மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/003

கௌதமரின் துறவு வாழ்க்கை

நாட்டைக் கடந்தது

அன்று ஆனித்திங்கள் முழுநிலவுள்ள வெள்ளுவாநாள் (ஆஷாட பௌர்ணமி). நள்ளிரவு. நகர மக்கள் கண்ணுறங்குகின்றனர். முழுநிலா, பால்போன்ற நிலவை எங்கும் வீசுகிறது. இந்த நள்ளிரவிலே சித்தார்த்த குமரன் தன்னந்தனியே குதிரையில் பிரயாணம் செய்கிறார். குதிரைப்பாகன் மட்டும் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறான்.

சித்தார்த்த குமரனுக்குப் பிரியமான கந்தகன் என்னும் இக்குதிரை, குமரன் நள்ளிரவில் பிரயாணம் செய்வதை விரும்பாமல், மற்றவர்களை விழித்தெழச் செய்வதுபோல பலமுறை உரத்த சத்தமாகக் கனைத்தது. அந்த ஒலியை யாரும் கேளாதபடி தேவர்கள் தடுத்துவிட்டார்கள். குதிரையின் குளம்புகளிலிருந்து ‘டக் டக்’கென்று ஒலி உண்டாயிற்று. அவ்வொலியையும் யாரும் கேளாதபடி தேவர்கள் தடுத்துவிட்டார்கள். நகரத்து வாயிலையடைந்தபோது, மூடப்பட்டிருந்த வாயில் கதவுகளைத் தேவர்கள் திறந்துவிட்டார்கள். சித்தார்த்த குமரன் குதிரையைச் செலுத்தி நகரத்தைவிட்டு வெளிப்பட்டார்.

சாக்கியர்நாடு, கோலியர் நாடு, மள்ளர்நாடு ஆகிய நாடுகளைக் கடந்து முப்பது யோசனைதூரம் பிரயாணம் செய்தார் சித்தார்த்த குமரன். கடைசியாக, விடியற்காலையில் அனோமை என்னும் ஆற்றங்கரையையடைந்தார். கரை ஓரத்தில் வந்து தமது காலினால் மெல்லத்தட்டிக் குதிரைக்குச் சமிக்கைசெய்தார். குதிரை துள்ளிப்பாய்ந்து ஆற்றைக்கடந்து அக்கரையில் நின்றது. சித்தார்த்த குமரன், குதிரையினின்று இழிந்து வெள்ளிய தூய்மையான ஆற்றுமணலிலே அமர்ந்தார்.

சன்னன் வந்து அருகில் நின்றான். “சன்ன, நான் துறவுகொள்ளப்போகிறேன். என்னுடைய ஆடையணிகளையும் குதிரையையும் நகரத்திற்குக் கொண்டுபோவாயாக” என்று சித்தார்த்தகுமரன் சன்னனிடம் கூறித் தமது ஆடையணிகளைக் கழற்றினார். மனவருத்தம் அடைந்த சன்னன் அவரை வணங்கி, “அரசே, அடியேனும் துறவு கொள்ளுவேன்” என்றான். “சன்ன, வேண்டாம்! இப்போது வேண்டாம், தந்தையாரும் சிறிய தாயாரும் யசோதரையும் நான் துறவுகொண்டதையறிய மாட்டார்கள். நீ நகரத்திற்குப் போய் என் செய்தியைக் கூறு. நான் பின்னர்வந்து உனக்குத் துறவு கொடுப்பேன்” என்று கூறிச் சித்தார்த்த குமரன் ஆடையணிகளைச் சன்னனிடம் கொடுத்து நகரத்திற்குப் போகச்சொன்னார்.

துறவு பூண்டது

பின்னர் நீண்டு வளர்ந்திருந்த தமது தலைமயிரை இடதுகையில் பிடித்துக்கொண்டு வலக்கையில் வாளை எடுத்து அடியோடு அரிந்தார். அவ்வாறே மீசை தாடிகளையும் களைந்தெறிந்தார். இவ்வாறு சித்தார்த்த குமரன் அரச கோலத்தைக் களைந்து துறவுக்கோலம் பூண்டார்.

குதிரைப் பாகன் மனவருத்தத்துடன் நின்றான். சித்தார்த்தர், நகரத்திற்குப் போய்த் தமது தந்தையிடம் செய்திகூறும்படி அவனுக்குக் கட்டளையிட்டார். சன்னன் அழுதுகொண்டே அவரை வணங்கி, குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக்கொண்டுபோகப் புறப்பட்டான். ஆனால், கந்தகன் என்னும் அந்தக் குதிரை நகரவில்லை. அது சித்தார்த்தருடைய கால்களை நக்கி உளம்நிறைந்த அன்போடு தன் கண்களினாலே அவரைப் பார்த்துக்கொண்டு நின்றது, சித்தார்த்தர் எழுந்துநின்று, “நீங்கள் நகரத்திற்குப் போங்கள்” என்று சொல்லிக்கொண்டே வேறிடம் செல்லப் புறப்பட்டார். அப்போதும் கந்தகன் நகராமல் அவர் போவதைப் பார்த்துக்கொண்டே இருந்தது. நெடுந்தூரம் சென்றபின் அவர் கண்ணுக்கு மறைந்துவிட்டார். அப்போது அந்தக் குதிரை அவருடைய பிரிவைத் தாங்கமாட்டாமல் வருத்தத்தோடு கீழேவிழுந்தது. உடனே அதன் உயிர் நீங்கியது.

சன்னன், மனம்நொந்து அழுதுகொண்டே கபிலவத்து நகரத்தைநோக்கி நடந்தான். அரண்மனையை யடைந்து சுத்தோதன அரசரிடம், சித்தார்த்த குமரன் துறவுபூண்ட செய்தியைக் கூறினான்.

சுத்தோதனர் துயரம்

இச்செய்தியைக் கேட்டு அரண்மனையில் இருந்த எல்லோரும் அழுது புலம்பினார்கள். சிறிய தாயாராகிய மகாபிரஜாபதி கௌதமி, கன்றை இழந்த பசுவைப்போலக் கதறினார். யசோதரையாரின் துக்கத்தைச் சொல்லிமுடியாது. செய்திகேட்ட சுத்தோதன அரசர் இடியோசைகேட்ட நாகம்போன்று மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டார். முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளித்து விசிறி கொண்டு மெல்ல விசிறினார்கள். மூர்ச்சை தெளிந்து கண்விழித்தார், “குமாரா! உன்னைப் பிரிந்து எப்படி உயிர்வாழ்வேன். ஐயோ! திரும்பி வரமாட்டாயா?” என்று கதறினார். அப்போது அமைச்சர்கள் வந்து அரசருக்கு ஆறுதல் கூறினார்கள். “மகாராஜா கவலைப்படுவதில் பயன்இல்லை. இப்படி நடக்கும் என்பது முன்னமே தெரிந்ததுதானே. அசித முனிவரின் தீர்க்கதரிசனம் மெய்யாய்விட்டது. வினையை வெல்ல யாரால் ஆகும்? நடப்பது நடந்தே தீரும்” என்று கூறித் தேற்றினார்கள். ஆனால், இச்சொற்கள் அரசரின் செவியில் ஏறவில்லை.

“என் அருமை மகனை அழைத்துவாருங்கள். உடனேபோய் அழைத்து வாருங்கள்” என்று ஆவலாகக் கூறினார்.

அரசருடைய துயரத்தைக் கண்ட அமைச்சர்கள் "நாங்கள் போய் குமாரனை அழைத்து வருகிறோம். மகாராஜா, கவலைப் படாமல் இருங்கள்” என்று தேறுதல் கூறி அமைச்சர்கள் புறப் பட்டுச் சித்தார்த்த குமரனைத் தேடிச் சென்றார்கள்.

அரசகுமாரன் துறவுபூண்டு வெளியேறிய செய்திகேட்டு நகரமக்கள் எல்லோரும் கவலையில் ஆழ்ந்தனர். தங்கள் குடும்பத்தில் அன்புக்குரிய ஒருவன் பிரிந்து போனதுபோலக் கருதி அவர்கள் துயரம் அடைந்தார்கள். கபிலவத்து நகரம் துன்பத்தில் மூழ்கியது. ஆயினும், அமைச்சர்கள் அரசகுமாரனை அழைத்துவரச் சென்றிருப்பதனாலே, குமாரன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் ஆறுதல் அளித்தது.

இராசகிருகம் சென்றது

அனோமை ஆற்றங்கரையை விட்டுச்சென்ற கௌதம தபசி - துறவுபூண்ட சித்தார்த்த குமரனைக் கௌதம தபசி என்று அழைப்போம் கால்நடையாகச் சென்று அநுபிய நகரத்தையடைந்தார். ‘நகரத்திற்குள் செல்லாமல் அருகிலிருந்த மாந்தோப்பினுள் சென்று மன அமைதியோடு தங்கியிருந்தார். பிறகு, மாஞ்சோலையை விட்டுப் புறப்பட்டு நடந்துசென்றார். எட்டாவது நாளில் இராசக்கிருக நகரத்தையடைந்தார். அடைந்து நகரத்தின் கிழக்குவாயில் வழியாக நகரத்துக்குள் சென்று, வீடுவீடாகப் பிச்சை ஏற்றார். தெருவில் இவரைக் கண்டவர்கள் “இவர்யார்; இவர் யார்?” என்று வியப்புடன் கேட்டார்கள். சிலர், “இவர் மன்மதன்” என்றார்கள். சிலர், இவர் “சந்திரகுமரன்” என்றார்கள். சிலர், “இல்லை இல்லை; இவர் சூரிய குமரன்” என்றார்கள். மற்றும் சிலர், இவர் “சூரிய குமரன் அல்லர்; பிரமன்” என்றார்கள், அறிவுள்ள சிலர், “இவர் மனிதராகப் பிறந்த புண்ணிய புருஷர்; இவர் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய மகான்” என்று சொன்னார்கள்.

