மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/008

அறுவகைச் சமயத்தார்

பகவன் புத்தருக்கு எதிரிகளாக ஆறு குருமார்கள் இருந்தார்கள். அவர்கள் பூரணகாசிபர், மக்கலி கோசாலர், அஜித கேசகம்பளி, பகுட கச்சாயனர், நிகந்த நாதபுத்திரர், சஞ்சய பெலட்டிபுத்திரர் என்பவர்கள். இந்த அறுவரும் வைசாலி நகரத்தாரால் தங்கள் நாட்டில் ஏற்பட்டிருந்த கொள்ளை நோயைத் தீர்ப்பதற்காக வரவழைக்கப்பட்டு, அவர்களால் அந்நோய் தீர்க்கப்படாமல் போகவே, மேலே கூறப்பட்டது போல பகவன் புத்தரை அவர்கள் அழைக்க அவர் சென்று அந்நோயைப் போக்கினார்.

அந்தச் சமயத்தாருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தும் அவர்கள் பகவன் புத்தருடைய செல்வாக்கையும் சிறப்பையும் கண்டு பொறாமை கொண்டார்கள். இவர்கள் விம்பசார அரசனிடம் செல்வாக்குப்பெற எவ்வளவோ முயன்று பார்த்தும் வெற்றி பெறாமல் சிராவத்தி நாட்டு அரசன் பிரசேனஜித்து என்பவனிடம் செல்வாக்குப் பெறலாம் என்று நினைத்து அவனிடம் சென்றார்கள். சென்று தங்களுடைய இருத்தியினால் சில அதிசயங்களை உண்டாக்கிக் காட்டி அவ்வரசனைத் தங்கள் பக்கம் வசப்படுத்த முயன்றார்கள். இதையறிந்த பகவன் புத்தர், சிராவத்திக்குச் சென்று அரசன் முன்பும் மக்களின் முன்பும் தமது இருத்தி சக்தியினாலே அற்புதத்தைச் செய்து காட்டினார்.

ததாகதர் செய்த அற்புதம் இது. ததாகதர் ஆகாயத்திலே கிழக்கு மேற்காகக் கீழ்க்கோடி முதல் மேற்குக் கோடிவரையில் ஒரு பெரிய சாலையை உண்டாக்கினார். அந்தச் சாலையின்மேல் ததாதகர் நின்று உலாவினார். உலாவிக் கொண்டிருந்தபோது சிவந்த நிறம் தோன்றியது. பிறகு அந்நிறம் பொன்நிறமாக மாறி உலகமெங்கும் பிரகாசித்தது. அங்கிருந்த பகவன் புத்தர் தர்மோபதேசம் செய்தார். கீழிருந்த அத்தனை ஜனங்களும் அவ்வுபதேசத்தைக் கேட்டு நான்கு வகையான உண்மைத் தத்துவத்தை உணர்ந்து கொண்டார்கள். இதனைக்கண்ட அறுவகைச் சமய குருமார்களும் திகைப்படைத்தார்கள். அவர்களால் இதுபோன்ற இருத்தியைச் செய்ய முடியவில்லை. அப்போது பகவன் புத்தர், “சூரியன் இல்லாதபோது மின்மினிகள் மின்னுகின்றன. சூரியன் வந்தபோது மின்மினிகள் இருந்த இடம் தெரியாமல் போகின்றன” என்று கூறினார். அறுவகைச் சமயக்குருமார்களில் ஒருவராகிய பூரண காசிபர் என்பவர், ஒரு புதுமையைச் செய்யத் தொடங்கினார். அது கைகூடாமற் போயிற்று. ஆகவே, அவர் வெட்கமடைந்து கனமுள்ள ஜாடியொன்றைக் கழுத்தில் கட்டிக் கொண்டு ஆற்றில் விழுந்து அமிழ்ந்து உயிரை விட்டார்.

