மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/007
சுத்தோதனர் அனுப்பிய தூதுவர்
சுத்தோதன அரசர், தன் மகன் புத்த பதவியை யடைந்து இராச கிருக நகரத்தில் தங்கித் தர்மோபதேசம் செய்கிறதைக் கேள்விப்பட்டு, அவரைக் கபிலவத்து நகரத்துக்கு அழைத்துவரத் தமது அமைச்சர் ஒருவரை ஆயிரம் பரிவாரங்களுடன் அனுப்பினார். அவரும் பரிவாரங்களுடன் வந்து, வெளுவனத்தில் தங்கித் தர்மோபதேசம் செய்து கொண்டிருந்த பகவன் புத்தருடைய உபதேசத்தைக் கேட்டு அரஹந்த பதம் அடைந்தார். அவருடன் வந்தவர்களும் அரஹந்தபதம் அடைந்தார்கள். பிறகு, இவர்கள் எல்லோரும் சந்நியாசம் பெற்றுத் துறவு பூண்டார்கள். அரஹந்தரான பிறகு இவரை அழைத்துப்போகவந்த காரியத்தை மறந்துவிட்டார்கள்.
சுத்தோதன அரசர் மீண்டும் ஒரு அமைச்சரை ஆயிரம் பரிவாரங்களுடன் அனுப்பினார். அவரும் முன்னவரைப்போலவே உபதேசம் கேட்டுச் சந்நியாசம் பெற்று வந்த காரியத்தை மறந்து விட்டார்கள். இவ்வாறு ஒன்பது பேரை அனுப்ப ஒன்பதின்மரும் அர்ஹந்த பலன் பெற்றுத் துறவியாய் விட்டார்கள்.
பிறகு சுத்தோதன அரசர் யோசித்துக் கடைசியாக உதாயி என்பவரை அனுப்பத் தீர்மானித்தார். இந்த உதாயி என்பவர் சித்தார்த்த குமாரன் பிறந்த அதே நாளில் பிறந்தவர். சித்தார்த்த குமாரனின் இளமை வயதில் அவருடன் நண்பராக இருந்து விளையாடியவர்.
“அப்பா உதாயி! என் குமாரனை அழைத்து வரும்படி என் அமைச்சர் பத்துப் பேரையும் பத்தாயிரம் பரிவாரங்களுடன் அனுப்பினேன். போனவர்கள் திரும்பி வரவில்லை. ஒரு செய்தியும் தெரியவில்லை. எனக்கோ வயதாய்விட்டது. எப்போது மரணம் நேரிடுமோ தெரியாது. ஆகையினாலே நீ போய் என் புத்திரனை அழைத்துக்கொண்டு வா” என்று சுத்தோதன அரசர் கூறினார்.
“அரசே! நான் சந்நியாசம் பெற எனக்கு உத்தரவு கொடுப்பீர்களானால், நான் போய் அவரை அழைத்து வருகிறேன்” என்றான் உதாயி. “உன் விருப்பம்போலச் செய்யலாம். ஆனால், என் மகனை என்னிடம் அழைத்துக்கொண்டு வரவேண்டும்” என்றார் அரசர்.
உதாயி பரிவாரங்களுடன் புறப்பட்டு வெளுவனம் சென்று பகவன் புத்தரிடம் உபதேசம் கேட்டு அர்ஹந்த பலம் அடைந்து ஏக பிக்குவிதமாகச் சந்நியாசம் எடுத்து உபசம்பதாவையும் பெற்றார்.
எட்டுநாட்கள் சென்ற பிறகு உதாயிதேரர், புத்தரைக் கபிலவத்து நகரம் அழைத்துப்போக எண்ணினார். அப்போது வேனிற்காலம். உதாயிதேரர், பகவன் புத்தரிடம் சென்று வணங்கி இவ்வாறு கூறினார்.
“பகவரே! இப்போது மரங்கள் அழகான பூக்களைப் பூக்கின்றன. பூக்கள் அழகாக இருக்கின்றன. மலர்ந்த பூக்களிலிருந்து எல்லாப் பக்கங்களிலும் நறுமணம் வீசுகிறது. பழுத்த இலைகள் விழுந்து புதிய தளிர்கள் துளிர்க்கின்றன. ரோகிணி நதியைக் கடந்து கபிலவத்துக்குப் புறப்பட்டுப் போகும் காலம் வந்தது. பகவரே! புறப்படுங்கள். ஜனங்களின் நன்மைக்காக அங்கே போகப் புறப்படுங்கள்.”
