மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/005

குருவைத் தேடல்

அஜபால மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த பகவன் புத்தருக்கு ஒரு குரு வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. யாரும் ஒருவரைக் குருவாகக்கொண்டு அவரை வணங்கி வழிபடுவது நல்லது. குருவைப் பெறாதவர் நன்மை பெறுவதில்லை. ஆகையினாலே நாமும் ஒரு குருவை நாடிக்கொள்ளவேண்டும். அவருக்குத் தாம் மாணவனாக இருந்து அவரை வழிபடவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரைத் தேடிக் கொள்ளவேண்டும் என்னும் எண்ணம் அவருக்குத் தோன்றியது. ஆகவே அவர் யாரைக் குருவாகக் கொள்ளலாம் என்று தமக்குள் சிந்தித்தார். இவ்வாறு சிந்தித்துத் தேடிப் பார்த்தபோது சீலம் சமாதி பிரஞ்ஞை என்கிற மூன்று குணங்களாலும் தமக்க மேலானவர் ஒருவரும் மூவுலகத்திலும் இல்லாததை யறிந்து, “பிறர் உதவி இல்லாமல் என்னாலேயே மிக நன்றாக அறிந்துகொள்ளப்பட்ட அறத்தையே நான் குருவாக ஏற்றுக்கொள்கிறேன். அறத்தையே வழிபட்டு வணங்கிப் போற்றுகிறேன்” என்று தமக்குள் கூறிக்கொண்டார்.

அப்போது சஹம்பதி மகாப்பிரமன் அவர் முன்தோன்றி வணக்கம்செய்து, “ஆமாம் புத்தரே! ஆமாம் சுகதரே! சென்ற காலங்களில் புத்தஞானப் பதவிபெற்ற புத்தர்கள் எல்லோரும் சத்தர்மத்தையே குருவாகக்கொண்டு வணங்கி வழிபட்டார்கள். வரும் காலத்திலும் புத்த ஞானப் பதவியையடையப்போகிற புத்தர்களும் சத்தர்மமாகிய அறத்தையே குருவாகக்கொண்டு வணங்கி வழிபடுவார்கள். ஆகையால், உத்தமரே! இந்தக் காலத்திலே புத்தஞானப் பதவியைப்பெற்ற தாங்களும் சத்தர்ம அறத்தினையே குருவாகக்கொண்டு போற்றி வழிபடுவது நல்லது” என்று கூறி வணங்கினார்.

நாகராசன் வணங்கியது

ஐந்தாவது வாரத்தை அஜபால மரத்தடியில் கழித்த பகவன் புத்தர், ஆறாவது வாரத்தில் அம்மரத்தைவிட்டு அகன்றுபோய் முசலிந்த மரத்தருகே சென்றார். அங்கு அந்த வாரம் முழுவதும் சமாபத்தி தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது மழைக்கால மில்லாமலிருந்தும் பெரிய மேகங்கள் சூழ்ந்து மிகவும் இருண்டு ஏழுநாளும் மழைபெய்தது. குளிரும் அதிகமாயிருந்தது. அப்போது நாகலோகத்திலிருந்து நாகராசன் வந்து, குளிரும் மழையும், எறும்பும், கொசுவும் புத்தரை அணுகக்கூடாது என்று கருதி, தனது உடம்பினால் பகவன் புத்தரை ஏழுசுற்று சுற்றிக்கொண்டு தன் தலையைப் படமெடுத்துப் பகவன் புத்தர் தலைக்குமேல் குடைபோலத் தாங்கிக்கொண்டான். ஏழு நாட்களுக்குப் பிறகு மழை நின்று வானம் வெளுத்தது. அப்போது நாகராசன், பகவன் புத்தரைவிட்டு வெளிவந்து இளமைப் பருவமுள்ள மனித உருவத்துடன் தோன்றிக் கைகூப்பித் தலைவணங்கி நின்றான். அப்போது பகவன் புத்தர் அவனுக்கு இவ்வாறு திருவாய் மலர்ந்தருளினார்.

“உண்மையைக் கண்டு அதனை உணர்ந்து மகிழ்ச்சியோடிருக்கிறவரின் ஏகாந்தம் இன்பமானது. அழுக்காறு இல்லாமல் எல்லா உயிர்களிடத்திலும் அன்புள்ளவராய்த் தன்னடக்கத்தோடு இருப்பவர் மகிழ்ச்சியுள்ளவராவர். நான் என்கிற ஆணவத்தை விட்டவர் இன்பம் அடைகிறார். ஆசையை நீக்கியவர் இன்பம் உள்ளவர் ஆவர்” இவ்வுபதேசத்தைக் கேட்ட நாகராசன் மனமகிழ்ந்து அவரை வணங்கிச்சென்றான்.

