மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/006

துக்கநிவர்த்தி சத்தியம் (நிரோத சத்தியம்):

“பிக்குகளே! அவா என்னும் வேட்கையை அடியோடு நீக்க வேண்டும். அவாவை மனம் வாக்குக் காயங்களினால் நிகழாமல் தடுக்க வேண்டும். அவாவை நீக்குவதே துக்க நிவர்த்தி (நிரோத சத்தியம்) என்று கூறப்படும்.”

நிவர்த்தி மார்க்கம் (மார்க்க சத்தியம்):

“பிக்குகளே! நற்காட்சி, நல்லெண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நல்கடைப்பிடி, நற்சமாதி என்னும் இவை எட்டும் துக்க நிவாரண மார்க்கம் எனப்படும்.”

துக்கசத்திய ஞானம்:

“இதற்கு முன்பு ஒருவராலும் கண்டறியப்படாத துக்க சத்தியம் என்கிற ஞானம் எனக்குத் தோன்றியது. பிறகு இந்த ஞானத்தை அறிய வேண்டும் என்னும் கிருத்திய ஞானம் உண்டாயிற்று. இதனை ஆராய்ந்து அறிந்தபிறகு, துக்க சத்தியத்தை நன்றாக அறிந்தேன் என்கிற கிருதஞானம்6 தோன்றியது.”

சமுத சத்தியத்தில் சத்தியஞானம்:

“பிக்குகளே! பிறகு, துக்க சமுதய சத்தியம் என்னும் ஞானம் தோன்றியது. அதை நன்கு அறிய வேண்டும் என்னும் கிருத்திய ஞானம் தோன்றி, அந்தச் சமுதய சத்தியத்தை (திருஷ்ணையை) நீக்க வேண்டும் என்னும் ஞானம் தோன்றியது. பின்னர் அந்தச் சமுதயத்தை (திருஷ்ணையை) நான் நீக்கிவிட்டேன் என்கிற கிருதஞானம் தோன்றியது.”

நிரோத சத்தியத்தில் சத்தியஞானம்:

“இந்த நிரோத சத்தியத்தை ஆராய்ந்தபோது நிர்வாணம் என்கிற ஞானம் தோன்றியது. இதனால், நிரோத சத்தியத்தை அறிய வேண்டும் என்னும் கிருத்திய ஞானம் தோன்றி, அதனை ஆராய்ந்து பார்த்து, இந்த நிரோத சத்தியத்தை அடைந்தேன் என்னும் கிருதஞானம் தோன்றியது.”

மார்க்க சத்தியத்தில் சத்தியஞானம்:

“பிக்குகளே! பிறகு மார்க்க சத்தியம் என்னும் ஞானம் உண்டாயிற்று. இந்த மார்க்க சத்தியத்தை நன்றாய் அறிய வேண்டும் என்னும் கிருத்திய ஞானம் உண்டாகி, அதனை நன்கு ஆராய்ந்து பார்த்த பிறகு, துக்கங்களை வெல்லும் மார்க்க சத்தியத்தையடைந்தேன் என்னும் கிருத ஞானம் தோன்றியது.

“பிக்குகளே! இவ்வாறு சத்தியஞானம், கிருத்திய ஞானம், கிருதஞானம் என்னும் மூன்றையும் நான்கு சத்தியத்துடன் பொருத்திப் பார்க்கிறபோது பன்னிரண்டுவிதமான ஞானம் எனக்குத் தோன்றியது. இந்த ஞானம் எனக்குத் தோன்றாமல் இருந்த காலத்தில், தேவர், பிரமர், மாரர் இருக்கிற அந்த உலகத்திலும், சிரமணரும் பிராமணரும் இருக்கிற இந்த உலகத்திலும், நான் சாமா சம்போதியை அடைந்ததாகச் சொல்லிக் கொள்ளவில்லை.”

சத்தியஞானம், கிருத்தியஞானம், கிருதஞானம் என்கிற மூன்றையும் நான்கு சத்தியத்தோடு பொருத்திப் பார்க்கிறபோது பன்னிரண்டு விதமாக இருக்கிற இந்தத் தத்துவ ஞானத்தை நான் எப்போது அறிந்தேனோ அப்போது, தேவர், பிரமர், மாரர் இருக்கிற அந்த உலகத்திலேயும், சிரமணர் பிராமணர் இருக்கிற இந்த உலகத்திலேயும், நான் சம்மா சம்போதியை யடைந்தேன் என்று எல்லோருக்கும் கூறினேன்.

“இந்த ஞானம் எனக்குத் தோன்றியபோது, ‘நான் அடைந்த சம்போதி ஞானம் அழியாதது; இதுவே என்னுடைய கடைசிப் பிறப்பு; இனி நான் பிறக்கமாட்டேன்’ என்கிற மனவுறுதி ஏற்பட்டது.”

இந்த உபதேசத்தைக் கேட்ட பிறகு கொண்டஞ்ஞர் என்னும் பிக்குவுக்கு அறிவுக் கண் திறந்து அவர் ஸ்ரோதாபத்தி ஞானம் அடைந்தார்.

வாரணாசி நகரத்திலே இசிபதனத்திலே பகவன் புத்தர் திருவாய் மலர்ந்தருளிய இந்தத் தர்மோபதேசத்தைக் கேட்ட போது தேவர்களும் பிரமர்களும் முனிவர்களும் சிரமணர்களும் பிராமணர்களும் சந்தோஷ ஆரவாரம் செய்து, ‘இது உண்மை, இது சத்தியம்’ என்று கூறினார்கள். இந்தச் சந்தோஷ ஆரவாரம் இம் மண்ணுலகத்தைக் கடந்து பிரமலோகம் வரையில் சென்றது. சக்கரவாளம் அசைந்து அதிர்ந்தது. தேவர்களின் தெய்வீக ஆற்றலினால் உண்டாகிற ஒளியையும் மங்கச் செய்கிற, ஆற்றல் மிக்க ஒரு பெரிய தெய்வீக ஒளி உலகம் எங்கும் தோன்றியது.

அப்போது பகவன் புத்தர், “உண்மையாகவே பிக்கு கொண்டஞ்ஞர் இதை அறிந்துகொண்டார்” என்று திருவாய் மலர்ந்தருளினார். அதுமுதல் பிக்கு கொண்டஞ்ஞருக்கு அஞ்ஞா கொண்டஞ்ஞர் (ஞானம் பெற்ற கொண்டஞ்ஞர்) என்னும் பெயர் ஏற்பட்டது.

இரண்டாம் நாள் வப்ப முனிவரும், மூன்றாம் நாள் பத்திய முனிவரும், நான்காம் நாள் மகாநாம முனிவரும் ஐந்தாம் நாள் அஸ்ஸஜி முனிவரும் தர்மோபதேசம் கேட்டு ஸ்ரோதாபத்தி பலன் அடைந்தார்கள். இவர்கள் புத்தரிடம் பிக்கு ஆனார்கள். பகவன் புத்தர் அவர்களை நோக்கி, “பிக்குகளே! இங்கு வாருங்கள்: தர்மம் நன்றாக உபதேசிக்கப்பட்டது. எல்லாத் துன்பங்களையும் அழித்து, உயர்நிலை பெறுவதற்காகச் சுத்தமான பிரமசரியத்தை அனுசரிப்பீர்களாக!” என்று கூறி அவர்களைச் சங்கத்தில் சேர்த்தார். அப்போது இந்த ஆறுபேர்களே பௌத்தமதத்தில் இருந்தார்கள்.