“உழவர்கள் நிலத்தை உழுது பயிர் செய்கிறார்கள். வியாபாரிகள், ஊதியத்தைக் கருதிக் கடலைக் கடந்து சென்று செல்வம் திரட்டுகிறார்கள். குடியானவர் மீண்டும் மீண்டும் விதைத்துப் பயிரிடுகிறார்கள். மழையும் அடிக்கடி பெய்துகொண்டேயிருக்கிறது. மீண்டும் மீண்டும் தானியங்கள் விளைந்துகொண்டேயிருக்கின்றன. பிச்சைக்காரர் மீண்டும் மீண்டும் பிச்சைகேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். தனவந்தர் மீண்டும் மீண்டும் தானம் கொடுக்கிறார்கள். ஊக்கமும் அறிவும் முயற்சியும் உள்ளவர் எந்தக் குடும்பத்தில் பிறக்கிறாரோ அந்தக் குடும்பத்தை ஏழு தலைமுறைக்கு அவர் புகழையுண்டாக்குகிறார்.
“பகவரே! தாங்கள் எல்லோரினும் பெரியவர். இம்மையிலும் மறுமையிலும் நன்மை தர வல்லவர். மக்களின் பாவச் செயல்களைத் தடுத்து நன்மைகளை மேற்கொள்ளச் செய்யும் ஆற்றல் படைத்தவர். தங்கள் தந்தையாகிய சுத்தோதன அரசரும் சாக்கிய ஜனங்களும் தங்களைக் காணும்படி எழுந்தருள வேண்டும்?” என்று பலவாறு வேண்டினார்.
கபிலபுரம் செல்லல்
உதாயி தேரரின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பகவன் புத்தர் கபிலவத்து நகரம் போகப் புறப்பட்டார். அர்ஹந்தர்களுடன் புறப்பட்டு, இடைவழியிலே கூடுகிற மக்களுக்குத் தர்மோபதேசம் செய்து கொண்டே ஒரு நாளைக்கு ஒரு யோசனை தூரம் நடந்து சென்றார். இரண்டு திங்கள் நடந்து வைசாக பௌர்ணமி நாளிலே கபிலவத்து நகரத்தையடைந்தார். உதாயிதேரர் முன்னதாகச் சென்று இவர் வருகையைச் சுத்தோதன அரசருக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்தார். அவர்கள் இவர் வரவை எதிர்பார்த்து, இவர் தங்குவதற்காக நிக்ரோத ஆராமம் என்னும் தோட்டத்தை அழகுபடுத்தி வைத்தார்கள்.
பகவன் புத்தர், நகரத்திற்கு வந்தபோது மலர் முதலியவற்றை எடுத்துக்கொண்டு நகர மக்கள் அவரை எதிர்கொண்டு அழைத்தார்கள். அவர்கள் சிறுமிகளை முதலில் அனுப்பினார்கள். அவர்களுக்குப் பிறகு அரச குமாரர்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள். பகவன் புத்தர் கணக்கற்ற அர்ஹந்தரோடு நிக்ரோத ஆராமத்தில் சென்று தங்கினார். ஆனால், இயற்கையிலே இறுமாப்புள்ள அரசகுலத்தில் பிறந்த சாக்கியர்கள், ‘சித்தார்த்த குமரன் வயதிலே நமக்கு இளையவன்; நமக்கு மருமகனாகவுள்ளவன்; பேரனாகவுள்ளவன்; என்று நினைத்துத் தாங்கள் வணக்கம் செய்யாமல் தமது குமாரர்களையும் குமாரத்திகளையும் வணக்கம் செய்வித்தார்கள்.
அவர்களுடைய எண்ணத்தை அறிந்த பகவன் புத்தர், தமது இருத்தியினாலே மண்ணிலிருந்து கிளம்பி ஆகாயத்திலே நின்றார். இதனைக் கண்ட சுத்தோதன அரசர் “உத்தமரே! நீர் பிறந்த நாளிலே அசித முனிவரை வணங்க உம்மை அழைத்துவந்தபோது உமது பாதங்கள் முனிவர் சிரசில் பட்டதைக் கண்டு நான் உம்மை வணங்கினேன். அது என்னுடைய முதலாவது வணக்கம். வப்பமங்கல விழாவிலே நாவல் மரத்தின் கீழே தாங்கள் யோகத்தில் அமர்ந்திருந்ததைப் பார்த்து வணங்கினேன். அது என்னுடைய இரண்டாவது வணக்கம். இப்போது உமது இருத்தியைக் கண்டு உம்மை வணங்குகிறேன். இது என்னுடைய மூன்றாவது வணக்கம்” என்று கூறிக் கைகூப்பிப் புத்தரை வணங்கினார். இதைக் கண்ட மற்ற சாக்கியர்களும் இவரைக் கை கூப்பி வணங்கினார்கள்.