புத்தர்கள் ஏதேனும் பெரிய புதுமைகளைச் செய்தால், உடனே அவர்கள் முப்பத்து மூன்று தேவர்கள் வாழும் தேவலோகத்துக்குப் போவது வழக்கம். அந்த முறைப்படி, பகவன் புத்தரும் மேற்சொன்ன அற்புதத்தைச் செய்த பிறகு, தமது திருவுருவத்தை நிழல் போல விட்டுவிட்டுத் தேவலோகம் சென்றார். தமது திருத்தாயாரான மாயாதேவியார் வாழும் தேவலோகத்துக்குச் சென்று அறநெறியைப் போதித்தார். தெய்வலோகத்தில் பகவன் புத்தர் இருந்தபோது, பூலோகத்தில் அவர் உபதேசம் செய்ய வேண்டியபடியால், அவர் விட்டுப்போன அவருடைய திருவுருவம் தினந்தோறும் பிக்ஷைக்குச் சென்று மக்களுக்கு உபதேசம் செய்து வந்தது. இவ்வாறு மூன்று திங்கள் பகவன் புத்தர் தேவலோகத்தில் தங்கியிருந்தார். பிறகு சக்கரன் (இந்திரன்) ஒருபுறமும் பிரமன் ஒருபுறமும் வர அவர்களின் இடையே பகவன் புத்தர் பூலோகத்துக்கு வந்தார்.

பொய்க் குற்றச் சாட்டு

பௌத்த மதத்திற்கு ஏற்பட்ட வெற்றியினாலும் தங்களுக்கு உண்டான தோல்வியினாலும் அவமானமும் பொறாமையும் கொண்ட அறுவகைச் சமயக் குருமாரும் புத்தர்மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ள நினைத்தார்கள். அவர்கள் நேர்மையான வழியைவிட்டுக் கீழான இழிந்த முறையைக் கையாண்டார்கள். தங்கள் மதத்தைச் சார்ந்த சிஞ்சா மாணவிகை என்னும் பெயருள்ள ஒரு அழகுள்ள மகளைத் தூண்டி விட்டு, பகவன் புத்தர்மீது அவதூறு கூறும்படி ஏவினார்கள். அவளும் அதற்கு உடன்பட்டாள்.

சிஞ்சா மாணவிகை, நாள்தோறும் இரவு வேளையில் பகவன் புத்தர் தங்கியிருந்த இடத்திற்கு வருவதும் காலை வேளையில் அவ்விடத்திலிருந்து போவதுமாகப் பலரும் பார்க்கும்படி பல நாட்கள் செய்து வந்தாள். இவ்வாறு பலமுறை இவளைப் பார்த்தவர்கள் இவள் மீது ஐயங்கொண்டார்கள். ஊரார் இதைப்பற்றி அவதூறு பேசவும் தொடங்கினார்கள். பிறகு அவள், வயிற்றில் கருவாய்த்துக் கர்ப்பம் கொண்டவள்போல நடித்தாள். கர்ப்பப் பெண்ணின் வயிறு போன்று மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பொருளை வயிற்றில் கட்டிக்கொண்டு சூல் கொண்டவள்போல நடித்தாள். இவ்வாறு நடித்து ஊராரிடத்தில் ஐயத்தையும் அபவாதப் பேச்சையும் உண்டாக்கினாள்.

ஒன்பது மாதம் சென்ற பிறகு, ஒருநாள் மாலை பகவன் புத்தர் தருமபோதனை செய்து கொண்டிருந்த இடத்திற்குப் போனாள். பெருங் கூட்டம் திரண்டிருந்த அந்தச் சபையிலே சென்று, பகவன் புத்தர்மீது கூடா ஒழுக்கக் குற்றம் சாற்றினாள். தான் கர்ப்பமானதுக்குக் காரணமாக இருந்தவர் புத்தர் என்றும் தனக்குப் பிள்ளைப்பேறு உண்டாகும் காலம் நெருங்கிவிட்டபடியால் அதற்கு வேண்டிய வழிவகைகளைச் செய்து கொடுக்கவேண்டும் என்றும் எல்லோருக்கும் மத்தியில் சென்று கூறினாள். அப்போது பகவான் புத்தர் தமது உபதேசத்தை நிறுத்திக்கொண்டு, “தங்காய்! நீ கூறுவது மெய்யா பொய்யா என்பது எல்லோருக்கும் தெரியாது. ஆனால், அதன் உண்மை உனக்கும் எனக்கும் தெரியும்” என்று கூறினார். அப்போது, என்ன அதிசயம்! அவள் கர்ப்பவதிபோல வயிற்றில் கட்டியிருந்த மரத்துண்டு அவிழ்ந்து கீழேவிழுந்து அவள் கால் விரல்களைக் காயப்படுத்திற்று! சக்கரன் (இந்திரன்) தனது ஏவலாளர்களை ஏவ, அவர்கள் சுண்டெலிகள் போல் சென்று, கயிற்றைக் கரித்து, அவள் வயிற்றில் கட்டியிருந்த மரத்துண்டு அறுந்து விழும்படிச் செய்தார்கள்! அப்போது அங்கிருந்த ஜனங்கள் எல்லோரும் உண்மையறிந்து அவளை வைது அடித்துத் துரத்தினார்கள். அவமானம் அடைந்து அவ்விடத்தினின்று அவள் ஓடினாள். பிறகு, பூமி வெடித்து அதில் விழுந்து நரகத்தையடைந்தாள்.

