், நூல்களும் இருந்தன.

தமிழ்நாட்டில் பிராமி கல்வெட்டுக்களை எழுதியவர் நன்றாகத் தமிழ் கற்காதவர். அவர்கள் பிராகிருதச் சொற்களையும் சேர்த்துப் பேச்சு நடையில் எழுதியுள்ளனர். அந்தச் சொற்களையும் பிழையாக, பாமரர் பேச்சு நடையில் எழுதியுள்ளனர். மணிய் (மணி), கணிய் (கணி), பணஅன் (பணயன்), வழுத்தி (வழுதி), ஆந்தைய் (ஆந்தை), மத்திரை (மதுரை), பளி (பள்ளி), காவிதி இய் (காவிதி), கொட்டுபி தோன் (கொடுப்பித்தோன்) முதலான கொச்சைச் சொற்களைக் காண்க. சில பிராமி எழுத்து வாக்கியங்கள் வினைச்சொல் (பயனிலை) இல்லாமலே எழுதப்பட்டுள்ளன. யானைமலை, குன்றக்குடி, அழகர்மலை என்னும் இடங்களில் உள்ள கல்வெட்டுக்கள் நன்றாகப் படிக்காதவர்களால் கொச்சைத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அதே சமயத்தில் சங்கப் புலவர்களின் உயர்ந்த, சிறந்த செந்தமிழ் நடைச் செய்யுள்களும் வழங்கி வந்துள்ளன. இவ்வாறு, ஒரே சமயத்தில் உயர் தனிச் செம்மொழி நடையும் பிராகிருதம் கலந்த கொச்சைத் தமிழ் நடையும் வழங்கின என்பதை பிராமி எழுத்து வாசகங்களினால் அறிகிறோம். இதற்கு காரணம் பழைய தமிழ் எழுத்தைப் பயின்று வந்ததும் அதே சமயத்தில் புதிய பிராமி பயிலப்பட்டு வந்ததும் என்பது தெரிகிறது. யூபிரிதிஸ், தைகிரிஸ் ஆறுகள் பாயும் மொசப டோமியாவில், பழங்காலத்தில் இருந்த கால்டியா தேசத்தில் ஒரே சமயத்தில் இரண்டு வகையான எழுத்துக்கள் வழங்கி வந்ததை வரலாற்றில் அறிகிறோம். அந்நாட்டு மதகுருமார் தங்களுக்கென்று ஒருவகை எழுத்தை எழுதினார்களாம். அதே சமயத்தில் பாமரக் குடிமக்கள் இன்னொரு வகையான எழுத்தை எழுதினார்களாம். அதுபோலவே, தமிழ்நாட்டில் சங்கப் புலவர் பயின்ற பழந்தமிழ் எழுத்து ஒன்றாகவும், பௌத்த சமண மதத்தவர் எழுதிய புதிய பிராமி எழுத்து வேறாகவும் இருந்தன. இந்த நிலை ஒன்றிரண்டு நூற்றாண்டு இருந்திருக்க வேண்டும். பிறகு பிராமி எழுத்து மிகப்பரவி வளர்ந்ததனால் பழைய தமிழ் வரி வடிவம் மறைந்து போயிற்று.

இதை அறியாமல் சிலர், பிராமி எழுத்து தமிழகத்துக்கு வருவதற்கு முன்பு தமிழில் இலக்கியமும், இலக்கணமும் இல்லை என்றும், பிராமி வந்த பிறகுதான் அந்த எழுத்தைக் கொண்டு தமிழ் நூல்கள் எழுதப்பட்டன என்றும் கூறுவது ஏற்கத்தக்கதன்று. அவர்கள் கூற்று தவறு. இதுபற்றி விளக்கமாக எழுதினால் இடம் விரியும் என்று அஞ்சி இதனோடு நிறுத்துகிறோம். தமிழ் நாட்டுப் பிராமி எழுத்துக் கல்வெட்டு எழுத்து மொழிகள் பௌத்த - சமண முனிவர்கள் வாழ்ந்த குகைகளில் எழுதப்பட்டுள்ளன. அவற்றை எழுதினவர் பௌத்த- சமண சாவகர்கள், அவர்கள் பிராகிருதம், தமிழ் இரண்டையும் கலந்த கொச்சைத் தமிழில் பிழையாக எழுதினவைதாம், பிராமியக் கல்வெட்டுக்கள். செந்தமிழ் நடைக்கும் அவர்களுடைய கொச்சை நடைக்கும் தொடர்பு இல்லை. இந்தக் கொச்சை நடையைத்தான் தமிழர் எல்லோரும் வழங்கினார்கள் என்று கூறுவது வரலாறு அறியாதவர் கூற்றாகும்.

துருக்கி மொழியின் பழைய எழுத்து அரபி எழுத்து. அரபி எழுத்தினாலே துருக்கி மொழியின் இலக்கண, இலக்கியங்கள் தொன்றுதொட்டு எழுதப்பட்டன. அண்மையில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட சீர்திருத்தப் புரட்சி காரணமாக, பழைய அரபி எழுத்து மாற்றப் பட்டுப் புதிதாக இலத்தின் (ஆங்கில) எழுத்து அங்கு எழுதப் படுகிறது. துருக்கி மொழி நூல்களும், இலக்கியங்களும் இக்காலத்தில் இலத்தின் எழுத்தினால் எழுதப்பட்டு வருகின்றன. இலத்தின் எழுத்துக்களால் துருக்கி மொழி இலக்கியங்கள் எழுதப்படுவதனால், இலத்தின் எழுத்து வந்த பிறகுதான் துருக்கி மொழியின் இலக்கிய இலக்கணங்கள் உருவடைந்தன என்று எந்த அறிஞரும் கூறமாட்டார். துருக்கி மொழியில் எழுத்து மாறிற்றே தவிர, இலத்தின் எழுத்து வந்தபிறகுதான் துருக்கி மொழி இலக்கியங்கள் தோன்றின என்பது தவறு. இது யாவரும் அறிந்ததே.