பாவா நகரத்தில் மள்ளர் குலத்தில் பிறந்த நான்கு அரச குமாரர்கள் அவ்வமயம் ஏதோ காரணமாகக் கபிலவத்து நகரத்துக்கு வந்திருந்தார்கள். அவர்கள் பெயர் கோதிகன், சுபாகு, வல்லியன், உத்தியன் என்பன. அவர்கள் புத்தர் பெருமான் ஆகாயத்தில் நின்று காட்டிய இருத்தியைக் கண்டு வியப்படைந்தார்கள். பிறகு, அவர்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து சந்நியாசம் பெற்றார்கள். கொஞ்ச நாளைக்குப் பிறகு அவர்கள் அர்ஹந்த நிலையை யடைந்தார்கள்.
பிறகு, பகவன் புத்தர் ஆகாயத்திலிருந்து இறங்கிக் கீழே வந்து தமது ஆசனத்தில் அமர்ந்து அங்கு வந்திருந்த மக்கள் கூட்டத்திற்கு வெஸ்ஸந்தர ஜாதகத்தைக் கூறினார். எல்லோரும் இன்பம் அடைந்தார்கள் பின்னர் எல்லோரும் கேட்டு இன்பம் அடைந்தார்கள். பின்னர் எல்லோரும் பகவன் புத்தரை வணங்கித் தத்தம் இல்லங்களுக்குச் சென்றார்கள். ஒருவரும் அடுத்தநாள் அவரை உணவுக்கு அழைக்கவில்லை. ஏனென்றால், பகவன் புத்தர் செய்தருளிய உபதேசத்தைக் கேட்டதனால் அவர்கள் மனம் அதிலேயே அழுந்திக் கிடந்தது. அதனால், அவர்களுக்கு அவரை உணவுக்கு அழைக்க நினைவு இல்லாமற் போயிற்று. பகவன் புத்தர் அன்றிரவு சீடர்களுடன் நிக்ரோத ஆராமத்திலேயே தங்கினார்.
அடுத்த நாள் பிக்ஷா நேரம் வந்தபோது பகவன் புத்தர் தமது சீடர்களுடன் புறப்பட்டுக் கபிலவத்து நகரத்தில் வீடு வீடாகப் பிக்ஷைக்குச் சென்றார். நகர மக்கள் தங்கள் தங்கள் மாளிகைகளின் சிங்கபஞ்சரம் என்னும் சாளரங்களைத் திறந்து, “நமது அரச குமாரராகிய சித்தார்த்த குமரன் பிக்ஷைக்காகப் போகிறார்” என்று சொல்லிக்கொண்டு ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். யசோதரைத் தேவியார், பகவன் புத்தர் பிக்ஷைக்குப் போகிறதைக் கேள்விப்பட்டுச் சிங்கபஞ்சரத்தைத் திறந்து பார்த்தார். அப்போது அவர் தமக்குள் இவ்வாறு எண்ணினார். “என்னுடைய கணவர், முன்பு இந்நகரத்தில் உலாவச் சென்றபோது பொற்றேரில் அமர்ந்து அறுபத்து நான்கு விதமான ஆபரணங்களை அணிந்து மாணிக்கங்களினாலே ஒளிவிடுகிற கிரீடத்தை அணிந்து, ஒருலக்ஷம் பொன் விலையுள்ள முத்துமாலைகளை மார்பிலே தரித்து இந்திரன் போலச் சென்றார். இப்போது தலைமுடியையும் தாடி மீசைகளையும் மழித்துப் போட்டு அரையிலும் தோளிலும் காவியாடை யணிந்து ஒரு பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கால்நடையாகப் பிக்ஷைக்கு வருகிறாராம். இந்தக் கோலம் அவருக்கு உசிதமானதா என்பதைப் பார்ப்போம்” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அப்போது பகவன் புத்தர் அவ்வழியே வர அவருடைய திருமேனியிலிருந்து ஆறு நிறமுள்ள புத்த ஒளி வீசியதைக் கண்டு யசோதரைத் தேவியார் வியப்படைந்தார். அப்போது பகவன் புத்தருடைய திருமேனியின் அழகைப்பற்றிக் கேசாதிபாதமாக (தலை முதல் பாதம் வரையில்) வர்ணனை செய்து எட்டுப் பாடல்களைத் தம்மையறியாமலே பாடினார். பிறகு, ஓடோடிச் சென்று, தமது மாமனாரான சுத்தோதன அரசரிடம் போய், “தங்களுடைய குமாரர் தெருவழியே பிக்ஷை எடுத்துக் கொண்டே போகிறார்” என்று தெரிவித்தார்.
