மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/009
பாறையை உருட்டியது
பிறகு தேவதத்தன் பகவன் புத்தரைக் கொல்ல வேறு முறையைக் கையாண்டான். பகவன் புத்தர் கிருத்திரக்கூடமலையின் (கழுகுமலையின்) அடிவாரத்தில் உலாவுகிற வழக்கப்படி, ஒரு நாள் மாலையில் உலாவும்போது, தேவதத்தன் மலையுச்சியிலிருந்து பெரிய பாறைக் கல்லை உருட்டிப் பகவன் புத்தர்மேல் தள்ளினான். மலையுச்சிலிருந்து வேகமாக உருண்டுவந்த அந்தப் பாறைக்கல், நல்லவேளையாக, இரண்டு பாறைகளுக்கு இடையில் அகப்பட்டு நின்றுவிட்டது. அதிலிருந்து சிதறிவந்த சிறு கல் துண்டுபட்டுப் பகவரின் காலில் காயம் ஏற்பட்டது. பிக்குகள், ஜீவகன் என்னும் மருத்துவனைக்கொண்டு காயத்திற்கு மருந்து இட்டு ஆற்றினார்கள். அன்றியும், இனி மலையடிவாரத்திற்கு இனி உலாவப் போகக்கூடாது என்றும் பகவரிடம் கூறினார்கள். அதற்குப் பகவன் புத்தர், “ததாகதரின் உயிரைப் போக்க ஒருவராலும் இயலாது. ததாகதருக்குக் காலம் வரும்போதுதான் அவர் உயிர் பிரியும்” என்று கூறி அவர்களின் அச்சத்தை நீக்கினார்.
யானையை ஏவியது
தேவதத்தன் அதனோடு நின்றுவிடவில்லை. நாளாகிரி என்னும் பெயருடைய யானைக்கு மதமூட்டிக் கோபங் கொள்ளச் செய்து பகவன் புத்தர் இராசவீதி வழியே வரும்போது அந்த மதயானையை அவர் மேல் ஏவிவிட்டான். இராசகிருக நகரத்தின் விதியில் அந்த மதயானை மூர்க்கத்தனமாக வெறிகொண்டோடியது. அதனைக் கண்ட ஜனங்கள் அஞ்சி ஓடினார்கள். மதயானை, பகவன் புத்தரின் அருகில் வந்தபோது, அவருடைய திருமேனியில் இருந்து வெளிப்படும் தெய்விக ஒளியினால், அதன் மதம் அடங்கிக் கோபம் தணிந்து சாந்தம் அடைந்தது. அது, தும்பிக்கையைத் தாழ்த்திப் பகவருக்குத் தலை வணங்கிற்று. பிறகு சாந்தமாகத் திரும்பிப் போய்விட்டது. இவ்வாறு தேவதத்தன், பகவன் புத்தரைக் கொல்லச் செய்த சூழ்ச்சிகளும் முயற்சிகளும் பயன்படாமற் போயின.
பிளவு உண்டாக்கியது
தனது சூழ்ச்சிகள் நிறைவேறாமற் போகவே தேவதத்தன் வேறுவிதமாகச் சூழ்ச்சி செய்தான். பௌத்தச் சங்கத்திலே பிளவு உண்டாக்கி அதனால் வெற்றியடையலாம் என்று எண்ணினான். பௌத்த சங்கப் பிக்குகளில் தன் பேச்சைக் கேட்கக்கூடிய சிலரை அழைத்து, பகவன் புத்தர் உடன்படமுடியாத சில புதிய கொள்கைகளை அவர்களுக்குக் கூறி அவைகளைப் புத்தர் ஏற்றுக்கொள்ளச் செய்யும்படி அனுப்பினான். அவர்கள் சென்று புத்தரிடம் அக்கொள்கைகளைக்கூறி அவற்றை ஏற்றுக் கொள்ளும்படிக் கேட்டார்கள். பகவர் அவைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார். இந்தப் பிக்குகள் புதிதாகப் பௌத்தமதத்திற்கு வந்தவர்கள். விநய முறைகளை அறியாதவர்கள். இவர்களுடைய கொள்கையைப் பகவன் புத்தர் மறுக்கவே, இவர்கள் தேவதத்தனுடன் சேர்ந்து அவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள்.