அப்போது விம்பசார அரசனுடைய சேவகர் இவரைக்கண்டு வியப்படைந்து அரசனிடம் விரைந்துசென்று, “தேவ! துறவி ஒருவர் நகரத்துக்குள் வந்து வீடுவீடாகப் பிச்சை ஏற்கிறார். அவரைப் பார்த்தால் தேவகுமாரனோ, நாககுமாரனோ, கருட குமாரனோ அல்லது மனித குமரன்தானோ என்று கூறமுடியவில்லை” என்று தெரிவித்தார்கள். அரசன் அரண்மனையின் உப்பரிகையில் சென்று தெருவில் பிச்சை ஏற்கும் கௌதம துறவியைப் பார்த்தார். துறவியின் கம்பீரமான தோற்றத்தையும், அமைதியும் பொறுமையுமுள்ள நிலையையும் கண்டு வியப்படைந்தார். பிறகு அரசன் சேவகரைப் பார்த்து, “இவர் தேவ குமாரனாக இருந்தால், நகரத்தைவிட்டு நீங்கும்போது ஒருவருக்கும் தெரியாமல் திடீரென மறைந்துவிடுவார். நாககுமாரனாக இருந்தால் பூமிக்குள் மறைந்துவிடுவார். கருடகுமாரனாக இருந்தால் ஆகாயத்தில் மறைந்துவிடுவார். மனிதனாக இருந்தால் தம்மிடம் உட்கொள்வார். நீங்கள் இவரைப் பின் தொடர்ந்துபோய்க் கூர்ந்து பார்த்து இவர் செய்கையை அறிந்துவந்து சொல்லுங்கள்” என்று கூறி அனுப்பினான். அரசன் உத்தரவுப்படியே சேவகர்கள் சென்றார்கள்.

வீதியிலே வீடுவீடாகச் சென்று பிச்சைஏற்ற கௌதமத் துறவி, போதுமான உணவு கிடைத்தவுடன், தாம் வந்தவழியே நகரத்தைவிட்டு வெளியேவந்தார். வந்தவர் சற்றுத் தொலைவில் உள்ள பண்டவ1 மலைக்குச் சென்று அதன் அடிவாரத்தில் கிழக்குநோக்கி அமர்ந்து தாம் பிச்சைஏற்றுக் கொண்டுவந்த உணவை உண்ணத் தொடங்கினார். பிச்சைச்சோறு அவருக்கு அருவெறுப்பை உண்டாக்கிற்று. இவ்வித எளிய உணவைக் கண்ணினாலும் கண்டிராத இவர், இதை எப்படி உண்ண முடியும்? உண்ண முடியாமல் வாய் குமட்டியது. இன்னும் தான் அரசகுமாரன் அல்லர் என்பதையும், எல்லாவற்றையும் துறந்த துறவி என்பதையும் தமக்குத் தாமே சிந்தித்துத் தெளிந்து தமக்கிருந்த அருவெறுப்பை நீக்கிக்கொண்டு அந்த உணவை உட்கொண்டார்.

விம்பசாரன் வேண்டுகோள்

சேவகர், அரண்மனைக்குச் சென்று கௌதமத் துறவி பண்டவமலையடியில் தங்கியிருப்பதை விம்பசார அரசனுக்குத் தெரிவித்தார்கள். விம்பசாரன், துறவியைக்காணப் பண்டவமலைக்கு வந்தான். வந்து, கௌதமத் துறவியைக் கண்டு வியப்படைந்தான். பின்னர் அரசன் கௌதமரை நோக்கி இவ்வாறு கூறினான். “தாங்கள் இளவயதுள்ளவர்; இந்த வயதில் துறவு எதற்காக? இந்த அங்க மகத தேசங்களில் எதையேனும் ஒன்றைத் தங்களுக்குக் கொடுக்கச் சம்மதிக்கிறேன், தாங்கள் அரசராக இருந்து நாட்டுக்கு நன்மைசெய்யுங்கள். தங்களுடைய குலம் கோத்திரங்கள் யாவை?”

விம்பசார அரசன் கூறியதைக் கேட்ட கௌதமர், கபிலவத்து நகரத்தின் பக்கமாகத் தமது கையை நீட்டிக் காட்டி “அதோ அந்தக் கபிலவத்து நகரத்திலே சாக்கிய குலத்திலே பிறந்தவன் நான். அந்த நகரத்து அரசரான சுத்தோதனர் என்னுடைய தந்தை. மகாராஜனே! நானும் அரச குமாரனாக இருந்தவன். அரசபோகங்களும் இன்பசுகங்களும் இனி எனக்கு வேண்டா. ஆகையினாலே தாங்கள் அளிப்பதாகக் கூறும் அங்க நாடும் மகத நாடும் எனக்கு வேண்டா. மெய்ஞ்ஞானத்தையடையும் பொருட்டு உலக வாழ்க்கையைத் துறந்து துறவறத்தை மேற்கொண்டேன்” என்று கூறினார்.

கௌதமர் கூறியதைக் கேட்ட விம்பசார அரசன் தாம் நேரில் பாராமலே தமது மனத்தில் நட்புரிமை கொண்டிருந்த சித்தார்த்த குமாரன் இவர் என்பதையறிந்து, பெரிதும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து, தமது நாட்டில் சரி பகுதியை அவருக்குத் தருவதாகவும் அதனை அரசாளவேண்டும் என்றும் கூறி, மீண்டும் மீண்டும் வேண்டினான். கௌதமர் அரசனது வேண்டுகோளை உறுதியாகவும் வன்மையாகவும் மறுத்தார். கடைசியாக விம்பசார அரசன் இவ்வாறு கூறினான்: “சுத்தோதன அரசருடைய சித்தார்த்த குமாரன் நான்கு நிமித்தங்களைக் கண்டு துறவு பூண்டு புத்தராகப் போகிறார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் புத்த பதவியடையப்போவது உறுதி. தாங்கள் புத்தரான பிறகு, என்னுடைய நாட்டிற்கு எழுந்தருளி அறநெறியைப் போதித்தருள வேண்டும்.” இவ்வாறு கூறி விம்பசாரன் கௌதமரை வணக்கமாக வேண்டிக்கொண்டான். கௌதமர் அவ்வாறே வருவதாக வாக்களித்தார். கௌதமரை வணங்கி அரசன் அரண்மனைக்குச் சென்றான்.

பார்க்கவ ஆசிரமம்

துன்பம் நீங்கிய இன்பமான சாந்திநிலை யடைவதைக் குறிக்கோளாகக்கொண்ட கௌதமர், பண்டவமலையை விட்டுப் புறப்பட்டார். அவர் நேரே பார்க்கவ முனிவருடைய ஆசிரமத்தையடைந்து அங்குச் சில காலம் தங்கினார். பார்க்கவ முனிவர் கௌதமருக்குத் தமது கொள்கைகளை உபதேசம் செய்தார். கௌதமர் தாம் நாடியிருக்கும் வீட்டு நெறிக்குப் பார்க்கவருடைய உபதேசங்கள் உதவி செய்வன அல்ல என்று கண்டு அவ்வாசிரமத்தை விட்டுப்போய்விட்டார்.

ஆளார ஆசிரமம் சென்றது

பார்க்கவ ஆசிரமத்தைவிட்டுச் சென்ற கௌதமர் வைசாலி நாட்டின் பக்கமாகச் சென்றார். அங்கு ஒரு ஆசிரமத்தில் பல சீடர்களுக்கு ஆசிரியராக இருந்த ஆளார காலாமர் என்னும் முனிவரிடம் சென்றார். காலாம் கோத்திரத்தைச் சேர்ந்தவராகிய ஆளார முனிவர் ஏழுவிதமான ஸமாபத்திகளை (தியானங்களை)க் கைவரப் பெற்றவர். இவரையடைந்த கௌதமர் இவரிடம் சீடராக அமர்ந்தார். ஆளாரர் இவருக்குத் தமது ஸமாபத்தி முறைகளை உபதேசம் செய்தார் ஆளாரர் சொல்லிய முறைகளைக் கைக்கொண்டு கௌதம முனிவர் அவற்றின்படி ஒழுகி ஏழு ஸமாபத்திகளையும் அடைந்தார். இதையறிந்த ஆளார முனிவர் கௌதம முனிவரைத் தமக்குச் சமமாக வைத்துத் தமது சீடர்களில் சரி பகுதியினரை இவருக்குச் சீடராகக் கொடுத்தார். அன்றியும் தம்மை நாடி வருகிறவர்களைக் கௌதமரிடம் அனுப்பித் தம்மைப்போலவே இவரையும் சிறப்புச் செய்து வணங்கும்படி இவருக்கும் குரு பதவியையளித்தார். ஆனால், தாம் கைவரப்பெற்ற ஏழு விதமான ஸமாபத்தியினாலும் தாம் நாடியுள்ள மோக்ஷ நிலையை அடைய முடியாது என்று அறிந்த கௌதம முனிவர் இந்த ஆசிரமத்தை விட்டுப் போய்விட்டார்.