சங்கத்தில் சச்சரவு

பகவன் புத்த பதவியடைந்த ஒன்பதாம் ஆண்டு, கார் காலத்தில் கோசிகன் என்பவருடைய கோசிகாராமத்தில் தங்கியிருந்தபோது பிக்கு சங்கத்தில் சச்சரவு உண்டாயிற்று. ஒரு பிக்கு தம்மையறியாமலே விநய ஒழுக்கத்தில் ஏதோ சிறு தவறு செய்துவிட்டார். அதை ஒரு பிக்கு கண்டித்தார். இதனால், பிக்குகள் இரு பிரிவினராகிச் சச்சரவு செய்தார்கள். இதையறிந்த பகவன் புத்தர், அவர்களை அழைத்து அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றார். அவர்களுக்குத் தீகாவு என்பவன் கதையைச் சொல்லிச் சச்சரவு செய்யக்கூடாதென்று போதித்தார். ஆனால், அவர்கள் அதைக் கேளாமல் முன்போலவே சச்சரவு செய்தார்கள். அதனால் வெறுப்படைந்த பகவன் புத்தர், இவர்கள் சமாதானப்பட மாட்டார்கள் என்று கண்டு, அவர்களுக்குச் சில, சூத்திரங்களை ஓதிய பிறகு, அவர்களை விட்டுத் தனியே ஓரிடத்திற்குப் போய்விட்டார். அவர் பாலகலோணகார என்னும் கிராமத்திற்குச் சென்றார். அங்கே அவர் பகுதேரரைக் கண்டார். பிறகு, பாசீனவம்ஸதாய என்னும் வனத்திற்குச் சென்றார். அங்கு அநுருத்தர், நந்தியர், கிம்பளர் என்னும் மகாதேரர்கள் இருந்தார்கள். அவர்கள், பகவரை வரவேற்று உபசரித்தார்கள். அங்குத் தங்கி அறவுரை நிகழ்த்திய பிறகு அங்கிருந்து ஒரு காட்டிற்குச்சென்று தன்னந் தனியே யோகம் செய்து கொண்டிருந்தார்.

தனிவாசம்

தன்னந்தனியே ஏகாந்தவாசமாக இருந்தபோது, அவ்விடத்திற்கு ஒரு யானை வந்தது. காட்டில் வெகு தூரத்துக்கப்பால் யானைக் கூட்டங்களுடன் இந்த யானை வசித்துக் கொண்டிருந்தது. ஆனால், இந்த யானைக்கு மற்ற யானைகள் பலவிதமாகத் துன்பங்கள் செய்து கொண்டிருந்தன. இதனால் வெறுப்படைந்த இந்த யானை அக் கூட்டத்திலிருந்து பிரிந்துவந்து தன்னந்தனியே வேறு ஒரு இடத்தில் வசித்துக் கொண்டிருந்தது. பகவன் புத்தர் இக் காட்டிற்கு வந்தபோது, இந்த யானை நாள்தோறும் காய்கனி கிழங்குகளைக் கொண்டு வந்து அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தது. இந்த யானையினுடைய உணர்வையும் அன்பையும் கண்ட பகவர் இதைப்பற்றி ஒரு சூத்திரத்தை அருளிச்செய்தார். இவ்வாறு சிலகாலம் காட்டில் தனியே தங்கியிருந்த பிறகு, ததாகதர் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சிராவத்தி நகரம் சென்றார்.

