மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/004

புத்தராகிப் பௌத்த தர்மம் உபதேசித்தது

போதிமரத்தை அடைதல்

இவ்வாறு கௌதமமுனிவர் அன்று பகலில் பத்திரவனத்தில் தங்கிச் சித்த விசுத்தி செய்துகொண்ட பிறகு மாலை நேரமானவுடன் சாலவனத்தை விட்டுப் புறப்பட்டுப் போதிமரம் (அரச மரம்) இருக்கும் இடத்திற்குச் சென்றார். செல்லும் வழியிலே எதிர்ப்பட்ட சுவஸ்திகன் என்னும் பிராமணன் இவருக்கு எட்டுப்பிடி தர்ப்பைப் புல்லைக் கொடுத்தான். தர்ப்பையைப் பெற்றுக்கொண்ட கௌதமமுனிவர், போதிமரத்தையடைந்து அதன் தென்புறத்திலே நின்றார். அப்போது அவ்விடம், தாமரை இலையில் தங்கிய தண்ணீர் உருளுவது போன்று நிலம் அசைந்தது. பிறகு மேற்குப்பக்கம் போனார். அங்கும் நிலம் அசைந்தது. அந்த இடத்தைவிட்டு வடக்குப்பக்கம் போய்நின்றார். அவ்விடத்திலும் நிலம் அசைந்தது. பிறகு கிழக்குப்புறம் வந்தார். அங்கு நிலம் அசைவற்று இருந்தது. இதுவே தகுந்த இடம் என்று கண்டு போதிசத்துவர் தமது கையிலிருந்த தர்ப்பைப் புல்லைத் தரையில் பரப்பிவைத்து அதன்மீது அபராஜித பரியங்கத்தோடு அமர்ந்தார். அதாவது உறுதியான மனத்தடன் அமர்ந்தார். “என்னுடைய உடம்பில் உள்ள தோல், சதை, இரத்தம், நரம்பு, எலும்பு முதலியவை உலர்ந்து வற்றிப்போனாலும் நான் புத்த பதவியை யடையாமல் இந்த இடத்தைவிட்டு எழுந்திருக்க மாட்டேன்” என்று உறுதியான எண்ணத்துடன் அரசமரத்தில் முதுகை வைத்துக் கிழக்கு நோக்கி இருந்து பதுமாசனத்தில் (வச்சிராசனம்) அமர்ந்தார்.

மாரன் போர்

கௌதம முனிவராகிய போதிசத்துவர் போதிமரத்தின்கீழ் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தபோது அவரைப்போற்றி வணங்குவதற்காகத் தேவர்களும் பிரமர்களும், ஆற்றில் நீரோடுவது போலக் கூட்டங்கூட்டமாக தேவலோகத்திலிருந்து மண்ணுலகத்திற்கு வந்தார்கள். தேவர்கள் எல்லோரும் இங்குவந்து விட்டபடியால் இதுவே தேவலோகம்போலக் காணப்பட்டது. மாலை வேளையானபடியினாலே சூரியன் மறைந்துவிட்டான். வெள்ளுவாநாள் ஆனபடியினாலே முழுநிலா, பால் போன்ற ஒளியை எங்கும் பரப்பிக்கொண்டு வானத்தில் எழுந்தது. முழுநிலா தோன்றும் இந்தக் காட்சி, போதிசத்துவராகிய கௌதமர் பத்துப் பாரமிதைகளை நிறைவேற்றி முடித்துவிட்டார் என்பதை உலகத்தாருக்குக் கூறுவதுபோலக் காணப்பட்டது. அப்போது போதிசத்துவர், அஸ்வத (அரச) மரத்தில் முதுகைவைத்துக் கிழக்குமுகமாக அமர்ந்து தியானத்தில் இருந்தார். இவருடைய உடம்பில் இருந்து வெளிப்பட்ட ஒளியானது இவர் இருந்த இடத்தில் சுடரொளிபோல் காணப்பட்டது.

அப்போது திடீரென்று சூறாவளிக்காற்று வீசியது. ஆகாயம் எங்கும் மேகங்கள் சூழ்ந்து கொண்டன. இருள் மூடிக்கொண்டது. பயங்கரமாக இடி இடித்தது. பூமி அதிர்ந்தது. அவ்விடத்தில் வந்திருந்த தேவர்களும் பிரமர்களும் அஞ்சி ஓடிப்போனார்கள். இடியும் மின்னலும் அச்சத்தை உண்டாக்கின. வால்வெள்ளிகள் காணப்பட்டன. விண்மீன்கள் எரிந்து விழுந்தன. காக்கைகள் கரைந்து ஓலமிட்டன. ஆந்தைகளும் மரநாய்களும் பயங்கரமாக அலறி ஊளையிட்டன. எலும்புக் கூடுகள் நடந்துவருவதுபோலப் பேய்கள் வெளிப்பட்டன. தலையற்ற உடல்கள் ஆகாயத்தில் பறந்தன. வாள், வில், வேல், கோடரி, ஈட்டி, கட்டாரி முதலிய ஆயுதங்களை ஏந்திக்கொண்டு பூதங்கள் அங்கே வந்தன. ‘பிடியுங்கள்! அடியுங்கள்! கட்டுங்கள்! கொல்லுங்கள்!’ என்னும் பயங்கரமான குரல்கள் கேட்டன. இவ்வாறு பயங்கரமான சேனையுடன் வந்தவன் யார்? இவ்வாறு வந்தவன் தேவசேனைகளையும் பிரம சேனைகளையும் முதுகு காட்டி ஓடச்செய்யும் பேராற்றல் வாய்ந்த வசவர்த்திமாரனே.