பிறகு ஒரு நாள், பகவன் புத்தர் கொண்டஞ்ஞர் முதலாக ஐந்து பிக்குகளுக்கு அனாத்ம இலக்கணச் சூத்திரத்தை உபதேசம் செய்தார். அதன் சுருக்கம் வருமாறு:- “பிக்குகளே! ரூபம் (உடம்பு) ஆன்மா அல்ல. நமக்கு உள்ள இந்த உருவம் ஆன்மாவாக இருந்தால், இதற்கு வியாதிவரக் கூடாது. எல்லோரும் தங்கள் உருவத்தைப் பற்றி இப்படி இருந்தால் நல்லது; இப்படி இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், அவரவர் நினைப்பது போல உருவம் அமைவது இல்லை.”

வேதனை ஆன்மா அல்ல. சஞ்ஞா, சம்ஸ்காரம், விஞ்ஞானம் என்பவைகளும் ஆன்மா அல்ல என்பதைப் பற்றியும் தேகத்தைப் பற்றிக் கூறியது போலவே விளக்கிக் கூறினார். பிறகு பகவன் புத்தர் பிக்குகளைப் பார்த்து, “பிக்குகளே! உருவம் (உடம்பு) நித்தியமா, அநித்தியமா? நிலைபெற்றிருப்பதா, அழிந்து விடுவதா?” என்று வினவினார்.

பிக்குகள், “தேகம் (உருவம்) அநித்தியமானது; அழிந்துவிடக் கூடியது” என்று விடை கூறினார்கள்.

பகவன் புத்தர்:

“அநித்தியமான, அழிந்துவிடுகிற பொருள் துக்கத்தைத் தருமா, சுகத்தைத் தருமா?”

பிக்குகள்:

“பகவரே! அது துன்பத்தைத் தருவது.”

பகவன் புத்தர்:

ஒரு பொருள் அநித்தியமானதாகவும் துன்பத்தைக் கொடுக்கிறதாகவும், மாறுதல் அடைந்து கொண்டிருக்கிறதாகவும் இருந்தால் அதைக் கண்டு ‘இது நான், இது என்னுடையது, இது நானே’ என்று நினைப்பது சரியா?”

பிக்குகள் :

“அப்படி நினைப்பது சரியல்ல”

பின்னர் வேதனை, சஞ்ஞா, சம்ஸ்காரம், விஞ்ஞானம் என்கிற மற்ற நான்கு ஸ்கந்தங்களைப் பற்றியும் பகவன் புத்தர் மேற்கண்டபடி கேள்விகள் கேட்க, பிக்குகள் மேற்கண்டபடி விடை கூறினார்கள். அப்போது பகவன் புத்தர் அருளிச்செய்தார்: “ஆகையினாலே, பிக்குகளே! இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் முக்காலத்திலும் அகத்திலும் புறத்திலும் கம்பீரத்துடனும் கம்பீரம் இல்லாமலும் தாழ்ந்ததாகவும் உயர்ந்ததாகவும் அண்மையிலாயினும் சேய்மையிலாயினும் ஏதாவது ஒரு உருவம் (தேகம்) இருந்தால், அது நான் அன்று, அது என்னுடையதன்று, அது என்னுயிர் அன்று என்று நன்றாகவும் சரியாகவும் அறிவினால் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.”

“இவ்வாறே வேதனை, ஸஞ்ஞா, சம்ஸ்காரம், விஞ்ஞானம் என்கிற நான்கைப் பற்றியும் நன்றாகவும் சரியாகவும் அறிவினால் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.”

“பிக்குகளே! இப்படி ஆராய்ந்து பார்க்கிற அறிவு பெற்றவர்கள் ரூபத்தைப் பற்றியும் வேதனையைப் பற்றியும் சம்ஸ்காரத்தைப் பற்றியும் விஞ்ஞானத்தைப் பற்றியும் இவ்வாறு ஆராய்ந்து பார்த்து உண்மையைக் காண்பார்கள். உண்மையைக் கண்டவர்கள் ஆசையை விட்டுவிடுவார்கள். ஆசையை அறுப்பதினாலே, கிலேசங்களில் (துன்பங்களில்)இருந்து நீங்கிய மனத்தைப் பெறுவார்கள். அவ்வாறு மன மாசு நீங்கியவர்கள் அனாத்மவாத அறிவைப்பெற்று, செய்யவேண்டிய நன்மைகளையெல்லாம் செய்து முடித்தேன். இனி எனக்கு மறுபிறப்புக் கிடையாது. இந்த அர்ஹந்தாவைப் பற்றிச் செய்யவேண்டியது வேறொன்றுமில்லை” என்று ஞானக் கண்ணாலே அறிந்து கொள்வார்கள்.

பகவன் புத்தருடைய இந்தப் போதனையைக் கேட்ட போது ஐந்து பிக்குகளும் எல்லாவித கிலேசங்களையும் வென்று அர்ஹந்த பலனை அடைந்தார்கள்.

நாலக சூத்திரம்

பிறகு ஒரு நாள் நாலக முனிவர் பகவன் புத்தரிடம்வந்தார். இந்த நாலக முனிவர், புத்தர் குழந்தையாயிருந்தபோது தீர்க்க தரிசனம் கூறின அசித முனிவரின் மருகன். அசிதமுனிவரின் ஆணைப்படி, துறவு பூண்டு இமயமலைச் சாரலில்சென்று தவம் செய்திருந்தார். சித்தார்த்த குமரன் புத்த பதவியடைந்திருக்கிறார் என்பதை அறிந்து அவரிடம் உபதேசம் பெறுவதற்காக நாலக முனிவர் இமய மலையிலிருந்து பகவன் புத்தரிடம் வந்தார். வந்து வணங்கி அவரிடம் உபதேசம் கேட்டார். பகவன் புத்தர், நாலக முனிவருக்கு மோனெய்ய விரதத்தை உபதேசித்தார். (இந்த உபதேசத்தைச் சூத்திர பிடகத்திலே நாலக சூத்திரத்தில் காணலாம்.) இவ்வுபதேசத்தைப் பெற்ற நாலக முனிவர் மீண்டும் இமய மலைக்குச் சென்று, பகவன் புத்தர் உபதேசப்படி இருந்து ஏழு திங்களுக்குப் பிறகு உயர்ந்த நிலையைப் பெற்றார்.

யசபுத்திரனுக்கு உபதேசித்தல்

அக்காலத்திலே காசி நகரத்திலே மிக்க செல்வந்தனான தனபதியின் மகன் யசகுலபுத்திரன் இன்பசுகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு நாள் விடியற்காலையில் விழித்துக் கொண்டு பார்த்த போது மகளிரின் இருப்பைக்கண்டு, சித்தார்த்த குமரன் இல்லறத்தில் வெறுப்புக்கொண்டது போல, வெறுப்புக் கொண்டு மாளிகையைவிட்டுப் புறப்பட்டுவந்தான். வந்தவன் புத்தர் எழுந்தருளியிருக்கும் இசிபதனத்தை அடைந்தான். அப்போது விடியற்காலம் ஆகையால் பகவன் புத்தர் ஆசனத்தில் அமர்ந்து ஞானக்கண்ணினாலே உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். யசகுல புத்திரன் வரப்போவதையும் வந்து அறநெறி கேட்டுத் துறவுகொள்ளப் போவதையும் அறிந்தார்.