தேவதத்தன் ஐந்நூறு புதிய பிக்குகளை அழைத்துக் கொண்டு அவர்களுக்குத் தலைமைப் பதவியை ஏற்று, கயாசீர்ஷ மலைக்குச் சென்றான். சென்று, பிக்குகளுக்கு உபதேசம் செய்தான். இந்தப் பிக்குகளின் கூட்டத்தில் சாரிபுத்திர மகாதேரரும் மொக்கல்லான மகாதேரரும் இருந்தார்கள். இவர்களைக் கண்ட தேவதத்தன், இவர்களும் தன்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள் என்று தவறாகக் கருதி, சாரிபுத்திர மகாதேரரை அழைத்து, பிக்குகளுக்கு உபதேசம் கொடுக்கும்படியும் தனக்குக் களைப்பும் தூக்கமும் வருகிறபடியால் தான் சென்று தூங்கப் போவதாகவும் கூறிச் சென்றான். சாரி புத்திரதேரரும் மொக்கல்லான தேரரும் பிக்கு சங்கத்தாருக்குப் போதனை செய்து அவர்களைப் பகவன் புத்தரிடம் திரும்பி வரும்படிக் கூறினார்கள். அவர்கள் பேச்சுக்களைக் கேட்ட அப்புதிய பிக்குகள் உண்மை உணர்ந்து, தங்கள் அறியாமைக்கு வருந்தி, பகவன் புத்தரிடம் சென்றார்கள். தேவதத்தன் விழித்தெழுந்து நடந்ததை யறிந்து ஆத்திரத்தினாலும் கோபத்தினாலும் இரத்தம் கக்கி இறந்து போனான்.
அஜாதசத்துரு அரசன், தான் தனது தந்தையாகிய விம்பசார அரசனைக் கொன்ற குற்றம் அவன் மனத்தில் உறுத்தியது. அவனுடைய மனசாட்சி அவனைத் துன்புறுத்தியது. அவன் மனம் அமைதி இல்லாமல் வருந்திற்று. தனது மனத்தை அமைதியாக்கிக் கொள்ள எண்ணி அவன் பல சமயத் தலைவர்களிடம் சென்றான். அவர்கள் போதனை அவனுக்குச் சாந்தியை உண்டாக்கவில்லை. கடைசியாக அரண்மனை வைத்தியனாகிய ஜீவகன் கூறிய யோசனையின்படி அவன் பகவன் புத்தரிடம் வந்தான். வந்து அவரிடம் தர்மம் கேட்டுப் பௌத்தனானான்.
பகவன் புத்தரின் எழுபத்தொன்பதாவது வயதுக்குப் பிறகு ததாகதர் வைசாலியிலிருந்து புறப்பட்டு பேலுவநகரம் சென்று சிலநாள் தங்கினார். அங்கே இருக்கும்போது அவருக்கு உடம்பில் நோய்கண்டது. ஆனால், பகவர் அவற்றைப் பொறுத்துக்கொண்டார். தமது எண்பதாவது வயதில் தமக்குப் பரிநிர்வாணம் ஏற்படும் என்பதை அவர் அறிந்தார். பிறகு, அவர் வழக்கம்போல் பல இடங்களுக்குச் சென்று அறநெறியைப் போதித்துக் கொண்டிருந்தார். பிறகு பாவாபுரிக்குச் சென்று, அந்நகரத்துக் கருமானாகிய சுந்தன் என்பவனுடைய மாந்தோப்பில் தங்கினார்.
சுந்தன் அளித்த விருந்து
பகவன் புத்தர், மாந்தோப்பில் எழுந்தருளியிருப்பதையறிந்த சுந்தன் விரைந்து வந்து பகவரை வணங்கி அடுத்த நாளைக்குத் தனது இல்லத்தில் உணவு கொள்ளும்படி அழைத்தான். பகவர் அதனை ஏற்றுக் கொண்டார். சுந்தன் பலவித உணவுகளைச் சமைத்ததோடு காட்டுப் பன்றியின் இறைச்சியையும் சமைத்திருந்தான். பகவன் புத்தர், பௌத்தப் பிக்குகளுடன் சுந்தன் இல்லம் சென்றார். காட்டுப் பன்றியின் இறைச்சியை அன்போடு சமைத்து வைத்திருப்பதையறிந்த பகவன் புத்தர் அதனைப் பிக்குகளுக்குப் பரிமாறக் கூடாதென்றும் அதைக் கொண்டு போய் புதைத்துவிட வேண்டும் என்றும், ஆனால் அன்போடு சமைக்கப்பட்ட அதைச் சுந்தனுடைய திருப்திக்காகத் ததாகதருக்கு மட்டும் பரிமாறலாம் என்றும் அருளிச் செய்தார். சுந்தன் அவ்வாறே செய்தான்.
காட்டுப்பன்றியின் இறைச்சியை உட்கொண்ட காரணத்தினாலே, அது சமிக்கமுடியாத கடின உணவு ஆகையினாலே, பகவருக்கு வயிற்றுக் கடுப்பு உண்டாயிற்று. அதனை அவர் பிறர் அறியாதபடி அடக்கிக் கொண்டு, வழக்கம் போல நன்றி கூறும் பொருட்டுச் சுந்தனுக்கு அறவுரை கூறிய பிறகு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார். ஆனந்தரிடம், “குசிநகரம் செல்வோம்” என்று கூறினார். ஆனந்தர் “அப்படியே” என்று கூறி இருவரும் குசிநகரம் நடந்தனர். பகவன் புத்தருக்கு வயிற்றுக் கடுப்பு அதிகமாயிற்று. பொறுக்கமுடியாத வலி வயிற்றில் ஏற்பட்டது. ஆகவே வழியிலேயே படுத்துக்கொள்ள விரும்பினார். “ஆனந்தா, மரத்தின் கீழே துணியை விரித்துப் போடு” என்றார். ஆனந்தர் மரநிழலில் துணியை விரித்துப் படுக்கை அமைத்தார். பகவன் புத்தர் வலது புறமாகச் சாய்ந்து படுத்தார். பிறகு, பகவருக்கு நீர் வேட்கை இருந்தபடியால், ஆனந்தர் ஆற்றுக்குச் சென்று நீரைக் கொண்டுவந்து கொடுக்க அதைப் பருகி விடாய் தீர்த்தார்.