இவ்வாறு ஆர்ப்பரித்துக்கொண்டு போதிசத்துவர் மீது போருக்கு வந்த வசவர்த்திமாரன், அவருக்கு அருகே வரமுடியவில்லை. தூரத்திலேயே நின்றான், கௌதமமுனிவர் அஞ்சாமல், மான் கூட்டத்தின் இடையே சிங்கம் போலவும், பறவைகளின் கூட்டத்தில் கருடன் போலவும் வீற்றிருந்தார். முன் பிறப்புக்களிலே பாரதைகளை நிறைவேற்றினவர். ஆகையினாலே இவர் சிறிதும் அஞ்சாமல் வீற்றிருந்தார். சேனைகளுடன் வந்த மாரன், இவரைப் பார்த்து உரத்தக் குரலில் இவ்வாறு கூறினான். “நான் உலகத்திலே பெரியவன்; உயர்ந்தவன்; மேலானவன். நீயோ அற்ப சிறுமனிதன். பெரியவனாகிய நான் வரும்போது அற்ப மனிதனாகிய நீ எழுந்து நின்று வணங்காமல் ஏன் உட்கார்ந்திருக்கிறாய்? உனக்கு மட்டுமரியாதை இல்லையா? உனக்கு என்னிடம் அச்சம் இல்லையா?” என்று வெடிப்பான குரலில் அச்சமுண்டாகும்படிப் பேசினான். போதிசத்துவராகிய கௌதமர் சிங்கம்போல் அஞ்சாமல் வீற்றிருந்தார்.

அப்போது மாரன், இவருக்கு அச்சமுண்டாக்கி இவரை எழுந்து ஓடச்செய்வேன் என்று தனக்குள் நினைத்து, ஒன்பது விதமாக மழைகளைப் பொழியச்செய்தான். இவைகளினாலே போதிசத்துவருக்கு எவ்விதமான துன்பமும் உண்டாகவில்லை. அவர் அஞ்சாமல் சிங்கம்போல் வீற்றிருந்தார். மாரன் தான்அமர்ந்திருந்த கிரிமேகலை என்னும் யானையைப் போதிசத்துவர் மேல் ஏவினான். “ஓய்! அந்தப் பதுமாசனத்தில் இருந்து எழுந்து ஓடிப்போ!” என்று அதட்டிக் கூவினான். அப்போதும் போதிசத்துவர், குழந்தை தன்னைக் காலால் உதைத்தாலும் கோபப்படாத தாயைப்போல இருந்து, மாரனைப் பார்த்து, “மாரனே! இவ்விடத்தைவிட்டு நான் போகமாட்டேன்” என்று உறுதியாகக் கூறினார்.

அப்போது மாரனுடைய சேனைகள் வந்து அவரைச் சூழ்ந்துகொண்டன. போதிசத்துவர் கிரிமேகலை மீது அமர்ந்திருந்த மாரனைப் பார்த்து மேலும் கூறுவார் - “இந்தத் தர்ம யுத்தத்திற்கு நான் முனைந்து இருக்கிறேன். இந்தப் பதுமாசனத்தில் இருந்து மாரன் என்னை அசைக்கமுடியாது. உலகத்திலே ஒருவரும் வெல்லமுடியாத காமம், வெகுளி, மயக்கம் முதலான சேனைகள் உன்னிடம் இருக்கின்றன. ஆனாலும், நான் தனியாக இருந்து பிரஞ்ஞா (ஞானம், அறிவு) மூலமாகப் போர்புரிந்து உனது சேனைகளைத் தோல்வியுறச் செய்வேன். ஓ, மாறனே! நான் உயர்ந்த நன்ஞானத்தினாலே மித்தியா சங்கல்பத்தை (பொய் அறிவை) நீக்கி சம்யத் சங்கல்பம் கொண்டு நான்கு விதங்களினால் மனத்தைப் பண்படுத்தி அதை விழிப்புடன் நன்றாக வைத்திருக்கிறேன். என்னுடைய சீடர்களையும் விழிப்பாக இருக்கும்படி பயிற்சி செய்விப்பேன். நான் கூறுகிறபடி நடக்கிறவர்கள் நிர்வாண மோக்ஷத்தைப் பெறுவார்கள். உன்னால் தோல்வியுற மாட்டார்கள். அவர்கள் துக்கம் அற்ற நிர்வாணமோக்ஷத்தை யடைவார்கள்.”

இதைக்கேட்ட மாரன், “ஓ, சிரமணரே! என்னிடம் உமக்கு அச்சம் இல்லையா?” என்று கேட்டான்.

“இல்லை, மாரனே; உன்னிடம் எனக்கு அச்சம் இல்லை” என்று உறுதியாகக் கூறினார் போதிச்சத்துவர்.

“தேவர்களும் என்னை எதிர்க்கத் தைரியம் இல்லாதபோது, மனிதனாகிய நீ மட்டும் எக்காரணத்தினால் அச்சமில்லாமல் இருக்கிறாய்?” என்று கேட்டான் மாரன்.

“பத்துப் பாரமி1 தர்மங்களை நிறைவேற்றினவன் ஆகையினாலே உன்னிடத்தில் எனக்கு அச்சம் இல்லை” என்று கூறினார் போதிசத்துவர்.

“நீர் பாரமிக புண்ணியங்களை நிறைவேற்றினது யாருக்குத் தெரியும்? அதற்குச் சான்று உண்டா?” என்று கேட்டான் மாரன்.

போதிசத்துவர், “மாரனே! நான் சான்று காட்டவேண்டியதில்லை. ஆனாலும், நீ கேட்கிறபடியினாலே சான்று காட்டுவேன். ஒரு வெஸ்ஸந்தர ஜன்மத்திலே நான் தானங்கொடுத்தபோது ஏழு தடவை பூமி அதிர்ச்சிக்கொண்டது உண்மை என்பதை இந்தப் பூமிதேவி சான்று கூறுவாள்” என்றுகூறி, சீவர ஆடையின் உள்ளே இருந்த தமது கையை வெளியில் எடுத்துப் பூமியைச் சுட்டிக்காட்டினார்.