உத்ரக ஆசிரமம்

ஆளார முனிவரின் ஆசிரமத்தை விட்டுச்சென்ற கௌதமர், மகத தேசத்தையடைந்து மஹீநதி என்னும் ஆற்றைக்கடந்து அக்கரைக்குச் சென்றார். சென்று அங்கிருந்த உத்ரக இராமபுத்திரர் என்னும் முனிவருடைய ஆசிரமத்தையடைந்தார். அடைந்து அவருடைய போதனைகளை அறிந்துகொள்ள விரும்பினார். உத்ரகர் இவரைச் சீடராக ஏற்றுக்கொண்டு தாம் அறிந்திருந்த எல்லாவற்றையும் இவருக்கு உபதேசம் செய்தார். இவருடைய உபதேசம், ஆளார முனிவருடைய உபதேசத்தைப் போன்றதே. ஆயினும் அதைவிட அதிகமாக எட்டாவது ஸமாபத்தியை (தியானத்தை)யும் கொண்டது.

கௌதம முனிவர் உத்ரகர் போதித்தவற்றைக்கேட்டு அவற்றின்படி யோகாப்பியாசம் செய்து எட்டாது ஸமாபத்தியையும் கைவரப்பெற்றார். பிறகு, உத்ரக முனிவரிடம் சென்று தாம் எட்டாவது ஸமாபத்தியைக் கைவரப்பெற்றதைக் கூறி இதற்கு மேலாக ஏதேனும் உண்டா என்று கேட்டார். உத்ரக முனிவர், “இவ்வளவுதான்; இதற்குமேல் ஒன்றும் கிடையாது” என்று கூறி, ஆளார காலாமர் செய்தது போலவே உத்ரகரும் கௌதமரைத் தமக்குச் சமமாக வைத்துத் தமது சீடர்களில் சரிபாதி தொகையினரை இவருக்கு மாணவராகக் கொடுத்துத் தமக்குச் சமமான ஆசாரிய பதவியையளித்துப் பாராட்டினார். ஆனால், எட்டாவது ஸமாபத்தியும் மோக்ஷத்திற்கு வழியல்ல என்று அறிந்த கௌதம முனிவர், ஆசாரிய பதவியை ஏற்றுக் கொள்ளாமல் ஆசிரமத்தைவிட்டுப் போய்விட்டார்.

கௌதமரின் மன உறுதி

கபிலவத்து நகரத்தை விட்டுப் புறப்பட்ட அமைச்சர்கள் இருவரும், சித்தார்த்த குமரன் சென்ற வழியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரைத் தேடிப் பின்தொடர்ந்து சென்றார்கள். கடைசியாக அவர்கள் பார்க்கவ முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தார்கள். முனிவர் அவர்களை வரவேற்று அவர்கள் வந்த காரியத்தைக் கேட்டார். சித்தார்த்த குமரன் ஆசிரமத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரை அழைத்துப்போக வந்ததாக அமைச்சர்கள் கூறினார்கள். பார்க்கவ முனிவர் இவ்வாறு கூறினார்: “நீங்கள் கேள்விப்பட்டது உண்மையே. சித்தார்த்த குமரன் இங்கு வந்து சிலநாள் தங்கியிருந்தார். பிறகு எமது கொள்கை அவருக்குப் பிடிக்காமல் இவ்விடத்தைவிட்டுப் போய்விட்டார். அவர், ஆளாரகாலாமருடைய ஆசிரமத்துக்குப் போனதாகத் தெரிகிறது” என்று கூறினார்.

உடனே அமைச்சர்கள் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு, ஆளார காலாமர் ஆசிரமத்துக்கு வந்தார்கள். வந்து அங்குப் போதிசத்துவரைக் கண்டார்கள். போதிசத்துவராகிய கௌதம முனிவர், அவர்களை அன்புடன் வரவேற்று, வந்த சேதியைக் கேட்டார். அவர்கள் சுத்தோதன அரசர் அடைந்துள்ள துயரத்தைக் கூறி நாட்டுக்குத் திரும்பி வரும்படி அழைத்தார்கள். “அரசர் உம்மை உயிர்போல நேசிக்கிறார் என்பது உமக்குத் தெரியும். குமாரன் துறவு பூண்டு வெளிப்பட்டதைக் கேட்டது முதல் தீராத் துயரமடைந்து குற்றுயிராகக் கிடக்கிறார். குமாரனுக்குப் பட்டாபிஷேகம் செய்துவைக்க அவர் அவாகொண்டிருக்கிறார். குமாரன் இச்சிறுவயதில் துறவுகொள்ள வேண்டியதில்லை; பட்டாபிஷேகம் செய்துகொண்டு சிலகாலம் செங்கோல் செலுத்தி மக்களுக்கு நன்மை செய்தபிறகு துறவு கொள்ளலாம்.

இதற்கு முன்பும் சில அரசர்கள் துறவுபூண்டு, பிறகு திரும்பிவந்து அரசாண்டிருக்கிறார்கள். முற்காலத்திலே அம்பரீஷ மகாராசன் அரசாட்சியை வெறுத்துக் காட்டுக்குச் சென்றார். பிறகு, அவருடைய அமைச்சர் நாட்டுமக்கள் முதலியோரின் வேண்டுகோளுக்கு இணங்கித் திரும்பிச்சென்று அரசாட்சியை நடாத்தினார். மனிதரின் கொடுஞ்செயல்களை வெறுத்த இராமராசன் என்னும் அரசர் காட்டுக்குச் சென்று வாழ்ந்திருந்தார். பிறகு திரும்பிவந்து அரசாட்சியை நடாத்தினார். வைசாலி நாட்டுத் துரூமராசனும் துறவு பூண்டு, பிறகு திரும்பிவந்து அரசாட்சியை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு நன்மைசெய்தார். துறவுபூண்டு காட்டுக்குச் சென்ற ரிஷி ராச சக்கரவர்த்தி என்பவரும், இருக்கு தேவராசரும், தர்மாசய ராசனும் திரும்பிவந்து சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோல் செலுத்தி அரசாண்டார்கள்.

“குமாரனாகிய தாங்கள் இச்சிறுவயதில் துறவுகொள்வது தகாது. அருள்கூர்ந்து திரும்பிவந்து அரசாட்சியை ஏற்றுக்கொண்டு செங்கோல் நடத்திச் சில காலஞ்சென்ற பிறகு துறவு கொள்ளுங்கள்” என்று கூறி அமைச்சர்கள் அவரை வேண்டினார்கள்.

அமைச்சர்கள் கூறியதைக் கேட்ட போதிசத்துவர் அவர்களுக்கு இவ்வாறு கூறினார்: "அறிவுசான்ற அமைச்சர்களே! நீங்கள் கூறியது உண்மையே. எனது தந்தை என்னை எவ்வாறு நேசிக்கிறார் என்பதும் என் பிரிவு அவருக்கு எவ்வளவு துன்பத்தைத்தரும் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், நான் துறவு பூண்டது, நானும் மற்றவர்களும் சாந்தி நிலையையடையும் வழியைக் கண்டுபிடித்தற்கே யாகும். அந்த வழியைக் கண்டறியாமல் நான் திரும்பி வரமாட்டேன். எனக்கு அரசப் பதவி வேண்டியதில்லை.

“நீங்கள் கூறிய, துறவுபூண்டு பிறகு மீண்டும்போய் அரசாட்சி செலுத்திய அரசர்கள், மன உறுதியற்றவர்கள். அவர்களை உதாரணமாக நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

போதி ஞானத்தை அடைந்தாலன்றி நான் திரும்பிவரமாட்டேன். போதிஞானம் பெறாவிட்டால் தீச்சுடரில் புகுவேனேயன்றித் திரும்பி வந்து அரசாளமாட்டேன். இது உறுதி” என்று கூறினார்.

இதைக்கேட்ட அமைச்சர்கள் பெரிதும் வருந்தினார்கள். இவருடைய உறுதியைக்கண்டு அவர்கள் கபிலவத்து நகரத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்.

பிறகு, போதிசத்துவர், முன்பு கூறியபடி ஆளாரகாலாமருடைய ஆசிரமத்தில் தங்கி யோகமுறையை அப்பியாசம் செய்தார். பிறகு, அது சாந்தி நிலையைத்தராது என்று அறிந்து அவ்வாசிரமத்தை விட்டுவெளியேறினார்.