அப்போது யசகுல புத்திரன் பகவரிடம் வந்து வணங்கினான். பகவர் அவனை உட்காரச் சொல்ல அவனும் அமர்ந்தான். அவனுடைய பக்குவ நிலையை யறிந்த பகவர் தானங் கொடுப்பதனாலும் சீலம் அனுஷ்டிப்பதனாலும் கிடைக்கும் பயன்களையும் இவற்றினாலே கிடைக்கும் உயர்ந்த இன்ப சுகங்களையும் கூறினார். சிற்றின்பச் சுகங்கள் குற்றம் உள்ளவை; கீழானவை; அசுத்தமானவை என்பதை விளக்கி, உத்தமமான உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று உபதேசம் செய்தார்.

இதனைக் கேட்ட யசகுல குமாரனுடைய மனம் விளக்க மடைந்தது. அப்போது பகவன் புத்தர், துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்னும் நான்கு உண்மைகளை விளக்கமாகப் போதித்தார். தூய்மையான வெள்ளைத் துணியில் சாயம் நன்றாகப் பற்றுவதுபோல, யசகுலபுத்திரன் மனத்தில் நான்கு உண்மைகளும் மிக நன்றாகப் பதிந்தன. அதனால் அவன் ஸ்ரோதாபத்தி பலன் அடைந்தான்.

முதல் உபாசகர்

யசகுல புத்திரனுடைய தாயார், மாளிகையிலே புத்திரனைக் காணாமல், தன் பதியாகிய தனபதிக்கு அறிவித்தாள். தனபதியும் மகனைத் தேடுவதற்காக நான்கு திசைகளிலும் குதிரைச் சேவகரை அனுப்பித் தானும் அவனைத் தேடப்புறப்பட்டான். தனபதி, தன் மகனுடைய பொற் பாதரட்சையின் அடிச்சுவடுகளைக் கண்டு அதன் வழியே தொடர்ந்து சென்றான். அந்த அடிச்சுவடு இசிபதன ஆராமத்தில் சென்று விட்டது. பகவன் புத்தர், தனபதி தன் மகனைத் தேடிக்கொண்டுவருவதைத் தூரத்திலேயே கண்டு, தமது இருத்தியினாலே தனபதி தன் மகனைக் காணாதபடி செய்துவிட்டார்.

தனபதியும் ஆராமத்தையடைந்து பகவன் புத்தரிடம்போய் வணங்கி “சுவாமிகளே! சற்று முன்பு இந்தப்பக்கம் வந்த யச புத்திரனைப் பகவர் கண்ட துண்டா?” என்று கேட்டான்.

“யசபுத்திரனைக் காண்பதற்கு விருப்பமாக இருந்தால், தனபதியே! இங்குச் சற்று அமர்க. யசபுத்திரனை இங்குப் பார்க்கலாம்” என்று அருளிச் செய்தார் பகவர்.

தனபதி, தன் மகன் இங்கு இருப்பதை அறிந்து கவலை நீங்கி மகிழ்ச்சி கொண்டான். அப்போது பகவன் புத்தர் செல்வம், தானம், பயன், தானத்தின் புண்ணியம் பாவம் முதலியவைகளைப் பற்றித் தனபதிக்கு உபதேசம் செய்தார். உபதேசத்தின் கடைசியிலே தனபதி ஸ்ரோதாபத்தி பலன் அடைந்தார். பிறகு, தனபதி புத்த தன்ம சங்கம் என்னும் மும்மணியைச் சரணம் அடைந்து பௌத்தரானார். உலகத்திலே மும்மணிகளைச் சரணம் அடைந்த முதல் உபாசகன், யசகுல புத்திரனுடைய தந்தையான காசி நகரத்துத் தனபதியே ஆவார்.

தன் தந்தைக்குப் பகவர் போதித்த தர்மோபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்த யசகுலபுத்திரன் ஞானம் பெற்று எல்லாக் கிலேசங்களையும் வென்று அர்ஹந்த நிலையையடைந்தார். அதாவது, இல்லறத்தைவிட்டுத் துறவுகொள்ளும் நிலையையடைந்தார். அப்போது பகவர் யசகுல புத்திரனைத் தனபதி காணும்படிச் செய்தார்.

தன் மகனைக்கண்டு மகிழ்ச்சியடைந்த தனபதி, மகனைப் பார்த்து “அருமை மகனே! உன்னுடைய தாயார் உன்னைக் காணாமல் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். நீ வந்தால் அவள் உயிர் பிழைப்பாள். உடனே வா” என்று அழைத்தார். யச புத்திரன் பகவன் புத்தருடைய முகத்தைப் பார்த்தான். அப்போது புத்தர், “யசபுத்திரன், அர்ஹந்த் நிலையை யடைந்திருக்கிறான். அவன் இனி இல்லறத்தில் தங்க மாட்டான்” என்று தனபதியிடம் கூறினார்.

அதுகேட்ட தனபதி, பகவன் புத்தரை யசபுத்திரனோடு அன்றைய தினம் தன் இல்லத்திற்குத் தானத்தின் பொருட்டு வரவேண்டும் என்று வேண்டினான். பகவன் புத்தர், தம்முடைய உடன்பாட்டை வாய்திறந்து சொல்வது வழக்கமில்லை. அவர் உடன்பாட்டுக்கு அறிகுறியாக வாளா இருந்தார். பிறகு யசபுத்திரன், பகவன் புத்தரிடம் ஏஹீபிக்ஷுதாவைப் பெற்று பிக்கு ஆனார்.

முதல் உபாசிகைகள்

பிறகு பகவன் புத்தர் யசபிக்குவுடன் தனபதியின் இல்லத்திற்குச் சென்றார். தனபதி அவர்களை வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்தார். அவ்வமயம் யசனுடைய தாயாரான சுஜாதை என்பவள் மருமகளுடன் (யசனுடைய மனைவியுடன்) வந்து பகவன் புத்தரை வணங்கி ஒரு பக்கமாக அமர்ந்தாள். அப்போது பகவன் புத்தர் அவர்களுக்குத் தானகாதை, சீலகாதை, சுவர்க்ககாதை முதலானவைகளை முறையே உபதேசம் செய்தருளினார். அவ்வுபதேசங்களைக் கேட்டு அவர்கள் நன்றாக உணர்ந்தார்கள். பிறகு அவர்களுக்குப் புத்தர் நான்கு வாய்மைகளை அருளிச் செய்தார். அதைக்கேட்ட அவ்விருவரும் ஸ்ரோதாபத்தி நிலையையடைந்தார்கள். ஆகவே அவர்கள் மும்மணியைச் சரணம் அடைந்தார்கள். உலகத்தில் முதன் முதலாகத் திரி சரணம் (மும்மணி) அடைந்த உபாசிகைகள் இவர்களே.

பிறகு அவர்கள் பகவருக்கும் யசபிக்குவுக்கும் உணவு அளித்தார்கள். உணவுகொண்ட பிறகு பகவர் அவர்களுக்கு மோதனா போதனை செய்து தமது விகாரைக்குத் திரும்பினார்.

நால்வர் துறவு

யசபுத்திரனுக்கு வாரணாசி நகரத்திலே நான்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் விமலன், சுபாகு, புண்ணியஜித்து, கவம்பதி என்னும் பெயரையுடையவர்கள். தமது நண்பனான யசகுமரன் துறவு பூண்டதைக் கேட்ட இந்த நண்பர்கள் இசி பதனத்திற்கு வந்து, யச அரகந்தரை வணங்கி ஒரு பக்கமாக அமர்ந்தார்கள். யசமுனிவர் அந்நான்கு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு புத்தரிடம் சென்றார். சென்று வணங்கி இவர்களை அறிமுகப்படுத்தி இவர்களுக்கு உபதேசம் செய்தருளும்படிப் பகவரை வேண்டினார்.