அப்போது பூமியானது பயங்கரமான ஓசையுடன் ஆறுதடவை அதிர்ந்தது. இதைக் கண்டுங் கேட்டும் அச்சங்கொண்ட மாரன் தன்னுடைய கொடியை எடுத்துக்கொண்டு சேனையுடன் ஓடிப்போனான். இவ்வாறு சூரியன் மறையுமுன்பே, போதிசத்துவர் மாரனை வென்று வெற்றிபெற்றார். இந்தப் போரை வெகுதூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த பிரமர்களும் தேவர்களும் போதிசத்துவர் வெற்றி பெற்றதைக்கண்டு, “துக்கமற்ற புண்ணியவான்களே! சித்தார்த்த போதிசத்துவருக்கு வெற்றி கிடைத்தது! வசவர்த்திமாரன் தோல்வியடைந்தான். ஆகையினாலே, ஜயமங்கள விழாவையும் புத்தமங்கள விழாவையும் ஒருங்கே கொண்டாடுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டே எல்லோரும் போதிமரத்தருகே வந்தார்கள்.

அப்போது ஆயிரம் கதிர்களையுடைய பொன்தட்டு ஒன்று தண்ணீரில் அமிழ்வதுபோல சூரியன்மேல் கடலில் மூழ்கினான். முழுநிலா பால்போன்ற ஒளியை எங்கும் வீசிக்கொண்டு ஆகாயத்திலே காணப்பட்டது. தூய்மையான வானத்திலே விண்மீன்கள் மின்னிக் கொண்டிருந்தன. இந்தக் காட்சி போதிசத்துவருக்கு அமைக்கப்பட்ட விதானம்போலத் தோன்றியது. வானமும் பூமியும் சேர்வதுபோல காணப்படும் வானவட்டமானது போதிசத்துவரைச் சூழ்ந்திருக்கும் பிரகாரம்போன்று காணப்பட்டது. பூமண்டலம் போதிசத்துவருக்கு அமைந்த ஓர் இல்லம்போலத் தோன்றியது. அடிமுதல் நுனி வரையில் நூறுமுழம் உயர்ந்து வளர்ந்த அந்த அரசமரமானது மயில் ஒன்று தன் தோகையை விரித்திருப்பதுபோன்று காணப்பட்டது. இந்தப் போதிமரத்தின் அடியிலே அமர்ந்து வசவர்த்தி மாரனை (தேவபுத்திர மாரனை) வென்ற போதிசத்துவர் கிலேசமாரன், மிருத்யு மாரன், ஸ்கந்தமாரன், அபிசம்ஸ்கார மாரன் என்னும் மற்ற மாரர்களையும் வெற்றி கொள்வதற்கு ஆயத்தமாக இருந்தார். அவரிடம் வந்த தேவர்களும் பிரமர்களும் அவரை வணங்கி வாழ்த்திப்போற்றிப் பிறகு தத்தம் இருப்பிடம் சென்றார்கள்.

போதிஞானம் அடைதல்

‘மதிநாள் முற்றிய மங்கலத் திருநாளாகிய வைசாகப் பௌர்ணமி அன்று மாலை வசவர்த்தி மாரனை வென்ற போதிசத்துவர், அவ்விரவின் முதல் யாமத்திலே யோகத்தில் அமர்ந்து படிப்படியாக முதலாவது, இரண்டாவது, மூன்றாவது நான்காவது என்னும் யோகங்களைச்செய்து நாலாவது யோகத்திலிருந்து மனத்தைச் செலுத்தித் தமது முன் பிறப்புக்களைக் காணத்தொடங்கினார். இவ்வாறு முற்பிறப்புக்களைக் காணும் இவருக்கு, முன்பு உண்டாகியிருந்த கணக்கற்ற பிறப்புகள் புலனாயின. இந்த முதல் யாமத்திலே யோகத்தை (அறியாமையை) நீக்கி முற்பிறவியைக் காண்கிற ஞானத்தையடைந்தார். இந்த ஞானத்திற்கு ‘முதல் சித்தி லாபம்’ என்பது பெயர்.

முதல் சித்தி லாபம் என்னும் இந்த ஞானத்தின் மூலமாகத் தமது முற்பிறப்புகளைக் கண்ட போதிசத்துவர், “நாமரூபங்கள் (உயிருடன் கூடிய உடம்பு) அந்தந்தப் பிறப்பிலே உண்டாகி அந்ததந்தப் பிறப்பிலேயே நாமரூபங்கள் தோன்றியபோது ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் தோன்றி அவையும் அந்தந்தப் பிறப்பிலேயே மறைந்து விட்டன; அழிந்துவிட்டன. ஆனால் தனிப்பட்டதும் அழியாததுமான உயிராவது, ஜீவனாவது, புருஷனாவது கிடையாது. ஆகையினாலே, இவைகளை உண்டாக்கிய கடவுளாவது பிரமனாவது மாரனாவது கிடையாது!” என்று அறிந்து இருபதுவிதமான சத்காய திருஷ்டியை (ஆத்ம திருஷ்டியை) நீக்கினார். இதுவே போதிசத்துவருக்குக் கிடைத்த முதல் விசுத்தியாகும்.