உருவேல கிராமம் சென்றது

உத்ரக ஆசிரமத்தைவிட்டு நீங்கிய கௌதமமுனிவர், உருவேல என்னும் கிராமத்தையடைந்தார். அந்தக் கிராமத்தின் அருகிலே தங்கித் தபசு செய்யக் கருதி அதற்குத் தகுந்த இடம் ஒன்றைத்தேடினார். தேடினபோது இயற்கைக்காட்சி மிகுந்த ஒரு வனத்தைக் கண்டார். இவ்வனத்தின் வழியே நேரஞ்சர நதி என்னும் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. இது கங்கையாற்றின் தென்புறத்தில் இருந்த கங்கையின் ஒரு உபந்தி. அழகான காட்சியுடைய நேரஞ்சரநதி குளிர்ந்து தெளிந்த நீருள்ளது. இதன் கரையில் மரம் செடிகொடிகள் நிறைந்த சோலையொன்று இருந்தது.

இந்த இடம் யோகிகள் தங்கி, தபசு செய்வதற்குத் தகுந்த இடம் என்று கௌதம முனிவர் அறிந்தார். இந்த வனத்துக்குச் சற்றுத் தூரத்திலே ஒரு கிராமம் இருந்தது. கௌதமமுனிவர் இந்த வனத்தில் தங்கித் தபசு செய்து கொண்டிருந்தார். இவர் தனியே தவம் செய்துகொண்டிருந்தபோது ஐந்து துறவிகள் இவரிடம் வந்தார்கள். அத்துறவிகளின் பெயர்கள் கொண்டஞ்ஞர், வப்பர், பத்தியர், மஹாநாமர், அஸ்ஸஜி என்பன. இவர்களில் கொண்டஞ்ஞர் என்பவர், முன்பு சித்தார்த்த குமரனின் ஜாதகத்தைக் கணித்த நிமித்திகரில் ஒருவர். மற்ற நால்வரும் ஜாதகம் கணித்த மற்ற நிமித்திகரின் புத்திரர்கள். இந்த ஐந்து துறவிகளும் கௌதம முனிவரிடம் சீடராக இருக்கவிரும்பி இவ்விடம் வந்தவர்கள். பல இடங்களில் சுற்றித்திரிந்த இந்தத் துறவிகள் கடைசியாகக் கௌதமமுனிவர் தங்கியிருந்த வனத்தையடைந்து இவரிடம் தங்கிச் சீடராக அமர்ந்து இவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தார்கள்.

கௌதமரின் மைத்ரீபாவனை

நேரஞ்சர ஆற்றங்கரையில் தங்கிய கௌதம முனிவர் மைத்ரீ தியானம் செய்துகொண்டு காலங்கழித்தார். அப்போது, பிராமணர்களும் சிரமணர்களும் காடுகளில் தனித்து வசிக்கும்போது அச்சமும் நடுக்கமும் ஏற்படுகின்றன என்று கூறுகிறார்களே, அதன் காரணம் என்ன என்பதை இவர் ஆராய்ந்து பார்த்தார். ஆராய்ந்த போது இவருக்கு உண்மை புலப்பட்டது. மனம் வாக்குக் காயங்களில் குற்றம் இருப்பதனாலே இவ்வாறு அச்சமும் நடுக்கமும் ஏற்படுகின்றன என்பதை அறிந்தார்.

தம்மிடம் மனம் வாக்குக் காயங்களில் குற்றம் உள்ளனவா என்று சிந்தித்துப் பார்த்துத் தம்மிடம் குற்றம் இல்லை என்றும் குற்றத்திற்கு மாறாகக் குணங்களே உள்ளன என்றும் கண்டார். அதாவது தம்மிடத்திலே மனம் வாக்குக் காயங்களில் குற்றம் இல்லாததோடு அச்சமின்மை, தைரியமுடைமை, தன்னைப் பிறரைவிட உயர்ந்தவர் என்றும் பிறரைத் தாழ்ந்தவர் என்றும் கருதாமை, அன்புடைமை (மைத்ரீ) என்னும் நற்குணங்கள் தம்மிடம் இருப்பதைக் கண்டார்.

பிறகு, அட்டமி, பாட்டியம், பௌர்ணமி முதலிய நாட்களிலே இரவுக் காலத்தில் ஆராம சயித்தியம், வனசயித்தியம், விருக்ஷ சயித்தியம் என்னும் மூன்று வகையான இடங்களில் தனித்து இருந்தால் அச்சம் உண்டாகும் என்று கூறுகிறார்களே, அதன் காரணம் என்ன என்பதை ஆராயவேண்டும் என்று எண்ணங்கொண்டார். ஆகவே, அந்நாட்களில் இரவு வேளையில் அவ்விடங்களுக்குத் தனியே சென்று தங்கினார். அப்படித் தங்கியபோது நள்ளிரவிலே அவ்விடத்தில் ஒரு மான் வந்தது. பின்னர் ஒரு பறவை வந்தது. பின்னர் காய்ந்து உலர்ந்து இற்றுப்போன மரக்கிளையொன்று மரத்திலிருந்து ஒடிந்து விழுந்தது. பின்னர் இலைகள் சலசலவென்னும் ஓசையுடன் அசைந்தன.

இவைகளை அனுபவ வாயிலாகக்கண்ட கௌதம முனிவர், இரவு வேளைகளிலே இந்த இடங்களிலே அச்சத்தை உண்டாக்குகிற காரணங்கள் இவைதாம் என்பதை அறிந்து இவ்விதமான காரணங்களினால் ஏற்படும் அச்சத்திற்கு இடந்தரக்கூடாது என்று நினைத்து அவ்விடத்திலேயே தங்கியிருந்தார். எவ்விதமான காரணங்களினாலும் காடுகளில் அச்சம் ஏற்படுங்காலங்களில் அஞ்சாமல் இருப்பதற்குப் பழகிக்கொண்டார். இந்தக் காரணங்களை அறியாமல் மற்றவர் யாரேனும் அச்சங்கொண்டால் அவர்களுக்கு இக்காரணங்களை யறிவித்து அவர்களுடைய அச்சத்தை நீக்கினார்.

கௌதம முனிவர் தூரத்திலுள்ள கிராமத்திற்சென்று உணவைப் பிச்சை ஏற்று உண்பது வழக்கம். சில காலம்சென்ற பின்னர் இவ்வாறு உணவுகொள்வதை நிறுத்திக் காட்டில்சென்று அங்குள்ள பழங்களைப் பறித்து உண்ணப்பழகினார். இவ்வாறு சில காலஞ்சென்றது. பிறகு மரத்திலிருந்து கனிகளைப் பறிப்பதை நிறுத்தித் தாமாகவே மரத்திலிருந்து பழுத்து உதிர்ந்து விழுகிற பழங்களைமட்டும் எடுத்துச் சாப்பிட்டுவந்தார். சிலகாலஞ் சென்றபின்னர், உதிர்ந்த பழங்களைக் காட்டிலே சென்று எடுப்பதையும் நிறுத்தித் தாம் இருக்கும் இடத்திலே மரங்களிலிருந்து விழும் பழங்களை மட்டும் சாப்பிட்டுவந்தார்.

கிலேசங்களை வெல்லுதல்

இவ்வாறு உணவைக் குறைத்துக்கொண்ட கௌதம முனிவர், தமது மனத்தில் உள்ள கிலேசங்களை (குற்றங்களை) வெல்வதற்காக, அக்காலத்துத் துறவிகள் செய்துவந்த வழக்கப்படிக் கடினத் தபசுகளைச் செய்யத் தொடங்கினார். பற்களை இறுகக் கடித்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு வாயின் அண்ணத்திலே நாவை நிறுத்தித் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை மனத்தில் நிறுத்திக் கடுமையான தபசு செய்தார். அப்போது அவருடைய உடம்பில் வலி ஏற்பட்டது. பலமுள்ள ஒரு ஆள் பலமில்லாத ஒருவனைப் பிடித்துக் குலுக்கி ஆட்டுவதுபோல் இவருடைய உடம்பில் வலி உண்டாயிற்று. அக்குளில் (கைக் குழிகளில்) வியர்வை ஒழுகிற்று. ஆனாலும் கௌதம முனிவர் தமது முயற்சியை விடவில்லை.

அப்பிரணத் தியானம்

பின்னர் அப்பிரணத்தியானம் செய்யத் தொடங்கினார். அதாவது மூச்சையடக்கும் பயிற்சி செய்யத் தொடங்கினார். மூக்கையும் வாயையும் இறுக மூடிக்கொண்டு மூச்சை அடைத்து இந்தத் தியானத்தைச் செய்தார். அப்போது, தோல் துருத்தியிலிருந்து காற்று புஸ்ஸென்ற ஒலியுடன் வெளிப்படுவதுபோன்று, இவருடைய காதுகளின் வழியாக மூச்சு வெளிவந்தது. தலையின் உச்சியில், தச்சன் துரப்பணத்தால் (துளைப் பாணத்தால்) துளைப்பதுபோன்று, பெரிய வலி ஏற்பட்டது. இவ்விதம் வலி ஏற்பட்டபோதும் இவர் விடாமல் இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்துவந்தார். காதுகள் வழியாக மூச்சு வெளிவருவதையும் தடுத்து இந்தத் தியானத்தைச் செய்தார். அப்போது கண்களின் வழியாக மூச்சுவெளிப்பட்டது. அப்போது விடாமல் கண்களை இறுக மூடிக்கொண்டு அப்பிரணத்தியானம் செய்தார். அப்போது பொறுக்க முடியாத வலி தேகத்தில் உண்டாயிற்று. பலமுள்ள ஒரு ஆள் வாரினால் இழுத்துக் கட்டுவதுபோல் இவருடைய தலையில் வலி உண்டாயிற்று.

