மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/010

இணைப்பு: 1

திரிபிடகம்

பௌத்தமத வேதங்களுக்குத் திரிபிடகம் என்பது பெயர். பாலிமொழியில் திபிடகம் என்று கூறுவர். அவற்றிற்கு விநய பிடகம், அபிதம்ம பிடகம், சூத்திரபிடகம் என்று பெயர். அவை பாலி மொழியிலே எழுதப்பட்டுள்ளன.

புத்தர் பெருமான் நாற்பத்தைந்து ஆண்டுகளாகத் தமது கொள்கைகளை நாடெங்கும் போதித்துவந்த போதிலும், அவர் அக்கொள்கைகளை நூல் வடிவமாக எழுதி வைக்கவில்லை. ஆனால், அவருடைய சீடர்கள், அவருடைய போதனைகளை இரண்டு சம்ஹிதைகளாகத் தொகுத்துப் பாராயணம் செய்துவந்தார்கள். அவற்றிற்கு விநய சம்ஹிதை, தர்ம சம்ஹிதை என்று பெயர், சம்ஹிதை என்றால் தொகுப்பு என்பது பொருள்.

பகவர் புத்தர் நிர்வாண மோக்ஷம் அடைந்த சில தினங்களுக்குப் பிறகு, மகதநாட்டின் தலைநகரமான இராசகிருக நகரத்துக்கு அருகில் ஸத்தபணி என்னும் மலைக்குகையிலே கார் காலத்தைக் கழிக்கும் பொருட்டு ஐந்நூறு தேரர்கள் (பௌத்தத் துறவிகள்) ஒருங்கு கூடினார்கள். இதுவே பௌத்தரின் முதல் மகாநாடு ஆகும். புத்தரின் முக்கியச் சீடர் ஆகிய மகாகாசிபர், இந்த மகாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். இம்மகாநாட்டிலே, புத்தர் பெருமான் அருளிச்செய்த விநய போதனைகளை உபாலி என்னும் தேரர் எடுத்து ஓதினார். இதற்கு விநயபிடகம் என்று பெயரிட்டனர். மற்றொரு தேரராகிய ஆனந்தர், புத்தர் அருளிச்செய்த தர்மபோதனைகளை இம்மகாநாட்டில் ஓதினார். இதற்கு தம்ம (தர்ம) பிடகம் என்று பெயரிட்டனர். இவ்வாறு முதல் பௌத்த சங்கத்திலே, புத்தருடைய போதனைகள் இரண்டு பிடகங்களாகத் தொகுக்கப்பட்டன.

பிற்காலத்திலே, அபிதம்ம பிடகத்திலிருந்து சில பகுதிகளைத் தனியாகப் பிரித்து அதற்குச் சூத்திரபிடகம் என்று பெயரிட்டார்கள். புத்தருடைய போதனைகள் இவ்வாறு மூன்று பிரிவாகத் தொகுக்கப் பட்டபடியினாலே இவற்றிற்குத் திரிபிடகம் என்று பெயர் உண்டாயிற்று.

புத்தர் திருவாக்குகள் திரிபிடகமாகத் தொகுக்கப்பட்ட பிறகும், அவை எழுதப்படாமல் எழுதாமறையாகவே இருந்தன. அவற்றைப் புத்தருடைய சீட பரம்பரையினர் வாய்மொழியாகவே ஓதிப் போற்றிவந்தனர். அவர்கள் வெவ்வேறு பிரிவாகப் பிரிந்து, பிடகங்களின் வெவ்வேறு பகுதிகளைக் குருசிஷ்யப் பரம்பரையாக ஓதி வந்தார்கள்.