பிறகு போதிசத்துவர் அவ்விரவின் இடையாமத்திலே முன்போலவே யோகத்தில் அமர்ந்து அதன் மூலமாக நான்கு தியானங்களை அடைந்து நான்காவது தியானத்துக்கப்பால் தமது மனத்தைச் செலுத்தி ஜனங்களுடைய பிறப்பு இறப்புக்களைக் காணலானார். அப்போது இறக்குந் தருணத்தில் இருக்கிற உயிர்களையும், கருவிலே கிடந்து பிறக்குந் தருணத்தில் இருக்கிற உயிர்களையும், நன்மைகளைச் செய்த காரணத்தினாலே இன்பங்களை அனுபவிக்கிற உயிர்களையும் தீமைகளைச் செய்தபடியினாலே துன்பங்களை அனுபவிக்கிற உயிர் களையும் அவர் தமது மனக்காட்சியில் கண்டார். இவ்வாறு உயிர்களுடைய பிறப்பையும் இறப்பையும் கண்டபடியினாலே, அதுபற்றியிருந்த மாயை இவருக்கு இல்லாமற்போயிற்று. பிறப்பு இறப்பைப்பற்றிய மாயை நீங்கிவிடவே பதினாறுவிதமான ஐயங்கள் நீங்கிவிட்டன. இதுவே, போதிசத்துவருக்கு இரண்டாவதாகக் கிடைத்த காம்ஷாவிதரண விசுத்தி ஆகும்.

பிறகு இரவின் கடைசி யாமமாகிய மூன்றாவது யாமம் வந்தது. முன்போலவே போதிசத்துவர் பிரணாயாமம்செய்து யோகத்தில் அமர்ந்து நான்காவது நிலையையடைந்து உண்மைத் தத்துவத்தைக்காண மனத்தைச் செலுத்தினார். அப்போது, பஞ்ச ஸ்கந்தங்கள், அநித்யம், துக்கம், அநாத்மம் என்பவற்றைக் கண்டு, ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து, பன்னிரண்டு நிதானங்களிலே சொல்லுகிறபடி ஏழு விதமான விசுத்திமார்க்கத்தைக் கண்டார். இவைகளை மேன்மேலும் ஆராய்ந்து பார்த்து, அநித்திய தரிசனம் மூலமாக நித்தியம் என்னும் பொருளையும், துக்க தரிசனம் மூலமாகச் சுகம் என்னும் பொருளையும், அனாத்ம தரிசனம் மூலமாக ஆத்மசஜ்ஞை என்னும் பொருளையும் அறிந்தார். அவ்வாறே ஆராய்ந்து பார்த்து, விராக தரிசனத்தினாலே ராகத்தையும், நிர்விதானு தரிசனத்தினாலே நந்தி (ஆசை)யையும், நிரோதானு தரிசனத்தினாலே சமுதாயத்தையும் பிரதி நிச்சர்க்க தரிசனத்தினாலே ஆதானத்தையும் நீக்கினார்.

பிறகு, எல்லா சம்ஸ்காரங்களையும் இரண்டாகப் பிரித்து உதயம் (தோற்றம்), வியயம் (அழிவு) என்னும் முறையில் ஆராய்ந்து பார்த்தபோது ஆலோகம், பிரீதி, பிரஸ்ரப்தி, ஞானம், சிரத்தை, ஸ்மிருத்தி, சுகம், உபேக்ஷை, வீரியம், நிகாந்தி என்கிற விதர்சனா ஞானங்களும் இவற்றினின்று எதிர்மாறான ஞானங்களும் தோன்றின. (விதர்சனா ஞானம் அடைந்தபடியினாலே இவருடைய சரீரத்திலே இருந்த இரத்தம் தூய்மைபெற்று அதிலிருந்து பொன்னிறமான ஒளி வெளிப்பட்டது.)

மேலே சொன்ன ஆலோகம், பிரீதி, பிரஸ்ரப்தி முதலிய விஷயங்களை ஞானத்தினாலே ஆராய்ந்து பார்த்தபோது திருஷ்ணை, திருஷ்டியை, மானம் என்கிறவைகளுக்கு அவை ஆதாரமாக இருக்கிறபடியினாலே அது மோக்ஷ மார்க்கத்துக்கு வழியாகாது; ஆகவே, இந்தப் பாதையைவிட்டு நீங்கி விதர்சனா பாதையில் செல்வதே நல்வழி என்று அறிந்தார். இவ்வாறு நன்நெறி தீநெறிகளைக் கண்டு, ஆலோகம் முதலானவைகளிலே மனத்தைச் செலுத்தாமல் விதர்சனா பாவத்திலே மனத்தைச் செலுத்துவது மோக்ஷமார்க்கம் என்பதைக் கண்டார்.

இவ்வாறு இவர் கண்ட இதற்கு ‘மார்க்கா மார்க்க ஞானதர்சன விலத்தி’ என்பது பெயர்.

விதர்சன நெறியில்சென்ற போதிசத்துவர். பிறகு அநித்தியம், துக்கம், அனாத்மம், அசுசி என்பவற்றைச் சிந்தித்து ஆராய்ந்து பார்த்தபோது பஞ்ச ஸ்தந்தங்களின் தோற்றத்தையும் அழிவையுங் கண்டார். இதற்கு ‘உதய வியய ஞானம்’ என்பது பெயர்.

இவ்வாறே போதிசத்துவர் முறையே பஞ்சானு தர்சன ஞானம், பயதோபஸ்தான ஞானம், ஆதீனவ ஞானம், முக்திகாமதா ஞானம், பிரதி சங்க்யானுதர்சன ஞானம், சம்ஸ்காரரோபேக்ஷா ஞானம் முதலிய ஞானங்களையடைந்தார். பிறகு சத்யானுலோம ஞானம் உண்டாயிற்று. பிறகு, பிருத்தஜ்னா கோத்ராவஸ்தையைக் கடந்து நிர்வாண மோக்ஷத்தைப் பெற்றுக்கொண்டே கோத்ரபூ ஞானம் கிடைக்கப்பெற்றார்.