கௌசாம்பியிலிருந்த புத்த சங்கத்தார், நகர மக்களால் அவமதிக்கப்பட்டார்கள். இவர்கள் சச்சரவு செய்து கொண்டு பிணங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட மக்கள் இவர்களை இகழ்ந்தார்கள். இதனையறிந்த பிக்கு சங்கத்தார், பகவன் புத்தரை நாடிச் சிராவத்தி நகரத்துக்கு வந்தார்கள். வந்து தமது குறையை அவரிடம் சொன்னார்கள். பகவர், அவர்களுக்குப் புத்திமதிகளைக் கூறி, இரு சார்பாரையும் ஒன்றுபடுத்தினார்.

பயிர் செய்யும் குடியானவன்

பதினோராவது மழைக் காலத்துக்குப் பிறகு ததாகதர் இராசகிருக நகரம் சென்றார். அவர் தக்கிணாகிரி வழியாக ஏகநாளம் என்னும் கிராமத்தின் ஊடே சென்றபோது, பாரத்வாஜன் என்னும் பார்ப்பனன் தன்னுடைய வயல்களில் இருந்து பயிர்த் தொழிலைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன், ததாகதரைப் பார்த்து, “சிரமணரே! நான் நிலத்தை உழுது பண்படுத்துகிறேன். நீர் பாய்ச்சிக்களை பிடுங்குகிறேன். இவ்வாறு பயிர் செய்து உயிர் வாழ்கிறேன். தாங்களும் ஏன் பயிர் செய்து உண்டு வாழக் கூடாது?” என்று வினவினான்.

இதனைக் கேட்ட பகவர், “நானும் உழுது விதைத்துப் பயிர் செய்து உண்டு வாழ்கிறேன்?” என்று கூறினார்.

இதைக் கேட்டு வியப்படைந்த பார்ப்பனன், “வணக்கத்திற்குரிய கௌதமரே! உம்மிடம் ஏர், எருதுகள் முதலியவை இல்லையே! தாங்கள் எப்படிப் பயிர் செய்கிறீர்கள்?” என்று கேட்டான். கௌதமபுத்தர், இவ்வாறு விடை கூறினார்: “உண்மைத் தத்துவம் என்பது விதைகள். ஆர்வம் என்பது மழைநீர். அடக்கம் என்பது கலப்பை. ஊக்கமும் முயற்சியும் எருதுகள்; துக்கமற்ற இன்பநிலையே நான் அறுக்கும் அறுவடை.”

இதைக் கேட்ட பாரத்துவாஜன் மனம் மகிழ்ந்து பௌத்த தர்மத்தை மேற்கொண்டு வாழ்ந்தான்.

சுப்ரபுத்தன் நரகம் அடைந்தது

ததாகதர் போதிஞானம் அடைந்த பதின்மூன்றாம் ஆண்டில் பகவன் புத்தர் ஜேதவனத்தில் தங்கியிருந்த போது, இராகுல தேரருக்கு இருபது வயது நிரம்பிற்று. அதனால், அவருக்கு உபசம்பதா துறவு கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு பகவர் கபிலவத்து நகரம் சென்றார்.

பகவர் ஆலவனத்திலே தங்கியிருந்தபோது ஒருநாள், அவருடைய மாமனாராகிய சுப்ரபுத்தர், ததாகதரை இழிவாகப் பேசி அவமானப்படுத்தினார். சுப்ரபுத்தர், தன் மகளாகிய யசோதரையாரை விட்டுப் போய்த் துறவுபூண்ட ததாகதரிடம் சினமும் பகையும் கொண்டிருந்தார். ஆகவே அவர், ஆலவனத்தில் ததாகதர் தங்கியிருந்தபோது, அவரை அவமானப்படுத்த வேண்டும் என்னும் கருத்தோடு குடித்து வெறி கொண்டு ததாகதரிடம் சென்றார். அப்போது ததாகதர் பிக்ஷைக்காக நகரத்தின் தெருவிலே நடந்துகொண்டிருந்தார். சுப்ரபுத்தர், ததாகதரை மறித்துத் தடுத்துப் பலவகையாக ஏசி இகழ்ந்து பேசினார். அவருடைய நிந்தனைகள் கட்டுக்கடங்காமல் அளவுக்குமீறிச் சென்றன. அப்போது ததாகதர் அமைதியாகப் பக்கத்திலிருந்த ஆனந்த தேரரைப் பார்த்து, “சுப்ரபுத்தரை ஒரு வாரத்திற்குள் பூமி விழுங்கி விடும்” என்று தீர்க்க தரிசனம் கூறினார். அதைக்கேட்ட சுப்ரபுத்தர் எள்ளி நகைத்து மேன்மேலும் தூற்றினார். பிறகு, ததாகதரின் தீர்க்க தரிசனத்தை நினைத்து ஒரு வாரம் வரையில் பூமியில் இல்லாமல் உயரமான மாளிகையிலே தங்கியிருந்தார். ஆனால், ஏழாம் நாள் பூமிவெடித்து அவரை விழுங்கிவிட்டது. அவர், அவிசி என்னும் நரகத்தையடைந்தார்.