சிறிதுநேரம் இளைப்பாறிய பிறகு பகவன் புத்தர் ககுத்த ஆற்றுக்குச் சென்று அதில் நீராடினார். பிறகு, ஆற்றைக் கடந்து மாஞ்சோலையை யடைந்து அங்கிருந்து மள்ளர் நாட்டைச் சேர்ந்த குசிநகரத்து உபவர்த்தன வனத்திற்குச் சென்றார். அங்கு இரண்டு சாலமரங்களுக்கு இடையில் துணியை விரிக்கச் சொல்லி வடக்கே தலைவைத்து வலது கைப்புறமாகச் சிங்கம் படுப்பது போலப் படுத்தார்.
பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைந்தால் அவர் திருமேனிக்கு என்னென்ன கடைசிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்று ஆனந்தர் பகவன் புத்தரைக் கேட்டார். அதற்குப் பகவர், “பிக்குகள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இல்லறத்தைச் சேர்ந்த சாவக நோன்பிகள், செய்ய வேண்டியவற்றைச் செய்வார்கள்” என்று கூறினார்.
ததாகதரின் திருமேனியை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று ஆனந்ததேரர் பகவன் புத்தரைக் கேட்டார்.
பகவன் புத்தர் அதற்கு இவ்வாறு விடை கூறினார்; “அரசச் சக்கரவர்த்தி இறந்தால் அவர் உடம்பை எவ்விதமாக அடக்கம் செய்வார்களோ அவ்விதமாகத் ததாகதரின் உடம்பையும் அடக்கம் செய்ய வேண்டும்.”
அரசச் சக்கரவர்த்தியின் உடம்பை எவ்வாறு அடக்கம் செய்வார்கள்?” என்று ஆனந்ததேரர் கேட்டார்.
“ஆனந்த! அரச சக்கரவர்த்தி இறந்துபோனால் அவருடைய உடம்பைப் புதிய துணியினால் சுற்றி அதன் பிறகு பஞ்சுத் துணியினால் சுற்றி, அதன்மேல் மறுபடியும் புதிய துணியினால் சுற்றி அதன்மேல் பஞ்சுத் துணியைச் சுற்றி அப்படியே ஐந்நூறு துணிகளினால் சுற்றிக் கட்டுவார்கள். பிறகு எண்ணெய் இரும்புச் சாடியில் அந்த உடம்பை வைத்து எண்ணெய் இரும்புச் சாடியினால் மூடிவைப்பார்கள். அதற்குப் பிறகு மணமுள்ள விறகுகளைக் கொண்டுவந்து ஈமவிறகு அடுக்கி அதன் மேலே அந்த உடம்பை வைத்துத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். உடம்பு தீயில் எரிந்த பிறகு எலும்பை எடுத்து வந்து நகரத்தில் நாற்சந்திச் சதுக்கத்திலே வைத்துக் கல்லினால் நினைவுச் சின்னம் கட்டுவார்கள். ஆனந்த! இப்படித்தான் அரச சக்கரவர்த்தியின் உடம்பை அடக்கம் செய்வது வழக்கம்.”
“அந்த விதமாகத்தானே ததாகதருடைய உடம்பையும் அடக்கம் செய்யவேண்டும். அங்கு யாரேனும் வந்து தூபம் தீபங்கள் வைத்துப் பூக்களைத் தூவி வணங்கினால் அவர்களுக்கு மகிழ்ச்சியும் இன்பமும் நன்மையும் உண்டாகும்.”
“ஆனந்த! கல்லினால் நினைவுச் சின்னம் கட்டி அமைக்கப்பட வேண்டியவர்கள் நான்குபேர் உள்ளனர். அந்த நால்வர் யார்? ததாகதராகிய புத்தர்கள், பிரத்தியேக புத்தர்கள், அர்ஹந்தர்கள், அரசச் சக்கரவர்த்திகள். இந்த நான்கு வகையானவர்களுக்கு சேதியங்கள் அமைக்கப்பட வேண்டும்” என்று பகவன் புத்தர் கூறினார்.
கடைசி இரவு
பகவன், புத்தர், பிறகு ஆனந்தரை அழைத்துக் குசிநகரத்துக்குச் சென்று அந் நகரத்து மள்ளர்களுக்குத் தாம் பரி நிர்வாணம் அடையப் போவதைச் சொல்லி வரும்படி அனுப்பினார்: “இன்று இரவு கடையாமத்திலே ததாகதர் பரி நிர்வாணம் அடையப்போகிறார். ‘ததாகதர் நமது நாட்டுக்கருகில் வந்து பரி நிர்வாணம் அடைந்தபோது நாம் அவ்விடம் இல்லாமற் போனோமே’ என்று பிறகு நீங்கள் வருந்த வேண்டாம். இச் செய்தியை யறியுங்கள்" என்று நகரத்தாருக்குச் சொல்லிவிட்டு வரும்படி அனுப்பினார்.