பகவன் புத்தர் ஆறாவது வாரத்திற்குப் பிறகு முசலிந்த மரத்தைவிட்டு அகன்று இராஜாயதன மரத்தடிக்குச் சென்றார். சென்று அம்மரத்தின் கீழ் யோகத்தில் அமர்ந்து ஏழுநாட்கள் இருந்தார். ஏழாவது நாளின் இறுதியில் பகவன் புத்தர் தியானத்திலிருந்து விழித்தார். ஏழு வாரம் வரையில் அவர் உணவு கொள்ளவில்லை. போதி ஞானத்தைச் சிந்திப்பதிலேயும் தியானத்திலும் அவர் நாட்களைக் கழித்தார்.

சாவக நோன்பிகள்

தியானத்திலிருந்து விழித்தபோது சக்கன் (தேவேந்திரன்) அவரிடம் வந்து பல்தேய்க்கப் பல் குச்சியையும் முகம் கழுவ நீரையும் கடுக்காய் மருந்தையும் கொடுத்துவிட்டுப் போனார். பகவன் புத்தர் பல்தேய்த்து முகம் கழுவி இராஜாயதன மரத்தின் அடியில் அமர்ந்தார்.

அப்போது உத்கல (ஒரியா) பிரதேசத்திலிருந்து ஒரு வாணிகச்சாத்து அவ்வழியே போய்க்கொண்டிருந்தது. ஐந்நூறு வண்டிகளில் வாணிகச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லும் இந்தச் சாத்தின் தலைவர்களாக தபுஸ்ஸன், பல்லிகன் என்னும் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இந்த வாணிகச்சாத்து செல்லும் வழிகெட்டியான தரையாக இருந்தும் வண்டிச் சக்கரங்கள் நகராமல் நின்றன. எருதுகள் வண்டிகளை இழுக்கமுடியாமல் இடர்ப்பட்டன. இதைக்கண்ட வணிகர் வியப்படைந்து என்ன காரணம் என்றறியாமல் திகைத்தனர். அப்போது ஒருத்தன் மேல் தெய்வம் ஏறி, பகவன் புத்தர் இராஜாயதன மரத்தின் அடியில் இருப்பதைக்கூறி அவருக்கு உணவு தானம் செய்யும்படிக் கூறிற்று.

தெய்வ வாக்கைக் கேட்ட வணிகத் தலைவர் இருவரும் தேனையும் மாவையும் எடுத்துக்கொண்டு பகவன் புத்தர் எழுந்தருளியிருந்த இடத்திற்கு வந்தார்கள். வந்து அவரை வணங்கி அவருக்கு அந்த உணவைக் கொடுத்தார்கள். அப்போது அதை ஏற்றுக்கொள்ளப் பகவரிடம் பாத்திரம் ஒன்றும் இல்லை. இவர்கள் கொடுக்கும் உணவைக் கைகளில் பெறக்கூடாது, எதில் பெற்றுக்கொள்வது என்று அவர் சிந்தித்தார். அப்போது அவருடைய சிந்தனையை அறிந்த சதுர்மகா தேவர்கள் நால்வரும் வந்து நான்கு பாத்திரங்களை அவருக்கு அளித்தார்கள். அப்பாத்திரங்களைப் பெற்றுக்கொண்ட பகவன், அவைகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைத்தார். உடனே அப்பாத்திரங்கள் ஒரே பாத்திரமாயின. அப்பாத்திரத்திலே வணிகச் சகோதரர் அளித்த உணவை ஏற்றுக்கொண்டார்.

உணவை உட்கொண்ட பிறகு பகவர், கையையும் பாத்திரத்தையும் கழுவினார். பிறகு அவர்களுக்கு அறநெறியை உபதேசம் செய்தார். அறநெறியைக்கேட்ட வணிகர் மனமகிழ்ச்சியடைந்து பகவரை வணங்கி, “பகவரே! நாங்கள் தங்களிடத்திலும் தங்கள் தர்மத்தினிடத்திலும் அடைக்கலம் அடைகிறோம். எங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொண்டருள வேண்டும்” என்று வேண்டினார்கள். பிறகு தாங்கள் வணங்குவதற்காக ஏதேனும் பொருளைத் தரும்படி அவரைக் கேட்டார்கள். பகவர் தமது தலையிலிருந்து எட்டுப்பிடி சிகையைப் பிய்த்துக்கொடுத்தார். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு போய் பொற்கிண்ணத்தில் வைத்துத் தாம் பிறந்த தேசத்திலேயுள்ள அசிதஞ்சன நகரத்தில் ஒரு சேதியம் கட்டி அதை அதில் வைத்து வணங்கி வந்தார்கள்.