இதுபோலவே, சங்ககாலத்தில், பழந்தமிழ் எழுத்துக்குப் பதில், பிராமி எழுத்து எழுதப்பட்டபோது, எழுத்து மாறிற்றே தவிர, பிராமி எழுத்து வந்தபிறகுதான் தமிழ் இலக்கியம் தோன்றிற்று என்பதும் தவறு. தமிழ் மரபும் தமிழ்மொழி வரலாறும் அறியாதவரே தவறான கருத்தைக் கூறுவர்.

படித்த முடிவுகள்

தமிழ் நாட்டுப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்டவை என்று கூறினோம். அதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் எழுதப்பட்டவை என்று சொன்னோம். இந்த எழுத்துக்களைப் படித்துப் பொருள் காண அறிஞர் சிலர் முயன்றனர்.இராவ்சாகிப் எச். கிருட்டிண சாத்திரி, கே.வி. சுப்பிரமணிய அய்யர், சி. நாராயண ராவ், ஐராவதம் மகாதேவன், டி.வி.மகாலிங்கம் ஆகியோர் இந்தக் கல்வெட்டுக்ளைப் படித்துப் பொருள் கூறினார்கள். ஆனால், அவர்கள் எல்லோரும் ஒரே முடிவுக்கு வரவில்லை. வெவ்வேறு கருத்துக்களைக் கூறிச் சென்றனர். இதற்குக் காரணம் சில எழுத்துக்களை வெவ்வேறு எழுத்தாகக் கொண்டு படித்தது ஒன்று. எழுத்துக்களைச் சேர்த்து, சொல் சொல்லாகப் பிரித்தபோது ஏற்பட்ட மாறுபாடு இன்னொன்று. ஆரியத் தொடர்பைப் புகுத்திக் கூறவேண்டும் என்று கருதித் தங்களுடைய சொந்தக் கருத்தைப் புகுத்தியது வேறொன்று. இக் கல்வெட்டெழுத்துக்கள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த தமிழக மரபையும், தமிழர் பழக்கவழக்கங்களையும், அறிந்து அதற்கேற்பப் பொருள் காணாதது மற்றொன்று. இந்தக் காரணங்களினாலே தமிழ் நாட்டுப் பிராமி எழுத்துக்கள் சரியாகப் படிக்கப்படாமல் உள்ளன. ஆகவே இவற்றைப்புதிதாக ஆராய்ந்து முடிவு காண வேண்டி யிருக்கிறது. அவற்றைக் காண்போம்.

அடிக் குறிப்புகள்

1. கிரந்த எழுத்து என்பது தென் இந்தியாவில் வழங்கிவந்த ஒரு வகையான எழுத்து. இந்த எழுத்தைப் பத்தரும், சமணரும், தென்னிந்தியாவில் புதிதாக அமைத்தார்கள். கிரந்த எழுத்தை அவர்கள் பிராமி எழுத்திலிருந்து உருவாக்கினார்கள். கிரந்த எழுத்தைப் பிராகிருத நூல்களை எழுதவும் சமஸ்கிருத நூல்களை எழுதவும் பயன்படுத்தினார்கள். கிரந்த எழுத்து குமரிமுனையிலிருந்து வடக்கே விந்திய மலை வரையில் நெடுங்காலம் வழங்கிவந்தது.

2. Madras Epigraphy Report, 1907. Part II, Para 1. P. 60

3. Sangam literature: its cults and cultures, K.A. Nilakanta Sastri, 1962, p.4.

4. The smile of Murugan, Dr.Kamil Zvelabil, 1973, p.25.

5. The smile of Murugan, Dr.Kamil Zvelabil, 1973, p. 140.

6. P. 323, Epigraphia Indica, Vol. II

7. The Brahmi Inscription of South India, C.Narayana Rao, pp. 362-376. The New Indian Antiquary, Vol.I, 1938-39.

8.

“பெரியாரை ஞெ மிர்த்த புழற் காய்க் கொன்றை
நீடிய சடையோடு ஆடா மேனிக்
குன்றுறை தவசியர் போல"(நற். 141:3 – 5)

(ஆடாமேனித் தவசியர் அசையாமல் தியானத்தில் இருக்கும் உடம்பையுடைய தவசியர் என்று இதற்குப் பொருள் கொள்வது கூடாது. ஆடாமேனி என்பதற்கு, நீராடாத உடம்பையுடையவர் என்பது பொருள். சைன முனிவர் நீராடுவது கூடாது என்பது அந்த மதக் கொள்கை.)
9.

"உண்ணாமையின் உயங்கிய மருங்கின்

ஆடாப் படிவத்து ஆன்றோர் போல
வரைசெறி சிறுநெறி நிரையுடன் செல்லும்
கானயானை கவினழி குன்றம்." (அக நா. 132:1–4)

(மலைகள் நெருங்கிய இடுக்கான காட்டுவழியில், உணவு கொள்ளாமல் பட்டினியிருப்பதனால் வாடிய தோற்றத்தையும் நீராடாத விதத்தையும் உடைய சமண முனிவர் செய்வதுபோல, மலையிடுக்கு வழியில் யானைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றன என்பது இதன் பொருள்.) ஆகவே, இவற்றைப் புதிதாக ஆராய்ந்து முடிவு காணவேண்டியிருக்கிறது. அவற்றைக் காண்போம்.