ஆனந்ததேரரும் இன்னொரு தேரரும் புறப்பட்டுக் குசிநகரம் சென்றார்கள். அப்போது நகர மண்டபத்திலே மள்ளர்கள் ஏதோ காரணமாகக் கூட்டங்கூடியிருந்தார்கள். அவர்களிடம் சென்று பகவன் கூறிய செய்தியை ஆனந்த தேரர் கூறினார். இதைக் கேட்ட மள்ளர்கள் வருத்தம் அடைந்தனர். இச் செய்தி உடனே நகரமெங்கும் பரவியது. முதியவரும் இளையவரும் பெண்களும் குழந்தைகளும் அழுது புலம்பினார்கள். “பகவன் புத்தர் இவ்வளவு சீக்கிரத்தில் பரி நிர்வாணம் அடையப்போகிறார்” என்று கூறித் துன்பம் அடைந்தார்கள். பிறகு மள்ளர்களுள் ஆண்களும் பெண்களும் முதியவரும் குழந்தைகளும் எல்லோரும் உபவர்த்தன வனத்திற்கு வந்தார்கள்.
அப்போது ஆனந்தமகாதேரர் தமக்குள் இவ்வாறு கருதினார். “மள்ளர்களை ஒவ்வொருவராகப் பகவரைத் தரிசிக்க அனுப்பினால் பொழுதுவிடிந்துவிடும். ஆகையால் குடும்பம் குடும்பமாக அவர்களை அனுப்புவது நல்லது” என்று எண்ணி, ஒவ்வொரு குடும்பமாக உள்ளே வரச்சொல்லிப் பகவன் புத்தரிடம், “இன்ன பெயருள்ள மள்ளர் தமது குடும்பத்துடன் வந்திருக்கிறார்” என்று ஒவ்வொரு குடும்பத்தாரின் பெயரையும் கூறினார். அந்தக் குடும்பத்தார் பகவன் புத்தருக்கு வணக்கம் செய்துசென்றார்கள். இவ்வாறு அவ்விரவு முதல் யாமத்திற்குள் எல்லா மள்ளர் குடும்பத்தாரும் வந்து பகவன் புத்தரை வணங்கித் தங்கள் இல்லம் சென்றார்கள்.
கடைசி தர்மோபதேசம்
குசிநகரத்தில் சுபத்தர் என்னும் பெயருள்ள ஒரு துறவி இருந்தார். இவர் பௌத்தரல்லர். வேறு மதத்தைச் சேர்ந்தவர். அவ்விரவில் கௌதம புத்தர் நிர்வாண மோக்ஷம் அடையப் போகிறார் என்பதையறிந்த இந்தத் துறவி, பகவன் புத்தரைக் காணவேண்டும் என்று விரும்பினார். அவர் உபவர்த்தன வனத்திற்கு வந்து புத்தரைப் பார்க்க உள்ளே விடும்படி ஆனந்த தேரரைக் கேட்டார்.
சுபத்தர், பகவன் புத்தரிடம் சமயவாதம் செய்ய வந்திருப்பதாக ஆனந்ததேரர் எண்ணினார். புத்தர் சோர்வடைந்து களைத்திருக்கிற இந்தச் சமயத்தில் சமயவாதம் செய்ய அனுமதிப்பது நன்றன்று என்று கருதி ஆனந்ததேரர் சுபத்தரை உள்ளேவிட மறுத்தார். சுபத்தர் பகவன் புத்தரைப் பார்க்க வேண்டும் என்று மறுபடியும் கேட்டார். அப்போதும் ஆனந்ததேரர் மறுத்தார். மூன்றாம் முறையும் சுபத்தர் தன்னை உள்ளே விடும்படிக் கூறினார். அப்போதும் ஆனந்த தேரர் மறுத்தார். இவர்கள் வெளியே இப்படிப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த பகவர், ஆனந்த தேரரை அழைத்து சுபத்தரரை உள்ளேவிடும்படிக் கூறினார். சுபத்தர் சமயவாதம் செய்ய வரவில்லை என்றும் சமய உண்மையை அறிந்துகொள்ள வந்திருக்கிறார் என்றும் பகவர் ஆனந்தருக்குக் கூறினார்.
உள்ளே சென்ற சுபத்தர் பகவரை வணங்கி ஒரு பக்கமாக அமர்ந்து பகவன் புத்தரின் உபதேசங்களைக் கேட்க விரும்புவதாகத் தெரிவித்தார். ஆரிய (மேலான) அஷ்டாங்க மார்க்கம் எங்கு இல்லையோ அங்குச் சிரமணரைக் காணமுடியாது, ஆரிய அஷ்டாங்க மார்க்கம் எங்கு இருக்கிறதோ அங்குச் சிரமணரைக் காண முடியும் என்று கூறிப் பகவன் புத்தர், மேலும் பௌத்த தர்மத்தை அவருக்குப் போதித்தார். நான்கு வாய்மைகளை விளக்கிச் சொல்லி, அஷ்டாங்க மார்க்கத்தை உபதேசம் செய்தார். சுபத்தர் இந்த உபதேசங்களை உடனே தெளிவாக விளங்கிக் கொண்டார்.