விநயபிடகத்தை ஓதிய தேரர்கள் விநயதரர் என்றும் சூத்திர பிடகத்தை ஓதிய தேரர்கள் சூத்ராந்திகர் என்றும் அபிதம்ம பிடகத்தை ஓதிய தேரர்கள் அபிதம்மிகர் என்றும் பெயர் வழங்கப்பட்டனர். இப்பெரும் பிரிவுகளில் உட்பிரிவுகளும் உண்டு. அவர்களுக்கு அந்தந்தப் பிரிவுகளின் பெயர் வழங்கப்பட்டன. உதாரணம், தீக பாணகர், மஜ்ஜிம பாணகர், சம்யுக்த பாணகர், அங்குத்தர பாணகர், ஜாதக பாணகர், தம்மபதப் பாணகர் முதலியன.

பிற்காலத்திலே பௌத்த மதத்திலே சில பிரிவுகள் ஏற்பட்டன. இப்பிரிவுகளைப் பழைய பிரிவினர், புதிய பிரிவினர் என்று இரண்டுபெரும் பிரிவுகளில் அடக்கலாம். பழைய பிரிவுக்குத் தேரவாத பௌத்தம் என்பது பெயர். (இதனை ஹீனமான பௌத்தம் என்று தவறாகப் பெயர் கூறப்படுகிறது.) புதிய பிரிவுக்கு மகாயான பௌத்தம் என்பது பெயர்.)

இலங்கைத் தீவிலே பழைய தேரவாத பௌத்த மதம் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்தது. காலப்போக்கிலே இலங்கையிலேயும் புதிய பௌத்தக் கொள்கைகள் பரவத் தொடங்கின. அப்போது, பழைய தேரவாத மதத்தில் புதிய கொள்கைகள் புகாதபடிசெய்ய, திரிபிடகங்களை எழுத்தில் எழுதிவைக்கத் தொடங்கினார்கள். இலங்கைத் தீவை கி.மு. முதல் நூற்றாண்டிலே (கி.மு. 88 முதல் 76 வரையில்) அரசாண்ட வட்டகாமினி என்னும் அரசன் காலத்தில், மலையநாட்டிலே மாத்தளை என்னும் ஊரில் உள்ள அலு (ஆலோக) விகாரை என்னும் பௌத்தப்பள்ளியிலே, முன்பு வாய்மொழியாக ஓதப்பட்டுவந்த திரிபிடகம், நூல் வடிவமாக ஏட்டில் எழுதப்பட்டது.

திரிபிடக நூல்கள் பாலிமொழியில் எழுதப்பட்டுள்ளன. தேரவாத பௌத்த நூல்கள் உரைநூல்கள் உட்பட யாவும் பாலி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. (மகாயான பௌத்த நூல்கள் வடமொழியிலே எழுதப்பட்டுள்ளன.) பிடக நூல்களும் அவற்றின் பிரிவுகளும் வருமாறு:

1. விநயபிடகம்

இது விநயபிடகம், பாதிமோக்கம் என்னும் இரண்டு பிரிவுகளையுடையது. விநயபிடகத்துக்கு சமந்த் பாஸாதிகா என்னும் உரையையும், பாதிமோக்கத்திற்கு கங்காவிதரணீ என்னும் உரையையும் ஆசாரிய புத்தகோஷர் பாலிமொழியிலே எழுதி இருக்கிறார்.

2. சூத்திரபிடகம்

இது தீகநிகாயம், மஜ்ஜிம நிகாயம், ஸம்புக்த நிகாயம், அங்குத்தர நிகாயம், குட்டக நிகாயம் என்னும் ஐந்து பிரிவுகளையுடையது.

ஐந்தாவது பிரிவாகிய குட்டக நிகாயத்துக்குப் பதினைந்து உட்பிரிவுகள் உள்ளன. அவையாவன:- குட்டக பாதம், தம்மபதம், உதானம், இதிவுத்தகம், ஸத்த நிபாதம், விமானவத்து, பேதவத்து, தேரகாதை, தேரி காதை, ஜாதகம், மஹாநித்தேசம், படிஸம்ஹித மக்கம், அபதானம், புத்த வம்சம், சரியாபிடகம் என்பன.