கோத்ரபூ ஞானம் மனதில் தோன்றி மறையும்போது துக்கத்தைப் பார்த்துக்கொண்டே சமுதயத்தை நீக்கிக்கொண்டே நிரோதத்தைப் பாவித்து உறுதிப்படுத்திக்கொண்டே மார்க்க சத்தியத்தை அனுசரித்துக்கொண்டே முதலாவது ஞானதரிசனம் பெற்றார். அதாவது ஸ்ரோதபத்தி மார்க்க ஞானம்பெற்றார்.

அதன் பிறகு ஸ்ரோதாபத்தி பலனும் பிறகு மார்க்கப்ரத்திய பேக்ஷன ஞானமும், பலப்ரத்தியவேக்ஷண ஞானமும், ப்ரஹீனக்லேச ப்ரத்தியவேக்ஷண ஞானமும், வத்யக்லே சப்ரத்திய வேக்ஷண ஞானமும் உண்டாயின.

பிறகு மறுபடியும் உதய வியய ஞானத்திலிருந்து சம்ஸ்காரங்கள் அனித்தம், துக்கம், அனாத்மம் என்று சிந்திக்கும்போது போதிசத்துவருக்கு முன்போலவே சம்ஸ்காரோபேக்ஷர ஞானத்தின் கடைசியில், அநுலோம் கோத்ரபூ ஞானத்திற்குச் சமீபமாகத் துக்கத்தைக் கண்டுகொண்டே சமுதய சத்யத்தை நீக்கிக்கொண்டேராக துவேஷ மோகங்கள் முதலியவற்றைப் பலவீனப் படுத்திக்கொண்டே நிரோதசத்யத்தைப் பெற்றுக்கொண்டே அஷ்டாங்க மார்க்கத்தை அனுசரித்துக் கொண்டே இரண்டாவது ஞானதரிசனத்தைப் பெற்றார். அதாவது சத்ருதகாமீ மார்க்கஞானம் அடைந்தார்.

பின்னர், போதிசத்துவர் உதய வியய ஞானத்திலிருந்து சம்ஸ்காரங்களுடைய இலக்கணங்களைப் பார்க்கத் தொடங்கினார். முன்போலவே சம்ஸ்காரோ பேக்ஷா ஞானத்தின் கடைசியில் அனுலோம் கோத்ரபூ ஞானங்கள் தோன்றி துக்கத்தைக் கண்டு, சமுதயத்தை நீக்கி, ராகத்வேஷ முதலியவற்றை அகற்றி, நிர்வாண மோக்ஷத்தையடைந்து கொண்டே அஷ்டாங்க மார்க்கத்தை அனுசரித்துக்கொண்டே மூன்றாவது ஞான தரிசனத்தைப் பெற்றார். அதாவது அனாகாமீ மார்க்கஞானம் அடைந்தார்.

அப்போது, இன்னும் சில கிலேசங்கள் மிஞ்சி நிற்பதைக் கண்டு, முன்போலவே உதய வியய முதலான ஒன்பது விதமான பெரிய விதர்சனா ஞானமூலமாக சம்ஸ்காரங்கள் அனித்யம், துக்கம், அனாத்மம், அசுசி என்று அறிந்து படிப்படியாக ஆராயும்போது, போதிசத்துவருக்கு சம்ஸ்காரோபேக்ஷா ஞானமும் பிறகு அனுலோம கோத்ரபூ ஞானங்களும் பிறந்தன. அப்போது துக்கங்களையெல்லாம் கண்டு சமுதய சத்தியத்தை (வாசனா தோஷங்களை) அறவே நீக்கி நிர்வாணத்தைப் பெற்றுக்கொண்டே மார்க்கத்தை அனுஷ்டித்துக் கொண்டே நான்காவது ஞானதரிசனத்தைப் பெற்றார். அதாவது அர்ஹந்த மார்க்க ஞானம் அடைந்தார்.

மேலே கூறின சுரோதபத்தி, சத்ருதகாமி, அனாகாமி, அர்ஹந்த என்னும் நான்கு மார்க்கங்கள் ஞானதர்சன விசுத்தி என்று கூறப்படும்.

போதிசத்துவருக்கு அர்ஹந்தமார்க்க ஞானத்துடன் நான்கு விதமான பிரதிசம்பிதா ஞானமும் ஆறுவிதமான அசாதாரண ஞானமும் பதினான்கு விதமான புத்தஞானமும் பதினெட்டு விதமான ஆவேணிக தர்மங்களும் பத்துவிதமான பலமும் நான்கு விதமான வைசாரத்யங்களும் முதலான கணக்கற்ற புத்தகுணங்கள் நிறைந்தன.

இவ்வாறு இரவு முழுவதும் யோகத்திலிருந்து கிலேசங்களையெல்லாம் வென்று மிகவுயர்ந்த மேலான சம்புத்த பதவியையடைந்தார்.

முதல்வாரம்

அடைதற்கரிய புத்த பதவியையடைந்த ததாகதர், தாம் பிறவித் துன்பத்திலிருந்து வீடு பெற்றதையும், கிடைத்தற்கரிய புத்த பதவி கிடைக்கப்பெற்றதையும், அறநெறியை ஐயமறக் காணப்பெற்றதையும். அறநெறியை மக்களுக்குப் போதித்து அவர்களைத் துன்பங்களிலிருந்து நீக்கும் ஆற்றல் பெற்றிருப்பதையும் சிந்தித்துப் பார்த்து அதனாலே மகிழ்ச்சியடைந்து இவ்வாறு உதானம் கூறினார்.2