பிறகு சுபத்தர் தமக்குத் துறவு கொடுக்க வேண்டும் என்று பகவரை வணங்கி வேண்டிக்கொண்டார். பகவர், ஆனந்த தேரரை அழைத்துச் சுபத்தருக்குத் துறவு கொடுக்கும்படிச் சொன்னார். அவ்வாறே ஆனந்த தேரர் சுபத்தருக்குத் துறவு கொடுத்தார். கௌதம புத்தர் உயிரோடு இருந்தபோது கடைசியாகத் துறவு பெற்ற பௌத்த பிக்கு சுபத்தரே.
பிக்குகளுக்குப் போதனை
அதன் பிறகு பகவன் புத்தர், ஆனந்த மகாதேரரை அழைத்து இவ்வாறு அருளிச் செய்தார். “ததாகதர் நிர்வாணம்பெற்ற பிறகு சங்கத்தாரில் யாரேனும் பகவர் நிர்வாண மோட்சம் அடைந்து விட்டார். இப்போது நமக்குக் குருநாதன் இல்லை” என்று நினைக்கக்கூடும். அப்படி நினைப்பது தவறு. “ஆனந்த! ததாகதரின் போதனைகள் சங்கத்தின் குருநாதனாக இருக்கட்டும். ததாகதரின் போதனைகளைச் சரிவர அறிந்து ஒழுகுங்கள்” என்று அருளினார்.
பிறகு பகவன் புத்தர் பிக்குகளை விளித்து, ததாகதரைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் சங்கத்தைப்பற்றியும் உங்களில் யாருக்கேனும் சந்தேகங்கள் இருக்கக்கூடும். ஏதேனும் ஐயம் இருந்தால் இப்போதே கேளுங்கள். உங்கள் ஐயங்களை விளக்குவேன். இப்பொழுது கேட்காவிட்டால் பிற்காலத்தில், ‘ததாகதர் இருந்த காலத்தில் எங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் தெரிந்துகொள்ளவில்லையே?' என்று பின்னால் வருந்தாதீர்கள்” என்று அருளிச் செய்தார்.
அப்போது பிக்குகள் எல்லோரும் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார்கள். பகவன் புத்தர் மறுபடியும், ஐயமுள்ளவர்கள் சந்தேகம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். அப்பொழுதும் பிக்குகள் மெளனமாக இருந்தார்கள். மூன்றாம் தடவையும் பகவர், ஐயங்களைக் கூறும்படி கேட்டார். அப்பொழுதும் அவர்கள் வாளா இருந்தார்கள்.
அப்போது பகவன் புத்தர், “ததாகதரிடம் உள்ள குருபத்தி காரணமாக உங்களுக்குள்ள ஐயப்பாடுகளை நேரில் கேட்க நீங்கள் அச்சப்படுவதாக இருந்தால், நண்பர்களுக்கு நண்பர்களாக உங்களுக்குள்ளேயே சந்தேகங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று அருளிச் செய்தார்.
அப்போதும் பிக்குகள் வாளா இருந்தார்கள். அப்போது ஆனந்த மகாதேரர் பகவரை நோக்கி, “பகவரே! அதிசயம், இது மிக்க அதிசயம்! இந்தப் பிக்ஷு சங்கத்திலே புத்த, தர்ம, சங்கங்களைப்பற்றி யாருக்கும் எந்தவிதமான ஐயமும் இல்லை” என்று கூறினார்.
“ஆனந்த! இந்த ஐந்நூறு பிக்குகள் எல்லாரும் நிர்வாண மோட்சம் அடைவார்கள். நிர்வாண மோட்சம் அடையாத பிக்குகள் இந்தச் சங்கத்தில் ஒருவரும் இல்லை” என்று அருளிச் செய்தார். அதன் பிறகு பகவன் புத்தர் பிக்குகளைப் பார்த்துக் கூறினார். “பிக்குகளே! ஐம் பூதங்களின், சேர்க்கையால் உண்டான பொருள்கள் அழிந்துவிடும் என்னும் உண்மையைத் தவிர ததாகதர் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. ஆகவே, நிர்வாண மோட்சம் பெறுவதற்கு ஊக்கத்தோடும் உறுதியோடும் முயற்சி செய்யுங்கள் என்று அருளிச்செய்தார். இதுவே பகவரின் கடைசி போதனையாகும்.
பரி நிர்வாணம்
பிறகு பகவன் புத்தர் தியானத்தில் அமர்ந்து முதல் நிலையை (பேரானந்த நிலையை) யடைந்தார். பிறகு, முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலையையடைந்தார். இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலையையடைந்தார். பின்னர் மூன்றாம் நிலையிலிருந்து நான்காம் பேரானந்த நிலையை யடைந்தார். அந்நிலையிலிருந்து எல்லையற்ற பரவெளியை யடைந்தார். அந்நிலையிலிருந்து சூனியநிலையை யடைந்தார். பிறகு அந்நிலையிலிருந்து அதற்கு மேற்பட்ட நிலையைடைந்தார்.