பகவன் புத்தர் இவர்களுக்குத் தானகாதை முதலானவைகளைப் படிப்படியாக உபதேசம் செய்தார். அப்போது இவர்களுக்குக் கிலேசங்கள் (மனமாசுகள்) நீங்கின. பின்னர் இவர்களுக்கு நான்கு வாய்மைகளை விரிவாக உபதேசம் செய்தார். அதைக்கேட்ட இவர்கள் ஸ்ரோதாபத்தி பலன் அடைந்து தங்களுக்குத் துறவு கொடுக்கும்படிக் கேட்டார்கள். பகவர் இவர்களை ஏஹிபிக்ஷதாவாக ஏற்றுக்கொண்டார். மீண்டும் பகவன் புத்தர் இவர்களுக்கு அறநெறியைப் போதித்தார். அது கேட்ட இந்தப் பிக்குகள் அரஹந்தரானார்கள்.

அப்போது உலகத்திலே இவர்கள் பதினொரு அர்ஹந்தர் தான் இருந்தார்கள்.

ஐம்பதின்மர் துறவு

யச அரஹந்தருடைய பழைய நண்பர்கள் ஐம்பதின்மர் வெவ்வேறு இடங்களில் வசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள், யசருடைய துறவைக் கேள்விப்பட்டு அவரிடம் வந்தார்கள். வந்து வணங்கி ஒரு பக்கமாக அமர்ந்தார்கள். யச அரஹந்தர் ஐம்பது நண்பர்களையும் வரவேற்று, அவர்களை அழைத்துக்கொண்டு பகவன் புத்தரிடம் சென்றார். பகவர் அவர்களுக்குத் தானகாதை முதலியவைகளை முறைப்படி உபதேசம் செய்தார். இதனாலே அவர்களின் உள்ளம் பண்பட்டுச் சாந்தி நிலையை யடைந்தது. அதன் பிறகு பகவர் நான்கு வாய்மைகளை அவர்களுக்கு நன்கு உபதேசித்தார். இவ்வுபதேசத்தைக் கேட்டு ஐம்பது பேரும் ஸ்ரோதாபத்திபலன் அடைந்தார்கள். அவர்கள் தங்களுக்குத் துறவு கொடுக்க வேண்டுமென்று அவர்களைக் கேட்டார்கள். பகவர் அவர்களுக்கு ஏஹிபிக்ஷதா என்னும் துறவைக் கொடுத்தார். பின்னர் மீண்டும் தர்மோபதேசம் செய்தருளினார். அதனால் அவர்கள் எல்லோரும் அரஹந்த பலன் அடைந்தார்கள்.

அப்போது பகவன் புத்தரை உள்ளிட்டு அறுபத்தொரு அரஹந்தர்கள் இருந்தார்கள்.

தர்மப் பிரசாரம்

கார்காலம் கழிந்து ஒரு திங்கள் வரையில் பகவன் புத்தர் காசியிலேயே இருந்தார். பிறகு அவர், தமது அறுபது பிக்குகளையும் அழைத்து “பிக்குகளே! தேவர்களையும் மனிதர்களையும் பிணிக்கிற பாசங்களையெல்லாம் நான் நீக்கியிருக்கிறேன். என்னைப்போலவே நீங்களும் அந்தப் பாசங்களையெல்லாம் நீக்கியிருக்கிறீர்கள். உலகத்திலேயுள்ள மக்களின் நன்மைக்காக நீங்கள் யாவரும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று தர்மத்தைப் போதியுங்கள். ஒரே இடத்திற்கு இருவர் போகாதீர்கள்! ஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்திற்குச் செல்லுங்கள். சென்று முதலிலும் இடையிலும் கடைசியிலும் நன்மைகளைப் பயக்கிற பரிசுத்தமான பௌத்த தர்மத்தை மக்களுக்குப் போதியுங்கள். பிரமசரியத்தைப் பிரகாசிக்கச் செய்யுங்கள். தருமத்தை உணர்கிற நல்லறிவு படைத்த மக்கள் உலகத்திலே இருக்கிறார்கள். அவர்களுக்குத் தர்மத்தைப் போதிக்காவிட்டால் வீடு பெற மாட்டார்கள். தருமத்தைப் போதிக்கப் புறப்படுங்கள். நானும் உருவேல ஜனபதத்தில் சேனானி கிராமத்தில் சென்று தர்மம் போதிக்கப் போகிறேன்” என்று அருளிச்செய்தார்.

இவ்வாறு அருளிச்செய்து, தர்ம தூதர்களான அறுபது பிக்குகளையும் அறுபது இடங்களுக்கு அனுப்பித் தாமும் உருவேல ஜனபதத்திற்குப் புறப்பட்டார்.

பத்ர வர்க்கிகர்

காசியிலிருந்து உருவேல கிராமத்துக்குச் செல்லும் சாலை வழியாகப் பகவன் புத்தர் நடந்து சென்று இடைவழியிலே ஒருபக்கத்தில் உள்ள பருத்தித் தோட்டத்தருகில் ஒரு மரத்தின் அடியிலே தங்கினார். அவ்வமயம், பத்ரவர்க்கிய குமாரர்கள் முப்பதுபேர் தமது மனைவியரோடு வினோதத்திற்காக நடந்து வந்தார்கள். அவர்களில் மனைவியில்லாத ஒருவர், கணிகை ஒருத்தியை அழைத்துக் கொண்டு அவர்களுடன் வந்தார். இவர்கள் வினோதமாக இருக்கும் சமயம் பார்த்து அந்தக் கணிகை, நகைகளையும் விலையுயர்ந்த பொருள்களையும் இவர்கள் அறியாதபடி எடுத்துக்கொண்டு போய்விட்டாள். சிறிது நேரங்கழித்து இதனை அவர்கள் அறிந்தார்கள்; அவளைத் தேடிப் புறப்பட்டார்கள்.

அப்படித் தேடி வருகிறவர்கள், குளிர்ந்த மரத்தின் அடியிலே தங்கியிருக்கிற பகவரைக் கண்டு வணங்கி “சுவாமி! இவ்வழியாகச் சென்ற ஒருத்தியைக் கண்டீர்களா?” என்று கேட்டார்கள்.

“குழந்தைகளே! ஒருத்தியைத் தேடுகிறதினாலே உங்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?” என்று கேட்டார் பகவர்.

“சுவாமி! எங்கள் மனைவியரோடு விளையாட்டின் பொருட்டு இங்கு வந்தோம். மனைவியில்லாத ஒருவர் ஒரு தாசியுடன் வந்தார். அவள் எங்கள் நகைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டாள். அதற்காக அவளைத் தேடுகிறோம்” என்று கூறினார்கள்.

“குழந்தைகளே! தன்னைத் தேடுவது உத்தமமானதா, அல்லது அயலாள் ஒருத்தியைத் தேடுவது உத்தமமானதா?” என்று வினவினார்.

“சுவாமி! நம்மை நாமே தேடிக்கொள்வது உத்தமமானது. என்றனர்.

“அப்படியானால், குழந்தைகளே! உட்காருங்கள். உங்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கிறேன்” என்று அருளினார். அவர்களும் “அப்படியே, சுவாமி!” என்று அவரை வணங்கி ஒருபுறமாக அமர்ந்தார்கள்.