இதைக் கேட்ட அரசர் திடுக்கிட்டெழுந்து விரைந்து சென்று பகவன் புத்தர் முன்னிலையில் நின்று, “சுவாமி! நமக்கு ஏன் வெட்கத்தை உண்டாக்குகிறீர். எதற்காகப் பிக்ஷை ஏற்கிறீர். பிக்ஷுக்களுக்கு அரண்மனையில் ஆகாரம் கொடுக்க முடியாது என்று ஜனங்களுக்குத் தெரிவிக்கிறீர்களா?” என்று கேட்டார்.
அப்போது பகவன் புத்தர், “மகாராசரே! இது நமது பரம்பரை வழக்கம்” என்று விடை கூறினார்.
இதைக் கேட்டு வியப்படைந்த சுத்தோதன அரசர், “சுவாமி! நமது பரம்பரை என்றால், மகாசம்பிரத க்ஷத்திரிய ராஜவம்சம். இதில் பிக்ஷைக்குப் போன அரசர் ஒருவரும் இருந்ததில்லை” என்று கூறினார்.
“மகாராசரே! தாங்கள் கூறுவது தங்களுடைய பரம்பரை. நமது பரம்பரை என்றால், தீபாங்கரர், கொண்டஞ்சர் முதலான புத்தர்களுடைய பரம்பரை, அந்தப் புத்தர்களும் அவர்களுக்கு முன்பிருந்த ஆயிரக்கணக்கான புத்தர்களும் பிக்ஷையாசித்து வாழ்ந்தார்கள் என்று அருளிச் செய்தார்.
பிறகு, அரசர், பகவன் புத்தர் கையிலிருந்த பிக்ஷா பாத்திரத்தைத் தமது கையில் வாங்கிக் கொண்டு புத்தரையும் பிக்குச் சங்கத்தாரையும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். சென்று அரண்மனையிலே எல்லோருக்கும் உணவு கொடுத்து உண்பித்தார். உணவு சாப்பிட்டான பிறகு பகவர், அவருக்கு அனுமோதனா உபதேசம் செய்தார். அதனைக் கேட்ட அரசர் சக்ருதாகாமி நிலையை அடைந்தார். அவருடன் இருந்து உபதேசம் கேட்ட பிரஜா கௌதமியும் ஸ்ரோதாபத்தி நிலையைப் பெற்றார்.
யசோதரையார்
யசோதரைத் தேவியார் பகவன் புத்தரைப் பார்க்கவரவில்லை. பகவன் புத்தர், தமது பிக்ஷைப் பாத்திரத்தைத் சுத்தோதன அரசரிடம் கொடுத்து யசோதரையாரிடம் கொண்டுபோகச் சொல்லித் தாமும் அவரைப் பின் தொடர்ந்தார். பகவன் புத்தர் தமது இருப்பிடத்திற்கு வருவதையறிந்த யசோதரையார் எதிர் சென்று, அவர் பாதத்தில் வீழ்ந்து வணங்கி அவருடைய இரு பாதங்களையும் பிடித்துக்கொண்டு அழுதார். புத்தர், யசோதரையாரைத் தமது மகள் போலக் கருதி வாளா இருந்தார். பிறகு யசோதரையாரின் மனம் தன் வயப்பட்டபோது சுத்தோதன அரசரையும் பகவன் புத்தரையும் கண்டு வெட்கங்கொண்டு எழுந்து மௌனமாக இருந்தார்.
அப்போது சுத்தோதன அரசர், பகவன் புத்தரிடம் இவ்வாறு கூறினார். “சுவாமி! தாங்கள் ஆடையணிகளை நீக்கிக் காவி உடை தரித்ததைக் கேட்டு என் மருமகளும் ஆடை அணிகளைக் கழற்றி விட்டுக் காஷாய ஆடை அணிந்தார். ஒரு நாளைக்கு ஒரே வேளை உணவு உண்டார். தாங்கள் விலையுயர்ந்த ஆசனங்களை நீக்கிச் சாதாரண ஆசனத்தில் அமர்வதைக் கேட்டு இவரும் சாதாரண ஆசனத்தில் அமர்வதை வழக்கமாகக் கொண்டார். அரச போகங்களை எல்லாம் நீக்கி ஒரு துறவியைப் போலவே வசித்துவருகிறார்” இவ்வாறு யசோதரைத் தேவியாரைப் பற்றிச் சுத்தோதன அரசர் கூறியதைக் கேட்ட பகவன் புத்தர் அவர்களுக்குச் சந்திர கின்னர ஜாதகக் கதையை உபதேசம் செய்தார்.