தபுஸ்ஸன், பல்லிகன் என்னும் இவர்கள் தாம் முதன்முதல் பகவன் புத்தரிடத்தில் இரண்டு சரணங்களை மட்டும் (புத்தர், தர்மம்) கூறிச் சீடரானவர்கள்.

எட்டாவது வாரம்

பிறகு பகவர் இராஜாயதன மரத்தைவிட்டுப் புறப்பட்டு மறுபடியும் அஜபால ஆலமரத்துக்குச் சென்றார். சென்று அவ்விடம் தங்கித் தாம்கண்ட போதி தர்மத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, தாம்கண்ட போதி தர்மத்தை உலகத்தவருக்குப் போதிக்காமல் வாளாஇருப்பது நலம் என்று அவருக்கு எண்ணம் தோன்றியது. பகவர் எண்ணிய இந்த எண்ணத்தைச் சகம்பதி பிரமன் அறிந்தார். “ஐயோ! உலகம் அழிந்துவிடும். புனிதரான சம்புத்தராகிய ததாகர், தாம் கண்ட அறநெறியை உலகத்திற்குக் கூறாமல் போனால் உலகம் அழிந்து விடும்” என்று சகம்பதி பிரமன் எண்ணினார்.

உடனே, பிரமலோகத்தைவிட்டுப் புறப்பட்டுத் ததாகதரிடம் விரைந்து வந்தார். வந்து, தமது மேல் ஆடையை எடுத்து ஒரு தோளின்மேல் போட்டுக்கொண்டு, வலது முழங்காலைத் தரையில் ஊன்றி முட்டியிட்டு அமர்ந்து இருகைகளையுங் குவித்துத் தலைமேல் தூக்கித் ததாகதரை வணங்கி இவ்வாறு கூறினார்: “சுவாமி தாங்கள் அருள்கூர்ந்து தர்மத்தை உலகத்துக்குப் போதியுங்கள். பகவன் சம்புத்தர் உலகத்துக்குத் தர்மத்தைப் போதிக்கவேண்டும். இருளினால் மறைக்கப்படாத அறிவுக்கண் படைத்த மக்கள் பலர் உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அறநெறியைக் கேளாமல் இருந்தால், நிர்வாண மோக்ஷத்தையடைய மாட்டார்கள். அவர்கள் தர்மத்தை யறிந்துகொள்ளக் கூடியவர்கள். சம்புத்தரால் கண்டுபிடிக்கப்பட்ட தர்மத்தை அவர்கள் கேட்கட்டும்.”

இவ்வாறு கூறிய பிரமன் மேலும் கூறுவார்:

“ஓர் ஆள் மலையின்மேல் ஏறி அதன் உச்சியிலேயுள்ள ஒரு பாறையின்மேல் நின்று மலையடியில் உள்ள மனிதரைக் காண்பது போல், ஓ, புத்தரே! உண்மையான மெய்ஞ்ஞானம் என்னும் உயர்ந்த இடத்தில் ஏறியுள்ள தாங்கள், அருள்கூர்ந்து கீழே நோக்கியருளுங்கள். துன்பத்தினால் துக்கப்பட்டு வருந்துகிற மக்களை, பிறந்து இறந்து அல்லல்படுகிற மானிடரை, துக்கத்திலிருந்து நீங்கிய ததாகதரே! அருள் கூர்ந்து நோக்கியருளுங்கள்.

“எழுந்தருளும். ஓ, வீரரே! உலகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்தருளுங்கள். பகவரே! தர்மத்தை உபதேசம் செய்தருளுங்கள். உலகத்திலே தர்மத்தை அறிந்துகொள்ளக் கூடிய மக்களும் இருக்கிறார்கள்.