அப்போது பகவன் புத்தர் தானகாதை, சீலகாதை முதலிய காதைகளை முறைப்படி உபதேசம் செய்தார். அதைக்கேட்டு மகிழ்ந்து அவர்கள் மனத்தூய்மையடைந்தார்கள். பிறகு, நான்கு விதமான வாய்மைத் தத்துவத்தைப் போதித்தார். இத்தத்துவோபதேசத்தைக் கேட்ட அவர்களுக்கு அறிவுக்கண் விளங்கிற்று. சிலர் ஸ்ரோதாபத்தி பலன் அடைந்தார்கள். சிலர் சத்ருகாமி பலனையும், சிலர் அனாகாமி பலனையும் அடைந்தார்கள்.

இவ்வாறு உபதேசங்கேட்டு உயர்ந்த நிலையையடைந்த பத்ரவர்க்கியர், பகவன் புத்தரை வணங்கித் தங்களுக்குச் சந்நியாசம் கொடுக்கும்படிக் கேட்டார். பகவர் ஏஹிபிக்ஷு கிரமத்தினாலே சந்நியாசமும் உபசம்பதாவும் அவர்களுக்குக் கொடுத்தார். பின்னர், இந்த முப்பது பிக்குகளையும் பல கிராமங்களுக்குத் தர்ம தூத வேலைக்காக அனுப்பித் தாம் தனியாக உருவேல கிராமத்திற்குச் சென்றார்.

திரிசரணம் (மும்மணி)

அந்தக் காலத்தில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற பௌத்தப் பிக்குகள் அற ஒழுக்கத்தைப் போதித்தார்கள். பௌத்த தர்மத்தைக் கேட்டவர்களில் சிலர் தாங்களும் துறவு கொள்ள விரும்பினார்கள். பிக்குகள் அவர்களை அழைத்துக் கொண்டு வந்து பகவன் புத்தரிடம் துறவுகொள்ளச் செய்தார்கள். அவ்வாறு வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களில் பலர் நெடுந்தூரம் நடந்து வந்தபடியால் மிகவும் களைத்து இளைத்துப் போயிருந்தார்கள். பிக்குகளும் களைத்து இளைத்திருந்தார்கள். இதனைக் கண்ட பகவன் புத்தர் ஒருசமயம் தனியே இருந்தபோது இது பற்றிச் சிந்தித்தார். துறவு பெறுவதற்காக இவர்கள் ஏன் இளைத்துக் களைத்து வரவேண்டும்? அவரவர்கள் இடத்திலேயே ஏன் பிக்குகள் அவர்களுக்குத் துறவு கொடுக்கக் கூடாது? இவ்வாறு சிந்தித்த பகவன் புத்தர் அன்று மாலையில் பிக்குச் சங்கம் கூடியபோது அவர்களுக்கு இவ்வாறு அருளிச் செய்தார். பிக்குகளே! துறவுகொள்ள விரும்புகிறவர்களை வெகு தூரத்திலிருந்து அழைத்துக் கொண்டு வருகிறீர்கள். நெடுந்தூரத்தைக் கடந்து வர வேண்டியிருப்பதனால் அவர்களும் நீங்களும் களைத்துத் துன்பம் அடைகிறீர்கள். இனிமேலாக, நீங்கள் அந்தந்த ஊரிலேயே நீங்களே துறவு கொடுக்க உங்களை அனுமதிக்கிறேன்.

துறவுகொள்ள விரும்புகிறவர் முதலில் தலை மயிரையும் மீசை தாடிகளையும் மழித்துவிட வேண்டும். பிறகு அவர் மஞ்சள் நிறச் சீவர ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். பிறகு அவர், துறவு கொடுக்கிற பிக்குவின் காலை வணங்கி அமர வேண்டும். அப்போது துறவு கொடுக்கிற பிக்குவிடத்தில் துறவு பெறுகிறவர் திரிசரணம் கூற வேண்டும்.

‘புத்தம் சரணங் கச்சாமி
தம்மம் சரணங் கச்சாமி
சங்கம் சரணங் கச்சாமி’

என்று திரிசரணம் கூறவேண்டும். திரிசரணத்தை மூன்றுமுறை கூறவேண்டும்.

இவ்வாறு திரிசரணம் கூறித் துறவு பெறும்படி, பிக்குகளே! உங்களுடைய ததாகதர் அனுமதியளிக்கிறார் என்று அருளிச் செய்தார்.

ஜடாதர தபசிகள்

அக்காலத்திலே உருவேல ஜனபதத்தில் நேரஞ்சர நதிக்கரையில் வெவ்வேறு இடங்களில் ஆசிரமங்களை அமைத்துக் கொண்டு மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். இவர்களில் உரு வேல காசிபர் மூத்தவர். அவருக்கு ஐந்நூறு சீடர்கள் இருந்தார்கள். இரண்டாவது சகோதரருக்கு நதிகாசிபர் என்பது பெயர் (நதி - நிரஞ்சா நதி). இவருக்கு முந்நூறு சீடர்கள் இருந்தார்கள். இளையவருக்குக் கயாகாசிபர் என்பது பெயர். இவருக்கு இருநூறு சீடர்கள் இருந்தார்கள். இவர்கள் சடையை வளர்த்துத் தீ (அக்கினி) வழிபாடு செய்து வந்தனர்.

பகவன் புத்தர், உருவேல காசிபரிடம் சென்று அவரிடம் பேசினார். பிறகு, “காசிபரே! நான் இருப்பது தங்களுக்குக் கஷ்டமில்லாமல் இருந்தால், உம்முடைய எக்யசாலையில் ஒரு இரவு தங்குகிறேன்” என்று கூறினார்.

“மகா சிரமணரே! தாங்கள் தங்குவது எனக்குக் கஷ்டம் அல்ல. ஆனால், அங்கு ஒரு குரூரமான பாம்பு உண்டு. அது உமக்குத் தீங்கு செய்யக்கூடும் என்று அஞ்சுகிறேன்?” என்றார் காசிபர்.

“அதனால் எனக்கு ஒன்றும் தீங்கு நேராது. எக்கியசாலையில் நான் தங்க உத்தரவு கொடுங்கள்” என்று கேட்டார் பகவர். அவரும் உத்தரவு கொடுத்தார்.

பகவன் புத்தர் எக்கியசாலைக்குச் சென்று தர்ப்பைப் புல் சனம் அமைத்து அதில் அமர்ந்தார். அப்போது அங்கிருந்த பெரிய நாகப்பாம்பு கோபங்கொண்டு மூக்கின் வழியாக நச்சுப் புகையை வீசிற்று. அந்த நச்சுப் புகை பட்டால் சாதாரண ஆட்களின் தோல், சதை, எலும்புகள் கருகிக் கறுத்துப்போகும். ஆனால், பகவன் புத்தரின் யோக சக்தியினாலே அந்த நச்சுப்புகை அவரை ஒன்றும் செய்யவில்லை. பிறகு, பகவர் “இந்தப் பாம்பின் கொடுமையை அடக்குவேன்” என்று கருதிக் கொண்டு, தமது இருத்தி சக்தியினாலே அங்கு ஒருவிதப் புகையை உண்டாக்கினார். அதனைக் கண்ட நாகப் பாம்பு மிகவும் சினங்கொண்டு அனலைக் கக்கி வீசியது. புத்தர் தமது இருத்தி சக்தியினாலே அனலை உண்டாக்கினார். அதனால் அந்த எக்யசாலை தீப்பற்றி எரிவது போலக் காணப்பட்டது. அதனைக்கண்ட தாபசகர்கள் “ஐயோ! அழகான தேகமுள்ள சிரமணருக்கு நாகப் பாம்பினாலே துன்பம் உண்டாகிறது” என்று பேசிக் கொண்டார்கள்.