அணுக்கத் தொண்டர்

பகவன் புத்தர் போதிஞானம் அடைந்த இருபதாவது ஆண்டிலே, அதாவது தமது ஐம்பத்தைந்தாவது வயதில், தமக்கு ஒரு அணுக்கத் தொண்டரை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினார். அதனால், வெளுவனத்திலே கந்தகுடியிலே இருந்தபோது சீடர்களையெல்லாம் அழைத்து, “பிக்குகளே! ததாகதருக்கு வயது அதிகம் ஆயிற்று. அவருக்கு ஒரு அணுக்கத் தொண்டர் தேவை. உங்களில் யாருக்கு அணுக்கத் தொண்டராயிருக்க விருப்பமோ அவர் எழுந்து நின்று சம்மதத்தைத் தெரியப்படுத்தலாம்” என்று அருளிச் செய்தார்:

அப்போது பிக்குகள் எல்லோரும் நான், நான் என்று கூறித் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஆனால், பகவன் புத்தர் அவர்களையெல்லாம் வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார். ஆனந்த மகாதேரர் மட்டும் வாளா இருந்தார். அப்போது பிக்குகள் எல்லோரும் ஆனந்தரைப் பார்த்து, “ஆனந்தரே! தங்கள் விருப்பத்தைக் கூறுங்கள். பகவர் தங்களை ஏற்றுக் கொள்வார்” என்று கூறினார்கள்.

பகவன் புத்தர், “பிக்குகளே! ஆனந்தருக்கு விருப்பம் இருந்தால், அவரே தமது விருப்பத்தைக் கூறுவார். நீங்கள் அவரைக் கட்டாயப்படுத்தாதீர்கள்” என்றார். ஆனந்த தேரர் எழுந்து நின்று, “பகவன் நான்கு பொருள்களை எனக்கு மறுக்கவும் நான்கு பொருள்களை அளிக்கவும் அருள் புரிந்தால், அடியேன் அணுக்கத் தொண்டனாக இருக்க இசைகிறேன். எனக்கு மறுக்க வேண்டிய நான்கு பொருள்கள் என்னவென்றால் 1. பகவருக்கு நல்ல உணவு கிடைக்குமானால், அதனை அடியேனுக்குக் கொடுக்கக்கூடாது, 2. நல்ல ஆடை கிடைத்தால் அதையும் எனக்குக் கொடுக்கக்கூடாது, 3. பகவருக்கு அளிக்கப்படுகின்ற ஆசனங்களை எனக்குக் கொடுக்கக்கூடாது, 4. பகவரை வணங்கிப் பூசிக்க யாரேனும் அழைத்தால் அந்த இடங்களுக்கு அடியேனை அழைக்கக்கூடாது.

“பகவர் அடியேனுக்கு அளிக்க வேண்டிய நான்கு பொருள்கள் எவை என்றால், 1. அடியேனைப் பூசிக்க யாரேனும் அழைத்தால் அந்தப் பூசையைப் பகவர் ஏற்றுக் கொள்ள வேண்டும், 2. அடியேன் அழைத்து வருகிறவர்களுக்குப் பகவர் தரிசனம் தரவேண்டும், 3. அடியேன் மனம் தடுமாறித் திகைக்கும்போது பகவர் என்னைத் தேற்றி நல்வழிப்படுத்த வேண்டும், 4. அடியேன் இல்லாத காலத்தில் மற்றவருக்குச் செய்த உபதேசங்களை அடியேனுக்கும் உபதேசிக்க வேண்டும். இந்த எட்டு வரங்களையும் பகவன் புத்தர் அருளினால் அடியேன் அணுக்கத் தொண்டனாக இருக்க இசைகிறேன்” என்று கூறினார்.