இவ்வாறு சகம்பதி பிரமன் கூறியதைக்கேட்ட பகவன் புத்தர் கூறினார்: “எனது மனத்திலே இவ்வாறு நினைக்கிறேன். என்னவென்றால், இந்தத் தத்துவம் கடினமானது. சாதாரண மக்களால் அறிந்துகொள்ள முடியாதது. மனத்திற்குச் சாந்தியை யுண்டாக்கி உயர்நிலையையடையச் செய்கிற இந்தத் தத்துவம் அறிஞர்களால் மட்டுமே அறியக்கூடியது. ஆகையினாலே, ஆசையில் அழுந்தி, ஆசையில் உழன்று, ஆசையில் மகிழ்ச்சிகொள்கிற மக்கள் சார்பு வட்டமாகிய நிதானங்களை அறிந்துகொள்ளமுடியாது. சமஸ்காரங்களை வென்று ஆசைகளை அடக்கிக் காமத்தை நீக்கிய அறிஞர்களுக்கு மனச்சாந்தியளித்து நிர்வாண மோக்ஷத்தைத் தருகிற இந்தப் போதனைகளைச் சாதாரண உலக மக்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள். தெரிந்துகொள்ள முடியாதவர்களுக்குப் போதித்து ஏன் வீணாகக் காலங்கழிக்க வேண்டும்?

“பெரிதும் வருந்தி முயன்று கைவரப்பெற்ற இந்தப் போதிஞானத்தை, உலகப் பற்றுக்களில் அழுந்தியிருக்கிற மக்கள் தெரிந்துகொள்ள மாட்டார்கள். ஆசையிலும் பகையிலும் அழுந்தி அடர்ந்த இருட்டிலே கிடக்கிற மக்கள் இதை அறிந்து கொள்ள மாட்டார்கள். ஆகையால், புத்த தர்மத்தைப் போதிக்காமல் வாளாயிருப்பதுதான் நல்லது.”

இதைக்கேட்ட சகம்பதி பிரமன், புத்தரை வணங்கி மீண்டும் கூறினான்: “சுவாமி! போதி தர்மத்தை உலகில் போதித்தருளுங்கள். உலகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்து தர்மோபதேசம் செய்தருளுங்கள். பகவன் சம்புத்தரால் கண்டறியப்பட்ட தர்மத்தை மக்கள் கேட்கட்டும். அஞ்ஞான இருளினால் மறைக்கப்படாத ஞானக்கண்ணுடைய மக்களும் உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தர்மோபதேசத்தைக் கேளாவிட்டால், நிர்வாண மோக்ஷ சுகத்தையடையமாட்டார்கள். பகவரே! கருணை கூர்ந்து போதி ஞானத்தை உலகத்தில் போதித்தருளுங்கள்.”

பகவன் புத்தர் முன்போலவே கூறி மறுத்தார். பிரமன் மூன்றாம் முறையும் வணங்கி முன்போலவே, உலகத்தில் தர்மோபதேசத்தைச் செய்தருளும்படி வேண்டினான்.

பிரமனுடைய வேண்டுகோளைக்கேட்டு பகவன் புத்தர், மிகவும் இரக்கமும் அன்பும் உள்ள மனத்தோடு, எல்லாவற்றையும் காண்கிற புத்தஞானக் கண்கொண்டு உலகத்தை நோக்கியருளினார். நோக்கியபோது, மாசு படியாத அறிவுடையவர்களையும் மாசு படிந்த அறிவுடையவர்களையும், கூரிய அறிவுடையவர்களையும் மங்கிய அறிவுடையவர்களையும், நல்லகுணமுடையவர்களையும் தீயகுணமுடையவர்களையும், போதனையை அறிந்துகொள்ளக் கூடியவர்களையும் அறிந்துகொள்ள முடியாதவர்களையும் கண்டார்.

தாமரை படர்ந்துள்ள பெரிய குளத்திலே நீர்மட்டத்துக்கு மேல் வந்துள்ள முதிர்ந்த தாமரை மொட்டுகள் சூரியக்கிரணம் பட்டவுடன் மலர்ந்து விரிகின்றன. சில மொட்டுகள் சிலநாள் கழித்து முதிர்ச்சியடைந்தவுடன் சூரியக்கிரணம்பட்டு மலர்கின்றன. இன்னும் சில மொட்டுகள் நீருக்குக் கீழே இருக்கின்றன. அவை வளர்ந்து முதிர்ந்து நீர்மட்டத்துக்கு மேலேவந்து சூரிய கிரணத்தினால் மலர்ச்சியடைகின்றன. இதுபோல, பகவன் புத்தர், ஞானக்கண்கொண்டு உலகத்தைப் பார்த்தபோது அறிவு நிரம்பிய மனிதரும், சற்று அறிவு மழுங்கிய மக்களும், மற்றும் அறிவுகுன்றிய மக்களும், அறிவே இல்லாத மக்களும் இருப்பதைக் கண்டார். அவர்கள் அறிவுக்கண் பெற்றால் ஞானத்தை யறியும் ஆற்றல் பெறுவார்கள் என்பதையும் அறிந்தார்.