இரவு கழிந்து பொழுது விடிந்தவுடன், ஆற்றலை இழந்து வாடிக்கிடந்த நாகப்பாம்பைப் பகவன் புத்தர் எடுத்துத் தமது பாத்திரத்தின் உள்ளே போட்டுக் கொண்டு போய், “உருவேல காசிபரே! இதோ உம்முடைய நாகப்பாம்பு. அதனுடைய ஒளி என்னுடைய ஒளியிலே அடங்கிப் போய்விட்டது” என்று சொல்லி அவருக்கு அதைக் காட்டினார். அதைக்கண்ட உருவேல காசிபர், “அடங்காத இருத்தி சக்தியுடைய இந்தக் கொடிய நாகப்பாம்பை அடக்கிய இந்தச் சிரமணர் அதிக இருத்தி சக்தியுள்ளவரே. ஆனால், இவர் என்னைப் போன்று அர்ஹந்த நிலையை யடைந்தவர் அல்லர்” என்று தமக்குள் நினைத்துக் கொண்டார்.

உருவேல காசிபர்

உருவேல காசிபரின் எண்ணத்தை அறிந்த பகவன் புத்தர், மற்றும் சில இருத்திகளைச் செய்து காட்டினார். அப்போது காசிபர் அவரைப்பற்றித் தவறாகக் கருதிக் கெண்டிருந்த எண்ணத்தை நீக்கிப் பகவன் புத்தரிடம் தருமோபதேசம் கேட்டுப் பௌத்தரானார். அவருடன் இருந்த சீடர்களும் பௌத்தர் ஆயினர். பிறகு, அந்தச் சடிலர்கள் எல்லோரும் பகவன் புத்தரிடம் ஏஹிபிக்ஷவிதமாகச் சந்நியாசமும் உபசம்பதாவும் பெற்றார்கள்.

நதி காசிபர்

உருவேல காசிபரும் அவருடைய சீடர்களும் பௌத்தராகிச் சந்நியாசம் பெற்றபோது, தங்களுடைய சடைகளை மழித்துத் துணிமணி முதலிய பொருள்களை நதியிலே போட்டார்கள். நேரஞ்சர நதிக் கரையிலே இன்னொரு இடத்தில் இருந்த நதிகாசிபர், ஆற்றிலே போகிற இந்தப் பொருள்களைக் கண்டு, தமது தமையனாருக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டதோ என்று ஐயம் அடைந்து, தமது சீடர்களுடன் புறப்பட்டுத் தேடிவந்தார். வந்த அவர், தமது தமையனாரும் அவர் சீடர்களும் பௌத்த சந்நியாசிகளாக இருப்பதைக் கண்டு, “இந்தத் துறவு நிரம்ப நல்லதா?” என்று கேட்டார்.

“ஆமாம், தம்பி! தாபச சந்நியாசத்தைப் பார்க்கிலும் இந்தச் சந்நியாசம் உத்தமமானது” என்று உருவேல காசிபர் கூறினார். இதைக் கேட்டு நதிகாசிபரும் அவரது சீடர்களும் தங்களுடைய சடைமுடி முதலியவைகளைக் களைந்து ஆற்றிலே போட்டுவிட்டுப் பகவன் புத்தரிடம் சென்று தர்மோபதேசங் கேட்டார்கள். புத்தர் அவர்களுக்கு உபதேசம் செய்து, அவர்கள் வேண்டுகோளின்படி ஏஹிபிக்ஷு சந்நியாசம் கொடுத்தார்.

கயா காசிபர்

இவர்கள் ஆற்றில் எறிந்த சடைமுடி முதலிய பொருள்கள் ஆற்றிலே போவதைக் கண்ட மூன்றாவது சகோதரராகிய கயா காசிபர், தமது தமையனாருக்கு ஏதோ தீங்கு நேரிட்டதுபோலும் என்று கருதி, சீடர்களுடன் புறப்பட்டு வந்தார். வந்து, அவர்கள் பௌத்தத் துறவிகளாக இருப்பதைக் கண்டு, “தாபச சந்நியாசத்தைவிட இந்தச் சந்நியாசம் உத்தமமானதா?” என்று வினவினார். “ஆமாம்! இந்தச் சந்நியாசம் அதைவிட உயர்ந்தது, மேலானது!” என்று அவர்கள் கூறினார். இதைக் கேட்ட கயாகாசிபரும் தமது சீடர்களுடன் சடா முடி முதலியவற்றைக் களைந்துபோட்டுத் தர்மோபதேசங் கேட்டுப்பௌத்த துறவியானார்கள்.

ஆதித்த பரியாய சூத்திரம்

பகவன் புத்தர் சிலநாள் அங்குத் தங்கியிருந்த பின்னர், தமது ஜடாதர சீடர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு கயா நகரத்தின் பக்கமாகச் சென்றார். அங்குச் சென்று ஒரு பாறையின் மேலே அமர்ந்து, தமது சீடர்களுக்கு ஆதித்த பரியாய சூத்திரத்தை உபதேசம் செய்தார். அச் சூத்திரத்தின் சுருக்கம் இது: உலகத்தில் எல்லாப் பொருள்களும் தீப்பற்றி எரிகின்றன. கண் என்னும் பொறி தீப்பற்றி எரிகிறது. ரூபம் உருவம் என்னும் தீயினாலே சக்ஷு விஞ்ஞானத்தைத் தீப்பிடித்து இருக்கிறது. சக்ஷ ஸ்பர்ஸ மூலமாக வருகின்ற சுகம் துக்கம் உபேக்ஷை என்கிற மூன்றுவிதமான வேதனை நெருப்பினாலே தீப்பற்றி எரிகிறது.

“இவ்வாறே ஐம்புலன்களிலும் தீப்பற்றி எரிகிறது. எந்த விதமான தீ என்று கேட்கிறீர்களா? ராகத் தீ, துவேஷத் தீ, பிறப்பு, நரை, திரை, மூப்பு, மரணம், சோகம், துன்பம், விருப்பு, வெறுப்பு என்கிற தீயினாலே எல்லாப் பொருள்களும் தீப்பற்றி எரிகின்றன.

இந்த ஆதித்த பரியாய சூத்திரத்தை உபந்நியசிக்கக் கேட்ட பிக்குகள் அர்ஹந்தபலன் அடைந்தார்கள்.

பிறகு பகவன் புத்தர், முன்பு ஜடிலத்துறவிகளாக இருந்த ஆயிரக்கணக்கான சீடர்களோடு புறப்பட்டு முன்பு விம்பசார அரசனுக்குச் செய்த வாக்குறுதியை நிறைவேற்ற இராசகிருக நகரம் நோக்கிச் சென்றார். பன்னிரண்டு மைல் தூரமுள்ள வழியைக் கடந்து தால வனம் என்னும் பனஞ்சோலையை யடைந்து அங்கே ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே எழுந்தருளியிருந்தார்.