“பிறப்பு இறப்பாகிய சம்சாரம் எப்போதும் துன்பமானது. உடம்பாகிய வீட்டைக் கட்டும் திருஷ்ணை என்று சொல்லப்பட்ட கொல்லனைக் காண்பதற்காக, போதிஞானம் என்னும் கண்ணைப் பெறும்பொருட்டு, இதுவரையில் நூறாயிரக் கணக்கான பிறப்புக்கள் பிறந்தேன். கடைசியாக, ஓ! கொல்லனே, உன்னைக் கண்டுபிடித்தேன். நீ இனிமேல் எனக்கு உடம்பாகிய வீட்டைக் கட்டமாட்டாய். (பிறப்பு இறப்பு இல்லை) உன்னுடைய கிலேசம் என்னும் வலிச்சல்கள் உடைக்கப்பட்டன. பேதைமை என்னும் கைத்துண்டுகள் பிளக்கப்பட்டன. என்னுடைய மனம் நிர்வாண மோக்ஷம் அடைந்தது. ஆகையால் ஆசையற்ற அர்ஹந்த பலனையடைந்தேன்.”

இவ்வாறு உதானம் உரைத்த பின்னர் ததாகதர், “இந்தப் பர்யங்கத்திற்காக (பர்யங்கம் - ஆசனம். புத்த பதவி) நான்கு அசங்கிய கல்பகாலம் பிறவி எடுத்துவந்தேன். நான் அடையப்பெற்ற இந்த ஆசனம் (நிலை) வெற்றியாசனம்; மங்கல ஆசனம். நான்குவிதமான வீரியங்களை மனத்திலே நிறுவி இங்கு அமர்ந்து புத்த பதவியடையப் பெற்றேன்” என்று நினைத்தவண்ணம் ஒரு வாரம் வரையில் அங்கேயே தங்கி விமுக்தி சுகத்தைத் துய்த்துக்கொண்டிருந்தார்.

அதன் பிறகு, அந்த வாரத்தின் கடைசி நாளாகிய ஏழாவது நாள் இரவில், முதல் யாமத்திலே, பன்னிரண்டு நிதானங்களை முதலிலிருந்து கடைசிவரையில் இவ்வாறு தனக்குள் நினைத்தார்:

பேதமை சார்வாச் செய்கை யாகும்
செய்கை சார்வா வுணர்ச்சி யாகும்

உணர்ச்சி சார்வா வருவுரு வாகும்
அருவுரு சார்வா வாயி லாகும்
வாயில் சார்வா வூறா கும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றில் றோன்றுங் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரண மாக
வருமே யேனை வழிமுறைத்தோற்றம்
தோற்றஞ் சார்பின் மூப்புப்பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலைகை யாறெனத்
தவலில் துன்பந் தலைவரும் என்ப
ஊழின்மண் டிலமாச் சூழுமிந் நுகர்ச்சி3

இவ்வாறு ஊழின் மண்டிலமாகப் பன்னிரண்டு நிதானங்களைத் தமது மனத்திலே சிந்தித்துப் பார்த்த பகவன் புத்தர் அந்த இரவின் முதல் யாமத்தின் இறுதியிலே இவ்வாறு உதானம் உரைத்தார்:

‘பிறப்பு இறப்பாகிய துன்பத்தை நீக்கக்கருதி ஊக்கத்தோடு முயற்சிசெய்கிற யோகி ஒருவர், பௌத்தத்தின் முப்பத்தேழு தத்துவத்தை எப்பொழுது அறிகிறாரோ அப்பொழுதே பேதமை முதலான காரணங்களினாலே உண்டான துக்கங்களைப் பிரித்துப்பிரித்து ஆராய்ந்து பார்க்கிறபடியினாலே - அவருடைய ஐயங்கள் மறைந்து விடுகின்றன’ என்று உதானம் (பிரீதி வாக்கியம்) உரைத்தார்.

பின்னர் அந்த இரவின் நடுயாமத்திலே ததாகதர் ஊழின் வட்டமாகிய பன்னிரு நிதானத்தைக் கடைசியில் இருந்து முதல் வரையில் இவ்வாறு சிந்தித்தார்.

“பேதமை மீளச் செய்கை மீளும்
செய்கை மீள வுணர்ச்சி மீளும்
உணர்ச்சி மீள அருவுரு மீளும்
அருவுரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீளப் பற்று மீளும்
பற்று மீளக் கருமத் தொகுதி

மீளும் கருமத் தொகுதி மீளத்
தோற்றம் மீளும் தோற்றம் மீளப்
பிறப்பு மீளும் பிறப்புப் பிணி மூப்புச்
சாக்கா டவல மரற்றுக் கவலை
கையா றென்னுக் கடையில் துன்பம்
எல்லாம் மீளும் இவ் வகையான் மீட்சி”
4

இவ்வாறு நிதானங்களைச் சிந்தித்துப் பார்த்த பகவன் புத்தர் இவ்வாறு உதானம் உரைத்தார்.

“பிறவித்துன்பத்தை நீக்கும் பொருட்டு முயற்சியோடு தியானம்செய்து பாவத்தை நீக்கின யோகியானவர், பௌத்தத்தின் முப்பத்தேழு தத்துவத்தை எப்பொழுது உணர்கிறாரோ அப்பொழுதே - பேதமை முதலான காரணங்களினாலேயே உண்டான துக்கங்களைப் பிரித்து ஆராய்ந்து பார்க்கிற படியினாலே - அவருடைய ஐயங்கள் நீங்கி விடுகின்றன.”

அதன் பின்னர், இரவின் மூன்றாவது யாமம் வந்தது. அப்போது பகவன் புத்தர் ஊழின்வட்டமாகிய பன்னிரு நிதானம் என்னும் தத்துவத்தைத் தொடக்கத்தில் இருந்து கடைசி வரையிலும், (பேதைமை சார்வாச் செய்கையாகும் - நுகர்ச்சி என்பதுவரை) பிறகு கடைசியிலிருந்து தொடக்கம் வரையிலும் (பேதமைமீளச் செய்கையாகும் - மீட்சி என்பது வரை) மறுபடி சிந்தித்துப்பார்த்தார். பார்த்த பிறகு, இவ்வாறு உதானம் ஓதினார்.