இவ்வாறு கண்ட பகவன் புத்தர், சகம்பதி பிரமனைப் பார்த்து இவ்வாறு கூறினார்: “அறநெறியை அறிந்து கொள்ளுகிறவர்களுக்கு அழியாத்தன்மையுள்ள நிர்வாண மோக்ஷத்தின் கதவு நன்றாகத் திறக்கப்பட்டிருக்கிறது. காதுடையவர்கள் கேட்கட்டும். இனியதும் நல்லதும் ஆகிய அறநெறியை, நான் போதிக்காமல் இருக்க எண்ணிய தர்மத்தை, உலகத்திலே போதிக்கப் போகிறேன்.”

பகவன் புத்தர், உலகத்திலே தர்மோபதேசம்செய்ய உடன்பட்டருளியதையறிந்த சகம்பதி பிரமன் மிகவும் மனம் மகிழ்ந்து, பகவரை வணங்கி வலம்வந்து தமது பிரமலோகத்துக்குப் போய்விட்டார்.

கேட்பவர் யார்?

அதன் பின்னர், பகவன் புத்தர், “முதன் முதலாக யாருக்கு உபதேசம் செய்யலாம். உபதேசத்தைத் தெரிந்து கொள்ளக்கூடியவர் யார்?” என்று தமக்குள் யோசித்தார். அப்போது, ஆலாரகாலாமர் என்னும் முனிவர் தம்முடைய உபதேசத்தை அறிந்துகொள்ளக் கூடியவர் என்று கண்டு, அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று ஞானக் கண்ணால் பார்த்தபோது, அவர் இறந்து இப்போது ஒருவாரம் ஆகிறது என்பதை அறிந்தார். பின்னர், வேறு யாருக்கு உபதேசம் செய்யலாம் என்று சிந்தித்தபோது, உத்ரகர் என்னும் முனிவர் தர்மோபதேசத்தைத் தெரிந்து கொள்ளக்கூடியவர் என்பதைக் கண்டு, அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று பார்த்தபோது, நேற்று இரவுதான் அவர் காலமான செய்தியை ஞானக் கண்ணினால் அறிந்தார்.

பின்னர், வேறு யாருக்கு உபதேசம் செய்யலாம் என்று சிந்தித்தபோது, முன்பு தம்முடன் தமது சீடராக இருந்த கொண்டஞ்ஞர் முதலிய ஐந்து தாபசகர்கள் போதிக்கத்தக்கவர்கள் என்று கண்டு, அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று பார்த்தபோது, வாரணாசி (காசி) நகரத்திலே இஸிபதனம் என்னும் இடத்தில் இருக்கிறதை அறிந்து அவ்விடம்போக எண்ணினார்.

அந்த ஐந்து தாபசகர்களை நாடிப் பதினெட்டு யோசனை தூரத்தில் உள்ள காசிமாநகரத்திற்குச் செல்லக் கால்நடையாக நடக்கத்தொடங்கினார்.

உபகரைச் சந்தித்தல்

காசியை நோக்கி நடந்தபோது கயா என்னும் இடத்தருகிலே உபகர் என்னும் பெயருள்ள ஆஜீவகத்துறவி எதிர்ப்பட்டார். அவர் பகவன் புத்தரைப் பார்த்து, “முனிவரே! தங்களுடைய கண் முதலான பொறிகள் மிகத் தூயனவாக இருக்கின்றன. உடம்பின் நிறமும் பொன்மயமாக இருக்கிறது. தாங்கள் யாரிடத்தில் துறவு பெற்றீர்கள்? தங்கள் குருநாதன் யார்? யாருடைய உபதேசத்தைப் பின்பற்றுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அப்போது பகவன் புத்தர் அவருக்கு இவ்வாறு விடையளித்தார்: “நான் எல்லாப் பகைகளையும் வெற்றி கொண்டேன். நான் எல்லாவற்றையும் அறிந்தேன். நான் எல்லாவிதத்திலும் குற்றமற்றவன், எல்லாவற்றையும் துறந்தவன். ஆசைகளை நீக்கி உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன். நானே முயன்று போதியை யடைந்தபடியினாலே, யாரை எனது குருநாதன் என்று கூறுவது? எனக்குக் குருநாதன் இல்லை. மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் எனக்கு நிகரானவர் இலர். இவ்வுலகத்திலே நான் பரிசுத்தமானவன், சம்புத்த பதவியையடைந்தவன். ஆசைகளை அறுத்தபடியினாலே சாந்தியடைந்து நிர்வாண மோக்ஷத்தைப் பெற்றிருக்கிறேன். சத்தியலோகம் என்னும் இராச்சியத்தை நிறுவுவதற்காக வாரணாசி நகரத்திற்குப் போகிறேன். இந்த இருண்ட உலகத்திலே இறவாமை என்னும் முரசைக் கொட்டப் போகிறேன்.”

