மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/011
இணைப்பு: 2
திரிசரணம் (மும்மணி)
பௌத்தர்கள் புத்தர் தர்மம் சங்கம் என்னும் மும்மணிகளை அடைக்கலம் புகவேண்டும். மும்மணிகளுக்குத் திரிசரணம் என்பது பெயர். திரிசரணத்தின் பாலி மொழி வாசகம் இது.
புத்தம் சரணங் கச்சாமி
தம்மம் சரணங் கச்சாமி
சங்கஞ் சரணங் கச்சாமி
துத்யம்பி, புத்தம் சரணங் கச்சாமி
தம்மம் சரணங் கச்சாமி
சங்சஞ் சரணங் கச்சாமி
தித்யம்பி, புத்தம் சரணங் கச்சாமி
தம்மம் சரணங் கச்சாமி
சங்கஞ் சரணங் கச்சாமி
இதன் பொருள் வருமாறு:
புத்தரை அடைக்கலம் அடைகிறேன்
தருமத்தை அடைக்கலம் அடைகிறேன்
சங்கத்தை அடைக்கலம் அடைகிறேன்
இரண்டாம் முறையும்
புத்தரை அடைக்கலம் அடைகிறேன்
தருமத்தை அடைக்கலம் அடைகிறேன்.
சங்கத்தை அடைக்கலம் அடைகிறேன்.
மூன்றாம் முறையும்
புத்தரை அடைக்கலம் அடைகிறேன்
தருமத்தை அடைக்கலம் அடைகிறேன்
சங்கத்தை அடைக்கலம் அடைகிறேன்
தசசீலம் (பத்து ஒழுக்கம்)
பௌத்தரில் இல்லறத்தார் பஞ்ச (ஐந்து) சீலங்களை மேற்கொள்ள வேண்டும். துறவறத்தார் தச (பத்து) சீலங்களை மேற்கொள்ளவேண்டும். சீலத்தைச் சிக்காபதம் என்றும் கூறுவர். தசசீலத்திலே பஞ்சசீலங்களும் அடங்கியுள்ளன. இல்லறத்தார் பஞ்சசீலங்களையும், துறவறத்தார் தசசீலங்களையும் தினந்தோறும் ஓத வேண்டும். தசசீலத்தின் பாலிமொழி வாசகம் இது:
1. பானாதி பாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
2. அதின்னாதானா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
3. அஹ்ப்ரஹ்மசரியா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
4. மூஸாவாதா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
5. ஸுராமேரய மஜ்ஜப மாதட்டாணா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
6. விகால போஜனா வேரமணி ஸிக்காபதம் ஸாதியாமி
7, 8, 9. நச்சகீத வாதித விலரக்க தஸ்ஸனமால கந்த விவப்பண தாரணமண்டன விபூஷண்ட்டானா வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
10. உட்சாசன மஹாசயன வேரமணி ஸிக்காபதம் ஸமாதியாமி
இதன் பொருள் வருமாறு:
- 1. உயிர்களைக் கொல்லாமலும் இம்சை செய்யாமலும் இருக்கும் சீலத்தை (ஒழுக்கத்தை) மேற்கொள்கிறேன்.
- 2. பிறர் பொருளைக் களவு செய்யாமலிருக்கும் சீலத்தை மேற்கொள்கிறேன்.
- 3. பிரமசரிய விரதம் என்னும் சீலத்தை மேற்கிறேன். (இது இல்லறத் தாருக்குப் பிறர் மனைவியரிடத்தும் பிற புருஷரிடத்தும் விபசாரம்செய்யாமல் இருப்பது என்று பொருள்படும். துறவறத்தாருக்குப் பிரமசரிய விரதம் என்பது இணை விழைச்சியை அறவே நீக்குதல் என்று பொருள்படும்.)
- 4. பொய் பேசாமலிருத்தல் என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன்.
- 5. கள் முதலிய மயக்கந்தருகிற பொருள்களை நீக்குததல் என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன்.
- 6. உண்ணத்தகாத வேளையில் உணவு கொள்ளாமை என்னும் சீலத்தை மேற்கொள்கிறேன்.
- 7, 8, 9. இசை, ஆடல்பாடல்களைக் கேட்டல், காண்டல், புஷ்பம் வாசனைத் தயிலம் முதலியவற்றை உபயோகித்தல், பொன் வெள்ளி முதலியவற்றை உபயோகித்தல் ஆகிய இவற்றைச் செய்யாமல் இருக்கிற சீலத்தை மேற்கொள்கிறேன்.
- 10. உயரமான படுக்கை, அகலமான படுக்கை முதலிய சுக ஆசனங்களை உபயோகிக்காமல் இருக்கிற சீலத்தை மேற்கொள்கிறேன்.
✽ ✽ ✽