யசோதரையார் தாமும் பிக்குணியாக விரும்பினார். ஆனால், பகவன் புத்தர் அதற்கு இணங்காமல், அவருக்குத் துறவு கொடுக்க மறுத்தார்.
இராகுலன்
கபிலவத்து நகரத்திற்குப் பகவன் புத்தர் வந்த ஏழாம் நாள், பிக்குச் சங்கத்தாருடன் அரண்மனைக்குப் போய் பகவன் புத்தர் உணவு கொண்டார். அப்போது யசோதரைத் தேவியார், தமது ஏழு வயதுள்ள இராகுல குமாரனை நன்றாக அலங்காரம் செய்து, “மகனே! அதோ பிக்குகள் சூழப்போகிற, பொன்நிறமாகப் பிரகாசிக்கிறவர் உன்னுடைய தகப்பனார். உனக்கு உரியதை அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்” என்று கூறி அனுப்பினார். இராகுல குமாரன் புத்தரிடம் போய், மிக அன்போடு “ஓ! சிரமணரே! தங்களுடைய நிழல் எனக்கு மிகவும் சுகமானது” என்பது முதலாகச் சில வார்த்தைகள் கூறினார். பகவன் புத்தர் பிக்குச் சங்கத்துடன் உணவு கொண்டபிறகு அனுமோதனா தர்மோபதேசம் செய்து ஆசனத்திலிருந்து எழுந்து நடந்தார். இராகுல குமாரனும், “சிரமணரே! எனக்குக் கிடைக்க வேண்டியதைக் கொடுங்கள்” என்று பின் தொடர்ந்து சென்றான்; புத்தரும், குமாரனை வர வேண்டாமென்று தடுக்கவில்லை. பார்த்துக் கொண்டிருந்தவர்களும் தடுக்கவில்லை. குமாரன் பகவரைப் பின் தொடர்ந்து விகாரைக்குச் சென்றார்.
பகவன் புத்தர், எனக்குப் போதிமண்டலத்திலே கிடைத்த ஏழு விதமான உத்தம தனத்தை இவனுக்குக் கொடுப்பேன் என்று தமக்குள் நினைத்து, சாரிபுத்திர தேரரை அழைத்து, இராகுல குமாரனுக்குச் சந்நியாசம் தரும்படிச் சொன்னார். சாரிபுத்திர தேரர், “சுவாமி, எப்படிச் சந்நியாசம் கொடுப்பேன்?” என்று கேட்க, பகவர், திரிசரணத்தை எடுக்கச் செய்து ஸாமநேர சந்நியாசத்தைக் கொடுக்கச் சொன்னார். அவ்வாறே இராகுல குமாரனுக்குச் சந்நியாசம் கொடுக்கப்பட்டது.
இராகுல குமாரனுடைய சந்நியாசத்தைச் சுத்தோதன அரசர் அறிந்து மிகவும் விசனமடைந்தார், அவர் பகவன் புத்தரிடம் வந்து, வணக்கம் செய்து ஒரு பக்கத்திலே இருந்து, பெற்றோர்களுடைய அனுமதியில்லாமல் சிறுவர்களுக்குச் சந்நியாசம் கொடுக்கக் கூடாது என்னும் வரந்தரும்படி வேண்டிக் கொண்டார். பகவன் புத்தர் அதற்கு இணங்கிப் பிக்ஷுக்களை அழைத்து “பிக்ஷக்களே! இனிப் பெற்றோருடைய அனுமதி கிடைக்காத சிறுவர்களுக்குச் சந்நியாசம் கொடுக்காதீர்கள்” என்று கூறிச் சட்டம் செய்தார்.
அடுத்த நாள், சுத்தோதன அரசருக்கும் கௌதமி தேவிக்கும் பிறந்த நந்தகுமாரனுக்கு இளவரசுப் பட்டமும் திருமணமும் நடக்க ஏற்பாடாகியிருந்தது. பகவன் புத்தர், நந்தகுமாரனுடைய மாளிகைக்குச் சென்று, உணவு அருந்தி பிக்ஷாபாத்திரத்தை நந்தகுமாரன் கையில் கொடுத்து முன்னே நடந்தார். நந்தகுமரன் அவரைப் பின்தொடர்ந்து சென்றான். அப்போது, மணப்பெண்ணாகிய ஜனபத கல்யாணி என்பவள், நந்தகுமரனைக் கண்ணால் பார்த்து, “ஓ. கணவரே! உடனே விரைவாகத் திரும்பி வாருங்கள்” என்று கூறுவது போல நோக்கினாள். குமரனும் அதனை அறிந்து, ‘பாத்திரத்தை எப்போது வாங்கிக் கொள்வார்’ என்று நினைத்த வண்ணம் பின்தொடர்ந்தான்.