இதனைக் கேட்ட உபகர், “முனிவரே! தங்களைப் பரிசுத்தரான உயர்ந்த அனந்தஜினன் என்று சொல்லிக் கொள்கிறீரா?” என்று கேட்டார்.

“எல்லா ஜினர்களும் என்னைப் போன்றே5 ஆசவங்களை அவித்தவர்கள். நான் எல்லாப் பாவங்களையும் வென்றவன். ஆகையினாலே, உபகரே! நான் அனந்தஜினன்தான்” என்று பகவன் புத்தர் கூறினார்.

இதனைக்கேட்ட ஆஜீவகராகிய உபகர், “முனிவரே! அப்படியும் இருக்கலாம்” என்று கூறித் தலையையசைத்துத் தெற்குநோக்கிச் சென்றார்.

பகவன்புத்தர் வடக்குநோக்கிக் கயா தேசத்தைக் கடந்து உரோகிதவத்து, உருவில்லாகல்பம், அனாலயம், சாரதிபுரம் முதலான இடங்களையும் கங்காநதியையும் கடந்து வாரணாசி நகரத்திற்குப் போனார். அன்று ஆஷாட பௌர்ணமி நாள்.

இஸிபதனம் சேர்தல்

மாலை வேளை. பகவன் புத்தர் வாரணாசி நகரத்தின் அருகில் இருந்த இஸிபதனம் என்னும் தோட்டத்திற்குச் சென்றார். அங்கு இருந்த ஐந்து துறவிகள் இவர்கள் உருவேல ஆசிரமத்தில் போதிசத்துவரின் சீடராகஇருந்து பிறகு அவரைவிட்டுப் போனவர்கள் - தூரத்தில் வருகிற பகவன் புத்தரைப் பார்த்தார்கள். பார்த்துத் தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொண்டார்கள். “அதோ கௌதமர் வருகிறார். கடுமையான தபசை நீக்கிச் சுகவாழ்க்கையை மேற்கொண்ட கௌதமமுனிவர் வருகிறார். அவர் வந்தால் நாம் அவரை வணங்கக்கூடாது. எழுந்துநின்று மரியாதை செய்தல்கூடாது. ஆனால், ஒரு ஆசனத்தை மட்டும் விட்டுவைப்போம். அவருக்கு விருப்பம் இருந்தால் அதில் உட்காரட்டும்.”

பகவன் புத்தர் அவர்களுக்கு அருகில் வந்தபோது, அந்த ஐந்து துறவிகளும் தமக்குள் பேசிக்கொண்டபடி இருக்கவில்லை. அவர்கள் எழுந்து சென்று பகவரை எதிர்கொண்டழைத்தார்கள். ஒருவர், அவர் கையிலிருந்த பாத்திரத்தையும் துணியையும் வாங்கினார். ஒருவர், இருக்க ஆசனம் கொடுத்தார். இன்னொருவர் கை கால் கழுவ நீரும், துடைக்கத் துணியும் கொண்டுவந்தார். பகவன் புத்தர் அமர்ந்து கால் கழுவிக்கொண்டார்.

பிறகு அவர்கள் பகவரைப் பெயரிட்டழைத்தும் நண்பரே என்று விளித்தும் பேசினார்கள். இவ்வாறு அவர்கள் நண்பர் என்றும் கௌதமர் என்றும் அழைத்ததைக் கேட்ட பகவர், “பிக்குகளே, ததாகதரை நண்பர் என்றும் கௌதமர் என்றும் அழைக்காதீர்கள். ததாகதர் பௌத்திரமான சம்புத்தராவார். பிக்குகளே! செவி கொடுத்துக்கேளுங்கள். பிறவாத நிலை கைவரப்பெற்றேன். உங்களுக்குத் தர்மத்தை உபதேசிப்பேன், உயர்குடியிற் பிறந்தவர்கள் எதை அடைவதற்காக இல்லறத்தை விட்டுத் துறவுபூண்டு தபசு செய்கிறார்களோ அந்தப் பரிசுத்தமான உயர்ந்த வாழ்க்கை நீங்கள் அடைவீர்கள் அந்த வழியை உங்களுக்குப் போதிக்கிறேன். வாருங்கள்” என்று கூறினார்.