அப்போது அனந்த மகாதேரர் அனுருத்தமகாதேரரிடம் “அனுருத்த தேரரே, பகவன் புத்தர் நிர்வாண மோட்சம் அடைந்தார்” என்று கூறினார்.
“இல்லை, ஆனந்த தேரரே, பகவன் புத்தர் இன்னும் நிர்வாண மோட்சம் அடையவில்லை. அவர் தியானத்தின் மிக உயர்ந்த எல்லையில் இருக்கிறார்” என்று அனுருத்தர் கூறினார்.
அப்போது பகவன் புத்தர் யோகத்தின் மிக உயர்ந்த நிலையிலிருந்து படிப்படியாகக் கீழிறங்கி நான்காம் நிலைக்கு வந்து, அதிலிருந்து இறங்கி மூன்றாம் நிலைக்கு வந்து பிறகு இரண்டாம் நிலைக்கும் முதல் நிலைக்கும் வந்தார். பிறகு, மீண்டும், யோகத்தின் முதல் நிலைக்குச் சென்று அதிலிருந்து இரண்டாம் நிலையையடைந்து, அதிலிருந்து மூன்றாம் நிலைக்குச் சென்று, அதிலிருந்து நான்காம் நிலையை யடைந்து பிறகு பரிநிர்வாண மோட்சத்தை யடைந்தார்.
பகவன் புத்தர் பரி நிர்வாணம் அடைந்தபோது வானமும் பூமியும் அதிர்ந்தன. சகம்பதி பிரமனும், சக்கரனும் (இந்திரனும்) ஆனந்த மகாதேரரும், அனுருத்த மகாதேரரும் புத்தருக்கு வணக்கம் பாடினார்கள். தோன்றின பொருள்கள் அழியும் என்னும் உண்மையை யறிந்த அறிஞரான பிக்குகள் பகவன் புத்தருடைய பிரிவினால் உண்டான துக்கத்தை அடக்கிப் பொறுத்துக் கொண்டார்கள். திடமனம் இல்லாதவர்கள் அழுது புலம்பினார்கள்.
தீப்படுத்தியது
விடியற்காலையில் அனுருத்த மகாதேரர், ஆனந்த மகாதேரரை மள்ளர் இடத்திற்கு அனுப்பி பகவன் புத்தர் பரி நிர்வாண மோட்சம் அடைந்த செய்தியைத் தெரிவித்தார். மள்ளர்கள் மனம் வருந்தி ஆண்களும் பெண்களும் எல்லாரும் அழுதார்கள். பிறகு பூமாலைகளையும் சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு இன்னிசை வாத்தியங்களுடன் வந்து பகவன் புத்தருடைய திருமேனிக்கு அலங்காரம் செய்து வணங்கி இசைகள் வாசித்தும் அவர் புகழைப் பாடியும் கொண்டாடினார்கள். இவ்வாறு ஏழு நாட்கள் நடைபெற்றன.
பிறகு மள்ளர் தலைவர் எண்மர் முழுகிக் குளித்துப் புதிய ஆடைகள் அணிந்து பகவன் புத்தருடைய திருமேனியைத் தீயிட்டுக் கொளுத்தத் தூக்கினார்கள். அவர்களால் தூக்க முடியவில்லை. திருமேனி எழும்பவில்லை.
அப்போது குசி நகரத்து மள்ளர் வியப்படைந்து வணக்கத்துக்குரிய அநுருத்த தேரரை இதன் காரணம் என்ன வென்று கேட்டார்கள்: அதற்கு அனுருத்த தேரர் “வாசெந்தர்களே! இதன் காரணம் என்னவென்றால் உங்கள் எண்ணம் ஒன்றாக இருக்க, தேவர்களின் எண்ணம் வேறொன்றாக இருப்பதுதான்” என்று கூறினார்.
“தேவர்களின் எண்ணம் என்ன?” என்று அவர்கள் கேட்டார்கள்.
“உங்களுடைய எண்ணம் பகவருடைய திருமேனியை நகரத்தின் தெற்கே கொண்டுபோய் தீயிலிட்டு எரிக்க வேண்டும் என்பது. தேவர்களின் எண்ணம் என்னவென்றால், திருமேனியை நகரத்தின் வடக்கே நகரத்தின் வடக்குவாயில் வழியாக நகரத்துக்குள் கொண்டு போய் நகரத்தின் நடுவில் சென்று அங்கிருந்து கிழக்குப் பக்கமாகக் கொண்டு போய் கிழக்கு வாயிலின் அருகில் இருக்கிற மகுட பந்தனம் என்னும் மள்ளரின் கோயிலுக்குப் பக்கத்தில் திருமேனியைத் தீயிட்டு எரிக்க வேண்டும் என்பது” என்று அநுருத்த மகாதேரர் கூறினார்.