விம்பசாரன் பௌத்தனானது

பகவன் புத்தர் எழுந்தருளியிருக்கிறார் என்பதை அறிந்த சேணிய விம்பசாரன் என்னும் மகத நாட்டு அரசன், தன்னிடம் விருந்தாக வந்திருந்த லிச்சாவி அரசனான மஹாலியுடனும் வச்சபாலன் முதலிய பன்னிரண்டு பிராமணர்களுடனும் மந்திரி பிரதானிகள் முதலிய பரிவாரங்களுடனும், வந்து பகவரை அடிபணிந்து தொழுதான். பிராமணர்களும் பகவன் புத்தரை வணங்கி ஒருபுறம் அமர்ந்தார்கள். பகவன் புத்தரையும் அவருடன் இருந்த ஜடிலத் துறவிகளையும் கண்ட பிராமணர்கள் ஐயங் கொண்டனர். புத்தர் ஜடிலருடைய சீடரா அல்லது ஜடிலர்கள் புத்தருடைய சீடரா என்று அவர்களுக்கு ஐயம் உண்டாயிற்று. இதனைப் பகவன் புத்தர் உணர்ந்தார். அவர்களுடைய ஐயத்தை நீக்க எண்ணிப் பகவன் புத்தர் உருவேல் காசிபரைப் பார்த்துக் கூறினார்: “உருவேலரே! அனலை ஓம்பித் தீயை வளர்த்துத் தீ வணக்கம் செய்துகொண்டிருந்த நீர் ஏன் அந்த வணக்கத்தை விட்டு விட்டீர்?” இந்தக் கேள்விக்கு உருவேல காசிபர் இவ்வாறு விடை கூறினார். “அனலை ஓம்பித் தீயை வணங்கினால் அது மறுமையில் இந்திரலோகப் பதவியைத் தந்து இன்ப சுகங்களை அளிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த இன்பசுகங்கள் நிலையற்றவை. கடைசியில் துன்பத்தைத் தருபவை என்பதைத் தங்களால் அறிந்து, நிலையற்றதும் துன்பந்தருவதுமான இன்ப சுகங்களைத் தருகிற தீ வணக்கத்தைவிட்டு பௌத்த தர்மத்தைக் கொண்டேன்.” இவ்வாறு கூறிய உருவேல காசிப் முனிவர் தமது ஆசனத்தைவிட்டு எழுந்துவந்து பகவன் புத்தரின் திருவடிகளில் தலைவைத்து வணங்கினார். அப்போது பகவன் புத்தர், இப்போது மட்டுமல்ல பூர்வஜன்மங்களிலுங்கூட உருவேல காசிபருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்” என்று கூறி மஹாநாரத காசிப ஜாதகக் கதையை அவர்களுக்கு விவரமாகச் சொன்னார்.

உருவேல காசிபர் கூறியதையும் அவர் பகவன் புத்தரை வணங்கியதையும் கண்டும் கேட்டும் அவர்கள் உண்மை அறிந்தனர். உருவேல காசிபர் பௌத்த மதத்தை மேற்கொண்டு பகவன் புத்தருக்குச் சீடர் ஆனார் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர்.

பிறகு விம்பசார அரசனுக்கும் அவனுடன் வந்திருந்தவர்களுக்கும் பகவன் புத்தர் தானகாதை முதலிய உபதேசங்களைச் செய்தார். அதனால் அவர்கள் மனம் மகிழ்ந்தார்கள். பிறகு நான்கு வாய்மைத் தத்துவங்களை அவர்களுக்கு உபதேசம் செய்தார். அதைக்கேட்ட அரசனும், மஹாலி என்னும் லிச்சாவி அரசனும் அங்கிருந்த மக்களும் சுரோத்தாபத்தி பலன் அடைந்தார்கள். ஸ்ரீ வட்டன், வச்சன் முதலான பிராமணர்களும் பௌத்தராகிச் சந்நியாசம் பெற்றார்கள். விம்பசார அரசன் மும்மணிகளைச் சரணம் அடைந்து உபாசகன் ஆனான். பிறகு, அடுத்த நாள் சீடர்களுடன் தானத்திற்காக வரும்படிப் பகவரை வணங்கி வேண்டிக்கொண்டு அரசன் அரண்மனைக்குத் திரும்பினான்.

வெளுவன தானம்

மறுநாள் விம்பசார அரசன், பகவன் புத்தரை அரண்மனைக்கு எழுந்தருளும்படிச் செய்தி சொல்லி அனுப்பினான். பகவர் சீடர்களோடு புறப்பட்டு இராசகிருக நகரம் சென்றார். அதிகாலையிலிருந்து அவரைக் காண்பதற்காக வந்து கூடுகிற ஜனக்கூட்டத்தைக் கடந்து வருவதற்கு அதிக நேரஞ்சென்றது. ஜனங்கள் புத்தரை வணங்கினார்கள், அவருடைய குணங்களைப் பேசினார்கள். சிலர் அவரைவிட்டுப் பிரிய மனம் வராமல் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். சிலர் அவர்களை விலக்கி வழி விட்டார்கள். மக்கள் எல்லோரும் பகவன் புத்தரைக்கண்டு மனம் மகிழ்ந்தார்கள்.

ஒரு தனபதியின் மகளான சித்திரை என்பவளும், அரசருடைய புரோகிதரின் மகளான சோமை என்பவளும், கிருகபதி யொருவரின் மகளான சுக்கிலை என்பவளும், பிராமண கன்னிகையான சுபை என்பவளும் மற்றும் சில மகளிரும், புத்தரை வணங்கி உபாசிகைகள் ஆனார்கள். பின்னர் இவர்களே சந்நியாசம் பூண்டு பிக்குணிகளானார்கள்.

பகவன் புத்தர் அரண்மனைக்குச் சென்று தமக்காக அமைத்திருந்த ஆசனத்தில் பிக்கு சங்கத்தோடு இருந்தார். அரசர் அவர்களுக்கு அறுசுவை உணவை அன்போடு அளித்தார். பகவர், பிக்குகளுடன் உணவு அருந்திய பிறகு, விம்பசார அரசன் ஒருபுறத்தில் உட்கார்ந்து “சுவாமி! புத்த தர்ம சங்கம் என்னும் மும்மணியிலிருந்து நான் விலகி வாழமுடியாது. நான் அடிக்கடி பகவரிடம் வந்து திருவாய்மொழி கேட்க வேண்டும். பனைவனம் வெகுதூரத்தில் இருக்கிறது. வெளுவனம் (வெளுவனம் என்றாலும் வேணுவனம் என்றாலும் ஒன்றே. மூங்கில் வனம் என்பது பொருள்) இடைவழியில் இருக்கிறது. அதிக ஜனக் கூட்டம் இல்லாத அமைதியான இடம் அது. அந்த வனத்தைப் பகவர் ஏற்றுக்கொண்டு அங்கு எழுந்தருளியிருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டு, பொற்கிண்டியிலிருந்து நீரைத் தாரைவார்த்து வெளுவனத்தைப் பகவருக்குத் தானம் செய்தார். பகவன் புத்தர் அதனை ஏற்றுக்கொண்டு பிக்கு சங்கத்தாருடன் வெளுவனத்துக்குச் சென்றார். (வெளுவனத்திலே புத்தர் அடிக்கடி வந்து தங்கிப் பலருக்குத் தாமோபதேசஞ் செய்திருக்கிறார்).

சாரிபுத்த மொக்கல்லானர்

“அக்காலத்திலே இராசகிருக நகரத்திலே இருநூற்றைம்பது பரி விராசகர்களுக்குத் தலைவனான சஞ்சயன் என்னும் பரி விராசகன் ஒரு கிராமத்திலே தங்கியிருந்தான். இராசகிருக நகரத்துக்கு அருகிலே உபதிஸ்ஸ கிராமம், கோலித கிராமம் என்னும் இரண்டு கிராமங்களுக்குத் தலைவர்களாக இரண்டு பிராமணர்கள் இருந்தார்கள்: அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்மகவு பிறந்தது. அக் குழந்தைகளுக்கு அக்கிராமத்தின் பெயரையே உபதிஸ்ஸன், கோலிதன் என்று சூட்டினார்கள். இக் குழந்தைகள் வளர்ந்து இளமையிலேயே சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து இல்லற வாழ்க்கையை வெறுத்துச் சஞ்சயப் பரிவிராசகனிடஞ் சென்று சீடர்களாகி அவரிடம் துறவு பெற்றார்கள்.