பகவன் புத்தர் இந்த வரங்களை அளித்து ஆனந்த தேரரைத் தமக்கு அணுக்கத் தொண்டராக ஏற்றுக்கொண்டார். அது முதல் பகவன் புத்தர், பரிநிர்வாணம் அடைகிற வரையில் ஆனந்த மகாதேரர் அவருக்கு அணுக்கத் தொண்டராக இருந்தார்.

அங்குலி மாலன்

அக்காலத்திலே கோசல நாட்டிலே அங்குலி மாலன் என்னும் ஒரு கொடியவன் இருந்தான். அவன் வழிப் போக்கரைக் கொன்று அவர்களின் கை விரல்களில் ஒன்றை எடுத்து மாலையாகக் கட்டிக் கழுத்தில் அணிந்து கொண்டிருந்தான். அதனால் அவனுக்கு அங்குலி மாலன் என்னும் பெயர் உண்டாயிற்று. அவன் அணிந்திருந்த அங்குலி மாலையில் 998 விரல்கள் இருந்தனவாம். இந்தக் கொடிய கொலைகாரனை நல்வழிப்படுத்த பகவன் புத்தர் கருதினார். அவனிடம் போகக்கூடாதென்று பலர் பகவன் புத்தரைத் தடுத்தார்கள். ஆயினும் பகவர் அவனிருக்கும் காட்டில் சென்று அவனுடன் உரையாடி அவனை நல்வழிப்படுத்தினார். அவன் நல்லறிவுபெற்றுத் திரிசரணம் அடைந்து புத்த சங்கத்தில் சேர்ந்து துறவியானான். அன்றியும், சிறிது காலத்திற்குள் அர்ஹந்த் நிலையையும் அடைந்தான்.

கொலைக் குற்றம்

புத்தரின் பௌத்த மதம் நாளுக்குநாள் வளர்ந்து நாட்டில் செல்வாக்குப் பெறுவதைக் கண்ட எதிர் சமயத்துத் தலைவர்கள் மிகவும் பொறாமை கொண்டார்கள். பகவன் புத்தர்மீது பழி சுமத்தி அவருக்குச் செல்வாக்கு இல்லாமல் செய்ய எண்ணினார்கள். அவர்கள் அதற்காகச் சுந்தரி என்னும் பெயருள்ள ஒருத்தியை நியமித்தார்கள். சுந்தரி, பகவன் புத்தர் தங்கியிருந்த தோட்டத்திற்கு அடிக்கடி சென்றுவந்தாள். யாரேனும் அவளைக்கண்டு எங்குபோய் வருகிறாய் என்று கேட்டால், புத்தரிடம் சென்று வருவதாகவும் அவருக்கும் தனக்கும் கூடாவொழுக்கம் உண்டென்றும் கூறுவாள். இவ்வாறு சிலகாலஞ் சென்றது. பிறகு, அந்தச் சமயத் தலைவர்கள், சில கொடியவர்களுக்குக் கைநிறையக் காசு கொடுத்துச் சுந்தரியைக் கொன்று பகவன் புத்தர் தங்கியிருக்கும் ஜேதவன ஆராமத்தில் போட்டுவிடும்படி ஏவினார்கள். அக் கொடியவர்களும் அவ்வாறே சுந்தரியைக் கொன்று ஆராமத் தோட்டத்தில் போட்டுவிட்டார்கள்.

பொழுது, விடிந்ததும், சுந்தரியைப் பௌத்தர்கள் கொலை செய்து விட்டார்கள் என்று அரசரிடம் கூறினார்கள். இதனால், பகவன் புத்தருக்கும் பௌத்த சங்கத்துக்கும் பெரும் அபவாதம் ஏற்பட்டது. ஆனால், சில காலத்திற்குள் குற்றவாளிகள் அகப்பட்டுக் கொண்டார்கள். கொலை செய்த கொடியவர்கள் குடித்து வெறித்துத் தமக்குள் சச்சரவு செய்து கொண்டபோது, அவர்கள் சுந்தரியைக் கொலை செய்த செய்தி வெளிப்பட்டது. அரசன் அவர்களை அழைத்து விசாரித்தபோது, சுந்தரியைக் கொன்றவர்கள் தாங்களே என்றும், பௌத்த விரோதிகளான சமயத் தலைவர்கள் தங்களுக்குக் காசு கொடுத்துக் கொலைசெய்து புத்தர் ஆராமத்தில் போட்டு வரும்படிக் கூறினார்கள் என்றும் தாங்கள் அவ்வாறே செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்கள். அரசன் குற்றவாளிகளைத் தண்டித்தார்; புத்தர்மேல் சுமத்தப்பட்ட அபவாதம் நீக்கப்பட்டது.