அவ்வாறே செய்வோம் என்று மள்ளர்கள் குசிநகரத்து வீதிகளை அலங்காரம் செய்தார்கள். பிறகு இன்னிசைகள் முழங்க ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் திருமேனியைத் தூக்கிக் கொண்டு நகரத்துக்கு வடக்கே கொண்டுபோய் வடக்கு வாயிலில் நுழைந்து நகரத்தின் மத்தியில் கொண்டுவந்து பிறகு கிழக்கு வாயில் பக்கமாக மகுட பந்தன ஆலயத்துக்கு அருகில் கொண்டு போனார்கள். பிறகு, மள்ளர் வணக்கத்துக்குரிய ஆனந்த மகா தேரரிடம் இனி என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். ஆனந்த மகாதேரர், “அரசச் சக்கரவர்த்தி இறந்துபோனால் அவர் உடம்பை என்ன செய்கிறார்களோ அப்படிச் செய்யுங்கள்?” என்று கூறினார்.
“வேசந்தர்களே! கேளுங்கள். அரசச் சக்கரவர்த்தி இறந்து போனால் அந்த உடம்பைத் துணியினாலும் பருத்திப் பஞ்சினாலும் ஒன்றின்மேல் ஒன்றாக ஐந்நூறு சுற்றுச் சுற்றிக் கட்டிய பிறகு பெரிய இரும்புப் பாத்திரத்தில் நிறைய எண்ணெய் ஊற்றி அதில் கட்டின உடம்பை வைத்து மற்றொரு இரும்புப் பாத்திரத்தினால் மூடுவார்கள். பிறகு, விறகுகளை அடுக்கி அதன்மேல் உடம்பை வைத்துத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். கொளுத்தி எரித்து கரியான எலும்பை எடுத்து அதன் மேல் சேதியம் கட்டுவார்கள். வேசந்தர்களே! பகவன் ததாகதருடைய திருமேனியை அந்த விதமாகச் செய்யுங்கள்” என்று ஆனந்த மகாதேரர் கூறினார்.
குசிநகரத்து மள்ளர்கள் ஆனந்த மகாதேரர் சொன்ன முறைப்படியே பகவன் புத்தருடைய திருமேனியைத் துணியினாலும் பருத்திப் பஞ்சினாலும் சுற்றி இரும்புப் பாத்திரத்தில் எண்ணெயில் இட்டு மூடிப் பிறகு ஈம விறகை அடுக்கி அதன் மேல் திருமேனியை வைத்தார்கள்.
அப்போது குசிநகரத்து மள்ளர் தலைவர் நால்வர் நீராடி நல்லாடை அணிந்து பகவன் புத்தரின் திருமேனிக்குத் தீயிட்டார்கள். என்ன வியப்பு! தீ பற்றவில்லை!
அவர்கள் வணக்கத்துக்குரிய அநுருத்தமகா தேரரை இதன் காரணம் என்ன என்று கேட்டார்கள். அவர், வாசந்தர்களே! தேவர்களின் எண்ணம் வேறுவிதமாக இருக்கிறது” என்று கூறினார்.
“தேவர்களின் எண்ணம் என்ன? தேரரே!”
“வணக்கத்துக்குரிய மகாகாசப மகாதேரர், தம்முடைய பிக்குச் சங்கத்துடன் பாவாபுரியிலிருந்து குசிநகரத்துக்கு இப்போது வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்து பகவன் புத்தரின் திருவடிகளை வணங்கின. பிறகுதான் தீப்பற்றி எரியும்” என்று மகாதேரர் கூறினார். அப்படியே ஆகட்டும்” என்று அவர்கள் சொன்னார்கள்.
மகாகாசப மகாதேரர் பிக்கு சங்கத்துடன் விரைந்துவந்து மள்ளருடைய கோவிலுக்கருகில் ஈமவிறகின்மேல் வைக்கப்பட்டிருந்த பகவன் புத்தரின் திருமேனியை மும்முறை வலம்வந்து திருவடிகளைப் பணிந்தார். அவ்வாறே மற்றப் பிக்குகள் எல்லோரும் வலம்வந்து வணங்கிப் பணிந்தார்கள். எல்லோரும் பணிந்து வணங்கிய பிறகு தீ பற்றி எரிந்தது.
பகவன் புத்தருடைய திருமேனி தீயில் எரிந்து சாம்பலாயிற்று. திருமேனி முழுவதும் எரிந்து சாம்பலான பிறகு எலும்புகள் மட்டும் எரிந்து கருகி எஞ்சியிருந்தன. அப்போது மழைபெய்து தீயவிந்தது. மள்ளர்களும் நறுமணமுள்ள நீரினால் சாம்பலை அவித்து எலும்புகளை எடுத்துப் பொற்றட்டில் வைத்துக் குசி நகரத்து மண்டபத்துக்கு எடுத்துக்கொண்டு போனார்கள். போய் அங்கு அதை வைத்துப் பூக்களை இட்டு வணங்கி எழுநாட்கள் விழா கொண்டாடினார்கள்.