வாய், மூக்கு, காது, கண் இவைகளின் வழியாக மூச்சு வெளிப்படுவதைத் தடுத்துவிட்டபடியினாலே இவருடைய வயிற்றில் கத்தியால் குத்திக் கீறுவதுபோன்று வலி உண்டாயிற்று. பலசாலிகள் இருவர் வலிவற்ற ஒரு ஆளைப் பிடித்துத்தள்ளி நெருப்புத் தணலில் அழுத்திப் புரட்டினால் எப்படியிருக்குமோ அதுபோன்று உடம்பு முழுவதும் எரிவது போன்று இருந்தது. இவ்வாறு கொடிய துன்பமும் வலியும் ஏற்பட்டபோதிலும் அப்பிரணத்தியானத்தை விடாமல் செய்துவந்தார். கடைசியாக இவர் மூர்ச்சையடைந்து தரையில் விழுந்தார்.

அப்போது இவரைக்கண்ட தேவர்கள் சிலர், “அர்ஹந்தர்கள் இறந்தவர்களைப் போலவும் அசைவற்றுக் கிடப்பார்கள். இது அர்ஹந்தர் இருக்கும் ஒரு நிலை. கௌதமரும் அர்ஹந்த நிலையையடைந்து இவ் வண்ணம் இருக்கிறார்” என்று கூறினார்கள். வேறு சில மக்கள் இவர் விழுந்து கிடப்பதைக்கண்டு, இவர் இறந்துபோனார் என்று கருதினார்கள். அவர்கள் சுத்தோதன அரசனிடம்சென்று, “உமது மகன் சித்தார்த்தர் இறந்துவிட்டார்” என்று சொன்னார்கள். “இதைக் கேட்ட அரசன், “என்னுடைய மகன் புத்த நிலையையடைந்த பிறகு இறந்தாரா, அல்லது அந்நிலையை யடையவதற்கு முன்பு இறந்தாரா?” என்று அவர்களை வினவினார். அதற்கு அவர்கள், “புத்த பதவியடைவதற்கு முன்பே இறந்துவிட்டார்” என்று விடையளித்தார்கள். அதற்கு அரசன், “என் மகன் புத்தபதவி அடைவதற்கு முன்பு இறக்கமாட்டார். நீங்கள் சொல்வது தவறு” என்று கூறி அவர்கள் சொன்னதை நம்பவில்லை.

மூர்ச்சையடைந்து தரையில் விழுந்த கௌதம முனிவர் நெடுநேரம் சென்றபிறகு மூர்ச்சை தெளிந்து எழுந்தார். பிறகு “இனி உணவு கொள்ளாமல் பட்டினி நோன்பு நோற்பேன்” என்று தமக்குள் தீர்மானம் செய்துகொண்டார். இவருடைய எண்ணத்தையறிந்த தேவர்கள் இவரிடம் வந்து, “போதிசத்துவரே! தாங்கள் உணவு கொள்ளாமல் உண்ணாநோன்பு நோற்பீரானால், தங்கள் உடம்பிலுள்ள மயிர்க் கால்கள் வழியாக உணவுச் சத்தினைத் தங்களுடைய உடம்பில் செலுத்துவோம்” என்று கூறினார்கள்.

இதைக்கேட்ட கௌதமர், “நான் உணவு கொள்வதை அடியோடு நிறுத்திவிட்டால், இவர்கள் மயிர்க் கால்களின் வழியாக ஆகாரத்தை உடம்பில் செலுத்துவார்கள். அதனால் நான் உணவை உட்கொண்டவன் ஆவேன். இவர்கள் அவ்விதம் செய்யாதபடி நானே சிறிதளவு உணவை உட்கொள்வது நலம்” என்று தமக்குள் கருதினார். இவ்வாறு கருதின கௌதம முனிவர் கொள்ளு, கடலை, பயறு முதலியவற்றை வேகவைத்து நீரை மட்டும் உட்கொள்வது நல்லது என்று கருதி அதன்படியே பயறுகளை வேகவைத்த நீரை மட்டும் சிறிதளவு உட்கொண்டார்.

உடல் வற்றிப்போதல்

இவ்வாறு அற்ப உணவாகிய பயற்றுநீரை மட்டும் உட்கொண்டு வேறு எவ்வித உணவையும் உண்ணாதபடியினாலே, நாளடைவில் கௌதம முனிவருடைய உடம்பு இளைத்துவிட்டது. அவருடைய புட்டங்களில் சதை சுருங்கிக் குழிவிழுந்தன. முதுகெலும்பு முடிச்சு போடப்பட்ட கயிறுபோலத் தெரிந்தது. விலா எலும்புகள், எண்ணக் கூடியபடி, வெளியே தெரிந்தன. நெற்றியிலும் முகத்திலும் உள்ள தோல், வெயிலில் காய்ந்த கத்தரிக்காயின் தோல்போலச் சுருங்கிவிட்டது. வயிறு ஒட்டிப் போயிற்று. கண்கள் குழிவிழுந்துவிட்டன, உட்காரும் போதும் தலைகுனிந்தது. கையினால் தலையைத் தடவினால் தலை மயிர் உதிர்ந்தது. உடம்பைத் தடவினால் உடம்பில் உள்ள மயிர்கள் உதிர்ந்தன. இந்த நிறம் என்று தெரிந்துகொள்ள முடியாதபடி உடம்பின் நிறம் மாறிவிட்டது. உடம்பு கருநிறமா நீலநிறமா மண்நிறமா என்று சொல்ல முடியாதபடி நிறம் மாறிப்போயிற்று. இவருடைய உண்ணாநோன்பு இவரை இவ்வாறு செய்துவிட்டது. உடம்பில் இவ்வளவு துன்பம் ஏற்பட்டபோதிலும் இவருடைய மனஉறுதி மட்டும் மாறவில்லை

மயங்கி விழுதல்

உண்ணா நோன்பினாலே உடல் வற்றிப்போன கௌதமமுனிவர் ஒரு சமயம் மலம் கழிக்க உட்கார்ந்தார். வயிறுவற்றிக் குடல் ஒட்டிப்போனபடியினாலே மலத்துவாரம் அடைபட்டு அதில் அதிக வலி உண்டாயிற்று. அந்த வலி பொறுக்கமுடியாமல் கௌதம முனிவர் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். இந்த நிலையில் இவரைக்கண்ட ஓர் ஆள் இவர் இறந்துவிட்டார் என்று கருதி, இவருடைய தந்தையான சுத்தோதன அரசனிடம் சென்று, “உமது மகன் இறந்துவிட்டார்” என்று கூறினான். அரசன், “புத்த ஞானம் பெற்ற பிறகு இறந்தாரா, பெறாத முன்பு இறந்தாரா?” என்றுகேட்டார். “புத்த ஞானம் பெறுவதற்கு முன்பே இறந்துவிட்டார்” என்று அவன் கூறினான். “போ, போ, என் மகன் புத்தஞானம் பெறுவதற்கு முன்பு இறக்கமாட்டார்” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

மயக்கமடைந்து கீழே விழுந்த கௌதமமுனிவர் நெடுநேரஞ்சென்று மயக்கந் தெளிந்து எழுந்து தமது ஆசிரமம் சென்றார். இந்த நிலையிலும் கௌதமமுனிவர் மீண்டும் அப்பிரணத் தியானம் செய்யத்தொடங்கினார். மூக்கையும் வாயையும் மூடி மூச்சையடக்கினார். அப்போது மூச்சு காதின் வழியாக வெளிப்பட்டது. காதுகளையும் கைகளினாலே அடைத்துக் கொண்டார். அதனால் சுவாசம் தலையை முட்டிற்று. தலையில் வலி உண்டாயிற்று. மூச்சு தலைக்குமேலே போக முடியாமல் கீழிறங்கி வயிற்றைத் துளைத்தது. அப்போது, கூரிய கத்திகொண்டு வயிற்றைக் குத்துவது போன்று பெருத்தவலி உண்டாயிற்று. இவ்வாறு கௌதம முனிவர் அடிக்கடி அப்பிரணத்தியானத்தைச் செய்து கொண்டிருந்தார். இதனால் கடுமையான வலியும் துன்பமும் இவர் உடம்பில் ஏற்பட்டன. ஆனாலும் விடாமல் உறுதியோடு செய்துவந்தார். ஆனால், இவருடைய மனம் ஒரு நிலைப்பட்டு உறுதியாக இருந்தது. இவ்வாறு உடம்பை அடக்கிக் கட்டுப்படுத்திய படியினாலே இவருடைய மனமும் கட்டுக்கடங்கி நன்னிலையில் உறுதியாக இருந்தது.