பகவர் விகாரைக்குச் சென்றார்; குமரனும் மரியாதையோடு பின்தொடர்ந்தான். அப்போது பகவர் நந்தனைப் பார்த்து, “நந்தா! நீ சந்நியாசம் பெறுவதற்கு விரும்புகிறாயா?” என்று கேட்டார். அவனும் “ஆம்” என்று விடை கொடுத்தான். பகவன் புத்தர் நந்தகுமாரனுக்குச் சந்நியாசம் கொடுத்தார்.
அரச குடும்பத்திலே பிறந்த அநேக அரசகுமாரர் பகவன் புத்தரிடம் வந்து தர்மங்கேட்டுத் துறவுபூண்டனர். பிறகு, பத்தியர், அநுருத்தர், ஆனந்தர், பகு, கிம்பிலர், தேவதத்தர் என்னும் ஆறு குமாரர்களும் ஒரு வாரம் வரையில் தேவர்கள் போல அரச போகத்தை அனுபவித்துப் பிறகு, எட்டாம் நாள் உபாலி என்னும் அம்பட்டனை அழைத்துக் கொண்டு மள்ளர் நாட்டில் அனுபியவனம் என்னும் தோட்டத்தில் தங்கியிருந்த பகவன் புத்தரிடம் சென்றார்கள். சென்று துறவு கொள்வதற்குத் தங்களுடைய ஆடை அணிகளை யெல்லாம் களைந்து உபாலியிடம் கொடுத்தார்கள். உபாலி முதலில் அவைகளை ஏற்றுக் கொண்டான். பிறகு யோசித்துத் தானும் துறவு கொள்வதாகக் கூறினான். பகவன் புத்தரிடம் வந்தவுடன், அவர்கள் வணங்கித் தங்களுக்குத் துறவு கொடுக்கும்படிக் கேட்டார்கள். அன்றியும் முதலில் உபாலிக்குத் துறவு கொடுக்கும்படிச் சொன்னார்கள். அவ்வாறே இவர்கள் எல்லோருக்கும் சந்நியாசம் அளிக்கப்பட்டது.
ஜேதவன தானம்
பகவன் புத்தர் இராசகிருகம் அடைந்து சீதவனம் என்னும் இடத்தில் தங்கியிருந்தபோது, சிராவத்தி நகரத்தில் இருந்து வந்திருந்த சுதத்தன் என்னும் செல்வப் பிரபு, இராசகிருகத்திற்கு வந்திருந்தான். இவனுக்கு அனாத பிண்டிகன் என்னும் பெயரும் உண்டு. இப்பிரபு உலகத்திலே புத்தர் தோன்றியுள்ளார் என்பதைக் கேள்விப்பட்டு, அடுத்த நாள் சீதவனத்துக்கு வந்து பகவரைக் கண்டு வணங்கி உபதேசம் கேட்டான். அடுத்த நாள் புத்த சங்கத்தாருக்குப் புத்தர் தலைமையில் பெருஞ் செல்வத்தைத் தானம் செய்தான். பிறகு, சிராவஸ்தி நகரத்திற்கு எழுந்தருள வேண்டுமென்று பகவரை வணங்கிக் கேட்டுக் கொண்டான்.
புத்தரை வரவேற்பதற்காக அனாத பிண்டிகன் முன்னதாக சிராவத்தி நகரம் சென்றான். சென்று, ஜேதன் என்னும் அரசனுக்கு உரியதான ஜேதவனம் என்னும் தோட்டத்தைப் பதினெட்டுகோடி பொன் விலை கொடுத்து வாங்கி, அதில் விகாரையையும், அதன் நடுவில் பகர் தங்குவதற்காகக் கந்தகுடியையும் தேரர்கள் தங்குவதற்குரிய இடங்களையும் அமைத்தான். பகவன் புத்தர் அங்கு எழுந்தருளியபோது அவரைச் சிறப்பாக வரவேற்று அவருக்கு ஜேதவனத்தையும் விகாரையையும் நீர் பெய்து தாரைவார்த்துக் கொடுத்தான். பகவன் புத்தர் அவைகளைப் பிக்குச் சங்கத்தின் சார்பாக ஏற்றுக் கொண்டார். பகவன் புத்தர், அங்கு மக்களுக்கு அற நெறிகளைப் போதித்துக் கொண்டிருந்தார்.