‘துக்கங்களை அடக்கிப் பாவங்களை யொழிக்கிற ஆற்றல் உள்ள துறவியானவர், முப்பத்தேழுவிதமான தர்மங்களை அறியும்போது, இருள் படலத்தை ஓட்டி ஒளியைப் பரப்புகிற சூரியனைப் போல, மாரனுடைய எல்லாவிதமான சேனைகளையும் ஓட்டி வெற்றி காண்கிறார்.’

இரண்டாம் வாரம்

புத்த பதவியடைந்த பிறகும் ததாகதர், ஆசனத்தைவிட்டு எழுந்திராமல் போதிமரத்தின் அடியிலேயே அமர்ந்திருந்தார். இதனைக் கண்ட சில தேவர்கள், “ஆசனத்திலிருந்து பகவன் புத்தர் எழுந்திருக்காதபடியினாலே இன்னும் இவர் அடைய வேண்டிய நிலைகளும் உண்டுபோலும்” என்று நினைத்தார்கள். இவ்வாறு தேவர்கள் சிலர் எண்ணியதைப் பகவன் புத்தர் அறிந்தார். ஆகவே, அவர் அவர்களுடைய ஐயத்தை நீக்குவதற்காக, ஆசனத்தைவிட்டுக் கிளம்பி ஆகாயத்திலே நின்றார். இதைக் கண்ட தேவர்கள் ஐயம் நீங்கினார்கள்.

இவ்வாறு தேவர்களுடைய ஐயத்தை நீக்கிய பின்னர், பகவன் புத்தர் தரையில் இறங்கி புத்த ஆசனத்தைக் கண் இமைக்காமல் பார்த்தார். “இந்த ஆசனத்தில் இருந்தபோது எனக்குப் புத்தபதவி கிடைத்தது. நான்கு அசங்கிய கல்ப லக்ஷகாலம் வரையில் நான் நிறைவேற்றிய பாரமிதைகளின் பலனாக இந்தப் புத்த பதவி இந்த ஆசனத்தில் இருக்கும்போது எனக்குக் கிடைத்தது” என்று நினைத்து நன்றியறியும் உள்ளத்துடன் அந்தப் போதியாசனத்தைக் கண்களினாலே பார்த்துக்கொண்டே இருந்தார். இவ்வாறு இரண்டாவது வாரம் கழிந்தது. இவ்வாறு இமைகொட்டாமல் பார்த்திருந்த இடத்திற்கு அநிமசலோசன சைத்தியம் என்பது பெயராகும்.

மூன்றாம் வாரம்

பின்னர் மூன்றாவது வாரம் முழுவதும், போதியாசனத்தின் அருகிலேயே ததாகதர் கிழக்கு மேற்காக உலாவிக் கொண்டிருந்தார். இந்த இடத்திற்கு இரத்தின சங்க்ரமன சைத்தியம் என்பது பெயராகும்.

நான்காம் வாரம்

நான்காவது வாரத்தில், போதி மரத்திற்கு வடமேற்கில்சென்று இரத்தின கிருஹத்தில் அமர்ந்து தாம்கண்ட போதிதர்மத்தை மனத்திலே நினைந்து நினைந்து ஆராய்ந்தார். இந்தத் தர்மத்தைக்கேட்டு இதன்படி ஒழுகுகிறவர்கள், சீலத்தில் மனதை நாட்டிச் சமாதியைத் தியானித்துப் பிரஞ்ஞா (அறிவினால்) மூலமாகத் தத்துவத்தை நன்கறிந்து உயர்ந்த நெறியில் ஒழுகுவார்கள் என்று கருதினார். சீலத்தைப்பற்றி வினயபிடகம், சமாதியைப்பற்றி சூத்திராந்தபிடகம், பிரஜ்ஞாவைப்பற்றி அபிதர்மபிடகம் என்னும் மூன்றையும் சிந்தித்தார். இவை எல்லாத் தர்மங்களையும்விட மேலானதாகவும் ஆழமானதாகவும் இருப்பதை அறிந்து உவகை கொண்டார்.

அப்போது அவருடைய இருதயத்தில் உதிரம் மிகவும் தூய்மையாயிருந்தது. தேகத்தில் ஒளிவீசிற்று. அவருடைய திருமேனியிலிருந்து எண்பதுமுழம் வட்டத்தில் ஒளிக்கிரணங்கள் ஒளிவீசின. அப்போது அந்த இடத்திலே ஆயிரம் சூரிய சந்திரர்கள் இருந்து ஒளிவீசுவதுபோலத் தோன்றியது.

பகவன் புத்தர் போதிஞானம் அடைந்து நான்கு வாரம் வரையில் போதிமரத்தின் அருகிலேயே இருந்தார். ஐந்தாவது வாரம் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச்சென்று அஜபாலன் என்னும் ஆலமரத்தை அடைந்து அம்மரத்தடியில் அமர்ந்து ஒருவார காலம்வரையில் விமுக்தி சுகத்தை அனுபவித்துக்கொண்டே யோகத்தில் அமர்ந்திருந்தார்.

பிராமணன் யார்?