மாரன் உபதேசம்

நிர்வாண மோக்ஷம் என்னும் வீடுபேற்றினை அடைவதற்காக உடம்பையும் உயிரையும் பொருட்படுத்தாமல் அப்பிரணத் தியானத்தை மும்முரமாகச் செய்துவந்தார் கௌதம முனிவர். இவருடைய விடாமுயற்சியைக் கண்ட வசவர்த்தி மாரன்2 தனக்குள் இவ்வாறு எண்ணினான். “இந்தச் சித்தார்த்தருடைய முயற்சி மிகப்பெரிது. இவர் செய்கிற கடுமையான தியானமும் தவமும் மிகப்பெரியன. ஆகையினாலே ஒருநாள் இவர் புத்த பதவியடைவது உறுதி. இவர் புத்தராவதைத் தடுக்கவேண்டும். ஆகையினாலே இப்பொழுதே இவரிடம் சென்று சில யோசனைகளைக் கூறி இவர் மனத்தைக் கலைத்து இவருடைய கடுமையான தவத்தை நிறுத்துவேன்.”

இவ்வாறு தனக்குள் எண்ணிக்கொண்ட வசவர்த்திமாரன், கௌதமமுனிவரிடம் வந்தான். வந்து இவ்வாறு கூறினான், “அன்பரே! தங்கள் உடல் பெரிதும் மெலிந்து விட்டது. உடலின் நிறமும் மாறிவிட்டது. மரணம் உம்மை நெருங்கியிருக்கிறது. நீர் செய்யும் அப்பிரணத்தியானம் முதலிய தபசுகள் உம்முடைய மரணத்திற்குக் காரணமாக இருக்கின்றன. நீர் ஏன் இறக்கவேண்டும்? இறப்பதைவிட உயிர்வாழ்வது எவ்வளவோ மேன்மையானது. உயிருடன் இருந்தால் நல்ல புண்ணிய காரியங்களைச் செய்யலாம். பிரமசரியனாகவும் இருக்கலாம். அக்கினி பூசையும் செய்யலாம். அக்கினி பூசை செய்தால் உம்முடைய புண்ணிய காரியங்கள் அதிக பலனையடையும். கடுமையாகத் தியானம் செய்வது தக்கபலன் அளிக்காது என்று உமக்கே இப்போது ஐயமுண்டாகிறது. இதற்கு முன்பு, போதிசத்துவர்கள் புத்த பதவியடையச் சென்ற மார்க்கங்கள் எல்லாம் மிகவும் கடினமாக இருந்தன. நீர் ஏன் வீணாக முயற்சி செய்கிறீர்? இந்தக் கடுமையான முயற்சிகள் உமக்கு மரணத்தைத்தான் கொடுக்கும். இதை நீர் விட்டுவிடும்” என்று கூறி போலியான அன்பைக் காட்டி இனிமையாகப் பேசினார்.

வசவர்த்தி மாரனுடைய பொய்யன்பையும் போலிப் பேச்சையும் கேட்ட கௌதமமுனிவர் அவனிடம் வெறுப்புக்கொண்டார். அவனைப் பார்த்து இவ்வாறு கூறினார் “மனவுறுதியற்ற சோம்பேறிகளை வசப்படுத்தும் மாரனே! என்னுடைய இந்த முயற்சியைக் கெடுத்து அழிப்பது உனக்கு ஊதியம்தரும் என்று எண்ணி இங்கு வந்து இந்த வார்த்தைகளைக் கூறினாய். நீர் புகழ்ந்து பேசுகிற அக்கினி பூசை முதலியவைகளில் பலன் ஒன்றும் இல்லை என்பது எனக்குத் தெரியும். அவை யாருக்குப் பயன்படுமோ அவர்களிடம் அதைக் கூறு.

“முயற்சி, ஊக்கம், அறிவுடைமை, முதலான பஞ்ச இந்திரியங்கள் (ஐந்து குணங்கள்) என் மனத்தில் உள்ளன. இந்த நல்ல குணங்கள் நிறையப்பெற்று மிகவும் முயற்சியுடன் இருக்கிற என் மனத்தை நிர்வாண மோக்ஷம் அடைவதற்காக அர்ப்பணம் செய்து இருக்கிற படியினாலே, உலகில் வாழவேண்டியதைப் பற்றிய கவலை எனக்கில்லை.”

“நான் அப்பிரணத் தியானங்களைச் செய்ததனாலே ஏற்பட்ட வாயுவானது ஆறுகளின் நீரையும் வற்றச் செய்யக்கூடியது. அப்படிப்பட்ட வாயு என் உடம்பிலுள்ள இரத்தத்தை வற்றச் செய்யாமல் இருக்குமா? இரத்தம் வற்றினால் பித்தமும் சிலேத்துமமும் சதையும் வற்றிப்போகும். அப்போது மனமானது மிக்க ஒளியுடன் இருக்கும். மனமும், அறிவும், தியானமும் (சமாதியும்) மிக உறுதியாக அசையாமல் நிற்கும். என் மன உறுதியையறியாமல் நீ என் உடம்பை மட்டும் பார்த்துவிட்டு, தேகம் மெலிந்துபோயிற்று என்கிறாய். உறுதியோடும் முயற்சியுடனும் பாவனா தியானத்தோடு இருக்கிற என்னுடைய மனோ முயற்சியைக் கலைக்க உன்னால் முடியாது. உடல் மெலிந்தபோதிலும் என் முயற்சியை விட்டுத் திரும்பிப்போய் அரசபோகங்களையும் இன்ப சுகங்களையும் அனுபவிக்க என்மனம் விரும்பாது.

“ஓ, மாரனே! உன்னை நான் நன்கு அறிவேன். உன்னிடம் பலமுள்ள பத்துவிதமான சேனைகள் உள்ளன. காமம் என்பது உன்னுடைய முதல் படையாகும். குணதர்மங்களில் (நல்ல குணங்களில்) வெறுப்புடைமை உன்னுடைய இரண்டாவது சேனை. பசியும் தாகமும் உன்னுடைய மூன்றாம்படை. உணவு முதலியவற்றை அடைய முயற்சிசெய்வது உனது நான்காவது படை. மன உறுதியில்லாமை என்பது உன்னுடைய ஐந்தாம் படை. அச்சமுடைமை என்பது உன்னுடைய ஆறாவது சேனையாகும். நன்மை தீமைகளைப் பகுத்துணர முடியாமல் ஐயப்படுவது உனது ஏழாவது படையாகும். பிறருடைய நற்குணங்களை மறைப்பதும் நல்லுபதேசங்களை மதியாதிருப்பதும் உன்னுடைய எட்டாவது படை. பொருள் ஆசையும் மானம் (கர்வம்) உடைமையும் உன்னுடைய ஒன்பதாவது சேனை. தன்னைப் பெரிதாக மதித்து மற்றவரை அவமதிப்பது உன்னுடைய பத்தாவது சேனை. ஓ, மாரனே! இந்தப் பத்துப் பாவகாரியங்களும் உன்னுடைய பலமான சேனைகள் ஆகும். உன்னுடைய இந்தப் பத்துச் சேனைகளைக் கொண்டு நீ பிராமணர்களுக்கும் சிரமணர்களுக்கும் துன்பத்தை உண்டாக்குகிறாய்.”

உறுதியற்ற பலவீனமான மனத்தை உடையவர்கள் இந்தச் சேனைகளினாலே உனக்குத் தோல்வி அடைகிறார்கள். உறுதியான பலமுள்ள மனத்தையுடையவர்கள் உன்னை வெற்றி கொள்கிறார்கள். இந்த வெற்றியினாலேதான் ஏகாந்த சுகம் கிடைக்கும். நான் வெற்றிபெறாமல் திரும்புவேன் என்று நினைக்காதே, இந்தக் கிலேச3 யுத்தத்திலே நான் தோல்வியடைவேனானால் எனக்கு அவமானம் ஏற்படும். தோல்வியடைந்து உயிர் வாழ்ந்திருப்பதைக் காட்டிலும் போர்க்களத்திலே இறந்துபடுவது மேலானது. சில சிரமணர்கள் இவ்விதக் கிலேச சேனைகளின் போராட்டத்தில் மனவுறுதியுடன் இராமல் மனச்சோர்வு அடைகிறபடியினாலே அவர்கள் தோல்வியடைகிறார்கள்.

இவ்வாறு கௌதமமுனிவர் வசவர்த்தி மாரனிடம் கூறினார். இதைக்கேட்ட மாரன், “இவரை நம்மால் வெல்லமுடியாது” என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு போய்விட்டான்.

ஆனாபான ஸ்மிருதித் தியானம்

கௌதமமுனிவர் மேலும்மேலும் கடுமையாகத் தவம்செய்தார்; நெடுங்காலம் செய்தார். அப்போது இவருக்கு இவ்வித எண்ணம் உண்டாயிற்று: “உலகத்திலே கடுமையான தபசு செய்கிறவர்களைவிட அதிகக் கடுமையாக நான் தவம் செய்கிறேன். அந்தத் தபசிகள் எனக்குச் சமானமானவர் அல்லர். என்னைவிடக் கடுந்தபசு செய்கிறவர் ஒருவரும் இலர். இவ்வாறு கடுந்தவம்செய்தும் நான் புத்த நிலையை அடையவில்லை. ஆகையால் இந்த முறையும் புத்த ஞானத்தையடைவதற்கு வழியல்ல.”