ஜீவகன்
அக் காலத்தில் ஜீவகன் என்னும் பெயருள்ள கை தேர்ந்த வைத்தியன் இருந்தான். இவன் உச்யினி நாட்டின் அரசன் பிரத்யோதன் என்பவனுக்கும், மகத நாட்டு அரசன் விம்பசாரனுக்கும் வைத்தியனாக இருந்தான். பகவன் புத்தருக்கு வயிற்றுவலி ஏற்பட்டபோது இந்த ஜீவகன் மருந்து கொடுத்து நோயைப் போக்கினான். அன்றியும், பிரத்யோத அரசன் தனக்கு வெகுமதியாகக் கொடுத்த விலையுயர்ந்த ஆடைகளைப் பகவன் புத்தருக்கு அன்புடன் வழங்கினான்.
கொள்ளை நோய்
வெளுவனத்தில் தங்கியிருந்தபோது, வைசாலி நகரத்தார் அனுப்பிய தூதுவர்கள் வந்து, அந்த நகரத்தில் உள்ள கொள்ளை நோய்ப் பீடையை ஒழிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். ஆறுவகையான சமயத்துத் தலைவர்கள் வந்து அந்நோயைப் போக்க முயன்றனர்.
ஆனால், அந்நோய் நீங்கவில்லை. அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கிப் பகவன் புத்தர் வைசாலிக்குச் சென்றார். சென்றவுடனே கொள்ளை நோய் நீங்கிற்று. நோயாளிகள் நலன் அடைந்தார்கள். பிறகு பகவன் புத்தர் அங்கு அரதன சூத்திரத்தை ஓதி உபதேசம் செய்தார். பெருந்தொகையானவர் பௌத்தரானார்கள். பிறகு பகவன் வெளுவனத்திற்குத் திரும்பி வந்தார்.
போரை நிறுத்தியது
அக்காலத்தில் சாக்கியருக்குங் கோலியருக்கும் பகை ஏற்பட்டுப் போர் செய்யத் தொடங்கினார்கள். நாட்டில் மழை பெய்யாமல் வற்கடம் ஏற்பட்டது. இரண்டு நாட்டாருக்கும் இடையே பாய்ந்து வயல்களுக்கு நீர்கொடுத்த உரோகிணி ஆற்றில் நீர் குறைந்தது. நிலங்களுக்கு நீரைப் பாய்ச்சுவதில் ஏற்பட்டதுதான் இந்தப் பகையும் போரும். இரு நாட்டாரும் போருக்கு ஆயத்தமாக நின்றபோது, பகவன் புத்தர் தமது ஞானக் கண்ணினால் இந் நிகழ்ச்சியை யறிந்து, போர்க்களத்தின் இடையே இருதரத்தாருக்கும் நடுவில் ஆகாயத்திலே நின்று, அறவுரை நிகழ்த்தினார். அதனைக் கேட்ட இருதரத்தாரும் போரை நிறுத்தினார்கள். அன்றியும் உபதேசங்கேட்டுப் பௌத்தர் ஆனார்கள்.
சுத்தோதனர் மோக்ஷம்
சில காலஞ் சென்றபிகு சுத்தோதன அரசர் நோய் வாய்ப்பட்ட செய்தி அறிந்த பகவன் புத்தர் சில பிக்குகளுடன் புறப்பட்டுத் தமது இருத்தியினாலே ஆகாயத்தில் பறந்து சென்று நோயாய்க்கிடந்த அரசருக்கு நிலையாமை என்பது பற்றி அறவுரை வழங்கினார். அதனைக் கேட்ட அரசர் அர்ஹந்த நிலையடைந்து புத்தரைத் தொழுது நிர்வாண மோக்ஷம் அடைந்தார்.
சுத்தோதன அரசர் இறந்த பிறகு, பகவன் புத்தரின் இளைய தாயாரான பிரஜா கௌதமி தேவியார், துறவு கொள்ள விரும்பினார். அவர் ஆலவனத்தில் தங்கியிருந்த பகவரிடம் வந்து தமக்குச் சந்நியாசம் கொடுத்துப் பிக்குணியாக்கும்படிக் கேட்டுக்கொண்டார். மகளிரைப் பௌத்தப் பிக்ஷு சங்கத்தில் சேர்க்க விருப்பம் இல்லாதபடியால் பகவர், அவருக்கு சந்நியாசம் கொடுக்க மறுத்து வைசாலி நகரத்திற்குப் போய்விட்டார்.