இவ்வாறு ஒரு வாரம் வரையில் யோகத்திலிருந்த பகவன் புத்தர், யோகத்திலிருந்து விழித்தார். அப்போது ஒரு பிராமணன் அவரிடம் வந்தான். அந்தப் பிராமணன் முன்னரே இவருக்கு அறிமுகமானவன். போதிசத்துவர், உருவேல என்னும் இடத்தில் இருந்தபோதும் சேனானீ கிராமத்துக்கு அருகில் ஆசிரமம் அமைத்துக்கொண்டிருந்தபோதும் அவன் இவரிடம் பழகியவன். அந்தப் பிராமணன் பிராமணப் பிறப்பே உயர்ந்த பிறப்பு என்னும் எண்ணம் உடையவன். அவன் பகவன் புத்தரிடம் வந்து, “ஓ கௌதமரே! எந்தெந்தக் காரணங்களினாலே ஒருவன் பிராமணனாகக் கூடும்? பிராமணனுடைய இயல்பு என்ன?” என்று கேட்டான்.

அதற்குப் பகவன் புத்தர் இவ்வாறு விடை கூறியருளினார் : “யார் ஒருவர் பாபங்களைப் போக்கிக் கொண்டாரோ, யார் மனமாசு நீங்கி அழுக்கற்று மனத் தூய்மை யடைந்தாரோ, யார் தன்னடக்கமாக வுள்ளாரோ, யார் வேதத்தைப் (வேதம் -ஞானம்) பெற்றிருக்கிறாரோ அவர்தாம் உண்மையான பிராமணன் என்னும் பெயருக்கு உரியவர் ஆவர்” என்று அறிவுறுத்தினார்.

மாரன் அச்சுறுத்தல்

அஜபால மரத்தின் அடியில் இருந்த பகவன் புத்தர், பொருளற்ற கடுமையான உண்ணாவிரதத்தினால் உடம்பைவாட்டிக் கடுந்தபசு செய்வதிலிருந்து விலகி, மிக நன்மையான மத்திம வழியிலேசென்று புத்தஞானப் பதவியையடைந்தது எவ்வளவு நன்மையானது என்று தமக்குள் எண்ணினார். இவ்வாறு பகவன் புத்தர் எண்ணியதையறிந்த மாரன் அவ்வமயம் இவரிடம்வந்து, “உயிர்களைத் தூய்மைப்படுத்துகிற கடுமையான தவம் செய்வதிலிருந்து நீங்கின நீர், தூய்மையானவர் என்று நினைக்கிறீரா? நீர் சுத்த மார்க்கத்திலிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறீர்” என்று கூறினான். இவ்வாறு பேசினவன் மாரன் என்பதை பகவன் புத்தர் அறிந்துகொண்டார். அவனுக்கு இவ்வாறு விடைகூறினார்.

“அமரத்தன்மை பெறுவதற்காக உடம்பை வருத்தித் துன்பப்படுத்திக் கடுந்தபசு செய்வது எப்படியிருக்கிறது என்றால், கடலிலே செல்லும் கப்பலைக் கொண்டுவந்து மணல் நிறைந்த பாலைவனத்தில் வைத்துத் துடுப்புகொண்டு துழாவி ஓட்டுவதுபோல இருக்கிறது. அப்படிச் செய்வது வீண்முயற்சி என்றறிந்து, மார்க்க ஞானத்துக்கு நற்பாதையாகவுள்ள சீல சமாதி பிரஞ்ஞை என்கிற மூன்றுவிதமான குணங்களை மேற்கொண்டு நடந்து தூய்மையடைந்தேன். மாரனே! உன்னை நான் வென்றேன்” என்று கூறினார். அப்போது மாரன், பகவன் புத்தர் தன்னைத் தெரிந்து கொண்டார் என்பதை அறிந்து, வெட்கமும் வருத்தமும் அடைந்து அவ்விடத்திலிருந்து மறைந்துபோனான்.

இரவு வேளையில் பகவன் புத்தர் அஜபாலன் என்னும் ஆலமரத்தண்டை உலாவிக்கொண்டிருந்தார். பிறகு அருகிலிருந்த ஒரு பாறைக்கல்லின்மேல் அமர்ந்தார். அப்போது மாரன் அவரை அச்சுறுத்த எண்ணினான். மிகப் பெரியதோர் யானையின் உருவம்கொண்டு அச்சந்தரத்தக்க முறையில் அவ்விடம் வந்தான். அந்த யானையின் தலை பாறைபோன்று பெரியதாக இருந்தது. தந்தங்கள் மிக வெண்மையாக வெள்ளி போன்றிருந்தன. தும்பிக்கை நீண்டு ஏர்க்கால்போல் இருந்தது. இவ்வாறு வந்தவன் மாரன் என்பதைப் பகவன் புத்தர் அறிந்துகொண்டார்.

“நீண்டகாலமாக என்னை அச்சுறுத்துவதற்காக இனிய நல்ல உருக்களையும் அச்சந்தரும் கொடிய உருவங்களையும் தாங்கிக்கொண்டு என்னிடம் வருகிறாய். இது மிக இழிவான செயல். மாரனே, உன்னுடைய முயற்சிகள் வீணாயின” என்று உரைத்தார். அப்போதும் தன்னைப் புத்தர் அறிந்து கொண்டதை உணர்ந்த மாரன் வெட்கமும் துக்கமும்கொண்டு மறைந்துபோனான்.

மற்றொருமுறை மாரன், பகவன் புத்தரை அச்சப்படுத்த எண்ணி, ஒரு நள்ளிரவிலே வெவ்வேறு உருவங்களைக் காட்டினான். அப்போது பகவன் புத்தர், “மாரனே! மனம் வாக்குக் காயங்களை உறுதியுள்ள அரணாக அமைத்துக்கொண்ட முனிவர்கள் உன்னுடைய செயலுக்கு அஞ்சித் தோல்வியுற மாட்டார்கள்.” என்று கூறினார். உடனே மாரன் முன்போலவே அவ்விடத்தைவிட்டுப் போய்விட்டான்.