இவ்வாறு கௌதம முனிவருக்கு எண்ணம் உண்டாயிற்று. அப்போது, சென்ற காலத்தைப் பற்றிச் சிந்தித்தார். தாம் சிறுவராக இருந்த காலத்தில், வப்பமங்கல விழாவில் தமது தந்தையார் நிலத்தை உழுதுகொண்டிருந்தபோது, தாம் செய்த ஆனா பானஸ்மிருதி தியானந்தான் புத்த பதவி அடைவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அந்தத் தியானத்தைச் செய்யவேண்டும் என்றும் நினைத்தார். ஆனால், உடம்பு வற்றி ஒடுங்கிப் போன நிலையில் அந்த ஆனாபானஸ்மிருதி தியானத்தைச் செய்வது முடியாது. ஆகையினாலே உடம்புக்குச் சிறிது வலிவுகொடுத்து அதைத் தேற்றினபிறகு அந்தத் தியானத்தைச் செய்யவேண்டும் என்று தமக்குள் எண்ணினார்.

இவ்வாறு எண்ணிய கௌதமமுனிவர், தமது பிச்சைப் பாத்திரத்தைத் தேடி எடுத்துக்கொண்டு, பிச்சை ஏற்பதற்காக உருவேல கிராமத்திற்குச் சென்றார். வாடி வற்றிப்போன இவரைக்கண்ட அக்கிராமத்தார் தமக்குள் இவ்வாறு நினைத்தார்கள். “முன்பு இந்த முனிவர் நமது கிராமத்தில் பிச்சைக்கு வந்தார். பிறகு பிச்சைக்கு வராமல் நின்றுவிட்டார். இவர் வராத படியால் இவர் ஆசிரமத்துக்கு உணவு கொண்டுபோய்க் கொடுத்தபோது, உணவு வேண்டாம் என்று மறுத்துவிட்டுக் காய்கனிகளை மட்டும் உணவாகக்கொண்டு தவம் செய்தார். இப்போது இவர் பிச்சைக்கு வருகிறார். இவர் எண்ணியிருந்த காரியம் கைகூடிவிட்டதுபோலும், ஆகையினாலே இவருக்கு நல்ல உணவைக் கொடுக்கவேண்டும்”. இவ்வாறு நினைத்த அந்தக் கிராமத்தார் இவருக்கு நல்ல உணவைக் கொடுத்தார்கள்.

போதிசத்துவராகிய கௌதம முனிவர் கிராமத்தில் சென்று பிச்சை ஏற்று உணவு கொள்வதைக்கண்டு, இவருடன் இருந்து இவருக்குத் தொண்டு செய்துவந்த ஐந்து தொண்டர்களான தாபசர்களும் இவர்மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். “இவர் உடம்புக்குச் சுகம் தருகிறார். ஆகையால் இவர் அடையக் கருதியிருக்கும் நிலையை இவர் அடையமுடியாது. நாம் இனி இவரிடம் இருக்கவேண்டியதில்லை” என்று அவர்கள் தமக்குள் பேசிக்கொண்டு இவரைவிட்டுப் போய்விட்டார்கள். போன இவர்கள் நெடுந்தூரத்தில் உள்ள வாரணாசி (காசி)க்கு அருகில் இருந்த இசிபதனம் என்னும் இடத்தில் தங்கினார்கள்.

உடல் நலம் அடைகிறவரையில் கௌதமமுனிவர் தியானம் முதலியவை ஒன்றும் செய்யாமல் வாளாஇருந்தார். உடம்பில் போதியஅளவு வலிவு ஏற்பட்ட பிறகு, ஆனாபான ஸ்மிருதி தியானத்தைச் செய்யத் தொடங்கினார்.

மனத்தைப் பண்படுத்தல்

அப்போது போதிசத்துவருக்கு நைஷ்கிர்ம்யம் முதலான குசல (நல்ல) எண்ணங்கள் அவருடைய மனத்தில் ஆற்றிலே நீரோடுவதுபோல ஓடின. முன்பு மிகவும் வற்றிப்போயிருந்த தமது உடம்பு இப்போது நன்னிலையடைந்திருக்கிறது என்று நினைத்தார். உடனே, இவ்வாறு உடம்பைப்பற்றி நினைப்பது தவறு! இப்படி எண்ணுவது கூடாது என்று தீர்மானித்தார். ஆசிரமத்தின் எதிரிலே மான், பசு, முயல் முதலியவை வருவதைக்கண்டார். மரங்களில் மயில் குயில் கிளி முதலிய பறவைகள் அமர்ந்து கூவுவதைக் கேட்டார். அருகில் உள்ள குளம் குட்டைகளில் தாமரை அல்லி முதலிய மலர்கள் அலர்ந்திருக்கும் இனிய காட்சியையும் எதிரில் ஓடிக்கொண்டிருக்கும் நேரஞ்சர ஆற்றின் தூய நீரோட்டத்தின் அழகிய இயற்கைக் காட்சியையும் கண்டார். இவையெல்லாம் அழகிய காட்சிகள் என்று அவர் மனத்தில் நினைத்தார். அப்போது, இவ்வாறு நினைப்பதுங்கூட நல்லதன்று; இப்படிப்பட்ட எண்ணங்களையும் அடக்கவேண்டும் என்று அவர் தமக்குள் எண்ணிக்கொண்டார். அதிக வெயில், அதிகக் குளிர் முதலிய தட்பவெப்ப நிலைகளைப்பற்றியும் மனத்தில் விருப்புவெறுப்புக் கொள்ளக்கூடாது என்றும் அத்தகைய எண்ணங்களையும் தடுக்க வேண்டும் என்றும் தம்முள் கருதினார்.

தமது ஆசிரமத்தைச் சூழ்ந்துள்ள காடுகளில் புலி, மான், பன்றி முதலான மிருகங்களுக்குத் துன்பம் உண்டாவதைக் கண்டார். பிச்சைக்காகக் கிராமத்தில் போகும்போது வேலையில்லாமல் கஷ்டப்படுகிற மக்களைக் கண்டார். சிலர் மற்றவர்களுக்குத் துன்பம் உண்டாக்குகிற கொடுமைக் காட்சியையுங் கண்டார். இவைகளைக் கண்டபோது இவருக்கு மனத்திலே வருத்தம் உண்டாயிற்று. அப்போது இவ்வாறு நினைப்பதுங்கூட தவறு: இப்படி நினைப்பதினாலே மனம் சிதறுகிறது என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.

மனத்திலே ஏற்படுகிற எண்ணங்களையெல்லாம் நல்லவை என்றும் தீயவை என்றும் இரண்டுவிதமாகப் பகுத்துப் பார்த்தார். தமது உள்ளத்திலே தோன்றுகிற நல்ல எண்ணங்கள் தமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் என்று நினைத்தார். இந்த நல்ல எண்ணங்களினாலே புத்த பதவியும் கிடைக்கும் என்று அவர் கருதினார். இவ்வாறு இரண்டு விதமான எண்ணங்களைப் பற்றி விழிப்புடனும் ஊக்கத்தோடும் இரவும் பகலும் எண்ணிக்கொண்டே மனத்திற்கு அதிக வேலை கொடுத்துக் கொண்டிருந்த படியினாலே அவர் மூர்ச்சையடைந்து கீழே விழுந்தார்.

மனதுக்கு அமைதி ஏற்படாதபோது உடலுக்கும் அமைதி ஏற்படாது. ஆகையினாலே, மனத்திற்கு ஏற்பட்ட துன்பங்களைப்போக்க, தியானத்தில் அமர்ந்து அமைதியை உண்டாக்கினார். தம்மையும் மீறித் தீயஎண்ணங்கள் வந்தால் உடனே அவைகளை நீக்கி நல்ல எண்ணங்களையே நினைத்தார். இவ்வாறு மனத்தை ஒரு நிலைப்படுத்தி அதனைப் பண்படுத்தக் கடுமையான முயற்சி செய்துகொண்டு ஆறு ஆண்டுகளைக் கழித்தார்.

ஐந்து கனவுகள்

ஒரு வைகாசித் திங்கள் வளர்பிறையின் பதினான்காம் நாள் இரவு போதிசத்துவராகிய கௌதமமுனிவர் கண் உறங்கிக் கொண்டிருந்தபோது கடைசி யாமத்திலே ஐந்துவிதமான கனவுகளைக் கண்டார். அந்தக் கனவுகள் இவை :

இந்தப் பரதகண்டம் பாய்போலவும் இமயமலை (மேரு மலை) தலையணை போலவும் கிடந்தன. இந்தப் பாயிலே கௌதமமுனிவர் மல்லாந்து படுத்துக்கொண்டிருப்பது போலவும் அவருடைய வலதுகை மேற்கிலும் இடதுகை கிழக்கிலும் கால்கள் தெற்கிலும் இருப்பது போலவும் கனவுகண்டார். இந்தக் கனவின் கருத்து என்னவென்றால், போதிசத்துவராகிய கௌதமமுனிவர் கட்டாயமாகப் புத்த பதவியையடைவார் என்பதே.