பிக்ஷுணிச் சங்கம்
ஆனால், பிரஜா கௌதமி தேவியாரும் மற்றும் சில ஸ்திரீகளும் தலைமயிரைச் சிறைத்துக்கொண்டு, மஞ்சள் ஆடை அணிந்து, கால் நடையாக வைசாலி நகரத்திற்குப் பகவரை நாடிச் சென்றார்கள். வழி நடந்ததால் கால்கள் வீங்க, புழுதி படிந்த ஆடையுடன் அவர்கள் அழுதுகொண்டே பகவன் புத்தர் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பகவரின் அணுக்கத் தொண்டரான ஆனந்தமகாதேரர் கண்டு, அவர்களிடம் சென்று, அவர்கள் வந்த காரணத்தை யறிந்து, பகவன் புத்தரிடம் சென்று செய்தியைக் கூறி, அவர்களுக்காகப் பரிந்து பேசினார்.
பகவர், தமது பௌத்தச் சங்கத்தில் மகளிரைச் சேர்க்க விரும்பவில்லை. ஆனால், ஆனந்த மகாதேரர், பிரஜா கௌதமியார் புத்தருடைய குழந்தைப் பருவத்தில் அவரைப்போற்றி வளர்த்ததைச் சுட்டிக்காட்டி, அவரைச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டினார். அதன்மேல் பகவர் பிக்குணிகளுக்கென்று எட்டுவிதமான கடமைகளை வகுத்து அக்கடமைகளை ஏற்றுக்கொண்டால் பிக்குணிகள் சங்கத்தில் சேரலாம் என்று உத்தரவு கொடுத்தார். அந்தக் கடமைகளை ஏற்றுக் கொண்டபடியால் அந்த ஸ்திரீகள், சங்கத்தில் பிக்குணிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
பகவன் புத்தர் ஸ்திரீகளைச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ள உடன்பட்டபோதிலும் அதனால் நேரிடப் போகிற தீமையை நன்கு உணர்ந்தார். அவர் ஆனந்த மகா தேரரிடம், “பௌத்த சங்கத்திலே ஸ்திரீகள் சேர்க்கப்படாமல் இருந்தால், பௌத்த தர்மம் ஆயிரம் ஆண்டுகள் நிலைபெற்றிருக்கும். ஸ்திரீகள் சேர்க்கப்படுவதனாலே தர்மம் இப்போது ஐந்நூறு ஆண்டுகள் தான் நிலைத்திருக்கும்” என்று அருளிச் செய்தார்.
இராசமாதேவி கேமை
வைசாலியிலிருந்து ததாகதர் சிராவத்தி நாட்டுக்குச் சென்று அங்குக் கார்காலத்தைக் கழித்தார். பின்னர் இராசகிருகம் திரும்பி வந்தார். வந்து வெளுவனத்தில் தங்கியிருந்தபோது, விம்பசார அரசன் இராணியாகிய கேமை என்பவள் பௌத்த உபாசிகையானாள். கேமை, தான் மிகவும் அழகுள்ளவள் என்னும் இறுமாப்பினாலே பகவன் புத்தரிடம் வர விரும்பவில்லை. விம்பசார அரசன் பகவரைக் காண வரும்போது இவ்வரசியையும் வரும்படி அழைப்பார். இறுமாப்புள்ள அரசியார் வர மறுப்பார். ஒரு சமயம், அரசியார், வெளுவனத்தில் ஒரு புறம் உலாவிக் கொண்டிருந்தபோது, விம்பசார அரசன் அரசியாரைப் புத்தரிடம் அழைத்து வந்தார்.
ததாகதர், அரசியாரின் அழகைப் பற்றிய துரபிமானத்தை நீக்கக் கருதி, தமது இருத்தி சக்தியினாலே ஆகாயத்திலே ஒரு அழகான தெய்வ மகள் தோன்றும்படிச் செய்தார். அவ்வாறு தோன்றிய அழகான தெய்வ மகளை அரசியார் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்பெண் உருவம், இளமைப் பருவம் நீங்கி நடுத்தர வயதடைந்தது. பிறகு, நடுத்தர வயது நீங்கிக் கிழப்பருவம் அடைந்தது. பின்னர் கிழப் பருவத்திலே அப்பெண் உருவம் செத்துப்போயிற்று. இக்காட்சியைக் கண்ட கேமை என்னும் அரசியாருக்குத் தமது அழகைப் பற்றிய இறுமாப்பு நீங்கியது. பகவன் புத்தருடைய உபதேசத்தைக் கேட்கவேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. அப்போது, ததாகதர் சில சூத்திரங்களை ஓதினார். அதைக் கேட்ட அரசியார் அர்ஹந்த நிலையையடைந்தார். அந்நிலையடைவதற்கு முன்பு மாரன் அரசியாரை மருட்டினான். ஆனால் மாரனை வென்று அர்ஹந்த நிலையையடைந்தார் அவர்.