சேதியம் கட்டியது
பகவன் புத்தர் பரி நிர்வாணம் அடைந்தார் என்பதைக் கேள்விப்பட்ட அஜாதசத்துரு அரசன், தூதுவரை அனுப்பித் தனக்குப் புத்தருடைய தாது சிலவற்றை அனுப்பும்படிக் கேட்டான். அவ்வாறே வைசாலி நாட்டு லிச்சாவியரும், கபிலவத்துச் சாக்கியரும், அல்லகப்பை பூலிகரும், இராம கிராகத்துக் கோலியரும், பாவாபுரி மள்ளர்களும், வேட்ட தீபத்துப் பிராமணர்களும் தங்களுக்குப் புத்த தாது வேண்டும் என்றும் அந்தத் தாதுவின்மேல் சேதியங்களை அமைக்கப் போவதாகவும் கூறினார்கள்.
ஆனால், குசி நகரத்து மள்ளர்கள், புத்த தாதுவை ஒருவருக்கும் கொடுக்கமாட்டோம் என்று பிடிவாதம் செய்தார்கள். அப்போது, அங்கிருந்த துரோணன் என்னும் பார்ப்பனன், அவர்களை அமைதிப்படுத்தி, புத்த தாதுவைப் பல இடங்களுக்கு அனுப்பினால், அத்தாதுக்களின் மேல் சேதியங்களை அமைத்துக் கொண்டாடுவார்கள்; அதனால் பகவன் புத்தருடைய புகழும் பெருமையும் உலகெங்கும் பரவும் என்று கூறினான். அவர்கள் தாதுவைப் பங்கிட்டுக்கொள்ள இசைந்தார்கள். அவர்கள் துரோணனையே புத்த தாதுவைப் பங்கிடும்படிக் கூறினார்கள். அவனும் தாதுவை எட்டுச் சம பங்காகப் பங்கிட்டுக்கொடுத்தான். தாதுவைப் பங்கிட்ட தட்டத்தை அவன் எடுத்துக்கொண்டு அத்தட்டத்தின்மேல் சேதியம் கட்டினான். தாதுவைக் கொண்டுபோன எல்லோரும் அதைப் புதைத்த இடத்தில் சேதியங்களைக் கட்டினார்கள்.
புத்த தாது பங்கிடப்பட்ட பிறகு பிப்பலிவனத்தைச் சேர்ந்த மௌரியர்கள், தங்களுக்கும் புத்த தாது வேண்டுமென்று கேட்டார்கள். முன்னமே பங்கிடப்பட்டபடியினாலே, அவர்களுக்குத் தாது கிடைக்கவில்லை. அவர்கள், திருமேனியை எரித்து எஞ்சியிருந்த கரிகளைக் கொண்டுபோய் அதன்மீது சேதியங் கட்டினார்கள். இவ்வாறு பகவன் புத்தருடைய தாதுக்களின் மேலே பத்துச் சேதியங்கள் கட்டப்பட்டன.
மருள் அறுத்த பெரும் போதி
மாதவரைக் கண்டிலனால் - என் செய்கோயான்!
அருள் இருந்த திருமொழியால்
அறவழக்கங் கேட்டிலனால் - என் செய்கோயான்!
பொருள் அறியும் அருந்தவத்துப்
புரவலரைக் கண்டிலனால் - என் செய்கோயான்!
✽ ✽ ✽
அடிக்குறிப்புகள்
1. பத்துப்பார மிதைகளாவன: 1. தானம் 2. சீலம் (ஒழுக்கம்) 3. நெக்கம்மம் (ஆசைகளை அகற்றிப் பிறர் நலத்துக்காக வாழ்தல்) 4. பஞ்ஞா (ஞானம்) 5. வீரியம் (ஆற்றல்) 6. கந்தி (பொறுமை) 7. வாய்மை (பத்தியம்) 8. அதிட்டானம் (ஒழுக்கம் நேர்மை இவற்றிலிருந்து பிறழாமல் இருத்தல்) 9. மேத்தை (அன்பும் அருளும் உடைமை) 10. உபேக்ஷை (விருப்பு வெறுப்பு இல்லாதிருத்தல்)
2. உதானம் - பிரீதிவாக்கியம்.
3. மணிமேகலை 30: 104 - 118. இது, விநயபிடகத்தின் மகாவக்கம் என்னும் பிரிவில் முதல் காண்டத்தில் உள்ள பாலிமொழி வாக்கியத்தின் சொல்லுக்குச்சொல் நேர் மொழிபெயர்ப்பாக இருக்கிறது.
4. மணிமேகலை 30 : 119-133 இது, விநயபிடகம் மகாவக்கம் முதல் காண்டத்தில் உள்ள பாலிமொழி வாக்கியத்தின் நேர் மொழிபெயர்ப்பாக அமைந்திருக்கிறது.
5. ஆசவம் - காமம், பவம் - திட்டி, அவிஜ்ஜை என்பன.
6. கிருத்தியம், கிருதம் என்பதற்கு முறையே செய்த, செய்கின்ற என்பது பொருள்.