விசாகை

அநாத பிண்டிகன் என்னும் செல்வச் சீமானுக்கு விசாகை என்னும் பெயருள்ள குமாரத்தி ஒருத்தியிருந்தாள். அங்க நாட்டில் பெருஞ்செல்வனாகிய மிகாரர் என்னும் பிரபுவுக்குப் புண்ணிய வர்த்தனன் என்னும் குமாரன் இருந்தான். புண்ணிய வர்த்தனக் குமாரனுக்கு விசாகையைத் திருமணம் செய்து வைத்தார்கள். விசாகை, கணவன் வீடு வந்து சேர்ந்தாள்.

விசாகையினுடைய மாமனார் நிர்க்கந்த (ஜைன) மதத்தைச் சேர்ந்தவர். விசாகையோ பகவன் புத்தரை வழிபட்டு அவரது அறநெறிப்படி நடக்கிறவள். விசாகையின் மாமனார், விசாகையை நிர்க்கந்த மதத்தில் சேரும்படிக் கூறிப் பல இன்னல்களைச் செய்தார். ஆனால், விசாகை பகவன் புத்தரையே வழிபட்டு வந்தாள். அன்றியும், தனது மாமியார் முதலியவர்களுக்கும் அந் நகரத்துப் பெண்களுக்கும் பகவன் புத்தர்மீது பக்தி உண்டாகும்படிச் செய்தாள். அவர்கள் எல்லோரும் பகவன் புத்தரைக் கண்டு அவரது அறநெறியைக் கேட்க விருப்பங் கொண்டனர்.

இதனை ஞானதிருஷ்டியினால் அறிந்த பகவன் புத்தர் தமது சீடர்களுடன் அங்கநாடு சென்று விசாகையின் வீட்டுக்குச் சென்றார். விசாகை பகவரை வரவேற்று உணவு கொடுத்து அவரிடமிருந்து அறநெறி கேட்டாள். அதனைக் கேட்ட உற்றார் உறவினரும் ஏனையோரும் மனம் மகிழ்ந்து பௌத்தராயினர். விசாகை பேரன் பேத்திகளோடு நெடுங்காலம் வாழ்ந்து பகவன் புத்தருக்கும் புத்த சங்கத்துக்கும் பெரும் பொருளைத் தானம் வழங்கினாள். பின்னர்த் துறவு பூண்டு பிக்குணியாகி இறுதியில் மோட்சம் அடைந்தாள்.

தேவதத்தன்

பகவன் புத்தருக்கு எழுபத்திரண்டு வயதாயிற்று. ததாகதருக்கு நாடெங்கும் பேரும் புகழும் மதிப்பும் ஏற்பட்டது. பௌத்த சங்கத்தை மக்கள் மதித்துப் போற்றினார்கள். புத்தருடைய உறவினனும் அவரிடம் துறவுபூண்டு பிக்கு சங்கத்தில் இருப்பவனுமாகிய தேவதத்தனுக்குப் பதவி ஆசை ஏற்பட்டது. பகவன் புத்தருக்குப் பதிலாகத்தானே பௌத்த சங்கத்தின் குருவாக இருந்து பெருமையடையவேண்டும் என்று அவன் பெரிதும் விரும்பினான். நாளுக்கு நாள் இந்த ஆசை அவன் உள்ளத்தில் பெருகி வளர்ந்தது. அதுமட்டுமன்று. பகவன் புத்தர் நாட்டில் அடைந்த, புகழையும் சிறப்பையும் கண்டு அவனுக்குப் பொறாமையும் உண்டாயிற்று.

தேவதத்தன், விம்பசார அரசன் மகனும் இளவரசனுமான அஜாத சத்துருவிடம் சென்று, தான் அடைந்துள்ள இருத்திகளின் உதவியினாலே சில அற்புதங்களைச் செய்துகாட்டி அரசகுமாரனைத் தன்வயப்படுத்தினான்.