இவ்வாறு சொல்லக்கேட்ட ஐந்து துறவிகளும், “தாங்கள் மேற்கொண்ட இந்த வாழ்க்கையினாலே இந்தத் தபசினாலே, உயர்ந்த ஆற்றலைத் தாங்கள் அடைய முடியாது. தாங்கள் மேற்கொண்ட வாழ்க்கையினாலே, ஆத்தும வளர்ச்சியையடைய முடியாது. தாங்கள் கடுந்தபசைக் கைவிட்டு உணவை உட்கொண்டு வாழ்கிறீர்கள். இவ்வித வாழ்க்கையினாலே, ஆத்தும உணர்வையும் பரிசுத்தமான உயர்ந்த ஞானத்தையும் எவ்வாறு பெறக்கூடும்?” என்று கேட்டனர்.

பகவன் புத்தர் இவ்வாறு கூறினார்: “ஓ, பிக்குகளே! ததாகதர் சுகபோக வாழ்க்கை வாழவில்லை. தபசைக் கைவிடவும் இல்லை. ததாகதர் பௌத்திரமான சம்புத்தராவார். இறவாமை என்னும் பதவியைக் கைவரப் பெற்றவராவர். ததாகதர் காட்டும் வழியிலே நீங்கள் நின்று ஒழுகுவீர்களானால், நீங்கள் விரைவிலே உண்மையைக் கண்டுஅறிந்து உணர்ந்து அதனை நேருக்குநேராகக் காண்பீர்கள்.”

ஐந்து துறவிகளும் பகவர் கூறியதை நம்பவில்லை. முன்போலவே அவர்கள் தங்கள் ஐயப்பாட்டைக் கூறித் தெரிவித்தார்கள். பகவன் புத்தர் மூன்றாம் முறையும் மேலே கூறியதுபோலவே அவர்களுக்குக் கூறினார். மூன்றாம் முறையும் முனிவர்கள் நம்பாமல் தங்கள் ஐயத்தைத் தெரிவித்தார்கள்.

துறவிகள், தம்மிடம் நம்பிக்கைக் கொள்ளாததை அறிந்த பகவன் புத்தர் அவர்களைப் பார்த்து, “பிக்குகளே! இதற்கு முன்பு எப்போதாவது இதுபோன்று ததாகதர் பேசியது உண்டா?” என்று கேட்டார்.

“தாங்கள் இதுபோன்று முன்பு எப்போதும் பேசியதில்லை” என்று அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

“ஓ, பிக்குகளே! ததாகதர் பரிசுத்தமான உயர்ந்த சம்புத்தர். பிக்குகளே! ததாகதருக்குச் செவி கொடுத்துக் கேளுங்கள்; கேட்பீர்களானால் கிடைத்தற்கரிய நிர்வாணமோக்ஷ இன்பத்தை யடையப் பெறுவீர்கள்” என்று ததாகதர் கூறினார்.

அப்போது முனிவர்கள் பகவர்மீது நம்பிக்கை கொண்டார்கள். அவருடைய உபதேசத்தைச் செவி சாய்த்துக் கேட்க இணங்கினார்கள்.

முதல் தர்மோபதேசம்

சூரியன் மேற்கில் சென்றான். பூக்களில் தேனை யுண்டு மகிழ்ந்த தேனீக்களும் வண்டுகளும் ரீங்காரம் செய்து பறந்து கொண்டிருந்தன. மரக்கிளைகளில் மயில்கள் அமர்ந்திருந்தன. குயில்கள் இனிமையாகக் கூவின. மான் கூட்டங்கள் அமைதியாக உலவின. இசிபதனம் (மான் வனம்) என்னும் அந்தத் தோட்டம் அமைதியாகவும் அழகாகவும் விளங்கிற்று. கொண்டஞ்ஞர், பத்தியர், வப்பர், மகாநாமர், அஸ்ஸஜி என்னும் பெயருள்ள ஐந்து முனிவர்களும் தமது ஆசிரமத்துக்கு வெளியே வந்து அமர்ந்தார்கள்.