இவ்வாறு படுத்திருக்கும்போது தம்முடைய நாபியில் (கொப்பூழ்) இருந்து, சிவந்த நிறமுள்ள கம்புச்செடி ஒன்று உயரமாக வானம் வரையில் வளர்ந்து சென்றதுபோலக் கனவு கண்டார். இந்தக் கனவின்பொருள் ஆரிய (உயர்ந்த) அஷ்டாங்க மார்க்கத்தைத் தாமே கண்டறிந்து அதை மக்களுக்குப் போதிக்கப்போகிறார் என்பது.

பின்னர்க் கருமையான தலையும் வெண்மையான உடலும் உள்ள சிறு பூச்சிகள் கூட்டமாக வந்து இவருடைய கால் நகங்களை மொய்த்துக்கொண்டன. பின்னர் அவை கொஞ்சங்கொஞ்சமாக முழங்கால்வரையிலும் ஏறிவந்து மொய்த்துக் கொண்டன. இந்த மூன்றாவது கனவின் கருத்து என்னவென்றால், இல்லறத்தார் இவரிடம் வந்து இவருடைய உபதேசங்களைக் கேட்டு, இவருக்கு உபாசகத் தொண்டர்கள் ஆவார்கள் என்பதாகும்.

பின்னர், நான்கு திசைகளினின்றும் நான்குவித நிறமுள்ள பறவைகள் பறந்துவந்து தம்முடைய காலடியில் தங்கித் தம்மை வணங்கியதாகக் கனவுகண்டார். இதன் கருத்து, பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு சாதி மக்கள் இவரிடம் வந்து உபதேசம்பெற்றுத் துறவுகொள்வார்கள் என்பது.

ஐந்தாவதாக, மலக்குவியலின்மேல் நடந்து சென்றது போலவும் ஆனால், கொஞ்சமும் காலில் மலம் ஒட்டாதது போலவும் கனவுகண்டார். உணவு உடை முதலியவை இவருக்குக் கிடைத்தாலும் அவற்றின்மீது இவருக்குப் பற்றுதல் இருக்காது என்பது இந்தக் கனவின் கருத்தாகும்.

கௌதம முனிவர் இவ்விதம் ஐந்துவிதமான கனவுகளைக்கண்டு இவற்றின் கருத்துக்களைத் தாமே ஆராய்ந்து அறிந்துகொண்டார். தமக்குக் கட்டாயப் புத்த பதவி கிடைக்கும் என்னும் நம்பிக்கை இவருக்கு உண்டாயிற்று. பின்னர், விடியற்காலையில் எழுந்துசென்று காலைக் கடன்களை முடித்துக்கொண்டு அஜபாலன்4என்னும் பெயருள்ள ஆலமரத்தண்டை சென்று அம்மரத்தின் அடியில் அமர்ந்தார். அவ்விடத்தில் நெடுநேரம் தங்கியிருந்தார்.

பாயச உணவு

அன்று வைகாசித் திங்கள் வெள்ளுவாநாள் (முழு நிலா நாள்) அருகில் உள்ள சேனானி என்னும் கிராமத் தலைவனுடைய மகள் சுஜாதை என்பவள், தான் நேர்ந்து கொண்ட பிரார்த்தனையைச் செலுத்தவேண்டிய நாள் அது. சுஜாதை மணப்பருவம் அடைந்தபோது ஒரு பிரார்த்தனை செய்துகொண்டாள். தனக்குத் தகுந்த கணவன் வாய்த்து மணம் செய்துகொண்டு பிள்ளைப்பேறு உண்டாகி, அப்பிள்ளையும் ஆணாகப் பிறக்குமானால் அஜபால மரத்தில் அமர்ந்திருக்கும் தெய்வத்திற்குப் பொன் பாத்திரம் நிறையப் பால் பாயசம் வழங்குவதாகப் பிரார்த்தனை செய்துகொண்டாள். அதன்படியே சுஜாதைக்குத் தகுந்த கணவன் வாய்த்துப் பிள்ளைப்பேறும் உண்டாயிற்று. ஆகவே, தனது பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக அவள் அன்று அதிகாலையில் எழுந்து பசுக்களைப் பால்கறந்து பாயசம் காய்ச்சினாள். பாயசம் காய்ச்சும்போதே தன் பணிப்பெண் புண்ணியை என்பவளை அழைத்து, அஜபால மரத்தண்டை சென்று அந்த மரத்தடியை அலகிட்டுச் சுத்தம்செய்து வரும்படி அனுப்பினாள். அவ்வாறே அப்பணிப்பெண் ஆலமரத்திற்குச் சென்றபோது அந்த மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் கௌதம முனிவரையும் அவர் முகத்தில் காணப்பட்ட தெய்வீக ஒளியையும் கண்டு வியப்படைந்தாள். அஜபால மரத்தில் வசிக்கும் தெய்வம் என்றே அவரை அவள் நினைத்துக் கொண்டாள். உடனே ஓடோடியும் வந்து இந்தச் செய்தியைச் சுஜாதைக்குச் சொன்னாள். சுஜாதை பெரிதும் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தவளாய், தான் சமைத்த பால் பாயசத்தைப் பொன் பாத்திரத்தில் ஊற்றி அதன்மேல் மற்றொரு பாத்திரத்தை மூடி அதைத் தானே தன் தலைமேல் வைத்துக்கொண்டு ஆலமரத்திற்கு வந்தாள். அவளுடன் அவளுடைய பணிப்பெண்ணும் மற்றத் தோழிப் பெண்களும் வந்தார்கள்.

தூரத்திலிருந்து பார்க்கும்போதே, அஜபால ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் போதிசத்துவரைச் சூழ்ந்து ஒருவிதமான தெய்வீக ஒளி காணப்பட்டதைச் சுஜாதை கண்டாள். கண்டு, வியப்புடனும் பக்தியுடனும் அவரை அணுகி, அவர் முன்பு பாயசப் பாத்திரத்தை வைத்து வணங்கினாள். “சுவாமி! இந்தப் பாயசத்தை இப்பாத்திரத்தோடு தாங்கள் ஏற்றுக்கொண்டருளவேண்டும். அடியேனுடைய எண்ணம் நிறைவேறியது போன்று தங்களுடைய உள்ளக் கோரிக்கையும் நிறைவேறுவதாக” என்று கூறி அவரை மும்முறை வலம்வந்து வணங்கி வீடு சென்றாள்.

சுஜாதை போனபிறகு கௌதமமுனிவர் பாயசப் பாத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நேரஞ்சர ஆற்றங்கரைக்குச் சென்றார். சென்று சுப்பிரதிஷ்டை என்னும் பெயருள்ள துறையருகில் ஒரு மாமரத்தின் கீழே பாத்திரத்தை வைத்துவிட்டுத் துறையில் இறங்கி நீராடிக் கரைக்குவந்து சீவர ஆடையை அணிந்து கொண்டார். பின்னர் மர நிழலிலே அமர்ந்து பாயசத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக நாற்பத்தொன்பது சிறுசிறு கவளங்களாக உட்கொண்டார். பிறகு, “நான் புத்த பதவியையடைவது உறுதியானால், இந்தப் பாத்திரம் நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லட்டும்” என்று தமக்குள் கருதிக்கொண்டு அந்தப் பாத்திரத்தை ஆற்றுநீரிலே வீசி எறிந்தார். நீரிலே விழுந்த அந்தப் பாத்திரம் நீரோட்டத்தை எதிர்த்துச் சிறிது தூரம் சென்று பிறகு கிறுகிறுவென்று சுழன்று நீரில் அமிழ்ந்துவிட்டது. இதைக்கண்ட போதிசத்துவர் தமக்குப் புத்தபதவி கிடைப்பது உறுதி என்று அறிந்து கொண்டார்.

பிறகு போதிசத்துவர், அழகுவாய்ந்த புனிதமான பத்திரவனம் என்னும் இடத்திற்குச் சென்றார். அந்த வனத்திலே சால மரங்கள் பசுமையான இலைகளுடனும் நறுமணமுள்ள மலர்களுடனும் இனிய காட்சியளித்தன. இச்சோலைக்குச் சென்ற போதிசத்துவராகிய கௌதமமுனிவர், தாம் முன்பு ஆளாரர், உத்ரகர் என்னும் தாபசர்களிடம் கற்ற எட்டு சமாபத்திகளாலும் ஐந்து அபிஞ்ஞைகளாலும் ஆறு ஆண்டுகளாகத் தாம் செய்துவந்த அப்பிரணத்தி

யானம் முதலியவைகளினாலும் தமது மனத்தில் ஏற்பட்டிருந்த மலினங்களையெல்லாம் நீக்கிச் சுத்தப்படுத்திக் கொண்டார். அதாவது, சித்த விசுத்தி (மனத்தைச் சுத்தம்) செய்துகொண்டார்.

✽ ✽ ✽

அடிக்குறிப்புகள்

1. பண்டவமலை என்பது வெளிறிய மஞ்சள் நிறமான மலை என்பது பொருள்.

2. மாரன் என்பவன் மனிதரைச் சிற்றின்பத்தில் மனங்கொள்ளச்செய்து பாபங்களைச் செய்யத் தூண்டுபவன்.

3. கிலேசம் - மனக் குற்றம்.

4. அஜபாலன் - ஆட்டிடையன்.