மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/001

 தமிழில் சமயம்

கௌதம புத்தர்

குறிப்பு: மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் கௌதம புத்தர் (1956) என்னும் தலைப்பில் எழுதிய நூல் இது.

முதற் பதிப்பின் முகவுரை

உலகத்திலே அதிகமாகப் பரவிச் சிறப்புற்றிருக்கிற பெரிய மதங்களிலே பௌத்த மதமும் ஒன்று. புகழ்பெற்ற பௌத்த மதத்தை உண்டாக்கியபெரியார் பகவன் கௌதமபுத்தர் ஆவர். கௌதமபுத்தர், நமது பாரத நாட்டிலே பிறந்துவளர்ந்து வாழ்ந்தபடியினாலே பாரதநாடு பௌத்தர்களின் புண்ணிய பூமியாகும். பகவன் புத்தர் பிறந்து இப்போது 2500 ஆண்டுகள் ஆகின்றன. இந்த விழாவைப் பௌத்த உலகம் கொண்டாடுகிறது.

உலகப் பெரியாரான கௌதமபுத்தர் நமது நாட்டில்பிறந்த சிறந்த பெரியார் என்கிற காரணத்தினாலேயும், பௌத்த சமயப் புண்ணியத்தலங்கள் இங்கு உள்ளன என்னும் காரணத்தினாலேயும், பாரத நாட்டினராகிய நாம் பெருமிதம் கொள்கிறோம்; பெருமையடைகிறோம். இக்காரணங்கள் பற்றியே, பகவன் புத்தர் பிறந்த 2500 ஆவது ஆண்டுவிழாவை, 1956 ஆம் ஆண்டு மே மாதம் 24ஆந்தேதி வைசாகப் பௌர்ணயாகிய புண்ணிய நாளிலே, அரசாங்கத்தாரும் பொதுமக்களும் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

இந்தப் புண்ணிய நாளிலே பகவன் புத்தருடைய சரித்திர வரலாற்றை எழுதி வெளிப்படுத்துவது மிகவும் பொருத்தமானதே. இப்போது நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப்பாடத்தில் கற்கும் வெறும்கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு.

நமது நாட்டிலே இராமாயணம், பாரதம், புராணங்கள் முதலிய சமய சம்பந்தமான கதைகள், மதசம்பிரதாய முறையில் எழுதப்பட்டு, அநேக அற்புதங்களும் புதுமைகளும் தெய்விகச் செயல்களும் நிரம்பியனவாகவுள்ளன. இவைகளைப் பக்தியோடு மக்கள் படித்து வருகிறார்கள். உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் (நபி நாயகம், ஏசு கிறிஸ்து முதலிய சமயத் தலைவர்கள் உட்பட) தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன. பகவன் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும்போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்தசரித்திரங்கள், அந்த அற்புத செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால், பௌத்தமத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப்பெறுவது இல்லை.

இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் புத்த சரித்திரம் எழுதப்பட்டது. ஆயினும் இதுவிரிவான நூல் என்று கூறுவதற்கில்லை. சில செய்திகள் விரிவஞ்சி விடப்பட்டன. ஆயினும் ஆயினும் முக்கியமான வரலாறுகளை விடாமல் கூறப்பட்டுள்ளது.

பௌத்த சமயத்தின் தத்துவமாகிய நான்கு வாய்மைகளும அஷ்டாங்க மார்க்கங்களும் பன்னிரு நிதானங்களும் இந்நூலுள் காட்டப்பட்டுள்ளன. பெளத்த மதத் தத்துவத்தை ஆழ்ந்து கற்பவருக்கு இவை சிறிதளவு பயன்படக்கூடும். இந்நூலின் இறுதியில் பின் இணைப்பாகத் திரிசரணம், தசசீலம், திரிபிடசு அமைப்பு ஆகிய இவைகள் விளக்கப்படுகின்றன. பழந்தமிழ் நூல்களிலே சிதறிக்கிடக்கிற புத்தர் புகழ்ப்பாக்கள், தொகுக்கப்பட்டு இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. பழைய இனிய இப்புகழ்ப்பாக்கள் வாசகர்களுக்கு இன்பம் பயக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இந்நூலில் காணப்படும் குற்றங்களை நீக்கிக் குணத்தைக் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன். இதனை விரைவாகவும் அழகாகவும் அச்சிட்டு வெளியிட்ட ஸ்டார் பிரசுரக்காரர்களுக்கு எனது அன்பும், நன்றியும் உரியனவாகும்.

சென்னை - 4 இங்ஙனம்

15-5-56 மயிலை சீனி. வேங்கடசாமி