பகவன் புத்தர் அவர்களுக்கு எதிரிலே உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தார். அப்போது தேவர்களும் பிரமர்களும் யக்ஷர்களும் அவ்விடம் வந்து அமர்ந்தார்கள். ஓசை அடங்கி அமைதியாக இருந்தது. பறவைகளும் விலங்குகளும் தத்தம் ஓசையை அடக்கிக்கொண்டு தத்தம் இடத்திலிருந்தே பகவன் புத்தர் உபதேசிக்கும் இனிய குரலைக் கேட்டன. புத்தர் பெருமான் ஐந்து தாபதர்களையும் விளித்து இவ்வாறு திருவாய் மலர்ந்தருளினார்:

“பிக்குகளே! துறவிகள் விலகவேண்டிய இரண்டு எல்லைகள் உள்ளன. மாறுபட்ட இந்த இரண்டு எல்லைகள் எவை என்றால், காம சுகல்லிகானுயோகம், அத்தகில மதானுயோகம் என்பன. காமசுகல்லிகான யோகம் சிற்றின்ப சுகத்தை அனுபவிக்கிறது. இது இழிவும் தாழ்வும் விகாரமும் உள்ளது; இறுதியிலே தீமை பயப்பது. அத்தகில மதானுயோகம் என்பது, உடம்பை அதிகமாக வாட்டி ஒடுக்கி அடக்கித் துன்பங் கொடுப்பது; இதுவும் இறுதியில் யாதொரு பயனையும் கொடாமல் வீணாகப் போகிறது. பிக்குகளே! இந்த இரண்டு எல்லைகளையும் நீக்கி இடைவழியான ஒரு நெறியைத் ததாகதர் கண்டுபிடித்திருக்கிறார்.

“இந்த நெறியானது நல்லறிவையும் நற்காட்சியையுங் கொடுத்து ஞானத்தையும் சம்புத்தியையும் நிர்வாண மோக்ஷத்தையும் அளிக்கிறது. ததாகதரால் கண்டறியப்பட்ட அந்த வழி யாது? அதுதான் எட்டுநெறி என்று கூறப்படும் அஷ்டாங்கயோகம் என்பது. அவை:

1. ஸம்மா திட்டி - நற்காட்சி.

2. ஸம்மா ஸங்கப்போ - நல்லெண்ணங்கள்

3. ஸம்மா வாசா - நல்வாய்மை

4. ஸம்மா கம்மந்தோ - நற்செய்கை

5. ஸம்மா ஆஜீவோ - நல்வாழ்க்கை

6. ஸம்மா வியாயாமோ - நன் முயற்சி

7. ஸம்மா ஸதி – நற்கடைப்பிடி

8. ஸம்மா ஸமாதி - நற்றியானம்.

“பிக்குகளே! இவைதாம் ததாகதர் கண்டறிந்த மத்திம வழி. இது ஞானத்தையும், அமைதியையும் (சாந்தியையும்), சம்புத்தியையும், நிர்வாண மோக்ஷத்தையும் அளிக்கிறது.”

“பிக்குகளே! நான்கு சத்தியங்கள் (வாய்மைகள்) உள்ளன. அவையாவன:”

துக்க சத்தியம்:

“பிக்குகளே! பிறப்பு துன்பமானது. மூப்பு துன்பமானது. நோய் துன்பமானது. இறப்பு துன்பமானது. நம்மால் வெறுக்கப்படும் பொருள்கள் துன்பந் தருகின்றன. நாம் விரும்பிய பொருள் கிடைக்காமற் போனால் துன்பம் உண்டாகிறது. சுருங்கக் கூறினால், ஐம்புலன்களினாலே உண்டாகிற ஆசைகளினாலே துன்பங்கள் உண்டாகின்றன.”

துக்கோற்பத்தி சத்தியம் (சமுதய சத்தியம்):

“பிக்குகளே! பிறப்புக்குக் காரணமாகிற வேட்கைகளும் அவற்றோடு தொடர்புடைய காமசுகங்களும் ஆசைகளும் துக்கத்தைத் தருகின்றன. இவை காமதிருஷ்ணா (சிற்றின்பத்தில் ஆசை), பவதிருஷ்ணா (வாழ்க்கையில் ஆசை), விபவதிருஷ்ணா (செல்வங்களில் ஆசை) என்று மூன்று வகைப்படும். இவை சமுதய சத்தியம் எனப்படும்.”