தேவதத்தன் என்றைக்காவது ஒருநாள் பௌத்த சங்கத்தின் தலைமைப் பதவியைப் பெறவேண்டும் என்று எண்ணினான். வெளுவன ஆராமத்தில் பகவன் புத்தர் உபதேசம் செய்து கொண்டிருந்தபோது, ஒருநாள் தேவதத்தன் எழுந்து நின்று வணங்கி, பகவன் புத்தருக்கு அதிக வயதாய்விட்டபடியால், சங்கத்தின் தலைமைப் பதவியைத் தனக்குக் கொடுக்கும்படிக் கேட்டான். “புத்த பதவி ஒருவர் கொடுக்க ஒருவர் பெறுவதன்று. பல பிறவிகளில் முயன்று பெறப்படுவது புத்த பதவி” என்றுகூறி பகவன் புத்தர் மறுத்துவிட்டார். அதுமுதல் தேவதத்தனுக்குப் பகைமை உணர்ச்சி ஏற்பட்டுப் பகவன் புத்தரை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்னும் தீய எண்ணம் வளர்ந்தது.

அஜாத சத்துரு

பகவன் புத்தரை உயிர்போல் கருதியிருக்கும் விம்பசார அரசன் இருக்கிறவரையில் புத்தருக்கு யாதொரு தீங்கும் செய்யமுடியாது என்று அறிந்த தேவதத்தன், இளவரசனான அஜாத சத்துருவிடம் சென்று நல்லது சொல்வதுபோலச் சில வார்த்தைகள் கூறினான். தந்தையாகிய விம்பசார அரசனைக் கொன்று மகதநாட்டின் அரசனாகும்படித் தேவதத்தன் அஜாத சத்துருவுக்குக் கூறினான். அரசகுமாரனும் அரசப் பதவிக்கு ஆசைப்பட்டுத் தன் தந்தையைக் கொல்ல உடன்பட்டான். குற்றுடைவாளைக் கையில் ஏந்திக்கொண்டு அரசகுமாரன் இரவும் பகலும் அரண்மனையில் நடமாடுவதைக் கண்டு ஐயமுற்ற அரசவூழியர், விம்பசார அரசரிடம் அச் செய்தியைக் கூறினார்கள். விம்பசார அரசன் மகனை அழைத்துப் புத்திமதி கூறி, தான் அரசாட்சியைவிட்டு நீங்கி, மகனுக்கு அரசப் பட்டம் கட்டினான்.

தனது எண்ணம் நிறைவேறாமற் போனதைக் கண்ட தேவதத்தன், மீண்டும் அஜாத சத்துருவினிடம் சென்று, “உனது தந்தை உயிருடன் இருக்கும்வரையில் உனக்கு உண்மையான அரச அதிகாரம் இல்லை என்று கூறி விம்பசார அரசனைக் கொன்று விடும்படித் தூண்டினான். அதனைக்கேட்ட அஜாதசத்துரு, அரசனைச் சிறையில் அடைத்து, உணவு கொடுக்காமல் பல கொடுமை செய்தான். அரசன் சிறைச் சாலையில் வருத்தம் உற்றுச் சில நாட்களுக்குப் பிறகு இறந்து போனான்.

வில்வீரர்

தேவதத்தன், அரசனான அஜாதசத்துருவின், உதவிபெற்றுப் பகவன் புத்தரை அழிக்கத் தொடங்கினான். வில்வீரர் பதினாறு பேரை ஏற்படுத்திப் பகவன் புத்தர் போகும்போது அம்பு எய்து அவரைக் கொல்லும்படி ஏவினான். வீரர்கள் வில் அம்புடன் சென்று, வழியில் காத்திருந்தார்கள். பகவன் புத்தர் வந்தபோது அவரைக் கண்ட வீரர்கள் திகைத்துப் போனார்கள். பகவனின் தெய்விகத் தன்மை அவர்களின் மனத்தை மாற்றிவிட்டது. அவர்கள் ஓடிச்சென்று பகவன் பாதங்களில் விழுந்து வணங்கிச் சென்றார்கள். அவர்களில் ஒருவன், தேவதத்தனிடம் சென்று, பகவன் புத்தரின் உயிரைப் போக்குவது முடியாது என்று கூறினான்.