ஆனால், இவ்விருவரும் சஞ்சயருடைய போதனையில் திருப்தியடையாமல் தமக்குள் இவ்வாறு பேசிக் கொண்டார்கள்: “நாம் இருவரும் அமிர்த தருமத்தைத் தேடவேண்டும்; அது யாருக்கு முதலில் கிடைக்கிறதோ அவர் மற்றவருக்குச் சொல்ல வேண்டும்” இவ்வாறு தமக்குள் தீர்மானித்துக்கொண்டு அவர்கள் பரதக்கண்டம் முழுவதும் சுற்றித்திரிந்து மீண்டும் இராசகிருக நகரத்துக்கு வந்தார்கள். அவ்வமயம் பகவன் புத்தர் தமது சீடர்களைத் தர்மதூத வேலைக்காக வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பியிருந்தார். இவர்களில் அஸ்ஸஜி தேரர் இராசகிருக நகரம் வந்து மிகச் சாந்தியோடு பிக்ஷைக்காகப் போவதை உபதிஸ்ஸ பரிவிராசகன் கண்டார். கண்டு, “இவர் கட்டாயம் அர்ஹந்தராக இருக்க வேண்டும். அல்லது அர்ஹந்த பதவிக்கு முயற்சி செய்தவராக இருக்க வேண்டும். எதற்கும் இவரை அணுகிக் கேட்போம்” என்று தமக்குள் சிந்தித்தார்.

பிக்ஷைக்குப் போகும்போது பேசுவது சரியல்ல என்று நினைத்து அவர் பின்னே சென்றார். அஸ்ஸஜி தேரர் வீடுகளில் பிக்ஷை ஏற்று நகருக்கு வெளியே வந்து ஓர் இடத்தில் உட்கார நினைத்தார். அப்போது உபதிஸ்ஸர் தம்மிடம் இருந்த ஆசனத்தை விரித்து அதில் உட்காரச் சொன்னார். தேரர் அதில் அமர்ந்து உணவை உண்டார். உண்ட பிறகு உபதிஸ்ஸர் தமது குண்டிகையிலிருந்த நீரைக் கொடுத்துச் சுத்தம் செய்வித்தார்; பிறகு அவரோடு பேசத் தொடங்கினார்.

“நண்பரே! தங்களுடைய கண் காது முதலிய புலன்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. உடம்பின் தோற்றமும் நிறமும் நன்றாக உள்ளன. தாங்கள் யாரிடத்தில் சந்நியாசம் பெற்றீர்கள்?” என்று கேட்டார். அஸ்ஸஜி தேரர், ‘இந்தப் பரிவிராசிகர்கள் பௌத்த மதத்திற்கு விரோதிகள். ஆகையால், இவர்களுக்குப் பௌத்த மதத்தின் சிறந்த கொள்கையைக் காட்டவேண்டும்’ என்று தமக்குள் நினைத்துத் தான் புதிதாகப் பௌத்த மதத்தில் சேர்ந்தவர் என்பதைக் கூறினார்.

“நான் திஸ்ஸன் என்னும் பெயருள்ளவன். சுருக்கமாகவோ விரிவாகவோ தயவு செய்து உமது போதனையை எனக்குக் கூறுங்கள். சுருக்கமாகக் கூறினாலும் அதைப் பத்துப் பங்கு நூறுபங்காகத் தெரிந்து கொள்வது என்னுடைய கடமையாகும்” என்று உபதிஸ்ஸர் கூறினார்.

அஸ்ஸஜி தேரர், புத்தருடைய உபதேசங்களையெல்லாம் அடக்கிச் சுருக்கிக் கூறினார். அதைக்கேட்ட உபதிஸ்ஸர். “சுவாமி! உமது சாஸ்தா எங்கேயிருக்கிறார்?” என்று கேட்க, “சகோதரரே! அவர் வெளுவனத்தில் எழுந்தருளியிருக்கிறார்” என்று தேரர் கூறினார்.

“தாங்கள் முன்னே போங்கள், நான் என்னுடைய நண்பரை அழைத்துக்கொண்டு அவ்விடம் வருகிறேன்” என்று அவரை வணங்கி அனுப்பிவிட்டு உபதிஸ்ஸர், பரிவிராசக ஆராமத்திற்குச் சென்றார். சென்று தாம் புதிய குருவைக்கண்ட செய்தியைக் கோலிதருக்குக் கூறி அவரை வெளுவன ஆராமத்திற்கு அழைத்தார். அவரும் புறப்பட்டார். இருநூற்றைம்பது பரிவிராசகருக்கும் இதைக் கூறுவோம். அவர்கள் வருவதாக இருந்தால் வரட்டும் என்று கூறி, அவர்களிடம் சென்று தாங்கள் புத்தரிடம் போவதைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட அவர்கள், தாங்களும் வருவதாகக் கூறினார்கள். பிறகு கோலிதரும் உபதிஸ்ஸரும், பரிவிராசகருக்குத் தலைமைக் குருவாகிய சஞ்சயரிடம் இச்செய்தியைக் கூறினார்கள். அதற்கு அவர் “நண்பர்களே! அங்குப் போவதினாலே பிரயோஜனமில்லை, நாம் மூவரும் சேர்ந்து பரிவிராசக தர்மத்தை நடத்துவோம்” என்று கூறித் தடுத்தார்.” இவர்கள் மறுத்தார்கள்.

இரண்டாம் முறையும் மூன்றாம் முறையும் இவர்களைச் சஞ்சயர் புத்தரிடம் போகாதபடித் தடுத்தார். கோலிதரும் உபதிஸ்ஸரும் மறுத்து இருநூற்றைம்பது பரிவிராசக மாணவருடன் வெளுவனத்திற்குச் சென்றார்கள்.

இவர்கள் கூட்டமாக வருவதைத் தூரத்திலிருந்து பார்த்த பகவன் புத்தர், “அதோ, வருகிற கோலிதனும் உபதிஸ்ஸனும் என்னுடைய முதன்மையான சீடர்கள்” என்று கூறினார்.

கோலிதர், மொக்கலி என்ற பார்ப்பனத்தியின் புத்திரன் கையினாலே அவருக்கு மொக்கல்லானர் என்றும், உபதிஸ்ஸர், ரூபசாரி என்னும் பார்ப்பனியின் புத்திரன் ஆகையினாலே சாரீபுத்திரர் என்றும் பெயர் வழங்கப்பட்டனர்.

மொக்கல்லானர், சாரீ புத்திரர் என்னும் இருவரும் பகவன் புத்தரிடம் சென்று வணங்கி, அவருடைய உபதேசங்களைக் கேட்டு மனச்சாந்தியடைந்து, சந்நியாசமும் உபசம்பதாவும் கேட்டார்கள். அவ்வாறே பகவர் அவர்களுக்கு அவற்றை அளித்தார். மொக்கல்லானர் ஒரு வாரத்தில் அரஹந்த பதவியை யடைந்தார். இவ்விருவரையும் பகவன் புத்தர் தமது தலைமைச் சீடராக ஏற்படுத்தினார். இது மற்றச் சீடர்களுக்குப் பொறாமையை உண்டாக்கிற்று. இதையறிந்த பகவன் புத்தர் அவர்களுக்குக் காரணத்தைக் காட்டி விளக்கி அவர்களின் பொறாமையை நீக்கினார்.