சூத்திர பிடகத்தின் முதல் நான்கு பிரிவுகளுக்கு ஆசாரிய புத்தகோஷர் பாலி மொழியில் உரை எழுதியிருக்கிறார். தீக நிகாயத்துக்கு சுமங்களவிலாசினீ என்னும் உரையையும், மஜ்ஜிம நிகாயத்துக்கு பபஞ்ச சூடனீ என்னும் உரையையும், சம்புக்த நிகாயத்துக்கு ஸாராத்த பகாஸினீ என்னும் உரையையும், அங்குத்தர நிகாயத்துக்கு மனோரத பூரணீ என்னும் உரையையும் எழுதியிருக்கிறார்.

சூத்திர பிடகத்தின் ஐந்தாவது பிரிவாகிய குட்டக நிகாயத்தின் உட்பிரிவாகிய குட்டக பாதத்திற்குப் பரமார்த்த ஜோதிகா என்னும் உரையையும், தம்மபதத்திற்கு தம்மபதாட்டகதா என்னும் உரையையும் ஆசாரிய புத்தகோஷர் எழுதினார்.

உதானம், இதிவுத்தகம் என்னும் பிரிவுகளுக்குப் பரமார்த் தீபனீ என்னும் உரையைத் தமிழராகிய ஆசாரிய தர்மபால மகாதேரர் எழுதினார்.

ஐந்தாவது உட்பிரிவாகிய சுத்த நிபாதத்திற்குப் பரமார்த்த ஜோதிகா என்னும் உரையை ஆசாரிய புத்தகோஷர் எழுதினார்.

விமானவத்து, பேதவத்து, தேரகாதை, தேரிகாதை என்னும் நான்கு உட்பிரிவுகளுக்குத் தமிழராகிய ஆசாரிய தர்மபால மகாதேரர், பரமார்த்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.

ஜாதகம் என்னும் உட்பிரிவுக்கு ஜாதகாத்த கதா என்னும் உரையை ஆசாரிய புத்த கோஷர் எழுதினார்.

நித்தேசம் என்னும் பிரிவுக்கு ஸத்தம்ம பஜ்ஜோதிகா என்னும் உரையை உபசேனர் என்பவர் எழுதினார்.

படிஸம்ஹித மக்கம் என்னும் பிரிவுக்கு ஸத்தம்ம பகாஸினீ என்னும் உரையை மகாநாமர் என்பவர் எழுதினார்.

அபதானம் என்னும் பிரிவுக்கு விசுத்தசன விலாஸினீ என்னும் உரையை ஒருவர் எழுதினார். அவர் பெயர் தெரியவில்லை.

புத்த வம்சம் என்னும் பிரிவுக்கு மதுராத்த விலாஸினீ என்னும் உரையை சோழநாட்டுத் தமிழராகிய ஆசாரிய புத்ததத்த தேரர் எழுதினார்.

சரியா பிடகம் என்னும் பிரிவுக்கும் பரமார்த்த தீபனீ என்னும் உரையை ஆசாரிய தம்மபால மகாதேரர் எழுதினார்.

3. அபிதம்ம பிடகம்

இது தம்ம ஸங்கினீ, விபங்கம், கதாவத்து, புக்கல பஞ்ஞத்தி, தாதுகதா, யமகம், பட்டானம் என்னும் ஏழு பிரிவுகளையுடையது. இந்த ஏழு பிரிவுகளுக்கும் ஆசாரிய புத்தகோஷர் உரை எழுதியிருக்கிறார். முதல் பிரிவுக்கு அத்த சாலினீ என்னும் உரையையும், இரண்டாது பிரிவுக்கு ஸம்மோஹ வினோதினி என்னும் உரையையும், மற்ற ஐந்து பிரிவுகளுக்குப் பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையையும் எழுதினார்.

இவையன்றித் தேரவாத பௌத்தத்தில் வேறுசில நூல்கள் பாலிமொழியில் உள்ளன. விரிவஞ்சி அவற்றின் பெயரைக் கூறாது விடுகின்றோம். மகாயான பௌத்த மத நூல்களும் பல உள்ளன. அவைகளையும் இங்குக் கூறாது விடுகின்றோம்.